[இந்தோனேசியாவின் இரகசியமான இனப்படுகொலை]
(இரண்டாம் பாகம்)
இந்தோனேசியா ஒரு டச்சுக் காலனியாக இருந்தது. இரண்டாம் உலகப்போர் காலத்தில், ஜப்பானால் ஆக்கிரமிக்கப் பட்டது. ஆனால், சுகார்னோ தலைமையிலான இந்தோனேசிய தேசியவாதிகள், ஜப்பானுடன் ஒத்துழைத்தார்கள். ஜப்பானிய ஏகாதிபத்திய படைகளின் பாதுகாப்பு நிழலின் கீழே ஒரு தனி நாட்டை அமைத்துக் கொண்டார்கள். அந்தக் காலத்தில், இந்தியாவின் விடுதலைக்காக போராடிய தேசியவாதியான நேதாஜியும், அதே மாதிரியான திட்டத்தை மனதில் வைத்திருந்தார். அதாவது, இந்தியாவை ஜப்பானிய படைகள் கைப்பற்றிய பின்னர், அங்கே நேதாஜி தலைமையில் "இந்தியர்களின் நாடு" உருவாகி இருக்கும்.
(முற்றும்)
முதலாம் பாகத்தை வாசிப்பதற்கு:
இந்தோனேசியாவின் இரகசியமான இனப்படுகொலை
உசாத்துணை:
1. De Stille Genocide, Lambert J.Giebels
2. De Groene Amsterdammer 28.02.2013
3. De Indonesische coup van 1965 (Historisch Nieuwsblad)
4. De CIA Moorden in de Derde Wereld, Kunhanandan Nair & Michael Opperskalski
5. Legacy of Ashes: The History of the CIA, Tim Weiner
1965 ம் ஆண்டு, ஜகார்த்தா நகரில் நடந்த, இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சியின் வருடாந்த மகாநாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ:
(இரண்டாம் பாகம்)
இந்தோனேசியா ஒரு டச்சுக் காலனியாக இருந்தது. இரண்டாம் உலகப்போர் காலத்தில், ஜப்பானால் ஆக்கிரமிக்கப் பட்டது. ஆனால், சுகார்னோ தலைமையிலான இந்தோனேசிய தேசியவாதிகள், ஜப்பானுடன் ஒத்துழைத்தார்கள். ஜப்பானிய ஏகாதிபத்திய படைகளின் பாதுகாப்பு நிழலின் கீழே ஒரு தனி நாட்டை அமைத்துக் கொண்டார்கள். அந்தக் காலத்தில், இந்தியாவின் விடுதலைக்காக போராடிய தேசியவாதியான நேதாஜியும், அதே மாதிரியான திட்டத்தை மனதில் வைத்திருந்தார். அதாவது, இந்தியாவை ஜப்பானிய படைகள் கைப்பற்றிய பின்னர், அங்கே நேதாஜி தலைமையில் "இந்தியர்களின் நாடு" உருவாகி இருக்கும்.
இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர், பழைய ஐரோப்பிய காலனிய எஜமானர்கள், ஆசியாவில் தாம் இழந்த காலனிகளுக்கு உரிமை கோரினார்கள். நெதர்லாந்து, இந்தோனேசியாவை மீண்டும் தனது அதிகாரத்தின் கீழே கொண்டு வர விரும்பியது. ஆனால், போருக்கு பின்னர் புதிய உலக வல்லரசாகி இருந்த அமெரிக்கா அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. இந்தோனேசியாவுக்கு சுதந்திரம் கொடுக்குமாறு அழுத்தம் கொடுத்தது. அமெரிக்க அழுத்தம் காரணமாகத் தான், பிரிட்டனும் இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுத்தது. ஆசியக் கண்டத்தின், இரண்டு மிகப்பெரிய நாடுகளான இந்தியாவும், இந்தோனேசியாவும், சில ஒற்றுமைகளை கொண்டுள்ளன. இந்தியாவில் நேரு எந்த வகையான கொள்கைகளை கொண்டிருந்தாரோ, அதே மாதிரியான கொள்கைகளை, இந்தோனேசியாவில் சுகார்னோ கொண்டிருந்தார்.
