Wednesday, September 19, 2012

சிங்கள அரசை பலப்படுத்தும், சிங்கள மக்கள் மீதான தாக்குதல்கள்

[தமிழினவாதிகள்: ராஜபக்சவின் தமிழகக் கூட்டாளிகள்!]
(மூன்றாம் பாகம்)

அப்பாவி  சிங்களவர்களுக்கு அடித்ததை நியாயப் படுத்தி, அதை நினைத்து பெருமைப் படுபவர்கள், உண்மையில் தாங்கள்  பிரதிநிதித்துவப் படுத்துவதாக கூறிக் கொள்ளும், தமிழ் மக்களை  தனிமைப் படுத்துகின்றனர் என்பதை உணர்வதில்லை. இந்த அறியாமையை எதிரி தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறான். நாம் சரி என்று நினைத்துக் கொண்டிருக்கும் எமது தவறுகளை, எதிரி தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வது அபாயகரமானது. ஏற்கனவே, நாங்கள்  இதனை ஈழத்தில் பார்த்து விட்டோம். 

புலிகளினால் நடத்தப்பட்ட தாக்குதல்களில்  கொல்லப் பட்ட சிங்கள மக்கள் பற்றி, திரும்பத் திரும்ப பரப்புரை செய்து தான், சிறிலங்கா அரசு பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவை திரட்டியது. சர்வதேச சமூகத்திற்கும் அதனை முதன்மைப் படுத்தி  பிரச்சாரம் செய்ததன்  மூலம், புலிகள் இயக்கத்தை  பயங்கரவாத இயக்கங்களில் பட்டியலில் சேர்க்க வழி வகுத்தது. புலிகளும், தமிழர்களும் எத்தனை வகையான நியாயமான காரணங்களை அடுக்கிய போதிலும், சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ள முன்வரவில்லை. சிங்கள பொது மக்கள் கொலை செய்யப்பட்ட தாக்குதல்களுக்கு, புலிகள் உரிமை கோரவில்லை. ஆனால், சர்வதேச சமூகம் அதை  நம்பத் தயாராக இருக்கவில்லை. மறுபக்கத்தில், புலி ஆதரவு தமிழ் ஊடகங்களில், சிங்கள மக்கள் மீதான தாக்குதல்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யப் படுவதையும், சர்வதேச சமூகம் அவதானித்து வந்தது.  இருப்பினும், சமாதான பேச்சுவார்த்தை காலத்தில், புலிகள் தமது போக்கை மாற்றிக் கொண்டால், மன்னித்து விட தயாராக இருந்தன. அதாவது, சிங்களப் பொது மக்கள் தாக்கப் பட மாட்டார்கள் என்று உறுதிமொழி கொடுத்திருந்தால், புலிகளின் பெயர் பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து நீக்கப் பட்டிருக்கும். (E.U. may decide to list LTTE as ‘terrorist’ by Friday, May 17th, 2006,        http://transcurrents.com/tamiliana/archives/169)  

சர்வதேச சமூகத்திற்கு புலிகள் எந்த உறுதிமொழியையும் கொடுக்காத சந்தர்ப்பத்தை, சிறிலங்கா அரசு சாமர்த்தியமாக பயன்படுத்திக் கொண்டது.  தமிழகத்து தமிழ் உணர்வாளர்களுக்கு எதிரான சதிவலையும், அவ்வாறே பின்னப் படுகின்றது. தமிழினவாதிகளின் சிங்கள யாத்திரீகர்கள் மீதான தாக்குதலை சரியென்று, நியாயப் படுத்தி பேசுகிறவர்கள் யார்? தமிழகத்திலும், வெளிநாடுகளிலும் வாழும் தமிழர்கள் ஆதரிக்கலாம். ஈழத்திலும் ஒரு சிறு தொகையினர் ஆதரிக்கலாம். சிங்களவர்களை விட்டு விடுவோம். இந்தியாவில் பிற மாநில மக்கள் ஆதரிப்பார்களா? பிற நாடுகளின் மக்கள் ஆதரிப்பார்களா? ஆக மொத்தம், குறிப்பிட்டளவு தமிழினவாத ஆதரவாளர்களைத் தவிர, வேறெங்கும் அனுதாபத்தை பெற முடியாத தாக்குதல்கள், இறுதியில் சிங்கள அரசின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கே உதவப் போகின்றது. பூண்டி மாதா கோயிலில் சிங்கள யாத்திரீகர்கள் விரட்டப்பட்ட செய்தியானது, வட இந்தியப் பத்திரிகைகளில் மட்டுமல்லாது, வாஷிங்டன் போஸ்ட்டில் கூட பிரசுரமானது.  ஆனால், எந்தவொரு அந்நிய ஊடகமும், அந்தச் செயலை நியாயப் படுத்தி எழுதவில்லை. (Sri Lankan Tamils protest attack on pilgrims in southern Indian state of Tamil Nadu,  http://www.washingtonpost.com/world/asia_pacific/sri-lankan-tamils-protest-attack-on-pilgrims-in-southern-indian-state-of-tamil-nadu/2012/09/06/27208a8a-f813-11e1-a93b-7185e3f88849_story.html)  


