Thursday, January 23, 2014

ஆயிரம் உயிர் வாங்கிய அபூர்வ சர்வாதிகாரி!

(ஸ்டாலினின் மறு பக்கம்: 
உலகில் மறைக்கப் பட்ட உண்மைகள்) 
 (ஐந்தாம் பாகம்)


உலக வரலாற்றில் பல புரட்சிகள் நடந்துள்ளன. ஆனால், அந்தப் புரட்சிகள் கொண்டு வந்த கொள்கைகள், எத்தனை வருடங்கள் நிலைத்து நின்றன என்பதும் முக்கியமானது. புரட்சி நடந்த பல நாடுகளில், கொள்கைக்காக நடந்த களையெடுப்புகள், சகோதர யுத்தங்களில், பல இலட்சம் பேர் பலியாகியுள்ளனர். பிரிட்டிஷ் காலனியாகவிருந்த அமெரிக்கா பிரிவதற்காக நடந்த போரினை, “அமெரிக்கப் புரட்சி" என்று சரித்திர நூல்களில் எழுதுகின்றனர். உண்மையில் அப்போது நடந்ததை, விடுதலைப் போராட்டம் என்று சொல்லலாம். ஆனால், அது ஒரு “புரட்சி" அல்ல.

19 ம் நூற்றாண்டில், அமெரிக்காவில் நடந்த உள்நாட்டுப் போர் தான், அந்த நாட்டில் நடந்த உண்மையான புரட்சி ஆகும். தென் அமெரிக்க மாநிலங்கள், நிலப்பிரபுத்துவ பழைமைவாதத்தில் ஊறியிருந்தன. அதற்கு மாறாக, வட அமெரிக்க மாநிலங்கள் முதலாளித்துவ முற்போக்குக் கொள்கையை கொண்டிருந்தன. போரின் இறுதியில், முதலாளித்துவம் நிலப்பிரபுத்துவ சக்திகளை தோற்கடித்து, அமெரிக்கா முழுவதையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. அன்று நடந்த அமெரிக்க உள்நாட்டுப் போரில், பல இலட்சம் மக்கள் படுகொலை செய்யப் பட்டனர். எதிர்த் தரப்பினரை சிறையில் அடைப்பதை விட, சுட்டுக் கொல்வதே சிறந்ததாக நம்பப் பட்ட காலமது. அந்தப் போரில் பல அப்பாவிகளும் பலியாகி இருப்பார்கள் என்பதை குறிப்பிடத் தேவையில்லை.

ஒருவேளை, இன்றைக்கும் உலகின் பல பகுதிகளில், நிலப்பிரபுத்துவ சக்திகளின் ஆட்சி நடக்கின்றது என்று நினைத்துக் கொள்வோம். அப்படி இருந்தால், அமெரிக்க உள்நாட்டுப் போரை நடத்திய “ஆப்பிரகாம் லிங்கன் ஒரு கொடுங்கோலன், பல இலட்சம் மக்களை கொன்ற இனப் படுகொலையாளி….” என்றெல்லாம் பிரச்சாரம் செய்திருப்பார்கள். நல்லவேளை, இன்று எந்த நாடும் நிலப்பிரபுக்களின் ஆதிக்கத்தின் கீழ் இல்லை. அதனால், ஆப்பிரகாம் லிங்கனும், ஸ்டாலினைப் போன்று தூற்றப்படுவதில் இருந்து தப்பிக் கொண்டார்.

சோவியத் யூனியனில், ஸ்டாலின் ஆட்சி செய்த காலம் முழுவதும் சர்வாதிகாரம் இருந்ததாக நம்புவது தவறு. குறிப்பாக 1937 ம் ஆண்டு வரையில், ஸ்டாலினை விமர்சிப்பது குற்றமாக கருதப் படவில்லை. கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளேயே, ஸ்டாலினுடன் கொள்கை முரண்பாடு கொண்ட பலர் இருந்தார்கள். பொது மக்களைப் பொறுத்த வரையில், அங்கே சட்டத்தின் ஆட்சி நடந்தது. ஒருவர் அரச எதிர்ப்பாளர் என்று குற்றஞ்சாட்டப் பட்டு, நீதி மன்றத்தில் நிறுத்தப் பட்டாலும், குற்றத்தை நிரூபிக்க போதுமான சாட்சிகள் இல்லாத பொழுது விடுதலை செய்யப் பட்டார்கள்.

