Monday, January 06, 2014

மேட்டுக்குடி அறிவுஜீவிகள் ஸ்டாலினை வெறுப்பது ஏன்?

(ஸ்டாலினின் மறு பக்கம்: உலகில் மறைக்கப் பட்ட உண்மைகள்) 
 (மூன்றாம் பாகம்)

உலகில் முதலாளித்துவ உற்பத்தி தோன்றிய காலம் முதல், இரண்டு எதிர்நிலை வர்க்கங்கள் இருந்து வந்துள்ளன. வாழ்வில் உள்ள அனைத்து இன்பங்களையும், ஆண்டு அனுபவித்து வாழும், மேட்டுக்குடி வர்க்கம் ஒரு புறம். அன்றாடம் சாப்பாட்டுக்கே கஷ்டப்படும், பாட்டாளி வர்க்கம் மறுபுறம். பல நாடுகளில், கல்வி, உத்தியோகம், சுதந்திரம், ஜனநாயகம் போன்ற உரிமைகள், மேட்டுக்குடியினர் மட்டுமே அனுபவிக்கும் ஆடம்பரங்களாக உள்ளன. 

பணம் இல்லாத காரணத்தால், கல்வி மறுக்கப் பட்டவர்கள், கல்வியறிவு இல்லாததால், கைநிறைய சம்பாதிக்கும் உத்தியோகம் பார்க்க முடியாதவர்கள் ஏராளம். பாட்டாளி வர்க்கத்தில் பிறந்த பிள்ளைகளுக்கு சுதந்திரம் மறுக்கப் படும் பொழுது, பணத்தின் அடிப்படையில் நியாயம் கற்பிக்கப் படுகின்றது. நமது நாடுகளில், ஏழைக் குடும்பத்தில் பிறந்த பிள்ளைகள் கல்வி கற்க முடியாமல் போனதேன்? வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய முடியாத காரணம் என்ன? “அவர்களிடம் பண வசதி இல்லை” என்று பதில் கூறலாம். ஆனால், அது ஒரு தேசத்தின் பிரஜைக்கு மறுக்கப் படும் சுதந்திரம் ஆகாதா?

இன்றைக்கும் பலர் ஸ்டாலினை வெறுக்கிறார்கள். "சர்வாதிகாரி, கொடுங்கோலன், பல இட்சம் பேரை படுகொலை செய்தவன்," என்று தமது வெறுப்புக்கு காரணம் கூறுகின்றனர். அப்படிக் கூறுபவர்களின் வர்க்கப் பின்னணி என்ன? அவர்கள் ஒன்றில் மேட்டுக்குடியை சேர்ந்தவர்கள், அல்லது வசதியான உயர் மத்தியதர வர்க்கத்தினராக இருப்பார்கள். அது ஒன்றும் தற்செயல் அல்ல. அவர்களது வர்க்கக் குணம், அவர்களை அப்படித் தான் பேச வைக்கும். ஸ்டாலின் கால சோவியத் யூனியனில் என்ன நடந்தது என்பது, அவர்களுக்குத் தான் தெரியும். (அறிவுஜீவிகள் ஆச்சே, தெரியாமல் இருக்குமா?) ஆனால், எப்போதும் ஒரு பாதி உண்மையை மட்டுமே பேசுவார்கள். மறுபாதி உண்மை எது?

ஒரு நாட்டில் சோஷலிசத்தை கட்ட வேண்டுமென்றால், அங்கே முதலில் வர்க்கப் போராட்டம் நடக்க வேண்டும். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் கொண்டு வரப் பட வேண்டும். அதன் அர்த்தம், இதுவரை காலமும் உலகத்து இன்பங்களை எல்லாம் அனுபவித்து வந்த மேட்டுக்குடி வர்க்கத்தின் விசேட சலுகைகள் யாவும் பறிக்கப் படும். அவர்கள் பிற வர்க்கங்களிடமிருந்து எந்த வகையிலும் மேலானவர்கள் அல்ல.

பாட்டாளி வர்க்க தலைமையை ஏற்றுக் கொள்ளாதவர்கள், சுதந்திரம் பறிக்கப் பட்டு, தடுப்பு முகாம்களுக்குள் தள்ளப் பட்டனர். முந்திய சார் மன்னனின் அரசாங்கத்தில் பணியாற்றியவர்கள் மட்டுமல்ல, முதலாளிகள், பணக்காரர்கள், நிலவுடமையாளர்கள், பண்ணையார்கள், வட்டிக்கு கடன் கொடுப்பவர்கள் போன்று, மக்களை சுரண்டி சொகுசு வாழ்க்கை வாழ்ந்த அத்தனை பேரும் தடுப்பு முகாம்களுக்கு அனுப்பப் பட்டனர்.

