Sunday, May 13, 2012

யூத ராஜ்ஜியம் இனப்படுகொலை செய்த சவூதி கிறிஸ்தவர்கள்

"யூதர்களும், கிறிஸ்தவர்களும், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக, நண்பர்களாக வாழ்ந்து வருவது போலவும், அவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் மட்டுமே பரம்பரைப் பகை நிலவியது போலவும்," நினைத்துக் கொண்டிருக்கும் பலருக்கு தெரியாத உண்மைக் கதை இது. மதவெறியர்கள் பல உண்மைகளை மறைத்தும், திரிபுபடுத்தியும் பிரச்சாரம் செய்து வருவதால், இந்தக் கதையும் வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் வீசப்பட்டுக் கிடந்தது. சவூதி அரேபியாவில், யூதர்களால் இனப்படுகொலை செய்யப்பட்ட, இருபதாயிரம் கிறிஸ்தவர்களைப் பற்றி, நம்மில் எத்தனை பேர் கேள்விப் பட்டிருக்கிறார்கள்? ஒரு காலத்தில், சவூதி அரேபியாவில் கிறிஸ்தவர்கள் வாழ்ந்தனர் என்பதையே அறியாத பலர் உண்டு.

இன்று, நூறு வீதம் முஸ்லிம் மக்கட்தொகை கொண்ட நாடான சவூதி அரேபியாவில், ஒரு காலத்தில் கிறிஸ்தவ மதம் பரவி இருந்தது. ஏறத்தாள இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் (Wikipedia: கி.பி. 5 ம் நூற்றாண்டு), அரபு மொழி பேசும் இனக்குழு ஒன்று, கிறிஸ்தவ ராஜ்ஜியம் ஒன்றை ஸ்தாபித்து இருந்தது. சர்வதேச வாணிபம் காரணமாக, நாகரிக வளர்ச்சி கண்டிருந்தது. அன்று, ஐரோப்பாவிலும், ஆப்பிரிக்காவிலும் இருந்த கிறிஸ்தவ சாம்ராஜ்யங்களுடன், இராஜதந்திர உறவுகளைப் பேணி வந்தது. அதன் வளர்ச்சி கண்டு பொறாமை கொண்ட யூதர்கள், அந்த நாட்டின் மீது படையெடுத்து, அங்கிருந்த மக்கள் அனைவரையும் இனப்படுகொலை செய்தார்கள். சுமார் இருபதாயிரம் கிறிஸ்தவர்கள் இனவழிப்புகுள்ளான  சம்பவம், திருக் குர்ஆனில் கண்டிக்கப் பட்டுள்ளது.

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர், உலக நாடுகளின் வரைபடம் வேறு மாதிரி இருந்தது. அன்றிருந்த நாடுகள் பல இன்று இல்லை. இன்றிருக்கும் நாடுகள் அன்று இருக்கவில்லை. அரேபியா தீபகற்பத்தின், மேற்குப் பகுதியும், தென் கிழக்குப் பகுதியும் மட்டுமே நாகரீகமடைந்த சமுதாயங்களைக் கொண்டிருந்தன. மேற்கில் பாலஸ்தீனப் பகுதி நாகரீகம் குறித்து, உலகம் முழுவதும் அறிந்து வைத்திருக்கின்றனர். ஆனால், இன்று யேமன் என்ற தேசமாகவுள்ள, தென் கிழக்கு அரேபியாவின் நாகரீகம் குறித்து அறிந்தவர்கள் மிகக் குறைவு. விவிலிய நூலில், சாலமன் மன்னனின் காதலியான ஷீபா (அல்லது சபா) எனும் அரசி பற்றிய கதை வருகின்றது. கருநிற அழகியான ஷீபா இராணி ஆட்சி செய்த நாடு, இன்றைய யேமனில் இருந்துள்ளது. அந்த ராஜ்ஜியம் அழிந்து பல நூறு ஆண்டுகளுக்குப் பின்னர், ஹிம்யாரித் (Himyarite) ராஜ்ஜியம் தோன்றியது.

