Monday, December 01, 2014

தேசிய இனம்: ஓர் இன அடையாளத்திற்கு அப்பாற்பட்ட அரசியல்


ஒரு தேசிய இனம் உருவாகுவதற்கு, எப்போதுமே ஒரு பொதுவான மொழி மட்டுமே அடிப்படையாக அமைந்திருக்கவில்லை. பல நாடுகளில் மதம் கூட தேசிய இனத்தை வரையறுக்கும் காரணியாக உள்ளது. ஒரே மதத்திற்குள்ளேயும், வித்தியாசமான மதப் பிரிவு சார்ந்த தேசியம் உருவாகலாம். ஐரோப்பாக் கண்டத்திலேயே அந்த நிலைமை இருந்தது.

உதாரணத்திற்கு பெல்ஜியத்தை எடுத்துக் கொள்வோம். பெல்ஜியத்தை தனியான தேசியமாக உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது. பெல்ஜிய தேசியத்தை தீர்மானித்த காரணி எது? கத்தோலிக்க கிறிஸ்தவ மதம் மட்டும் தான்.

ஒரு காலத்தில், பெல்ஜியம் இன்றைய நெதர்லாந்து நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. புரட்டஸ்தாந்து - கத்தோலிக்க முரண்பாடு காரணமாக, கத்தோலிக்க பெல்ஜியர்கள் பேரழிவைத் தந்த போரை நடத்தி, தனி நாடாக பிரிந்து சென்றார்கள்.

நெதர்லாந்தில் பேசும் அதே டச்சு மொழி பேசும் மக்களுடன், பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளை பேசும் மக்களும் பெல்ஜியத்தில் வாழ்கிறார்கள். மூன்று வேறு பட்ட மொழிகளை பேசும் மக்கள், பெல்ஜிய தேசிய இனமாக மாறுவதற்கு, அவர்களை ஒன்றிணைத்த கத்தோலிக்க மதம் தான் காரணமாக இருந்தது.

ஆகவே, தேசிய இனம் என்றால் அதற்கு பொதுவான மொழி இருக்க வேண்டும் என்று நினைப்பதும், உலகில் ஒரே மொழி பேசும் மக்கள் எல்லோரும் ஒரே தேசிய இனம் என்று வாதாடுவதும் தவறான கோட்பாடு ஆகும்.

"தமிழ் தேசியம் என்றால் என்னவென்று தெரியுமா?" என்று வரைவிலக்கணத்துடன் விரிவுரையாற்றும் அறிவுஜீவிகள், தேசிய இனம் பற்றி தவறான நிலைப்பாடுகளை கொண்டுள்ளனர். "மொழி சார்ந்த மரபினத்தைக் கொண்டது ஒரு தேசிய இனம்" என்பன போன்ற தவறான கருத்துக்களை கொண்டுள்ளனர்.

முதலில், "இனம்" என்ற சொல்லே தவறான அர்த்தத்தில் பயன்படுத்தப் படுகின்றது. தனது அடையாளத்தை முதன்மைப் படுத்துவது "இனங்கள்" மட்டுமல்ல. மதங்களும் தான். சில நேரம், மனிதர்கள் ஒரே மொழி, ஒரே மதம், ஒரே மரபினத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களுக்குள்ளே வேறுபட்ட தேசிய இனங்கள் இருக்கலாம். இருந்து வருகின்றது என்பது தான் உலக யதார்த்தம்.

இஸ்ரேல் என்றொரு இனம் கிடையாது. யூத மதத்தை பின்பற்றுபவர்கள் தம்மை யூத தேசிய இனமாகக் கருதிக் கொள்கிறார்கள். யூதர்கள் ஒரே மொழி பேசுபவர்கள் அல்ல. இட்டிஷ், ஜெர்மன், பிரெஞ்சு, ரஷ்ய, அரபு மொழிகளை பேசிய யூதர்கள் எல்லோரும் தாமாக விரும்பி ஹீபுரு மொழி கற்றுக் கொண்டார்கள். அங்கே மொழி பின்னர் வந்தது. அப்படியானால், தமிழ் தேசியவாதிகளின் வரைவிலக்கணப் படி, "இஸ்ரேலியர்கள் ஒரு தேசிய இனம் இல்லையா?"