நேருவும், சுகார்னோவும் சேர்ந்து, காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுதலையடைந்த, ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளின் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்க விரும்பினார்கள். அதற்காக, இந்தோனேசியாவில் பாண்டுங் என்ற இடத்தில் ஒரு மகாநாடு நடந்தது. இலங்கையில் இருந்து பண்டாரநாயக்கவும் கலந்து கொண்டார். உண்மையில், அமெரிக்கா இந்தக் கூட்டமைப்பை விரும்பவில்லை என்று தெரிகின்றது. அதனால் தான், CIA பண்டாரநாயக்கவை கொலை செய்தது என்றும் ஒரு கதை உலாவுகின்றது. நேருவை விமான விபத்தொன்றில் கொல்வதற்கு CIA சதி செய்ததாகவும் ஒரு தகவல். (De CIA Moorden in de Derde Wereld, Kunhanandan Nair & Michael Opperskalski ) இதன் தொடர்ச்சியாக, சுகார்னோவை அகற்றிய 1965 சதிப்புரட்சி அமைந்தது. அந்த சதிப்புரட்சியில், CIA யின் பங்களிப்பு எந்தளவுக்கு இருந்தது என்பதை, பின்னர் விரிவாகப் பார்ப்போம்.
பாண்டுங் மகாநாட்டுக்கு போட்டியாக, இன்னொரு கூட்டமைப்பு உருவானது. யூகோஸ்லேவியாவில் டிட்டோ, எகிப்தில் நாசர் ஆகியோரின் முயற்சியில் "அணிசேரா நாடுகளின் உச்சி மகாநாடு" நடந்தது. சுகார்னோ தனது பாண்டுங் மகாநாட்டு திட்டங்களை மேற்கொண்டு எடுத்துச் செல்ல முடியாமல் இருந்தது மட்டுமல்ல, அவரும் அணிசேரா மகாநாட்டில் கலந்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் உண்டானது. இந்தப் போட்டியின் காரணமாக, இறுதி வரைக்கும் சுகார்னோவுக்கு உறுதுணையாக இருந்தது சீனா மட்டுமே. அதனால், இந்தோனேசியாவுக்கும், சீனாவுக்கும் இடையில் நெருக்கம் அதிகரித்தது.
ஸ்டாலினின் மரணத்தின் பின்னர், சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பிளவு தோன்றியது. சில கட்சிகள் குருஷேவின் சோவியத் யூனியனையும், சில கட்சிகள் மாவோவின் சீனாவையும் ஆதரித்தன. இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சி (PKI) சீன சார்பு நிலைப்பாடு எடுத்து. இதனால், சுகார்னோ, சீனா, இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சிக்கு (PKI) இடையில் ஒரு முக்கோண உறவு உருவானது. இந்தோனேசிய அரசில், PKI யின் செல்வாக்கு அதிகரித்தது. அது "கத்தியின்றி, இரத்தமின்றி ஒரு புரட்சியை வெல்லலாம்..." என்ற மாயையை தோற்றுவித்திருக்கலாம். அன்றிருந்த PKI தலைவர் அய்டீத், அது போன்ற ஒரு திரிபுவாத பாதையை தேர்ந்தெடுத்ததாக, புலம்பெயர்ந்து வாழும் PKI உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். அது உண்மையாயின், "கத்தியின்றி, இரத்தமின்றி" புரட்சி நடத்தும் கோட்பாடு, இறுதியில் கட்சியின் அழிவுக்கே வழிவகுத்தது.
