"பட்டணத்தில் படுகொலை, பட்டிக்காட்டில் விடுதலை" -
பொல்பொட்டிசம், ஒரு மீளாய்வு
(பகுதி - 4)
மதம், சோஷலிசம், கம்யூனிசம் எல்லாம் உயர்ந்த இலட்சியங்களாக இருக்கலாம். ஆனால், அதிலே நம்பிக்கை வைத்தவர்கள் எல்லோரும் உன்னத மனிதர்களாக இருக்கப் போவதில்லை. இனப் பகை, சுயநலம், தன் முனைப்பு, அதிகார மமதை, இத்தகைய குணங்களைக் கொண்ட நபர்களும் ஒரு முற்போக்கான இயக்கத்தில் இணைந்து கொள்வார்கள். மனிதர்கள் ஒரே இரவில் மாறி விட மாட்டார்கள். க்மெர் ரூஜ் இயக்க வரலாறும் அதற்கு சிறந்த உதாரணம்.
ஆரம்ப காலங்களில், க்மெர் ரூஜ் போராளிகள் மக்கள் மனங்களை வென்றெடுத்திருந்தனர். வயல்களில் உழவர்களுடன் சேர்ந்து வேலை செய்தார்கள். அறுவடைக் காலம் என்றால் கூப்பிடாமலே வந்து உதவி செய்தார்கள். அடாவடித்தனமாக மக்களின் சொத்துக்களை பறித்துச் செல்வதில்லை. போகும் வழியில், உணவுத் தேவைக்காக பழங்களை பறித்துச் சாப்பிட்டாலும், அதற்கான பணத்தை தோட்ட உரிமையாளரிடம் கொடுத்து விட்டுச் சென்றார்கள். ஆனால், அரச படையினர் பொது மக்கள் மீது சொல்லவொண்ணா அட்டூழியங்களை புரிந்தனர். பழிவாங்கும் நடவடிக்கையாக கிராமத்து மக்களை சுட்டுக் கொல்வது, பெண்களை மானபங்கப் படுத்துவது, வீடுகளை எரிப்பது என்பன போன்ற கொடுமைகளில் ஈடுபட்டன. ஆகவே, கம்போடியப் பொதுமக்கள் பெருமளவில் க்மெர் ரூஜுக்கு ஆதரவு வழங்கியதில் வியப்பில்லை.
ஆரம்ப காலங்களில், க்மெர் ரூஜ் போராளிகள் மக்கள் மனங்களை வென்றெடுத்திருந்தனர். வயல்களில் உழவர்களுடன் சேர்ந்து வேலை செய்தார்கள். அறுவடைக் காலம் என்றால் கூப்பிடாமலே வந்து உதவி செய்தார்கள். அடாவடித்தனமாக மக்களின் சொத்துக்களை பறித்துச் செல்வதில்லை. போகும் வழியில், உணவுத் தேவைக்காக பழங்களை பறித்துச் சாப்பிட்டாலும், அதற்கான பணத்தை தோட்ட உரிமையாளரிடம் கொடுத்து விட்டுச் சென்றார்கள். ஆனால், அரச படையினர் பொது மக்கள் மீது சொல்லவொண்ணா அட்டூழியங்களை புரிந்தனர். பழிவாங்கும் நடவடிக்கையாக கிராமத்து மக்களை சுட்டுக் கொல்வது, பெண்களை மானபங்கப் படுத்துவது, வீடுகளை எரிப்பது என்பன போன்ற கொடுமைகளில் ஈடுபட்டன. ஆகவே, கம்போடியப் பொதுமக்கள் பெருமளவில் க்மெர் ரூஜுக்கு ஆதரவு வழங்கியதில் வியப்பில்லை.
க்மெர் ரூஜ் தோன்றுவதற்கு பல வருடங்களுக்கு முன்னரே, "இசாரக்" என்ற விடுதலைப் படை, கம்போடிய சுதந்திரத்திற்காக ஆயுதமேந்திப் போராடி வந்தது. அன்று வியட்நாம், கம்போடியா, லாவோஸ் ஆகிய நாடுகள், "இந்தோ சீனா' என்ற பெயரில் பிரெஞ்சுக் காலனியாக இருந்தன. பிரெஞ்சு காலனிய எதிர்ப்பு இயக்கமான இசாரக் கலைக்கப் பட்ட பின்னர், அதிலிருந்த போராளிகள் பலர், பின்னர் க்மெர் ரூஜில் இணைந்து கொண்டனர். இன்று க்மெர் ரூஜ் கால கொடூரங்கள் என்று பட்டியலிடப் படும் குற்றங்கள் பல, இசாரக் போராட்டக் காலத்திலும் இடம்பெற்றன. உதாரணத்திற்கு, "க்மெர் ரூஜ் படித்தவர்களை, புத்திஜீவிகளை கொலை செய்தார்கள். மூக்குக் கண்ணாடி போட்டிருந்தவர்களையும் கொன்றார்கள்." என்றெல்லாம் கூறப் படுகின்றது. இத்தகைய கொலைகள் நடந்துள்ளதை மறுக்க முடியாது. ஆனால், அவை எல்லாம் பொல் பொட் தலைமையினால் அங்கீகரிக்கப் பட்ட கொலைகள் அல்ல. பெருமளவு போராளிகள் கல்வியறிவற்ற, கிராமத்து இளைஞர்கள். அவர்கள் கண்களுக்கு படித்தவர்கள் எல்லோரும் சந்தேகத்திற்கு உரியவர்கள். ஏனெனில், அரச நிர்வாகத்தை நடத்துவதற்காக தலைநகரத்தில் இருந்து அனுப்பப் பட்ட அதிகாரிகள் எல்லோரும் படித்தவர்கள் தான். நாட்டுப்புறங்களில் அவர்களது எதேச்சாதிகாரம், அத்துமீறல்கள் காரணமாக, கிராமத்து மக்களின் வெறுப்புக்கு ஆளாகி இருந்தனர். நமது நாடுகளில் அரசு அதிகாரிகள், கிராமத்து மக்களை எப்படி நடத்துகிறார்கள் என்பது எமக்குத் தெரியும். கம்போடியாவிலும் அது தான் நிலைமை.
பொதுவாக கம்போடிய மக்கள் சாந்தமானவர்கள் தான். ஆனால், குழப்பகரமான சூழ்நிலையில், நிர்வாகம் சீர்குலையும் காலத்தில் மிருகத் தனமாகவும் நடந்து கொள்வார்கள். சாதாரண காணித் தகராறு, குடும்பத் தகராறுக்கு எல்லாம், எதிராளியை குடும்பத்தோடு வெட்டிச் சாய்ப்பது அவர்களது கலாச்சாரத்தில் ஊறியது. அரசுக்கு எதிராக கலவரங்கள் ஏற்பட்ட காலங்களில், அரசாங்க பிரதிநிதிகளை பிடித்து அடித்துக் கொன்று, ஈரலை வெட்டி எடுத்து பங்கு போட்டு சாப்பிட்ட சம்பவங்கள் எல்லாம் நடந்துள்ளன. இசாரக் போராளிகளும், கண்ணில் பட்ட படித்தவர்களை, மூக்குக் கண்ணாடி அணிந்தவர்களையும் கொலை செய்தார்கள். அந்தக் கொலைக் கலாச்சாரம் க்மெர் ரூஜ் ஆட்சிக் காலத்திலும் தொடர்ந்தது. சில க்மெர் ரூஜ் மாவட்டப் பொறுப்பாளர்களின் கட்டுப்பாடில் உள்ள இடங்களில், இது போன்ற மிலேச்சத் தனமான படுகொலைகள் நடந்துள்ளமை, பொல் பொட் தலைமைக்கு அறிவிக்கப் பட்டது. "கிராமத்து ஜனங்கள் இப்படித் தான் முரட்டுத் தனமாக நடந்து கொள்வார்கள்." என்பது பொல் பொட்டின் நிலைப்பாடாக இருந்தது. அந்தக் கொலைகள், கட்சித் தலைமையால் அங்கீகரிக்கப் படவில்லை. அதே நேரம், கண்டிக்கப் படவுமில்லை. அத்தகைய அலட்சியப் போக்கு, சில வருடங்களுக்குள் இலட்சக் கணக்கான மக்களின் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்தது.
வியட்நாமியருடனான இனக் குரோதமும் கம்போடிய மக்களின் இரத்தத்தில் ஊறிய விடயமாகும். வியட்நாமிய இனத்தவர்கள், ஆயிரம் வருடங்களுக்கு முன்னர், தென் சீனத்தில் இருந்து புலம்பெயர்த்து வந்த சமூகத்தை சேர்ந்தவர்கள். பிரெஞ்சுக் காரர்கள் வரும் வரையில், வியட்நாமிய சாம்ராஜ்ய விஸ்தரிப்பு, தெற்கு நோக்கி விரிந்து கொண்டிருந்தது. கம்போடியாவின் ஒரு பகுதி ஆக்கிரமிக்கப் பட்டு, இன்றைக்கும் அது வியட்நாமின் ஒரு பகுதியாக உள்ளது. கிழக்கே வியட்நாமிய ஆக்கிரமிப்புப் படைகளும், வடக்கே தாய்லாந்து ஆக்கிரமிப்புப் படைகளும், கம்போடிய மக்களை எப்படி எல்லாம் துன்புறுத்தினார்கள் என்பதை, பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுத்து வந்தனர். பொல் பொட் மற்றும் பிற க்மெர் ரூஜ் தலைவர்கள் மனதிலும், வியட்நாம் மீதான அச்சவுணர்வு இருந்து வந்துள்ளது. வியட்நாமியர்கள் கம்யூனிஸ்டுகளாக இருந்தாலும், தம் மீது மேலாதிக்கம் செலுத்தும் மனப்பான்மையை மாற்றிக் கொள்ளவில்லை என்று நம்பினார்கள். அவர்களது அவ நம்பிக்கையை மெய்ப்பிப்பது போன்ற காரியங்கள் நடந்துள்ளன.
பிரெஞ்சுக் காலனிய ஆட்சியாளர்கள், வியட்நாமிய மக்கள் மீது அதிக கரிசனை கொண்டவர்களாக நடந்து கொண்டனர். அரச நிர்வாகிகளை உருவாக்கும் உயர்கல்வி நிறுவனங்கள் எல்லாம் வியட்நாமில் தான் உருவாக்கப் பட்டன. இதனால், கம்போடியாவிலும் பெருமளவு வியட்நாமியரே, அரச பதவிகளிலும், வர்த்தகத்திலும், தொழிற் துறையிலும் ஆதிக்கம் செலுத்தினார்கள். கம்போடிய பொருளாதாரத்தை வியட்நாமியர்கள் சுரண்டுவதாக, நீண்ட காலமாகவே க்மெர் மக்கள் மனதில் வெறுப்பிருந்தது. கம்போடிய பிள்ளைகள் உயர்கல்வி கற்க வேண்டுமானால், வியட்நாமுக்கு தான் செல்ல வேண்டும். ஆகவே, கம்போடியர்களின் நிலைமை எந்தளவு பின்தங்கி இருந்திருக்கும் என்பதை, இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். இன்றைக்கும் கம்போடியாவில், வியட்நாமியர்கள் குறிப்பிடத் தக்க சிறுபான்மை இனமாக வாழ்ந்து வருகின்றனர். யார் அந்த மண்ணுக்குரிய பூர்வீக குடிகள், யார் தொழில் நிமித்தம் வந்து குடியேறியோர் என்பதை பகுத்தறிவது கடினம். பல தடவை, க்மெர் - வியட்நாமிய கலவரங்கள் வெடித்துள்ளன.
வட வியட்நாம் சுதந்திர நாடாகி, அங்கே ஹோ சி மின் தலையிலான கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர், நிலைமை ஓரளவு மாறியது. சர்வதேச கம்யூனிச அமைப்பான மூன்றாம் அகிலத்தின் ஆலோசனையின் படி, இந்தோ சீன நாடுகளுக்கு பொதுவான கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்க விரும்பினார்கள். கம்போடியாவில் படித்தவர்களின் எண்ணிக்கையே குறைவு என்பதால், அங்கே மார்க்ஸியம் பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை. இதனால் வியட்நாமிய சிறுபான்மையினத்தை சேர்ந்தவர்களை தான் சேர்த்துக் கொள்ள வேண்டியிருந்தது. கம்போடியாவின் முதலாவது கம்யூனிஸ்ட் கட்சி, 1951 ம் ஆண்டு உருவாக்கப் பட்டது. அதன் உறுப்பினர்கள் பெரும்பாலும் வியட்நாமிய மொழி பேசும் கம்போடிய பிரைஜைகளாக இருந்தனர். காலப்போக்கில் விரல் விட்டு எண்ணக் கூடிய க்மெர் மொழி பேசும் உறுப்பினர்களும் சேர்த்துக் கொள்ளப் பட்டனர். பல வருடங்களுக்கு பின்னர், இளந் தலைமுறை மார்க்சிஸ்டுகளான பொல் பொட்டும், பிற்காலத்தில் க்மெர் ரூஜ் தலைவர்களானவர்களும், கம்போடிய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து கொண்டனர். "வியட்நாமை சேர்ந்த முன்னணி உறுப்பினர்கள், கம்போடிய சகோதரர்களை சரி சமமாக நடத்த வேண்டும். அவர்களுக்கு பக்குவம் வந்த பின்னர் கட்சிப் பொறுப்புகளை ஒப்படைத்து விட வேண்டும்." என்று வட வியட்நாம் அரசு பேசிக் கொண்டிருந்தது. ஆனால், நடைமுறையில் கட்சிக்குள் வியட்நாமியர்களே பொறுப்பான பதவிகளில் இருந்தனர். அவர்களுக்கு தெரியாமல் ஒரு அணுவும் அசையவில்லை. க்மெர் மொழி பேசும் உறுப்பினர்கள், வியட்நாமியர்கள் தம்முடன் பெரியண்ணன் மனப்பான்மையுடன் நடந்து கொள்வதாக குறைப் பட்டனர்.
அந்தக் காலத்தில் வியட்நாம் ஒன்றிணைவதற்கான போர் நடந்து கொண்டிருந்தது. அமெரிக்காவினால் நியமிக்கப் பட்ட பொம்மை அரசொன்றினால் நிர்வகிக்கப் பட்ட தென் வியட்நாமில், "வியட்
கொங்" என்ற கெரில்லா இயக்கம், அமெரிக்கப் படைகளை எதிர்த்து போரிட்டுக் கொண்டிருந்தது. வியட் கொங் விடுதலைப் படையை சேர்ந்தவர்கள், கம்போடியாவினுள் தளம் அமைத்து தங்கி இருந்தனர். அவர்களுடன் வியட்நாமிய அகதிகளும் முகாமிட்டு இருந்தனர். ஒரு காலத்தில், கம்போடியாவின் கிழக்குப் பகுதி முழுவதும், வியட் கொங் போராளிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. இதற்கிடையே, கம்போடிய மன்னர் சிஹானுக்குடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டதால், வெளிநாடுகளில் இருந்து தருவிக்கப் படும் ஆயுதங்கள், கம்போடிய துறைமுகத்தில் இறக்கப்பட்டு வியட்நாமுக்குள் கொண்டு செல்லப் பட்டன, இவற்றை தெரிந்து கொண்ட அமெரிக்கர்கள், கம்போடியாவில் வியட் கொங் நிலைகளை தாக்கி அழிக்க திட்டம் வகுத்தனர். அமெரிக்க அரசுக்கு அறிவிக்காமல், ஊடகங்களுக்கு தெரிவிக்காமல், B 12 போர் விமானங்கள் குண்டு வீசின. அமெரிக்க விமானக் குண்டு வீச்சினால், பல கிராமங்கள் அழிக்கப் பட்டன. பல இலட்சம் மக்கள் கொல்லப் பட்டனர். ஐரோப்பாவில் இரண்டாம் உலகப்போரில் போட்ட குண்டுகளை விட அதிகளவு குண்டுகள், கம்போடியா என்ற சிறு நாட்டின் மேல் போடப்பட்டன. உலக வரலாறு காண்டிராத மிக மோசமான விமானக் குண்டுவீச்சுகளை சந்தித்த போதிலும், வியட் கொங் போராளிகள் தென் வியட்நாமில் வெற்றி வாகை சூடினார்கள். அதே நேரம், கம்போடியாவில் க்மெர் ரூஜ் என்ற இயக்கத்தின் வளர்ச்சிக்கும் அந்தக் குண்டுவீச்சுகள் காரணமாக அமைந்தன.