“கொஞ்சம் பொறுங்கள்… தடுப்பு முகாம்களுக்கு அனுப்பப்பட்ட எல்லோரும் முதலாளிகளோ, அல்லது நிலப்பிரபுக்களோ அல்ல. ஏராளமான அரசியல் கைதிகளும் இருந்தனர்.” என்று யாராவது குறுக்கிட்டுக் கேள்வி கேட்கலாம். 1917 ம் ஆண்டு அக்டோபர் புரட்சியின் பின்னர், வலதுசாரிக் கட்சிகள் அனைத்தும் தடைசெய்யப் பட்டன. அவர்கள் முதலாளித்துவ அமைப்பை நியாயப் படுத்துவதை தவிர, வேறெந்த அரசியலும் தெரியாதவர்கள். அதே போன்று, குறுந் தேசியவாதிகள், இஸ்லாமிய ஜிகாத்தியர்கள் போன்ற அரசியல் சக்திகள் இயங்குவதும் தடுக்கப் பட்டது.

அக்டோபர் புரட்சி நடந்த காலத்தில் சில இடதுசாரி கட்சிகளும் இயங்கின. அவர்களில் ஒரு பகுதியினர், விரும்பியோ, அல்லது கட்டாயத்தின் பேரில், போல்ஷெவிக் கட்சியில் இணைந்து கொண்டார்கள். இன்னொரு பிரிவினர் சுயாதீனமாக இயங்கினார்கள். ஆகையினால், ஆயுத பலம் கொண்டு அடக்கப் பட்டனர். ஆனால், அவை எல்லாம் லெனின் பதவியில் இருந்த காலத்தில் நடந்த சம்பவங்கள். ஸ்டாலின் பதவிக்கு வந்த காலத்தில், அரசியல் எதிர்ப்பியக்கம் எதுவும் இயங்கவில்லை.

மேட்டுக்குடி வர்க்கத்தை சேர்ந்த எல்லோரும், சமூகத்தில் இருந்து சுத்திகரிப்பு செய்யப் பட்டு, தடுப்பு முகாம்களுக்கு அனுப்பப் படவில்லை. நிறையப் பேர், காலத்திற்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொண்டார்கள். தங்களிடம் இருந்த செல்வங்களை துறந்து விட்டு, சாமானியர்களின் வாழ்க்கையை பின்பற்றினார்கள். அதே போன்று, மேட்டுக்குடியில் பிறந்த பிள்ளைகள் பாடசாலைகளுக்கு செல்லவும், ஏதாவது ஒரு வேலை தேடி வாழவும் முடிந்தது. ஆனால், அப்படியானவர்கள் சமூகத்தில் தங்களது மேல்தட்டு குடும்பப் பின்னணியை மறைத்துக் கொண்டு வாழ்ந்தார்கள். அதைச் சொல்ல வெட்கப் பட்டார்கள். தங்களது உயர்குடிப் பிறப்பு தெரிந்து விடுமோ என்ற அச்சத்தில் தினந்தோறும் செத்துப் பிழைத்தார்கள்.

நமது சமுதாயத்தில், பணச் செருக்கு, பகட்டு, உயர்குடிப் பெருமை, அந்தஸ்து பற்றி சிலாகித்து பேசுவோர் எத்தனை? ஒரு உயர்சாதியில் பிறந்தவர், அதற்காக வெட்கப் படுவதில்லை. மாறாக, அதனை ஒரு பெருமைக்குரிய விடயமாக அறிவித்துக் கொள்கிறார். ஆண்ட பரம்பரை கதை பேசி அகம் மகிழ்வோர் எத்தனை பேர்? சிலர் தமது பரம்பரைப் பெருமை பேசி,  உயர்குடியில் பிறந்ததை நிரூபிக்கின்றனர். 

