Thursday, September 19, 2013

மாகாண சபைத் தேர்தல் : வடக்கே வீசும் புயல்

வட மாகாண சபைக்கான தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்து வருகின்றன. ஆங்காங்கே நடைபெறும் பிரச்சாரக் கூட்டங்களில், வழமை போல தமிழ் தேசியம் முக்கியமான கருப் பொருளாக மாறியுள்ளது. ஒரு வேட்பாளர், தமிழர்கள் எல்லோரும் ஒற்றுமையுடன் ஒன்று சேர வேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறார். இன்னொரு வேட்பாளர் தமிழ் தேசியக் கோட்பாடு புலிகளால் உருவாக்கப் பட்டது என்று வரலாற்றைப் புரட்டிப் போடுகிறார். இவர்கள் யார் என்று சொன்னால் ஆச்சரியப் படுவீர்கள். மகிந்த ராஜபக்சவின் பொதுசன ஐக்கிய முன்னணியில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்கள் தான் இது போன்ற பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். 

"மகிந்த அரசின் உலகமயமாக்கலின் கீழ் தமிழராக ஒன்று சேருமாறு" சொல்வதில் இருந்தே இவர்கள் எங்கே செல்கின்றனர் என்று புரிந்து கொள்ள முடிகின்றது. இன்றைய ஈழத்து அரசியலில், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும், பொதுசன ஐக்கிய முன்னணிக்கும் இடையிலான கொள்கை வேறுபாடு, வர வர சுருங்கிக் கொண்டிருக்கிறது. அதனால் வேட்பாளர்கள் கட்சி மாறுவதும் அதிகரிக்கின்றது. உலகமயமாக்கல் தீவிரமடையும் காலத்தில், கட்சிகளும், அரசியல்வாதிகளும் வர்க்க அடிப்படையில் ஒன்று சேர்ந்து விடுவார்கள். இங்கே எதிர்க்கட்சி எதுவும் கிடையாது. எல்லோராலும் ஏமாற்றப் பட்ட மக்கள் தான், நிறுவனமயப் படுத்தப் படாத எதிர்க்கட்சியினராக உள்ளனர். அவர்கள் யாரும் தேர்தல்களில் போட்டியிடுவதில்லை. ஓட்டுப் போட்டு விட்டு ஒதுங்கி விடுகின்றனர்.

*******

வட மாகாண சபைத் தேர்தலுக்கான மாதிரி வாக்குச் சீட்டு. (தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டங்களில் விநியோகிக்கப் பட்டது.) தேர்தலில் வாக்களிப்பது பற்றிய தெளிவின்மை மக்களிடையே நிலவுகின்றது. வாக்குச் சீட்டில், முதலில் கட்சிக்கு நேரே ஒரு புள்ளடியும், பின்னர் தமக்கு விரும்பிய வேட்பாளர்கள் இருவருக்கு புள்ளடி போடுமாறு, கூட்டமைப்பினரின் தேர்தல் பிரச்சாரங்களில் கூறி வருகின்றனர். 

இந்த விருப்பு வாக்குகளில், "முதலமைச்சர்" விக்னேஸ்வரனுக்கு ஒன்றும், பின்னர் அந்தப் பிரதேச வேட்பாளருக்கு ஒன்றும் போடுமாறு கூறுகின்றனர். ஆனால், ஒருவர் அதிக பட்சம் ஒரு விருப்பு வாக்கு மட்டுமே போடலாம் என்று இன்னொரு தகவல் தெரிவிக்கின்றது. இந்தக் குழப்பத்தால், நடைபெறவிருக்கும் தேர்தலில் பெருமளவு வாக்குகள் செல்லுபடியாகாமல் போக வாய்ப்புண்டு. 

இந்தத் தேர்தலில் பல்வேறு கட்சிகளும், சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. வழமை போல தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெல்லுமென்று எதிர்பார்க்கப் படுகின்றது. ஆயினும், வாக்காளர்கள் தமக்கு அறுதிப் பெரும்பான்மையை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று, கூட்டமைப்பினரின் பிரச்சாரக் கூட்டங்களில் கேட்டுக் கொள்கின்றனர். அப்போது தான் "சர்வதேச சமூகம் கவனமெடுக்கும்" என்று அதற்கு காரணம் கூறுகின்றனர். புலிகள் ஆயுதப்போராட்டம் நடத்திய காலத்தில் கூட, இந்தளவு சர்வதேசக் கவனம் குவிந்திருக்கவில்லை என்று கூறுகின்றனர். இலங்கைக்கு எதிரான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக தீர்மானங்களை அதற்கு ஆதாரமாக காட்டுகின்றனர். 

