Saturday, June 14, 2014

தமிழ் உழைக்கும் மக்களுக்கு எதிரான வலதுசாரிகளின் பிரச்சாரங்கள்




"எங்கெல்லாம் அநியாயம் நடக்கிற போது, உன் ரத்தம் கொதித்தால், நீயும் நானும் நண்பனே." - சேகுவேரா

ஒரு முதலாளித்துவ நாட்டில் வாழ்ந்து கொண்டே, முதலாளித்துவத்திற்கு எதிராக பேசலாமா என்று சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது எந்த வகை நியாயம் என்று தெரியவில்லை. ஒரு சிங்கள பௌத்த நாடான இலங்கையில் வாழும் மக்கள், சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக பேசக் கூடாதா?

தமிழ் பேசும் உழைக்கும் வர்க்க மக்களுக்கு எதிரான, மேட்டுக்குடி அறிவுஜீவிகளின் பரப்புரைகளில் ஒன்று. (எனது நண்பர் ஒருவர் என் மேல் தொடுத்த விமர்சனம்.)

//நான் கம்யூனிசத்தை எதிர்க்கவில்லை. அப்படியே எதிர்ப்பது என்றாலும், அதனை ஒரு கம்யூனிச நாட்டில் வாழ்ந்து கொண்டு செய்ய முடியாது. ஆனால் நீங்கள் ஒரு மேற்கத்திய நாடொன்றில் வாழ்ந்து கொண்டு, கம்யூனிசம் சம்பந்தமான தகவல்களை வழங்க முடிகின்றது!!!//

ஒரு தவறான அனுமானம். தவறான புரிதல். 
"ஒரு கம்யூனிச நாடு" என்பதற்கு எதிர்ச் சொல்லாக, "ஒரு மேற்கத்திய நாடு" என்று எழுதுவது, அறியாமல் நேர்ந்த தவறாக தெரியவில்லை. முதலில், கம்யூனிஸ்ட் நாடு என்ற ஒன்று உலகில் எங்கேயும் இருக்கவில்லை. மனித வரலாற்றில் கம்யூனிஸ்ட் சமுதாயங்கள் இருந்தன. ஆனால் ஒரு தேசக் கட்டமைப்பு இருக்கவில்லை.

இருபதாம் நூற்றாண்டில் இருந்தவை எல்லாம் "சோஷலிச நாடுகள்". சோஷலிசம் என்பது ஒரு அரசியல்- பொருளாதாரக் கொள்கை. அதற்கு எதிராக முதலாளித்துவ நாடுகள் இருந்தன, இப்போதும் இருக்கின்றன. மார்க்சியம் கூறுவதன் படி, உலகில் முதலாளித்துவ நாடுகள் இல்லாமல் அழிந்து போன பின்னர், சோஷலிச நாடுகள் உருவாகும். அது ஒரு சமூக விஞ்ஞான நியதி. ஆகவே, இதற்கு முன்னர் இருந்த சோஷலிச நாடுகள் பரிசோதனை முயற்சியாகத் தான் இயங்கிக் கொண்டிருந்தன.

முதலாளித்துவ நாடுகளில் கம்யூனிசம் பேசுவதற்கு சுதந்திரம் கொடுக்கிறார்களே என்று நீங்கள் ஆதங்கப் படுவதில் அர்த்தம் இல்லை. ஏனென்றால், உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் உழைத்து வாழும் மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் தான் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். உழைக்கும் வர்க்க மக்கள் தமது சித்தாந்தம் கம்யூனிசம் என்று சொன்னால், அதை தடை செய்யும் நிலையில் முதலாளித்துவ நாடுகள் இல்லை. ஏனென்றால் அது முடியாத காரியம். உலக நாடுகள் எல்லாவற்றிலும், உழைக்கும் வர்க்க மக்கள் தான் பெரும்பான்மையாக உள்ளனர்.

ஒரு சோஷலிச நாட்டில், முதலாளித்துவத்திற்கு ஆதரவாக பேசுவதற்கு அனுமதி அளிப்பதில்லை என்பது உங்களது மனக்குறையாக உள்ளது. அதை நீங்கள் கம்யூனிச எதிர்ப்பு வாதம் என்று குறிப்பிடலாம். ஆனால், உங்களது கூற்றிலேயே முரண்பாடு உள்ளது. முதலாளித்துவ நாட்டில் வாழும் ஒருவர் கம்யூனிசத்திற்கு ஆதரவாக பேசுகிறார் என்றால், சோஷலிச நாட்டில் வாழும் ஒருவர் முதலாளித்துவத்திற்கு ஆதரவாக பேசுகிறார் என்று எழுதி இருக்க வேண்டும்.

