"லெபனானில், ஒரு 17 வயது பருவ மங்கை, குண்டுகள் நிரப்பிய வாகனத்தை செலுத்திச் சென்று இஸ்ரேலிய இராணுவ வாகனத் தொடர் மீது மோதினாள். அந்த தற்கொலைத் தாக்குதலில், பத்து இஸ்ரேலிய படையினர் காயமுற்றனர்."
1985 ம் ஆண்டு, ஈழப்போரின் கெடுபிடிக்குள் இருந்த யாழ்ப்பாணத்தில் வெளியாகும் பத்திரிகை ஒன்றில் அந்தச் செய்தியை முதன் முதலாக வாசித்தேன். அப்பொழுது ஈழப்போரில் ஈடுபட்ட எந்தவொரு விடுதலை இயக்கமும், புலிகள் உட்பட, தற்கொலைத் தாக்குதல் எதையும் நடத்தி இருக்கவில்லை. அன்று பாடசாலை மாணவர்களாக இருந்த நாம், தற்கொலைத் தாக்குதல் பற்றிய செய்தியை, முதன் முதலாக லெபனானில் இருந்து தான் கேள்விப் பட்டிருந்தோம். ஓரளவு அரசியல் பிரக்ஞை கொண்ட நண்பர்கள் மத்தியில், அந்த செய்தி பெரிதும் அலசப் பட்டது. பத்திரிகையில், உலகச் செய்திகள் பகுதியில், இரண்டு பத்திகளுடன் வந்த செய்தியைத் தவிர, வேறெந்த விபரமும் எமக்குத் தெரியாது. எமது தமிழ் ஊடகங்களுக்கும் அது பற்றி அறியும் ஆர்வம் இருக்கவில்லை. அந்தச் சம்பவம் நடைபெற்று இரண்டு வருடங்களுக்குப் பின்னர், நெல்லியடியில் புலிகளின் முதலாவது தற்கொலைத் தாக்குதல் நடைபெற்றது. பெண் போராளிகள் பங்குபற்றிய தற்கொலைத் தாக்குதல்களுக்கு இன்னும் சில வருடங்கள் காத்திருக்க வேண்டியேற்பட்டது. இருப்பினும், புலிகளின் தற்கொலைக் குண்டுதாரிகள் பற்றி உலகம் அளவுக்கு அதிகமாகவே அறிந்து வைத்துள்ளது. (நவீன உலக வரலாற்றில், புலிகள் இயக்கம் மட்டுமே மிக அதிகளவு தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது என்று, சி.ஐ.ஏ. அறிக்கை தெரிவிக்கின்றது.) லெபனானின் முதலாவது பெண் தற்கொலைக் குண்டுதாரி பற்றி கேள்விப் பட்டவர்கள் மிகக் குறைவு.
தொண்ணூறுகளின் இறுதியில், ஐரோப்பாவுக்கு புலம்பெயர்ந்து வந்த பின்னர், பல லெபனானிய நண்பர்கள் மூலம், லெபனானில் நடைபெற்ற போர்கள் பற்றிய ஆழமான தகவல்கள் கிடைத்தன. அவர்கள் எல்லோரும் அரசியல் அகதிகளாக தஞ்சம் கோரியவர்கள். அதனால், லெபனான் அரசியலை அக்கு வேறு, ஆணி வேறாக அலசினார்கள். நான் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த காலங்களில், என்பதுகளின் ஆரம்பத்தில், லெபனான் போர் பற்றிய செய்திகளை அடிக்கடி கேள்விப் படுவோம். அப்பொழுதெல்லாம், ஈழ விடுதலை இயக்கங்கள் கெரில்லாத் தாக்குதல்களை மிக அதிகளவில் மேற்கொண்டிருந்தன. இரண்டு எதிரிப் படைகளின் மோதல் என்ற கட்டத்திற்கு மாற சில வருடங்கள் எடுத்தன. அதனால், அன்று, லெபனான் போர் பற்றிய செய்திகளுக்கு ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவம் காரணமாக, "நவீன உலக வரலாற்றில் நீண்ட காலம் இழுபடும் போர்," என்று நாம் அறிந்து வைத்திருந்தோம். "எமது தமிழீழ போராட்டமும், லெபனான் போர் போல பல வருடங்கள் இழுபடப் போகின்றது." என்று நண்பர்களுடன் அரட்டை அடிக்கும் பொழுது பேசிக் கொள்வோம். சுமார் பத்துப் பதினைந்து வருடங்கள் நீடித்த லெபனான் போரின் சாதனையை, ஈழப்போர் முறியடிக்கப் போகின்றது என்ற விடயம், எமக்கு அன்று தெரியாது.
லெபனான் போரின் உச்சக் கட்டத்தில் தான், உலகின் முதலாவது பெண் தற்கொலைப் போராளியான சானா மெஹைடிலி (Sana'a Mehaidli) யின் தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்றது. லெபனானின் பலவீனமான அரசாங்கம் தலைநகரை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கே பெரும் பிரயத்தனப் பட்ட காலம் அது. பல்வேறு வகையான ஆயுதக் குழுக்கள் லெபனானை தமக்குள் பங்குபோட்டுக் கொண்டிருந்தன. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, இஸ்ரேலிய இராணுவம் படையெடுத்து வந்து, தென் லெபனானை ஆக்கிரமித்திருந்தது. கிறிஸ்தவ-பாஸிச பலாங்கிஸ்ட் இயக்கத்தை தவிர, மற்றைய ஆயுதக் குழுக்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை எதிர்த்தன. அவற்றை வெறும் ஆயுதக்குழுக்கள் என்று கருதுவதும் தவறு. அவை ஒவ்வொன்றுக்கும் பின்னால், வெகுஜன அரசியல் கட்சிகள் இருந்தன. இன்னொரு விதமாக சொன்னால், லெபனானின் அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் தமக்கென இராணுவப் பிரிவொன்றை வைத்திருந்தன. சிரியா சமூக தேசியக் கட்சி (Syrian Social Nationalist Party)(SSNP), காலனிய காலத்தில் இருந்தே இயங்கி வருகின்றது. பிரெஞ்சு காலனிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடிய நீண்ட வரலாற்றைக் கொண்டது.
அந்தக் காலத்தில், சிரியாவும், லெபனானும், தற்போது துருக்கியின் பகுதியான அரபு மொழி பேசும் மாகாணமும், சிரியா என்ற ஒரே நாடாக இருந்தன. பிரான்ஸ் தான் அவற்றை பிரித்தது. அதன் விளைவாக உருவானது தான், சிரியா சமூக தேசியக் கட்சி (Syrian Social Nationalist Party). பெய்ரூட் நகரில் உள்ள அமெரிக்க பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர்களினால் உருவாக்கப் பட்டது. மத்திய கிழக்கு நாடுகளில், அமெரிக்காவுக்கு சேவகம் செய்யும் நடுத்தர வர்க்க அறிவுஜீவிகள் படிப்பதற்காக உருவான கல்லூரி, ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களையும் உற்பத்தி செய்தது. அன்று, ஐரோப்பாவில் இருந்து பரவிய புதிய சித்தாந்தங்களான தேசியவாதம் மார்க்ஸியம் என்பனவற்றால் கவரப் பட்டவர்களே அதிகமிருந்தனர். ஏறக்குறைய மூன்று தசாப்தங்களுக்குப் பின்னரே, இஸ்லாமியவாத இயக்கங்கள், மக்கள் ஆதரவைப் பெற்றன. சிரியா சமூக தேசியக் கட்சியில், கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் உறுப்பினர்களாக இருந்தனர். அது ஒரு மதச்சார்பற்ற கட்சி என்பதால், பெண்களும் சேர்த்துக் கொள்ளப் பட்டனர். கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில், பாத் (Baath) கட்சியும் உருவாகியிருந்தது. இரண்டுமே தேசியவாதக் கட்சிகள் தான். இருந்த போதிலும், சில அடிப்படை வேறுபாடுகள் இருந்தன.
பாத் கட்சி,மொரோக்கோ விலிருந்து, ஈராக் வரையிலான அரபு மொழி பேசும் நாடுகளை கொண்ட தாயகம் ஒன்றை உரிமை கோருகின்றது. பாத் கட்சியின் சின்னத்திலும் அந்தப் பிரதேசத்தின் படம் பொறிக்கப் பட்டிருக்கும். ஆனால், சிரியா சமூக தேசியக் கட்சி, "அகண்ட சிரியாவுக்கு" உரிமை கோருகின்றது. இன்றைய சிரியா, லெபனான் மட்டுமல்ல, ஈராக், ஜோர்டான், எகிப்தின் சினாய் பகுதி, இவற்றுடன் சைப்ரஸ் தீவையும் உள்ளடக்கியிருக்கும். அதாவது, பண்டைய கால சிரியா சாம்ராஜ்யத்திற்கு உரிமை கோருகின்றனர். கட்சியின் கொள்கை விளக்கத்தைப் பார்த்தால், அதனை தீவிர வலதுசாரிக் கட்சியாக உருவகப் படுத்தலாம். கட்சிக் கொள்கை பாசிசக் கூறுகளைக் கொண்டிருக்கின்றது. காலனிய காலகட்டத்தின் பின்னர், மார்க்ஸியம் கற்ற சில உறுப்பினர்களால், கட்சிக்குள் இடது, வலது என்ற பிரிவினை தோன்றியது. மிக அண்மையில் தான், அநேகமாக தொண்ணூறுகளில், இந்த முரண்பாடு தீர்க்கப் பட்டது.