சர்வதேச கவனத்தை மென்மேலும் குவிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதியரசர் விக்னேஸ்வரனை முதலமைச்சராக நியமித்துள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் சுமேந்திரன் கூட்டங்களில் தெரிவித்து வருகின்றார். ஆகவே, தேர்தலில் 30 ஆசனங்களை வென்று, அறுதிப் பெரும்பான்மை பெற்றால், சர்வதேச சமூகம் (ஈழத்) தமிழர்கள் பக்கம் பெருமளவு கவனத்தைக் குவிக்கும் என்று நம்புகின்றனர். இந்தப் பிரச்சாரங்கள், எழுபதுகளில் தமிழர் விடுதலைக் கூட்டணி நடத்திய பிரச்சாரங்களை பெரிதும் ஒத்துள்ளது. 

"சர்வதேச சமூகம்" என்று குறிப்பிடப்படும் மேற்கத்திய நாடுகள், தேர்தல்கள் மூலம் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்கலாம் என்று கூறி வருகின்றது. இலங்கை அரசும் சமர்த்துப் பிள்ளை போன்று, தேர்தல்களை நடத்தி விட்டு மேற்கத்திய நாடுகளிடம் நல்ல பெயர் வாங்கிக் கொள்கின்றது. வட மாகாணத் தேர்தலில் கூட்டமைப்பு அறுதிப் பெரும்பான்மை பெற்றாலும், இறுதியில் இலங்கை அரசுக்கு தான் ஆதாயம். அதனால் தமிழ் மக்கள் நலன் சார்ந்து சிந்திக்கும் கட்சிகள், இந்தத் தேர்தல்களை பகிஷ்கரிப்பதே ஒரே தெரிவு. இல்லாவிட்டால், இலங்கை அரசும், அதன் எஜமானான சர்வதேச சமூகமும் ஆட்டுவிக்கும் பொம்மைகளாக மாறி விடுவார்கள்.
******

வட மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்றால், "மாவீரர் தினம் நினைவுகூரலுக்கு அனுமதி வாங்கித் தருவதாக" கிளிநொச்சியில் பொதுசன ஐக்கிய முன்னணி சார்பாக போட்டியிடும் கீதாஞ்சலி என்ற வேட்பாளர் தெரிவித்துள்ளார். இப்போதெல்லாம் இலங்கை அரச ஆதரவாளர்கள் பலர் புலி ஆதரவு வேஷம் போட்டு வருகின்றனர். இணையத்திலும், முகநூலிலும் அப்படியான பலர் உலாவுகின்றனர். வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் பொதுசன ஐக்கிய முன்னை வேட்பாளர்கள், மேடைகளில் தமிழ் தேசியம், தமிழ் இன ஒற்றுமை பற்றி பேசி வருகின்றனர். 

கீதாஞ்சலியின் பேச்சுக்கு பொதுக்கூட்டம் ஒன்றில் பதிலளித்த ததேகூ பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன், "மாவீரர் தினத்தை மக்கள் தமது வீடுகளில் நினைவுகூருகின்றனர். உங்களால் முடிந்தால் மாவீரர் துயிலும் இல்லத்தை மீண்டும் கட்டித் தாருங்கள்." என்று சவால் விடுத்தார். அதற்கு கூட்டத்தில் பலத்த கரகோஷம் எழுந்தது. யாழ் குடாநாட்டில் முன்னர் ஒரு காலத்தில் புலிகளின் ஆட்சி நடந்தது என்பதற்கான தடயங்கள் எல்லாம் அழிக்கப் பட்டு விட்டன. ஆயினும் ஆயுதமேந்தாத தமிழ் தேசியத்தால் தனக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பதால், அதை ஆதரிப்பதில் தவறில்லை என்று ஸ்ரீலங்கா அரசு நினைக்கின்றது.

*******

2009 ம் ஆண்டுக்குப் பின்னர், ஈழத்தில் புதியதொரு தமிழ் தேசிய சக்தியை உருவாக்க இந்தியா முயற்சித்து, அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளது. "முன்னாள் புலி ஆதரவாளர்களில் ஒரு பிரிவும், முன்னாள் புலி எதிப்பாளர்களில் ஒரு பிரிவும்" கூட்டணி அமைத்துள்ளமை, பலருக்கு நம்ப முடியாமல் இருக்கலாம். ஆனால் அந்த அதிசயம் நடந்து பல வருடங்கள் கடந்து விட்டன. இன்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூட, இந்திய அழுத்தத்தினால் மறு சீரமைக்கப் பட்ட புதிய கூட்டணி தான்.

