Tuesday, September 23, 2014

வாக்கெடுப்பின் முடிவுகளை முதலாளிகளே தீர்மானிக்கிறார்கள்!


ஸ்காட்லாந்து வாக்கெடுப்பு, தமிழீழத்தில் சாத்தியமா?

ஸ்காட்லாந்து சுதந்திரத்திற்கான பொது வாக்கெடுப்பு, சில தமிழீழவாதிகளின் கவனத்தைக் கவர்ந்துள்ளது. குறிப்பாக, இந்தியாவில் இணக்க அரசியல் செய்யும் மே 17 இயக்கம் அதிக அக்கறை காட்டியுள்ளது. எனது பார்வைக்கு எட்டிய வரையில், மே 17 அனுதாபி ஒருவர் எழுதிய ஆய்வுக் கட்டுரை மிகவும் ஆக்கபூர்வமாக அமைந்துள்ளது. (https://www.facebook.com/photo.php?fbid=858459330831945&set=a.254018564609361.72820.100000036593373&type=1) அதில், பின்னடைவுக்கு காரணமாக சில குறிப்புகளை எழுதியுள்ளார். அதிலிருந்து படிப்பினைகளை பெற்றால், தமிழீழம் கிடைப்பது சாத்தியமே என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

முதலில், மே 17 இயக்கத்தின் "சுதந்திர வேட்கை" எந்தளவு நேர்மையானது என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. அது தமிழ்நாடு பிரிவினையை ஆதரிக்கவில்லை. இந்தியாவில் இணக்க அரசியல் செய்யும் கொள்கை கொண்டது.

முதலாளித்துவ நாகரிகம் நிலவும் ஒற்றைத் துருவ உலகில், இப்படியான வலதுசாரி தேசியவாதிகளின் வெகுளித்தனம் பல உண்மைகளை காண மறுக்கிறது. ஸ்காட்லாந்திலும் அது தான் நடந்தது. ஸ்காட்லாந்து பிரிவினைக்கான இயக்கம் எப்படி ஆரம்பமாகியது?

ஸ்காட்லாந்து, ஐக்கிய இராச்சியத்தில் பொருளாதார வளர்ச்சி கண்டுள்ள மாநிலம் ஆகும். வேல்ஸ், வட அயர்லாந்து ஆகிய பிற பகுதிகளுடன் ஒப்பிடும் பொழுது, ஸ்காட்லாந்து பொருளாதாரம் நல்ல நிலையில் உள்ளது. பிரிட்டனில் எடுக்கப் படும் 90% எண்ணை, ஸ்காட்லாந்து கடல் எல்லைக்குள் உள்ளது. ஸ்காட்டிஷ் எண்ணையில் பெரும்பகுதி இங்கிலாந்திற்கு செல்கிறது. மேலும் உல்லாசப் பிரயாணத் தொழில் போன்ற சேவைத் துறையில் வேலை செய்வோர் தான் அங்கு அதிகம்.

இது போன்ற பொருளாதாரப் பின்புலத்தில் இருந்து தான் பிரிவினைக் கோரிக்கை தொடங்கியது. அதாவது, வசதியான ஸ்காட்டிஷ் மத்தியதர வர்க்கம், ஸ்காட்லாந்து சுதந்திர நாடனால், தாம் விரும்பிய படி அரசமைக்கலாம் என்று கனவு கண்டது. அது உண்மையில் ஒரு படித்த மத்தியதர வர்க்கத்தின் வெகுளித்தனம்.

வட அயர்லாந்து, தன்னை அயர்லாந்து குடியரசுடன் இணைக்குமாறு, அல்லது தனி நாடாக்குமாறு பல தசாப்த காலமாக போராடி வந்தது. வட அயர்லாந்து, மிக நீண்ட ஆயுதப்போராட்டம் நடந்த வரலாற்றைக் கொண்டது. அநீதியான முறையில் சிறையில் அடைக்கப் பட்டிருந்த பொபி சான்ட்ஸ், காந்தீய வழியில் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து தியாக மரணத்தை தழுவிக் கொண்டார்.

