Friday, March 16, 2012

கிரேக்கத்தில் பிரபலமாகும் பொதுவுடமைப் பொருளாதாரம்


பணப்புழக்கம் இல்லாத, எந்த சந்தர்ப்பத்திலும் பணத் தாள்களை பயன்படுத்தாத, சமுதாயம் ஒன்றை காட்ட முடியுமா? கிரேக்கத்தில் அப்படியான சமூகம் ஒன்று உருவாகிக் கொண்டிருக்கின்றது. கிரேக்க மக்கள், தீமையின் அவதாரமான பணத்தை, தமது வாழ்க்கையில் வெறுத்து ஒதுக்கி வருகின்றனர். கிரேக்க நாடு, யூரோ நாணயத்தை பயன்பாட்டில் கொண்டுள்ளது. கடந்த சில வருடங்களாக, நிதி நெருக்கடி காரணமாக, மக்களிடம் யூரோவின் கையிருப்பு குறைந்து கொண்டே செல்கின்றது. கையில் காசில்லாமல் வறுமையில் வாழ்ந்து கொண்டிருந்த மக்கள், தற்பொழுது ஒரு மாற்றுப் பொருளாதார சமூகத்தை உருவாக்கி உள்ளனர்.

இந்த சமூகத்தை, கிராமிய, அல்லது நகர மட்டத்தில், நீங்களும் உருவாக்கிக் கொள்ளலாம். குறிப்பாக ஏழைகள் நிறைந்த, இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில், மாற்றுப் பொருளாதாரத்தின் அவசியம் காணப்படுகின்றது. அதற்கு முதல், கிரேக்க மக்கள், பணமின்றி எப்படி வாழ்கின்றார்கள் என்பதை விரிவாகப் பார்ப்போம். அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்வோம்.

கிரேக்க நாட்டுப்புறங்களில், மாற்று நாணய வலையமைப்பு (Alternative Currency Network ) என்றொரு கட்டமைப்பு இயங்கிக் கொண்டிருக்கின்றது. அதில் உறுப்பினராக சேரும் ஒருவர், தனக்குத் தெரிந்த பண்டத்தை உற்பத்தி செய்ய வேண்டும். உதாரணத்திற்கு, ஒருவர் வீட்டில் சவர்க்காரம் செய்யும் கைத்தொழிலை தெரிந்து வைத்திருக்கிறார். அவர் உற்பத்தி செய்த சவர்க்காரத்திற்கு விலை நிர்ணயம் செய்கின்றார். ஒரு சவர்க்காரத்தின் விலை 1 கரெட்டி (kaereti). வலையமைப்பை சேர்ந்த நபர்கள், வந்து வாங்கிச் செல்வார்கள். அதற்குப் பதிலாக, அவர் எத்தனை கரெட்டிக்கு சவர்க்காரம் விற்கின்ராரோ, அந்த அளவுக்கு, விரும்பிய பொருட்களை பண்டமாற்றாக பெற்றுக் கொள்ளலாம். அது தேன், பழம், காய்கறி, இறைச்சி, எது வேண்டுமானாலும் இருக்கலாம். ஒருவர் எவ்வளவு கரெட்டிக்கு விற்றார், எவ்வளவு கரெட்டிக்கு பொருட்களை வாங்கினார், என்பன போன்ற விபரங்கள் கணனியில் குறித்து வைக்கப் படும். அமைப்பில் உள்ள உறுப்பினர்களின், அத்தனை கணக்கு வழக்குகளும், மத்திய கணணி ஒன்றில் பதிவு செய்யப் பட்டு வருகின்றன. இந்தப் பணப் பரிமாற்றத்தில், யூரோ நாணயங்கள் பாவனையில் இல்லாததால், யாரும் ஊழல் செய்து பணம் சேர்க்க முடியாது.

இந்த சமூக வலையமைப்பில் உள்ள உறுப்பினர்களே, தமக்கு எந்தப் பொருள் தேவை என்பதையும், விலையையும் தீர்மானிக்கின்றனர். ஓரிடத்தில் பண்டமாற்று நடைபெற்றால், அதிலே சம்பந்தப்பட்ட இரண்டு உறுப்பினர்களும், பொருளின் விலையை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதன் பிறகு, நாணயப் பரிமாற்றத்தில் நிச்சயிக்கப் பட்ட தொகையை, ஒருவர் மற்றவரது கணக்கில் குறித்துக் கொள்வார்கள். "சமூக நாணயம்" என்றழைக்கப் படும் கரெட்டி மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். யூரோ, டாலர் அல்லது வேறு நாணயத்தை பயன்படுத்துவது தடைசெய்யப் பட்டுள்ளது. கரெட்டி என்ற சொல்லுக்கு கிரேக்க மொழியில் என்ன அர்த்தம் தெரியுமா? "நான் ஒருவருக்கு, பிரதிபலன் எதிர்பாராமல், சிறு உதவி செய்கிறேன்." என்று அர்த்தம்.