****** 

வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதான வேட்பாளரான விக்னேஸ்வரன், தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் மேட்டுக்குடி பெருமை பற்றி பேசி வருகின்றார். "யாழ்ப்பாணத் தமிழர்கள் உலகில் சிறந்த கல்விமான்கள். (பிரிட்டிஷ் காலனிய காலத்தில்) முதலாவது பாடசாலைகள் யாழ்ப்பாணத்தில் அமைக்கப் பட்டன. உயர்கல்வி கற்ற தமிழர்கள் வெளிநாடு சென்றும் இனத்திற்கு பெருமை தேடித் தந்தார்கள்." இது போன்று பேசி வருகின்றார். மாகாண சபைத் தேர்தல் வெற்றியானது, "கல்வியில் சிறந்த யாழ்ப்பாணத் தமிழர்கள்" என்ற பழம்பெருமையை மீட்டுத் தரும் என்பது அவரது வாதம். 

ஆங்கிலேயர்கள் தமது காலனிய நிர்வாகத்தை நடத்துவதற்கு விசுவாசமான தமிழ் மேட்டுக்குடியை உருவாக்கினார்கள். விக்னேஸ்வரனும் அவர்களில் ஒருவர் தான். விக்னேஸ்வரனின் உரையை கேட்பவர்கள், (யாழ்ப்பாணத்) தமிழர்கள் எல்லோரும் மெத்தப் படித்த மத்தியதர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்றே நினைத்துக் கொள்வார்கள். வறுமை காரணமாக, ஐந்தாம் வகுப்பை கூட பூர்த்தி செய்யாத, யாழ்ப்பாணத் தமிழ் உழைக்கும் வர்க்கத்தினருக்கு சொல்வதற்கு அவரிடம் எதுவும் இல்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் அனைவரும் தமது பெயர்களுக்கு பின்னால் பட்டங்களை அடுக்கி வைத்திருக்கிறார்கள். 

முன்னர் ஒரு காலத்தில், தமிழர் விடுதலைக் கூட்டணி "சட்டத்தரணிகளின் கட்சி" என்று அழைக்கப் பட்டது. இன்றைய தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் அது பொருந்தும் போலிருக்கிறது. ஈழத் தமிழர்கள் மீண்டும் எழுபதுகளுக்கு திரும்பிச் சென்றுள்ளதை தற்போது நடக்கும் தேர்தல் பரப்புரைகள் எடுத்துக் காட்டுகின்றன. கூட்டணியின் மேட்டுக்குடி ஆதிக்கத்தில் இருந்து தமிழ் தேசியத்தை மீட்டெடுத்த பெருமை, புலிகளையும், பிற ஆயுதமேந்திய ஈழ விடுதலை இயக்கங்களையும் சாரும். இன்று அவை முற்றாக அழித்தொழிக்கப் பட்ட நிலையில், மேட்டுக்குடி அரசியல் மீண்டும் கோலோச்சுகின்றது. 

****** 

வட மாகாண சபைத் தேர்தலில், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும் இடையில் மட்டுமே போட்டி நடைபெறுவதாக பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், மத்திய அரசில் ஆளும் கட்சியான ஐ.ம.சு.கூட்டமைப்பிற்குள்ளும் கடுமையான போட்டி நடக்கின்றது. 

உண்மையில் மகிந்த தலைமையிலான சுதந்திரக் கட்சியின் தற்போதைய நோக்கம், த.தே.கூ. வின் வாக்கு வங்கியை சிதைப்பதல்ல. (அது ஒரு நீண்ட காலத்திட்டம்) மாறாக, ஈ.பி.டி.பி. யின் ஆதரவுத் தளத்தை சிதைப்பதே நிகழ்கால திட்டம் என்று, யாழ்ப்பாண வாக்காளர்கள் சிலர் கருத்துத் தெரிவித்தனர். ஏனெனில், அரசுடன் சேர்ந்தியங்கினாலும், ஈபிடிபி ஒரு தமிழ் தேசிய பாரம்பரியத்தில் வந்த கட்சி. ஈழப்போரின் முடிவுக்குப் பின்னர் நடந்த தேர்தல்களில், ஈபிடிபி தனியாக வீணைச் சின்னத்தில் போட்டியிட முடியாதவாறு தடுக்கப் பட்டது. 