ஆயிரக் கணக்கானோர் உயிர்ப்பலி கொடுத்து, பல இன்னல்களை அனுபவித்த போதிலும், வட அயர்லாந்தினால் ஒரு பொது வாக்கெடுப்பின் மூலம் தனது தலைவிதியை தீர்மானிக்க முடியவில்லை. பிரிட்டிஷ் ஆளும் வர்க்கத்திடம் அப்படி ஒரு யோசனை கூடக் கிடையாது.

வட அயர்லாந்து விடுதலைப் போராட்டம் நடந்து கொண்டிருந்த காலத்தில், ஸ்காட்லாந்து ஒடுக்குமுறையாளர்களுடன் சேர்ந்து ஒத்துழைத்து வந்தது. இத்தனைக்கும், ஸ்காட்லாந்தின் கெயலிக் மொழியும், ஐரிஷ் மொழியும், ஒரே மாதிரியான கெல்டிக் மொழிக் குடும்பத்தை சேர்ந்தவை. இரண்டுமே ஆங்கிலத்தில் இருந்து முற்றிலும் வேறு பட்ட அந்நிய மொழிகள். அப்படி இருந்தும், ஸ்காட்லாந்து, அயர்லாந்துக்கு இடையில், மொழி அடிப்படையிலான சகோதரத்துவ உணர்வு எந்தக் காலத்திலும் இருக்கவில்லை. அதற்குக் காரணம், இனம் அல்ல, வர்க்கம் தான் அரசியலை தீர்மானிக்கிறது.

ஐரிஷ் மக்களுடன் ஒப்பிடும் பொழுது, ஸ்காட்டிஷ் மக்கள் பொருளாதாரத்தில் முன்னேறி இருந்தனர். ஸ்காட்டிஷ் மேட்டுக்குடியினர், பிரிட்டிஷ் ஆளும் வர்க்கத்தின் ஒரு பகுதியாக இருந்தனர். ஸ்காட்லாந்து எப்போதும் தன்னை இங்கிலாந்தின் சம பங்காளியாக கருதி வந்தது. பல ஸ்காட்டிஷ்காரர்கள், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் காலனிய கால போர்களில் பங்கெடுத்துள்ளனர். காலனிய நிர்வாகத்தில் உயர் பதவி வகித்தனர். "நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து முதலாம், இரண்டாம் உலகப் போர்களில் பங்கெடுத்தோம்..." என்று, ஸ்காட்லாந்து பிரிவினைக்கு எதிரான அரசியல்வாதிகள் புலம்பியமை இங்கே குறிப்பிடத் தக்கது.

அதற்காக, ஸ்காட்டிஷ் மக்கள் எல்லோரும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை தாங்கிப் பிடித்தார்கள் என்று சொல்ல வரவில்லை. குறிப்பாக, ஸ்காட்டிஷ் மேட்டுக்குடி / மத்திய தர வர்க்கம் பிரிட்டிஷ் ஆதரவாளர்களாக இருந்தார்கள் என்று கூறலாம். தற்போது நடந்து முடிந்துள்ள பொது வாக்கெடுப்பில், எடின்பேர்க் போன்ற மத்தியதர வர்க்க பகுதிகளில் அதிகளவு பிரிவினைக்கு எதிரான ஓட்டுகள் விழுந்துள்ளமை இங்கே குறிப்பிடத் தக்கது. கிளாஸ்கவ் போன்ற ஏழை உழைக்கும் மக்கள் வாழும் பகுதிகளில், பிரிவினைக்கு ஆதரவான ஓட்டுகள் விழுந்துள்ளன.