"மூன்றில் இரண்டு பங்கு சிங்களவர்கள் ராஜபக்சவுக்கு ஓட்டுப் போட்டுள்ளதால், சிங்கள மக்களை தாக்குவதில் தப்பில்லை," என்பது தமிழினவாதிகளின் வாதம். இவர்களது இலங்கை அரசியல் பற்றிய சிறுபிள்ளைத் தனமான அறிவு நகைப்பிற்கிடமானது. ராஜபக்சவுக்கு தமிழ்ப் பிரதேசங்களிலும் ஓட்டுக்கள் போடப் பட்டன.  அதே நேரம், சில சிங்கள மாவட்டங்களில், ராஜபக்சவை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளருக்கு அதிகப் படியான ஓட்டுகள் கிடைத்துள்ளன.  ஜனாதிபதித் தேர்தலை புலிகள் பகிஷ்கரித்திருக்கா விட்டால், இன்று  ராஜபக்சவுக்கு பதிலாக ரணில் ஜனாதிபதியாகி இருப்பார். இன்றைய தமிழினவாதிகள் கூறும் நியாயம், இனக்கலவரங்களின் போது   தென்னிலங்கையில் வாழ்ந்த தமிழர்களை கொல்வதற்கு,  சிங்கள இனவாதிகள் கூறிய  நியாயத்தை ஒத்திருக்கிறது. வட -கிழக்கு தமிழர்கள், தமிழீழம் கோரும் கூட்டணிக்கு வாக்களித்ததை சுட்டிக் காட்டி, தென்னிலங்கை வாழ் தமிழர்களை அடித்து விரட்டினார்கள்.  குறிப்பாக 1977 ம்  ஆண்டு  கலவரம் வெடிப்பதற்கு, சில மாதங்களுக்கு முன்னர் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில், தமிழர் விடுதலைக் கூட்டணி (TULF) அமோக வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத் தக்கது. அன்று கூட்டணிக் கட்சி, தமிழீழப் பிரகடனத்தை முன் வைத்து தேர்தலில் போட்டியிட்டிருந்தது.

பலவீனமான இலக்குகளான, இஸ்ரேலிய பொது மக்களை தற்கொலைக் குண்டு வைத்து தாக்கும் பாலஸ்தீன இயக்கமான ஹமாஸ் என்ன கூறுகின்றது? "பாலஸ்தீனர்களை இனப்படுகொலை செய்த இஸ்ரேலிய அரசு, ஜனநாயகத் தேர்தல்கள் மூலம் தான் தெரிவு செய்யப் பட்டது. இதன் மூலம், இஸ்ரேலிய மக்களும் அரசின் குற்றத்தில் பங்குபெறுகின்றனர். ஆகையினால், இஸ்ரேலிய மக்களைக் கொல்வதும்   நியாயமானது தான்."  அமெரிக்கர்கள் மேலான தாக்குதல்களுக்கு,  அல் கைதா கூறும் நியாயமும் அது தான். அதாவது, "அமெரிக்க அரசை மக்கள் ஜனநாயக தேர்தல்கள் மூலம் தெரிவு செய்கின்றனர். ஆகையினால், அரசின் செயல்களில் அவர்களுக்கும் பங்குண்டு." ஜனநாயகத் தேர்தல் ஒரு கண்துடைப்பு நாடகம் என்பதும், ஓட்டுப் போடும் மக்களிடம் அதிகாரம் இல்லை என்பதும் இனவாதிகளுக்கு புரிவதில்லை.  அதற்காக, இஸ்ரேல், அமெரிக்கா, சிறிலங்கா அரசுகள் செய்தது எல்லாம் நியாயம் என்று அர்த்தப் படுத்த முடியாது. இந்த மூன்று அரசுகளும் இனப்படுகொலை செய்துள்ளதை யாரும் மறுக்கவில்லை. இந்த மூன்று நாடுகளிலும், ஈவிரக்கமற்ற கொலைகாரர்கள் ஆட்சியாளர்களாக இருந்துள்ளனர்.

அமெரிக்கா, இஸ்ரேல், இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையில் அடிப்படை  ஒற்றுமை ஒன்றுண்டு.   மூன்றுமே மேற்கத்திய நலன் சார்ந்த நாடுகள். சந்தைப் பொருளாதாரத்தை கை விடாத நாடுகள். ஜனநாயக தேர்தல் விளையாட்டை, நன்றாக  ஆடத் தெரிந்த நாடுகள். சிங்களவர்கள் எல்லோரும், தமிழர்களை அழிக்கும் நோக்குடன் ராஜபக்சவுக்கு ஓட்டுப் போட்டதாக நினைப்பது, எமது அறியாமையைத் தான் காட்டுகின்றது. இனவாதம் மட்டுமே தேர்தலில் தீர்மானிக்கும் சக்தியாக இருந்திருந்தால், பெரும்பான்மை மக்கள் ஜாதிக  ஹெல உறுமய (JHU)  கட்சிக்கு தான் வாக்களித்திருக்க வேண்டும். இனப் பற்றை விட, நாட்டில்  வேறு பிரச்சினைகளும் மக்களுக்கு  இருக்கின்றன என்பதை, இனவாதிகள் உணர்ந்து கொள்ள மாட்டார்கள். ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். தமிழ் உழைக்கும் வர்க்கம், அரசுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் நேரம்,  தமிழினவாதிகள் யாரும் தமிழ் மக்களின் போராட்டத்தை ஆதரிக்க மாட்டார்கள். சிங்கள இனவாதிகளும் அவ்வாறு தான், சிங்கள உழைக்கும் மக்களின் போராட்டங்களை ஆதரிப்பதில்லை. 