தற்போது, ஈபிடிபி க்கு போட்டியாக சுதந்திரக் கட்சியின் தமிழ் வேட்பாளர்கள், நேரடியாக களத்தில் இறக்கி விடப் பட்டுள்ளனர். அங்கஜன், சர்வா போன்றவர்கள் அவர்களில் முக்கியமானவர்கள். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினுள் அங்கஜன் அணி, சர்வா அணி என்ற பிரிவுகள் ஏற்பட்டு விட்டன. அவை ஒன்றோடொன்று மோதிக் கொள்ளும் நிலையில் உள்ளன. 

அதன் உச்சகட்டமாக சாவகச்சேரியில் அங்கஜனும், சர்வாவும் துப்பாக்கி எடுத்து ஒருவரை ஒருவர் சுட்டுக் கொண்டார்கள். தென்மராட்சியை சேர்ந்த சர்வா, தனது தொகுதியில் அங்கஜனின் ஆட்கள் பிரச்சாரம் செய்வதை விரும்பவில்லை என்று தெரிகின்றது. துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்குப் பின்னர், சர்வா அணியினரின் பிரச்சார வேலைகளுக்கு இராணுவத்தினர் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். சொந்தக் கட்சியை சேர்ந்தவர்களிடம் இருந்து ஆபத்து வரும் என்று, அதே கட்சியை சேர்ந்தவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் வேடிக்கையை வேறெங்கும் காண முடியாது. 

***** 

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு பிரிவினைவாத முத்திரையும், முதலமைச்சர் வேட்பாளர் விக்னேஸ்வரனுக்கு புலி முத்திரையும் குத்தும் போக்கு, தென்னிலங்கையில் தீவிரமாகி வருகின்றது. ஜனாதிபதி மகிந்தவும், அரசு சார்பு ஊடகங்களும் அது தொடர்பான பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம், புலம்பெயர்ந்த தமிழர்களின் ஆதரவை எதிர்பார்த்து தயாரிக்கப் பட்டிருக்கலாம். ஆனால், சமஷ்டி என்ற வார்த்தைக்காக அதனை பிரிவினைவாதம் என்றும், இனவாதம் என்றும் விமர்சிப்பது அபத்தமானது. இந்தப் போக்கு தமிழர்களை மட்டுமல்லாது, சிங்கள முற்போக்குச் சக்திகளையும் கடுமையாக எரிச்சலூட்டியுள்ளது. 

அமைச்சர் நிமால் ஸ்ரீ பாத சில்வா மட்டுமே, உணர்ச்சி வசப்படாமல் பக்குவான முறையில் கருத்துக் கூறியுள்ளார். "எல்லா அரசியல் கட்சிகளையும் போன்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதிக ஓட்டுக்களைப் பெறுவதற்காக, பிரச்சார நோக்கில் தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரித்துள்ளது. தேர்தல் பிரச்சாரம் வேறு, உறுதிமொழிகளை நடைமுறைப் படுத்துவது வேறு. பிரிவினைவாதம் குறித்து யாரும் அஞ்சத் தேவையில்லை. அதனை அரசு தகுந்த முறையில் எதிர்கொள்ளும்..." என்று தெரிவித்துள்ளார். 

இருப்பினும், தென்னிலங்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான பிரச்சாரம் இன்னமும் குறையவில்லை. கூட்டமைப்பினரை "இனவாதிகள்" என்று திட்டிக் கொண்டிருந்த அரசு சார்பு ஊடகங்கள், அண்மையில் "சாதிவாதிகள்" என்றும் கூறத் தொடங்கியுள்ளன. முல்லைத்தீவில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தாழ்த்தப்பட்ட சாதிகளை பிரதிநிதித்துவப் படுத்தும் எழுவர், சுதந்திரக் கட்சியில் சேர்ந்துள்ளனர். வட மாகாணத்தில் தாழ்த்தப்பட்ட சாதியினர் நாற்பது சதவீதத்திற்கும் அதிகமாக இருந்த போதிலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் இரண்டு சதவீத வேட்பாளர்களை கூட ஒதுக்கவில்லை என்று குற்றஞ் சாட்டியுள்ளனர்.

****** 

"பிரபாகரன் மாவீரன் தான். மஹிந்தவுக்கும் அது தெரியும்." என்று வல்வெட்டித்துறையில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் விக்னேஸ்வரன் பேசியிருந்தார். புலிகளை பயங்கரவாதிகள் அல்ல என்று, முன்பு பதவியில் இருந்த காலத்தில் பல பயங்கரவாத சந்தேகநபர்கள் தண்டிக்கக் காரணமாக இருந்த முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வல்வெட்டித்துறை கூட்டத்தில், விக்னேஸ்வரன் புலிகளை புகழும் உரையானது, முழுமையாக "உதயன்" பத்திரிகையில் முன்பக்கத்தில் பிரசுரமானது. தமிழ் தேசியவாதிகள் மத்தியில் பிரபலமான உதயன், யாழ் குடாநாட்டில் அதிகளவில் விற்பனையாகும் நாளேடு ஆகும். 

