Wednesday, January 29, 2014

"லிபிய முள்ளிவாய்க்காலில்" குதறப் பட்ட கடாபியின் பெண் போராளிகள்



சிறிலங்கா, லிபியா ஆகிய இரண்டு நாடுகளிலும் நடந்த இறுதிப் போர்களின் முடிவு ஒரே மாதிரி அமைந்துள்ளது. போர்க்குற்றங்களும் ஒரே தன்மை கொண்டவையாக உள்ளன. ஈழத்தில் நடந்த இனப்படுகொலைகள், போர்க்குற்றங்களுக்கு சிங்களப் இராணுவம் குற்றவாளிகள் என்றால், லிபியாவில் நடந்த இனப்படுகொலை போர்க்குற்றங்களுக்கு, ஸ்ரீலங்கா அரசின் எஜமானர்களான நேட்டோ படைகள் குற்றவாளிகளாக இருந்துள்ளனர். கடாபிக்கு எதிராக போரிட்ட "கிளர்ச்சிக் குழு", உண்மையில் நேட்டோப் படைகளின் கூலிப் படையாக செயற்பட்டது.

இலங்கையில், முள்ளிவாய்க்கால் சுற்றி வளைக்கப் பட்டு, அதற்குள் அகப்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப் பட்டனர். லிபியாவில் கடாபிக்கு ஆதரவான Sirte சுற்றிவளைக்கப் பட்டு, அதற்குள் அகப்பட்ட மக்கள் படுகொலை செய்யப் பட்டனர். ஈழத்தின் இறுதிப் போர் ஒரு கடற்கரைப் பிரதேசமான முள்ளிவாய்க்கால் பகுதியில் நடந்ததைப் போன்று, லிபியாவின் இறுதிப் போரும் (Battle of Sirte), ஒரு கடற்கரையோரப் பிரதேசமான சிர்ட்டில் நடந்தது.

ஈழத்தில் சரணடையவிருந்த பிரபாகரன் கொலை செய்யப்பட்ட அதே பாணியில், லிபியாவில் சரணடையவிருந்த கடாபி கொல்லப் பட்டார். ஈழத்தில் பெண் போராளிகள், ஸ்ரீலங்கா இராணுவத்தால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்டு படுகொலை செய்யப் பட்டனர். ஒரு ஊடகவியலாளராக பணியாற்றிய இசைப்பிரியாவின் கொலை, போர்க்குற்ற ஆவணமாக உலகை உலுக்கியது. அதே மாதிரி, லிபியாவிலும் நடந்துள்ளது. 


கடாபியின் மெய்ப் பாதுகாவலர்களான பெண் இராணுவ வீரர்கள், நேட்டோப் படையின் கூலிப் படையினரால், கொடூரமாக படுகொலை செய்யப் பட்டனர்.கடாபி பிடிபடுவதற்கு முன்னரே, அவர் தனது பெண் மெய்ப் பாதுகாவலர்களை, எங்காவது தப்பியோடுமாறு கலைத்து விட்டார். ஆனால், "லிபிய முள்ளிவாய்க்கால்" பகுதியில் இருந்தும் யாருமே உயிரோடு தப்ப முடியவில்லை.

கடாபியின் மெய்ப் பாதுகாவலர்களாக தெரிவு செய்யப் பட்ட நானூறு பெண்கள், சிறப்பு இராணுவப் பயிற்சி பெற்றிருந்தனர். உலகில் வேறெந்த நாட்டின் தலைவரும், பெண் மெய்ப்பாதுகாவலர்களை வைத்திருக்கவில்லை. அரபு ஆண்கள், பெண்களை சுடத் தயங்குவார்கள் என்பதாலேயே, கடாபி அவர்களை தெரிவு செய்ததாக சொல்லப் படுகின்றது. அத்துடன், கடாபி தன்னை ஒரு பெண்களுக்கு சம உரிமை கொடுக்கும், பெண்ணியவாதியாக காட்டிக் கொள்ளும் நோக்கமும் இருந்தது. மேலும், கடாபியின் அழகிய மெய்ப்பாதுகாவலர்கள், உலகம் முழுவதும் ஊடகங்களின் விசேட கவனத்தைப் பெற்றனர்.

லிபியப் போர் முடிந்த பின்னர், கடாபியின் பெண் மெய்ப்பாதுகாவலர்களுக்கு என்ன நடந்தது? அது பற்றிய கவலை யாருக்கும் இருக்கவில்லை. ஆனால், லிபியாவின் புதிய ஆட்சியாளர்களும், கடாபியை வெறுக்கும் மேற்கத்திய ஊடகங்களும், பல வதந்திகளை கட்டவிழ்த்து விட்டன. பாலியல் வக்கிரம் கொண்ட வதந்திகளை பரபரப்பான செய்திகளாக வெளியிட்டன. 