ஆரம்பத்தில், கம்போடியாவில் ஒரு ஆயுதமேந்திய கிளர்ச்சிப் படை உருவாவதை வியட்நாமியர்கள் விரும்பவில்லை. அதற்கு அவர்களது "பெரியண்ணன் மனப்பான்மை" மட்டும் காரணம் அல்ல. மன்னர் சிஹானுக்குடன் ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை சீர்குலைக்க விரும்பவில்லை. பொல் பொட் சீனா சென்று மாவோவிடம் உதவி கோரினார். "கம்போடியப் புரட்சிக்கு வேண்டிய உதவிகள் செய்வதாக" மாவோ உறுதிமொழி வழங்கினார். ஆனால், சீனர்களும் சிஹானுக்குடனான நல்லுறவை கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை. கம்போடியாவில் சீன மொழி பேசும் சிறுபான்மை இனம் வாழ்கின்றது. கம்போடிய சீனர்களை கவசமாக பயன்படுத்தி, கம்யூனிச சித்தாந்தத்தை பரப்புவது இலகுவாக இருந்தது. (ஏனெனில், மன்னர் சிஹானுக்கும் சீனாவை பகைக்க விரும்ப மாட்டார்.) இதனால் பல படித்த வாலிபர்கள், க்மெர் ரூஜ் இயக்கத்தை நோக்கி ஈர்க்கப் பட்டனர். கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான அரச அடக்குமுறை அதிகரித்த நேரம், பலர் வியட் கொங் கட்டுப்பாட்டில் இருந்த கிழக்கு கம்போடியக் காடுகளுக்குள் சென்று ஒளிந்து கொண்டனர்.
1970 ம் ஆண்டு, சி.ஐ.ஏ. அனுசரணையில் நடந்த லொன் நொல்லின் சதிப்புரட்சி, க்மெர் ரூஜ் இயக்கத்திற்கு ஒரு வரப்பிரசாதமாகும். மன்னர் சிஹானுக், எல்லோருக்கும் நல்லவர் போன்று காட்டிக் கொண்டார். இடதுசாரிகளையும், வலதுசாரிகளையும் தனது அரசாங்கத்தில் வைத்துக் கொண்டார். ஆனால், லொன் நொல்லும், அவருக்கு பின்னால் அணி திரண்டவர்களும் அமெரிக்கா சார்பான தீவிர வலதுசாரிகள். இடதுசாரிகளை வேட்டையாடிக் கொல்வதில் இன்பம் கண்டவர்கள். அரச படைகள் மிருகத் தனமாக நடந்து கொண்டன. கம்யூனிஸ்ட் ஆதரவாளர் என்றாலே போதும், தலையை வெட்டி தெருவில் காட்சிப் பொருளாக வைத்தன. தேடிச் செல்லும் சந்தேக நபர் வீட்டில் இல்லை என்றால், குடும்ப உறுப்பினர்களை கொன்று திருப்திப் பட்டார்கள். கம்போடிய அரசியல் நிலவரம் மாறியதால், வியட்நாமும், கம்போடிய கம்யூனிஸ்டுகளுக்கு ஆயுதம் வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. வியட் கொங் கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள், படிப் படியாக க்மெர் ரூஜ் கட்டுப்பாட்டில் வந்தன. பல இடங்களில், வியட் கொங், க்மெர் ரூஜ் போராளிகள் ஒன்று சேர்ந்து, மக்களுக்கு போராட்டம் பற்றிய பொதுக் கூட்டங்களை நடத்தினார்கள். புதிய உறுப்பினர்களை சேர்த்தனர். அரசாங்க பிரதிநிதிகள், உளவாளிகள், காட்டிக் கொடுப்போருக்கு மரண தண்டனை வழங்கினார்கள்.
எழுபதுகளின் ஆரம்பத்திலேயே, கிழக்கு கம்போடியாவின் பல பகுதிகள் க்மெர் ரூஜ் கட்டுப்பாட்டின் கீழ் வந்து விட்டன. பொல் பொட் இது தான் தருணம் என்று, வியட்நாமிடம் இருந்து விலகிச் செல்ல ஆரம்பித்தார். ஏற்கனவே வியட்நாமியருக்கு அறிவிக்காமல், 1960 ம் ஆண்டு புதியதொரு கம்போடிய கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கி இருந்தனர். (இது இரகசியமாக வைக்கப் பட்டிருந்தது. 1977 ம் ஆண்டு தான் பகிரங்கமாக அறிவித்தார்கள்.) அப்போதிருந்தே தனியாக ஆயுதங்களை வாங்கவும், உறுப்பினர்களை சேர்க்கவும் ஆரம்பித்து விட்டனர். ஏறக்குறைய முப்பதாயிரம் க்மெர் மொழி பேசும் போராளிகளை சேர்த்த பின்னர், வியட்நாமுடனான அமைப்பு ரீதியான தொடர்புகளை துண்டித்துக் கொண்டனர். 1975 ம் ஆண்டு, ப்னோம் பென் வீழ்ச்சி அடைந்து, கம்போடியா முழுவதும் க்மெர் ரூஜ் கட்டுப்பாட்டின் கீழ் வந்த பின்னர், வியட்நாமிய படைகளை விலக்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் பட்டது. அதே வருடம், சைகோன் வீழ்ச்சியுடன் அமெரிக்க படைகளும் வெளியேறியதால், தென் வியட்நாமும் கம்யூனிஸ்ட் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. "கம்போடிய புரட்சியாளர்கள் ஆட்சி நடத்தும் பக்குவமடைந்து விட்டதால், க்மெர் சகோதரர்களின் விருப்பத்திற்கு மதிப்பளித்து, படைகளை வாபஸ் வாங்கிக் கொள்வதாக..." வியட்நாம் அறிவித்தது.