தமிழீழமும் ஆரம்பத்தில் ஈழத் தமிழ் மத்திய தர வர்க்கத்தின் கோரிக்கையாகத் தான் எழுந்தது. (அது தவிர்க்க முடியாதது. உலகில் பெரும்பாலான தேசிய இன எழுச்சிகள், குறிப்பிட்ட இனத்தின் மத்தியதர வர்க்க நலன் சார்ந்ததாகவே இருக்கும்.) ஸ்காட்டிஷ் மேட்டுக்குடியினர், அரசியல் விழிப்புணர்வு பெற்ற பின்னர், ஆங்கிலேய அரசுடன் முரண்பட்டனர். தமது பகுதியில் தாமே ஆள முடியும் என்ற நம்பிக்கை பிறந்தவுடன் தனி நாடு கோரிக்கையை முன் வைத்தனர். ஈழத் தமிழ் மேட்டுக்குடியினரும், சிங்கள ஆளும்வர்க்கத்துடன் முரண்பட்ட பின்னர் தான், தமிழீழம் கேட்கத் தொடங்கினார்கள். ஆயினும், அதை நடைமுறைப் படுத்துவதற்கு உழைக்கும் வர்க்க மக்களின் ஆதரவு தேவை.

1976 ஆம் ஆண்டு எடுக்கப் பட்ட வட்டுக்கோட்டை தீர்மானமும், தமிழீழக் கோரிக்கையை முன்வைத்து கிடைத்த 1977 ஆம் ஆண்டு தேர்தல் வெற்றியும், உழைக்கும் வர்க்க தமிழ் மக்களின் ஆதரவை பெற்றுக் கொள்வதற்கான அரசியல் நகர்வுகள் ஆகும். மேலும், அடுத்த முப்பதாண்டுகளாக நடந்த ஈழப் போர், கணிசமான அளவு உழைக்கும் வர்க்க மக்களின் ஆதரவை திரட்டிக் கொடுத்துள்ளது. (உண்மையில், அடித்தட்டு மக்கள் தான் போரினால் அதிகளவில் பாதிக்கப் பட்டனர்.)

வட்டுக்கோட்டை தீர்மானத்தின் பின்னர், அதன் அடிப்படையில் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்துவது தமிழர் விடுதலைக் கூட்டணியின் நோக்கமாக இருந்துள்ளது. வடக்கு, கிழக்கில் ஒன்றைத் தவிர எல்லாத் தொகுதிகளிலும் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். அது வாக்கெடுப்பிற்கான எதிர்பார்ப்பை மேலும் தூண்டி விட்டது.

உண்மையிலேயே, அன்று தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடந்திருந்தால், ஈழம் பிரிந்திருக்குமா? இந்த விஷயத்தில், கூட்டணியினரின் சந்தரப்பவாத அரசியலை ஒதுக்கி வைத்து விட்டுப் பார்ப்போம். அன்று, பெரும்பான்மை முஸ்லிம் மக்களும் தமிழீழத்திற்கு ஆதரவாக இருந்தனர்.

சிங்கள குடியேற்றங்களில் வாழ்ந்த மக்கள் பிரிவினையை எதிர்த்திருக்கலாம். ஆயினும், தமிழ், முஸ்லிம் வாக்காளர்கள் தமிழீழ சுதந்திரத்திற்கு ஆதரவாக வாக்களித்து இருப்பார்கள். அந்தப் பொன்னான வாய்ப்பு, இனிமேல் எந்தக் காலத்திலும் திரும்பி வராது என்பது தான் யதார்த்தம். ஈழப்போரில் நடந்த ஆயிரக் கணக்கான உயிரிழப்புகள், சொத்து அழிவுகள், இடப்பெயர்வுகள் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றிப் போட்டுள்ளது.

வடக்கு கிழக்கில் வாழும் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள், மூன்று திசைகளில் பிரிந்து சென்று விட்டனர். மேலும், தமிழ் மக்கள் மத்தியிலும், ஈழப் போரானது ஒற்றுமையை குலைத்துள்ளது. "புலி ஆதரவாளர்கள்", "புலி எதிர்ப்பாளர்கள்" என்று இரண்டு பிரிவுகள், போர்க் காலத்தில் நடந்த கொலைகள், பழிவாங்கல்களினால் இரண்டு துருவங்களாக உள்ளன. எல்லாவற்றிற்கும் பின்னால் ஏதாவது ஒரு சூழ்ச்சி பின்னப் பட்டிருக்கலாம்.