பாகிஸ்தானும் அப்படித் தான். அதாவது, "இன்னொரு இஸ்ரேல்" தான். முஸ்லிம் என்ற மத அடையாளத்தின் அடிப்படையில் தான் பாகிஸ்தானிய தேசிய இனம் உருவானது. அங்கே நான்கு வேறுபட்ட மொழிகள் பேசும், நான்கு வேறுபட்ட தேசிய இனங்கள் உள்ளன. பஞ்சாபி, சிந்தி, பலுசிஸ்தானி, பஷ்டூன், (பிற்காலத்தில் பிரிந்து சென்ற வங்காளி) ஆகியவற்றுடன், வேறு சில ஆதிவாசி மொழிகளும் பேசப் படுகின்றன. அதனால் தான், இந்திய அகதிகளினால் இறக்குமதி செய்யப்பட்ட உருது மொழியை, எல்லோரும் பொது மொழியாக கற்றுக் கொண்டார்கள்.

கனடா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் வாழும், ஆங்கிலம் பேசும் பெரும்பான்மை மக்களுக்கு தேசியம் கிடையாதா? அவர்களை ஒரே ஆங்கில தேசிய இனம் என்று கூற வேண்டுமா? அவர்களது மரபினம் எதுவென  ஆராய்ந்தால், அவர்கள் பூர்வீகத்தில் "ஜெர்மனியர்களாக" இருந்திருப்பார்கள்! 

"அனைத்துலகிலும் வாழும் ஆங்கிலேயர்கள் ஒரே தேசிய இனம்" என்ற கருத்தியலை, எத்தனை அமெரிக்கர்கள் ஒப்புக் கொள்வார்கள்? நிச்சயமாக, ஆங்கிலம் பேசும் அமெரிக்கர்கள் இதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எதற்காக பிரிட்டிஷ் பேரரசிடம் இருந்து விடுதலை அடைவதற்காக இரத்தம் சிந்திப் போராடினார்கள்? இன்றைக்கும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் ஒரு மாகாணமாக இருந்திருக்கலாமே?

"அமெரிக்கர்கள் ஒரு தேசிய இனமா?" முதலில் இதற்குப் பதிலைக் கூறுங்கள். அதற்குப் பிறகு தமிழ் தேசியம் பற்றிப் பேசலாம். ஏனென்றால், அமெரிக்க சுதந்திரப் போராட்டம் நடந்து, முன்னூறு வருடங்களுக்குப் பிறகு தான் தமிழ் தேசியம் உருவானது. "தமிழர்கள் ஒரே இனம்" எனும் இனத்துவ தேசியவாதக் கருத்தியல் அடிப்படையிலேயே தவறானது. 

தமிழர்கள் என்பது ஓர் இனம் அல்ல. அது ஒரு தேசிய இனம். தேசிய இனம் என்ற அரசியல் கலைச் சொல், அந்தக் கால கட்டத்திற்குரிய சமுதாய வகைப் பிரிப்பை பிரதிபலிக்கிறது. தேசியவாதம் என்பது, 19 நூற்றாண்டு ஐரோப்பாக் கண்டத்தில் உருவான அரசியல் கொள்கை என்பது இங்கே குறிப்பிடத் தக்கது.

இடதுசாரியத்தை, கம்யூனிசத்தை எதிர்ப்பதென்றால், பல (தமிழ்) தேசியவாதிகளுக்கு இனிப்பான விடயம். எல்லோரும் ஒன்றாக சேர்ந்து தர்ம அடி போடுவதற்கு வருவார்கள். பலருக்கு இடதுசாரியம், திரிபுவாதம், சோஷலிசம், கம்யூனிசம், ஸ்டாலினிசம், ட்ராஸ்கிசம், குருஷேவிசம், மாவோயிசம், போன்ற கொள்கை முரண்பாடுகள் பற்றி எதுவும் தெரியாது. தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதும் இல்லை.

சோவியத் யூனியனின் உடைவுக்குப் பின்னர், கம்யூனிசம் காலாவதியாகி விட்டது என்றும், இனிமேல் தேசியவாதமே நிலைத்து நிற்கும் நிரந்தர சித்தாந்தம் என்றும் முழங்கினார்கள். ஆனால், தேசியவாதம் என்றால் என்னவென்று அவர்களிடமே தெளிவில்லை. குறைந்த பட்சம், ஒரு தேசியவாத அரசில், மக்களுக்கு கிடைக்கக் கூடிய நன்மைகளைப் பற்றிக் கூட பேச மறுத்தார்கள்.

