Thursday, December 05, 2013

கம்யூனிசம் ஈழப் போராட்டத்திற்கு ஒரு பின்னடைவா?


தமிழ் தேசியத்தின் பேரில், முதலாளியத்தையும், ஏகாதிபத்தியத்தையும் ஆதரிக்கும் வலதுசாரிகளின் கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரங்களுக்கான பதில்கள்:
__________________________________________________________________________________________

கேள்வி: இப்போது எங்கே இருக்கிறான், உண்மையான கம்யூனிஸ்டு? ரஷ்யாவிலா, சீனாவிலா, கியூபாவிலா?


  • எதற்காக அவ்வளவு தூரம் போகிறார்கள்? அவர்களின் சுற்றாடலில் உழைக்கும் வர்க்க மக்கள், பாட்டாளிகள், தொழிலாளர்கள், ஏழைகள், அடித்தட்டு மக்கள் யாருமே இல்லையா? குறைந்த பட்சம், அவர்களது குடும்பத்தில் யாருமே பகிர்ந்துண்டு வாழ மாட்டார்களா?



கேள்வி: கம்யூனிசம் எமது ஈழப் போராட்டத்துக்கு பின்னடைவாகவே இருந்திருக்கிறது. புளொட், ஈபிஆர்எல்எப்., டெலோ எல்லாம், கம்யூனிச சித்தாந்தங்களை கொண்டவை. இவை எல்லாமே, தமிழ் சிறுபான்மை இனத்திற்கு எதிரான போராட்டத்தில், அரசுடன் இணைந்தே செயற் பட்டு இருக்கிறார்கள். ஈரோஸ் பாலகுமார் மட்டுமே ஒரு "உண்மையான கம்யூனிஸ்ட்"???


  • இது முற்றிலும் தவறான தகவல். ஆரம்பத்தில் எல்லா இயக்கங்களும் இடதுசாரி இயக்கங்களாக காட்டிக் கொண்டன. தமிழர் விடுதலைக் கூட்டணியின் வட்டுக்கோட்டை மகாநாட்டில், சோஷலிசத் தமிழீழம் வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. புலிகள் கூட சோஷலிசத் தமிழீழம் கேட்பதாக சொல்லித் தான் மக்களிடம் ஆதரவு திரட்டினார்கள். அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன, "மார்க்சியப் புலிகளை" அடக்குவதற்கு உதவுமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க, பிரிட்டன் ஸ்ரீலங்கா இராணுவத்திற்கு பயிற்சி வழங்கியது.

  • டெலோ கம்யூனிசம் பேசவில்லை. அது தீவிர தமிழ் தேசியம் பேசிய, இன்னொரு புலி இயக்கமாக இருந்தது. டெலோவுக்கும், புலிகளுக்கும் இடையில் கொள்கை முரண்பாடு எதுவும் இருக்கவில்லை. பிளாட், ஈபிஆர்எல்ப், ஈரோஸ் ஆகியன மார்க்சியத்தை தங்களது சித்தாந்தமாக ஏற்றுக் கொண்டிருந்தன. ஆனால், அடிப்படையில் அவை எல்லாம் தமிழ் தேசியவாத இயக்கங்கள் தான். அவர்களுக்கு தமிழ் தேசியம் முதன்மையானது, கம்யூனிசம் இரண்டாம் பட்சம் தான். மேலே குறிப்பிட்ட இயக்கங்கள், அரசுடன் சேர்ந்து கொண்டதற்கு காரணம், புலிகளுடன் ஏற்பட்ட மோதல். புலிகள் அவர்களை இயங்க விடாமல் தடை செய்த பின்னர் தான் அது நடந்தது. இந்திய இராணுவம் இருந்த காலத்தில் புலிகளும் அரசுடன் சேர்ந்து இயங்கினார்கள்.

  • ஈரோஸ் பாலகுமார், புலிகளுடன் சேர்ந்து விட்ட ஒரே ஒரு காரணத்திற்காக, அவரை உண்மையான கம்யூனிஸ்டு என்று போற்றுவது அபத்தமானது. புலிகளுடன் சேர்ந்த பின்னர், அவர் மார்க்சியம் பேசுவதை கைவிட்டு விட்டார். அதற்குப் பதிலாக தமிழ் தேசியம் பேசினார்.