முப்பது வருடங்களாக, இலங்கை அரசு, தேசப் பாதுகாப்பை காரணமாக காட்டி சிங்கள மக்களை ஏமாற்றி வந்தது. போர் நடந்த காலத்தில், அத்தியாவசிய பாவனைப் பொருட்களின்  வரி உயர்த்தப் பட்டாலும், யாரும் முணுமுணுக்கவில்லை. போர் முடிந்த பின்னர், சிங்கள மக்களின் கவனம் திசை திரும்புகின்றது. மக்கள் பொருளாதாரப் பிரச்சினைகளை முக்கியமாகக் கருதுகின்றனர். எரிபொருள் விலையேற்றம், கல்வியை தனியார்மயமாக்கல், போன்றவற்றுக்கு எதிராக சிங்கள மக்கள் போராடி வருகின்றனர். இதனால், சிங்கள மக்கள் மத்தியில் ராஜபக்சவுக்கு ஆதரவு குறைந்து வருகின்றது. முன்னரைப் போல, "புலி வரும்" என்று பூச்சாண்டி காட்டி ஏமாற்ற முடியாது. அதனால், அரசு போராடும் மக்களை அடக்குவதற்காக, பொலிஸ் அடக்குமுறைக் கருவியை ஏவி விடுகின்றது. சிங்கள மக்களுக்கும், சிங்கள காவல் துறைக்கும் இடையில் மோதல்கள் வெடிக்கின்றன. ராஜபக்சவின் சர்வாதிகார அடக்குமுறை காரணமாக, சாதாரண சிங்கள மக்கள் ஆட்சி மாற்றத்திற்காக ஏங்குகின்றனர். அரபு நாடுகளில் நடந்ததைப் போல, மக்கள் எழுச்சி ஏற்படுமோ என்று அரசே அஞ்சுகின்றது.

இப்படியான நெருக்கடியான தருணத்தில், ராஜபக்சவை தூக்கி நிறுத்துவது யார் என்று நினைக்கிறீர்கள்? உடுக்கை இழந்தவன் கை போலே, ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு.(குறள்) ராஜபக்சவின் கூட்டாளிகளான தமிழகத் தமிழினவாதிகள், சந்தர்ப்பம் பார்த்து, அப்பாவி சிங்களவர்கள் மீது தாக்குதல் நடத்துவார்கள். இந்த செய்தி சிங்கள தேசமெங்கும் பரவும். ஒட்டு மொத்த தமிழர்களும், ஒட்டு மொத்த சிங்கள இனத்தின் மீது வன்மம் கொண்டிருப்பதாக, சாதாரண சிங்கள மக்கள் நம்புவார்கள். போதாக்குறைக்கு, தமிழ்நாட்டில் மறைந்திருக்கும் புலிகளே இவ்வாறான செயலில் ஈடுபடுவதாக அரசு அறிவிக்கும். இதனால், சிங்கள மக்கள் தமது பாதுகாப்பு குறித்த அச்சம் காரணமாக ராஜபக்சவை ஆதரிப்பார்கள். ராஜபக்சவுக்கு ஆதரவு தேடிக் கொடுப்பது தான் தமது நோக்கம் என்றால், தமிழினவாதிகள் அதனை வெளிப்படையாக கூற வேண்டும்.

ஒரு பேச்சுக்கு, ராஜபக்சவுக்கும், தமிழினவாதிகளுக்கும் இடையில் நேரடியான தொடர்பிருக்க வாய்ப்பில்லை என்று வைத்துக் கொள்வோம். சிங்கள மக்கள் ராஜபக்ச அரசை எதிர்த்து போராடும் நேரத்தில் எல்லாம், தமிழ்நாட்டில் சிங்கள யாத்திரீகர்கள் தாக்கப் படுகின்றனர். அது எப்படி? ஒரு தடவை நடந்தால் தற்செயல். இரண்டு, மூன்று தடவை நடந்தால் திட்டமிட்ட செயல். இலங்கையின் இன்றைய நிலவரம் என்னவென்று, இந்த தமிழின வாதிகளுக்கு தெரியுமா? சிங்கள அறிவுஜீவிகள், சிங்கள மக்களின் எழுச்சி ஏற்பட்டு, எந்த நேரமும் அரசாங்கம் கவிழலாம் என்று,  ராஜபக்ச அரசு அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கிறது. (The strike of university academics is an indirect plot to engineer a regime change. It is similar to what happened in Indonesia where the Suharto’s government was ousted, State Intelligence Service reports said. http://www.dailynews.lk/2012/09/17/news02.asp) 

2011, ஜனவரி முதல் மே மாதம் வரையில், கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலையத்தில் பணியாற்றும் சிங்களத் தொழிலாளர்கள் அரசுக்கு எதிரான தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொலிஸ் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒரு தொழிலாளி கொல்லப் பட்டார். இதனால், சிங்கள உழைக்கும் மக்கள் ராஜபக்ச அரசுக்கு எதிராக எழுச்சி கொள்ள ஆரம்பித்தனர். 2011 ஜூலை மாதம், சிங்கள ஊடகவியலாளர்கள் அரச அடக்குமுறைக்கு எதிராக போராடிக் கொண்டிருந்தார்கள்.   அதே நேரம், தமிழ்நாட்டில் என்ன நடந்தது? 2011, ஜனவரி, சென்னை மகாபோதி தாக்கி உடைக்கப் பட்டது. அங்கிருந்த புத்த பிக்குகளும் தாக்கப்பட்டனர். 2011, ஆகஸ்ட் மாதம், சென்னையில் சிங்கள யாத்திரீகர்கள் தாக்கப் பட்டனர்.  இந்த வருடமும், ஒரே மாதிரியான நாடகம் மீண்டும் அரங்கேறியுள்ளது.  ஸ்ரீ லங்காவில், அரசு கல்வியை தனியார்மயமாக்குவதற்கு எதிராக,   மாணவர்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர்.  ஆசிரியர் , மாணவர் போராட்டம் காரணமாக, நாடு முழுவதும் இரண்டு மாதங்களாக பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டிருந்தன. இந்த நெருக்கடியான தருணத்தில், ராஜபக்ச அரசு கவிழ விடாது  தூக்கி நிறுத்துவது, சீமான், வைகோ போன்ற தமிழக நண்பர்களின் கடமை அல்லவா? 2012, செப்டம்பர்  முதல் வாரம்,  தமிழ்நாட்டில் பூண்டி மாதாவை தரிசிக்க சென்ற சிங்கள யாத்திரீகர்கள் தாக்கப் பட்டனர். இந்த தாக்குதல் நடந்து, ஓரிரு தினங்களில், மூடப்பட்ட பல்கலைக்கழகங்களை திறப்பதாக அரசு அறிவித்தது. 

The Sunday Times பத்திரிகையில் நகைச்சுவையாக எழுதப்பட்ட பத்தி ஒன்றிலிருந்து:
Do you know who else you are helping, Jayalalithaa? Now, don’t be surprised about this but the other person you are helping by indulging in your anti-Sri Lanka antics is of course Mahinda maama himself!
What you don’t realise is that Mahinda maama has found it hard to sail the ship of state smoothly in recent months. Students are protesting about exams, workers are protesting about salaries, motorists are protesting about fuel, and everyone else is protesting about power cuts. 
(Mahinda Jai Ho, Jaya hoo-hoohttp://www.sundaytimes.lk/120909/columns/mahinda-jai-ho-jaya-hoo-hoo-11678.html)

ராஜபக்சவுக்கும், சீமான், வைகோ போன்ற தமிழினவாதிகளுக்கும் இடையிலான தொடர்பை, இன்னமும் நம்ப மறுப்பவர்கள் மேற்கொண்டு வாசிக்கவும்.  தமிழ்நாடு வரும் "சிங்களவர்கள்", எப்போது வருகிறார்கள்? எந்த இடத்திற்கு வருகிறார்கள்?  இது போன்ற தகவல்களை யார் கொடுக்கிறார்கள்? உண்மையில், ஒவ்வொரு நாளும் நூற்றுக் கணக்கான  சிங்களவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.  இந்த தகவலைப் பெற, நீங்கள் அதிகம் சிரமப் படத் தேவையில்லை. சென்னையில், திருச்சியில் உள்ள சுற்றுலா முகவர்கள், வர்த்தகர்களிடம் கேட்டால் சொல்வார்கள். பூண்டிமாதா தேவாலயத்திற்கு வழிபட சென்ற யாத்திரீகர்களில் பெரும்பான்மையானோர், நீர்கொழும்பை சேர்ந்த கிறிஸ்தவ தமிழர்கள். அவர்களின் முன்னோர்கள் தமிழ் நாட்டில்  இருந்து சென்று குடியேறிவர்கள். சிலர் இப்போதும், தமிழ் நாட்டில் உள்ள உறவினருடன் தொடர்பு வைத்துள்ளனர்.  அவர்களைத் தான், அதாவது தமது தொப்புள்கொடி உறவுகளைத் தான், நமது தமிழினவாதிகள் வீராவேசமாக தாக்கி இருக்கிறார்கள். 

கிறிஸ்தவ யாத்திரீகர்கள் வருவதற்கு, சரியாக ஒரு வாரத்திற்கு முன்னர், 150 சிங்கள புத்த பிக்குகள், திருச்சி விமான நிலையத்தில் வந்திறங்கினார்கள். யாருக்காவது தெரியுமா? அந்த புத்த பிக்குகள், எந்த வித பிரச்சினையுமின்றி, சென்னையில் உள்ள மகாபோதி விகாரைக்கு சென்றனர். அவர்களை ஏற்றிச் சென்ற வாகனங்கள், திருச்சியில் இருந்து சென்னை செல்லும் வரையில், வழியில் ஒரு நாய் கூடக் குரைக்கவில்லை. இலங்கையில் புத்த பிக்குகளின், தமிழர்களுக்கு எதிரான இனவெறி உலகறிந்த விடயம் ஆயிற்றே. தமிழினக் காவலர்கள் யாரை தாக்கியிருக்க வேண்டுமோ, அவர்களை பாதுகாப்பாக அனுப்பி வைத்து விட்டு, கிறிஸ்தவ-தமிழ்  யாத்திரீகர்களை தாக்கியதன்  உள்நோக்கத்தை  உங்களால் புரிந்து கொள்ள முடிகின்றதா? 
After the ethnic Eelam war came to an end, the Trichy-Colombo sector was patronized by the Sinhala public more than ever. The entry of Christian pilgrims was only a recent phenomenon. For instance, just a week prior to the Christian pilgrims' attack, around 150 Buddhist monks landed in Trichy and proceeded to Chennai in three hired buses. Usually, these monks make it a point to visit the Sri Lanka Maha Bodhi Centre at Kenneth Lane opposite Egmore railway station before going to Buddhist shrines such as Gaya and Sarnath. These pilgrims prefer Trichy, for it offers them an opportunity to visit other pilgrim centres in the region such as Sri Rangam Sri Renganathar temple, Thanjavur Big Temple and Samayapuram Maha Mariamman temple. The immigration officer said these people would continue to visit India for there was no hurdle in the issuance of visas, but they would rather prefer Trivandrum rather than Trichy.
(Attack on Lankans proves costly for airlines, http://m.timesofindia.com/city/madurai/Attack-on-Lankans-proves-costly-for-airlines/articleshow/16377060.cms)
எதிர்கால பொருளாதார திட்டங்களை அமுல் படுத்தவும், ராஜபக்ச அரசுக்கு தமிழினவாத கூட்டாளிகளின் உதவி தேவைப் படுகின்றது. இலங்கையில் தற்பொழுது, சீனாவின் முதலீடுகள்  அதிகரித்து வருகின்றன. முன்னர் என்றுமில்லாதவாறு, சீன அரசாங்கத்தின் உயர் மட்ட தலைவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்கின்றனர். அவர்கள் ஒன்றும் சும்மா ஊர் சுற்றிப் பார்க்க வரவில்லை. குறைந்தது பத்து பொருளாதார ஒப்பந்தங்களிலாவது கையெழுத்து போட்டு விட்டுச் செல்கின்றனர். 
(Chinese Defence Minister arrives in Sri Lanka, http://www.colombopage.com/archive_12A/Aug29_1346245150CH.php)
(Cherishing China!http://www.ft.lk/2012/09/12/cherishing-china/
இலங்கைப் பொருளாதாரத்தில் இதுவரை காலமும் நிலவி வந்த, இந்திய, சீன சமன்பாடு இதனால் மாறுபடலாம். இந்திய முதலீடுகள்  குறைந்து கொண்டே சென்றால், இந்தியாவின் பிடி தளர்ந்து கொண்டே போகும். அதனை இந்தியா ஒருக்காலும் விரும்பப் போவதில்லை. சீனாவின் முதலீட்டை நிராகரிக்க முடியாது, அதே நேரம் அயலவனான இந்தியாவையும் பகைத்துக் கொள்ள முடியாது. அதற்கு என்ன வழி? இனவாதத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட தமிழினவாதிகளின் நடவடிக்கைகள் காரணமாக, இந்திய-இலங்கை பொருளாதார உறவை பாதிக்கும். உறவு முழுமையாக துண்டிக்கப் பட்டாலும், ராஜபக்ச அரசுக்கு கவலையில்லை.  இப்படி எல்லாம் நடக்கும் என்று, இந்திய மத்திய அரசுக்கும் தெரியும். அதனால், இந்திய அரசு  ஒரு கட்டத்திற்கு மேல் தமிழினவாதிகளுக்கு சுதந்திரம் கொடுக்க மாட்டாது. 

ராஜபக்ச அரசு, சிங்கள மக்களின் ஆதரவை தக்க வைத்துக் கொள்வது மட்டுமல்ல, தமிழ் மக்களின் உரிமைகளையும் கொடுக்கப் போவதில்லை. போர் முடிந்து மூன்றாண்டுகளாகியும், ஈழத் தமிழர்களுக்கு எந்தத் தீர்வையும் கொடுக்காமல் இழுத்தடித்து வருகின்றது.  இந்திய அரசு வலியுறுத்தும், 13 ம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப் படுத்தக் கூட, இலங்கை அரசு மறுத்து வருகின்றது. அரசுடன் சேர்ந்தியங்கும் தமிழ்க் கட்சிகளும், தமது செல்வாக்கைப் பயன்படுத்தி எதையும் செய்ய முடியவில்லை. இந்த தருணத்தில், இந்தியா மட்டுமே அழுத்தம் கொடுக்க முடியும்.  தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏதோ ஒரு வழியில் இந்திய அனுசரணையைக் கோருகின்றது. இலங்கை அரசின் மீது அழுத்தம் கொடுப்பதற்கு இந்தியாவை விட்டால் வேறு நாடு இல்லை. அப்படியான சந்தர்ப்பத்தில், சிங்கள யாத்திரீகர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்தால், ஈழத் தமிழரின் தீர்வு எட்டாக்கனியாகி விடும். எந்தவொரு தீர்வையும், "சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்" என்ற ஒரு காரணத்தை கூறி , சிறிலங்கா அரசு  நிராகரித்து விடும். (ஏற்கனவே நோர்வேயின் மத்தியஸ்தம் புலிகளுக்கு சார்பானது என்று கூறி, சிங்கள இனவாத சக்திகள் காட்டிய கடுமையான எதிர்ப்பு இங்கே நினைவு கூறத் தக்கது.) ஆகவே, ராஜபக்சவின் கரத்தை பலப்படுத்துவது மட்டுமல்ல, ஈழத் தமிழருக்கு நிரந்தர தீர்வெதுவும் கிடைக்க விடாமல் தடுப்பதும், தமிழினவாதிகளின் நோக்கமாக உள்ளது.  இதனை இந்தியாவின்  எகானமிக்  டைம்ஸ் பத்திரிகையும் உறுதிப்படுத்தியுள்ளது. (Minority rights in Sri Lanka aren’t helped by targeting its visiting civilians,  http://economictimes.indiatimes.com/opinion/editorial/minority-rights-in-sri-lanka-arent-helped-by-targeting-its-visiting-civilians/articleshow/16274681.cms)

