இன்று (19 October), மொரிஸ் பிஷப்பின் (Maurice Bishop) முப்பதாவது நினைவு தினம். யார் அவர்?
மக்களால் நேசிக்கப்பட்ட மாபெரும் தலைவர்களை உலகம் நினைவில் வைத்திருப்பது குறைவு. மக்கள் நலன் பேசி பதவிக்கு வந்த பின்னர், தன்னலம் கருதி பணத்தை பதுக்கும் அரசியல் தலைவர்கள் மத்தியில், மொரிஸ் பிஷப் வித்தியாசமானவர். முன்னாள் பிரிட்டிஷ் காலனி நாடான கிரனடாவில், மக்களின் தேவை உணர்ந்து செயலாற்றிய முதலாவதும், கடைசியுமான பிரதமர் அவர் தான். மூன்றாமுலக ஏழை நாட்டை சேர்ந்த மக்கள் அனைவருக்கும் இலவசக் கல்வி, இலவச மருத்துவம். சின்னஞ்சிறு தீவின் முக்கிய பொருளாதாரமான சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் கட்டுமானப் பணிகள்.... அடடா! இதெல்லாம் கம்யூனிசம் ஆச்சே!
உலகில் எங்காவது கம்யூனிசம் துளிர் விட்டால், அதனை நசுக்குவதை தனது நோக்கமாக கொண்ட அமெரிக்கா, ஒரு குட்டி நாடான கிரனடா மீது படையெடுத்தது. என்ன காரணம்? இதற்கெல்லாம் யாராவது காரணம் கேட்பார்களா? நமக்குத் தான் அது ஒரு படையெடுப்பு. அமெரிக்கர்களுக்கு இராணுவப் பயிற்சி. எத்தனை காலம் தான் கண்ணால் காணாத எதிரியுடன் போலியான மோதல் நடத்திக் கொண்டிருப்பது? நிஜமாகவே ஒரு நாட்டைப் பிடித்து, நிஜமான மனிதர்களைக் கொல்லும், நிஜமான இராணுவப் பயிற்சி.
கிரிக்கட் இரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமான, மேற்கிந்தியத் தீவுகளில் ஒன்று கிரனடா. வெனிசுவேலா நாட்டுக்கு மேலே, சுமார் நூறு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சிறு தீவு. முன்னூறு சதுர கிலோமீட்டரே அளவான குட்டி நாடு. பிரிட்டனின் காலனியாக இருந்ததால், இன்றைக்கும் அங்கே ஆங்கிலமே உத்தியோகபூர்வ மொழி. பெரும்பான்மையான மக்கள் ஆப்பிரிக்க கறுப்பின வம்சாவளியினர். பொதுநலவாய நாடுகளில் உறுப்புரிமை பெற்ற கிரனடா இன்றைக்கும், பிரிட்டிஷ் மகாராணியின் தலைமையை ஏற்றுக் கொண்ட, பாராளுமன்ற அமைப்பை கொண்டுள்ளது.
பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னர், பாராளுமன்றத்தில் மார்க்சிய எதிர்க் கட்சியாக வீற்றிருந்த New Jewel Movement (NJM), 1979 ஆம் ஆண்டு ஒரு சதிப்புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றியது. சோஷலிசப் புரட்சியில் நம்பிக்கை கொண்ட அந்தக் கட்சி, ஏற்கனவே ஒரு இரகசியமான மக்கள் இராணுவத்தை உருவாக்கி இருந்தது. சதிப்புரட்சியின் பின்னர், காலனிய கால சட்டங்கள் அனைத்தும் உடனடியாக இரத்து செய்யப் பட்டன. புதியதொரு அரசமைப்பு சட்டம் இயற்றப் பட்டது. "புரட்சிகர மக்கள் அரசு" ஸ்தாபிக்கப் பட்டது. அதன் பிரதமராக மொரிஸ் பிஷப் என்ற வழக்கறிஞர் தெரிவு செய்யப் பட்டார்.
பிரிட்டிஷ் காலனிய மேற்கிந்தியத் தீவுகளில் உருவான, முதலாவது சோஷலிச நாடு அதுவாகத் தானிருக்கும். NJM மார்க்சிய-லெனினிச சித்தாந்தத்தை வழிகாட்டியாக கொண்டியங்கியது. உலகின் பிற சோஷலிச நாடுகளுடன் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டது. குறிப்பாக, அயலில் இருந்த கியூபாவுடன் நெருங்கிய தொடர்பை பேணியது. கியூபாவின் உதவியுடன், மக்களின் அத்தியாவசியத் தேவைகளான கல்வி, மருத்துவம் என்பன இலவசமாக வழங்கப் பட்டன.