எந்தளவு உயர்வாக மனித உரிமைகளை மதிக்கும் நாடாக இருந்தாலும், போர் நடக்கும் காலத்தில் சட்டங்களை மாற்றிக் கொள்ளும். அரசு இயந்திரம் கடுமையாக நடந்து கொள்ளும். புலனாய்வுத் துறையின் அதிகாரங்கள் அதிகரிக்கப் படும். சிறைகளை நிரப்புவதும், நீதிக்கு புறம்பான படுகொலைகளும் அதிகரிக்கும். எதிரியை இலகுவாக அடையாளம் காண முடியாததால், பல அப்பாவிகளும் பாதிக்கப் படுவார்கள். அமெரிக்காவின் CIA, FBI போன்ற புலனாய்வுத் துறையினரை எந்த சட்டமும் கட்டுப் படுத்தாது. அவர்கள் யாரை வேண்டுமானாலும் கொலை செய்யலாம், பிடித்து சிறையில் அடைக்கலாம். ஜனநாயகத் தன்மை அதிகமாக உள்ள, மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும், புலனாய்வுத்துறையின் செயற்பாடுகள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவை.

சோவியத் யூனியன் உலகிலேயே மிகப் பெரிய நாடாக இருந்தது. அதற்குள் நூற்றுக் கணக்கான மொழிகளைப் பேசும், பல கோடி மக்கள் வாழ்ந்தனர். அமெரிக்காவை ஆள்வதை விட, சோவியத் யூனியனை ஆள்வது பல மடங்கு கஷ்டமான காரியம். ஸ்டாலின் கால சோவியத் யூனியனில் இயங்கிய புலனாய்வுத் துறையின் பெயர் NKVD. (பிற்காலத்தில் அது KGP என்று பெயர் மாற்றப் பட்டது.) NKVD தான், ஸ்டாலின் காலத்தில் நடந்த பெரும்பான்மையான கொலைகள், கைதுகள், நாடுகடத்தல்களுக்கு காரணகர்த்தாவாக இருந்தது.

ஸ்டாலினின் ஆட்சிக் காலத்தில், 1930 ம் ஆண்டுக்குப் பின்னரும், சோவியத் அரசுக்கு எதிரான குழுக்கள் இயங்கி வருவதாக, NKVD அறிக்கை சமர்ப்பித்திருந்தது. அன்றைய சோவியத் யூனியனில், எதிர்ப் புரட்சிக் குழுக்கள் இயங்கியதாக NKVD தெரிவித்த தகவல்களில் உண்மை இருக்கலாம். NKVD என்ற நிறுவனத்திற்கு கிடைத்து வரும் அரசு மானியத்தை அதிகரிப்பதற்காக, அதன் அதிகாரிகள் சில பொய்களை, அல்லது மிகைப் படுத்திய தகவல்களை எழுதி இருக்கலாம். இரண்டுக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளன. அதே நேரம், NKVD சொல்வதை எல்லாம் நம்பும் அளவிற்கும், ஸ்டாலின் ஒரு முட்டாளும் அல்ல.

சோவியத் யூனியனில் மிகவும் சக்தி வாய்ந்த நிறுவனமான NKVD, எந்த நேரத்திலும் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம், கொலை செய்யலாம் என்ற நிலைமை இருந்தது. ஆனால், NKVD குள்ளேயே பலர் தீர்த்துக் கட்டப் பட்டனர் என்பது குறிப்பிடத் தக்கது. காசகஸ்தானில் NKVD உயர் அதிகாரியாக கடமையாற்றிய ஸ்டாலினின் ஒன்று விட்ட சகோதரர் ஒருவரும், தேசத் துரோகி என்று குற்றஞ் சாட்டப் பட்டு சுட்டுக் கொல்லப் பட்டார்.

