Thursday, November 08, 2012

பயணச் சீட்டு வாங்காமல் பயணம் செய்வோர் சங்கம்

உழைக்கும் வர்க்க மக்களை சுரண்டும் முதலாளித்துவத்திற்கு எதிரான மக்கள் போராட்டம், சமூகத்தின் பல மட்டங்களிலும் நடந்து கொண்டிருக்கிறது. பேரூந்து வண்டிகளில், ரயிலில் டிக்கட் வாங்காமல் பயணம் செய்வதும் ஒரு வகைப் போராட்டம் தான். பெரும்பான்மையான மக்கள், போக்குவரத்து கட்டண உயர்வை எதிர்த்து வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்வதில்லை.  ஆனால்,தமக்குத் தெரிந்த வழியில்,  அரசுக்கும், முதலாளிகளுக்கும் புரியும் மொழியில் தமது எதிர்ப்பை பதிவு செய்கின்றனர்.  நாளாந்தம் விலைவாசி ஏறிக் கொண்டேயிருந்தால், கிடைக்கும் சொற்ப வருமானம் வயிற்றுப்பாட்டுக்கே போதாது என்றால், மக்கள் என்ன செய்வார்கள்? ஐரோப்பாவிலும், பல தீவிர இடதுசாரி இயக்கங்கள், இத்தகைய "நூதனமான" போராட்டத்தை ஊக்குவித்து வருகின்றன. சுவீடனில் பயணச்சீட்டு இன்றி பிரயாணம் செய்பவர்களுக்காக  ஒரு சங்கம் அமைக்கப் பட்டுள்ளது. 

ஐரோப்பிய நகரங்களில், விசா எதுவுமின்றி தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு உதவிக் கொண்டிருந்த இடதுசாரி ஆர்வலர்கள் தான் அந்தப் போராட்டத்தை நிறுவனமயப் படுத்தினார்கள். சட்டபூர்வ அனுமதி இல்லாத காரணத்தினால், சட்டப்படி வேலை செய்ய முடியாதவர்கள், வறுமை காரணமாக பயணச்சீட்டு இன்றி பயணம் செய்வது வழக்கம். அப்படிப் பயணம் செய்யும் பொழுது பிடிபட்டால், அதையே சாட்டாக வைத்து நாடுகடத்தி விடுவார்கள். அதனால், சுவீடிஷ் இடதுசாரிகள், சட்டபூர்வ ஆவணங்கள் இன்றி தங்கி இருப்போருக்கு, பயணச் சீட்டுகளை வாங்கிக் கொடுத்து வந்தனர். 2001 ம் ஆண்டு, சுவீடிஷ் அரசு போக்குவரத்து கட்டணங்களை உயர்த்தியது. இதனால், சாதாரண சுவீடிஷ் உழைக்கும் வர்க்க மக்களும் பாதிக்கப் பட்டனர். மக்களின் அத்தியாவசிய துறையான, பொதுப் போக்குவரத்து துறை, அநியாய கட்டணம் வசூலிக்கின்றது என்று பலர் அதிருப்தியுற்றனர். 

planka.nu  என்ற அமைப்பு, பொதுப் போக்குவரத்தில் டிக்கட் வாங்காமல் பிரயாணம் செய்வோரின் சங்கமாக உருவாக்கப்பட்டது. அந்த சங்கத்தில் யாரும் உறுப்பினராக சேரலாம். ஒவ்வொருவரும் மாதாந்தம் 100 சுவீடிஷ் குரோனர் (அண்ணளவாக 10 யூரோ) சந்தா கட்டி வர வேண்டும். நீங்கள் ஆறு மாத சந்தாவை ஒரே தடவையிலும் செலுத்த விரும்பினால் 500 Kr . (100 குரோனர் கழிவு). தற்காலிகமாக சுவீடனுக்கு வந்திருக்கும் சுற்றுலாப் பயணிகள் என்றால், வாரத்திற்கு 50 குரோனர். நீங்கள் பஸ்ஸில், ரயிலில் பரிசோதகர் பயணச் சீட்டு இன்றி பிரயாணம் செய்து, பரிசோதகரிடம் பிடிபட்டு அபராதம் கட்டினால், அந்தத் தொகையை சங்கம் பொறுப்பெடுத்து கட்டி விடும். சுவீடனில் அபராதத் தொகை 1200 குரோணர்கள் (120 யூரோ) ஆகும். 

சுவீடனில் பயணச் சீட்டு இல்லாமல் பிரயாணம் செய்வது ஒரு கிரிமினல் குற்றமல்ல. அதனால், பொலிஸ் பிரச்சினை வருவதற்கு வாய்ப்பில்லை. பொதுப் போக்குவரத்து சட்டம் நாட்டிற்கு நாடு வேறுபடுகின்றது. அதனால், சில நாடுகளில் "பயணச் சீட்டு இல்லாமல் பயணம் செய்வோர் சங்கம்" கட்டுவது, சாத்தியமிலாமல் போகலாம். இருப்பினும், பிற நாடுகளிலும் இது போன்ற சங்கம் கட்டுவது எப்படி என்ற தகவல் இணையத்தில் கிடைக்கிறது. பல நகரங்களில் மெட்ரோ, ரயில் நிலையங்கள் இலத்திரனியல் கதவுகளால் பூட்டப் பட்டிருந்தாலும், அதற்கூடாக நுழைவது எப்படி என்பதை ஒரு வீடியோ மூலம் காட்டியிருக்கிறார்கள். 

