Saturday, March 01, 2014

ஐரோப்பிய தத்துவவியலில் மார்க்சியம்

யார் இந்த கார்ல் மார்க்ஸ்? 
(பகுதி - 3)


- ஐரோப்பாவில் கத்தோலிக்க மதத்தின் ஆட்சி நடந்த காலத்தை, இருண்ட காலம் என்று அழைக்கலாம். கத்தோலிக்க திருச் சபையின் சர்வாதிகாரம் எங்கும் வியாபித்திருந்தது. தேவாலயம் போதித்தது போன்று எல்லோரும் சிந்திக்க வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப் பட்டனர். கத்தோலிக்க மத போதனைகளுக்கு வித்தியாசமாக சிந்தித்த மாற்றுக் கருத்தாளர்கள் நெருப்பில் போட்டு கொல்லப் பட்டனர். தத்துவவியல் முற்றாகத் தடை செய்யப் பட்டது. 

 - ரொட்டர்டாம் நகரில் வாழ்ந்த எராஸ்முஸ் (Erasmus) என்ற தத்துவஞானியின் நூல்களை, ஸ்பானிய கத்தோலிக்கர்களின் இங்குசிஷன் நீதிமன்றம் (தாலிபான்களின் இஸ்லாமிய ஷரியா நீதிமன்றம் போன்றது) தடை செய்தது.  

- கிறிஸ்தவ ஐரோப்பா முழுவதும், எந்த இடத்திலும் அறிவியல் வளரவில்லை. ஐரோப்பாவுக்கு வெளியே, இஸ்லாமிய உலகில் விஞ்ஞானம் வளர்ந்தது. அங்கே அவேருஸ், அவிசேனா போன்ற தத்துவஞானிகள் தோன்றினார்கள். 

 - இருண்ட ஐரோப்பாவில் முதன் முதலாக, மாக்கியவல்லி (1469 - 1527) என்ற அறிஞர் கத்தோலிக்க திருச்சபையின் அதிகாரத்தை நோக்கி தாக்குதல் தொடுத்தார். மதகுருக்களின் சர்வாதிகாரத்திற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழ வேண்டும் என்று போதித்தார். 

 - அதற்குப் பிறகு "ரெனேசொன்ஸ்" (மீள் உயிர்ப்பு) என்ற இயக்கம் தோன்றியது. பலர் மதவெறிக்கு எதிராக, மதச் சர்வாதிகாரத்திற்கு எதிராக அறிவியலை உயர்த்திப் பிடித்தனர். அந்தக் காலகட்டத்தில், மனித இனத்தின் பிரதான வெற்றியான, “கருத்துச் சுதந்திரம்” தோன்றியது. 

 - இருண்ட காலத்தின் திரையைக் கிழித்துக் கொண்டு ஒரு கதாநாயகன் தோன்றுகிறார். யார் இந்த வீக்கோ? 

 - வீக்கோ (Vico Giambattista 1688 - 1744) ஒரு இத்தாலி தத்துவஞானி. அவர் ஒரு முக்கியமான தத்துவத்தை கண்டுபிடித்தார். ஒரு மனிதனின் வாழ்க்கையை மூன்று கட்டங்களாக பிரிக்கலாம். குழந்தைப் பராயம், இளம் பராயம், முதிர்ச்சியான பராயம். அதே போன்று, மனித நாகரிகத்தின் வளர்ச்சியையும் மூன்று கட்டங்களாகப் பிரிக்கலாம். 
1. காட்டுமிராண்டிக் காலகட்டம். வேட்டையாடி உண்ட,மந்திர சக்திகளால் கட்டுண்டு கிடந்த காலகட்டம். 
2. நிலப்பிரபுத்துவக் காலகட்டம். சிறுபான்மை நிலப்பிரபுக்களும், பெரும்பான்மை அடிமைகளும் கொண்ட காலகட்டம். 
3. புதிய உலகம். மனித இனத்தின் நாகரிக காலகட்டம். 

 - வீக்கோ ஒரு நிலப்புரபுத்துவ சமுதாயத்தில் பிறந்து வளர்ந்தவர். அவரது காலத்தில், சமுதாயம் ஒரு பரிணாம வளர்ச்சி அடையும் என்று நினைப்பதே ஒரு புரட்சிகர சிந்தனை. உலகம் ஜனநாயகத்தை நோக்கிச் செல்லும் என்பதை, வீக்கோ அன்றே உணர்ந்திருந்தார். ஆனால், அவரிடம் ஒரு தவறு இருந்தது. ஜனநாயக பிரஜைகளின் (பூர்ஷுவா) சமுதாயம், மனித நாகரிகத்தின் இறுதிக் கட்டம் என்று நம்பினார். அதற்குப் பிறகு, நாகரிகம் பின்னோக்கிச் சென்று, மீண்டும் காட்டுமிராண்டிக் காலத்தில் இருந்து ஆரம்பிக்கும் என்று நம்பினார். அதாவது, மனித இனத்தின் பரிணாம வளர்ச்சி ஒரு சுழற்சி போன்றது என்பது வீக்கோவின் தத்துவம். 