கரீபியன் கடல் பிரதேசத்தில் அமைந்துள்ள கிரனடா தீவு, உல்லாசப் பயணிகள் சொர்க்கமாக கருதுமளவிற்கு இயற்கை வளம் நிறைந்தது. அதற்கு அயலில் இருக்கும் தீவுகளுக்கு, வருடந்தோறும் உல்லாசப் பயணிகள் தமது விடுமுறையைக் கழிக்க சென்று வருகின்றனர். கிரனடாவுக்கும் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வர வேண்டுமென்றால், ஒரு சிறந்த சர்வதேச விமான நிலையம் அவசியம். அதற்கான திட்டம், பிரிட்டிஷ் காலனியாக இருந்த காலத்திலேயே தொடங்கப் பட்டது. ஆனால், மொரிஸ் பிஷப் அரசில் தான் அது நடைமுறைக்கு வந்தது.
சர்வதேச விமான நிலையம் கட்டுவதற்கு கியூபா உதவி செய்தது. கியூப பொறியியலாளர்களும், பணியாளர்களும் வந்திறங்கினார்கள். விமான நிலையம் கட்டப் பட்டுக் கொண்டிருந்த காலத்தில், அமெரிக்காவில் அன்றிருந்த ரீகன் அரசு, தனது கண்டனத்தை தெரிவித்து வந்தது. அப்போது பணிப்போர் காலகட்டம். அதனால், "சோவியத் யூனியனும், கியூபாவும் சேர்ந்து, கிரனடாவில் ஒரு இராணுவ விமானத் தளம் கட்டுவதாக" பிரச்சாரம் செய்தது. அமெரிக்காவில் இருந்து சென்ற உண்மை அறியும் குழுவினர், "அது இராணுவத் தளம் அல்ல. வணிக நோக்கத்திற்காக கட்டப்படும் பயணிகள் விமான நிலையம்." என்று அறிக்கை சமர்ப்பித்தனர். ஆனால், அந்த அறிக்கையை வாங்கி குப்பைத் தொட்டிக்குள் போட்ட ரீகன் அரசு, தொடர்ந்தும் கிரனடா பற்றிய கட்டுக்கதைகளை பரப்பி வந்தது.
இதற்கிடையே கிரனடாவில், ஆளும் கட்சிக்குள் பிளவு தோன்றியது. மொரிஸ் பிஷப்புடன் முரண்பட்ட, Bernard Coard தலைமையிலான குழுவொன்று அதிகாரத்தை கைப்பற்றியது. மொரிஸ் பிஷப் வீட்டுக் காவலில் வைக்கப் பட்டார். ஆனால், எதிர்ப்புரட்சியாளர்களின் எண்ணம் ஈடேறவில்லை. மக்களின் நன்மதிப்பை பெற்றிருந்த மொரிஸ் பிஷப் கைது செய்யப்பட்ட சம்பவம், கிரனடா முழுவதும் மக்கள் எழுச்சியை தூண்டி விட்டது. சிறையில் அடைக்கப் பட்டிருந்த மொரிஸ் பிஷப், மகத்தான மக்கள் போராட்டத்தினால் விடுதலை செய்யப் பட்டார். உண்மையாகவே மக்களின் நலன் கருதி கடமையாற்றும் தலைவர்களை, மக்கள் என்ன விலை கொடுத்தும் பாதுகாப்பார்கள் என்பதற்கு, மொரிஸ் பிஷப்பின் வரலாறு ஒரு உதாரணம்.
விதி வலியது என்பார்கள். நிலைமையை கட்டுப்படுத்தும் வழி தெரியாத எதிர்ப்புரட்சிக் கும்பல், மொரிஸ் பிஷப்பையும், அவரது ஆதரவாளர்கள் சிலரையும் சுட்டுக் கொன்றனர். 19 ஒக்டோபர் 1983, கிரனடா மக்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத துயர நாள். அன்று தான் மொரிஸ் பிஷப் படுகொலை செய்யப் பட்டார்.
மொரிஸ் பிஷப் படுகொலை செய்யப் பட்ட பின்னர், எதிர்ப்புரட்சி அரசு நீண்ட காலம் நிலைக்கவில்லை. அந்த சம்பவம் நடந்து சில நாடகளில், அமெரிக்க மரைன் படைகள் கிரனடா தீவை சுற்றி வளைத்தன.
