Sunday, September 02, 2012

இஸ்ரேலின் "செவ்விந்தியர்கள்": அழிந்து கொண்டிருக்கும் பழங்குடி இனம்

அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் பொதுவான ஒற்றுமை ஒன்றுண்டு. இரண்டுமே பல ஐரோப்பிய நாடுகளில் இருந்து சென்று குடியேறிய வெள்ளையின மக்களால் உருவாக்கப் பட்ட தேசங்கள். இரண்டு தேசங்களிலும், பூர்வகுடிகள் ஆக்கிரமிப்பாளர்களால் அடித்து விரட்டப் பட்டார்கள். வந்தேறுகுடிகள் அனைத்து உரிமைகளுடனும் சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன. மண்ணுக்கு உரித்தான  மக்கள், உரிமைகள் மறுக்கப் பட்டு, சிறியளவு பிரதேசத்திற்குள் ஒடுங்கி வாழ்கின்றன. இஸ்ரேலில் வாழும் பாலஸ்தீன மக்களின் பிரச்சினைகள் பற்றி உலகம் முழுவதும் அறிந்து வைத்துள்ளது. ஆனால், அந்த நாட்டில் வாழும் பழங்குடியினம் பற்றி அறிந்தவர்கள் மிகக் குறைவு.

இஸ்ரேலில் யூதர்கள், பாலஸ்தீனர்கள் தவிர மூன்றாவது தேசிய இனம் ஒன்றுள்ளது. பெதூயின் என்றழைக்கப் படும் நாடோடி சமுதாயம். இவர்கள் அரபுப் பழங்குடியின மக்கள். உலகில் எல்லா நாடுகளிலும், நாகரீகமடைந்த சமூகம், தனது முன்னோர்களைப் போல வாழ்ந்து கொண்டிருக்கும் தூரத்து உறவினரான பழங்குடியினத்தை ஒதுக்கியே வந்துள்ளன. இதனால், இரண்டு சமூகங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்று வாழ்கின்றன. பெதூயின் மக்களும், பாலஸ்தீன அரேபியரைப் போன்று, அரபு மொழி பேசுகின்றனர். இஸ்லாமிய மதத்தை பின்பற்றுகின்றனர். ஆனாலும், அவர்கள் தனியான தேசிய இனமாக கருதப் படக் கூடியவர்கள். தேசிய இனம் என்றால், அதற்கென்றொரு மொழி, பூர்வீக பிரதேசம் இருக்க வேண்டும் என்று தர்க்கம் புரியும் தேசியவாதிகள், பழங்குடி இனங்களை தனித் தேசிய இனமாக ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால் பழங்குடி இனங்களின் பிரச்சினைகள் குறைத்து மதிப்பிடத் தக்கதல்ல. 

பெதூயின் பழங்குடியின மக்கள், தெற்கு இஸ்ரேலில் உள்ள நாகேவ் பாலவைனப் பிரதேசத்தில் அதிகமாக காணப்படுகின்றனர். நாகேவ் மட்டுமல்ல, அருகில் உள்ள எகிப்தின் சினாய் பாலைவனமும் பெதூயின் மக்களின் வாழிடமாகும். யூதர்களின் தீர்க்கதரிசி மோசேஸ், பெதூயின் பழங்குடியினருடன் சில காலம் பாதுகாப்பாக மறைந்து வாழ்ந்ததாக விவிலிய நூலில் எழுதப்பட்டுள்ளது. அந்தப் பழங்குடியினர் கடவுளாக கருதி வழிபட்ட மலை ஒன்றில் தான், ஆண்டவர் மோசெசுடன் பேசியதாக சொல்லப்படுகின்றது. யூத, இஸ்லாமிய மதங்கள் தோன்றுவதற்கு முன்னரே, பெதூயின் பழங்குடியின மக்கள் அந்தப் பிரதேசத்தில் வாழ்ந்து வந்துள்ளனர். இன்றைய இஸ்ரேலிய அரசு, தனது நாட்டில் ஒரு பழங்குடி இனம் வாழ்கின்றது என்பதை காட்டிக் கொள்ள விரும்பவில்லை. அதனால், அந்த மக்களின் பல்லாயிரம் வருட கால தடயங்களை அழிப்பதில் ஈடுபட்டு வருகின்றது.   

