Friday, December 07, 2012

300 ஸ்பார்ட்டா வீரர்களின் நாட்டில் ஒரு நாள்

கிரேக்க நாட்டு பயணக் குறிப்புகள்  (பகுதி - 3)

"300"  என்ற ஹாலிவூட் திரைப்படம் வந்த பின்னர், ஸ்பார்ட்டாவின் பெயர், உலகம் முழுவதும் அறிமுகமானது. கிறீசின் பெலோப்பனோஸ் குடாநாடு, பண்டைய காலத்தில் ஸ்பார்ட்டா என்ற தனி நாடாக இருந்தது. ஒரு பக்கத்தில் ஏதன்ஸ், மறு பக்கத்தில் ஸ்பார்ட்டா, இரண்டு வல்லமை பொருந்திய சுதந்திர நாடுகளுக்கும் இடையில், வர்த்தகப் போட்டிகளும், இராணுவத் தகராறுகளும் இருந்தன. அப்பொழுது கிழக்கே (இன்றைய துருக்கி) இருந்த பாரசீக சாம்ராஜ்யம் அவர்களை மிரட்டிக் கொண்டிருந்தது. கிரேக்கத்தை ஆக்கிரமிக்கும் நோக்குடன் அடிக்கடி படையெடுத்தது. இதனால் ஏதென்ஸ் அடிக்கடி பாதிக்கப் பட்டது. ஆரம்பத்தில் ஒத்துழைக்கா விட்டாலும், பிற்காலத்தில் ஏதன்ஸ் தேசத்தின் போரில், ஸ்பார்ட்டாவும் சேர்ந்து கொண்டது. அதுவே கிரேக்கம் என்ற ஒரு புதிய தேசம் உருவாக அடிப்படையாக அமைந்தது. இதற்குப் பின்னர், நகரங்களை மையப் படுத்திய தனியரசுகள் மறைந்து, கிரேக்கப் பேரரசு உருவானது. 

இன்று ஸ்பார்டா நகரம் பெருமளவு அழிந்து விட்டது. அதனால் அங்கு பார்ப்பதற்கு எதுவும் இல்லை. சில கட்டிட இடிபாடுகளைத் தவிர. ஸ்பார்ட்டாவுக்கு அருகில், கிறிஸ்தவ கால புராதன நகரம் ஒன்றுள்ளது. மிஸ்த்ரா என்ற இடத்தில் ஆயிரம் வருடங்களுக்கு முந்திய நகரம் அழியாமல் உள்ளது. பிசாந்தின் என்ற, கிரேக்க மொழி பேசும் ரோம சாம்ராஜ்யத்தின் எச்சம் அது. பிசாந்தின் சாம்ராஜ்யத்தில், கிரேக்கம் அரச கரும மொழியாகவும், கிறிஸ்தவம் அரச மதமாகவும் இருந்தன. அந்த அரசாங்கத்தில், கிறிஸ்தவ தேவாலயங்கள், மடாலயங்களின் பங்களிப்பு அளவுக்கு அதிகமாகவே இருந்தது. பிற்காலத்தில் பிசாந்தின் சாம்ராஜ்யம் வீழ்ச்சியுற்று, அந்த இடத்தில் துருக்கியரின் ஓட்டோமான் சாம்ராஜ்யம் உருவானது. ஏதென்ஸ் வரையில் துருக்கியரின் ஆளுகைக்குட்பட்டிருந்த காலத்தில், பெலோப்பெனோஸ் குடா நாடு மட்டுமே சுதந்திரமாக இருந்துள்ளது. அந்தப் பிரதேசம், முழுக்க முழுக்க கிறிஸ்தவ தேவாலயங்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் கட்டப்பட்ட நிர்வாகத் தலைநகரம் தான் மிஸ்த்ரா. அதே காலகட்டத்தில் தான், பிற்காலத்திய கிரேக்க தேசியவாதமும் தோன்றியது. பல அழகிய புராதன கட்டிடங்களை, மிஸ்த்ராவில் இன்றைக்கும் பார்த்து மகிழலாம். 

பெலோப்போனோஸ் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு, மீண்டும் ஏதென்ஸ் திரும்பி வந்தேன். ஏதென்சில் நான் தங்கியிருந்த "யூத் ஹாஸ்டல்", பெயரளவில் மட்டுமே "இளையோரின் விடுதி" யாக இருந்தது. வயதுக் கட்டுப்பாடின்றி, எல்லோரையும் தங்க அனுமதித்தார்கள். செலவும் அதிகமில்லை. ஒரு நாள் கட்டணம் 12 யூரோக்கள் மட்டுமே. ஒரு அறையில், நான்கு பேர் தங்கி இருந்தார்கள். என்னுடன் ஒரு பிரிட்டிஷ் முதியவரும், அயர்லாந்து இளைஞனும் தங்கியிருந்தனர். பிரிட்டிஷ் முதியவர், சுமார் ஐம்பது  வருடங்களுக்கு முன்பு இலங்கையில் வசித்துள்ளார்! திருகோணமலையில் இருந்த பிரிட்டிஷ் கடற்படைத் தளத்தில் பணியாற்றியுள்ளார். (இலங்கை குடியரசான பின்னர், அந்த தளம் மூடப்பட்டது.)  அவர் தனது இலங்கை அனுபவங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டார். பிரிட்டிஷ் கடற்படைத் தளம் அகற்றப் பட்ட பின்னர், இலங்கையுடனான பிரிட்டனின் காலனிய கால தொடர்பு துண்டிக்கப் பட்டது. அது வரையில், இலங்கையில் வசித்த பிரிட்டிஷ் பிரஜைகளுக்கு கிடைத்த சலுகைகளை விவரித்த பொழுது பிரமிப்பாக இருந்தது. அந்த முன்னாள் கடற்படை வீரருடன் தற்போதைய இலங்கை நிலவரம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். "திருகோணமலை கடற்படைத் தளம் மூடப்பட்டதற்கும், சில வருடங்களின் பின்னர், இனப்பிரச்சினை கூர்மை அடைந்ததற்கும் தொடர்பிருந்தது" என்பதை, அவருடன் உரையாடிய பொழுது புரிந்தது. 

என்னுடன் தங்கியிருந்த அயர்லாந்து இளைஞனுடன் பேசிக் கொண்டிருந்த பொழுது, ஐரிஷ்காரர்கள் எந்தளவு தூரம் பிரிட்டனை வெறுக்கின்றனர் என்பது புரிந்தது. "ஆங்கிலேயர்கள்  இலங்கையையும், பிற உலக நாடுகளையும் காலனிப் படுத்துவதற்கு முன்பே, அருகில் இருந்த அயர்லாந்தை காலனியாக்கி வெள்ளோட்டம் பார்த்துள்ளனர். அந்த ஐரிஷ் இளைஞர், "சுதந்திரமடைந்த" அயர்லாந்தின் இன்றைய அரசியல் நிலவரம் பற்றி விலாவாரியாக எடுத்துரைத்தார். தான் மட்டுமல்ல, தனது தந்தை, தாத்தா காலத்திலிருந்தே ஆங்கில மொழியை, அதாவது ஆக்கிரமிப்பாளர்களின் மொழியை, தமது தாய்மொழியாக பேசி வருவதாக கூறினார். அதாவது, சொந்த மொழியான ஐரிஷ் மொழியை மூன்று தலைமுறையாக மறந்து விட்டார்கள். தனக்கு ஐரிஷ் ஒரு அந்நிய மொழியாக தெரிவதாகவும், தான் சிந்திப்பது கூட ஆங்கில மொழியில் தான் என்றும் தெரிவித்தார். ஐரிஷ் மொழி பாடசாலைகளில் கற்பிக்கப் பட்டாலும், பலருக்கு அதில் ஆர்வமில்லை என்றும், அரசியல்வாதிகளும், அரசாங்க அதிகாரிகளும் மட்டுமே ஓரளவுக்காவது தெரிந்திருக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் கூறினார்.அதாவது பதவியேற்கும் பொழுது, ஐரிஷ் மொழியில் சத்தியப் பிரமாணம் செய்தால் போதுமானதாம். நான் ஈழத் தமிழரின் மொழிப் பிரச்சினை பற்றி அந்த நண்பருக்கு எடுத்துக் கூறினேன். "இன்னும் பத்து வருடங்களில், ஈழத்தில் வாழும் தமிழர்கள் எல்லோரும் சிங்களம் மட்டுமே பேசுவார்கள்," என்று பலர் ஆரூடம் கூறுகின்றனர். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அடிச்சுவட்டை பின்பற்றும் ஸ்ரீலங்கா அரசு வேறெப்படி நடந்து கொள்ளும்? தாயை சந்தையில் பார்த்தால், மகளை வீட்டில் பார்க்க வேண்டுமா?

கிறீஸை சுற்றி பல தீவுகள் உள்ளன. எல்லாத் தீவுகளுக்கும் ஏதென்சில் இருந்து அதி விரைவுப் படகுச் சேவை உள்ளது. மேற்கே உள்ள தீவுகளுக்கு, பாட்ரா துறைமுகத்தில் இருந்து கப்பல் சேவை நடக்கிறது.
ஏதென்ஸ் நகரத்திற்கு அருகில் உள்ள தீவுக்கு பெயர் ஏகினா. அதற்கு பிராயஸ் துறைமுகத்தில் இருந்து படகு செல்கின்றது. பிராயஸ் ஏதென்ஸ் நகரின் துறைமுகம் மட்டுமல்ல, அனைத்து சர்வதேச கப்பல்களும் அங்கே வருகின்றன. ஏகினா தீவில் வாழும் மக்கள், பெரும்பாலும் மீனவர்கள். உல்லாசப் பிரயாணத் துறையினால், மேலதிக வருமானம் கிடைக்கிறது. தலைநகரத்திற்கு அருகில், கடற்கரையில் ஏகாந்தமாக பொழுது போக்க விரும்புவோருக்கு ஏகினா சிறந்த இடம். அங்குள்ள மெல்லிய நீல நிறக் கடற்கரைகள் உலகப் பிரசித்தி பெற்றவை. பண்டைய கிரேக்க நாகரீகத்தின் தடயங்கள் ஏகினா தீவிலும் காணக் கிடைக்கின்றன. அவை இடிபாடுகளுடன் காட்சி தரும் ஆலயங்கள் தான். ஆதி கால கிறிஸ்தவ போதகர்களும், ஏகினாவில் தமது தடயங்களை பதித்து விட்டுச் சென்றுள்ளனர்.  

ஆதி கால கிறிஸ்தவ சபைகள் ஏகினா தீவு, ஏதென்ஸ், பெலோப்போனோஸ் குடா நாடு, மற்றும் துருக்கியிலும் நிறுவப் பட்டன. துருக்கி பிற்காலத்தில் ஓட்டோமான் சாம்ராஜ்யமாக மாறியது. துருக்கி கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களாக மாறினார்கள். இஸ்லாமிய துருக்கியர்கள் கிரேக்கம் முழுவதையும் கைப்பற்றி, தமது சாம்ராஜ்யத்தில் ஒரு பகுதியாக இணைத்தனர். அப்பொழுது அங்கு வாழ்ந்த கிறிஸ்தவ மதத் துறவிகள் பலர் தலைமறைவாக இயங்கினார்கள். ஓட்டோமான் சாம்ராஜ்யத்தில், கிறிஸ்தவ மதம் தடை செய்யப் படவில்லை. ஆனால், இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை எதிர்த்து அரசியல் நடத்திய துறவிகள் மட்டுமே தலைமறைவாக வாழ்ந்தனர். அவர்கள் மறைந்து வாழ்வதற்கு ஏற்ற இடம் ஒன்று, மத்திய கிரேக்கத்தில் கிடைத்தது. இயற்கை அரண்களால் சூளப்பட்ட, எதிரிகளால் இலகுவில் கண்டறிய முடியாத இரகசிய இடம். அது ஒரு மலைப் பிரதேசம். ஆனால், ஒன்றுக்கொன்று தொடர்பற்ற உயரமான மலைப்பாறைகளை கொண்டது. அவற்றின் உச்சியில் மடாலயங்களை கட்டி, அங்கேயே தங்கி இருந்தார்கள். சிறுவர்களின் மாயாஜாலக் கதைகளில் மட்டுமே அப்படியான இடங்களை கற்பனையில் தரிசிக்கலாம். அந்த மர்ம மடாலயங்களின் கதை அடுத்து வரும்.

(தொடரும்)


கிரேக்க பயணக் கதையின் முன்னைய பதிவுகள்: 

1.கிரேக்க நாட்டு பயணக் குறிப்புகள்
2.ஒலிம்பிக்ஸின் தாயகம்

1 comment:

  1. நல்ல ஒரு விமர்சனம்
    மிக்க நன்றி.

    Australia Tamil News

    ReplyDelete