Monday, July 01, 2013

ரயிலைக் கடத்தி பணயம் வைத்த தனி நாட்டுக் கோரிக்கையாளர்கள்


[மொலுக்கு இனப் பிரச்சினை : டச்சு காலனிய துரோகத்தின் கதை] 

 (ஐந்தாம் பாகம்)


சிறு வயதிலேயே புலம்பெயர்ந்த, அல்லது நெதர்லாந்து மண்ணில் பிறந்து வளர்ந்த மொலுக்கு இளையோர், அவர்களது தாயக கலாச்சாரத்துடன் வளர்க்கப் பட்டனர். குறைந்தது, ஐந்து வருடங்களாவது, டச்சுக் கலாச்சாரத்துடன் எந்த வித தொடர்புமற்று வளர்ந்தார்கள். அதற்குப் பின்னர், வழமையான நெதர்லாந்து பாடசாலைகளில் சேர்த்துக் கொள்ளப் பட்டாலும், வெள்ளையின டச்சு மாணவர்களுடன் பழக முடியாமல் தாழ்வுச் சிக்கலுக்குள் தள்ளப் பட்டனர்.  இழந்த தாயகம் குறித்த ஏக்கம், புலம்பெயர்ந்த மண்ணில் செலவுக்காக வேலை செய்ய வேண்டிய நிலைமை என்பன, பிற மாணவர்களிடம் இருந்து அந்நியப் பட வைத்தது.

மொலுக்கர்களால் தேசியத் தலைவராக கருதப்பட்ட கிரிஸ் சௌமொகில் கொல்லப் பட்ட பின்னர், தலைமறைவாக இருந்த அவரது மனைவியும், பிள்ளையும் நெதர்லாந்து வந்து சேர்ந்தனர். அவரை வரவேற்க, ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் குழுமிய ஆயிரக் கணக்கான மொலுக்கர்கள் மனதில்,  விரக்தியும், வேதனையும் குடி கொண்டிருந்தன. "தோற்றுப்போனவர்கள்" என்ற ஆதங்கமும், இந்தோனேசிய ஆட்சியாளர் சுகார்ட்டோ போர்க்குற்றங்களுக்காக தண்டிக்கப் பட வேண்டும் என்ற பழிவாங்கும் உணர்வும் மேலோங்கிக் காணப் பட்டது. அந்த சூடு தணிவதற்குள், ஹேக்கில் இருந்த இந்தோனேசியா தூதுவராலயத்திற்கு பெட்ரோல் குண்டுகள் வீசப் பட்டன.

நெதர்லாந்து அரசு, இந்தோனேசியாவுடன் நல்லுறவைப் பேண விரும்பியது. அதற்கு சில காரணங்கள் இருந்தன. பிரிட்டன் இலங்கையின் ஆட்சியை சிங்களப் பெரும்பான்மையினரிடம் ஒப்படைத்தது போல, நெதர்லாந்து இந்தோனேசிய பெரும்பான்மை இனத்தை நம்பி ஒப்படைத்திருந்தது. காலனிய காலகட்டத்தில், இலங்கையில் சிங்கள தேசியவாதம் வளர்ந்தது போல, டச்சுக் காலனிய ஆட்சிக்கு எதிராக, இந்தோனேசிய தேசியவாதம் வளர்ந்திருந்தது.

இந்த பெரும்பான்மையின தேசியவாதம், மிகத் தீவிரமான காலனிய எதிர்ப்புச் சக்தியாக வளர்ந்து வந்தது. ஆகவே, இந்தோனேசிய தேசியவாதிகளுடன் சமரசம் செய்து கொள்வதன் மூலம், தனது காலனிய கடந்த கால பாவங்களுக்கு, பிராயச்சித்தம் தேடிக் கொள்ளலாம் என்று நெதர்லாந்து எண்ணியது. இதனால், எழுபதுகளில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த சுகார்ட்டோ ஒரு சர்வாதிகாரி என்று தெரிந்து கொண்டும், நெதர்லாந்துக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுக்கப் பட்டது.

