போர்த்துக்கேயரும், டச்சுக்காரரும், இலங்கைத் தீவின் மீதான காலனிய மேலாதிக்கத்திற்காக, யுத்தம் செய்த காலத்தில் எழுதப்பட்ட நூல் ஒன்று, தற்செயலாக வாசிக்கக் கிடைத்தது. "De opkomst van het Nederlandsch gezag over Ceylon" (இலங்கை மீதான நெதர்லாந்து ஆட்சியதிகாரத்தின் தொடக்கம்) என்ற நூலானது, சுமார் 200 வருடங்களுக்கு முன்னர் பேசப்பட்ட பழைய டச்சு மொழியில் எழுதி இருப்பதால், வாசிப்பதற்கு சற்று கடினமாக உள்ளது. காலனிய எஜமானர்கள் தமது நாட்டை பற்றி என்ன எழுதியிருக்கிறார்கள் என்று அறிவதற்கு, இலங்கை மக்களுக்கு ஆர்வம் இருக்கலாம். நான் சிரமப் பட்டு வாசித்த நூலில் இருந்து சில குறிப்புகளை இங்கே பதிவு செய்துள்ளேன். அந்த நூல் தற்பொழுது, எங்கேயும் விற்பனைக்கு கிடைக்காது. ஸ்கேன் செய்யப்பட்ட நூல், இணைய நூலகத்தில் வாசிக்கக் கிடைக்கின்றது.
அன்று இலங்கைத் தீவானது, தெற்காசியாவில் போர்த்துக்கேயரின் பணக்கார காலனியாக இருந்துள்ளது. இரத்தினக் கற்கள், முத்துக்கள், கறுவாப் பட்டைகள் போன்றன, அன்றைய சர்வதேச சந்தையில் பெருமளவு வருவாயை ஈட்டிக் கொடுத்த பண்டங்கள் ஆகும். அதனால், போர்த்துக்கேயரும் இலங்கை இலகுவாக இழக்க விரும்பாமல், டச்சுக் காரரை எதிர்த்து கடுமையாக போரிட்டு இருக்கிறார்கள். "செய்லோன் (இலங்கை) தீவின் இழப்பானது, மிகுந்த மன வலியை தருவதும், போர்த்துக்கல் தேசத்தின் மிகப் பெரிய இழப்பாகவும் கருதப் பட வேண்டுமென...." போர்த்துகேய கால இலங்கையின் சரித்திரத்தை எழுதிய frei Fernão de Queiroz குறிப்பிட்டுள்ளார்.
De opkomst van het Nederlandsch gezag over Ceylon (இலங்கை மீதான நெதர்லாந்து ஆட்சியதிகாரத்தின் தொடக்கம்) என்ற நூலில், நான் வாசித்த சில பகுதிகளை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இயற்கையான துறைமுகங்கள், கேத்திர முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம் காரணமாக, இலங்கைத் தீவு காலனிய எஜமானர்களின் பிரியத்திற்குரிய காலனியாக இருந்துள்ளது. நெதர்லாந்தை சேர்ந்த "கிழக்கிந்திய கம்பனி" என்ற வர்த்தக ஸ்தாபனம், இலங்கையை தளமாக வைத்துக் கொண்டு, இந்தியாவில் தமிழக கரையோரப் பகுதிகளை பிடித்து ஆள்வதற்கு திட்டமிட்டிருந்தது. இலங்கை மட்டுமல்லாது, நாகபட்டினம், தூத்துக்குடி போன்ற தமிழக பகுதிகளின் பொருளாதார முக்கியத்துவமும் இந்த நூலில் விபரிக்கப் பட்டுள்ளது.
இந்த நூலில், யாழ்ப்பாணத்திலும், மன்னாரிலும் நடந்த யுத்தம் பற்றி விபரமாக எழுதப் பட்டுள்ளது. போரில் கொல்லப்பட்ட போர்த்துக்கேயர்கள், மலபாரிகள் (தமிழர்கள்), இவர்களுடன் கறுப்பின அடிமைகளின் எண்ணிக்கையும் குறிப்பிடப் பட்டுள்ளது. இதிலிருந்து ஒரு உண்மை தெளிவாகின்றது. போர்த்துக்கேயர் ஆண்ட காலத்தில், ஆயிரக் கணக்கான கறுப்பின அடிமைகளையும் இறக்குமதி செய்திருக்கின்றனர். ஆப்பிரிக்க கறுப்பின அடிமைகளின் வம்சாவளியினர் பின்னர் தமிழைப் பேசி தமிழர்களாக மாறி உள்ளனர். (அதே போன்று சிங்களப் பிரதேசத்தில் வாழ்ந்த ஆப்பிரிக்க அடிமைகள் சிங்களவராக மாறி விட்டார்கள்.)