ஹிம்யாரித் ராஜ்ஜியம், ஷீபாவின் நாட்டையும் கைப்பற்றி விரிவடைந்து கொண்டு சென்றது. இன்றைய யேமன் நாட்டின் பெரும்பகுதி, ஹிம்யாரித் ராஜ்யத்திற்குள் அடங்கியது. ஆப்பிரிக்காவுக்கும், ஐரோப்பாவுக்கும் இடையிலானசர்வதேச வர்த்தகம் காரணமாக, பலமான நாடாக விளங்கியது. ஹிம்யாரித் ராஜ்யத்தின் பிரஜைகளும் அரபு அல்லது அது போன்ற மொழியைப் பேசி வந்தனர். ஹிம்யாரித் அரச பரம்பரையில் கடைசி மன்னன் யூசுப் அசார் து நவாஸ் (Yusuf As'ar Dhu Nuwas), யூத மதத்தை தழுவிக் கொண்டான். மன்னன் எவ்வழி, அதுபோல மக்களும் அவ்வழியே யூதர்களாக மாறினார்கள். "யூதர்கள் ஒரே மரபணு கொண்ட ஓரின மக்கள்" என்ற கட்டுக்கதை, இன்றைக்கும் படித்தவர்களால் கூட நம்பப் படுகின்றது. கிறிஸ்தவ, இஸ்லாமிய சமயங்களைப் போன்று, யூத மதமும் பிறரை மத மாற்றம் செய்து சேர்த்துக் கொண்ட உண்மையை மறைக்கின்றனர். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர், பாலஸ்தீனத்தில் நிறுவன மயபட்ட மதமாக திகழ்ந்த யூத மதம், பல மத்திய கிழக்கு நாடுகளில் மட்டுமல்லாது, எத்தியோப்பியா வரை பரவியது.

ஹிம்யாரித் மன்னன் து நவாஸ் யூத மதத்திற்கு மாறியதற்கு ஒரு முக்கிய காரணம் இருந்தது. உலக வரலாற்றில், பல மன்னர்களின் மத மாற்றத்திற்கு அது காரணமாக இருந்துள்ளது. சர்வதேச வர்த்தகம், அதனால் கிடைக்கும் அனுகூலங்களை அனுபவிப்பதற்கு, குறிப்பிட்ட மதத்தை பின்பற்றுவது நன்மை அளித்தது. அன்றைய காலத்தில், ஏற்றுமதி வர்த்தகத்தில், அதிக வருமானத்தை ஈட்டித் தரும் பொருளாக இருந்தது, சாம்பிராணி! தங்கம், வைரம் போன்று, சாம்பிராணி விற்று கோடீஸ்வரரானவர்கள் பலர். ஆலயங்களில் இறைவனை வழிபடுவதற்கு மட்டுமல்ல, வீடுகளில் நறுமணம் கமழச் செய்வதற்கு, அல்லது கிருமிநாசினியாக, இவ்வாறு பல்வேறு காரணங்களுக்காக சாம்பிராணி பயன்படுத்தப் பட்டது. சாம்பிராணி விளையும் மரம், ஒமானிலும், யேமனிலும் மாத்திரமே காணப்பட்டது. அதனால் தான் அதற்கு அந்தளவு கிராக்கி. சாம்பிராணி ஏற்றுமதி செய்யும் வணிகர்கள், ஹிம்யாரித் நாட்டின் ஊடாகத் தான் பயணம் செய்ய வேண்டும். அவர்கள் கட்டும் வரிப் பணத்தினால், அரசாங்கத்தின் கஜானா நிரம்பி வழிந்தது. 