கிரேக்கத்தில் இன்று பல்கிப் பெருகி வரும், மாற்றுப் பொருளாதார வலையமைப்பை சாதாரணமாக எடை போட்டு விடாதீர்கள். விவசாய விளை பொருட்கள், மீன், வைன், மரத் தளபாடங்கள், சவர்க்காரம், ஒலிவ் எண்ணை, கைவினைப் பொருட்கள், சாக்லேட், ஆடை வகைகள், செருப்பு, நகைகள்... இன்னும் பல. உங்களுக்கு என்னென்ன பொருட்கள் அத்தியாவசியமாக தேவைப் படுகின்றதோ, அத்தனையும் பெற்றுக் கொள்ளலாம். அவற்றை வாங்குவதற்கு, நீங்கள் ஒரு யூரோ நாணயம் கூட கையில் வைத்திருக்கத் தேவையில்லை. அதிலே பெரிய சிக்கல் ஒன்றுமில்லை. ஒரு சாதாரண வர்த்தக நிலையத்தில் நடப்பதைப் போல, ஒவ்வொரு பண்டமும் வாங்கும் பொழுதும், விற்கும் பொழுதும், பரிமாற்றம் துரித கதியில் நடக்கின்றது. அதற்கு காரணம், டிஜிட்டல் மயப் படுத்தப் பட்ட நாணயப் பரிமாற்றம். கணனியில் பாவிக்கப்படும் மென்பொருள், எல்லாவற்றையும் ஒரு நொடியில் முடித்துத் தந்து விடுகின்றது.

உங்களுக்குத் தேவையான உணவை அல்லது உடையை வாங்குவதற்கு, நீங்களும் ஏதாவது ஒரு பண்டத்தை வைத்திருக்க வேண்டுமா? இல்லை. எல்லோருமே உற்பத்தியாளராக இருக்க முடியாது. ஏதாவது ஒரு துறையில், தொழில்நுட்ப அறிவு பெற்றவர்கள் நிறையப் பேர் உள்ளனர். வைத்தியர், கணக்காளர், ஆசிரியர், வழக்குரைஞர், பொறியியலாளர், கணணி வல்லுநர், மெக்கானிக், தையல்காரர், முடி திருத்துபவர், சமையல்காரர், தோட்டக்காரர்.... இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது. இப்படி ஏராளமான தொழில் தேர்ச்சி பெற்ற நபர்கள், தமது சேவையை வழங்கத் தயாராக இருக்கின்றனர். உங்களுக்கு வேறென்ன வேண்டும்? சுருக்கமாக, இது ஒரு தன்னிறைவு கண்ட சமுதாயம்.

கரெட்டி எனும் உள்ளூர் நாணயம், ஆகஸ்ட் 2011 முதல் புழக்கத்தில் வந்துள்ளது. கிரேட்டா என்ற தீவில் மட்டும், 300 க்கும் அதிகமானோர் அந்த நாணயத்தை பயன்படுத்துகின்றனர். கிரேக்கப் பொருளாதாரம் மிகவும் மோசமடைந்து வருவதால், தினசரி புதிய உறுப்பினர்கள் சேர்ந்து வருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும், நாளொன்றுக்கு ஒரு பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக, அமைப்பாளர் ஒருவர் தெரிவித்தார். கணக்கு வழக்குகள் அனைவருக்கும் தெரியும் படியாக இருப்பதால், ஊழலுக்கு அங்கே இடமில்லை. ஒவ்வொரு உறுப்பினரும், தினசரி நடக்கும் பணமாற்றத்தை பார்வையிடலாம். விலை, விற்ற அல்லது வாங்கிய பொருட்களின் எண்ணிக்கை, எல்லாவற்றையும் சரி பார்க்கலாம். ஒரு காரெட்டி நாணயத்தின் மதிப்பு ஒரு யூரோ. ஆனால், யூரோ நாணயம் பயன்படுத்துவது இந்த வலையமைப்பில் தடை செய்யப் பட்டுள்ளது.