இதற்கிடையே, இந்தோனேசியாவில் தாக்கத்தை ஏற்படுத்திய இன்னொரு சர்வதேச அரசியல் நிலைமை பற்றியும் குறிப்பிட வேண்டும். இந்தோனேசிய மொழி பேசும் மக்களும், மலே மொழி பேசும் மக்களும் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள். இரண்டு மொழிகளுக்கும் இடையில் பெரிய வித்தியாசம் இல்லை. தமிழும், மலையாளமும் மாதிரி என்ற அளவுக்கு கூட வித்தியாசம் கிடையாது. ஈழத் தமிழும், இந்தியத் தமிழும் மாதிரி நெருக்கமானவை. ஆனால், இரண்டு வேறு மொழிகளாக வளர்க்கப் பட்டன. இந்தோனேசியாவுக்கும், மலேசியாவுக்கும் இடையிலான மிகப்பெரிய பிரிவினை, காலனியாதிக்க காலத்தில் ஏற்பட்டது. அதாவது ஆங்கிலேயர்கள் காலனிப் படுத்திய பகுதி தான், இன்றைய மலேசியா. இந்தோனேசியா நெதர்லாந்திடம் இருந்து சுதந்திரமடைந்த பின்னரும், மலேசியா பிரிட்டிஷ் காலனியாக தொடர்ந்தது.
1963 ம் ஆண்டு, மலேசியாவுக்கு சுதந்திரம் கொடுக்கும் நேரம், அந்த நாடு இந்தோனேசியாவுக்கு சொந்தமானது என்று சுகார்னோ உரிமை கோரினார். இந்தோனேசியப் படைகள், மலேசியப் பகுதிகளினுள் ஊடுருவி மட்டுப்படுத்தப் பட்ட இராணுவ நடவடிக்கையிலும் இறங்கியது. இறுதியில், மலேசியா கையை விட்டுப் போனதால் ஏற்பட்ட விரக்தி, இந்தோனேசிய அரசின் மீது நம்பிக்கையின்மையை உருவாக்கியது. இராணுவத்திற்குள் தேசிய உணர்வு மேலோங்கியது. PKI அதை சாட்டாக வைத்து, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான உணர்வலைகளை தூண்டி விட்டது. உண்மையில், மலேசிய பிரச்சினையின் எதிர்வினையாக, அரசுக்கு ஆதரவளித்த கம்யூனிஸ்ட் கட்சி பலம்பெற்று வந்தது.
கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அணி (Pemuda Rakjat) யும், மகளிர் அணி (Gerwani) யும் தீவிரமாக இயங்கத் தொடங்கின. கம்யூனிஸ்ட் மாணவர் அமைப்பு, கல்லூரிகளில் இயங்கிக் கொண்டிருந்த இஸ்லாமிய மாணவர் அமைப்பை தடை செய்ய வேண்டுமென கோரியது. பொதுவாக, நாடு முழுவதும் கம்யூனிஸ்ட் இளைஞர்களின் பிரசன்னம் அதிகரித்துக் காணப்பட்டது. இது பலருக்கு எரிச்சலைக் கொடுத்தது. ஒரு பக்கம், நிலப்பிரபுக்கள் கம்யூனிஸ்டுகளை வெறுத்தார்கள். ஏனென்றால், நிலமற்ற விவசாயிகள், தமக்கு வேண்டிய நிலங்களை ஆக்கிரமிக்குமாறு, கம்யூனிஸ்ட் கட்சி ஊக்குவித்தது. மறுபக்கத்தில், இஸ்லாமிய மதகுருக்களின் வெறுப்பை சம்பாதித்தார்கள்.