கிறிஸ்தவ மதம் பரவிய ஆரம்ப காலங்களில், கத்தோலிக்க தேவாலய வழிபாடுகளிலும் சாம்பிராணி பயன்படுத்தப் பட்டது. பல நூறு வருடங்களுக்குப் பின்னர், புதிதாக முளைத்த இஸ்லாமிய சாம்ராஜ்யம் சாம்பிராணி வர்த்தகத்தை கட்டுப்படுத்தியதால் தான், கத்தோலிக்க திருச்சபை அந்த வழக்கத்தை கை விட்டது. அதன் பிறகு தான், மெழுதிரி கொளுத்தும் வழக்கத்தை அறிமுகப் படுத்தினார்கள். சர்வதேச வர்த்தகத்தில் ஏற்பட்ட மாற்றத்தின் விளைவாகத் தான், தாங்கள் மெழுகுதிரி கொளுத்தி வழிபடுகிறோம் என்பது, இன்றும் கூட பல கிறிஸ்தவர்களுக்கு தெரியாது. இஸ்லாமிய சாம்ராஜ்யத்திற்கு முன்னர், யூதர்களின் ஹிம்யாரித் ராஜ்ஜியம் சாம்பிராணி வர்த்தகத்தை கட்டுப்படுத்தியது. எனினும், கிறிஸ்தவ மதம் பரவிய காலத்தில், அந்தப் பிரதேசத்தில் தோன்றிய கிறிஸ்தவ தேசம் ஒன்று, சாம்பிராணி வர்த்தகத்தில் பங்கெடுத்துக் கொண்டது. இதனால், கிறிஸ்தவ உலகிற்கான சாம்பிராணி ஏற்றுமதி தடையின்றி நடப்பதற்கு உறுதிப் படுத்தப் பட்டது. இருப்பினும், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த, அரபு கிறிஸ்தவ நாட்டின் வீழ்ச்சியை தடுப்பதற்கு, எந்தவொரு கிறிஸ்தவ நாடும் முன்வராத காரணம் இது வரை துலங்கவில்லை.

சவூதி அரேபியாவில், யேமன் நாட்டு எல்லையோரம் அமைந்திருக்கிறது, நஜ்ரான் (Najran) என்ற நகரம். இன்று அது வளர்ந்து கொண்டிருக்கும் நவீன நகரம். பாலைவன சவூதி அரேபியாவில், இயற்கை எழில் கொஞ்சும் சோலைக்குள் அமைந்திருக்கும் நஜ்ரான், விவசாயத்திற்கேற்ற மண் வளம் கொண்டது. நஜ்ரான் நகரில், அல்லது அதற்கு அருகாமையில் பண்டைய நகரமான "அல் உக்தூத்" (Al-Ukhdood) அமைந்திருந்தது. இன்று சில இடிபாடுகளை மட்டுமே கொண்டிருக்கும் அந்தப் பகுதி, ஒரு காலத்தில் உன்னத நாகரிக வளர்ச்சி கண்ட நகரமாக திகழ்ந்தது. அந்த நகரில் வாழ்ந்த மக்கள், அந்த நகரோடு சேர்த்து அழிக்கப் பட்டு விட்டனர். உலக வரலாற்றில் இடம்பெற்ற மிகக் கொடூரமான இனப்படுகொலைகளில் அதுவும் ஒன்று.

யூத மன்னனான து நவாஸ், முதலில் பலம் பொருந்திய அக்சும் (இன்றைய எத்தியோப்பியா) சாம்ராஜ்யத்தின் மீது தான் படையெடுத்தான். அந்தப் படையெடுப்பின் போது பல கிறிஸ்தவ தேவாலயங்கள் எரிக்கப் பட்டன. அக்சும் சாம்ராஜ்யத்தின் படைகளை போரில் பலவீனப் படுத்திய பின்னர் தான், அயலில் இருந்த நஜ்ரான் (அல் உக்தூத்) முற்றுகையிடப் பட்டது. நஜ்ரானுக்கு, கிறிஸ்தவ சகோதர நாடான அக்சுமிலிருந்து உதவி கிடைப்பதை தடுப்பது, முதலில் அவர்களின் நோக்கமாக இருந்திருக்கும். அந்த வியூகம் சரியான கணிப்புடன் போடப் பட்டிருந்தது. முற்றுகைக்குள்ளானஅல் உக்தூத்அரசு உதவி கேட்டு, கிரேக்கத்தில் இருந்த கிறிஸ்தவ ரோம சாம்ராஜ்யத்திற்கு தகவல் அனுப்பியது. ஆனால், அங்கிருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை. சில நேரம், தகவல் தாமதமாகப் போய்ச் சேர்ந்திருக்கலாம்.