1948 இஸ்ரேல் உருவாக்கப் பட்டதற்கு முன்னர், நாகேவ் பிரதேசத்தில் மட்டும் குறைந்தது 90000 பெதூயின் மக்கள் வாழ்ந்து வந்தனர். அந்த ஆண்டு நடந்த போர் காரணமாக, பெரும்பாலான பெதூயின்கள், பாலஸ்தீன அரேபியருடன் சேர்ந்து, அயல் நாடுகளுக்கு அகதியாக இடம்பெயர்ந்து விட்டனர். அந்தக் காலகட்டத்தில், எல்லா பெதூயின்களும் நாடோடி வாழ்க்கை வாழவில்லை.  90 % மானோர், நாடோடி வாழ்க்கையை கைவிட்டு விட்டு விவசாயம் செய்து வந்தனர். இன்றைக்கும் குறிப்பிட்ட இடத்தில் நிரந்தரமாக வசித்ததற்கான காணி உறுதிப் பத்திரம் வைத்திருக்கின்றனர். அந்த பத்திரங்கள், ஆங்கிலேயர் காலனிய காலத்திலும், அதற்கு முன்னர் ஓட்டோமான் ராஜ்யத்திலும் வழங்கப் பட்டுள்ளன. இந்த தகவல் மிக முக்கியமானது. ஏனெனில், "பெதூயின்கள் இயற்கையாகவே நாடோடியாக அலைபவர்கள். நிரந்தரமாக ஓரிடத்தில் தங்கியிருக்க மாட்டார்கள். அதனால் அவர்களிடம் நில உறுதிப் பத்திரம் இருக்காது," என்று இஸ்ரேலிய அரசு நில ஆக்கிரமிப்பை நியாயப் படுத்தி வருகின்றது. உண்மையில், யூதர்களின் நில ஆக்கிரமிப்பினால் தான், பெதூயிங்களுக்கு சொந்தமான நிலங்கள் பறிபோயின. இன்றைக்கு, மனிதர்கள் வாழ்வதற்கு கடினமான நாகேவ் பாலைவன பிரதேசத்தில் மட்டுமே விட்டு வைக்கப் பட்டனர். இப்போது அந்த இடத்திற்கும் ஆபத்து வந்து விட்டது. 

நாகேவ் பாலைவன பிரதேசத்தில் உள்ள மொத்த சனத்தொகையில் பெதூயின் மக்கள் 30 % மாக உள்ளனர். ஆனால், 2 % நிலம் மட்டுமே அவர்களுக்கு சொந்தமானது. ஏற்கனவே 1950 ம் ஆண்டு கொண்டு வரப் பட்ட, "உரிமை கோரப்படாத சொத்து" சட்டத்தின் கீழ், ஏராளமான பெதூயின் நிலங்களை அரசு கையகப் படுத்தியது. பின்னர் அந்த நிலங்களை, வழமை போல வெளிநாடுகளில் இருந்து வந்த யூத குடியேறிகளுக்கு வழங்கியது. இன்று சுமார் இரண்டு இலட்சம் பெதூயின் மக்கள், நாகேவ் பிரதேசத்தில் வாழ்கின்றனர். அவர்களுக்கு இஸ்ரேலிய குடியுரிமை வழங்கப் பட்டது. இருப்பினும், இரண்டாந் தரப் பிரஜைகளாகவே நடத்தப் படுகின்றனர். பெதூயின்கள் பரம்பரை பரம்பரையாக வாழும் கிராமங்கள் சிலவற்றை இஸ்ரேலிய அரசு "அங்கீகரிக்கவில்லை". "அங்கீகரிக்கப் படாத கிராமங்கள்" என்றால், அதன் அர்த்தம் அந்தக் கிராமங்கள் இஸ்ரேலிய வரை படத்தில் குறிப்பிடப் படவில்லை. அதன் அர்த்தம், அந்தக் கிராமங்களுக்கு மின்சாரம், குடிநீர் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காது. வாகனம் போவதற்கான தெருக்கள் செப்பனிடப் பட மாட்டாது. அந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் சட்ட உதவியை நாட முடியாது. 

இன்றைய இஸ்ரேலானது, "யூதர்களின் தாயகம்" என்ற போர்வையின் கீழ் மேலைத்தேய நிகழ்ச்சிநிரலின் கீழ் செயற்பட்டு வருகின்றது. நகரமயமாக்கல் என்ற பெயரில், பெதூயின் மக்கள் வேறு இடங்களில் மீள்குடியேற்றப் படுகின்றனர். கிராமங்களில், பெதூயின்கள்  தமது பண்பாட்டை அழியாமல் பாதுகாத்து வந்தனர். கிராமங்களில் வாழும் பெதூயின்கள் தனித்துவமான ஆடை, இடுப்பில் செருகும் அணிகலனான பட்டாக்கத்தி, மற்றும் ஆடுகளுடன் காணப் படுவார்கள். நகரங்களில் மீளக் குடியேற்றப் படுகையில், அவற்றை இனிமேலும் பின்பற்ற முடியாது. இதனால் அவர்களது தனித்துவமான கலாச்சாரம் அழிந்து போகின்றது. நகரங்களில் குடியேறிய குடும்பங்கள், அடுக்குமாடிக் கட்டிடத்தில் நான்கு சுவருக்குள் ஒதுங்கிக் கொள்ள வேண்டும். கிராமங்களில் வாழ்ந்தது போல, உறவினர்கள் அயல் வீடுகளில் வசிக்க வேண்டும் என எதிர்பார்த்தனர். ஆனால், அரசாங்கம் அதனை புரிந்து கொள்ளுமளவில் இல்லை. அரசு அதிகாரிகள் சொல்லும் இடத்தில் சென்று வசிக்க வேண்டும். கிராமங்களில் இளைஞர்கள் பெரியவர்களுக்கு மதிப்புக் கொடுத்து நடப்பார்கள். ஆனால், நகரங்களில் பருவ வயது இளைஞர்களை கட்டுப்படுத்த முடியாது. நகர வாழ்வின் அனைத்து நோய்களும் பின்னர் தொற்றிக் கொள்ளும். வருங்கால சந்ததி பாரம்பரிய கலைகளை மறந்து விட்டு, மேலைத்தேய கலாச்சாரத்தை பின்பற்றத் தொடங்கி விடுவார்கள். பாடசாலைக் கல்வியை இடையில் நிறுத்து விட்டு வெளியேறுவது, குடிக்கு அடிமையாவது, போதைவஸ்து பிரயோகம், குற்றச் செயல்களில் ஈடுபடுவது, இவை எல்லாம் பெதூயின் நகரங்களில் சர்வசாதாரணமாக நடக்கின்றன. 