சுகார்ட்டோ நெதர்லாந்துக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவிருக்கும் விடயம், மொலுக்கர்கள் மனதில் தீயை மூட்டியது. நெதர்லாந்து அரசு, மொலுக்கு இன மக்களின் அபிலாஷைகளை முற்று முழுதாக கை கழுவி விட்டதாக உணர்ந்தார்கள். இதனால், இந்தோனேசிய பேரினவாத அரசுக்கும், கூடவே நெதர்லாந்து காலனிய அரசுக்கும் பாடம் புகட்ட வேண்டும் என எண்ணினார்கள். 

சுமார் 30 மொலுக்கு இளைஞர்கள், ஆயுதங்கள் சகிதம், "வாசனார்"(Wassennaar) என்னுமிடத்தில் உள்ள இந்தோனேசிய தூதுவரின் வீட்டை முற்றுகையிட்டனர். வரப்போகும் ஆபத்தை உணர்ந்து, தூதுவர் தப்பியோடி விட்டாலும், எஞ்சியோரை பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர். அந்த சம்பவம் ஊடகங்களின் கவனத்தைக் கவர்ந்தது. அதைப் பயன்படுத்தி, மொலுக்கு இனப் பிரச்சினை பற்றி சர்வதேசத்திற்கு  அறிவித்து விட்டு, மதியத்துடன் பணய நாடகத்தை முடித்துக் கொண்டு சரணடைந்தனர்.

பிரிட்டனில் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் ராஜபக்சவின் வருகைக்கு எதிர்ப்புக் காட்டிய நிகழ்வைப் போல, மேற்குறிப்பிட்ட மொலுக்கர்களின் அரசியல் நடவடிக்கைகளும், இந்தோனேசியாவின் உள்வீட்டு பிரச்சினையாக நோக்கப் பட்டன. இந்த நடவடிக்கைகளின் போது, வன்முறையில் ஈடுபட்ட மொலுக்கர்கள் மட்டுமே தண்டிக்கப் பட்டார்கள். மற்றவர்கள் விடுதலை செய்யப் பட்டனர். அப்போதும், நெதர்லாந்து அரசு மொலுக்கர்களின் பிரச்சினையை கவனத்தில் எடுக்கவில்லை. அதனால் ஏற்படப் போகும் பாரதூரமான விளைவுகளையும் எதிர்பார்க்கவில்லை.

1975 ம் ஆண்டு, டிசம்பர் மாதம், வடக்கே உள்ள குரொனிங்கன் நகரில் இருந்து ஆம்ஸ்டர்டாம் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் வண்டி, "வைஸ்டர்" (Wijster) எனுமிடத்தில் திடீரென நின்றது. யாரோ அபாயச் சங்கிலியை பிடித்திழுத்ததால், ரயில் வண்டி வெட்ட வெளி ஒன்றில் வந்து நின்றது. திடீரென தோன்றிய, முகத்தை மூடிய, இயந்திரத் துப்பாக்கிகள் ஏந்திய இளைஞர்கள், பயணிகளை மிரட்டி உட்கார வைத்தனர்.

தாங்கள், "மொலுக்கு குடியரசுக்காக போராடும் போராளிகள்" என்றும், "இந்த ரயில் வண்டி எம்மால்  கடத்தப் பட்டுள்ளது" என்றும் அறிவித்தனர். முதலில் பயணிகள் தரம் பிரிக்கப் பட்டனர். டச்சுக்காரர்கள், இந்தோனேசியர்கள் தவிர்ந்த பிற நாடுகளை சேர்ந்த பயணிகள், வீடு செல்ல அனுமதிக்கப் பட்டனர். அரசுக்கு கோரிக்கை விடுக்கும் கடிதத்தையும் அவர்களிடம் கொடுத்தனுப்பினார்கள்.