இந்தியாவின் பொருளாதார பலத்துக்கு முன்னால், இலங்கை ஒரு சுண்டைக்காய் நாடு என்பது எல்லோருக்கும் தெரியும். இரு நாட்டு வர்த்தகத்தைப் பொறுத்த வரையில், இலங்கையில் இந்தியாவின் முதலீடுகள் அதிகம். இதனால், இலங்கை வணிகர்களை விட, இந்திய வணிகர்களே அதிக இலாபம் சம்பாதிக்கின்றனர். இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதியாவதை விட, பத்து மடங்கு அதிகமான பொருட்கள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு ஏற்றுமதியாகின்றன. இது பற்றி, தமிழ் நாடு தொழில் வர்த்தக சங்கம் (NCCI) மிகவும் தெளிவாக கூறுகின்றது:
"இந்தியா- இலங்கை தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் பெருகி வருகிறது. சுமார் 5 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு இந்த இருவழி வர்த்தகம் தற்போது நடைபெற்று வருகின்றது. இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் சரக்குகளின் மதிப்பை விட 8 மடங்கு அதிகமாக இந்தியாவில் இருந்து சரக்குகள் இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
அத்துடன் இலங்கையில் இந்தியா 500 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு முதலீடு செய்து நான்காம் இடத்தில் உள்ளது.
இந்த வணிகம் முதலீட்டில் தமிழகத்தின் பங்கு அபரிமிதமானது. தமிழகத்தின் தொழில் பொருளாதார வளர்ச்சிக்கு இலங்கையுடனான இந்த தொடர்பு மிக அவசியமானது." (இலங்கை பயணிகளின் அச்சத்தை போக்க வேண்டும்,    http://tnchamber.in/2012/09/ceylone-people/)

இந்தியாவின் முதலீட்டில் கணிசமான பங்கு தமிழகத்தில் இருந்து போகின்றது. உதாரணத்திற்கு, நல்லி சில்க்ஸ் தயாரிக்கும் உடுபிடவைகள், சாரம், சட்டைகளை சிங்களவர்களும் அணிகின்றனர். ஒரு பொருளை இரண்டு மில்லியன் மக்களுக்கு (ஈழத் தமிழர்கள்) விற்பனை செய்வதால் அதிக பணம் கிடைக்குமா? அல்லது பத்து மில்லியன் மக்களுக்கு (சிங்களவர்கள்) விற்பதால் அதிக இலாபம் கிடைக்குமா? தமிழ்நாட்டு முதலாளிகள் எதை விரும்புவார்கள்? (Jaya’s Sri Lanka moves are powerful, but shortsighted, http://www.firstpost.com/politics/jayas-sri-lanka-moves-are-powerful-but-shortsighted-442999.html)
யாத்திரீகர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த, கொழும்புத் தமிழ் வணிகர்கள் பற்றிய செய்தி தமிழ் ஊடகங்களில் வெளியாகியது. ஆனால், தமிழ்நாட்டு தொழிலதிபர்கள் கூட, தமது வர்த்தகம் கேட்டு விடக் கூடாது என்பதற்காக, இலங்கை அரசுடன் சமரசம் செய்து கொண்டுள்ளனர். அந்தச் செய்தியை, எந்தவொரு தமிழ் ஊடகமும் (இணையத் தளம் உட்பட) வெளியிடவில்லை.

"தயவு செய்து, இலங்கையர் யாரும் தமிழ்நாட்டுக்கு சுற்றுலா போக வேண்டாம், என்ற அறிவித்தலை,   வாபஸ் பெற வேண்டுமென்று," தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தை சேர்ந்தவர்கள் ராஜபக்ச அரசிடம் கெஞ்சியுள்ளனர். சிங்கள யாத்திரீகர்களை அனுப்புவதை நிறுத்த வேண்டாம் என்றும், இனிமேல் இந்த மாதிரியான அசம்பாவிதம்  நிகழ விடாது தாங்கள் பார்த்துக் கொள்வதாகவும்  வாக்குறுதி அளித்துள்ளனர். இந்தச் செய்தி எந்தவொரு தமிழ் ஊடகத்திலாவது வந்திருக்கிறதா? இதெல்லாம் வராது. அதற்குப் பிறகு, தமிழினவாதிகளின் சாயம் வெளுத்து விடும். அவர்கள் தமிழ்நாட்டு தமிழ் முதலாளிகளிடம் வாலாட்ட மாட்டார்கள். தமிழினவாதிகளின் சிங்கள எதிர்ப்புப் போராட்டம் ஒரு கட்டத்திற்கு அப்பால் நகர முடியாது. இந்திய மூலதனத்திற்கு பங்கம் விளைந்தால், தமிழினவாதிகள் தமிழ் நாட்டில் இருந்தே விரட்டப் பட்டு விடுவார்கள். அதற்குப் பிறகு, கடல்கடந்து இலங்கை சென்று, ராஜபக்சவிடம் அடைக்கலம் கோர வேண்டியிருக்கும். என்ன இருந்தாலும், ராஜபக்ச தமிழினவாதிகளிடம் நிறையவே நன்றிக் கடன் பட்டுள்ளார். தமிழினவாதக் கூட்டாளிகளின் உதவி கிட்டியிரா விட்டால், பிரமாண்டமான இந்திய மூலதனத்தை அசைக்க முடிந்திருக்குமா? 

(முற்றும்) 

இந்த தொடரின் முன்னைய பதிவுகள்:
1. தமிழினவாதிகள்: ராஜபக்சவின் தமிழகக் கூட்டாளிகள்!
2.இந்துத்துவா கொடியில் பூத்த, சிங்கள-தமிழ் இனவாத மலர்கள் 

5 comments:

  1. தமிழ் ஈழம் ஏன் வேண்டாம் என்று உரைக்கின்றீர்,விளக்க முடியுமா?

    ReplyDelete
  2. ஒரு நாள் ஈழம் அமைவது பற்றி கட்டுரை எழுதி இருத்திர் மற்றொரு நாள் ஈழம் வேண்டாம் என்பது போல கட்டுரை எழுதி உள்ளிர் உங்கள் உண்மை கருத்து என்ன?

    ReplyDelete
  3. நான் எங்கேயும் ஈழம் வேண்டாம் என்று சொல்லவில்லை, ஈழம் அமைவது பற்றியும் கட்டுரை எழுதவில்லை. அது உங்களது புரிதல் சார்ந்தது.
    ஈழம் வேண்டும் சொல்லும் எவரும், அதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பேசுவதில்லை. தமிழீழம் சாத்தியமா, இல்லையா என்ற விவாதம் கடந்த ஐம்பது ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், தமிழீழம் வேண்டும் என்று கூறும் எவரும், அது எப்படி சாத்தியப்படும் என்று விளக்குவதில்லை. தமிழ் மக்களுக்கே ஈழம் பற்றிய அறிவு போதாது. தமிழ் மக்கள், ஈழம் பற்றிய சந்தேகங்களை கேட்டால், பதில் ஏதும் கூறாமல் நழுவுகிறார்கள்.
    1.ஈழம் என்றால் என்ன?
    2.அதற்குள் எல்லா தமிழ் மக்களும் அடங்குவார்களா? அல்லது குறிப்பிட்ட அளவு தமிழர்கள் மட்டும் தானா?
    3.ஈழத்துக்கு வெளியே வாழும் மிகுதித் தமிழர்களை என்ன செய்வது?
    4.ஈழத்தில் வாழும் சிங்கள மக்களை என்ன செய்வது?
    5.ஈழத்தில் வாழும் முஸ்லிம் மக்களுக்கு தீர்வென்ன?
    6.ஈழம் கிடைப்பதற்கான உள்ளக, புறவய காரணிகள் என்ன?
    7.அந்நிய நாடுகள் ஆதரிக்குமா? 8.ஈழத்தை எப்படி அடைவது? அடைந்த பின்னால் எப்படி பாதுகாப்பது?
    9.சிங்கள சிறிலங்காவுடன் எப்படியான உறவைப் பேண வேண்டும்?
    10.சிறிலங்கா சந்தர்ப்பம் பார்த்து மீண்டும் படையெடுத்து வராதா?
    11.அந்த அபாயத்தை தடுப்பதற்கு சிங்கள அரசுடன் நட்புறவு உடன்படிக்கை செய்ய வேண்டுமா? தமிழின தீவிரவாதிகள் அப்படியான ஒப்பந்தத்தை துரோகச் செயலாக கருத மாட்டார்களா?
    12.சிறிலங்காவில் வாழும் மலையகத் தமிழர்கள் தனி நாட்டுக்காக போராடினால் ஆதரிக்க வேண்டுமா? 13.அந்த தருணத்தில் தமிழீழ அரசின் நிலைப்பாடு என்ன? மலையகத் தமிழீழத்திற்கான போராட்டத்தை ஆதரிக்குமா? அல்லது தமிழர்களின் போராட்டத்தை அடக்கும் சிறிலங்கா அரசுடன் ஒத்துழைக்குமா? அப்படி ஒத்துழைத்தால், அது தமிழினத் துரோகம் ஆகாதா?
    14.அதே போன்று, தமிழ்நாட்டில் தமிழர்கள் தனி நாட்டுக்காக போராடினால், தமிழீழ அரசு என்ன செய்யும்? தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்குமா? அல்லது இந்திய அடக்குமுறை அரசை ஆதரிக்குமா?
    15.ஈழத்தின் பொருளாதாரம் என்ன? 16.பொருளாதாரத் தேவைகளுக்காக பிற நாடுகளை, தங்கியிருக்க வேண்டுமா?
    17.குறிப்பாக சிங்கள நாட்டை தங்கியிருக்க வேண்டுமா?
    18.இந்தியாவில் தங்கியிருக்க வேண்டி வரும் என்றால், அது இந்தியாவுக்கு அடிமையாவதாகாதா?
    19.இஸ்ரேலுக்கு உதவுவது போல, அமெரிக்கா தமிழீழத்திற்கு உதவுமா? அப்படியானால் தமிழீழம் இஸ்ரேல் போன்று செயற்பட வேண்டுமா? 20.இஸ்ரேல் தன்னை சுற்றியுள்ள அரபு நாடுகளை பகைத்துக் கொண்டிருப்பதைப் போல, தமிழீழம் இந்தியாவை பகைத்துக் கொள்ள வேண்டுமா?
    21.இது குறித்த ஆய்வுகளை யாராவது செய்திருக்கிறார்களா?