 - அறிவியல் சிந்தனையாளரான டெஸ்கார்ட்டெஸ் (Descartes) மீண்டும் காரணங்களை கற்பிக்கும் நியாயவாதத்தை கொண்டு வந்தார். இயற்கையில் உள்ள பொருட்கள், நிகழ்வுகள் எல்லாவற்றிற்கும் பின்னால் ஒரு காரணம் இருக்கும் என்று நம்பினார். ஆனால், அதே நேரம் கடவுள் இருக்கிறார் என்று நிரூபிக்கவும் விரும்பினார். 

 - டெஸ்கார்ட்டெஸ், “பொறியியல் கோட்பாடு” (Mechanism) என்ற ஒன்றை புதிதாக அறிமுகப் படுத்தினார். அது குறித்து பின்னர் பார்ப்போம். 

 - ஸ்பினோசா (Spinoza) என்ற தத்துவ அறிஞர், இன்னொரு புரட்சிகர சிந்தனையாளராக திகழ்ந்தார். அந்தக் காலத்தில் யாருமே எதிர்பார்க்காத தத்துவம் ஒன்றைக் கூறினார். “மனிதன் சுதந்திரமாக சிந்திக்கவும், சுதந்திரமாக நம்பிக்கை வைக்கவும் உரித்துடையவன் ஆகிறான். மதம் போதிக்கும் வடிவில் கடவுள் இல்லை.” யூதராக பிறந்த ஸ்பினோசா ஒரு நாத்திகராக வாழ்ந்தார். அதனால், அவர் வாழ்க்கையில் ரொம்பவும் கஷ்டப் பட்டார் என்பதை இங்கே சொல்லத் தேவையில்லை. 

 - ஆனால்... இங்கே குறிப்பிட்டுள்ள எல்லா தத்துவ அறிஞர்களும், அவர்கள் அரை நாத்திகர்களாக, பொருள் முதல்வாதிகளாக இருந்த போதிலும், எல்லோரிடமும் ஒரு குறைபாடு இருந்தது. எல்லோரும் அறிவியல் மேல் அதீத நம்பிக்கை வைத்திருந்தனர். மனிதன் இயற்கையின் ஓர் அங்கம் என்று நம்பினார்கள். (உண்மை) ஆனால், இயற்கையின் விதிகள் யாவும், மனித உறவுகளுக்கும் பொருந்தும் என்றும் நம்பினார்கள். (தவறு) 

 - அவர்களது தத்துவப் படி, இயற்கை மாற்றமடைவதில்லை. அது பரிணாம வளர்ச்சி அடைவதில்லை. இயற்கை மாற்ற முடியாத விதிகளுக்கு கட்டுப்பட்டது என்று நம்பினார்கள். 

 - அவர்களது பார்வையில், நாயகர்களே வரலாற்றை மாற்றுகிறார்கள். தீர்க்கதரிசிகள், அரசர்கள், வீர புருஷர்கள், தத்துவஞானிகள்…. இப்படியானவர்கள் தான் வரலாற்றை செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். 

 - கார்ல் மார்க்சின் தத்துவ முடிவுகளை பற்றி அறிவதற்கு முன்னர், “அனுபவ வாதம்” (Empiricism) என்ற புதிய தத்துவத்தை கண்டுபிடித்த சிலரைப் பற்றிப் பார்ப்போம். 

 - ஜோன் லொக் (John Locke) என்ற பிரிட்டிஷ் தத்துவஞானி, மன்னர்களின் தெய்வீக சக்தி பொருந்திய அதிகாரத்தை எதிர்த்தார். மதத்தின் மேலாண்மையை, தேவாலயத்தின் ஏட்டுச் சுரைக்காய்த்தனத்தை எதிர்த்தார். 

 - லொக் போதித்த நாத்திக தத்துவத்தை எதிர்க்கும் முகமாக, ஜோர்ஜ் பெர்க்லி என்ற அன்க்லிக்கன் பாதிரியார் இறையியல் தத்துவம் எழுதத் தொடங்கினார். ஆனால், அதற்குள் இன்னொரு நாத்திக அறிஞர் பிரிட்டனில் பிரபலமடைந்தார். டேவிட் ஹியூமே (David Hume) மதத்திற்கு எதிராக தெரிவித்த கருத்துக்கள் காரணமாக, பிரிட்டனை விட்டு அகதியாக வெளியேறி, பிரான்சில் அரசியல் தஞ்சம் கோர வேண்டிய நிலை ஏற்பட்டது.

 - அன்றைய பிரான்சில், அப்போது தான் புரட்சி நடந்திருந்ததால், டேவிட் ஹியூமே இருகரம் நீட்டி வரவேற்கப் பட்டார். பிரெஞ்சுப் புரட்சியின் பின்னர் நிறைய பகுத்தறிவாளர்கள் தோன்றினார்கள். வோல்தேயர், ரூசோ, தீதேரோ, மொந்தேஸ்கியே…. 