மாற்று நாணயத்தை ஆதரிக்கும், கிரேட்டா பல்கலைக்கழகத்தை சேர்ந்த அரசியல்- பொருளாதார விரிவுரையாளர் George Stathakis கூறுகின்றார். "சமூகத்தின் அடித்தட்டு ஏழை மக்களுக்கு பயன்படும் வகையில் இந்த மாற்றுப் பொருளாதாரம் அமைக்கப் பட்டுள்ளது. மந்த நிலையில் இருந்த பொருளாதார செயற்பாடுகள் ஊக்குவிக்கப் படுகின்றன. இதனால், புதிய வேலை வாய்ப்புகளும் உருவாகின்றன. நம்பிக்கை, எளிமை, வெளிப்படையான தன்மை, இவை தான் (கரெட்டி) நாணய பரிமாற்றத்தின் அடிப்படை. இன்று கிரேக்கம் முழுவதும் 26 வலையமைப்புகள் இயங்கி வருகின்றன. இந்த வருட இறுதிக்குள், நாடு முழுவதும் நூறு அமைப்புகள் இயங்கத் தொடங்கியிருக்கும்."

உதாரணத்திற்கு, அவர் வாழ்க்கையில் நடந்த பரிமாற்றம் ஒன்றைப் பற்றிக் கூறினார். "ஓய்வு நேரத்தில், எனது வீட்டுத் தோட்டத்தில் உள்ள ஒலிவ் மரத்தில் இருந்து, ஒலிவ் எண்ணை தயாரிக்கிறேன். அதனை ஒரு வியாபாரிக்கு விற்றால், போத்தல் ஒன்று 1 .80 யூரோவிற்கு விற்க வேண்டும். ஆனால், கடையில் அதன் விலை 5 யூரோக்கள்! மாற்று நாணய வலையமைப்பு உறுப்பினர் ஒருவர், ஒலிவ் எண்ணைக்கு பதிலாக, வாகனக் காப்புறுதி செய்து தர ஒப்புக் கொண்டுள்ளார். அவருக்கு, ஒரு போத்தல் ஒலிவ் எண்ணை 2 .5 கரெட்டிக்கு (1 கரெட்டி = 1 யூரோ) விற்க ஏற்பாடாகியுள்ளது. எமது பரிமாற்றத்தில் இடைத்தரகர் யாரும் நுழையாததால், இருவருக்கும் இலாபம்."

பொருளாதார நெருக்கடியால், முதியோர் தான் அதிகமாகப் பாதிக்கப் படுகின்றனர். மின்சாரம், எரிவாயுக் கட்டணங்களை கட்ட முடியாமல் தடுமாறுகின்றனர். இன்று, மாற்றுப் பொருளாதார வலையமைப்பை சேர்ந்த உறுப்பினர்கள் அவற்றைக் கட்ட உதவுகின்றனர். முதியோரை பராமரிக்கின்றனர். வேலைக்கு போகும் தம்பதியினரின், குழந்தைகளை பார்த்துக் கொள்ள ஆள் கிடைக்கின்றது. வீட்டில் ஏதாவது உடைந்து விட்டால், யாராவது வந்து திருத்திக் கொடுக்கிறார்கள். எங்கேயாவது போக வேண்டுமானால், தெருவில் கண்டாலும், வாகனம் வைத்திருப்பவர்கள் ஏற்றிச் செல்கிறார்கள். மக்கள் எல்லோரும் ஒரே குடும்பம் போலப் பழகுகின்றனர். அவர்களுக்கு இடையே உண்மையான நட்பு மலர்ந்துள்ளது. தங்களுடைய வாழ்க்கையில், "முதல் தடவையாக சுதந்திரத்தை அனுபவிப்பதாக," அமைப்பின் உறுப்பினர்கள் கூறுகின்றனர்.

மாற்று நாணய வலையமைப்பானது உள்ளூர் மட்டத்தில் தான் சாத்தியமாகின்றது. தேசத்தின் பொருளாதார பிரச்சினையை தீர்க்கும் வல்லமை அதற்குக் கிடையாது. வங்கிகளும், அரச கட்டமைப்புகளும், நிதி நிறுவனங்களும் மட்டுமே பாரிய மாற்றங்களை உண்டாக்கலாம். ஒரு நாட்டில் புரட்சி ஏற்பட்டால் மட்டுமே, பெரிய அதிசயங்களை நிகழ்த்திக் காட்டலாம். அது வரையில், மாற்று நாணய பொருளாதாரம், யூரோ நாணய பொருளாதாரத்திற்கு சமாந்தரமாகவே சென்று கொண்டிருக்கும். வெகுஜன ஊடகங்கள், உலக மக்களுக்கு பிரயோசனமான, இது போன்ற செய்திகளை தெரிவிக்காமல் இருட்டடிப்பு செய்கின்றன. "வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்யும் வன்முறையாளர்களாகவே", அவர்கள் கிரேக்க மக்களைக் காட்டி வருகின்றனர். கிரேக்க மக்களுக்கு ஆர்ப்பாட்டம் செய்யவும் தெரியும், அதே நேரம், புதியதோர் உலகத்தை படைக்கவும் தெரியும்.