இஸ்லாமிய மதகுருக்கள், வெளிப்படையாகவே நிலப்பிரபுக்களின் பக்கம் சேர்ந்து கொண்டார்கள். "கடவுள் மறுப்பாளர்களான கம்யூனிஸ்டுகளை அழிப்பதற்கு, அமெரிக்காவுடன் மட்டுமல்ல, எந்தப் பிசாசுடனும் கூட்டுச் சேரலாம்." இஸ்லாமிய மதவாதிகளின் நாஸ்திக எதிர்ப்பு பிரச்சாரம், கடவுள் நம்பிக்கையுள்ள ஏழை விவசாயிகளை மனம் திரும்ப வைத்தது. இது பின்னர் நடந்த இனப்படுகொலையில் திருப்புமுனையாக அமைந்தது. கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த, ஏழை விவசாயிகளான கீழ் மட்ட உறுப்பினர்கள் கூட, கம்யூனிச அழிப்பு படுகொலைகளில் பங்கெடுத்தனர். அதற்கு காரணம், குறிப்பிட்ட அளவு நிலத்தை அவர்கள் சொந்தமாக்கிக் கொள்ளலாம் என்ற உத்தரவாதத்தை, இஸ்லாமிய மதகுருக்கள் நிலப்பிரபுக்களிடம் இருந்து பெற்றுக் கொடுத்தனர்.
30 செப்டம்பர் 1965, அன்றைய தினம் இந்தோனேசியாவின் தலைவிதியை தீர்மானித்தது. அன்றிரவு ஏழு இராணுவ உயர் அதிகாரிகள் கடத்திச் செல்லப்பட்டனர். அவர்களுக்கு கீழே வேலை செய்த, கீழ் நிலை அதிகாரிகள், அவர்களுக்கு விசுவாசமான இராணுவத்தினர், திடீர் சதிப்புரட்சியை நடத்தி இருந்தனர். சதிப்புரட்சியை அடக்கி, சர்வாதிகார ஆட்சியை கொண்டு வந்த சுகார்ட்டோவும், சில மேற்கத்திய ஊடகங்களும் அறிவித்தது போன்று, அது ஒரு கம்யூனிச சதிப்புரட்சி அல்ல. இராணுவ உயர் அதிகாரிகளின் ஊழல், ஆடம்பரமான வாழ்க்கை, அதிகார துஷ்பிரயோகம், இவற்றினால் வெறுப்புற்ற படையினரில் ஒரு பிரிவினரின் வேலை அது.
வான்படையில் சில முற்போக்கான அதிகாரிகள், அந்த சதிப்புரட்சிக்கு ஆதரவளித்தனர். அவர்களுக்கு, இரகசியமாக சீன ஆயுதங்கள் வந்திறங்கி இருந்தன. PKI தலைவர் அய்டீத் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, கம்யூனிச இளைஞர் அணி உறுப்பினர்களுக்கு, வான்படைத் தளத்தில் இராணுவப் பயிற்சி வழங்கப் பட்டது. இருப்பினும், வான்படை கம்யூனிஸ்டுகளின் கட்டுப்பாட்டில் இருந்ததாக, தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது. வான்படை தளபதிகள், எந்தளவு முற்போக்காக இருந்த போதிலும், ஒரு கம்யூனிசப் புரட்சிக்கு ஆதரவளிக்கவில்லை. காலம் தனக்கு சார்பாக கனிந்து வருவதாக, PKI தப்புக் கணக்குப் போட்டது. (ஆதாரம்: De Stille Genocide, Lambert J.Giebels)
சதிப்புரட்சியில் ஈடுபட்டவர்களுக்கு, PKI அரசியல் ஆதரவு மட்டுமே வழங்கியது. இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் செக்கோஸ்லேவியாவில் நடந்தது போன்று, ஒரு இடைக்கால அரசாங்கம் அமைக்கப் பட்டால், அது சில வருடங்களின் பின்னர், உழவர், தொழிலாளரின் புரட்சிக்கு வழிவகுக்கும் என்றும் கம்யூனிஸ்ட் கட்சி கனவு கண்டது. ஆனால், அது வெறும் கனவாகவே இருந்து விட்டது. சதிப்புரட்சியில் ஈடுபட்டவர்களின் நிர்வாக சீர்கேடுகள், திட்டமிடல் குறைபாடுகள், பிற படைப்பிரிவுகளுடன் தொடர்பின்மை, இவை போன்ற காரணங்களினால், சதிப்புரட்சி அதிக பட்சம் 24 மணிநேரம் கூட நீடிக்கவில்லை. அந்நாட்களில் அதிகம் கவனிக்கப்படாத இராணுவ அதிகாரியான சுகார்ட்டோ, தனக்கு விசுவாசமான படையினருடன் தலைநகரை முற்றுகையிட்டார். வெளியுதவி எதுவும் கிடைக்காததால், சதிப்புரட்சியில் ஈடுபட்ட படையினர், எதிர்ப்பு காட்டாமல் சரணடைந்தனர்.