கேள்வி : ரஷ்யா, சீனா, வியட்நாம், கியூபா போன்ற "கம்யூனிச நாடுகள்" தானே, ஈழப் போராட்டத்தை நசுக்குவதற்காக, ஸ்ரீலங்கா அரசுக்கு உதவி செய்தன?


  • ரஷ்யாவும், சீனாவும் கம்யூனிச நாடுகள் அல்ல. அவை கம்யூனிசத்தை கைவிட்டு, முதலாளித்துவ நாடுகளாகி இருபது வருடங்கள் கடந்து விட்டன. வியட்நாம், கியூபா கூட முதலாளித்துவ பொருளாதாரத்தை படிப்படியாக ஏற்றுக் கொண்ட நாடுகள் தான். பனிப்போரின் முடிவுக்குப் பின்னர், முதலாளித்துவ-கம்யூனிச கொள்கை முரண்பாடு காலாவதியாகி விட்டது. இன்று எல்லா நாடுகளும், தமது சொந்த நலன்களை மட்டுமே கவனித்துக் கொள்கின்றன. அதே நேரம், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இஸ்ரேல் ஆகிய முதலாளித்துவ நாடுகளும், போராட்டத்தை சிதைக்க, புலிகளை அழிக்க இலங்கைக்கு உதவிய நாடுகள் என்ற உண்மையை மூடி மறைக்கும் காரணம் என்ன?


கேள்வி: இனிமேலாவது ஒரு கம்யூனிச நாடோ அல்லது கட்சியோ மலர வாய்ப்பிருகின்றதா?


  •  இதனை இப்படியும் புரிந்து கொள்ளலாம். இனிமேலாவது தமிழீழமோ ஆல்லது தமிழீழத்திற்கான கட்சியோ மலர வாய்ப்பிருக்கின்றதா? பிரிட்டிஷ் காலனிய அரசு உருவாக்கிய ஸ்ரீலங்கா என்ற அதிகார அமைப்பை தகர்ப்பதற்கு, அல்லது நாட்டை பிரிப்பதற்கு பிரிட்டிஷ் (அல்லது அமெரிக்க) ஏகாதிபத்தியம் சம்மதிக்கப் போவதில்லை. புலிகளைப் போன்று, கடற்படை, வான்படை வைத்திருக்கும் சர்வ வல்லமை பொருந்திய இயக்கமாக இருந்தாலும், இறுதியில் ஏகாதிபத்தியம் அசுர பலத்தை பாவித்து ஒடுக்கவே செய்யும். (இறுதியில் அதுவே நடந்தது என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.) அதனால் தான், புலிகளின் போராட்டத்தை, சர்வதேச இடதுசாரிகள் ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டமாக புரிந்து கொண்டார்கள்.

  • புலிகள் ஒரு தேசியவாத இயக்கமாக, தீவிர வலதுசாரிகளாக இருக்கலாம். முதலாளித்துவத்தை ஏற்றுக் கொண்டவர்களாக இருக்கலாம். இருப்பினும், அதைக் கூட அழிக்க வேண்டுமென விரும்பியவர்கள், ஒரு கம்யூனிச நாட்டை பொறுத்துக் கொள்வார்களா? அதனால் தான், வெற்றி வாய்ப்பு அருகில் இருந்தும், நேபாளத்து மாவோயிஸ்டுகள் கடைசியில் ஏகாதிபத்தியத்துடன் சமரசமாக போகும் நிலைக்கு தள்ளப் பட்டார்கள்.

  • பனிப்போர் காலத்தில், உலகம் இரண்டு முகாம்களாக பிரிந்திருந்த காலத்தில், ஒரு புதிய கம்யூனிச நாடு உருவாவது இலகுவாக இருந்திருக்கலாம். ஆனால், அந்த நிலைமை இன்று இல்லை. அதற்காக, சோஷலிசத்திற்கான உழைக்கும் வர்க்க மக்கள் தமது போராட்டத்தை கைவிடக் கோருவதும், ஈழத் தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை கைவிட்டு விட்டு விட்டு, இலங்கை பேரினவாத அரசின் மேலாண்மையை ஏற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்துவதும் ஒன்று தான். வாய்ப்பு இருக்கிறதோ இல்லையோ, மக்கள் தங்கள் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருப்பார்கள்.



