Saturday, March 29, 2014

நாஸிகளின் மார்க்ஸிய வெறுப்பு : ஒரு நூற்றாண்டு கால வரலாறு




உண்மையில், யூத வெறுப்பை விட, மார்க்சிய வெறுப்பு தான், ஹிட்லரும், நாஸி கட்சியும் ஜெர்மனியில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற பெரிதும் உதவியுள்ளது. முதலாம் உலகப்போரில் ஜெர்மனி தோல்வியடைந்தது. போரில் வென்ற பிரான்ஸ், ஜெர்மனியின் மேற்குப் பகுதிகளை ஆக்கிரமித்தது.

முதலாம் உலகப்போரானது, ஜெர்மன் தேசியவாதிகளுக்கும், பிரெஞ்சு தேசியவாதிகளுக்கும் இடையிலான போராக நடந்தது. முதலாளிகளும், தேசிய வெறியர்களும், சாதாரண மக்களை படைவீரர்களாக போருக்கு தீனியாக்கினார்கள். முதலாம் உலகப்போரின் முடிவில், தேசியவாத மாயையில் இருந்து விடுபட்ட படையினர் கிளர்ந்தெழுந்தனர்.

மியூனிச், பெர்லின், ஹம்பூர்க் நகரங்களில் பாட்டாளி வர்க்கப் புரட்சி வெடித்தது. அந்த நகரங்களில் உருவான சோவியத் குடியரசுகள், சில வாரங்கள் தாக்குப் பிடித்தன. அப்போது ஜெர்மனியில் ஜனநாயக அரசமைப்பு ஏற்பட்டிருந்தது. ஆயினும், கம்யூனிசத்தை வெறுத்த "ஜனநாயக" அரசாங்கம், தொழிலாளர்களின் சோவியத் புரட்சியை கொடூரமாக நசுக்கியது.

பழமைவாதிகளின் மாநிலமான பவாரியாவில், ஹிட்லரின் நாஸிக் கட்சியும், அது போன்ற வேறு சில அமைப்புகளும் சிறிய அளவில் இயங்கிக் கொண்டிருந்தன. மார்க்சிய வெறுப்பு, அந்த அமைப்புகளின் அடிநாதமாக விளங்கியது: "முதலாம் உலப்போரில் ஜெர்மனியின் தோல்விக்கு காரணம் மார்க்சிஸ்டுகள். அனைத்துலக தொழிலாளர் வர்க்க ஒற்றுமை பற்றி பேசிக் கொண்டு, ஜெர்மன் மக்களின் முதுகில் குத்தினார்கள். பிரெஞ்சு படைகள் ஜெர்மன் மக்களை (இனப்) படுகொலை செய்த போது, கம்யூனிஸ்டுகள் எனப்படுவோர் அதற்கு எதிராக முணுமுணுக்கக் கூட இல்லை.... "

இந்த உண்மைக்கு மாறான பொய்ப் பிரச்சாரம், ஜெர்மன் மக்கள் மனதில் கம்யூனிசத்திற்கு எதிரான விஷக் கருத்துக்களை விதைக்கும் நோக்கில் பரப்பப் பட்டது. ரஷ்யாவில் நடந்த போல்ஷெவிக் புரட்சியில், பெருமளவு யூதர்கள் பங்குபற்றி இருந்தனர். நாஸிகள் அதைச் சுட்டிக் காட்டி, "கம்யூனிஸ்டுகளும் யூதர்களும் ஒன்று தான். உலக யூத சதிகாரர்களின் கொள்கை தான் கம்யூனிசம்." என்று பிரச்சாரம் செய்தனர். தாங்கள் ஆட்சிக்கு வந்தால், யூதர்களின் ஜெர்மன் குடியுரிமை பறிக்கப் படும் என்றும், கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப் படும் என்றும், நாஸிகள் பகிரங்கமாக கூறி வந்தனர்.

ஹிட்லரின் நாஸிக் கட்சி குண்டர்கள், அடிக்கடி மார்க்சிஸ்டுகளை தெருச் சண்டைக்கு அழைத்தார்கள். கம்யூனிஸ்டுகள், இடதுசாரிகள் நடத்திய பொதுக் கூட்டங்களில் நுழைந்து குழப்பம் விளைவித்தார்கள். அங்கிருந்த பேச்சாளர்களையும், பார்வையாளர்களையும் தாக்கினார்கள். நாஸிக் காடையர்களின் காட்டுமிராண்டித்தனத்தை, "மார்க்சியர்களுக்கு எதிரான வீரப் போர்" போன்று, ஹிட்லர் தனது Mein Kampf (எனது போராட்டம்) நூலில் எழுதி இருக்கிறான்.

அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி ஜெர்மனியில் எதிரொலித்தது. பல வங்கிகள் திவாலாகின. பொருளாதார பிரச்சினைகள் அதிகரித்து வந்த காலத்தில், பெரும்பான்மை ஆளும் கட்சிகளின் செல்வாக்கு குறைந்தது. மக்கள் மாற்று வழி தேடினார்கள். அவர்கள் ஒன்றில் தீவிர இடதுசாரிகளான கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரித்தனர், அல்லது தீவிர வலதுசாரிகளான நாஸிக் கட்சியை ஆதரித்தனர்.

பெர்லின் நகரத் தெருக்களில், நாஸிக் கட்சியினரும், கம்யூனிஸ்ட் கட்சியினரும் தமது பலத்தைக் காட்டும் வகையில் சுற்றித் திரிந்தனர். இரண்டு கட்சிகளின் உறுப்பினர்களும், ஆதரவாளர்களும், எங்கே, எந்த சந்தர்ப்பத்தில் சந்தித்துக் கொண்டாலும், அங்கே வாய்த் தர்க்கம் முற்றி, அடி தடியில் முடியும் சம்பவங்கள் பல நடந்துள்ளன.

"சிவப்புகள், இடதுசாரிகள், மார்க்சிஸ்டுகள், கம்யூனிஸ்டுகளை அடித்து நொறுக்குவோம்..." என்று கோஷமிட்ட படி, நாஸிக் காடையர்கள் கத்தி, பொல்லுகளுடன் தெருக்களில் சுற்றித் திரிந்தனர். அவர்கள் கையில் அகப்பட்ட மார்க்சிஸ்டுகள்/கம்யூனிஸ்டுகளுக்கு, மண்டை உடைத்து விட்டுத் தான் மறு வேலை பார்த்தார்கள்.

"மார்க்சியம் ஒழிக!" பதாகை ஏந்திய படி பேரணியில் நடந்து வரும் சீருடை அணிந்த நாஸிகள். (1926) ஹிட்லர் அணிவகுப்பை பார்வையிடுவதை காணலாம். (வட்டத்திற்குள்)  

"சிவப்பு முன்னணியை (Red Front) நொறுக்குவோம்." என்றொரு நாஸிப் பிரச்சார பாடல் தெருவெங்கும் ஒலித்தது. அன்றைய தேர்தலில் கம்யூனிஸ்டுகள், இடதுசாரிகள் "சிவப்பு முன்னணி" என்ற பெயரிலேயே தேர்தலில் போட்டியிட்டார்கள். நாஸிக் காடையர்கள் இடதுசாரிகளுக்கு எதிரான கோஷம் எழுப்பிய படி, பெர்லின் தெருக்களில் சாரிசாரியாக வண்டிகளில் சென்றனர். 1926 ம் ஆண்டிலேயே, "மார்க்சியம் ஒழிக" என்ற பதாகை தாங்கிய நாஸிகளின் பேரணிகள் நடந்துள்ளன.

30-01-1933, பொதுத் தேர்தலில் போட்டியிட்டு, பெரும்பான்மை வாக்குகளால் வென்ற,  ஹிட்லரின் நாஸிக் கட்சி உறுப்பினர்கள் பலர் பாராளுமன்றத்திற்கு தெரிவானார்கள். பாராளுமன்ற விவாதங்களில் கலந்து கொள்ளும் நாஸிக் கட்சி உறுப்பினர்கள், அடிக்கடி கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக அவதூறாக பேசி வந்தனர். கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் பதிலடி கொடுக்க எழும் நேரம், நாஸிகளுக்கும் அவர்களுக்கும் இடையில் வாய்த் தர்க்கம் ஏற்பட்டது. அது சிலநேரம், பாராளுமன்றத்திற்கு வெளியே கைகலப்பில் முடிந்தது.

பெர்லின் நகரில், பாராளுமன்ற கூட்டம் நடைபெற்ற தினங்களில் எல்லாம், நாஸிகளும், கம்யூனிஸ்டுகளும் கடுமையாக மோதிக் கொண்டனர். பாராளுமன்ற விவாதங்களில் நாட்டமற்ற, அல்லது கம்யூனிஸ்டுகளுடன் வாதாடி வெல்ல முடியாது என்று கண்டு கொண்ட நாஸிகள், இரகசியமாக ஒரு திட்டம் தீட்டினார்கள். அதுவே, பிற்காலத்தில் வரப் போகும்  நாசிஸ  சர்வாதிகாரத்திற்கு கட்டியம் கூறியது.

நாஸிகள் பாராளுமன்ற அரசியலுக்குள் பிரவேசித்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. 27-02-1933 அன்று, Reichstag (றைஷ்டாக்)  எனப்படும் ஜெர்மன் பாராளுமன்றம் தீப்பற்றி எரிந்தது. நெருப்பு வைத்தது யாரென்று கடைசி வரை தெரிய வரவில்லை. இருப்பினும், நாஸி அரசாங்கம் நான்கு கம்யூனிஸ்டுகளை கைது செய்தது. அந்தக் காலகட்டத்தில், நாசிஸ சர்வாதிகாரம் ஏற்பட்டிருக்கவில்லை. ஓரளவு ஜனநாயகம் நிலவியது. அதனால் தான், குற்றஞ் சாட்டப்பட்ட கம்யூனிஸ்டுகள் நீதிமன்றத்தில் நிறுத்தப் பட்டனர்.