25 October 1983, அமெரிக்கப் படையெடுப்பு ஆரம்பமாகியது. அப்போது நடந்த சண்டையில் சில நூறு பேர் கொல்லப் பட்டனர். அமெரிக்கப் படையினரின் இலக்கு, கியூப பொறியியலாளர்களாக இருந்தது. குறைந்தது ஐம்பது கியூபர்கள் ஆக்கிரமிப்பாளர்களினால் கொல்லப் பட்டனர். அமெரிக்கப் படையெடுப்பை எதிர்த்து, ஐ.நா.சபையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. ஆனாலும் என்ன நடந்தது? ஏழு வருடங்களுக்குப் பின்னர், குவைத் மீது படையெடுத்த ஈராக், ஐ,நா, வினால் கடுமையாக தண்டிக்கப் பட்டது. பொருளாதாரத் தடைகள் கொண்டு வரப் பட்டன.
அமெரிக்காவுக்கு எதிராக கிளம்பிய சர்வதேச கண்டனம் குறித்து அந்த நாடு எள்ளளவும் கவலைப் படவில்லை. "அமெரிக்காவைக் கண்டால் ஐ.நா.வும் நடுங்கும்," என்பது ஒரு புதுமொழி.
மொரிஸ் பிஷப் படுகொலைக்கு பழிவாங்க காத்திருந்த சிலர், அமெரிக்கப் படையெடுப்பை வரவேற்றதில் வியப்பில்லை. ஆனால், அமெரிக்கா படையெடுத்த நோக்கம் வேறு. "கிரனடாவில் கம்யூனிச அபாயத்தை தடுத்து நிறுத்தி விட்டதாக," அமெரிக்கா உத்தியோகபூர்வமாக அறிவித்தது. உண்மை அதுவல்ல. அது உலகிற்கு தெளிவாகத் தெரிந்திருந்தது. அமெரிக்காவின் கூட்டாளியான, பிரிட்டன் கூட படையெடுப்பை வன்மையாகக் கண்டித்ததில் இருந்தே, அதனைப் புரிந்து கொள்ளலாம்.
கிரனடா படையெடுப்புக்கு சில நாட்களுக்கு முன்னர், லெபனான் போரில் அமெரிக்கப் படைகள் கடுமையான அடி வாங்கி இருந்தன. வியட்நாம் போருக்குப் பின்னர், அது அமெரிக்காவுக்கு மிகப் பெரிய தலைகுனிவை ஏற்படுத்தி இருந்தது. அந்தத் தோல்வியை மறப்பதற்காக, தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ளும் வல்லமையற்ற குட்டி நாடான கிரனடா மீது படையெடுத்து, தனது "வீரத்தை" காட்டி இருக்கலாம். புதிதாக உற்பத்தி செய்த, நவீன அமெரிக்க ஆயுதங்களை பயன்படுத்தி பார்ப்பதற்கு ஒரு பயிற்சிக் களம் தேவைப் பட்டிருக்கலாம்.
இல்லாவிட்டால், அப்படி எந்தக் காரணமும் தேவையில்லை. அமெரிக்கப் படையினர், இதையும் "ஒரு வீடியோ கேம் விளையாட்டு" என்று கருதி இருக்கலாம்.
எது எப்படி இருப்பினும், எந்த விமான நிலையக் கட்டுமானப் பணிகளை காரணமாகக் காட்டி, அமெரிக்கா படையெடுப்பை நடத்தியதோ, அந்த விமான நிலையம் தற்போது இயங்கிக் கொண்டிருக்கிறது. அந்த சர்வதேச விமான நிலையத்திற்கு, 2009 ம் ஆண்டு, கிரனடா கம்யூனிஸ்ட் தலைவர் மொரிஸ் பிஷப்பின் பெயர் சூட்டப் பட்டது. இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் கம்யூனிசம் அழிந்து விட்டதாக, பனிப்போரில் வென்றவர்கள் வரலாற்றை திருத்தி எழுதினார்கள். கிரனடா தீவைப் பொறுத்த வரையில், கம்யூனிசம் இன்றைக்கும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
The Grenada Revolution Documentary - Part 1 from gov.gd on Vimeo.
The Grenada Revolution Documentary - Part 2 from gov.gd on Vimeo.
They destroyed Latin American people's. Asian people.now separated ussr.now Ukraine.
ReplyDelete