ஆயினும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமும், அதன் வாரிசான சிறிலங்கா அரசும் சிந்திக்கும் அளவிற்கு, நாங்கள் யாரும் சிந்திப்பது இல்லை என்பதும் உண்மை தான். முதலில், ஏகாதிபத்தியத்தின் தன்மை பற்றி அறிந்து கொண்டால் தானே, அதற்கு ஏற்றவாறு எமது அரசியலை தீர்மானிக்க முடியும்? "உலகில் ஏகாதிபத்தியம் என்ற ஒன்று இல்லை" என்று சாதிப்பவர்களினால், என்றைக்குமே தமிழ் மக்களை வழிநடத்த முடியாது.

தமிழீழத்தையும், ஸ்காட்லாந்தையும் ஒப்பிட முடியுமா? நாங்கள் சில ஒற்றுமைகளை சுட்டிக் காட்டி, ஒப்பிட்டு மகிழலாம். ஆனால், "ஸ்காட்லாந்தில் சாத்தியமான ஒன்று, ஏன் தமிழீழத்திற்கு பொருந்தாது?" என்று வாதிட முடியாது. ஏனென்றால், ஸ்காட்லாந்து முதலாம் உலகத்தை சேர்ந்தது. அது காலனியாதிக்க நாடாக இருந்தது.

தமிழீழம் மூன்றாமுலகத்தை சேர்ந்தது. அது காலனிய அடிமை நாடாக இருந்தது. அது ஒரு முக்கியமான வேறுபாடு தான். இரண்டாம் உலகப்போரில், ஜெர்மனியிடம் இருந்து விடுதலை பெற்ற நெதர்லாந்து, தனது ஆசியக் காலனியான இந்தோனேசியாவுக்கு சுதந்திரம் கொடுக்க மறுத்து வந்தது.

ஒரு பேச்சுக்கு, ஸ்காட்லாந்து சுதந்திரம் அடைந்திருந்தால், அது நாளைக்கு தமிழீழ சுதந்திரத்தை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. அந்தத் தருணத்தில், அது பிரிட்டனின் அதே நிலைப்பாட்டை எடுக்கலாம். இது ஒரு வகையில், தேசியவாதத்தின் குறுகிய மனப்பான்மை என்றும் கூறலாம். தேசியவாத சித்தாந்தம், எப்போதும் உள்நோக்கிப் பார்க்கும் தன்மை கொண்டது. தனது பிரதேசத்தை தவிர, உலகின் பிற பகுதிகளில் என்ன பிரச்சினை இருக்கிறது என்று அறிவதில் அக்கறை காட்டுவதுமில்லை.

"ஸ்காட்லாந்து வாக்கெடுப்பின் பின்னடைவால், அதன் விடுதலை தற்காலிகமாக தள்ளிப்போயுள்ளது..." என்பது மே 17 காரர்களின் வாதம். அதாவது, சில தவறுகளை திருத்திக் கொண்டால், அடுத்த தடவை நடக்கவிருக்கும் பொது வாக்கெடுப்பில் எப்படியும் விடுதலை கிடைத்து விடுமாம். மேற்குலக நாடொன்றில், தனி நாடு பிரிவினைக்கான பொது வாக்கெடுப்பு நடப்பது இதுவே முதல் தடவை அல்ல.

1995 ஆம் ஆண்டு, கனடாவில் பிரெஞ்சு மொழி பேசும் கெபெக் (ஆங்கிலத்தில் : கியூபெக்) மாநிலம் பிரிவதற்கான பொது வாக்கெடுப்பு நடைபெற்றது. அதிலேயும், பிரிவினைக்கு எதிரான வாக்குகள் அதிகளவில் விழுந்தன. (மிகச் சிறிய வித்தியாசம் தான். ஆம் 49.42%, இல்லை 50.58%) தற்போது, 14 வருடங்களுக்குப் பின்னரும், மீண்டும் ஒரு வாக்கெடுப்பு நடத்துவது பற்றிய கதையே இல்லை.