ஐரோப்பியர்கள் காலனிய சமூகங்களை நாகரீகப் படுத்துவது என்ற பெயரில் சொல்லி வந்த நியாயங்களை தான் இஸ்ரேலிய அரசும் கூறுகின்றது. அதாவது, நாடோடிகளாக வாழ்ந்த பெதூயின்களை நாகரீகப் படுத்துகின்றனராம். அதே காரணத்தை கூறி, அந்த மக்கள் விவசாயம் செய்வதையும் தடுத்து வருகின்றனர். இதே நேரம், அமெரிக்காவில் இருந்து வந்து குடியேறிய யூதர்கள், கிராமம் ஒன்றில் விவசாயம் செய்து வாழ விரும்பினால், அதற்கு தடையேதுமில்லை. யூதர்கள் வாழும் நகரங்களுக்கும், பெதூயின்கள் வாழும் நகரங்களுக்கும் இடையிலும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. யூதர்களின் நகரங்கள், ஒரு பணக்கார மேற்கத்திய நாட்டைப் போன்றிருக்கும். ஆனால் பெதூயின் மக்கள் குடியேற்றப் பட்ட நகரங்கள், மூன்றாம் உலகை சேர்ந்த நகரங்களைப் போன்று காட்சியளிக்கும். அதாவது, முதலாம் உலகையும், மூன்றாம் உலகையும் சில கிலோமீட்டர் தூரத்தில் பார்க்கலாம். பெதூயின் மக்களை நகரங்களில் குடியேற்றுவதால், அரசு அவர்களை கண்காணிப்பது இலகுவாகின்றது. அதே நேரம், நகரங்களில் வாழும் பெதூயின்கள் எதிர்காலத்தில் சராசரி இஸ்ரேலியர்களாக மாறி விடுவார்கள். இதனால், இஸ்ரேலில் பெதூயின் என்ற தனியான இனம் ஒன்று இருந்தது என்பதே யாருக்கும் தெரியாமல் போய் விடும். இன்றைய பெதூயின்களின் நாளைய சந்ததிக்கு கூட, தனது கடந்த கால வரலாறு மறந்து விடும்.   

மேலதிக விபரங்களுக்கு:
Land disputes in Israel: The case of the Bedouin of the Naqab, by Dr. Thabet Abu Ras     http://www.adalah.org/newsletter/eng/apr06/ar2.pdf  
Nagev Bedouin, http://en.wikipedia.org/wiki/Negev_Bedouin 

2 comments:

  1. கலை அவர்களே பிதூன் என்பது ஒரு இனத்தின் பெயர் அல்ல, இது ஒரு அரபிச்சொல் ஒன்றும் இல்லாதவர்களை பிதூன் என்று அழைப்பார்கள், நான் குவைதில் வசிக்கிறேன், இங்கும் அப்படி பட்டவர்கள் இருக்கிறார்கள், இவர்களின் மூதாதையர்கள் ஈராக் போன்ற நாடுகளிலிருந்து குடியேறியவர்கள் இவர்களுக்கு குடிஉரிமை கிடையாது அதனால் எந்த அரசாங்க சலுகைகளையும் பெற முடியாது, இவர்கள் இந்த நாட்டை விட்டும் வெளியேற முடியாது காரணம் இவர்களுக்கு கடவு சீட்டு கிடயாது. இது போன்றவர்கள் அனேக அரபு நாடுகளில் வாழ்கிறார்கள் அவ்வப்போது குடிஉரிமை கேட்டு போராட்டமும் நடத்துவார்கள் அரசு இவர்களை அடக்கி விடும்

    ReplyDelete
  2. பெதூயின் மக்களுக்கு தனியான கலாச்சாரம், நம்பிக்கைகள் உள்ளன. பாலஸ்தீன அரேபியரிடம் இருந்து, தனி இனமாக தம்மை வேறு படுத்திப் பார்க்கின்றனர். இஸ்ரேலிய இராணுவத்திலும் பெதூயின் போர்வீரர்கள் சேர்த்துக் கொள்ளப் படுகின்றனர்.

    ReplyDelete