உண்மையில், அதற்குப் பிறகு தான் படுகொலைகள் தொடங்கின. விமானப்படை முகாமுக்கு அருகில் கொன்று புதைக்கப்பட்ட ஆறு இராணுவ அதிகாரிகளின் உடல்கள் தோண்டியெடுக்கப்பட்டன. சில உடல்கள் சிதைவடைந்து காணப்பட்டதால், அதை வைத்து வதந்திகள் பரப்பப் பட்டன. கம்யூனிசக் கட்சி இளைஞர் அணியை சேர்ந்த பெண்கள், அந்த அதிகாரிகளை சித்திரவதை செய்ததாகவும், கண்களை தோண்டியெடுத்து, பிறப்புறுப்புகளை அறுத்ததாகவும் கதைகள் புனையப்பட்டன. அந்தக் கதையில் எந்தவித உண்மையும் இல்லாத போதிலும், பெருமளவு அப்பாவி மக்கள் அதனை நம்பினார்கள். இப்போதும் நம்புகின்றார்கள். ஏனென்றால், இராணுவ அதிகாரிகளின் கொலைகளை பிரச்சாரம் செய்யும் நோக்கில் தயாரிக்கப்பட்ட ஆவணப்படம் ஒன்று, நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் காண்பிக்கப் பட்டது. ஒவ்வொரு வருடமும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் பட்டது.
சதிப்புரட்சிக்கு முன்னர், கல்லூரிகளில் மத அடிப்படைவாதம் பேசிய, இஸ்லாமிய மாணவர் அமைப்புகளை தடை செய்ய வேண்டுமென, கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்து வந்தது. கல்லூரிகளுக்குள் இரண்டு பிரிவினரும் எதிரிகள் போல நடந்து கொண்டாலும், அப்போது எந்த கைகலப்பும் நடைபெறவில்லை. சுஹார்ட்டோவின் இராணுவ சதிப்புரட்சிக்குப் பின்னர், இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் கை ஓங்கியது. கம்யூனிச எதிரிகளுடன் கணக்குத் தீர்த்துக் கொள்ளுமாறு, இஸ்லாமிய மாணவர் அமைப்புகளை தூண்டி விட்டது. இந்தோனேசியாவின் இனப்படுகொலை கல்லூரி மாணவர் விடுதிகளில் ஆரம்பமாகியது.
ஒவ்வொரு நகரத்திலும், கிராமத்திலும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளும், படையினரும் கூட்டுச் சேர்ந்து இனப்படுகொலை செய்யக் கிளம்பினார்கள். கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், அவ்வாறு சந்தேகிக்கப் பட்டவர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும், ஆயுதமேந்திய காடையரினால் படுகொலை செய்யப் பட்டனர். சில சமயம், அயல் வீட்டுக்காரனுடன் காணித் தகராறு காரணமாக பகை இருந்தாலும், கம்யூனிஸ்ட் என்று பிடித்துக் கொடுத்தார்கள். இவ்வாறு கம்யூனிஸ்ட் அழிப்பு என்ற பெயரில், பலர் தமக்குப் பிடிக்காதவர்களையும் கொலை செய்தனர். மொத்தம் எத்தனை பேர் படுகொலை செய்யப்பட்டனர் என்ற விபரம் யாருக்கும் தெரியாது. குறைந்தது பத்து இலட்சம் அல்லது இருபது இலட்சம் பேர் படுகொலை செய்யப் பட்டிருக்கலாம் என கணக்கிடப் பட்டுள்ளது.