பணம் படைத்தவர்கள், தங்களது ஆடம்பரத்தை விளம்பரம் செய்வதற்காக விழாக்களை கொண்டாடுகிறார்கள். அவர்கள் எல்லோரும், சோவியத் யூனியனில், ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் வாழ வேண்டியிருந்தால் என்ன நடந்திருக்கும்? தங்களது "உயர்ந்த சமூக அந்தஸ்தை", பகிரங்கமாக வெளியே காட்டிக் கொண்டிருக்க மாட்டார்கள். கனவில் கூட பரம்பரைப் பெருமை பேச மாட்டார்கள். உயர்சாதியில் பிறந்ததற்காக வெட்கப் பட்டு, தங்களது சாதியை மறைத்துக் கொள்வார்கள். 

நூறு, நூற்றைம்பது வருடங்களுக்கு முன்னர், ஒருவர் தனது சொந்த ஊரை விட்டு, தொலை தூர கிராமம் ஒன்றில் குடியேறி விட்டால், தனது பூர்வீகத்தை மறைத்துக் கொள்ள முடிந்தது. தாழ்த்தப் பட்ட சாதியை சேர்ந்த ஒருவர், உயர் சாதியில் பிறந்ததாக பொய் கூறி, தனது சமூக அந்தஸ்தை உயர்த்திக் கொள்ள முடிந்தது. ஸ்டாலின் காலத்தில், அது தலைகீழாக நடந்தது. அதாவது, சொந்த ஊரை விட்டு நகரங்களுக்கு புலம்பெயர்ந்து சென்ற உயர்குடிப் பிறப்பாளர்கள், தங்களது பூர்வீகத்தை மறைத்தனர். தாழ்த்தப் பட்ட சமூகத்தில் பிறந்ததாக பொய் சொன்னார்கள். ஏனென்றால், அப்படிச் சொல்வது தான் பெருமைக்குரிய விடயமாக கருதப் பட்ட காலம் அது.

1930 க்கு முன்னர், சோவியத் நாடு முழுவதும் குழப்பகரமான சூழ்நிலை நிலவியது. அரசாங்கம், குடிமக்களின் விபரங்கள் எல்லாவற்றையும் பதிவு செய்து வைத்திருக்கவில்லை. அதிகாரிகள் மட்டத்திலும், இலஞ்சம், ஊழல் மலிந்திருந்தது. அதனால், ஒரு கற்பனையான பெயரை சூட்டிக் கொண்டு, அல்லது பிறந்த ஊரை மாற்றி, போலி ஆவணங்கள் வாங்க முடிந்தது. போலி பிறப்புச் சான்றிதழில், அல்லது விண்ணப்பப் படிவங்களில், தந்தையின் தொழில் எது என்று கேட்கப் பட்ட இடத்தில், “கூலி விவசாயி” அல்லது “கூலித் தொழிலாளி” என்று போட்டு நிரப்பினார்கள். ஏனென்றால், சமூகத்தில் அதற்குத் தான் மதிப்பு அதிகம்!

ஸ்டாலின் காலத்தில்,  "பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்" நிலைநாட்டப் பட்டது. அதாவது, சமூகத்தில் உயர்த்தப் பட்டவர்கள், தாழ்த்தப் பட்டார்கள். ஆண்டாண்டு காலமாக  தாழ்த்தப் பட்டவர்கள், உயர்த்தப் பட்டார்கள். "பணம் என்பது அந்தஸ்தின் குறியீடு அல்ல, அது அவமானத்தின் சின்னம்! அது தான் ஸ்டாலினிசம்!!" 

பணக்கார குடும்பங்களில் பிறந்த பிள்ளைகள், "எனது அப்பா ஊரறிந்த பணக்காரன்" என்று சொல்லிக் கொள்ள வெட்கப் பட்டார்கள். வெட்கம் மட்டுமல்ல, மிகுந்த அச்சம் கொண்டிருந்தார்கள். ஏனென்றால், பாடசாலைகளில் அவர்களது (பணக்கார) குடும்பப் பின்னணி தெரிய வந்தால், மற்றைய பிள்ளைகளால் வெறுத்து ஒதுக்கப் பட்டனர்.வேலை செய்யுமிடத்தில் தெரிய வந்தால், பிற தொழிலாளிகளால் அரசியல் பொலிசிடம் பிடித்துக் கொடுக்கப் பட்டார்கள். 

மேட்டுக்குடியில் பிறந்தவர்களுக்கு, பல சலுகைகள் மறுக்கப் பட்டன. பாட்டாளி வர்க்கத்தை சேர்ந்த பிள்ளைகளுக்கு மட்டுமே, எல்லா விதமான சிறப்புரிமையும் கிடைத்தது. பாடசாலைகளில் இருந்த சாரணர் இயக்கமான “முன்னோடிகள்” (Pioneer) அமைப்பில் சேருவதற்கான உரிமை, மேட்டுக்குடி பிள்ளைகளுக்கு மறுக்கப் பட்டது. ஆரம்பப் பாடசாலையில் படிக்கும் காலத்தில், அதில் சேர்ந்திருந்தால் தான், பருவ வயதில் “கொம்சொமோல்” (Komsomol) எனும் மாணவர் அமைப்பில் சேரும் தகுதி வாய்த்தது. அவர்களுக்குத் தான் கம்யூனிஸ்ட் கட்சியில் சேரும் சந்தர்ப்பம்  கிடைத்தது. (ஏழைக் குடும்பத்தில், பாட்டாளி வர்க்கத்தில் பிறந்த பிள்ளைகள், இயற்கையாகவே கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராவதற்கு முன்னுரிமை வழங்கப் பட்டனர்.)

படிப்பில் சிறந்த மாணவர்கள், பிற்காலத்தில், உயர்கல்வியை முடித்து உத்தியோகம் தேடும் காலத்திலும், கொம்சொமோல் தகைமை தேவைப் பட்டது. அதனால் தான், பல உயர் குடிப் பிறப்பாளர்கள், தங்கள் குடும்பப் பின்னணியை மறைத்து பொய் சொன்னார்கள். அது மட்டுமல்ல, அப்படியானவர்கள் மார்க்சியத்தை ஐயந் திரிபற கற்று, சிறந்த  கம்யூனிஸ்டாக நடந்து காட்டினார்கள். தமது வேலைத் தலங்களில் இருந்த “வர்க்க எதிரிகளை”, அவர்களே முன் நின்று காட்டிக் கொடுத்தார்கள். 

மேட்டுக்குடியில் பிறந்த பெண்களாக இருந்தால், அவர்களுக்கு இன்னொரு தெரிவு இருந்தது. என்ன பாடுபட்டாவது, பாட்டாளி வர்க்கத்தை சேர்ந்த ஆண் ஒருவரை, தேடிப் பிடித்து திருமணம் செய்து கொண்டதன் மூலம், தங்களது வர்க்க அடையாளத்தை தூய்மைப் படுத்திக் கொண்டார்கள்.  சிலர் காதலித்து மணம் முடித்தாலும், நிறையப் பேர் பத்திரத்திற்காக மோதிரம் மாற்றிக் கொண்டார்கள். பாட்டாளி வர்க்க அடையாளம், அவர்கள் விரும்பிய கல்வி கற்கவும், தொழில் புரியவும் தேவையான அடிப்படைத் தகுதியாக இருந்தது. புரட்சிக்கு முன்னர், ஒரு கோடீஸ்வரனின் செல்ல மகளாக இருந்திருந்தாலும், தற்போது ஒரு கூலித் தொழிலாளியின் மனைவி என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப் பட்டாள். என்ன செய்வது? காலம் மாறி விட்டது.

நமது நாட்டில் யாராவது ஒரு பணக்கார வீட்டுப் பிள்ளை, “நான் பணக்கார குடும்பத்தில் பிறந்ததே பாவம்…” என்று சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? சோவியத் யூனியனில் அந்த அதிசயம் நடந்தது. நமது சமுதாயத்தில், வறுமைப் பட்ட குடும்பப் பின்னணி கொண்ட பிள்ளைகள், மிகவும் கஷ்டப் பட்டு போராடி முன்னுக்கு வர வேண்டியிருக்கும். சோவியத் சமுதாயத்தில், மேட்டுக்குடியினருக்குத் தான் வாழ்க்கை ஒரு சுமையாக, ஒரு பெரும் போராட்டமாக இருந்தது. கல்வி, உத்தியோகம் போன்ற சலுகைகள் மறுக்கப் பட்டதால், மேட்டுக்குடியினரின் செருக்கு பெருமளவு அடங்கி விட்டது. உயர் வர்க்க மனோபாவம் இன்னும் கொஞ்சம் மிச்சமிருந்தால், அவர்களுக்கு கிடைத்த வீட்டு வசதி, அதையும் இல்லாமல் செய்து விட்டது.