சோஷலிச நாடு என்பது, இதற்கு முன்பிருந்த முதலாளித்துவ உற்பத்தி முறையை தூக்கி எறிந்து விட்டு, அந்த இடத்தில் உருவானது. ஆகவே, புரட்சிக்குப் பின்னர் முந்திய அரசு ஆதரவாளர்களுக்கு தடை விதிப்பது எதிர்பார்க்கத் தக்கதே. உலக வரலாற்றில் நடந்துள்ள எல்லாப் புரட்சிகளிலும் அது தான் நடக்கிறது. பிரெஞ்சுப் புரட்சிக்கு பின்னர், தாராளவாதமும், குடியரசுவாதமும் அரசாங்கத்தின் கொள்கைகள் ஆகின. புரட்சிக்கு முன்பிருந்த மன்னராட்சியை ஆதரித்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டது. நாங்கள் உலக வரலாற்றை, சமூக விஞ்ஞானத்தை படித்து அறிந்து, அதன் அடிப்படையில் புரிந்து கொள்வது தான் முறை.

//கம்யூனிசம் பேசுவதற்கு மட்டுமே நன்றாக இருக்கும். அதை வெட்டி கறி சமைக்க முடியாது//

"ஈழத் தமிழர்களுக்கு தமிழீழம் தேவையில்லை" என்று ஒரு சிங்களவர் சொல்வது போன்றுள்ளது உங்களது கூற்று. கம்யூனிசம் ஒரு Utopia என்று நீங்கள் கருதலாம். அதாவது, எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் என்ற ஒரு கற்பனை சமுதாயம். வசதி இல்லாதவர்கள், அத்தகைய சமுதாயத்திற்காக கனவு காண்பது மட்டுமல்ல, அதற்காக போராடவும் செய்யலாம். அது அந்த மக்களின் உரிமை. அந்த உரிமையை மறுப்பதற்கு நாங்கள் யார்?

உங்களைப் பொறுத்த வரையில், தமிழீழம் கூட ஒரு Utopia தான். //பேசுவதற்கு மட்டுமே நன்றாக இருக்கும். அதை வெட்டி கறி சமைக்க முடியாது// ஆனால், ஈழத் தமிழர்களில் ஒரு பிரிவினர், தமிழீழம் அமைப்பதற்காக போராட விரும்பினால், அதைத் தடுப்பதற்கு நாங்கள் யார்?

******

"நான் தமிழருக்கு எதிரானவன் அல்ல" என்று சொல்லிக் கொண்டே, தமிழர்களுக்கு எதிரான இனவாதம் பேசும், சில சிங்கள அறிவுஜீவிகள் இருக்கிறார்கள். அதே மாதிரி, "நான் கம்யூனிஸ்டுகளுக்கு எதிரானவன் அல்ல" என்று சொல்லிக் கொண்டே, கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரம் செய்யும் தமிழ் அறிவுஜீவிகளும் இருக்கிறார்கள்.

முகநூலில் ஒரு அறிவுஜீவி பகிர்ந்து கொண்ட கம்யூனிச எதிர்ப்பு நிலைத் தகவல்:

//அப்பா, கொம்யூனிஸ்ட் என்றால் யார்? மகனே, கார்ல் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், மாவோ எழுதிய புத்தகங்களைக் படி படி என்று படித்துக் கிழித்தவர்கள். அப்ப, anti-கொம்யூனிஸ்ட் என்றால் யார்? கார்ல் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், மாவோ எழுதிய புத்தகங்களைக் படி படி என்று படித்துச் சரியாகப் புரிந்தவர்கள்.//

"கார்ல் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், மாவோ எழுதியதை படித்தவர்கள் மட்டும் தான் கம்யூனிஸ்டுகள்" என்று இவர்கள் எங்கே கற்றார்கள்? புத்தகங்களை மட்டுமே படிப்பது அறிவுஜீவித் தனம். அதைத் தான் நமது சமூகத்தில் உள்ள அறிவுஜீவிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். பரீட்சையில் சித்தி பெற வேண்டும், உத்தியோகம் பார்க்க வேண்டும், என்ற ஒரே நோக்கத்திற்காக மட்டும் புத்தகங்களை விழுந்து விழுந்து படிப்பார்கள்.

அவர்களது நோக்கம் நிறைவேறியதும், குறைந்த பட்ச அறிவுத் தேடலுக்காக கூட நூல்களை படிக்க மாட்டார்கள். அத்தகைய மத்தியதர வர்க்க அறிவுஜீவிகளினால் சமூகத்திற்கு என்ன பிரயோசனம்? அதனால், தங்களது அறிவுஜீவி மனோபாவத்தில் இருந்து கொண்டு, ஒரு பொருளாதார உற்பத்தி முறையான கம்யூனிசத்தையும் வெறும் நூல்களாக மட்டுமே பார்ப்பதில் வியப்பில்லை.

ஆதி கால தமிழர்கள் மத்தியில் இருந்த கம்யூனிச பொருளாதார அமைப்பு பற்றி, கார்ல் மார்க்ஸ், எங்கெல்ஸ் எழுதி இருக்கிறார்கள். ஆதி கால கிறிஸ்தவர்களும், கம்யூனிச உற்பத்தி முறையில் அமைந்த சமுதாயமாக இயங்கினார்கள். நமது கால அரசியலில், அவர்களையும் கம்யூனிஸ்டுகள் என்று அழைக்கலாம். ஆனால், இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த யாரும், கார்ல் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், மாவோ எழுதிய நூல்களை படித்திருக்க வாய்ப்பில்லை.

******

முன்னாள் தமிழ் தேசியவாதிகளான DMK, EPDP, TMVP ஆகிய குழுக்களின் அடாவடித்தனங்கள், "தமிழ்தேசியவாதிகளின் செயல்கள்" ஆகாது. அந்தக் கட்சிகளின் பெயரிலும் ஈழம், தமிழ் என்றெல்லாம் இருக்கின்றன. அதை சுட்டிக்காட்டி, அவை எல்லாம் தமிழ் தேசியவாத கட்சிகள் என்று யாரும் சொல்வதில்லை. பாராளுமன்ற அரசியலில் பங்கெடுக்கும் தமிழ் தேசியவாத கட்சிகளை, எவனும் ஆயுதமேந்திப் போராடிய தமிழ் தேசியவாதிகளான புலிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க மாட்டான்.

ஆனால், கம்யூனிச எதிர்ப்பாளர்களிடம் மட்டும் அப்படிப் பிரித்து அறியும் தன்மை இல்லாமல் இருக்கிறது. பாராளுமன்ற தேர்தல்களில் பங்கெடுக்கும் திரிபுவாத போலிக் கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டுமே அவர்களின் கண்களுக்கு தெரிகின்றன. காமாலைக் கண்ணனுக்கு காண்பதெல்லாம் மஞ்சளாகத் தெரியும். கம்யூனிச எதிர்ப்பாளர்களின் கண்களுக்கு, சிவப்பாக தெரிவதெல்லாம் கம்யூனிசம் தான். அது அவர்களது அறியாமையா அல்லது மக்களை முட்டாள்களாக வைத்திருக்கும் நோக்கில் செய்யப்படும் அரசியல் பிரச்சாரமா?

******

கியூபாவில் பிடல் காஸ்ட்ரோவும், வியட்நாமில் ஹோசிமின்னும் ஒரு காலத்தில் தேசியவாதிகளாகத் தான் இருந்தார்கள். ஆயுதமேந்திய கெரில்லாப் போராட்டத்தின் மூலம் ஆட்சியை கைப்பற்றியதும், தங்களது விடுதலை இயக்கங்களை கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆக்கினார்கள். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை அறிவித்தார்கள். சோஷலிச பொருளாதார திட்டங்களை நடைமுறைப் படுத்தினார்கள்.

ஒரு பேச்சுக்கு, கியூபா, வியட்நாம் மாதிரி, ஈழத் தேசியவாதி பிரபாகரனின் கெரில்லாப் போராட்டம் வெற்றி பெற்று, தமிழீழமும் கிடைத்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். புலிகள் தங்களது இயக்ககத்திற்கு தமிழீழ கம்யூனிஸ்ட் கட்சி என்று பெயர் மாற்றிக் கொள்கின்றனர். தமிழீழத்தில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை அறிவித்து விட்டு, சோஷலிச பொருளாதாரத்தை நடைமுறைப் படுத்துகின்றனர்.

அப்படியான தருணத்தில், இன்று புலிகளை தீவிரமாக ஆதரிப்பதாக காட்டிக் கொள்ளும், வசதியான நடுத்தர வர்க்க தமிழர்களில் எத்தனை பேர், அப்போதும் புலிகளை ஆதரிப்பார்கள்? அவர்கள் தங்களைத் தாங்களே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய கேள்வி இது. 

தமது வர்க்க நலன்களுக்கு விரோதமாக நடந்தால், இன்று புலிகளை ஆதரிக்கும் தமிழ் மேட்டுக் குடியினர், நாளைக்கு அதே புலிகளை எதிர்ப்பார்கள். ஏனென்றால், அவர்களது "புலி ஆதரவு அரசியல்" பூர்ஷுவா வர்க்க அடிப்படை கொண்டது. என்றைக்கோ ஒரு நாள் அது வெளிப்பட்டே தீரும்.

*******


இது தொடர்பான முன்னைய பதிவுகள்: 

No comments:

Post a Comment