உண்மையில், இந்தோனேசியாவில் ஒரு இனப்படுகொலை நடத்தப்பட வேண்டுமென, சிலர் முன்கூட்டியே இரகசியமாக திட்டம் தீட்டி இருக்க வேண்டும். அந்தக் காலகட்டத்தில், அடுத்தடுத்து நடந்த பல சம்பவங்களை வைத்துப் பார்க்கும் பொழுது, அந்த சந்தேகம் ஏற்படுவது இயல்பு. இனப்படுகொலை திட்டத்தை நிறைவேற்றுவதற்கு, 30 செப்டம்பர் நடந்த சதிப்புரட்சி ஒரு சாட்டாக பயன்படுத்தப் பட்டுள்ளது. ஏனெனில், சதிப்புரட்சிக்கு காரணம், பாதுகாப்புப் படைகளின் உள்ளே நிகழ்ந்த அதிகார மோதல் என்பதை நிரூபிக்க பல சான்றுகள் இருந்தன. அதே நேரம், கம்யூனிஸ்ட் கட்சியை தொடர்பு படுத்துவதற்கான ஆதாரங்கள் மிகவும் பலவீனமாக உள்ளன. இருந்த போதிலும், "கம்யூனிஸ்ட் அழித்தொழிப்பு" என்ற அளவுக்கு செல்ல வேண்டிய காரணம் என்ன?
ஏற்கனவே, CIA க்கும், சுஹார்ட்டோவுக்கும் இடையில் இரகசிய தொடர்பிருந்திருக்கலாம். கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் 5000 பேரின் பெயர்கள் அடங்கிய பட்டியலினை, அமெரிக்க தூதரகம் சுஹார்ட்டோவுக்கு விசுவாசமான படைகளிடம் கொடுத்திருந்தது. இந்த தகவலை ஜகார்த்தாவில் பணியாற்றிய CIA அதிகாரியான Clyde McAvoy உறுதிப் படுத்தி உள்ளார். அவரின் வாக்குமூலத்தின் படி, தீர்த்துக் கட்ட வேண்டிய கம்யூனிஸ்டுகளின் பட்டியலையும், வாக்கிடோக்கி கருவிகளையும், CIA வழங்கி இருந்தது. அதற்கு முன்னரே, கம்யூனிச எதிர்ப்பு அரசியல்வாதிகளையும், படையினரையும் விலைக்கு வாங்கும் பொறுப்பு, அன்றைய வெளிவிவகார அமைச்சர், ஆதம் மாலிக்கிடம் ஒப்படைக்கப் பட்டிருந்தது. (ஆதாரம்: Legacy of Ashes: The History of the CIA, by Tim Weiner) ஆகவே, இந்தோனேசிய இனப்படுகொலையில், அமெரிக்க அரசும் சம்பந்தப் பட்டிருந்தமை, இத்தால் உறுதிப் படுத்தப் படுகின்றது.
"கொள்கை வேறுபாடு காரணமாக, பெருந்தொகையான மக்களை படுகொலை செய்தால், அதனை இனப்படுகொலை என்று அழைக்கலாமா?" என்று சிலர் கேள்வி கேட்கலாம். இன்னொரு இனத்தை, அல்லது மதத்தை சேர்ந்தவர்களை கொன்று குவிப்பது மட்டுமே இனப்படுகொலை ஆகும், என்று சிலர் கறாராக வரையறுக்கலாம். அதற்கும் ஆதாரங்கள் உள்ளன. இந்தோனேசியாவில், எல்லா இடங்களிலும் பரவலாக வாழும், சீன சிறுபான்மை இனத்தவர்கள் நிறையப்பேர், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களாக இருந்தனர். வேற்று மொழி பேசும் சீனர்கள், கம்யூனிஸ்டுகளாகவும் இருந்ததால், ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டனர். கல்லூரிகளில் நடந்த படுகொலைகளில், சீன மாணவர்கள் தங்கியிருந்த விடுதிகளை குறிவைத்து தாக்கினார்கள். (அந்தக் காலத்திலும், பிற்காலத்தில் சுஹார்ட்டோவின் இறுதிக் காலத்தில், தொன்னூறுகளில் நடந்த சீன விரோத இனக்கலவரங்களிலும், சீன பெரு முதலாளிகள் பாதுகாக்கப் பட்டனர்.)