சோவியத் நகரங்களில், மக்களின் வீட்டு வசதியை, “(2 ம்) உலகப் போருக்கு முன், போருக்குப் பின்” என்று இரண்டு வகையாகப் பிரிக்கலாம். 1917 புரட்சியில் இருந்து, 2 ம் உலகப்போர் வரையில், நகரங்களில் இருந்த எல்லா வீடுகளிலும், கூட்டுக் குடும்பங்கள் குடியிருந்தன. 2 ம் உலகப் போருக்குப் பின்னர், ஒவ்வொரு குடும்பத்திற்கும் என தனித் தனியாக வீடுகள் கிடைத்தன. புரட்சிக்கு பிந்திய வீட்டு வசதி, கம்யூனிச சமுதாயத்தை உருவாக்குவதை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அனைத்து பிரஜைகளும் ஏற்றத் தாழ்வின்றி, சமத்துவமாக, சகோதரத்துவத்துடன் வாழ நிர்ப்பந்தித்தது.

நமது நாட்டில், கூட்டுக் குடும்ப முறையை பற்றி பெருமையாகப் பேசும், பழமைவாதிகளில் பெரும்பான்மையானோர், கம்யூனிச எதிர்ப்பாளர்களாக இருப்பார்கள். ஏனென்றால், அவர்களது கூட்டுக் குடும்பம், நிலப் பிரபுத்துவ அடிப்படை கொண்டது. இரத்த உறவு கொண்ட உறவினர்கள், தனித் தனி குடும்பங்களாக, ஆனால் ஒரே வீட்டில் கூடி வாழ்ந்தார்கள். சோவியத் யூனியனிலும், கிட்டத்தட்ட அதே மாதிரியான கூட்டுக் குடும்ப வாழ்க்கை நிலவியது.

ஒரு உண்மையான கூட்டுக் குடும்ப சமூகம், அன்றைய சோவியத் நாட்டில் இருந்தது.ஒருவருக்கொருவர் தொடர்பில்லாத, வெவ்வேறு வர்க்கப் பின்னணியை கொண்டவர்கள், ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தது தான் விசேஷமானது. பல்வேறு மொழிகளைப் பேசும், இன, மத வேறுபாடு கொண்ட மக்களும், ஒரே வீட்டில் ஒன்றாக கூடி வாழ்ந்தார்கள். அரச குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தாலும், வெளிநாட்டில் இருந்து புதிதாக குடியேறி இருந்தாலும், ஒரே வீட்டில் ஒன்றாக வாழ நிர்ப்பந்திக்கப் பட்டனர். இதைக் கேள்விப் படும் சிலர், "என்ன கொடுமை இது, சரவணா!" என்று புலம்பலாம். 

எங்கள் ஊரில், மிகவும் வசதியான உத்தியோகஸ்தரின் குடும்பமும், வறுமையான கூலித் தொழிலாளியின் குடும்பமும், ஒரே அடுக்குமாடி குடியிருப்பில், ஒரே வீட்டில் வாழ்ந்ததை கண்டிருப்போமா? அப்படி ஒரு காட்சியை எங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா? “இன்னும் ஆயிரம் வருடம் போனாலும் அது நடக்காது” என்று சிலர், இறுமாப்புடன் கேலியாக சிரித்துக் கொண்டே பதில் சொல்வார்கள்.

நாளைக்கு அப்படி ஒரு நிலைமை வந்து விடக் கூடாது என்பதற்காகத் தான், இன்றைக்கு பலர் ஸ்டாலினையும், கம்யூனிசத்தையும் வெறுக்கிறார்கள். கம்யூனிச எதிர்ப்பாளர்கள் என்னென்ன காரணங்களை அடுக்கினாலும், அவர்களது ஆழ்மனதில் இருப்பதெல்லாம், அடித்தட்டு மக்கள் மேலான அச்சம் தான். இன்று சேரியில் வாழும் ஏழை, நாளை பணக்காரனுடன் ஒரே பங்களாவில், ஒரே குடும்பமாக வாழ்வது என்பது, அவர்களைப் பொறுத்தவரையில் ஒரு கெட்ட கனவாக இருக்கும்.

