Monday, June 09, 2014

ஏகாதிபத்திய நலன்களுக்கான ஜனநாயகம், மனித உரிமைகள்


இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் உலகை மாற்றிய சோவியத் யூனியனின் உடைவு, பெர்லின் மதில் வீழ்ச்சி, தியனன் மென் படுகொலை போன்ற நிகழ்வுகள் குறித்து, பெல்ஜிய கம்யூனிஸ்ட் கட்சியான தொழிற் கட்சிக்குள் (PTB) மாபெரும் விவாதம் ஒன்று நடந்தது. அந்த விவாதத்தில் பேசப் பட்ட விடயங்களை தொகுத்து, மத்திய குழு உறுப்பினர் லூடோ மார்த்தென்ஸ் ஒரு நூலாக (Van Tien An Men tot Timisoara) வெளியிட்டார். அந்த நூலில் இருந்து சில பகுதிகள், இந்தக் காலத்திற்கும் பொருந்தும் என்பதால், அவற்றை இங்கே மொழிபெயர்த்து தந்துள்ளேன்.
*******

ஏகாதிபத்திய ஜனநாயகமும், மக்கள் ஜனநாயகமும் இரண்டு பகை முரண்பாடு கொண்ட ஜனநாயக அமைப்புகள் ஆகும். இவ்விரண்டு அமைப்புகளும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து வாழ முடியாத வர்க்கங்களை பிரதிநிதித்துவப் படுத்துகின்றன. ஏகாதிபத்திய ஜனநாயகத்தின் மையக்கருவாக தன்முனைப்பு காணப் படுகின்றது. மனிதர்களை ஓநாய்கள் போன்று, ஒருவருக்கு எதிராக மற்றவரை நிறுத்துகின்றது. அதற்கு மாறாக, மக்கள் ஜனநாயகம் கூட்டுத்துவ வேலைத் திட்ட முறையை கொண்டது. சகோதரத்துவ மனப்பான்மை, உழைப்பாளர்கள் மத்தியில் பரஸ்பர உதவி ஆகியவற்றை முதன்மையான நோக்கமாக கொண்டது.

சோஷலிச நாடுகளிலும் மேலைத்தேய பாணி அரசியல் ஜனநாயகத்தை நடைமுறைப் படுத்த முடியாதா, என்று ஒரு தோழர் கேட்கிறார். இந்த நிலைப்பாட்டில் ஒரு அடிப்படைத் தவறு உள்ளது. ஜனநாயகத்தில் உள்ள வர்க்க குணாம்சத்தை தோழர் மறந்து விட்டார். அவர், வர்க்கங்களுக்கு அப்பாற்பட்ட, ஒரு "தூய்மையான ஜனநாயகம்" பற்றி பேசுகின்றார். அதே நேரம், ஏகாதிபத்தியத்திற்கும், சோஷலிசத்திற்கும், மூலதனத்திற்கும், உழைப்பிற்கும் இடையிலான மோதல்களை மறைக்கிறார்.

புஷ், தாட்சர், மித்தரான் ஆகியோர் முன்மொழிந்த அர்த்தம் குறித்து அந்த தோழர் நினைத்துப் பார்க்கவில்லை. அவர்கள் கூறிய "சுதந்திரமும், ஜனநாயகமும்; பொருளாதார சுதந்திரம், முதலாளிகளின் ஜனநாயகம்" ஆகியவற்றை உள்ளடக்கியது. அதாவது, ஒரு மார்க்சிஸ்டின் பார்வையில் "முதலாளிய பொருளாதாரமும், முதலாளிய ஜனநாயகமும்." இந்தப் பிணைப்பு பிரிக்க முடியாதது. இதே விடயம் குறித்து நவ நாஸிகள் என்ன கருத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நினைத்துப் பார்ப்பதில்லை.

சோஷலிச நாடுகளில் ஜனநாயகம் பற்றி பிளாம்ஸ் ப்ளாக் கட்சி உறுப்பினர் அன்னேமான்ஸ் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். "அதிக பயன் தரத்தக்க பொருளாதாரம் சுதந்திரமான பொருளாதாரமாக இருக்க வேண்டும். அது ஒரு முதலாளிய பொருளாதாரம் தான். ஆனால், பொருளாதார சுதந்திரம் உடனடியாக பன்மைத்துவ சமூகத்திற்கு இட்டுச் செல்லும். அத்தகைய சுதந்திரம் அரசியல் மட்டத்திலும் சுதந்திரத்தை கோரும். ஜனநாயகம், பன்மைத்துவம் இன்றி முதலாளித்துவத்தை கொண்டு வர முடியாது." என்பது அவர் வாதம்.

எல்லா பிற்போக்கு சக்திகளும் சோஷலிசத்தை உள்ளிருந்து அழிப்பதில் ஒன்று சேர்கின்றன. ஹிட்லர் அல்லது பினோச்சே போன்றவர்களின் தலைமையில் அரசமைக்கப் போகும் பாசிஸ்டுகள் பின்னொரு காலத்தில் நினைத்துப் பார்ப்பார்கள்: "முதலாளித்துவ பொருளாதாரம் எந்தளவு பிரயோசனமானது." என்று சொல்லிக் கொள்வார்கள்.

அமெரிக்கர்களைப் பொறுத்தவரையில், "புலம்பெயர்தல்" ஓர் அடிப்படை மனித உரிமை. ஏகாதிபத்திய சர்வாதிகாரம் நிலைநாட்டப் பட்டுள்ள மூன்றாமுலக நாடுகளில், கோடிக் கணக்கான மக்கள் புலம்பெயர விரும்புகிறார்கள். பசியால் வாடும், கஷ்டப் படும் மக்கள், மேற்குலகிற்கு வேலை தேடிச் செல்வதை ஏகாதிபத்தியம் தடுக்கின்றது. நம்பமுடியாத அளவிற்கு முயற்சி எடுத்து, பல தியாகங்களை செய்து, மேற்குலகை வந்து சேர்ந்தால், அவர்கள் அங்கே நாயிலும் கேவலமாக நடத்தப் படுகின்றனர். அத்தோடு வெளியேற்றப் படுகின்றார்கள்.

(தொண்ணூறுகளுக்கு முன்னர்) ஓரளவு வளர்ச்சி அடைந்திருந்த, ஸ்திரமான கிழக்கு ஐரோப்பிய சோஷலிச நாடுகளில் இருந்து மக்கள் புலம்பெயர்வதை ஏகாதிபத்தியம் ஆதரித்தது. அதன் நோக்கம்: "மூளைகளின் வெளியேற்றம்" (Brain - drain). சோஷலிச நாடுகளில் இலவசக் கல்வி மூலம் பயனடைந்த அறிவுஜீவிகள் மேல் ஆதிக்கம் செலுத்துவது. அவர்களைக் கொண்டே சோஷலிச எதிர்ப்பு பிரச்சாரம் செய்வது. அவர்களது தாயகத்தில் "சுதந்திரம் பற்றாக்குறையாக" இருப்பதாக காட்டுவது. ஒரு காலனியாதிக்க நாடான இஸ்ரேல் அவர்களை முன்னரங்க படையணிகளில் நிறுத்தி பீரங்கிக்கு தீனியாக்கியது.

முன்னாள் சோஷலிச நாடுகளில், முதலாளித்துவ பொருளாதாரம் நிலை நாட்டப் பட்டதும், அங்கிருந்து புலம்பெயரும் இலட்சக் கணக்கான ஏழை மக்கள், மேற்குலகிற்கு வேலை தேடிச் செல்ல விடாமல் தடுக்கப் படுவார்கள். அந்த நேரம், மூன்றாமுலக பொருளாதார அகதிகள் போன்று மோசமாக நடத்தப் படுவார்கள். அந்தக் காலம் வரும் பொழுது, ரீகனும் புஷ்ஷும் முன்மொழிந்த "மனித உரிமை", "புலம்பெயரும் உரிமை" என்பன திடீரென காணாமல்போகும்.

கிழக்கு ஜெர்மனியில் இருந்து பெருந்தொகையான அகதிகள், ஹங்கேரி ஊடாக மேற்கு ஜெர்மனிக்கு வந்து சேர்ந்த கதை நமக்கெல்லாம் தெரியும். அவர்களது தாயகத்தில் "சுதந்திரம், ஜனநாயகம் பற்றாக்குறையாக இருந்த காரணத்தினால்" அந்த எளிய மக்கள் வெளியேறியதாக சொல்லப் பட்டது. ஹங்கேரி திரிபுவாதிகள், மேற்கு ஜெர்மன் அரசுடன் கூட்டுச் சேர்ந்து, அவர்கள் கொடுத்த பணத்திற்காக திட்டமிட்டு நடத்திய நாடகம் இது என்ற தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. 

"கம்யூனிச பயங்கரவாதத்திற்கு" பயந்து தப்பியோடியவர்கள், நாயகர்கள் போன்று வரவேற்கப் பட்டனர். குட்டி பூர்ஷுவா வர்க்கமும் அந்தப் பொறிக்குள் அகப்பட்டுக் கொண்டது. மிகவும் சிறப்பாக ஒழுங்கமைக்கப் பட்டிருந்த சோஷலிச நாடொன்றை நிலைகுலைய வைப்பதற்கும், எதிர்ப்புரட்சியாளர்களை ஊக்குவிப்பதற்குமான திட்டம் அது. இன்று அது எல்லா கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் நடந்துள்ள உண்மை.

அப்போது, திடீரென பத்தாயிரம் அல்பேனியர்கள் படகுகளில் இத்தாலிக்கு சென்றார்கள். அவர்களுக்கும் "ஜனநாயகம்,சுதந்திரத்தை" ருசி பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்திருக்கலாம். அந்தக் காலகட்டத்தில், கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மேலான பன்னாட்டு நிறுவனங்களின் மேலாதிக்கம் வென்றெடுக்கப் பட்டு விட்டது. 

அதனால், "துணிச்சலான அல்பேனிய சுதந்திரப் போராளிகளை" வரவேற்பதற்கு, இத்தாலியில் யாரும் காத்திருக்கவில்லை. அந்த வறிய அல்பேனிய உழைப்பாளிகளை வரவேற்பதற்கு இராணுவத்தினரும், வேட்டை நாய்களும் காத்திருந்தனர். அவர்களை கால்பந்து மைதானங்களில், கொளுத்தும் வெயிலில் தண்ணீரும் கொடுக்காமல் தடுத்து வைத்தார்கள். அத்தனை பேரையும் பலவந்தமாக பிடித்து அல்பேனியாவுக்கு திருப்பி அனுப்பினார்கள்.

- Ludo Martens 
  4 June 1989
(Van Tien An Men tot Timisoara)

No comments:

Post a Comment