அதே போல, இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் பாலித் தீவிலும், பெருமளவு மக்கள் படுகொலை செய்யப் பட்டனர். அந்த தீவின் சனத்தொகையில் பத்தில் ஒருவராவது கொல்லப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. கிழக்கு இந்தோனேசிய தீவுகளான, புலோரெஸ், அம்பொன் ஆகிய இடங்களில் பெருமளவு கிறிஸ்தவர்கள், வேறு மொழிகளைப் பேசும் மக்கள் வாழ்கின்றனர். அங்கேயும் படுகொலைகள் நடந்துள்ளன. கிறிஸ்தவ பாதிரியார்களும், இனப்படுகொலையாளிகளுடன் ஒத்துழைத்தனர். கொலைப் பட்டியலில் தமது பெயர்களும் இருப்பதாக நினைத்தவர்கள், தேவாலய உறுப்பினர் அத்தாட்சிப் பத்திரம் கேட்ட பொழுது, அதைக் கொடுக்க பாதிரிகள் மறுத்துள்ளனர். சில சமயம், பாவமன்னிப்பு கேட்க வரும் நபர், தான் ஒரு PKI உறுப்பினர்/ஆதரவாளர் என்ற உண்மையை ஒப்புக் கொண்டு விட்டால், அவரை பாதிரியாரே கொலைகாரர்களிடம் பிடித்துக் கொடுத்தார். (ஆதாரம்: De Stille Genocide, Lambert J.Giebels)
இன்று வரையில், இனப்படுகொலை என்றால் என்னவென்பதற்கு, சரியான வரைவிலக்கணம் கிடையாது. நாஜிகளின் யூத இன அழிப்பை குறிப்பதற்கு உருவாக்கப்பட்ட சொல், இன்று பல நாடுகளிலும் பயன்படுத்தப் படுகின்றது. இந்தோனேசியாவில், "கம்யூனிஸ்டுகளை கொன்றது இனப்படுகொலை ஆகாது" என்று வாதாடுபவர்கள், எதனை அடிப்படையாக கொண்டு கம்போடியாவில் இனப்படுகொலை நடந்ததாக கூறுகின்றார்கள்? பொல்பொட் ஆட்சிக் காலத்தில் நடந்த, "கம்போடிய இனப்படுகொலையை" விசாரிப்பதற்கு ஐ.நா. சிறப்பு நீதிமன்றம் ஒன்று அமைக்கப் பட்டுள்ளது. ஏன் இந்தோனேசியாவில் அத்தகைய நீதிமன்றம் ஒன்று செயற்படவில்லை? ஏன் சர்வதேச சமூகம் அது குறித்து பாராமுகமாக இருக்கிறது?
(முற்றும்)
முதலாம் பாகத்தை வாசிப்பதற்கு:
இந்தோனேசியாவின் இரகசியமான இனப்படுகொலை
உசாத்துணை:
1. De Stille Genocide, Lambert J.Giebels
2. De Groene Amsterdammer 28.02.2013
3. De Indonesische coup van 1965 (Historisch Nieuwsblad)
4. De CIA Moorden in de Derde Wereld, Kunhanandan Nair & Michael Opperskalski
5. Legacy of Ashes: The History of the CIA, Tim Weiner
1965 ம் ஆண்டு, ஜகார்த்தா நகரில் நடந்த, இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சியின் வருடாந்த மகாநாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ:
பயனுள்ள தகவல்...நன்றி
ReplyDelete