[சிலுவைப் போர் எனும் ஐரோப்பிய ஏகாதிபத்திய அரசியல்]
(பாகம் : இரண்டு)
(தொடரும்)
இந்த தொடரின் முன்னைய பகுதிகள்:
1. சிலுவைப்போர் எனும் ஐரோப்பிய ஏகாதிபத்திய அரசியல்
(பாகம் : இரண்டு)
கிறிஸ்தவ - ரோம சாம்ராஜ்யத்தின் புத்துயிப்பு
சிலுவைப்போர் எதற்காக நடந்தது? என்ற கேள்விக்கு விடை காண வேண்டுமானால், நாங்கள் பத்தாம் நூற்றாண்டிலிருந்த இத்தாலிக்கு திரும்பிச் செல்ல வேண்டும். அங்கே தான், பல லட்சம் உயிர்களைக் காவு கொண்ட மாபெரும் உலகப்போர், (சிலுவைப் போர்) கருக் கொண்டது. அன்றிருந்த மக்களின், ஆட்சியாளர்களின் மன நிலையை புரிந்து கொள்வதற்கு, அன்றைய பூகோள அரசியலை ஆராய்ந்து பார்க்க வேண்டும். கிறிஸ்தவ மதம் எழுச்சி பெற்றதால், ரோம சாம்ராஜ்யம் அழிந்ததாக வரலாறு இன்று திரிக்கப்பட்டுள்ளது. ஆதி கிறிஸ்தவர்களை, ரோம சக்கரவர்த்திகள் அழிக்க நினைத்த செயலுக்கு எதிர்வினையாக, அந்தப் பிரச்சாரம் பரப்பப்பட்டது. உண்மையில் ரோம சாம்ராஜ்யத்தை கிறிஸ்தவ - வத்திகான் மடாதிபதிகள் நிர்வகித்து வந்தார்கள்.
வேறொரு வடிவத்தில், பாப்பரசர் (போப்பாண்டவர்) மதத் தலைவராகவும், அதே நேரம் பல்வேறாக பிரிந்திருந்த ஐரோப்பிய நாடுகளின் உத்தியோகபூர்வ அரசியல் தலைமைப் பதவியை வகித்து வந்தார். இங்கிலாந்து மன்னன் என்றாலும், ஜெர்மன் சக்கரவர்த்தி என்றாலும், பாப்பரசருக்கு விசுவாசமாக இருந்தனர். அல்லது அப்படிக் காட்டிக் கொண்டனர். அதிகாரப்போட்டியால் சில நேரம் பாப்பரசரும் சிறையில் அடைக்கப்படும் நிலை இருந்தது. இதைத் தவிர குறு நில மன்னர்கள் ஒருவரோடு ஒருவர் ஒற்றுமையில்லாமல் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். கிரேக்க மொழி பேசும் கீழைத்தேய கிறிஸ்தவ மரபைக் கொண்ட ராஜ்ஜியம் மட்டும் நிலையான அரசைக் கொண்டிருந்தது. ஆனால் அவர்களுக்கு கத்தோலிக்க வத்திகானுடன் கொள்கை ரீதியான முரண்பாடுகள் இருந்தன.
மன்னர்கள் மட்டுமல்ல, தேவாலயங்கள் கூட ஒரே நிலைப்பாட்டில் இருக்கவில்லை. கத்தோலிக்க மத நிறுவனத்தின் பிரதேசத் தலைவர்கள் தம் இஷ்டப்படி நடந்து கொண்டார்கள். ரோமாபுரியில் இருந்த பாப்பரசரால் அனைவரையும் தனது அதிகாரத்தின் கீழ் ஒன்று சேர்க்க முடியவில்லை. சுருக்கமாக சொன்னால், ஐரோப்பிய அரசியல் சக்திகள் அனைத்தும் பாப்பரசரின் தலைமையை வாயளவில் ஏற்றுக்கொண்டனர். ஆனால் அவர்களை உணர்வுபூர்வமாக ஒன்றிணைக்கும் கோட்பாடு எதுவும் இருக்கவில்லை. அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு அன்றைய பாப்பரசர் கிரகொரியஸ் ஒரு திட்டம் வைத்திருந்தார். அந்தோ பரிதாபம், கிரகொரியசின் கனவு நிறைவேறுவதற்குள் அவர் மண்டையைப் போட்டு விட்டார்.