நாஸி தலைவர்களில் ஒருவரான கேரிங், "ஜெர்மனியில் கம்யூனிஸ்டுகளின் புரட்சி ஆரம்பமாகி விட்டது" என்று பயமுறுத்தினார். "கம்யூனிஸ்ட் புரட்சியை தடுப்பதற்காக" என்றொரு சாட்டைக் கூறி, நாஸி அரசாங்கம் நாடு முழுவதும் பல கம்யூனிஸ்ட் உறுப்பினர்களை கைது செய்து சிறையில் அடைத்தது. ஜெர்மனியில், நாஸிகள் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றியதும், நாசிஸ பயங்கரவாதத்திற்கு முதன்முதலாக பலியானவர்கள் யூதர்கள் அல்ல, மாறாக ஜெர்மன் கம்யூனிஸ்டுகள் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. 

கைது செய்யப்பட்ட நான்கு கம்யூனிஸ்டுகளில், பின்னாளில் பல்கேரியா அதிபராக பதவியேற்ற டிமித்ரோவ்வும் ஒருவர். இறுதியில் டிமித்ரோவும் மற்றவர்களும் விடுதலை செய்யப் பட்டனர். துரதிர்ஷ்டவசமாக, வன் தே லுப்பே என்ற புத்தி சுவாதீனமற்ற டச்சு கம்யூனிஸ்ட் நாஸிகளின் சூழ்ச்சிக்கு பலியானார். பாராளுமன்றத்திற்கு நெருப்பு வைத்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப் பட்டார்.

பெர்லின் நீதிமன்றத்தில் நடந்த டிமித்ரோவின் வழக்கு, இன்றைக்கும் சட்டத் துறையில் சிலாகித்துப் பேசப் படுகின்றது. புத்திசாலியான டிமித்ரோவ், தனது வாதத் திறமையால் நீதிமன்றத்தை திணறடித்தார். "கேரிங்கின் நாஸி கட்சியினர் தான் பாராளுமன்றத்திற்கு நெருப்பு வைத்தார்கள்." என்று டிமித்ரோவ் நீதிமன்றத்தில் வாதாடினார். அந்த நேரம் அங்கிருந்த கேரிங், "இங்கு வந்து நெருப்பு வைத்து விட்டு, ஜெர்மன் மக்கள் மேல் பழி சுமத்துகிறீர்கள் ..." கூச்சலிட்டார்.

இங்கே கவனிக்கப் பட வேண்டிய விடயம் "ஜெர்மன் மக்கள்" (Deutsche Volk). நாஸிகளின் ஆட்சிக் காலம் முழுவதும், தங்களது கட்சியை யாராவது குறை கூறினால், அதனை "ஜெர்மன் மக்களுக்கு எதிரான அபாண்டம்" என்று கூறி, எதிராளியின் வாயை அடைக்கப் பண்ணினார்கள். இன்றைக்கும் தமிழர்களில் சிலர், நாஸிகளின் அதே  தந்திரோபாயத்தை பயன்படுத்துவதை காணலாம்.

நாஸிஸக் கொள்கை, ஒரு கடந்த கால வரலாறு அல்ல. ஜெர்மனிக்கு மட்டுமே உரிய தோற்றப்பாடும் அல்ல. நாஸிகளின் சித்தாந்தம் இன்றைக்கும் உயிர்ப்புடன் உள்ளது. நாஸிகள் உலகம் முழுவதும் உள்ளனர். தமிழ் மக்கள் மத்தியிலும் இருக்கிறார்கள். நாஸிஸம் எந்த நோக்கத்திற்காக தொடங்கியதோ, அதனை நிறைவேற்றுவதற்கு துடிக்கின்றனர்.

"சிவப்பைக் கண்டால் பதறும், மார்க்சியத்தை வெறுக்கும்," கம்யூனிச எதிர்ப்பாளர்கள் பலர், நாஸிக் கருத்துக்களை எதிரொலிக்கின்றனர். நூறு வருடங்களுக்கு முன்னர், இணையமும், சமூக வலைத் தளங்களும் இருக்கவில்லை. இருந்திருந்தால், நாஸிகள் அங்கேயும் தமது மார்க்சிய வெறுப்புப் பிரச்சாரத்தை நடத்தி இருப்பார்கள்.


நாஸிகள் தொடர்பான முன்னைய பதிவுகள்:
1.நாஸிகளால் அழிக்கப் பட்ட கறுப்பின- ஜெர்மனியர்கள்
2.நவ நாஜிகளின் ஆக்கிரமிப்பின் கீழ் ஒரு ஜெர்மன் கிராமம்

No comments:

Post a Comment