உலகிலேயே முதல் தடவையாக ஒரு ரயில் வண்டி கடத்தப் பட்டு பணயம் வைக்கப்பட்ட சம்பவம் அதுவாகும். இதற்கு முன்னர், பாலஸ்தீன போராளிகள் விமானங்களை கடத்தி இருக்கிறார்கள். ஆனால், யாரும் ரயில் வண்டியை கடத்தவில்லை. எழுபதுகளில் நடந்த விமானக் கடத்தல்களை கேள்விப்பட்ட மொலுக்கு இளைஞர்கள் தாமும் அது போன்று செய்ய எண்ணி இருக்கலாம். மேலும், நெதர்லாந்திலேயே ஏற்கனவே ஒரு கடத்தல் நாடகம் அரங்கேறி இருந்தது. ஹேக் நகரில் உள்ள பிரெஞ்சு தூதரகத்தை கைப்பற்றிய ஜப்பானிய இடதுசாரி தீவிரவாதிகள், தூதுவரை பணயக் கைதியாக பிடித்து வைத்திருந்ததுடன், தமது கோரிக்கைகளில் சிலவற்றை நிறைவேற்றிக் கொண்டு, வெளிநாடொன்றுக்கு தப்பிச் சென்று விட்டனர்.

"நெதர்லாந்து ஜெயிலில் இருக்கும் சக மொலுக்கு போராளிகளை விடுதலை செய்ய வேண்டும்.... மொலுக்கு பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக நெதர்லாந்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்...." என்பன போன்ற கோரிக்கைகள், ரயிலைக் கடத்தியவர்களால் வைக்கப் பட்டன. மேலும் பணயக்கைதிகளுடன் தாம் தப்பிச் செல்வதற்கு ஒரு பேரூந்து வண்டியை ஒழுங்கு படுத்துமாறு கோரினார்கள். நேரே, ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்திற்கு சென்று, விசேடமாக ஒழுங்கு படுத்தப்பட்ட விமானம் ஒன்றில் தப்பிச் செல்வதே அவர்களது நோக்கம். ஆப்பிரிக்காவில், பெனின் நாடு மட்டும் மொலுக்கு என்ற தனி நாட்டை அங்கீகரித்திருந்தது. அதனால், கடத்தல்காரர்களும் பெனினுக்கு செல்ல விரும்பினார்கள்.

நெதர்லாந்து அரசு, கடத்தல்காரர்களின் கோரிக்கைகளுக்கு இணங்காமல் சாக்குப் போக்குக் காட்டிக் கொண்டிருந்தது. இதனால், கடத்தல்காரர்கள் ஏற்கனவே மிரட்டிய படி, மூன்று பேரை சுட்டுக் கொன்றார்கள். அதில் ஒருவர் ரயில் எஞ்சின் சாரதி. ஆனால், அந்தக் கொலைகளையே காரணமாக காட்டி அரசு பேச்சுவார்த்தை நடத்த மறுத்தது. இப்படியே 12 நாட்கள் கடந்து விட்டன. இறுதியில், நெதர்லாந்து அரசினால் அனுப்பி வைக்கப் பட்ட "நாடு கடந்த மொலுக்கு அரசின்" பிரதிநிதிகளின் மத்தியஸ்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. மொலுக்கு பிரமுகர்களின் மத்தியஸ்தத்தின் விளைவாக, கடத்தல்காரர்கள் சரணடைந்தார்கள். பணயக்கைதிகள் விடுவிக்கப் பட்டனர். கொலைக் குற்றம் சாட்டப்பட்ட கடத்தல்காரர்களுக்கு இருபதாண்டு கடூழிய சிறைத் தண்டனை கிடைத்தது.