கிரகொரியசுக்கு அடுத்ததாக பதவிக்கு வந்த உர்பனுஸ் அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். 27 நவம்பர் 1095, பிரான்ஸ் நாட்டின் கிலேர்மொன்ட் நகரம். கிலேர்மொன்ட் நகரத்தில் அமைந்துள்ள கம்பீரமான தேவாலயத்தில் அன்று ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தார்கள். மேடையில் முக்கியமான மதத் தலைவர்கள் அனைவரும் வீற்றிருந்தார்கள். அன்று அங்கு வருகை தந்துள்ள பாப்பரசர் உர்பானுஸ் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உரை நிகழ்த்தவுள்ளதாக வதந்தி பரவியிருந்தது.
உர்பனுஸ் பேச எழுந்தார்: " மதிப்புக்குரிய கத்தோலிக்க மகாஜனங்களே! பிசாந்தின் (கிரேக்க ராஜ்ஜியம்) தலைநகர் கொன்ஸ்டான்டின் (இன்று: இஸ்தான்புல்) இலிருந்து எனக்கு ஒரு மடல் வந்துள்ளது. பிசாந்தின் சக்கரவர்த்தி என்னிடம் படை உதவி கேட்டு எழுதியுள்ளார். அவரது ராஜ்ஜியம் காட்டுமிராண்டி முஸ்லிம்களால் தாக்கப்பட்டு வருகின்றது. பிசாந்தின் சக்கரவர்த்திக்கு உதவுவதன் மூலம், முஸ்லிம்களினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள புனித மண்ணான ஜெருசலேமையும் மீட்டெடுக்கலாம்."
அவரது உரையை ஆமோதித்த கூட்டம், "வேண்டும், வேண்டும்... எமக்கு புனிதப்போர் வேண்டும்!" என்று கோஷம் எழுப்பியிருக்குமா? என்று எமக்குத் தெரியாது. ஆனால், உர்பானுசின் உரை ஏறக்குறைய புனிதப் போரின் பிரகடனமாக அமைந்திருந்தது.
பாப்பரசரின் உரையின் பின்னணியை சற்று ஆராய்வோம். ஆரம்ப காலங்களில் கிறிஸ்தவ மத சபைகள் அனைத்தையும் நிர்வகிக்கும், ஒரு பொதுவான தலைவர் இருக்கவில்லை. அந்தந்த பிரதேசங்களில் இருந்த தேவாலயங்கள், தமக்குள் ஒரு தலைவரை தெரிந்தெடுத்தார்கள். ரோமாபுரியில் பாப்பரசர் என்று ஒருவரின் தலைமையின் கீழ் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களையும் ஒன்றிணைக்கும் முயற்சிக்கு, கிழக்கே இருந்து எதிர்ப்பு கிளம்பியது.
அரசியல் தலைமைத்துவ பிரச்சினை வலுக்கவே, கிறிஸ்தவ மதத்தினுள் இரண்டு பிரிவுகள் தோன்றின. மேற்கே ரோமாபுரியின் ஆட்சியின் கீழான கத்தோலிக்க பிரிவு. கிழக்கே மரபுவழி கிறிஸ்தவ பிரிவு. இரண்டுக்கும் இடையில் வழிபடும் முறை மட்டுமே வித்தியாசம். கத்தோலிக்கம் ரோமர்களின் மத வழிபாட்டை பின்பற்றியது. இதே நேரம் கிழக்கில், கிரேக்கர்களின் பண்டைய "கோயில் வழிபாட்டு முறை" பேணப்பட்டது. மற்றும் படி, இரண்டுக்கும் இடையில் பெரிதாக கோட்பாட்டு பிரச்சினை எதுவும் கிடையாது. இரண்டு பிரிவுகளும் இப்போதும் ஒரே பைபிளைத் தான் பயன்படுத்துகின்றன. (கி.பி. 100 - 200 காலகட்டத்தில் பல கோட்பாட்டு பிரச்சினைகள் உருவாகின. "பிதா, சுதன், பரிசுத்த ஆவி" குறித்த சர்ச்சைகள், "இயேசு கிறிஸ்து கடவுளா, மனிதனா?" என்பது குறித்த வாதங்கள் நடந்துள்ளன. இதனால் மூன்று குழுக்கள் பிரிந்து, உயிர் குடிக்கும் எதிரிகளாக மாறிய வரலாறு ஒன்றுண்டு.)