சில நாட்களுக்கு பின்னர், தென்மராட்சி, கொடிகாமம் பகுதியில் பிரச்சார வேளைகளில் ஈடுபட்டிருந்த கூட்டமைப்பு ஆதரவாளர்கள், "வீடு" என்ற பெயரில் கட்சியின் துண்டுப்பிரசுரம் ஒன்றை விநியோகித்தார்கள். எட்டுப் பக்கங்களில் ஒரு பத்திரிகை போன்று வடிவமைக்கப்பட்ட துண்டுப் பிரசுரத்தின் உள்ளே, கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் முழுமையாக அச்சிடப் பட்டிருந்தது. ஆனால், முன்பக்கத்தில் "பிரபாகரன் மாவீரன் தான், மகிந்தவுக்கும் அது தெரியும்" என்ற தலைப்பில் விக்னேஸ்வரன் ஆற்றிய முழுமையான உரை பிரசுரமாகி இருந்தது. முன்பக்கத்தில், பிரபாகரனின் மிகப் பெரிய படம் ஒன்றும் அச்சாகி இருந்தது. 

தேர்தல் பிரச்சாரம் நடத்தும் சாட்டில், புலிகளுக்கு ஆதரவான துண்டுப்பிரசுரம் விநியோகிக்கலாம் என்ற எதிர்பார்ப்பில், கண்ணில் விளக்கெண்ணை இட்டுக் கொண்டு திரிந்த இராணுவத்தினர் கைகளுக்கு கூட்டமைப்பின் பத்திரிகை சென்றது. உடனே கொடிகாமம் பகுதியை சுற்றிவளைத்த இராணுவத்தினர், பிரச்சார வேலையில் ஈடுபட்ட கூட்டமைப்பு ஆதரவாளர்கள் நால்வரை கைது செய்து தடுத்து வைத்தனர். அவர்களிடம் இருந்த துண்டுப்பிரசுரங்கள் பறிமுதல் செய்யப் பட்டன. 

தேர்தல் விதிமுறைகளை மீறும் இராணுவ அத்துமீறல் கண்டிக்கத் தக்கது. இந்த செய்தியை வெளியிட்ட தமிழ் ஊடகங்கள், அந்த துண்டுப்பிரசுரத்தில் என்ன எழுதியிருந்தது என்ற தகவலை மட்டும் மறைத்து விட்டன. இதிலே முக்கியமாக கவனிக்கப் பட வேண்டியதென்னவெனில், கூட்டமைப்பு ஆதரவாளர்கள் விநியோகித்த துண்டுப்பிரசுரத்தில் இருந்த "விக்னேஸ்வரனின் வல்வெட்டித்துறை உரை" மட்டுமே கைதுக்கு காரணமாக அமைந்துள்ளது. அதைத் தவிர வேறெந்த "புலி ஆதரவு வாசகமும்" அந்த பிரசுரத்தில் இருக்கவில்லை.

"விக்னேஸ்வரனின் புலி ஆதரவு உரையை, துண்டுப்பிரசுரமாக அச்சிட்டு விநியோகித்தது" மட்டுமே கூட்டமைப்பு ஆதரவாளர்கள் செய்த தவறு. அப்படியானால், ஏற்கனவே அதே உரையை உதயன் பத்திரிகையின் முன்பக்கத்தில் வெளியிட்ட நிறுவனத்தின் மேல் எந்தத் தவறும் இல்லையா? வல்வெட்டித்துறையில் "புலி ஆதரவு உரையாற்றிய" விக்னேஸ்வரன் மேல் எந்தத் தவறும் இல்லையா? 

சாதாரண கூட்டமைப்பு ஆதரவாளர்களை கைது செய்த இராணுவம், கூட்டமைப்பு தலைவர்களையும், உதயன் பத்திரிகை முதலாளிகள் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, இனியும் எடுக்கப் போவதுமில்லை. எக்காரணம் கொண்டும் இராணுவம் தங்களை கைது செய்யாது என்பது, விக்னேஸ்வரனுக்கும், உதயன் முதலாளிக்கும் தெரியும். ஏனெனில், அது தான் இலங்கையின் வர்க்க நீதி.

******* 

இது தொடர்பான முன்னைய பதிவுகள்:

வட மாகாண சபைத் தேர்தல் - ஒரு முன்னோட்டம்

No comments:

Post a Comment