இதே நேரம், ரயில் கடத்தலுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக, இன்னொரு குழுவை சேர்ந்த மொலுக்கு இளைஞர்கள், ஆம்ஸ்டர்டாம் நகரில் உள்ள இந்தோனேசிய உதவித் தூதரகத்தை ஆக்கிரமித்தனர். அதனால், சர்வதேச ஊடகங்களும் கவனம் செலுத்த தொடங்கின. சர்வதேச ஊடகவியலாளர்கள், தூதரக ஆக்கிரமிப்பையும், ரயில் பணய நாடகத்தையும் மாறி மாறி அறிவித்துக் கொண்டிருந்தனர். ஆனால், அவர்களில் பலருக்கு மொலுக்கு இனப் பிரச்சினை குறித்து எதுவும் தெரிந்திருக்கவில்லை. நெதர்லாந்து அரசு அதிகாரிகள், சம்பவத்தை விபரிப்பதுடன் நில்லாது, மொலுக்கர்களின் இனப் பிரச்சினை குறித்தும் விளக்க வேண்டியிருந்தது. ரயில் கடத்தல் முடிவுக்கு வந்தவுடன், தூதரக ஆக்கிரமிப்பாளர்களும் காவல்துறையிடம் சரணடைந்தார்கள். 

அனேகமாக, ஏற்கனவே ஒரு ரயில் கடத்தல் நடந்த இடத்தில், மீண்டும் ஒரு ரயிலைக் கடத்த மாட்டார்கள் என்று பலர் நினைத்திருப்பார்கள். ஆனால், அந்த நினைப்பு பொய்த்துப் போனது. 1977 ம் ஆண்டு, அதே வழித் தடத்தில், இன்னொரு ரயில் கடத்தப் பட்டது. மொலுக்கு இளையோருக்கு இடையில், குறிப்பிடத்தக்க அமைப்பு எதுவும் இயங்கவில்லை. யார் வேண்டுமானாலும், குழுவாக இணைந்து ஒரு ஆயுதபாணி அரசியல் நடவடிக்கையில் இறங்கினார்கள். ஒரே சமூகப் பின்னணி, ஒரே வரலாறு, ஒரே கொள்கை அவர்களை ஒன்றிணைத்தது. ஆன படியால், ஆயுதமேந்துவதற்கு தயாரான தாராளமான போராளிகள், மொலுக்கு சமூகத்தினர் மத்தியில் இருந்தனர். 

மொலுக்கு தீவிரவாத இளைஞர்களால் கடத்தப்பட்டு, De Punt என்னுமிடத்தில், மூன்று வாரங்களாக நிறுத்தி வைக்கப் பட்ட ரயில் பணய நாடகம், நெதர்லாந்து வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாக பதிவு செய்யப் பட்டது. 1975 ரயில் கடத்தலில் சம்பந்தப்படாத, புதிய இளைஞர்கள் தான், 1977 ம் ஆண்டு ரயிலைக் கடத்தினார்கள். கடந்த கால தவறுகளில் இருந்து சில படிப்பினைகளை பெற்றிருந்தனர். அதாவது, பணயக் கைதிகளை கொல்லாமல் வைத்திருந்தால், அரசுடன் பேரம் பேசலாம் என்று நம்பினார்கள்.  ஆனால், நெதர்லாந்து அரசு நம்பகத் தன்மையுடன் நடக்கவில்லை. இதனை மிகத் தாமதாக தான் உணர்ந்து கொண்டார்கள். அரசு, கடத்தல்காரர்களின் கோரிக்கைகளுக்கு உடன்படுவதைப் போல நடித்து ஏமாற்றியது. 

அரசு எதற்கும் மசியாமல் மூன்று வாரங்களை இழுத்தடித்தது. கடத்தல்காரர்கள் எதிர்பார்த்தது போல, அவர்களை பொறுப்பேற்க எந்த நாடும் முன்வரவில்லை என்பதும் ஒரு காரணம். பெனின், யேமன், வியட்நாம் ஆகிய நாடுகளின் தூதரகங்களை தொடர்பு கொண்டு விசாரித்த போதிலும், யாரும் அடைக்கலம் கொடுக்க முன்வரவில்லை. அதற்குமப்பால், கடத்தல்காரர்களுக்கு இடம்கொடுக்க கூடாது என்ற, நெதர்லாந்து அரசின் பிடிவாதமும் ஒரு காரணம். மரைன் கமாண்டோக்கள் தாக்குதல் நடவடிக்கை எடுக்கும் நாள் வரையில், பொய், புரட்டு, சுத்துமாத்துக்கள் செய்து காலத்தை கடத்தியது. 