இன்றுள்ள கிரீசும், துருக்கியும் சேர்ந்தது தான், "கிரேக்க - கிறிஸ்தவ ராஜ்ஜியம்" ஆகும். அந்த ராஜ்ஜியத்திற்கு, கிழக்கே இருந்து, படையெடுப்பு குறித்த அச்சுறுத்தல்கள் வந்த படி இருந்தன. மத்திய ஆசியாவில் இருந்து படையெடுத்து வந்த துருக்கி இன படையணிகள் போகுமிடமெல்லாம் அழிவை ஏற்படுத்தி வந்தன. அவர்களின் அசாதாரணமான, மூர்க்கமான படைநகர்வுகளால் ராஜ்யங்கள் மண்டியிட்டன. படையெடுத்து வரும் வரை காட்டுமிராண்டிக் குழுக்களாக இருந்த துருக்கி இனங்கள், தாம் அழித்த பாக்தாத் நகரின் சிறப்பை பின்னர் தான் உணர்ந்து கொண்டார்கள். அதிலிருந்து இஸ்லாமிய மதத்தை தழுவிக் கொண்டனர்.
பிற்காலத்தில், செல்ஜுக் துருக்கி இன வீரர்கள் பாக்தாத் பேரரசரின் விசுவாசமான சிறப்புப் படையணியில் பணியாற்றினார்கள். புதிதாக இஸ்லாமியராக மாறிய துருக்கிய இனங்கள், இன்றைய துருக்கியின் பல பகுதிகளை கைப்பற்றியதுடன், கொன்ஸ்டாண்டின் நகருக்கு அச்சுறுத்தலாக விளங்கினார்கள். செல்ஜுக் துருக்கியர்கள் எந்த நேரம் படையெடுத்து வருவார்களோ என்ற கலக்கத்தில் இருந்த சக்கரவர்த்தி வத்திகானிடம் படை உதவி கேட்டு ஓலை அனுப்பியிருக்கிறார்.
அநேகமாக, கொன்ஸ்டாண்டின் சக்கரவர்த்தி தனது படைகளை வலுப்படுத்தும் முகமாக, மேற்கத்திய கூலிப்படை ஒன்றை எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் கிலேர்மொன்ட் பிரகடனத்தை வாசித்த பாப்பரசர் உர்பானுஸ் மனதில், பல சூழ்ச்சிகள் உருவாகின. சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தனது அரசியல் அதிகாரத்தை ஸ்திரப்படுத்த விரும்பினார். சக்கரவர்த்தி கேட்ட துணைப்படை அனுப்புவதற்குப் பதிலாக, தன்னிச்சையாக செயற்படக் கூடிய, மதவெறியூட்டப்பட்ட படைகளை உருவாக்கினார். அந்தப் படைகளின் குறிக்கோள்,"முஸ்லிம்களிடம் இருந்து ஜெருசலேமை விடுதலை செய்வது" என்று தன்னை நம்பியவர்களை மூளைச்சலவை செய்தார்.
புனிதப்போருக்கு புறப்படும் படையில் யாரும் இணையலாம். இராணுவப் பயிற்சி பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை. பொது மன்னிப்பு வழங்கப்பட்டதால், பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டோரும் வந்து சேர்ந்தனர். தலைமைப் பொறுப்பில், சிறந்த இராணுவப் பயிற்சி பெற்ற குதிரைவீரர்கள் நிச்சயம் இருந்திருப்பார்கள். அவர்களில் பலர் அரச குடும்பங்களில் இருந்தும் வந்திருந்தார்கள். ஜெருசலேமை நோக்கிச் சென்ற படைகள் சிலுவைகளின் பின்னால் அணிவகுத்துச் சென்றனர். அவர்களின் சீருடைகளில் சிலுவைக்குறி பொறிக்கப்பட்டிருந்தது. பிற்காலத்தில் "சிலுவைப்போர்" என்ற சொற்பதம் தோன்றுவதற்கும் அதுவே காரணம்.
இந்த தொடரின் முன்னைய பகுதிகள்:
1. சிலுவைப்போர் எனும் ஐரோப்பிய ஏகாதிபத்திய அரசியல்
******************************
சிலுவைப்போர், கிறிஸ்தவ மத வரலாறு தொடர்பான வேறு பதிவுகள்:
1.சிலுவைப் போர்களும், சில்லறைப் பொய்களும்
2.கிறிஸ்தவம்: அடிமைகளின் விடுதலை முதல் அதிகார வேட்கை வரை
3.பைபிளை மொழிபெயர்த்தவன் ஒரு கிறிஸ்தவ மதத்துரோகி!
4.கிறிஸ்தவ நாட்டில் இருந்து ஒரு திறந்த மடல்...