Monday, March 10, 2014

லிபியாவில் ஒரு இசைப்பிரியா!


இவர் பெயர் ஹலா மிஸ்ராதி (Hala Misrati). கடாபி கால லிபியாவில், மிகவும் பிரபலமான தொலைக்காட்சி செய்தி அறிவிப்பாளர், அரசியல் நிகழ்ச்சித் தொகுப்பாளர். செய்தி அறிக்கைகள், அரசியல் விவாதங்கள் போன்றவற்றை சிறப்பாகத் தொகுத்து வழங்கியதன் மூலம், லிபியாவில் மட்டுமல்லாது, அயலில் உள்ள அரபு நாடுகளிலும் பிரபலம் அடைந்தார். குறிப்பாக, கடாபி ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சி நடந்த, கடைசி மூன்று வருடங்கள், இவரது புகழ் உச்சத்தில் இருந்தது.

ஹலா மிஸ்ராதி, முப்பதைத் தாண்டிய அழகான, புத்திக் கூர்மையுள்ள இளம் நங்கை. தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிக்கு அமர்த்தப் படுவதற்கு முன்னர், நாவல்கள், கவிதைகள் எழுதி இலக்கியத் துறையில் சிறந்து விளங்கினார். லிபியாவில் கடாபி ஆதரவாளர்களும், அயல்நாட்டு அரேபியர்களும், ஹலா மிஸ்ராதியின் திறமையால் கவரப் பட்டு, அவருக்கு இரசிகர்களாக இருந்தனர். ஆனால், பென்காசி நகரில் தளம் அமைத்திருந்த, நேட்டோ கைக்கூலிப் படியான, லிபியக் கிளர்ச்சியாயளர்கள் அவரை வெறுத்தனர்.

நேட்டோ கூலிப் படையினர் தலைநகர் திரிப்பொலியை நெருங்கி விட்ட சமயம், தொலைக்காட்சியில் தோன்றிய ஹலா மிஸ்ராதி, கிளர்ச்சியாளர்களை இன்னும் தீவிரமாக தாக்கிப் பேசினார். ஒரு தடவை, நேரடி ஒலிபரப்பு ஒன்றின் பொழுது, துப்பாக்கியை எடுத்துக் காட்டி பரபரப்பூட்டினார். "கிளர்ச்சியாளர்கள் திரிப்பொலியை பிடித்து, தான் வேலை செய்யும் தொலைக்காட்சி நிறுவனத்தையும் கைப்பற்ற துணிந்தால், தான் கடைசி வரை எதிர்த்துப் போராடப் போவதாக," அந்த ஒளிபரப்பில் சூளுரைத்தார். (கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்)

 

இறுதியில், திரிப்பொலி நகரமும் வீழ்ச்சி அடைந்தது. கடாபி அரசை ஆதரித்தவர்கள், உயிருக்குப் பயந்து ஓடிக் கொண்டிருந்தார்கள். அவ்வாறு தப்பியோடிய ஹலா மிஸ்ராதி, திரிப்பொலி நகருக்கு வெளியே ஒரு சாலையில் வைத்து, நேட்டோ கைக்கூலிப் படையினரால் மடக்கிப் பிடிக்கப் பட்டார். வெற்றிக் களிப்பில் மிதந்த கிளர்ச்சியாளர்களுக்கு, ஹலா மிஸ்ராதி போரில் கிடைத்த பெறுமதி மிக்க பரிசாக தெரிந்தார். வெறி கொண்ட கும்பல் ஒன்று, அவரை மாறி மாறி வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கியது. அவரை பல தடவைகள் பாலியல் பலாத்காரம் செய்தது மட்டுமல்லாது, கடுமையாக சித்திரவதை செய்தனர். நேட்டோ கூலிப்படையினர், ஹலா மிஸ்ராதியை கொன்று விட்டதாக அப்போது நம்பப் பட்டது. ஆனால், ஒரு வருடத்திற்குப் பின்னர், உயிரோடு விடுதலை செய்யப் பட்டு விட்டதாகவும் ஒரு தகவல் தெரிவிக்கின்றது. இரண்டையும் ஊர்ஜிதப் படுத்த முடியவில்லை.