பணப் புழக்கம் இல்லாத சமுதாயங்கள் பல, வரலாற்றில் ஏற்கனவே இருந்துள்ளன. சோவியத் யூனியனிலும், மாவோவின் சீனாவிலும், சில இடங்களில் பரிசோதனை முயற்சிகள் இடம்பெற்றுள்ளன. ஒன்றுமேயில்லாத வெறும் கட்டாந்தரையில் இருந்து, நவீன நகரங்கள் உருவாகின. இந்த கம்யூனிச சமுதாயங்கள், இன்றைக்கும் இயங்கிக் உள்ளன. அவை எதுவும் பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப் படவில்லை. (பணம் இருந்தால் தானே பிரச்சினை?) தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட்டு மகிழும் மேதைகள், நவீன இஸ்ரேல் எவ்வாறு உருவானது என்ற இரகசியத்தை கூற மாட்டார்கள். (அவர்களுக்கே தெரியுமா என்பது கேள்விக்குறி) முதன்முதலாக, ரஷ்ய, கிழக்கு ஐரோப்பிய யூதர்கள் தான் பாலஸ்தீனத்தில் சென்று குடியேறினார்கள். அவர்கள் அங்கே கம்யூனிச சித்தாந்தத்தை நடைமுறைப் படுத்தினார்கள். பொதுவுடைமை உற்பத்தி முறை பின்பற்றிய விவசாயக் கிராமங்கள் சில, தொழிற்துறை வளர்ச்சி கண்டன.




**********************************
இதனோடு தொடர்பான முன்னைய பதிவு:
பணம் இல்லாத வாழ்க்கை சாத்தியம்! உதாரணத்திற்கு ஒருவர்!!

3 comments:

  1. சத்தியமாக எனக்கு இது புரியவில்லை. ஒரு வேலை எனக்கு ஒரு கணணி தேவை பட்டது என்றால் அதை தயார் செய்ய யாரவது ஒருவர் வெளியே விலை கொடுத்து வாங்க வேண்டும். ஒன்று அவர் இந்த நெட்வொர்க் வெளியே இருக்கவேண்டும் அல்லது இதை மதிக்காதவராக இருக்கவேண்டும். அல்லது அவர் என்னை கணணி இல்லாமல் வாழ சொல்பவராக இருக்கவேண்டும். புரிந்த மாதிரி இருக்கு ஆனால் புரியல.

    ReplyDelete
  2. இன்றைய காலத்தில், எல்லாம் பணமின்றி சாத்தியமில்லை. அதனால் உலகம் முழுவதும் இந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியம். எங்காவது ஒரு இடத்தில் தொடங்கத் தானே வேண்டும்.

    ReplyDelete
  3. இந்தியாவில் இதை செய்ய முடியாது என்றே கருதுகிறேன்..மக்களின் ஒவ்வோரு பண பரிமாற்றத்திலும் அரசுக்கு வரி வருவாய் கிடைக்கிறது...அந்த வருவாயை இழக்க அரசு விரும்புமா..?? ஒரு உதாரனம் இங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் 64 ரூபாய்... அதில் அரசுக்கு கிடைக்கும் வரி தோராயமாக 40 ரூபாய்.. அதே நேரம் ஒரு லிட்டர் எத்தனால் காய்ச்சி வடித்தால் நமக்கு சுமாராக 20 ரூபாய் செலவாகும்.. ஆனால் அரசுக்கு வரி வருவாய் கிடைக்காது...எனவே காய்ச்சி வடிகட்டுவது இங்கு சட்ட விரோதமாக்கப்பட்டுள்ளது...இப்படித்தான் மக்கள் ஏதாவது புது வழியை தேட நினைக்கும் போதே அரசு என்ற சுரண்டல் அமைப்பில் தின்று கொழுத்தவர்கள் உசார் ஆகிவிடுகிறார்கள்...

    ReplyDelete