மிகைல் தூகாசெவ்ஸ்கி, சோவியத் நாட்டின் வீர நாயகனாக போற்றப் பட்டவர். புரட்சிக்கு அளப்பெரிய பங்காற்றிய அவரது வீரப் பிரதாபங்களை கூறும் கதை ஆரம்ப பாடசாலை மாணவர்களின்  பாடப் புத்தகங்களில் இடம்பெற்றது. ஆனால், தூகாவ்செவ்ஸ்கி கூட, NKVD அலுவலகத்தில் சித்திரவதை செய்யப் பட்டு கொலை செய்யப் பட்டார்.

அன்று நடந்த அரசியல் படுகொலைகளுக்கான பழி முழுவதையும் ஸ்டாலின் மேல் போடுவது மிகவும் எளிது. ஆனால், காரணத்தை புரிந்து கொள்வது கடினம். உதாரணத்திற்கு, ஒரு காலத்தில் சோவியத் மக்களின் வீர புருஷனாக மதிக்கப் பட்ட தூகாவ்செவ்ஸ்கி, மக்களின் எதிரி என்று குற்றஞ் சாட்டப் பட்டு மரண தண்டனை விதிக்கப் பட்ட செய்தி பத்திரிகைகளில் வெளியான நேரம், சோவியத் மக்கள் என்ன நினைத்திருப்பார்கள்? “தூகாவ்செவ்ஸ்கி ஒரு துரோகி, ஜெர்மன் கைக்கூலி” என்ற குற்றம் சுமத்தப் பட்டு விசாரிக்கப் பட்டார். அதையெல்லாம், அன்று வாழ்ந்த சோவியத் குடிமக்களும் நம்பினார்கள் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது.

பாடசாலைகளில் படித்த மாணவர்கள், தூகாசெவ்ஸ்கியின் படமும், கதையும் இருந்த புத்தகங்களின் பக்கங்களை கிழிக்கும் அளவிற்கு நடந்து கொண்டார்கள். அந்த குற்றச்சாட்டு உண்மையா, விசாரணை நீதியாக நடந்திருக்குமா என்பது ஒரு புறம் இருக்கட்டும். அதையெல்லாம் நம்பும் அளவிற்கு, பெரும்பான்மையான மக்கள் இருந்திருக்கிறார்கள். எந்தப் பயமுறுத்தல்களுக்கும் அஞ்சி, மக்கள் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை. அன்று நடந்த சம்பவங்களை எல்லாம், “ஸ்டாலினிச சர்வாதிகாரம்” என்ற ஒரே சொல்லில் பதில் கூறி விளக்க முடியாது.

“ஸ்டாலினிச பயங்கரவாதம்” என்று வர்ணிக்கப் படும் ஆட்சி நடந்த காலத்தில், பல இலட்சம் பேர் சிறையில் அடைக்கப் பட்டனர், அவர்களில் இலட்சக் கணக்கானோர் கொல்லப் பட்டனர். கைது செய்யப் பட்ட அனைவரும், “மக்களின் எதிரிகள்” என்று குற்றஞ் சாட்டப் பட்டனர். அன்று, உண்மையாகவே ஸ்டாலினின் ஆட்சியை கவிழ்க்க வேண்டுமென்ற நோக்குடன் சதி செய்த பலர் இருக்கலாம். அதே நேரம், பல அப்பாவிகளும் கைது செய்யப் பட்டு, கொலை செய்யப் பட்டனர் என்பதை மறுக்க முடியாது.