ஈழப்போரின் இறுதியில், சிங்கள இராணுவத்தினர் பிடித்து வன்புணர்ச்சி செய்து கொன்ற இசைப் பிரியாவின் கதையை, இது நினைவு படுத்துகின்றது. இசைப்பிரியா புலிகளின் தொலைக்காட்சியில் பணியாற்றிய அழகான, புத்திக் கூர்மையுள்ள இளம் நங்கை. ஹலா மிஸ்ராதி போன்று, அவரும் தொலைக்காட்சி அரசியல் அறிக்கைகளை தொகுத்து வழங்கியதுடன் நில்லாது, நாடகம், சினிமா போன்ற கலைத் துறைகளிலும் ஆர்வம் காட்டினார். ஈழத்தில், இசைப்பிரியா பிரபாகரனையும், புலிகளையும் விசுவாசித்தார். தொலைக்காட்சி ஊடகத்தில், புலிகளின் கொள்கைகளை மிகவும் தீவிரமாக பரப்பி வந்தார். அதையே தான் ஹலா மிஸ்ராதியும் செய்து வந்தார். அவர் கடாபியையும், அவரது அரசையும் விசுவாசித்தார். தொலைக்காட்சி ஊடகத்தில், கடாபியின் கொள்கைகளை மிகவும் தீவிரமாக பரப்பி வந்தார்.

இசைப்பிரியா, ஹலா மிஸ்ராதி ஆகிய இரண்டு பெண்களினதும் வாழ்க்கை மட்டுமல்ல, முடிவும் ஒரே மாதிரி அமைந்துள்ளது ஆச்சரியத்திற்குரியது. கடாபியால் சீரழிக்கப் பட்ட பெண்கள் பற்றிய ஆவணப் படம் எடுத்த பிபிசி தொலைக்காட்சிக்கு, லிபியாவில் ஒரு பெண் ஊடகவியலாளர் வன்புணர்ச்சி செய்யப் பட்ட சம்பவம் பற்றி எதுவும் தெரியாதது வியப்புக்குரியது. பிபிசி ஒன்றும் நடுநிலை ஊடகம் அல்ல. அதுவும் ஒரு பக்கச் சார்பான கதைகளை மட்டுமே பரப்பும், ஒரு பிரச்சார ஊடகம் தான்.  

ஈழத்தில் நடந்த இறுதிக் கட்டப் போருக்கும், லிபியா போருக்கும் இடையிலான பெருமளவு ஒற்றுமைகளை நான் ஏற்கனவே சுட்டிக் காட்டி எழுதி இருக்கிறேன். ஈழத்தில், பிரபாகரன், புலிகள், போராளிகள், ஆதரவாளர்களுக்கு நேர்ந்த அதே கதி தான், லிபியாவில் கடாபிக்கும், அவரது படையினர், ஆதரவாளர்களுக்கும் ஏற்பட்டது. இலங்கையில், எவ்வாறு மேற்கத்திய நாடுகளின் ஆதரவைப் பெற்ற சிங்களப் படைகள், மிகவும் பலமான சக்தியாக விளங்கியதோ, அதே மாதிரி, லிபியாவில் நேட்டோ படைகளின் ஆதரவைப் பெற்ற கிளர்ச்சியாளர்கள் மிகவும் பலமாக இருந்தனர். முள்ளிவாய்க்கால் பகுதியில், புலிகளும், அதன் ஆதரவாளர்களும் சுற்றிவளைக்கப் பட்டு படுகொலை செய்யப் பட்டனர். அதே மாதிரி, லிபியாவில் சியர்ட்டே பகுதியில் கடாபிக்கு விசுவாசமான படைகளும், ஆதரவாளர்களும் சுற்றிவளைக்கப் பட்டு படுகொலை செய்யப் பட்டனர். இரண்டு இடங்களும், கடற்கரையை அண்மித்தே அமைந்திருந்தன என்பது இன்னொரு ஒற்றுமை.

முரண்நகையாக, இன்று புலிகளை ஆதரிக்கும் பலர், கடாபியை வெறுக்கின்றனர். லிபியா மீதான நேட்டோ ஆக்கிரமிப்பு போர் நடந்த காலத்தில், அவர்கள் அதனை ஆதரித்தார்கள். இதன் மூலம், தாங்கள் ஸ்ரீலங்கா அரசின் தமிழின அழிப்பு போரையும் ஆதரிக்கின்றோம் என்பதை அவர்கள் உணரவில்லை. அந்தளவுக்கு, மேற்கத்திய எஜமானர்கள் மீதான விசுவாசம், அவர்களது கண்களை கட்டிப் போட்டுள்ளது.


லிபியா பற்றிய முன்னைய பதிவுகள்:

No comments:

Post a Comment