1917 புரட்சிக்குப் பின்னர், வேலை தேடி நகரங்களுக்கு படையெடுக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்தது. உயர்கல்வி கற்க விரும்பிய மாணவர்களும், பெரும் எண்ணிக்கையில் நகரங்களில் வந்து குவிந்தார்கள். நகரங்களில் தங்குவதற்கு வீடு கிடைப்பது தட்டுப்பாடாக இருந்தது. ஒரு வசதியான குடும்பம், நான்கைந்து படுக்கையறைகள் கொண்ட பெரிய வீட்டில் வாழ்ந்தால், அது அவர்களது தேவைக்கு அதிகமானதாக கருதப் பட்டது. அந்தக் குடும்பம் ஒரு படுக்கையறையை பாவித்துக் கொண்டு, மற்ற அறைகளை பிற குடும்பங்களுக்கு வாடகைக்கு விட வேண்டும். அந்த வீட்டில் உள்ள சமையலறை, குளியலறை போன்றன எல்லா குடும்பங்களுக்கும் பொதுவாகும். இதனால் சிலர், முன்கூட்டியே தமது உறவினர்கள், நண்பர்களை கொண்டு வந்து குடியமர்த்தினார்கள்.

மொஸ்கோ, லெனின் கிராட் (சென் பீட்டர்ஸ்பேர்க்) போன்ற பெரிய நகரங்களில், ஏற்கனவே இருந்த பெரிய மாடிக் கட்டிடங்களை அரசு பொறுப்பேற்றது. வீடு தேடுவோரை அவற்றில் குடியமர்த்தியது. புதிதாக அடுக்கு மாடிக் கட்டிடங்கள் கட்டப் பட்டாலும், அதில் தனித் தனி வீடுகள் இருக்கவில்லை. ஒவ்வொரு மாடியிலும், பெரிய மண்டபங்களைக் கொண்டிருந்தன. அவை சிறு சிறு துண்டுகளாக பிரிக்கப் பட்டு, படுக்கையறைகளாக்கப் பட்டன. ஒவ்வொரு படுக்கையறையும் தனித் தனி குடும்பங்களுக்கு ஒதுக்கப் பட்டன. எல்லாக் குடும்பங்களும், பொதுவான சமையலறை ஒன்றை பயன்படுத்த வேண்டும். குளியலறைகள், மல சல கூடங்களும் அனைவருக்கும் பொதுவாக இருந்தன.

சோவியத் நாட்டு உழைக்கும் வர்க்க மக்களுக்கான குடியிருப்புகள்.
சோஷலிச கூட்டுக் குடும்ப வாழ்க்கை.
இது போன்ற கூட்டுக் குடும்ப வாழ்க்கை, எல்லோருக்கும் சரிப் பட்டு வராது. அங்கு வாழ்ந்தவர்கள், இட வசதி குறித்து பிரச்சினைப் பட்டார்கள். வேறு வசதியான இடத்திற்கு மாறலாம் என்ற நப்பாசையில், பக்கத்து வீட்டு குடும்பத்துடன் சண்டை பிடித்தார்கள். சமையலறையில் சமைப்பது முதல், துணி துவைப்பது வரையில் போட்டி இருந்தது. குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்த உணவுப் பொருட்கள் திருட்டு போயின. குடியிருப்பாளர்கள் ஒருவரை ஒருவர் திருட்டுக் குற்றம் சாட்டினார்கள். எல்லோரும் சமமான வாழ்க்கைத் தரத்தைக் கொண்டிருந்தாலும், தமக்கென தனித்துவம் பேண விரும்பினார்கள். அது இயற்கையானது. 

அந்தக் கால சோவியத் வாழ்க்கையை நினைத்து பரிதாபப் படுபவர்கள், இன்று மேற்கத்திய நாடுகளில் உள்ள அகதி முகாம்களை சென்று பார்வையிட வேண்டும். இரண்டுக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை. சோவியத் அரசு, வேண்டுமென்றே மக்களை கூட்டுக் குடும்பமாக வாழ நிர்ப்பந்தித்தது. அதன் மூலம், மக்கள் கூடி வாழும் கம்யூனிச வாழ்க்கை முறைக்கு பழக்கப் படுவார்கள் என்று நம்பியது. “கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” என்ற தத்துவம் வலியுறுத்தப் பட்டது. ஒவ்வொருவரும் “நான்” என்ற அகந்தையை துறந்து, “நாங்கள்” என்ற உணர்வைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப் பட்டது.