சோவியத் அரசின் உயர் மட்டத்திலும், பலர் கைது செய்யப் பட்டனர். அவர்கள் பின்னர் சுட்டுக் கொல்லப் பட்டனர். அவர்களில் பலர் ஸ்டாலினுடன் பல வருட காலம் நெருங்கிப் பழகியவர்கள். ஒரே இலட்சியத்திற்காக, ஒன்று சேர்ந்து போராடியவர்கள். உதாரணத்திற்கு, ட்ராஸ்கி, காமனேவ், சினொவியெவ், புகாரின், பியாத்னிஸ்கி போன்றவர்கள், ஸ்டாலினுக்கு நிகரான ஆளுமை கொண்ட போல்ஷெவிக் தலைவர்கள். இவர்களில் ட்ராஸ்கி மட்டுமே கொல்லப் படாமல் தப்பி, மெக்சிகோவிற்கு புலம்பெயர்ந்து சென்று வாழ்ந்தார். மற்றவர்கள் எல்லோரும், NKVD யினால் கைது செய்யப் பட்டு, சுட்டுக் கொல்லப் பட்டனர்.

1937 - 1938 ஆகிய இரண்டு வருடங்களில் மட்டும், தேசத் துரோக குற்றச்சாட்டில் கொல்லப் பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம். குறைந்தது 681,692 பேர் கொல்லப் பட்டதாக, NKVD புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது. அதற்கு முன்னர் நடந்த, கூலாக் விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கையில் கூட அந்தளவு மரண தண்டனை நிறைவேற்றப் படவில்லை. 1929 - 1932 ஆகிய காலத்தில், நாடு முழுவதும் கைது செய்யப் பட்டவர்களில் 6% மானோர் (35,689 பேர்) மட்டுமே கொல்லப் பட்டனர். (V.popov, “Gosudarstvennyi terror v sovetskoi Rossi”; A.Aplebaum, Gulag: “A History of the Soviet camps”)

இங்கே எழும் பல கேள்விகள், சந்தேகங்களுக்கு ஒவ்வொன்றாகத் தான் விடை காண முடியும். படித்த பாமரர்கள் கூட, ஸ்டாலின் என்ற ஒரு தனி மனிதனின் சர்வாதிகார ஆட்சி நடந்ததாக கற்பனை பண்ணிக் கொள்கிறார்கள். தமிழ் சினிமாவில் வரும் கதாநாயகன் போல, ஸ்டாலின் இலட்சக் கணக்கான மக்களை சுட்டுக் கொன்றதாக நினைக்கிறார்கள். முதலில் நாங்கள், அது போன்ற மாயையில் இருந்து விடுபட வேண்டும். எல்லா நாடுகளிலும் இருப்பதைப் போன்று, சோவியத் நாட்டிலும் அரசாங்கம் பல பிரிவுகளாக இயங்கிக் கொண்டிருந்தது. அரசியலைமைப்பு சட்டம் இருந்தது. நீதிமன்றங்கள் இயங்கின.

அன்றிருந்த அரசியல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு, சட்டங்கள் மாற்றப் பட்டன. உதாரணத்திற்கு, 1917 புரட்சிக்கு பிந்திய சில வருடங்கள், மரண தண்டனை அமுலில் இருந்தது. அது பின்னர் இரத்துச் செய்யப் பட்டது. “மாபெரும் களையெடுப்புகள்” நடந்த காலகட்டத்தில், மீண்டும் மரண தண்டனை கொண்டு வரப் பட்டது. சட்டத்திற்கு அப்பாற்பட்ட அதிகாரம் கொண்ட NKVD, மக்கள் விரோதிகள் என்று கைது செய்த பலரை சித்திரவதை செய்து கொன்றுள்ளது. அதே நேரம், மக்களின் எதிரிகளாக குற்றஞ்சாட்டப் பட்ட ஏராளமானோர் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப் பட்டனர். போதுமான ஆதாரங்கள் இன்றி பலர் விடுதலை செய்யப் பட்டனர்.