 - நிச்சயமாக, பிரெஞ்சுப் புரட்சியின் நோக்கம் தத்துவம் போதிப்பதல்ல. புதிய அரசியல் சித்தாந்தத்தை பரப்புவது. அந்த சித்தாந்தத்தின் விளைவாக, அமெரிக்கா ஐரோப்பாவிடம் இருந்து துண்டித்துக் கொண்டது. ஐரோப்பிய நாடுகள், போப்பாண்டவரின் அதிகாரத்தில் இருந்து சுதந்திரம் அடைந்தன. - பிரெஞ்சுப் புரட்சி அறிமுகப் படுத்திய கொள்கைகள், உலகை மதத்தின் பிடியில் இருந்து விடுவித்தன. 

 - இவ்வளவு நேரமும் நாங்கள் பார்த்தவை “தூய்மையான தத்துவவியல்”. உங்களுக்கு புரிந்து கொள்ள கஷ்டமாக இருந்தால், அது உங்கள் தவறல்ல. அந்தக் காலங்களில் வாழ்ந்த மக்களுக்கும், இதெல்லாம் “சிதம்பர சக்கரத்தை பேய் பார்த்தது” போன்றிருக்கும். 

  •  தர்க்கவியல், பொறியியல்வாதம், நியாயவாதம், அனுபவவாதம், பௌதிக அதீதம், பொருள் முதல்வாதம், கருத்து முதல்வாதம்…. "என்ன கொடுமை சரவணா இது? இதெல்லாம் வேலைக்கு ஆவாது. ஆளை விடு சாமியோவ் !” 


 - நீங்கள் நினைப்பது போன்று தான், அன்று கார்ல் மார்க்சும் நினைத்திருப்பார். அவர் இந்த தத்துவம் எல்லாம் வெறும் வார்த்தை ஜாலமாக கொட்டிக் கிடப்பதை பார்த்தார். அவற்றை ஒழுங்கு படுத்தி, சாதாரண மக்களுக்கு பிரயோசனப் படும் வகையில் தொகுக்க வேண்டும் என்று விரும்பினார். அதாவது, தத்துவவியலை ஒரு விஞ்ஞானமாக வளர்த்தெடுக்க வேண்டும். 

 - “தத்துவஞானிகள், உலகை பல வழிகளிலும் புரிந்து கொள்ள விரும்பினார்கள். இந்த உலகத்தை மாற்றியமைப்பது அவர்களின் நோக்கமாக இருந்தது.” - கார்ல் மார்க்ஸ்


(இந்தக் கட்டுரைத் தொடர், Marx for Beginners என்ற நூலின் மொழிபெயர்ப்பு ஆகும். இருந்த போதிலும், ஆங்காங்கே தமிழ்ச் சூழலுக்கு ஏற்றவாறு சில மாற்றங்களை செய்துள்ளேன். இடைச்செருகலாக சில நகைச்சுவை துணுக்குகள் தலை நீட்டும். இன்றைய இளைய தலைமுறையினருக்கு மார்க்சியத்தை இலகுவாக புரிய வைப்பதே இந்தக் கட்டுரைத் தொடரின் நோக்கம்.)


இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:

1 comment:

  1. //அவரிடம் ஒரு தவறு இருந்தது. ஜனநாயக பிரஜைகளின் (பூர்ஷுவா) சமுதாயம், மனித நாகரிகத்தின் இறுதிக் கட்டம் என்று நம்பினார். அதற்குப் பிறகு, நாகரிகம் பின்னோக்கிச் சென்று, மீண்டும் காட்டுமிராண்டிக் காலத்தில் இருந்து ஆரம்பிக்கும் என்று நம்பினார். அதாவது, மனித இனத்தின் பரிணாம வளர்ச்சி ஒரு சுழற்சி போன்றது என்பது வீக்கோவின் தத்துவம். //

    எனக்கு என்னவோ அவர் சொன்னதில் கொஞ்சம் இப்பொழுது நடக்கிறதோ என்று தோன்றுகிறது.. ஜனநாயக வளர்ச்சியால் மனிதன் பல அறிவியல் சாதனங்கள் கண்டுப்பிடித்தான். அதை பயன் படுத்தினான். ஒரு நூற்றாண்டு சென்றத, அந்த அறிவியல் சாதனங்களால் எற்படும் பாதிப்பை பார்த்து. இப்பொழுது எல்லாரும் இயற்கை விவசாயம், இயற்கை உணவு, இயற்கையோடு ஒத்த வாழ்வு என மாறி வருகின்றனர். இதை தான் அவர் காட்டுமிறாண்டி தனம் என கூறியிருக்கலாம். எதிர் காலத்தில் வரபோகும் தன்னீர், நல்ல உணவு தட்டுப்பாடு எல்லாம் மனிதனை ஒரு நவீன காட்டுமிராண்டியாக(mad max furry road படத்தில் வருவதைப் போல) மற்றாலம்.

    மக்கல் அதற்குள் சுதாரிச்சிப்பாங்கனு நினைகிறேன்...

    ReplyDelete