க்மெர் மொழி பேசக் கூடிய ஆயிரக் கணக்கான வியட்நாமியர்கள், க்மெர் ரூஜ் சீருடையில் கம்போடியாவில் இரகசியமாக தங்கி விட்டதாக, ஒரு தகவல் தெரிவிக்கின்றது. அது எந்தளவு தூரம் உண்மை என்று ஊர்ஜிதப் படுத்த முடியவில்லை. இந்தக் குற்றச்சாட்டை அவ்வளவு எளிதாக கடந்து செல்ல முடியாது. பிற்காலத்தில், "வியட்நாமிய கைக்கூலிகள்" என்ற பெயரில் பலர் கொல்லப் பட இருப்பதை நியாயப் படுத்தும் காரணமாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம். அதே நேரம், "எந்தக் காரணமும் இன்றி கம்போடிய மக்களை படுகொலை செய்தது, இந்த வியட்நாமிய க்மெர் ரூஜ் உறுப்பினர்கள் தான்..." என்றும் சிலர் கூறுகின்றனர். தமிழர்களைப் போன்று, க்மெர் மக்களும் தங்களைத் தவிர, மற்றவர்கள் எல்லோர் மீதும் தவறு காணுவது வழக்கம். வியட்நாமியர் மீதான க்மெர் மக்களின் வெறுப்பு, அதாவது க்மெர் தேசியவாதம் தான் க்மெர் ரூஜின் கொள்கையாக பிற்காலத்தில் மாறியது. உண்மையில், வியட்நாமிய எதிர்ப்புவாதம் மட்டும் இல்லாதிருந்தால், இன்றைக்கும் கம்போடியாவில் க்மெர் ரூஜ் ஆட்சி நிலைத்து நின்றிருக்கும்.
நான்கு வருடங்களுக்குப் பின்னர், படையெடுத்து வந்து ஆக்கிரமித்த வியட்நாமியர்கள், "கம்போடிய மக்களை இனப்படுகொலையில் இருந்து காப்பாற்ற வந்ததாக" முதலைக்கண்ணீர் வடித்தார்கள். ஆனால், அந்தக் கூற்றில் உண்மை இல்லை. எல்லையில் நடந்த சிறு சிறு மோதல்களும், எல்லை தாண்டி வந்த க்மெர் ரூஜ் படையினர் வியட்நாமிய பொதுமக்களை படுகொலை செய்த சம்பவமும் தான், படையெடுப்புக்கு காரணமாக அமைந்தன. எல்லையோர வியட்நாமிய கிராமங்களுக்குள் புகுந்த க்மெர் படைகள், ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை படுகொலை செய்தன. பெண்களை பாலியல் வன்புணர்ச்சி செய்தன. பொல் பொட்டின் தலைமை, பல நூறாண்டு கால வன்மத்தை தூண்டி விட்டது. அந்த அரசியலுக்குப் பெயர் கம்யூனிசம் அல்ல, அதன் பெயர் தேசியவாதம். பொல் பொட்டும், பிற க்மெர் ரூஜ் தலைவர்களும் தம்மை கம்யூனிஸ்டுகள் என்று அழைத்துக் கொள்ளவில்லை. சும்மா பெயருக்கு இருந்த கம்யூனிஸ்ட் கட்சியையும், எண்பதுகளில் தாமாகவே கலைத்து விட்டனர்.
(தொடரும்)
தொடரின் முன்னைய பதிவுகள்:
ஏறத்தாழ ௧௭ ஆண்டுகள் ஒரு ரகசிமாய் அமைப்பை வளர்த்தார்களா ?
ReplyDeleteஆச்சரியம் தான்!
அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பாக்கிறேன்