கைது செய்யப் பட்ட அத்தனை பேரும் மக்கள் விரோதிகள், தேசத் துரோகிகள் என்று நம்பும் அளவிற்கு, ஸ்டாலின் முட்டாளாக இருக்கவில்லை. பல தடவைகள், குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு ஸ்டாலினே நேரடியாகக் கேட்டிருக்கிறார். அதே நேரம், சதியில் ஈடுபட்ட, அல்லது உடந்தையாக இருந்த பலரை சுட்டுக் கொல்லுமாறு, ஸ்டாலினே உத்தரவு போட்டுள்ளார். ( ரஷ்ய ஆவணக் காப்பகத்தில், பாதுகாத்து வைக்கப் பட்டுள்ள ஆவணங்களில் இருந்து கிடைத்த தகவல்கள், இன்று பல நூல்களாக வெளியாகி உள்ளன.)


இன்றைக்கும் பலரின் மனத்தைக் குடைந்து கொண்டிருக்கும் கேள்விக்கு வருவோம்:

1. ஸ்டாலின், அன்றிருந்த சோவியத் மக்கள் அனைவராலும் வெறுக்கப் பட்ட சர்வாதிகாரியா?

பதில்: பெரும்பான்மையான சோவியத் மக்கள், ஸ்டாலினின் நடவடிக்கைகள் எல்லாம் சரியானவை என்று ஏற்றுக் கொண்டனர் அல்லது அப்படி நம்பினார்கள். மேலே குறிப்பிட்ட தூகாசெவ்ஸ்கியின் உதாரணத்திலேயே அதைப் பார்க்கலாம். பெரும்பான்மை மக்களின் ஆதரவின்றி, ஸ்டாலினால் ஆட்சி நடத்தி இருக்க முடியாது. அன்றிருந்த சோவியத் மக்களின் கருத்துக்கள், அரசியல் நிலைப்பாட்டை பின்னர் விரிவாகப் பார்ப்போம்.

2. ஸ்டாலின் பல இலட்சம் அப்பாவி மக்களை படுகொலை செய்தாரா?

பதில்: அன்று மரண தண்டனை விதிக்கப்பட்ட எல்லோரும் குற்றவாளிகள் அல்ல. பல அப்பாவிகளும் கொல்லப் பட்டனர். அதே நேரம், பல ஆயிரம் கைதிகள், பின்னர் விடுதலை செய்யப் பட்டனர். (ஸ்டாலினின் ஆட்சிக் காலத்திலேயே, அவர்கள் குற்றமற்றவர்கள் என்று தெரிந்த பின்னர் விடுவிக்கப் பட்டனர்.)

தனிப்பட்ட முறையில் பார்த்தால், ஒவ்வொரு கைதிக்கும் பின்னால் ஒரு சோகக் கதை இருக்கும். தண்டனை விதிக்கப் பட்ட அப்பாவிகள், குற்றம் எதுவும் செய்யாதவர்கள் என்பதை, நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே தெரிந்து வைத்திருந்தனர். பிறரின் பார்வையில் அவர்கள் குற்றவாளிகளாக தெரிந்தார்கள். (அவர்களது துன்பங்கள், துயரமான அனுபவங்கள் மட்டுமே, மேற்கத்திய நாடுகளில் அனுதாபத்துடன் நோக்கப் பட்டன.)

நாங்கள், எந்த விஷயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம், அல்லது கொடுக்க விரும்புகிறோம் என்பதும் முக்கியமானது. ஸ்டாலினை ஆதரிப்பவர்கள் மட்டுமல்ல, எதிர்ப்பவர்கள் கூட ஒரு குறிப்பிட்ட அரசியல் நிலைப்பாட்டில் இருந்து கொண்டு தான், அதைக் கூறுகின்றனர். மனிதர்கள் எல்லோருக்கும் அரசியல் உண்டு. இல்லை என்று சொல்பவர்கள் கூட, ஏதாவது ஒரு அரசியல் கோட்பாட்டுக்கு, மௌனமான ஆதரவை வழங்கலாம்.

