Thursday, August 14, 2014

அமெரிக்காவின் "மனிதாபிமான வான் தாக்குதல்" - அம்பலமாகும் பொய்கள்



வட ஈராக்கில், யேசிடி குர்திய மக்களை காப்பாற்றுவதற்காக,அமெரிக்கா வான் தாக்குதல்களை நடத்தியதாக மேற்குலக ஊடகங்களில் அறிவிக்கப் பட்டது. உண்மையில், இந்த "மனிதாபிமான நடவடிக்கை" காரணமாக அமெரிக்கா மீண்டும் பல வருடங்களுக்குப் பின்னர், ஈராக்கில் குண்டு போடவில்லை. யேசிடி குர்திய மக்களை காப்பாற்றுவதை விட, எர்பில் நகரில் உள்ள எக்சன்-மொபில் நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணைக் கிணறுகளை பாதுகாப்பதே, அமெரிக்க வான் தாக்குதல்களின் உண்மையான நோக்கமாக இருந்தது.

 "யேசிடி" என்பது இஸ்லாத்திற்கும், கிறிஸ்தவத்திற்கும் முந்திய புராதன கால மதம். அதற்கு சரதூசரின் மதத்துடன் சில தொடர்புகள் உள்ளன. ஆனால், யேசிடி அதிலிருந்து மாறுபட்ட வேறொரு மதம். யேசிடி மதத்திற்கும், முருக வழிபாட்டிற்கும் தொடர்பிருக்கலாம். இரண்டிலும் மயில் பிரதான பாத்திரம் வகிக்கின்றது. வட ஈராக்கில் வாழும் குர்து மொழி பேசும் மக்களில் ஒரு பிரிவினர், இன்றைக்கும் யேசிடி மதத்தை பின்பற்றி வருகின்றனர். 

மதவாத இயக்கமான ISIS, அந்த மக்கள் "பிசாசை வழிபடுபவர்கள்" என்று கூறி வெளியேற்றியுள்ளது. ISIS கையில் அகப்பட்ட பெண்கள் மானபங்கப் படுத்தப் பட்டு, கொலை செய்யப் பட்டனர். குறைந்தது 500 யேசிடிக்கள் கொன்று புதைக்கப் பட்டனர். ISIS ஆக்கிரமிப்பாளர்களின் இனப்படுகொலைக்கு தப்பிய யேசிடி குர்தியர்கள், மலைகளில் தஞ்சம் புகுந்தனர்.

வட ஈராக்கில் வாழ்ந்து வந்த சிறுபான்மை இனமான, யேசிடி மதத்தை பின்பற்றும் குர்து மக்கள், ISIS மதவெறியர்களினால் இனச் சுத்திகரிப்பு செய்யப் பட்டனர். இனப்படுகொலைக்கு தப்பிய பத்தாயிரம் யேசிடி குர்தியர்கள், சின்ஜார் மலைகளில் தஞ்சம் புகுந்தனர். தணலாகக் கொதிக்கும் வெயிலில், உணவின்றி, நீரின்றி, சிறு குழந்தைகளுடன் பல மைல் தூரம் நடந்து சென்ற மக்களைப் பற்றிய துயரக் கதைகளுக்கு, மேற்கத்திய ஊடகங்களில் முக்கியத்துவம் கொடுக்கப் பட்டன. அமெரிக்காவும், பிரிட்டனும் விமானங்களில் நிவாரணப் பொருட்களை அனுப்பியதாகவும், மலைகளில் அகப்பட்ட மக்களை காப்பாற்றி கொண்டு சென்றதாகவும் சொல்லப் பட்டது. இந்த மனிதாபிமான நெருக்கடியை காரணமாகக் காட்டி, அமெரிக்க போர் விமானங்கள் ISIS நிலைகளின் மீது குண்டு வீசித் தாக்குவதாகவும் அறிவிக்கப் பட்டது.

ஆனால், உண்மையில் அங்கே நடந்தது என்ன?

அமெரிக்க வான் தாக்குதல் நடப்பதற்கு முன்னரே, சிரியாவில் நிலைகொண்டிருந்த PKK இயக்கப் போராளிகள் சின்ஜார் பகுதிக்குள் ஊடுருவினார்கள். அவர்கள் ஏற்கனவே, வட சிரியாவில் குர்து மொழி பேசும் மக்களின் பிரதேசத்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கிறார்கள். ISIS மதவாத இயக்கத்தின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தி, கடுமையாக சண்டையிட்டுக் கொண்டிருகிறார்கள். 

PKK போராளிகள், யேசிடி குர்தியர்களை, வட சிரியாவில் உள்ள தமது கட்டுப்பாட்டுப் பகுதிக்கு பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். அதற்குப் பிறகு தான், அமெரிக்காவும், பிரிட்டனும் அந்த மக்களை தாமே மீட்டதாக ஊடகங்களுக்கு அறிவித்துக் கொண்டன. எத்தனை பெரிய பொய்? ஆனால், மேற்குலகம் எதைச் சொன்னாலும் உண்மை என்று நம்பும் மக்கள் உலகில் இருக்கும் வரையில், இந்தப் பொய்கள் அரங்கேறும்.

உண்மையில், பெரும்பான்மையான யேசிடி குர்திய மக்களை மீட்டவர்கள் PKK போராளிகளே! இன்று வரைக்கும் சின்ஜார் நகரம் அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதற்கு ஆதாரமாக, யேசிடி மதத்தவரின் புனித ஸ்தலத்தை, PKK போராளிகள் பாதுகாப்பதை இங்கேயுள்ள படத்தில் பார்க்கலாம்.

இந்தத் தகவலை, மீட்பு நடவடிக்கைக்காக ஈராக் குர்திஸ்தனுக்கு சென்று வந்த ஜெர்மன் பாராளுமன்ற உறுப்பினர் Ulla Jelpke உறுதிப் படுத்தி உள்ளார். குர்திஸ்தானில் நின்ற நெதர்லாந்து ஊடகவியலாளர் ஒருவரும், தொலைக்காட்சி கமெராவுக்கு முன்னால் ஒரு தகவலைக் கூறினார். "யேசிடி மக்கள் சிரியாவை நோக்கி அகதிகளாக செல்வதாகவும், அவர்கள் ஏன் ஈராக் குர்திஸ்தான் பக்கம் வரவில்லை என்ற காரணம் தெரியவில்லை" என்று கூறினார்.


யேசிடி குர்து மக்கள் பற்றிய முன்னைய பதிவு:
யேசிடி மதமும், அடக்கப்பட்ட கடவுளின் மக்களும்

No comments:

Post a Comment