ஸ்காட்லாந்திலும், கெபெக்கிலும் பெருமளவு வெளிநாட்டுக் குடியேறிகள் சுதந்திரத்திற்கு எதிராக ஓட்டுப் போட்டதாக குற்றஞ்சாட்டப் பட்டது. மே 17 ஆய்வாளர், அந்தக் குறைபாட்டை தனது கட்டுரையில் குறிப்பிடாமல் விட்டது தற்செயலாக நடந்தது அல்ல. ஸ்காட்லாந்து, கெபெக் விடுதலைக்கு எதிராக ஓட்டுப் போட்டவர்களில், கணிசமான அளவு தமிழகத் தமிழர்கள், ஈழத் தமிழர்களும் அடங்குவார்கள். அந்த உண்மையை ஒத்துக் கொண்டால், தனது பிழைப்பில் தானே மண்ணள்ளிப் போட்டதாக முடிந்து விடும்.

வளர்ச்சி அடைந்த முதலாம் உலக நாடென்பதால், பிரிட்டனுக்கு சென்ற வந்த பன்னாட்டுக் குடியேறிகளும் ஸ்காட்லாந்திலும் வசிப்பது எதிர்பார்க்கத் தக்கதே. பவுன் பவுனாக அள்ளலாம் என்ற கனவில், பிரிட்டனில் குடியேறுவதற்கு அல்லது வேலை செய்வதற்கு விரும்புவோர் பலருண்டு. டாலர், யூரோவை விட, பவுனின் பெறுமதி அதிகம் என்பதால், பிரிட்டனில் வேலை செய்து பணம் அனுப்புவருக்கு இந்தியாவில் அதிக மதிப்புக் கிடைக்கிறது. பவுனின் மகாத்மியம் பற்றி இங்கே விபரிக்கத் தேவையில்லை. சாதாரண மக்கள் எல்லோருக்கும் தெரிந்த உண்மை இது.

ஸ்காட்லாந்து தனி நாடானால், அது பவுனை நாணயமாக பயன்படுத்த முடியாது என்று, பிரிட்டிஷ் அரசு திட்டவட்டமாக அறிவித்து விட்டது. சுதந்திரம் அடைந்த பின்னரும் பவுனை தொடர்ந்தும் பயன்படுத்த விரும்புவதாக ஸ்காட்டிஷ் தேசியவாதக் கட்சி அறிவித்திருந்தது. ஆயினும், பவுனை பயன்படுத்துவதற்கு பிரிட்டன் மறுக்கும் பட்சத்தில் அடுத்த ஏற்பாடு என்ன? ஸ்காட்லாந்து தனக்கென தனியான நாணயத்தை அறிமுகப் படுத்துமா? அதன் பெறுமதி என்னவாக இருக்கும்? இதை யாராலும் அறுதியிட்டுக் கூற முடியவில்லை.

பவுனை இழந்து விடுவோம் என்ற பயத்தில், ஸ்காட்லாந்தில் வாழும் தெற்காசிய நாட்டவர்கள், விடுதலையை எதிர்த்து ஓட்டுப் போட்டிருக்கிறார்கள். பவுன் பற்றிய அச்சத்தை, பல தமிழ் மக்கள் நேரடியாகவே தெரிவித்து இருக்கிறார்கள். சாதாரண தமிழ் மக்களுக்கு தெரிந்த காரணம், மே 17 ஆய்வாளரின் கண்களுக்கு மட்டும் தெரியவில்லை. அவர் ஸ்காட்லாந்தில் வாழும் "இங்கிலாந்துக்காரர்களை" பற்றி மட்டும் கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

இங்கிலாந்துகாரர்களின் வாக்குரிமையை தடுத்திருந்தால், ஸ்காட்லாந்து சுதந்திரம் அடைந்திருக்கும் என்று அடித்துக் கூறுகிறார். கொஞ்சம் பொது அறிவை பயன்படுத்தி சிந்திக்கக் கூடாதா? ஸ்காட்லாந்தில் இங்கிலாந்துக்காரர்கள் மட்டுமா குடியேறி இருப்பார்கள்? எத்தனை இலட்சம் வேல்ஸ் அல்லது ஐரிஷ்காரர்கள் வசிக்கிறார்கள்? வெறும் இனவாதக் கண்ணோட்டத்துடன் எழுதப் படும் ஆய்வுக் கட்டுரைகளினால் தமிழீழத்திற்கு எந்தப் படிப்பினையும் கிடைக்கப் போவதில்லை.