கி.பி. 524 ம் ஆண்டு,அல் உக்தூத் யூதப் படைகளால் முற்றுகையிடப் பட்டது. தமது அயலில் ஒரு கிறிஸ்தவ தேசத்தின் அபாரமான வளர்ச்சி கண்டு பொறாமை கொண்ட யூதர்களும், து நவாசின் படையெடுப்புக்கு உதவி செய்தனர். அன்று யூதர்களின் வெறுப்புணர்வு எந்தளவு தீவிரமாக இருந்தது என்பதற்கு, அடுத்து வரும் சம்பவங்கள் சாட்சியம் கூறும். முற்றுகைக்குள் மாட்டிக் கொண்ட அல் உக்தூத் பிரஜைகள் அனைவரும், யூதர்களாக மதம் மாற வேண்டும், அல்லது மரணத்தை தழுவிக் கொள்ள வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. இறுதிக் கணம் வரையில் போராடி மடிய விரும்பியஅல் உக்தூத்பிரஜைகள், மதம் மாற மறுத்தனர். யூதப் படைகள்,அல் உக்தூத்நகரை சுற்றி அகழி வெட்டி, சிதை அடுக்கி தீ மூட்டினார்கள். அல் உக்தூத்மக்களை, ஒருவர் விடாது எல்லோரையும் உயிரோடு நெருப்பில் போட்டுக் கொளுத்தினார்கள்.

மொத்தம் இருபதாயிரம் பேர், இனவழிப்புக்கு பலியானதாக கூறப் படுகின்றது. ரோம சாம்ராஜ்யத்தின் கிறிஸ்தவ தலைமைச் செலகத்திற்கு அனுப்பப் பட்ட கடிதத்திலும் இது தெரிவிக்கப் பட்டுள்ளது. அல்உக்தூத் நகரின் தியாகிகள், ஒவ்வொரு வருடமும் கிறிஸ்தவ உலகில் நினைவுகூரப் பட்டனர். இஸ்லாமியர்களின் புனித நூலான குர் ஆனில், அல் உக்தூத் இனப்படுகொலை பற்றி பதிவு செய்யப் பட்டுள்ளது. (Surat al-Buruj of the Q'uran 85:4–8 ) 

இனப் படுகொலைக்குப் பின்னர், அல் உக்துக் ஹிம்யாரித் யூத ராஜ்யத்திற்குள் உள் வாங்கப் பட்டிருந்தது. ஆயினும், நஜ்ரானிலும், சவூதி அரேபியாவின் பிற பகுதிகளிலும் கிறிஸ்தவ சமூகம் தொடர்ந்திருந்தது. மெக்காவில் இருந்து பரவிய இஸ்லாம் என்ற புதிய மதம், அந்தப் பிரதேசத்தையும் வந்தடைந்தது. இறைதூதர் முகமது நபி காலத்தில், கிறிஸ்தவர்களும், யூதர்களும் புனித நூலின் மக்களாக சிறப்புரிமை கொடுக்கப் பட்டு பாதுகாக்கப் பட்டனர். முகமது நபியின் காலத்திற்குப் பின்னர், அரேபிய தீபகற்பம் முழுவதும் ஒரு இஸ்லாமிய அரசினால் ஆளப் பட்டது. அப்போது செய்யப் பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம், நஜ்ரான் கிறிஸ்தவர்கள் ஈராக்கிற்கு நாடு கடத்தப் பட்டனர். இஸ்லாமிய ராஜ்யத்திற்குள் தொடர்ந்தும் வாழ்ந்து கொண்டிருந்த கிறிஸ்தவர்கள், பிற்காலத்தில் முஸ்லிம்களாக மாறி விட்டனர். யேமன் தேச யூதர்களின் சமூகம், இருபதாம் நூற்றாண்டு வரை அந்த இடத்திலேயே வாழ்ந்து கொண்டிருந்தது. நவீன இஸ்ரேல் உருவான பின்னர், பெரும்பான்மையான யேமன் யூதர்கள், இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்து விட்டனர்.

 மேலதிக தகவல்களுக்கு:
Najran 
Christian Community of Najran 
Himyarite Kingdom



1 comment: