Tuesday, June 18, 2013

புலம்பெயர்ந்த தமிழர்களும், மொலுக்கர்களும் - ஓர் ஒப்பீடு

[மொலுக்கு இனப் பிரச்சினை : டச்சு காலனிய துரோகத்தின் கதை] 

 (மூன்றாம் பாகம்)


ஈழத் தமிழர்கள், மொலுக்கர்கள் ஆகிய தேசிய இனங்களுக்கு இடையில் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கே பார்ப்போம். இரண்டு தேசிய இனங்களும், போர்த்துக்கேயர்கள், டச்சுக்காரர்கள் ஆகிய ஐரோப்பிய காலனியாதிக்க எஜமானர்களால் ஆளப்பட்டன. காலனிய காலத்தில் சிறப்புரிமை பெற்ற இனங்களாக இருந்தன. அவர்களின் முன்னோர்கள் காலனிய எஜமானர்களினால் இனப்படுகொலை செய்யப் பட்டனர். ஆனால், பிற்காலத்தில் வந்த தலைமுறையினர் அதே காலனிய எஜமானர்களுக்கு விசுவாசமாக இருந்தனர். இதற்கு வரலாற்றில் இருந்து சில உதாரணங்களை காட்டலாம்.

இலங்கையில் போர்த்துக்கேய காலனியாதிக்கம் பரவிய காலத்தில், யாழ்ப்பாணத்தை ஆண்ட சங்கிலி மன்னன் மன்னாரில் வாழ்ந்த கிறிஸ்தவ - தமிழர்களை இனப்படுகொலை செய்தான். அதற்குப் பதிலடியாக, போர்த்துக்கேயர்கள் யாழ்ப்பாணத்தை கைப்பற்றிய பின்னர், அங்கு வாழ்ந்த இந்து - தமிழர்களை இனப்படுகொலை செய்தார்கள். மொலுக்கு தீவுகள், வாசனைத் திரவியங்களுக்கு பேர் போனது. அங்கு சென்ற டச்சுக்காரர்கள், மொலுக்கு விவசாயிகள் பணப் பயிர்களை உற்பத்தி செய்ய ஊக்குவித்தார்கள். ஆனால், அங்கு விளைந்த வாசனைத் திரவியங்களை டச்சு கிழக்கிந்தியக் கம்பனிக்கு மட்டுமே விற்க வேண்டுமென உத்தரவு பிறப்பித்தார்கள். உள்ளூர் மக்கள், ஆங்கிலேய வர்த்தகர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதை அறிந்த டச்சுக் காரர்கள், அதற்கு தண்டனையாக ஆயிரக் கணக்கான மக்களை இனப்படுகொலை செய்தார்கள். 

காலப்போக்கில் தென் மொலுக்கு தீவுகளில் வாழ்ந்த மக்களை, டச்சுக் காரர்கள் தமக்கு விசுவாசமானவர்களாக மாற்றினார்கள். அந்த விசுவாசம் எந்தளவுக்கு தீவிரமாக இருந்தது என்பதற்கு ஒரு உதாரணத்தை கூறலாம். இரண்டாம் உலக யுத்தத்தின் போது, அந்தப் பிராந்தியம் ஜப்பானியர்களால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தது. அங்கு பல வீடுகளில் வைக்கப் பட்டிருந்த, நெதர்லாந்து இராணியின் உருவப் படத்தை அகற்றுமாறு, ஜப்பானிய படையினர் உத்தரவிட்டனர். பல மொலுக்கர்கள், அதற்கு மறுத்து சித்திரவதைகளை அனுபவித்தனர். மொலுக்கர்களின் காலனிய விசுவாசத்திற்கு, கிறிஸ்தவ மயமாக்கல் ஒரு முக்கிய காரணமாகும்.

மொலுக்கர்கள் சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் நெதர்லாந்து இராணிக்கு காட்டிய விசுவாசத்தை பெருமையுடன் நினைவு கூர்வார்கள். அதே போன்று தான், ஈழத் தமிழர்களும் தாம் பிரிட்டிஷ் இராணிக்கு காட்டிய விசுவாசம் குறித்து சிலாகித்து பேசுவதில் பெருமைப் படுவார்கள். காலனிய எஜமானர்கள், ஒரு குறிப்பிட்ட பிரதேச மக்களை கிறிஸ்தவ மயமாக்குவதற்கு வணிகமும் முக்கிய காரணமாக இருந்தது. அதாவது, அன்றைய சர்வதேச வணிகம் இஸ்லாமிய மொலுக்கர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. அதனை முறியடிக்க வேண்டிய தேவை இருந்தது. இதே போன்று, அன்றைய வட இலங்கையிலும் சர்வதேச வர்த்தகம் இஸ்லாமிய தமிழர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. காலனியாதிக்க வாதிகள் கணிசமான தமிழர்களை கிறிஸ்தவ மயப் படுத்தி, தமக்கு ஆதரவான சக்தியாக வளர்த்தெடுத்தனர். 