கடாபி தனது பெண் மெய்ப்பாதுகாவலர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக, வன்புணர்ச்சி செய்ததாக கதைகளை கட்டி விட்டனர். அநேகமாக, அந்தத் தகவல்கள் எல்லாம், கடாபிக்கு எதிராக போரிட்ட, இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடம் இருந்தே வந்தன. பொதுவாகவே, பெண்களை வீட்டுக்குள் பூட்டி வைக்க விரும்பும் பழமைவாதிகள், கடாபியின் பெண் மெய்ப்பாதுகாவலர்களை எவ்வாறு ஜீரணித்துக் கொள்வார்கள்?

லிபிய இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள், கடாபியின் லிபரல் கலாச்சாரத்தை வெறுத்து வந்தனர். கடாபி தனது மெய்ப்பாதுகாவலர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்வது போன்ற பல கதைகள், அவர்கள் மத்தியில் உலாவின. கடாபி ஆட்சி நடக்கும் பொழுதே, இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் அந்தப் பெண் மெய்பாதுகாவலர்களை, "கடாபியின் விபச்சாரிகள்" என்ற பெயரில் அவமானப் படுத்தி வந்தனர்.

தற்போது, மேற்கத்திய ஊடகவியலாளர்களும்  "கடாபியின் விபச்சாரிகள்"  பற்றிய கதைகளை வாங்கி, சர்வதேச மட்டத்தில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அண்மையில், BBC தொலைக்காட்சி, இன்னும் ஒரு படி மேலே சென்று, பழமைவாதிகளின் பெண்களுக்கு எதிரான அவதூறுகளை தொகுத்து, ஒரு ஆவணப் படமாக தயாரித்துள்ளது. (Mad Dog: Gaddafi's Secret World) இது தான், மேலைத்தேய ஜனநாயக நாடுகளின் "பெண் உரிமை." 


உண்மையில், கடாபியின் பெண் போராளிகளுக்கு என்ன நடந்தது? தனது ஆண் நண்பருடன் தப்பிச் செல்ல முயன்ற ஒருவர், கிளர்ச்சிப் படைகளால் கைது செய்யப் பட்டு, இருவரும் சுட்டுக் கொல்லப் பட்டனர். சில மெய்ப் பாதுகாவர்கள், மாறுவேடம் பூண்டு, மக்களோடு மக்களாக வெளியேற முயன்றார்கள். ஆனால், அவர்களும் அகப்பட்டுக் கொண்டனர். நேட்டோ தலைமையிலான கூலிப் படையினர், அந்த இளம் பெண்களை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கி, சித்திரவதை செய்து கொன்றனர். அவர்களது சடலங்கள்,புதர்களுக்குள் வீசப் பட்டு, நாட்கணக்காக அழுகி நாறின.

லிபியாவில், கடாபியின் பெண் மெய்ப்பாதுகாவலர்களுக்கு நடந்த கொடுமை ஒரு அப்பட்டமான போர்க்குற்றம் ஆகும். ஆனால், மேற்குலக நாடுகள், லிபிய போர்க்குற்றங்களை விசாரித்து, போர்க் குற்றவாளிகளை தண்டிப்பதற்குப் பதிலாக, அவர்களை தப்ப வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. "ஆபாசப்படம் பார்த்துகொண்டே சிறுமிகளை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய கடாபி",  "கடாபியின் இரகசிய உலகம் ஆவணப்படத்தால் அதிர்ச்சி" போன்ற உணர்ச்சிவசமான பரபரப்புச் செய்திகளை வெளியிடுவதன் மூலம், லிபிய போர்க்குற்றங்களில் இருந்து, உலக மக்களின் கவனத்தை திசை திருப்புகின்றன.

லிபிய போர்க்குற்றங்கள், சர்வதேச நீதிமன்றம் ஒன்றில் விசாரணைக்கு கொண்டு வரப் பட்டால், நேட்டோ படைகளின் பெயரும் கெட்டுப் போகும். ஏனென்றால், லிபியாவின் இறுதிப் போரில் நடந்த இனப் படுகொலைக்கு, நேட்டோப் படைகளும் பொறுப்பேற்க வேண்டி இருக்கும்.


லிபியா தொடர்பான முன்னைய பதிவுகள்:

1.லிபியா: இன்னொரு ஈராக் உருவாகின்றது!
2.லிபியா மீதான நேட்டோ ஆக்கிரமிப்பின் ஆரம்பம்
3.இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்ட புதிய லிபியாவின் எதிர்காலம்
4."காமக் கொடூரன் கடாபியின் கன்னி வேட்டை!" - ஒரு BBC ஆபாசப் படம்!!

No comments:

Post a Comment