கேள்வி: அதிகாரத்தை நிராகரிக்கும் கம்யூனிசம் ஆட்சியை அதிகாரத்தை கைப்பற்றும் பொழுதே முதல் கோணல் ஏற்படுகின்றது அல்லவா?


  • அது யாருடைய அதிகாரம் என்பது தான் இங்கே எழும் கேள்வி. ஒரு கட்சியின் அதிகாரமா? அல்லது மக்களின் அதிகாரமா? வெறுமனே ஒரு கட்சி, அது தமிழீழக் கட்சியாக இருந்தாலும், கம்யூனிசக் கட்சியாக இருந்தாலும், அதிகாரத்தை கைப்பற்றினால், முன்பிருந்த அதே அரசு தான் தொடர்ந்தும் இருக்கும். பழைய அதிகாரிகளின் இடத்தில் புதிய அதிகாரிகள் அமர்ந்திருப்பார்கள். அது மட்டுமே வித்தியாசம்.

  • இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், சோஷலிஸ்ட் கட்சிகளின் இரண்டாம் அகிலத்தில் ஒரு முக்கிய பிளவு தோன்றியது. "ஒரு  கட்சி, அரசு  அதிகாரத்தை கைப்பற்றினால் போதும், மாற்றங்களை கொண்டு வந்து விடலாம்" என்று நம்பியவர்கள், சோஷலிசக் கட்சி என்ற பெயரில் பாராளுமன்ற தேர்தல்களில் பங்குபற்றினார்கள். அவர்கள் சமூக-ஜனநாயகக் கட்சிகள் என்ற பெயரில் இப்போதும் பல நாடுகளில் ஆட்சியில் அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் இன்று வரையில், எந்த நாட்டையும், சோஷலிச நாடாக மாற்றிக் காட்டி சாதனை படைக்கவில்லை. அன்றைய கொள்கை வேறுபாடு காரணமாக மூன்றாம் அகிலம் உருவானது. அதில் பங்கு கொண்ட கட்சிகள் தம்மை கம்யூனிஸ்ட் கட்சிகள் என்று அழைத்துக் கொண்டன.

  • உண்மையான கம்யூனிஸ்ட் கட்சிகளின் நோக்கம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதல்ல. மாறாக, மக்களின் கையில் ஆட்சி அதிகாரத்தை ஒப்படைப்பது ஆகும். மக்களை அதற்காக தயார் படுத்துவதே ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் கடமை ஆகும். மக்கள் தம்மைத் தாமே ஆளும் வகையில் ஒரு மக்கள் அரசு அமைப்பார்கள். ரஷ்யாவில் அது சோவியத் என்று அழைக்கப் பட்டது. ரஷ்யாவை தொடர்ந்து, ஜெர்மனி, ஹங்கேரி போன்ற பிற ஐரோப்பிய நாடுகளிலும் சோவியத் அரசுகள் ஸ்தாபிக்கப் பட்டன. அதற்குக் காரணம், அந்த நாடுகளில் நடந்த மக்கள் புரட்சி.

  • கம்யூனிஸ்ட் கட்சியானது மக்களுக்கான வழிகாட்டியாக முன்னணிப் பாத்திரம் மட்டுமே வகிக்கும். ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்வது மக்கள் மட்டும் தான். அதை நீங்கள் "பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்" என்று அழைக்க விரும்பா விட்டால், வேறு பெயர் சூட்டிக் கொள்ளலாம். எது எப்படி இருந்தாலும், மக்கள் மக்களை ஆள்வது தான் ஒரு கம்யூனிச நாடாகும்.

3 comments:

  1. தெளிவான பதிலுரைகள்.

    ReplyDelete
  2. தெளிவான பதில்கள்.

    ReplyDelete
  3. ஏற்கனவே உள்ள அரசு அமைப்பை நொறுக்கி ஒரு புது அமைப்பை உருவாக்க வேண்டும் என்றார் மார்க்ஸ். பழைய அதிகாரிகரிகளுக்கு பதில் புது அதிகாரிகள் அல்ல

    ReplyDelete