அது சரி, ஸ்காட்டிஷ் மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து பிரிவினைக்கு ஆதரவாக ஓட்டுப் போட்டார்களா? எத்தனை சதவீத ஸ்காட்டிஷ் வாக்காளர்கள் ஐக்கிய இராச்சியத்தோடு சேர்ந்திருக்க விரும்புகிறார்கள்? பொது வாக்கெடுப்பினால், ஸ்காட்லாந்தில் எத்தனை குடும்பங்கள், உறவினர்கள், நண்பர்கள் கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்தார்கள் என்பது தெரியுமா? ஆமாம், அவர்கள் எல்லாம் ஸ்காட்டிஷ் இனத்தவர்கள் தான். ஆனால், ஸ்காட்லாந்து பிரிவினை தொடர்பான அரசியல் கருத்து முரண்பாடு அவர்களைப் பிரித்துள்ளது.

அது போகட்டும். எத்தனை ஸ்காட்டிஷ் முதலாளிகள் சுதந்திரத்தை ஆதரித்தார்கள்? எதற்காக ஸ்காட்டிஷ் மேட்டுக்குடியினர் சுதந்திரத்திற்கு எதிராக ஓட்டுப் போட்டனர்? ஸ்காட்டிஷ் மேட்டுக்குடியினர் பெரும்பான்மையாக வாழும், எடின்பேர்க் போன்ற நகரங்களில் தான் பெருமளவு "இல்லை" ஓட்டுகள் கிடைத்துள்ளன. தேர்தல் முடிவுகள் தொடர்பான புள்ளிவிபரம் அதைக் காட்டுகின்றது.

ஸ்காட்டிஷ் ஊடகங்களின் நிலைப்பாடு என்னவாக இருந்தது? அரச ஊடகமான, பிபிசி யை மறந்து விடுவோம். ஸ்காட்லாந்தில் வெளியாகும் தினசரிப் பத்திரிகைகளில், ஒன்று மட்டும் தான் சுதந்திரத்தை ஆதரித்திருந்தது. மற்ற எல்லா பத்திரிகைகளும், பிரிட்டனுடன் சேர்ந்திருக்க விரும்பி, "இல்லை" ஓட்டுப் போடுமாறு, வாக்காளர்களுக்கு அறிவுறுத்தின. மேற்குலக நாடுகளில், பத்திரிகைகள், வெகுஜன ஊடகங்கள் பெரிய நிறுவனங்களின் கைகளில் உள்ளன.

ஸ்காட்லாந்து சுதந்திர நாடானால், அதன் தேசிய வங்கியாக வரும் வாய்ப்புப் பெற்ற Bank of Scotland, எதற்காக பிரிவினையை ஆதரிக்கவில்லை? உலகம் முழுவதும் ஸ்கொச் விஸ்கி ஏற்றுமதி செய்யும் பன்னாட்டு நிறுவனங்கள், ஸ்காட்லாந்து சுதந்திரத்தை எதிர்த்த மர்மம் என்ன? விஸ்கி ஸ்காட்லாந்தின் பிரதானமான பொருளாதாரம் அல்லவா?

இதற்கெல்லாம் விடை ஒன்று தான். பெரும் மூலதனத்திற்கு தேசியம் கிடையாது. சர்வதேச சந்தையில் ஆதிக்கம் செலுத்துவதற்கு, ஸ்காட்லாந்தை விட பிரிட்டன் தான் சிறந்த நாடு. பிரிட்டன் தான் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கிறது, ஸ்காட்லாந்து அல்ல. அதனால் தான் ஸ்காட்டிஷ் முதலாளிகளும், மேட்டுக்குடியினரும் பிரிட்டிஷ் அரசுக்கு விசுவாசமாக இருந்தார்கள்.