நிச்சயமாக, "பயணச் சீட்டு வாங்காமல் பயணம் செய்வோர் சங்கம்" அரசாங்கத்திற்கு  உவப்பானதல்ல. பல தடவைகள், அரச அதிகாரிகள் மிரட்டல் விடுத்து வந்துள்ளனர். ஆனால், இது வரையிலும், அந்த சங்கத்தை சேர்ந்த எவரும் கைது செய்யப் பட்டு, வழக்குத் தொடுக்கப் படவில்லை. போராட்டத்தில் மறைந்திருக்கும் நியாயத் தன்மை காரணமாக,  அவர்கள் மேல் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அரசு அஞ்சுகின்றது. இங்கே எழுதப்பட்ட தகவல்கள், சுவீடனில் கூட நிறையப் பேருக்குத் தெரியாது. அதனால், விஷயம் பெரிதாகி ஊடகங்களின் கவனத்தைப் பெற்று, நாட்டில் எல்லோருக்கும் தெரிய வைப்பதை  விட, கண்டுகொள்ளாமல் பேசாமல் இருப்பது நல்லது என்றே அரசு நினைக்கின்றது. "சுவீடனில், தனியார் வாகனப் பாவனையை குறைக்க வேண்டும். நாட்டில் கார்கள் அதிகமாகி விட்டதால், சுற்றுச் சூழல் மாசடைகின்றது. அதற்குப் பதிலாக, பொதுப் போக்குவரத்தை இலவசமாக்கினால்  இந்தப் பிரச்சினையை தீர்க்கலாம்." இவ்வாறு அந்த இடதுசாரி ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். "பொது மக்களுக்கான போக்குவரத்து இலவசமாக்கப் பட வேண்டும்" என்ற கோரிக்கையை, பெரும்பாலான மக்கள் வரவேற்கவே செய்வர். 

ஏற்கனவே, சோவியத் யூனியனிலும், முன்னாள் சோஷலிச நாடுகளிலும், பொதுப் போக்குவரத்து ஒன்றில் இலவசமாக, அல்லது மிகவும் குறைந்த கட்டணத்தில் நடத்தப் பட்டு வந்தது. பல தசாப்தங்களாக, அந்த நாடுகளில் போக்குவரத்து கட்டணம் உயரவில்லை. சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர், நான் வெள்ளை ரஷ்யா (சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த குடியரசு) வுக்கு சுற்றுலா சென்றிருந்தேன். அப்போது கூட, தலைநகரான மின்ஸ்க் நகரில், சுரங்கரயில் போக்குவரத்து கட்டணம் மிகவும் குறைவாக இருந்தது. 0 .10 டாலர் சதத்திற்கு,  நகரின் ஒரு முனையில் இருந்து மறு முனைக்கு பயணம் செய்யக் கூடியதாக இருந்தது. மின்ஸ்க் நகரின் சுற்றளவு 30 கி.மி. இருக்கலாம். இன்றைய உலகமயமாக்கப்பட்ட பொருளாதார காலத்திலேயே இப்படி என்றால், சோவியத் யூனியன் சோஷலிச நாடாக இருந்த காலத்தில், வாழ்க்கை எந்தளவு இலகுவாக இருந்திருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள். இதை எல்லாம் நமது நாடுகளில் கற்பனை பண்ணக் கூட முடியாது. ஐரோப்பாவிலேயே, சுவீடன், நோர்வே போன்ற ஸ்கண்டிநேவிய நாடுகளில், பயணச் சீட்டின் விலை அதிகம். மிகவும் குறைந்தளவு பஸ் கட்டணம் 30 குரோணர்கள். 


மேலதிக தகவல்களுக்கு:
1.Planka.nu இணையத்தளம்: Free public transport  http://planka.nu/eng/ 
2.உங்கள் நாட்டிலும் "பயணச்சீட்டு வாங்காமல் பயணம் செய்வோர் சங்கம்"  அமைப்பது எப்படி? கைநூலை இங்கே தரவிறக்கிக் கொள்ளலாம்:
3.பயணச்சீட்டு இன்றி பயணம் செய்வது எப்படி என விளக்கும் வீடியோ: 

5 comments:

  1. தமிழகத்தில் பேருந்து கட்டணங்கள் கண்மூடித்தனமாக உயர்த்தப்பட்டபொழுது, போராடிய பு.மா.இ.மு தோழர்களின் போராட்டம் கட்டுரையை படிக்கும்பொழுது நினைவுக்கு வருகிறது.http://www.vinavu.com/2011/11/29/no-ticket/ கண்டங்கள் கடந்து நின்றாலும் உழைக்கும் வர்க்கத்தின் சிந்தனை ஒரே கோணத்தில் இருப்பது ஆச்சரியமளிக்கிறது.

    ReplyDelete
  2. மிகவும் சுவாரஸ்யமான நல்ல பல தகவல்கள் தந்தமைக்கு நன்றி.

    Tamil Newspaper

    ReplyDelete
  3. தமிழ் நாட்டில் இது போன்று ஒரு அமைப்பு உருவாகினால் என்ன ?????

    ReplyDelete
  4. //தமிழ் நாட்டில் இது போன்று ஒரு அமைப்பு உருவாகினால் என்ன ?????//

    உருவாக வேண்டும். அது ஒன்றும் கடினமான விடயமல்ல. அதற்கான ஆலோசனைகளை வழங்குவதும் இந்தப் பதிவின் நோக்கம்.

    ReplyDelete
  5. உறுவாக்கி விட்டால் போச்சு.... இந்த பதிவை வலைபூவில் பதிவு இட்டு இருக்கிறேன்... அதற்க்கு வரும் கருத்துகளை பார்த்து விட்டு நாம் ஒரு முடிவு செய்யலாம்.
    http://wheretheworldisgoing.blogspot.in/2012/11/blog-post.html

    ReplyDelete