யாழ்ப்பாணத்தை "Jaffena patnam" என்றும், அங்கு வாழ்ந்த மக்களை "மலபாரி" மொழி பேசுவோர் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது. (போர்த்துக்கேயரும், டச்சுக்காரரும் தமிழர்களை மலபாரிகள் என்று தான் அழைத்து வந்தனர். அனேகமாக, ஆங்கிலேயரின் காலனிய காலத்தில் தான் தமிழர் என்ற பெயர் பாவனைக்கு வந்திருக்க வேண்டும்.) யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த போர்த்துக்கேயரை தவிர, உள்நாட்டு கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 50000 என்று குறிப்பிடப் பட்டுள்ளது. சிறிதும் பெரிதுமான தீவுகளில் 20000 பேர். மன்னாரில் 7000 பேர். போர்த்துக்கேயர் ஆட்சிக் காலத்தில், 90% மான தமிழர்கள், கத்தோலிக்க கிறிஸ்தவர்களாக இருந்துள்ளனர்.
அந்தக் காலத்தில் இந்து மதத்தை பின்பற்றிய அனைவரும் பிராமணர்களாக, அல்லது எழுதப், படிக்கத் தெரிந்த உயர் சாதியினராக இருந்துள்ளனர். அதனால் இந்துக்களை பிராமணர் என்றே நூலாசிரியர் குறிப்பிடுகின்றார். "Schriftgeleerde of Pandiet" (படித்தவர்கள் அல்லது பண்டிதர்கள்) என்று, பிராமணர் என்ற சொல்லுக்கு அந்த நூலில் விளக்கம் கொடுக்கப் பட்டுள்ளது. ஆங்கிலேய காலனிய காலத்திற்கு முன்னர், "இந்து" என்ற சொல் பயன்பாட்டில் இருக்கவில்லை என்பதையும், பிராமணர்களை தவிர பிற சாதியினர் இந்துக்களாக இருக்கவில்லை என்பதையும், இந்த சரித்திர ஆவணம் நிரூபிக்கின்றது.
"30 மைல் சுற்று வட்டாரத்தை கொண்ட யாழ்ப்பாணம், மலைகளற்ற, சமவெளியான பிரதேசம். நம்ப முடியாத அளவுக்கு வளம் கொழிக்கும் பூமி. நெல்லும், பருத்தியும், பிற தானியங்களும் பயிரிடப் பட்டன. காடுகளுக்குள் யானைகளும், மான்களும், பிற காட்டு விலங்குகளும் காணப்பட்டன." இவ்வாறு அந்த நூலில் விவரிக்கப் பட்டுள்ளது. போர்த்துக்கேயர் காலம் வரையில் கூட, யாழ்ப்பாணத்தில் இருந்து யானைகள் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப் பட்டன. அதனால் தான், ஒரு இடத்திற்கு "யானை இறவு" என்ற பெயர் ஏற்பட்டது. இதனை வாசிக்கும் போது, எமக்கு அதிர்ச்சி ஏற்படும். ஏனெனில், இன்றைய யாழ் குடாநாடு இலங்கையில் மிகவும் வரட்சியான பிரதேசங்களில் ஒன்று. அங்கே தற்போது காடுகளும் இல்லை, யானைகளும் இல்லை. நெல் உற்பத்தி, யாழ்ப்பாண மக்களின் நுகர்வுக்கே போதாது.
அப்படியானால், 300 வருட கால காலனிய ஆட்சிக் காலத்தில், சூழலியலை மதிக்காத நிர்வாக சீர்கேடுகளால், யாழ்ப்பாண மண் வறண்டு போயிருக்கின்றது. ஆங்கிலேயர் வெளியேறி முப்பது வருடங்களுக்குப் பின்னர், விவசாயப் பொருளாதாரத்தில் பின்தங்கிய, வளமற்ற, வறண்ட யாழ்ப்பாண மண்ணில் இருந்து, தமிழீழத்திற்கான ஆயுதப் போராட்டம் தோன்றியது. "காலனிய சுரண்டல் - பொருளாதார பிரச்சினைகள் - ஈழப் போர்" இவற்றிற்கு இடையிலான தொடர்புகளை, இன்றைக்கு பல படித்தவர்களும் புரிந்து கொள்வதில்லை.
இங்கேயுள்ள இணைப்பில் நூலை வாசிக்கலாம்: Full text of "De opkomst van het Nederlandsch gezag over Ceilon. Eerste gedeelte"
இங்கேயுள்ள இணைப்பில் நூலை வாசிக்கலாம்: Full text of "De opkomst van het Nederlandsch gezag over Ceilon. Eerste gedeelte"
No comments:
Post a Comment