இதை அப்படியே, தமிழீழத்திற்குப் பொருத்திப் பாருங்கள். ஸ்காட்லாந்து விடுதலைக்கு எதிராக நின்ற பெரும் மூலதனம், தமிழீழ விடுதலையை ஆதரிக்குமா? அதனால் அதற்கு என்ன இலாபம்? ஐ.நா. கண்காணிப்பின் கீழ் பொது வாக்கெடுப்பு நடத்தி, கிழக்கு தீமோரை பிரித்தார்கள். எதற்காக? கிழக்கு தீமோர் மக்கள் மேல் பரிதாபப் பட்டு செய்தார்களா? இல்லை. அந்த நாட்டில் எண்ணை வளம் உள்ளது. அவற்றை மேற்குலக எண்ணை நிறுவனங்கள் ஆளுவது மட்டுமே ஏகாதிபத்தியத்தின் குறிக்கோளாக இருந்தது.

தமிழீழத்தில் எண்ணை வளம் இல்லை என்பதால், கிழக்கு தீமோரை பிரிக்க விரும்பிய பெரும் மூலதனம் தமிழீழ விடுதலையை ஆதரிக்காது. மே 17 ஆய்வாளரின் ஆலோசனைகளின் படி, தமிழீழத்தில் பொது வாக்கெடுப்பு நடந்தால், முதலில் எதிர்ப்பவர்கள் மிகப் பெரிய தமிழ் முதலாளிகளாக இருப்பார்கள். ஏனென்றால், கொழும்பு தான் சர்வதேச மூலதனத்துடன் தொடர்பு வைத்துள்ளது. யாழ்ப்பாணம் அல்ல. மேலும், ஸ்காட்லாந்து வாக்கெடுப்பில், பவுன் தொடர்பாக எழுந்த பிரச்சினை தமிழீழத்திலும் வரலாம். தமிழீழத்தின் நாணயம் எது? சிறிலங்கா ரூபாய் தொடர்ந்தும் பயன்படுத்தப் படுமா? அதற்கு சிறிலங்கா அரசு அனுமதிக்குமா?

தமிழீழம் சுதந்திர நாடானால், தமிழீழ ரூபாய் என்ற புதிய நாணயம் கொண்டு வருவார்களா? அதன் பெறுமதி என்னவாக இருக்கும்? புலிகள் இருந்த காலத்திலேயே, தமிழீழ ரூபாய் நோட்டுகளை பாவனைக்கு கொண்டு வருவதற்கு முயற்சி செய்தார்கள். ஆனால், மக்களின் ஆதரவு இல்லாத காரணத்தினால் கைவிடப் பட்டது. (100 சிறிலங்கா ரூபாய்கள்  = 120 தமிழீழ ரூபாய்கள் என்று பெறுமதி தீர்மானிக்கப் பட்டது. தமிழ்ப் பொது மக்கள், சந்தையினால் நிர்ணயிக்கப் படாத நாணயப் பெறுமதியை ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள்.)

தமிழ் பேசும் பாமர மக்களுக்கும் ஓரளவு பொருளாதாரம் தெரியும். புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் இயங்கிய தமிழீழ வங்கிகளில் கூட, பெருமளவு மக்கள் தங்கள் பணத்தை வைப்பிலிடவில்லை. அதற்குப் பதிலாக சிறிலங்கா அரச வங்கிகளிலேயே தொடர்ந்தும் வைப்பிலிட்டு வந்தார்கள். (சிறிலங்கா வங்கி நிறுவனங்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருந்தன. அரசு ஊழியர்களின் சம்பளங்களும், வர்த்தகத் தொடர்புகளும் சிறிலங்கா வங்கிகள் மூலமே பரிவர்த்தனை செய்யப் பட்டன.) 