இன்றைய இலங்கையின் இனப் பிரச்சினையில் காணப்படும், "தமிழ் - முஸ்லிம் முரண்பாட்டின் தோற்றுவாய்" காலனிய கால கட்டத்தில் உருவாகி விட்டது. இன்று தமிழ் - முஸ்லிம் முரண்பாடு, சிங்கள பேரினவாதத்திற்கு பயனளிக்கத் தக்கதாக மாறி விட்டது. அதே போன்று, இன்றைய இந்தோனேசிய அரசும், மொலுக்கர் சமூகத்தில் உள்ள கிறிஸ்தவ - முஸ்லிம் முரண்பாட்டை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றது. மொலுக்கு தீவுகளில் காணப்படும் கிறிஸ்தவ - முஸ்லிம் சமூகங்களுக்கு இடையிலான பகைமை உணர்ச்சியும் காலனிய காலத்திலேயே வேரூன்றி விட்டது. கிழக்கிலங்கையில் நடந்த தமிழ் - முஸ்லிம் கலவரங்கள், தமிழீழத்திற்கான சாத்தியக்கூறுகளை கணிசமாக குறைத்தது. அதே போன்று, மொலுக்கு தீவுகளில் நடந்த கிறிஸ்தவ - முஸ்லிம் கலவரங்கள், மொலுக்கு தேசியத்திற்கு பின்னடைவாக அமைந்தது. 

ஆரம்பத்தில், தமிழ் பேசும் மக்கள் அனைவரையும் உள்ளடக்கிய ஈழத் தமிழ் தேசியம், வெகு விரைவில், கிறிஸ்தவ - இந்து தமிழர்களுடைய வடக்கு-கிழக்கு மாகாணங்களை மட்டுமே உள்ளடக்கிய தமிழீழமாக குறுகிப் போனது.மொலுக்கு தேசியமும் அதே மாதிரியான பரிணாம வளர்ச்சியை கண்டது. கிறிஸ்தவர்கள் மட்டும் வாழும் தென் மொலுக்கு தீவுகளை மட்டுமே உள்ளடக்கிய, தென் மொலுக்கு தேசியமாக குறுகிப் போனது. அது மொலுக்கு தேசியத்தின் முக்கியமான தவறு என்பதை, இரண்டாவது தலைமுறையினர் மட்டுமே உணர்ந்தார்கள். ஆனால், அதற்குள் பல கசப்பான பின்னடைவுகளை அனுபவிக்க வேண்டியேற்பட்டது. 

மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக சென்று குடியேறிய ஈழத் தமிழர் மத்தியில், தமிழீழத்திற்கான ஆயுதப் போராட்டம் நடத்திய விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு கணிசமான அளவு ஆதரவு இருந்தது. பெரும்பாலான தருணங்களில், புலிகளின் போர் வெற்றிகள், தமிழ் மக்கள் மீதான சிங்களப் படைகளின் அட்டூழியங்கள் பற்றி பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் நம்பியிருந்த ஊடகங்களும், தாயகத்து தொடர்புகளும் அந்த தகவல்களை வழங்கிக் கொண்டிருந்தன. அதே மாதிரியான நிலைமையில் தான், நெதர்லாந்தில் வாழ்ந்த மொலுக்கு அகதிகளும் இருந்தனர். மொலுக்கு குடியரசுவாதிகளின் ஆயுதப் போராட்டம், இந்தோனேசியப் படைகளின் அட்டூழியங்கள் போன்றன அவர்களின் உரையாடல்களில் முக்கிய இடத்தை பெற்றிருக்கும். 

புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் கஷ்டப் பட்டு சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதியை, புலிகள் இயக்கத்திற்கான நிதியாக வழங்கிக் கொண்டிருந்தார்கள். அதே போன்று, நெதர்லாந்தில் வாழ்ந்த மொலுக்கு அகதிகளும் குடும்பத்திற்கு 400 டச்சு கில்டர்ஸ் அனுப்பிக் கொண்டிருந்தார்கள். (இன்று அதன் மதிப்பு 500 யூரோவாக இருக்கலாம்.) இதிலே முக்கியமாக கவனிக்கப் பட வேண்டியது, ஐம்பதுகளில் நெதர்லாந்து முகாம்களில் வாழ்ந்த மொலுக்கு அகதி ஒருவருக்கு, வாரத்திற்கு மூன்று டச்சு கில்டர்ஸ் மட்டுமே செலவுக்கு கொடுக்கப் பட்டது. (எல்லா முகாம்களிலும் உணவு சமைத்துப் பரிமாறப் பட்டது.) ஒரு அகதியின் அத்தியாவசிய செலவுகளுக்கு, 3 கில்டர்ஸ் போதாது. புது உடுப்பு வாங்க முடியாது. வருடத்திற்கு ஒரு தடவை, மாற்று உடைகள் கொண்டு வந்து கொடுப்பார்கள். 

மொலுக்கர்கள் என்றோ ஒரு நாள் இந்தோனேசியாவுக்கு திரும்பிச் செல்ல வேண்டியவர்கள் என்பதால், அவர்கள் அகதிகளாக அங்கீகரிக்கப் படவில்லை. அதனால், அவர்கள் வேலை செய்யவும் அனுமதிக்கப் படவில்லை. அப்படியான இக்கட்டான நிலையிலும், பல அகதிகள் முகாமுக்கு அருகில் இருந்த வயல்களில், பண்ணைகளில் வேலை செய்து சிறிது பணம் சம்பாதித்தார்கள். அந்தப் பணத்தில் இருந்து தான், மொலுக்கு தீவுகளில் ஆயுதப் போராட்டம் நடத்திய இயக்கத்திற்கு நிதியுதவி செய்தார்கள். நிதி மட்டுமல்ல, ஆயுதங்களும் வாங்கி அனுப்பினார்கள். மொலுக்கு தேசியவாதிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட, லக்சம்பேர்க் நாட்டில் நிறுவனத்தை வைத்திருந்த, டச்சு வர்த்தகர் ஒருவர் தாராளமாக உதவினார். புலம்பெயர்ந்த மொலுக்கர்களின் பணத்தில், ஹங்கேரி ஆயுதங்களை வாங்கி அனுப்பி உதவினார். 

புலிகளுக்கு உதவிய புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களும், மொலுக்கு விடுதலை இயக்கத்திற்கு உதவிய புலம்பெயர்ந்த மொலுக்கர்களும் இதனை தமது தார்மீகக் கடமையாக கருதினார்கள். அப்படி உதவியவர்களின் மனதில் ஒரேயொரு சிந்தனை மட்டுமே இருந்தது. அதாவது, புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து செல்லும் உதவி காரணமாக, தாயகத்தில் போராடும் போராளிகள் வெற்றிகளைக் குவிப்பார்கள். ஒரு நாளைக்கு, தாயகப் பகுதிகளை விடுதலை செய்து, அங்கே தனி நாடு பிரகடனம் செய்வார்கள். அதன் பிறகு சுதந்திரமடைந்த நாட்டில் சென்று வாழலாம். ஆனால், தாயகத்தில் நிலைமை வேறு விதமாக இருந்தது. அங்கு போராடிக் கொண்டிருந்தவர்கள் எந்தளவு நெருக்கடிக்குள் இருந்தனர் என்ற உண்மை, புலம்பெயர்ந்த சமூகத்தினருக்கு தெரிந்திருக்கவில்லை. 

ஈழத் தமிழர்களுக்கு, 2009 ஆண்டு ஏற்பட்ட அனுபவம், 1963 ம் ஆண்டு மொலுக்கர்களுக்கு கிடைத்தது. ஈழப்போரின் இறுதியில் புலிகள் வன்னிப் பகுதிக்குள் மட்டுமே முடக்கப் பட்டதைப் போன்று, 1963 ம் ஆண்டு, மொலுக்கு போராளிகள் சேரம் தீவினுள் முடக்கப் பட்டனர். ஏற்கனவே அவர்கள் தமது  கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் படிப்படியாக இழந்து கொண்டிருந்தனர். சேரம் தீவில் மட்டுமே நீண்ட காலம் நின்று பிடித்து போராடிக் கொண்டிருந்தனர்.

1962 ம் ஆண்டு, மொலுக்கு தீவுகளுக்கு அருகாமையில் உள்ள பாபுவா நியூ கினியா, இந்தோனேசியா வசம் சென்றது. அது வரையும், டச்சு காலனிய படைகளின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த பாபுவா நியூ கினியாவை, மொலுக்கு போராளிகள் பின் தளமாக பயன்படுத்தி வந்தனர். ஆனால், நெதர்லாந்து அரசு பாபுவா நியூ கினியாவை இந்தோனேசியாவுக்கு தாரை வார்த்தமை, மொலுக்கு போராட்டத்தில் ஏற்பட்ட பின்னடைவாகும். மொலுக்கு தேசியவாதத்தை நியாயமான விடுதலைப் போராட்டமாக கருதி ஆதரிப்பதாக பாசாங்கு செய்த டச்சு காலனிய எஜமானர்கள், முதுகில் குத்தினார்கள்.  

1963 ம் ஆண்டு, மொலுக்கு விடுதலை இயக்கம், இந்தோனேசியப் படைகளால் முற்றாக அழிக்கப் பட்டது.  அதன் தலைவரான ஸௌமொகில் கைது செய்யப் பட்டார். 1965 ம் ஆண்டு, இந்தோனேசியாவில் சதிப்புரட்சி மூலம் ஆட்சிக்கு வந்த சுஹார்ட்டோ, தடுப்புக் காவலில் இருந்த சௌமொகிலை சுட்டுக் கொல்ல உத்தரவிட்டார். மொலுக்கு விடுதலை இயக்கத் தலைவரின் படுகொலை, நெதர்லாந்தில் வாழ்ந்த மொலுக்கர்கள் மத்தியில் அதிர்வலைகளை தோற்றுவித்தது. பலரால் அதனை ஜீரணிக்க முடியவில்லை. 

புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணம், புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் மத்தியில் எந்தளவு அதிர்ச்சியை உண்டாக்கியது என்பது தெரிந்ததே. புலம்பெயர்ந்த மொலுக்கு சமூகமும், அதேயளவு அதிர்ச்சியில் உறைந்து போனது. அதற்கு காரணமான இந்தோனேசிய போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப் பட வேண்டும், இந்தோனேசிய அரசு பழிவாங்கப் பட வேண்டும் என்ற உணர்ச்சிக் கொந்தளிப்புகள், அன்றைய புலம்பெயர்ந்த அரசியலை தீர்மானித்தன. புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள், புலிகளின் தோல்விக்கு உலக நாடுகள் எல்லாம் காரணம் என்று குற்றஞ் சாட்டியதைப் போல, மொலுக்கர்கள் நெதர்லாந்து அரசின் மீது குற்றஞ் சாட்டினார்கள். 

நெதர்லாந்து அரசு, மொலுக்கர்களின் இனப் பிரச்சினையை ஏறத்தாள மறந்து விட்டது. இந்தோனேசிய அரசுடன் நல்லுறவைப் பேணுவதில் மட்டுமே அவர்கள் கவனம் செலுத்தினார்கள். இந்தோனேசியாவில் ஒரு சிறுபான்மையினமான மொலுக்கர்கள், பாரம்பரியமான மேற்குலக விசுவாசம் காரணமாக, தனது துரோகத்தை கண்டுகொள்ள மாட்டார்கள் என்று நெதர்லாந்து நினைத்திருக்கலாம். ஆனால், முதலாம் தலைமுறையினரைப் பொறுத்த வரையில் அந்தக் கணிப்பீடு சரியாக இருக்கலாம். நெதர்லாந்தில் வாழ்ந்த இரண்டாம் தலைமுறையினர் மேற்கத்திய மாயைகளை கண்டு மயங்கத் தயாராக இருக்கவில்லை. 

"மேற்கத்திய நாடுகளை விமர்சிப்பதே ஒரு பாவச் செயல்" என்று நினைத்துக் கொண்டிருந்த புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள், 2009 ம் ஆண்டு ஐரோப்பிய, அமெரிக்க நகரங்களை, ஸ்தம்பிக்க வைத்தார்கள். இலங்கைக்குள் மட்டுமே முடங்கிக் கிடந்த தமிழீழப் போராட்டம், ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டமாக பரிணமித்தது. அறுபதுகளில், நெதர்லாந்தில் வாழ்ந்த மொலுக்கர்களும் அதே மாதிரியான ஏகாதிபத்திய எதிர்ப்பு பாடங்களை கற்றுக் கொண்டார்கள். நெதர்லாந்து ஏகாதிபத்தியமும், தனது சுயரூபத்தை அவர்களுக்கு காட்டும் தருணம் வந்தது.  

(தொடரும்) 


இந்தத் தொடரின் முன்னைய பகுதிகள்:

1.மொலுக்கு இனப் பிரச்சினை : டச்சு காலனிய துரோகத்தின் கதை
2.இந்தோனேசிய மொலுக்கு தீவுகளில் குடியேறிய இந்தியர்கள்

No comments:

Post a Comment