சி.ச.தே.கட்சியின் சின்னம், "சூறாவளி". 1985 ம் ஆண்டு, தற்கொலைத் தாக்குதலில் வீர மரணமடைந்த 'சானா' வும், சூறாவளி என்ற பெயரை விரும்பித் தேர்ந்தெடுத்துள்ளார். அவர் ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்த அழகான இளம் பெண். வீடியோ கடை ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில், கட்சி உறுப்பினராகியுள்ளார். தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்துவதற்கு, தானாகவே முன்வந்து ஒப்புக் கொடுத்துள்ளார். சி.ச.தே.கட்சி இதுவரையில் பத்துக்கும் குறையாத தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. தற்கொலைத் தாக்குதலுக்கு தயாராவதற்கு முன்னர், ஒவ்வொருவரும் வீடியோக் கமெராவுக்கு முன்னால் வாக்குமூலம் அளிக்க வேண்டும். "தாய் நாட்டிற்காக வீர மரணத்தை தழுவிக் கொள்வதாக," அவர்கள் கொடுக்கும் விளக்கவுரை வீடியோவில் பதிவு செய்யப்பட்டு, பின்னர் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப் படும். பிற்காலத்தில் ஹிஸ்புல்லா, ஹமாஸ் ஆகிய இஸ்லாமிய மதவாத இயக்கங்களும், அந்த நடைமுறையை பின்பற்றின. சி.ச.தே.கட்சி தான் அவற்றிக்கு எல்லாம் முன்னோடி என்பது குறிப்பிடத் தக்கது.
சானா, 9 ஏப்ரல் 1985 அன்று, தென் லெபனானில் இஸ்ரேலியப் படையணி மீது, குண்டுகள் பொருத்தப் பட்ட காரைக் கொண்டு சென்று மோதி வெடிக்கச் செய்தார். 1968 ம் ஆண்டு பிறந்த சானா, தியாக மரணத்தை தழுவிக் கொண்ட பொழுது, அவருக்கு வயது 17 மட்டுமே. அந்தத் தாக்குதலில் பத்து இஸ்ரேலிய படையினர் கொல்லப் பட்டனர். இஸ்ரேலிய அரசு எப்பொழுதும் தமது பக்க இழப்புகளை குறைத்துச் சொல்வது வழக்கம். அன்றைய தாக்குதலில், "ஒருவர் மட்டுமே இறந்ததாகவும், பன்னிரண்டு பேர் காயமுற்றதாகவும்" செய்தி வழங்கினார்கள். இனி வருங்காலங்களில், இது போன்ற பல தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டியேற்படும் என்று, அன்று இஸ்ரேல் நினைத்திருக்கவில்லை. தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய உலகின் முதலாவது பெண் என்ற பெருமையும், சானா மெஹ்டிலிக்கு போய்ச் சேர்ந்தது. எமது அறிவுக்கு எட்டிய வரையில், வரலாற்றில் இதற்கு முன்னர், பெண் தற்கொலைப் போராளிகள் இருந்ததாகத் தெரியவில்லை. ஜப்பானின் கமிகாசே படையிலாகட்டும், மத்திய காலத்தில் வாழ்ந்த அஸாஸின் படையிலும், பெண்கள் இருந்ததாக எந்தக் குறிப்பும் இல்லை. ஆகவே, சானா மெஹைடிலி, உலகின் முதலாவது பெண் தற்கொலைப் போராளியாக, வரலாற்றில் பதியப் பட்டுள்ளார். இன்றைக்கும், "தென் லெபனானின் மண மகள்" என்ற பெயரில், லெபனான் மக்களால் நினைவுகூரப் படுகின்றார்.
மேலதிக விபரங்களுக்கு:
Sana'a Mehaidli
Female suicide bombers
Syrian Social Nationalist Party
Syrian Social Nationalist Party
Female suicidal terrorism in Lebanon(Sana'a Mehaidli)
அரசுக்கு எதிரான தற்கொலை சாவுக்கு ஈழ பெண்மணிகள் முன்னோடி என்று நினைத்து இருந்தேன். அவர்களுக்கும் முன்னோடியா? ......
ReplyDeleteKuili sub-ordinate of Velu Nachiar is 1st suicide bomber in 1780
Deleteஅருமையான பதிவு.வாசிக்கும்போது மனம் கலங்கியது !
ReplyDelete