உலகம் முழுவதும் வாழும் பெரும்பான்மையான மக்கள், தமது பொருளாதார நலன்களை மட்டுமே முக்கியமாகக் கருதுகின்றனர். தமிழ் மக்களும் அதற்கு விதிவிலக்கு அல்ல. பொது வாக்கெடுப்பு விஷயத்தில், ஏகாதிபத்தியமும், பெரும் மூலதனமும் எந்தப் பக்கம் நிற்கின்றதோ, அதற்கு சார்பாக முடிவுகள் எழுதப்படும்.

இந்த உண்மைகளைப் புரிந்து கொள்ளாத ஒரு தேசியவாத இயக்கம், அந்த இனத்தை சேர்ந்த நடுத்தர வர்க்கத்தின் வெகுளித்தனத்தை மட்டுமே பிரதிபலிக்கும். ஏகாதிபத்தியத்தையும், பெரும் மூலதனத்தையும் எதிர்த்துப் போராடாத தேசியவாத இயக்கத்தினால், தனது மக்களின் விடுதலையை வாங்கித் தர முடியாது.


  • பொது வாக்கெடுப்பின் முடிவுகளை முதலாளிகளே தீர்மானிக்கிறார்கள்!





ஸ்காட்லாந்து தொடர்பான முன்னைய பதிவுகள்:

2 comments:

  1. இந்தக் கட்டுரையின் ஒரு பகுதியை, ஏற்கனவே முகநூலில் பகிர்ந்திருந்தேன். அப்போது எனது கட்டுரைக்கு எதிர்வினை எழுத முடியாத ஆற்றாமையினால், மே 17 அனுதாபி ஒருவர், என் மீது தனி நபர் தாக்குதல் நடத்தி இருந்தார். கட்டுரைக்கான அவரது விமர்சனம் இது தான்:

    //ஒரு 40 வயதை கடந்திருக்கும் தாங்கள் குறைந்தது ஒரு 100 பாட்டாளிகளை ஒன்று திரட்டி போராடியிருக்குறீர்கள் என்றால் விவாதிக்கலாம். பாட்டாளி வர்க்கமாக இல்லமால் மத்தியதர வர்க்கத்தினராக நீங்கள் எந்த புரட்சியை நோக்கி நகர்குறீர்கள். உங்களுக்காகவே "ஓடாத டப்பா காரும், இந்திய புரட்சியும் " என்ற கட்டுரை இருக்கிறது.//

    இந்தப் பதிலில் இருந்தே, தம்மைத் தாமே தமிழ் மக்களுக்கும் மேலான பிரபுக்கள் மாதிரி நினைத்துக் கொள்ளும், மேட்டுக்குடி அகம்பாவம் தெரிகின்றது.

    அவர் குறிப்பிடும் "100 பாட்டாளிகளில்" ஒருவன் தான் நானும். "ஒன்று திரட்டுவதற்கு" நான் அவர்களின் மீட்பர் அல்ல. அதனால், எனது ஒவ்வொரு எழுத்தும், மக்களின் குரலாகவே ஒலிக்கும்.

    தமிழ் பேசும் மத்தியதர வர்க்க பிரபுக்களுக்கு, இந்த உண்மை தெரியாததில் வியப்பில்லை. அவர்கள் என்றைக்குமே மக்களின் அரசியல் அபிலாஷைகளை புரிந்து கொண்டவர்கள் அல்ல. தங்களது வர்க்க நலன்களுக்கான அபிலாஷைகளை, மக்கள் மேல் திணித்து பழக்கப் பட்டவர்கள்.

    ReplyDelete
  2. உண்மையில் இது எல்லாருக்கும் தெரிவிக்க பட வேண்டிய மிக அருமையான பதிவு. காலனிய அடிமை மக்களின் பிரதிநிதியாக ஸ்காட்லாந்து விடுதலையை மிக ஆர்வமாக எதிர்பார்த்தேன்..
    அதன் தோல்வியின் சாரம்சம் உங்கள் கட்டுரையில் பதிலாக கிடைத்துவிட்டது.
    Great answer.

    ReplyDelete