இறுதியில், 11 ஜூன் 1977 அன்று, இரண்டு ஜெட் போர் விமானங்கள் பேரிரைச்சலுடன் ரயிலுக்கு மேலே வட்டமிட்டன. தயாராக காத்திருந்த மரைன் படையினர், ரயில் வண்டிக் கதவுகளை குண்டு வைத்து தகர்த்து, உள்ளே நுழைந்தனர். ஏற்கனவே, கடத்தல்காரர்கள் எந்த இடத்தில் தங்கி இருக்கின்றனர் என்ற தகவல்கள் பெறப் பட்டிருந்தன. மரைன் படை நடவடிக்கைக்கு திட்டமிடும் நேரம், கடத்தல்காரர்களை (அவர்களைப் பொருத்தவரையில்: பயங்கரவாதிகள்) "கழற்றி விட வேண்டும்" என்று படையினருக்கு உத்தரவிடப் பட்டது. 

"Uitschakelen" (கழற்றி விடுதல்) என்ற டச்சு சொல், "பயங்கரவாதிகளை செயற்பட விடாமல் சுட்டு காயப் படுத்தல் வேண்டும்" என்ற அர்த்தத்தில் சொல்லப் பட்டது. ஆனால், "தேவைப்பட்டால் சுட்டுக் கொல்லவும்" அனுமதி வழங்கப் பட்டிருந்தது. இதனால், குறைந்தது நான்கு கடத்தல்காரர்களை, உயிரோடு பிடிக்கக் கூடிய சந்தர்ப்பம் வாய்த்திருந்தும், "என்கவுண்டர் பாணியில்" சுட்டுக் கொலை செய்துள்ளதாக தெரிய வருகின்றது. அண்மையில் கூட, அன்று நடந்த நீதிக்கு புறம்பான கொலைகள் தொடர்பாக விசாரணை நடத்தப் பட வேண்டும் என்ற குரல்கள் கேட்கின்றன. பரம்பரை பரம்பரையாக மேலைத்தேய விசுவாசிகளாக இருந்தாலும், முன்னாள் காலனிய எஜமானுக்கு எதிராக ஆயுதமேந்தத் துணிந்தால், ஈவிரக்கமின்றி நசுக்கப் படுவார்கள் என்பதை, De Punt என்னுமிடத்தில் நடந்த, "என்கௌண்டர்  கொலைகள்" தெரிவிக்கின்றன.

(தொடரும்)


உசாத்துணை:
1. De Molukse Acties, Peter Bootsma
2. Ambon, Kolonisatie, dekolonisatie en neo-kolonisatie, Ernst Utrecht
3. Een jaar in de Molukken, H.R. Roelfsema
4. Knipselkrant van de afdeling Voorlichting der provincie Drente

Web Sites:
http://www.republikmalukuselatan.nl/nl/content/home.html


இந்தத் தொடரின் முன்னைய பகுதிகள்:
1.மொலுக்கு இனப் பிரச்சினை : டச்சு காலனிய துரோகத்தின் கதை
2.இந்தோனேசிய மொலுக்கு தீவுகளில் குடியேறிய இந்தியர்கள்
3.புலம்பெயர்ந்த தமிழர்களும், மொலுக்கர்களும் - ஓர் ஒப்பீடு
4.நாடு கடந்த மொலுக்கு அரசாங்கத்துடன் முரண்படும் இளையோர்

1 comment:

  1. அமைதி வழிப் போராட்டம் கண்டுகொள்ளப் படாத போது, இப்படித்தான் அது ஆயுதப் போராட்டமாக வெடிக்கிறது.... அவர்கள் முயற்சி பாராட்டுதலுக்குரியது...

    ReplyDelete