ஸ்டாலின் கொன்ற அப்பாவிகளை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருப்பவர்கள், உண்மையான குற்றவாளிகளை, சதி காரர்களை, மக்கள் விரோதிகளை கண்டு கொள்வதில்லை. அப்படி யாருமே இருக்கவில்லை என்பது போல பாவனை செய்கின்றனர். மறு பக்கத்தில், உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப் பட்டதை சரியென்று வாதிடுபவர்கள், பாதிக்கப் பட்ட அப்பாவி மக்களை கண்டுகொள்ளாமல் விடும் பொழுது, அவர்களது அரசியல் சார்புத் தன்மை கேள்விக்குள்ளாகின்றது.

ஸ்டாலின் காலத்தில் இருந்த அரசியல் நிலைமையை, ஈழப் போராட்டத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். விடுதலைப் புலிகள் இயக்கம், தமிழீழத்திற்காக போராடிய பிற இயக்க உறுப்பினர்களை மட்டும் கொலை செய்யவில்லை. ஒரே இயக்கத்தில், தலைமைப் பொறுப்பில் இருந்த மாத்தையாவை கைது செய்த நேரம், அல்லது  கருணா பிரிந்த நேரம், அவர்களின் விசுவாசிகளான சக தோழர்களையும் கொலை செய்தனர். அந்த நேரத்தில், இயக்க உறுப்பினர்கள் மட்டுமல்லாது, அவர்களின் குடும்பங்கள், ஆதரவாளர்கள் கூட பாதிக்கப் பட்டனர். அதே போன்று, ஸ்ரீலங்கா இராணுவத்திற்கு உளவு பார்த்த குற்றச் சாட்டில், பலர் சுட்டுக் கொல்லப் பட்டனர். அப்படியான தருணத்தில், தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாடு எப்படி இருந்தது?

நிச்சயமாக, புலிகளால் பாதிக்கப் பட்டவர்களும், அவர்களின் நெருங்கிய உறவினர்களும் புலிகளை எதிர்த்துப் பேசுவார்கள். சிலர் புலிகளை அழிக்க வேண்டுமென்ற நோக்கோடு அரசாங்கத்துடன் சேர்ந்து கொண்டார்கள். தமிழ் மக்கள் எல்லோரும், புலிகள் தொடர்பாக ஒத்த கருத்தைக் கொண்டிருந்தனரா? இல்லை. பெரும்பான்மையான தமிழர்கள் புலிகளை ஆதரித்தார்கள். அவர்கள் புலிகள் சொன்னதை எல்லாம் உண்மை என்று நம்பினார்கள். ஒட்டுக் குழுக்கள், துரோகிகள் என்று புலிகள் சுட்டிக் காட்டியவர்களை, மக்களும் ஒதுக்கி வைத்தார்கள்.

மறு பக்கத்தில், புலிகளை குறை கூறிக் கொண்டிருந்த கூட்டம் ஒன்றிருந்தது. அவர்களுக்கு புலி எதிர்ப்பாளர் முத்திரை குத்தப் பட்டது. புலி எதிர்ப்பாளர்கள், ஒரு காலத்தில் பாதிக்கப் பட்ட அப்பாவி மக்களாக இருந்திருந்தாலும், யாருக்கும் அதைப் பற்றிய கவலை இருக்கவில்லை. “இன்று புலிகள் மட்டும் தானே இலங்கை அரச படைகளை எதிர்த்து போரிடுகிறார்கள்? அப்படியானவர்களை விமர்சிப்பது சரியா?” என்று நியாயம் கூறினார்கள். இதே மாதிரியான நிலைமை தான் ஸ்டாலின் காலத்திலும் இருந்தது.

புலிகளை ஆதரித்த, ஈழத் தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாட்டை, உங்களால் புரிந்து கொள்ள முடியுமானால், ஸ்டாலினை ஆதரித்த சோவியத் மக்களின் அரசியல் நிலைப்பாட்டையும் புரிந்து கொள்ளலாம். முன்னர் ஒரு காலத்தில், தீவிர புலி எதிர்ப்பாளர்களாக இருந்தவர்கள், சில வருடங்களுக்குப் பின்னர், புலிகளை ஆதரிக்கத் தொடங்கினார்கள்.