சோவியத் அரசு எதிர்பார்த்தது போன்று, மக்களிடையே சமத்துவமும், சகோதரத்துவமும் உருவானது. பலரிடம் இயற்கையாக குடிகொண்டிருந்த, சுயநலம், பேராசை, பொறாமை போன்ற கெட்ட குணங்கள் படிப்படியாக மறைந்தன. மெத்தப் படித்து மருத்துவராக, பொறியியலாளராக அல்லது கணக்காளராக தொழில் செய்பவரின் குடும்பமும், எழுத்தறிவற்ற கூலி உழைப்பாளியின் குடும்பமும், அருகருகே வாழும் நிலைக்கு தள்ளப் பட்டன. இதனால், வர்க்கங்களுக்கு இடையிலான கசப்புணர்வு மறைந்து, மனித நேயம் வளர்ந்தது. சோவியத் சமுதாயத்தில், யாருமே கூட்டுக் குடும்ப வாழ்வை தவிர்க்க முடியவில்லை. ஸ்டாலினின் மனைவியின் சகோதரனது குடும்பமும், முகாம் போன்ற வீடொன்றில் வாழ்ந்து வந்தது.

2ம் உலகப் போருக்குப் பின்னர், தனித் தனி வீடுகளைக் கொண்ட அடுக்குமாடிக் கட்டிடங்கள் கட்டப் பட்டன. அளவில் சிறியதாக இருந்தாலும், மேற்கு ஐரோப்பாவில் உள்ளதைப் போன்று, அனைத்து வசதிகளையும் கொண்டிருந்தன. காலப்போக்கில் எல்லாக் குடும்பங்களுக்கும் தனித் தனி வீடு கிடைத்தாலும், கூட்டுக் குடும்பமாக வாழும் போது இருந்த சந்தோஷம் இருக்கவில்லை. வேலை விட்டு வந்தால், பொழுது போவதே தெரியாது. கார்ட்ஸ், டொமினோ, செஸ் போன்ற உள்ளரங்க விளையாட்டுகளுக்கு எந்த நேரமும் யாராவது ஒருவர் இருப்பார். பண்டிகைகள், கொண்டாட்டம் என்றால், வீடு முழுக்க கலகலப்பாக இருக்கும்.

குறிப்பாக, சிறுவர்களுக்கு கூட்டுக் குடும்ப வாழ்க்கை மிகவும் பிடித்திருந்தது. பிள்ளைகள் எல்லாம் ஒன்று கூடி கும்மாளம் அடிக்க முடிந்தது. எல்லா வீடுகளும் திறந்து இருந்ததால், ஓடிப் பிடித்து, ஒளித்துப் பிடித்து விளையாட தாராளமான இடம் இருந்தது. பெரியவர்கள் எல்லோரும் குழந்தைகள் மேல் பாசமாக இருந்தார்கள். அதனால் குழந்தைகளை பராமரிப்பது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மேலும் அது குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பான இடமாக இருந்தது.

ஸ்டாலின் காலத்தில், சோவியத் நாட்டு மக்களின் வாழ்க்கை பற்றி மேலும் பல தகவல்கள், "The Whisperers, Private Life in Stalin's Russia" என்ற நூலில் விபரமாக எழுதப் பட்டுள்ளன. 

(தொடரும்)


இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:

1. ஸ்டாலினின் மறு பக்கம்: உலகில் மறைக்கப் பட்ட உண்மைகள்
2.நாட்டாண்மைகளை விரட்டிய நாட்டுப்புற ஏழைகள்


(பிற்குறிப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப் படும் தரவுகள் எதுவும், ஸ்டாலினை மகிமைப் படுத்தும் சோவியத் பிரச்சார நூல்களில் இருந்து எடுக்கப் பட்டதல்ல. ஸ்டாலினை விமர்சிக்கும், மேற்கத்திய நலன் சார்ந்த எழுத்தாளர்கள் எழுதிய நூல்களில் கிடைத்த தகவல்கள் ஆகும். பழைய சோவியத் ஆவணங்கள், அந்தக் காலத்தில் வாழ்ந்த மக்களின் அனுபவக் குறிப்புகள் ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டு எழுதி இருக்கிறார்கள்.) 
____________________________________________________________________________________________

 ஸ்டாலின் பற்றிய முன்னைய பதிவுகள்:
1.ஸ்டாலினைக் கண்டு அஞ்சுவோர் யார்?
2.ஸ்டாலினைக் கண்டு அஞ்சுவோர் யார்? (பகுதி - 2)
3.பணக்கார பெற்றோரை வெறுத்த புதிய தலைமுறை இளைஞர்கள்
4.ஸ்டாலின் கால வாழ்க்கை: "எல்லாமே புரட்சிக்காக!"

No comments:

Post a Comment