    இப்படியான சந்தேகங்கள் தமிழ் மக்களுக்கு இருக்கின்றன. முதலில் அந்த சந்தேகங்களை தீர்த்தால் தானே தமிழ் மக்கள் ஈழத்தை ஆதரிப்பார்கள்?

    ReplyDelete
  4. கலையரசன்,

    ஒரு தீர்வு சரியாக இருக்குமென நினைக்கிறேன். தலைவர் வருவாருன்னு கூறிக்கொண்டிருக்கும் புலம்பெயர்ந்த தமிழர்களையெல்லாம் இலங்கைக்கு அனுப்பிவிட வேண்டும். அப்பொழுதுதான் இவர்கள் யதார்த்தை புரிந்துகொள்வார்கள்.

    ReplyDelete
  5. ///புலிகளினால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் கொல்லப் பட்ட சிங்கள மக்கள் பற்றி, திரும்பத் திரும்ப பரப்புரை செய்து தான், சிறிலங்கா அரசு பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவை திரட்டியது. சர்வதேச சமூகத்திற்கும் அதனை முதன்மைப் படுத்தி பிரச்சாரம் செய்ததன் மூலம், புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கங்களில் பட்டியலில் சேர்க்க வழி வகுத்தது. புலிகளும், தமிழர்களும் எத்தனை வகையான நியாயமான காரணங்களை அடுக்கிய போதிலும், சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ள முன்வரவில்லை. ,///
    நான் சிறுவயதில் இருக்கும் போது ஊரிலே பல கதைகள் இயக்கத்தை பற்றி பெருமையாக சொல்லுவார்கள் ஆனால் அதில் சில உண்மையில் பெருமை பட கூடியதல்ல என்பது இந்த கட்டுரையை படிக்கும் பொது மனதில் நிழலாடுகிறது. எப்படி தமிழ் மன்னன் தான் பிடித்த நாடுகளில் எல்லாம் இந்து கோவில்கள் கட்டினான் என்று அறியும் போது நாங்கள் இன்புற்றோமோ அதன் விளையு இன்று ஈழத்தில் விகாரைகள் கட்டும் பொது உணர்கிறோம். சொன்ன கதைகளில் ஒன்று குமரப்பா புலேந்திரன் அவர்களின் குழுக்கள் சிங்கள கிராமத்துக்குள் தனியாக புகுந்து பல சிங்களவர்களை வெட்டி சைகுமலவுக்கு வீரர்கள் துணிந்தவர்கள் என்பது போலான கதைகள் சொன்னது இன்றும் என் நினைவில் இருக்கிறது இதன் உண்மை பொய் சரியாக எனக்கு தெரியாது ஆனாலும் இக்கட்டுரையை படிக்கும் போது இது நினைவில் வந்தது. மாணவர்கள் போராட்டம் தமிழகம் எங்கும் சுடர் விட்டு எரிந்துகொண்டிருக்கிறது இது நல்லதொரு விடயம் நாளைய எந்த ஒரு அடக்கு முறைக்கும் மக்கள் குரல் கொடுக்க இது வழிகாட்டும் ஆனால் அந்த மகிழ்ச்சிக்குள் மண்ணள்ளி போடுவது போலான செயல் தான் புத்த பிட்சுவை அடித்த காட்டு மிராண்டி செயல் இதற்க்கு பதிலாக இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்கு சிங்களவர்கள் பதில் கொடுத்தால் என்னவாகும்?????????? இது போராட்டமா? இனகலவரதுக்கு போடபட்ட பிள்ளையார் சுழியா?

    தீக்குளிப்பு ?????????? ஈழத்துக்காக போராடிய இன்று இராணுவத்திடம் பிடிபட்டு விடுதலை ஆகி இருக்கும் முன்னாள் போராளிகளும் இருந்த பிள்ளைகளை போராட்டத்தில் இழந்து இன்று வயதான காலத்தில் அனாதைகளாக உணவுக்கு வழியின்றி எந்த உதவியும் தடுமாறும்பலரை கண் முன் காண்கிறோம் ஆனால் அன்று போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் புலம் விட்டு சென்றவர்கள் நல்ல வசதியுடன் தங்கள் பெற்றவர்களுக்கு அனுப்பி வட்டிக்கு கொடுத்து வியாபாரங்கள் செய்து வசதியுடன் இருக்கிறார்கள் இப்படியான சுயநல மனிதர்கள் அதிகம் இருக்கும் நம் இனத்தில் ஒருவன் தன் குடும்பத்தை அனாதையாக விட்டு விட்டு இறப்பது போலான ஒரு கேவலமான செயல் வேறு எதுவும் இல்லை. இது என் அனுபவம் கொடுத்த கருத்து. இது ஒரு மன வியாதி தீக்குளிப்பது இதுவும் எண்கள் அரசியல் வாதிகளால் வளர்த்து விடபட்ட மூட நம்பிக்கையில் ஒன்று.....

    ReplyDelete