புலிகளால் பாதிக்கப் பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்களும், காலப் போக்கில் புலிகளின் போராட்டத்தை ஆதரித்தார்கள். சிலர் தமது சுயநலம் கருதி மாறியிருக்கலாம். ஆனால், எல்லோரும் திடீர் பாசம் காரணமாக புலிகளை ஆதரித்தார்கள் என்று கூற முடியாது. அவர்களின் வார்த்தைகளில் கூறினால், “இன்றைய நிலையில் ஸ்ரீலங்கா அரசின் ஒடுக்குமுறை அதிகமாக உள்ளது. அதற்கெதிராக போராடுவோர் யாராக இருந்தாலும் ஆதரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது.”

ஒரு காலத்தில், ஸ்டாலினால் “மக்கள் விரோதி” என்று குற்றஞ்சாட்டப் பட்டு சுட்டுக் கொல்லப் பட்டவர்களின் பிள்ளைகள், சில வருடங்களுக்கு பின்னர் ஸ்டாலினின் தலைமையின் கீழ் செம்படையில் இணைந்து, நாஜிப் படைகளுக்கு எதிராக போராடினார்கள். சில நேரம், ஸ்டாலினால் கொல்லப்பட்ட அவர்களது பெற்றோர், எந்தக் குற்றமும் செய்யாத அப்பாவி கம்யூனிஸ்டுகளாக இருந்திருக்கலாம். அதற்காக, ஸ்டாலின் மேல் வன்மத்தை வளர்த்து, சந்தர்ப்பம் பார்த்து எதிரிகளுடன் சேர்ந்து கொள்ளவில்லை. சிலர் அப்படி நடந்து கொண்டிருக்கலாம். ஆனால், எல்லோரும் அப்படி அல்ல. எப்போதும் சாதாரண மக்கள், தமது நலன் சார்ந்த கொள்கைகளுக்கு துரோகம் இழைப்பதில்லை.

ஒரு காலத்தில், “ஸ்டாலினிச பயங்கரவாதத்திற்கு பலியான” குடும்பங்களை சேர்ந்த, சோவியத் மக்களில் பெரும்பான்மையானோர், பிற்காலத்தில் ஸ்டாலினை ஆதரித்தனர். அதற்கு என்ன காரணம் என்று கேட்டால், புலிகளை ஆதரிப்பதற்கு ஈழத் தமிழ் மக்கள் கூறிய அதே காரணத்தை தான், சோவியத் மக்களும் கூறுவார்கள். 

“புலிகள் செய்த கொலைகள், மனித உரிமை மீறல்களை விட, தமிழ் மக்களுக்கு ஸ்ரீலங்கா அரச படைகள் புரிந்த இனப் படுகொலைகளும், ஏற்படுத்திய அழிவுகளும், மனிதப் பேரவலங்களும் பல மடங்கு அதிகமானவை. அதே போன்று, ஸ்டாலின் புரிந்த கொலைகளை விட, மேலைத்தேய நாடுகளினதும், ஜெர்மன் நாஜிகளினதும் ஆக்கிரமிப்புப் படைகள் புரிந்த இனப் படுகொலைகளும், ஏற்படுத்திய அழிவுகளும், மனிதப் பேரவலங்களும்  பல மடங்கு அதிகமானவை.” 

இரண்டாம் உலகப்போர் காலத்தில், உலக நாடுகள் முழுவதிலும், சோவியத் யூனியன் மட்டும் தான், பெருமளவு உயிரிழப்புகளையும், பேரழிவுகளையும் சந்தித்திருந்தது. நாஜிப் படைகள் புரிந்த அழிவுகளும், அட்டூழியங்களும், ஒட்டு மொத்த சோவியத் மக்களையும், ஸ்டாலினின் பின்னால் அணிதிரள வைத்தன.