தேசியவாதத்தின் குறைபாடுகளை விமர்சித்தால் அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் எந்தவொரு (தமிழ்) தேசியவாதியிடமும் கிடையாது. அத்தகைய விமர்சனங்களை, ஒன்றில் "பிதற்றல்கள்" என்று ஒதுக்குவார்கள், அல்லது "தனி நபர்களின் தவறுகள்" என்று சித்தரிக்க முனைவார்கள். இதன் மூலம், தேசியவாத கருத்தியல் அப்பழுக்கற்றது என்று காட்ட முனைவார்கள். அப்படிக் கூறுவோர், சோவியத் யூனியனின் உடைவுக்கு காரணம், கோர்பசேவ் போன்ற தனி நபர்களின் துரோகச் செயல் என்பதை ஒத்துக் கொள்ள முன் வருவார்களா?

19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பாக் கண்டத்தில் தோன்றிய தேசியவாதம் எனும் அரசியல் சித்தாந்தம், இரண்டு உலகப் போர்களுக்கு இட்டுச் சென்றது. கவனிக்கவும்: "இரண்டு உலகப் போர்கள்"! அதனால், சொல்லொணா துன்பங்களை அனுபவித்த ஐரோப்பியர்கள், "தேசியவாதம்" என்ற சொல்லையே உச்சரிக்க விரும்பாத காலம் ஒன்றிருந்தது.

பெர்லின் மதிலின் வீழ்ச்சி, சோவியத் யூனியனின் உடைவு என்பன, மீண்டும் தேசியவாத சக்திகளின் எழுச்சிக்கு வழி திறந்து விட்டது. அதன் விளைவு? மீண்டும் போர்கள்... முன்னாள் சோவியத் யூனியனில், ஆர்மேனியா - அசர்பைஜான் போரில் ஆரம்பித்த தேசியவாதிகள், முன்னாள் யூகோஸ்லேவியாவில் நடந்த கொசோவோ போரில் தான் ஓய்வெடுத்தார்கள்.

ஐரோப்பாவில் தேசியவாதப் போர்கள் ஓய்ந்த பின்னர் என்ன நடந்தது? மேற்கே இருந்து விஸ்தரிக்கப் பட்ட, ஐரோப்பிய மூலதனத்தின் சாம்ராஜ்யமான, ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் உள்வாங்கப் பட்டன. உலகின் மிகப் பெரிய இராணுவக் கூட்டமைப்பான நேட்டோவில் அங்கத்துவம் பெற்றுக் கொண்டன.

நேற்று வரையில், ஜென்மப் பகைவர்களாக, ஒருவரை ஒருவர் வெறுத்த, இரத்தம் குடித்துக் கொண்டிருந்த தேசியவாதிகள், இன்று ஒருவரோடொருவர் கை கோர்த்துக் கொள்கிறார்கள். இவர்களை நம்பி தேசியவாதப் போர்களில் இன்னுயிர் ஈந்த அப்பாவி மக்களின் முகத்தில் கரி பூசினார்கள்.

தமக்குள் மோதிக் கொண்ட ஐரோப்பிய நாடுகளின் தேசியவாதிகள், கடைசியில் சகோதரர்களாக ஒன்று சேர்ந்தது வரலாறு. நமக்கு நன்கு பரிச்சயமான, தமிழ் - சிங்கள - கன்னட - ஹிந்தி தேசியவாதிகளும், நாளைக்கு ஐரோப்பிய முன்மாதிரியை பின்பற்ற மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? நாளையே சார்க் நாடுகளின் கூட்டமைப்பில் ஐக்கியமாகி, தம்மை ஆதரித்த தமிழ் - சிங்கள - கன்னட - ஹிந்தி மக்களின் முகத்தில் கரி பூச மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

தேசியவாத கருத்தியல்கள், முதலாளித்துவ வர்க்க நலன் சார்ந்த அறிவுஜீவிகளின் குழாம் ஒன்றினாலேயே பரப்பப் படுகின்றன. தேசியவாதத்தின் பெயரில், சமூகத்தில் நிலவும் வர்க்கப் போராட்டத்தை மறுதலிப்பதும், போலியான வர்க்க சமத்துவத்தை கட்டிக் காப்பதும் அவர்களது நோக்கமாக உள்ளது. அந்த உண்மையை, காலப்போக்கில் அவர்களே நிரூபித்துக் காட்டுவார்கள்.

No comments:

Post a Comment