சோவியத் யூனியன், தமிழீழம் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இது தான் நிலைமை. ஒருவரின் பயங்கரவாதி, இன்னொருவரின் விடுதலைப் போராளி என்று சொல்வார்கள். அதே போன்று, ஒருவரின் சர்வாதிகாரி, இன்னொருவரின் நாயகன் ஆவார். ஸ்டாலின் செய்த படுகொலைகள் பற்றிய மிகைப் படுத்தப் பட்ட தகவல்கள், நாஜிகளினால் பரப்புரை செய்யப் பட்டன. பனிப்போர் காலத்தில், மேற்கத்திய நாடுகள் அதனை அப்படியே ஏற்றுக் கொண்டன.

"இருபதாம் நூற்றாண்டில் அதிகளவு மக்களை படுகொலை செய்தவராக," ஸ்டாலின் சரித்திரப் பாடப் புத்தகங்களில் குறிப்பிடப் படுகின்றார். பலருக்கு அந்த எண்ணிக்கை எவ்வளவு என்று தெரியாது. அது தொடர்பான புள்ளிவிபரம் எதுவும் கிடையாது. பத்து இலட்சம், இருபது இலட்சம், ஒரு கோடி…. என்று பலரும் தமது கற்பனைக்கு எட்டியவாறு, கணக்கிட்டு  சொல்லிக் கொண்டிருக்கின்றனர். ஸ்டாலினால் படுகொலை செய்யப் பட்டதாக கூறப்படும் மக்களின் எண்ணிக்கை, அன்றிருந்த சோவியத் யூனியனின் மொத்த சனத்தொகையின் எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கலாம்.  ஸ்டாலின் மீதான பல அவதூறுகள், ஜெர்மன் நாஜிகளின் பரப்புரைகளில் இருந்தே கிடைக்கப் பெற்றன. அவை பின்னர் வரலாறாகப் பதிவு செய்யப் பட்டன.

(தொடரும்)


இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:

1.ஸ்டாலினின் மறு பக்கம்: உலகில் மறைக்கப் பட்ட உண்மைகள்
2.நாட்டாண்மைகளை விரட்டிய நாட்டுப்புற ஏழைகள்
3.மேட்டுக்குடி அறிவுஜீவிகள் ஸ்டாலினை வெறுப்பது ஏன்?
4.சிறைக் கைதிகளும் படித்து, பதவி உயர்வு பெற உதவிய ஸ்டாலின்


 (பிற்குறிப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப் படும் தரவுகள் எதுவும், ஸ்டாலினை மகிமைப் படுத்தும் சோவியத் பிரச்சார நூல்களில் இருந்து எடுக்கப் பட்டதல்ல. ஸ்டாலினை விமர்சிக்கும், மேற்கத்திய நலன் சார்ந்த எழுத்தாளர்கள் எழுதிய நூல்களில் கிடைத்த தகவல்கள் ஆகும். பழைய சோவியத் ஆவணங்கள், அந்தக் காலத்தில் வாழ்ந்த மக்களின் அனுபவக் குறிப்புகள் ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டு எழுதி இருக்கிறார்கள்.) ____________________________________________________________________________________________

ஸ்டாலின் பற்றிய முன்னைய பதிவுகள்:
1.ஸ்டாலினைக் கண்டு அஞ்சுவோர் யார்?
2.ஸ்டாலினைக் கண்டு அஞ்சுவோர் யார்? (பகுதி - 2)
3.பணக்கார பெற்றோரை வெறுத்த புதிய தலைமுறை இளைஞர்கள்
4.ஸ்டாலின் கால வாழ்க்கை: "எல்லாமே புரட்சிக்காக!"
5.குலாக் முகாம்கள்: உண்மைகளும் புனைவுகளும்

1 comment:

  1. சரி. ஸ்டாலினை பயங்கரவாதி என ஏற்றுக்கொள்கிறீர்களா?

    ReplyDelete