Wednesday, February 08, 2012

ஏனிந்த அணு உலை வெறி?

கூடங்குளம் அணு உலை கட்டட வேலைகள் ஆரம்பம், ஈழப் போராட்டத்தில் ஏற்பட்ட திருப்புமுனை, செர்னோபில் அணு உலை வெடிப்பு, சோவியத் யூனியனின் மறைவு.... இவை எல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற சம்பவங்கள் போலத் தோன்றும். எப்போதும் மக்களும், அவர்கள் சார்ந்திருக்கும் அரசியல் சக்திகளும் குறுகிய நலன்கள் குறித்தே சிந்தித்து வருகின்றனர். கூடங்குளம் அணு உலை கட்டப் பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், தமிழகத்தில் அது குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கவில்லை. ஊடகங்களும் அதனை சிறு பெட்டிச் செய்திக்கப்பால், விவாதப் பொருளாக்கவில்லை. எண்பதுகளில், ஈழப்போராட்டத்தில் தோன்றிய இடதுசாரி அறிவுஜீவிகள், கூடங்குளம் அணு உலை வெடித்தால் ஏற்படப் போகும் பாதிப்புகள் குறித்து, வெகுஜனப் பத்திரிகைகளில் எழுதி வந்தனர்.

"கூடங்குளம், இலங்கையில் தமிழர்கள் செறிவாக வாழும் வட பகுதிக்கு அண்மையில் இருப்பதால், அணு உலை வெடித்தால் ஏற்படும் கதிர்வீச்சுக்கு அகப்பட்டு மரணிக்கப் போவதும் ஈழத் தமிழர்களாக இருப்பர்." இந்தக் கூற்று, ஈழத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. கல்வியறிவற்ற கூலித் தொழிலாளிகள் கூட, அணு உலை பற்றியும், அதனால் ஏற்படப் போகும் பாதிப்புகள் பற்றியும் என்னிடம் விசாரித்தனர். அந்த அளவுக்கு மக்கள் விழிப்புற்று இருந்தனர். எனினும், கூடங்குளம் எதிர்ப்பு அலை அமுங்கிப் போனது. இந்திய நலன்களுக்கு சார்பான, வலதுசாரி அரசியல் சக்திகள், கூடங்குளம் அணு உலை குறித்து பேசுவதை விரும்பவில்லை. ஈழப் பிரதேசங்களில் நிலைமை இவ்வாறு இருந்தால், சிறிலங்கா அரசு வட்டாரங்கள் அது குறித்து மௌனம் சாதித்து வந்தன. என்ன இருந்தாலும் அழியப் போவது தமிழர்கள் தானே, என்று அரசில் இருந்த இனவெறியர்கள் வாளாவிருந்திருப்பார்கள்.

அதே காலகட்டத்தில் தான், உக்ரைனில் செர்னோபில் அணு உலை வெடித்து பெருமளவு மக்கள் இறந்தனர். குறிப்பிட்ட பிரதேசம், மக்கள் வாழ முடியாத அளவுக்கு கதிர்வீச்சு ஆபத்து இருப்பதாக அறிவிக்கப் பட்டது. இந்த செய்தி, உலகம் முழுவதும் அணு உலை குறித்த அச்ச உணர்வை தோற்றுவித்தது. வளர்ச்சி அடைந்த நாடுகளில், அணு உலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வது சாதாரணமாக நிகழ்ந்து கொண்டிருந்தது. செர்னோபில் வெடிப்பின் பழி முழுவதும், அன்றைய சோவியத் கம்யூனிஸ்ட் அரசின் மீது போடப் பட்டது. அதாவது, நிர்வாக சீர்கேடுகளே அணு உலை வெடிப்புக்கு காரணமாக தெரிவிக்கப் பட்டது. கலக்கமடைந்த உலக மக்களுக்கு அவ்வாறு தான் ஆறுதல் கூறப் பட்டது. அதே நேரம், "சிறப்பான நிர்வாகம் நடக்கும்" மேற்கத்திய நாடுகள் புதிய அணு உலைகள் கட்டுவதை நிறுத்தி விட்டன. இது அணு உலையின் ஆபத்தை, ஆளும் வர்க்கம் உணர்ந்துள்ளதை எடுத்துக் காட்டுகின்றது.

செர்னோபில் அணு உலை வெடிப்பதற்கு முன்னர், ஐரோப்பாக் கண்டத்தில் அணு குண்டு வெடிப்பு பற்றிய அச்சம் நிலவியது. பனிப்போர் காலத்தில், ஒரு பக்கம் நேட்டோ படையணிகள், மறுப்பக்கம் வார்ஷோ படையணிகள் அணுவாயுதங்களை கொண்டு வந்து குவித்திருந்தன. பல தடவை, சம்பந்தப் பட்ட அரசுகள் தமது மக்களுக்கு அறிவிக்காமலே அதற்கு ஒத்துழைப்பு வழங்கின. உலகில், முதலும் கடைசியுமாக, ஜப்பானில் மட்டுமே அணு குண்டு போடப்பட்டாலும், இனியொரு போர் தொடங்கும் சமயம், எந்த தரப்பு அணுவாயுதத்தை முதலில் பயன்படுத்தும் என்பதை ஊகிப்பது கடினமாக இருந்தது. "திடீரென யாரவது ஒரு மன நலம் பிசகிய அதிகாரி, அணுவாயுதம் ஏவும் பட்டனை அழுத்தி விட்டால்...?" இந்தக் கேள்வி எல்லோர் மனதிலும் குடைந்து கொண்டிருந்தது. இதன் காரணமாக, அணுவாயுத எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஆங்காங்கே இடம்பெற்றன. "சமாதான இயக்கங்களின்" அங்கத்தவர்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகியது. சோவியத் யூனியனின் அதிபராக கோர்பசேவ் தெரிவானதும், அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போட்டு, அணுவாயுதங்களை அழிக்க ஒப்புக் கொண்டார். இருந்தாலும், அணு உலைகள் குறித்து அன்று யாரும் கவனம் செலுத்தவில்லை.... செர்னோபில் வெடிக்கும் வரையில். அதன் பிறகு தான், அணு சக்தி எப்போதும் ஆபத்தான விடயம் என்பதை மக்கள் உணர்ந்து கொண்டார்கள்.

உலகில் மனித இனம் தோன்றிய காலத்தில் இருந்து, அனைவருக்கும் உணவு கிடைக்க வைப்பது ஒரு பிரச்சினையாகவே உள்ளது. அதே போன்று, மின்சாரம் போன்ற தேவைகளை பூர்த்தி செய்வதும் ஒரு சவாலாகவே தொடர்கின்றது. மின்சாரத் தட்டுப்பாட்டை நீக்க மேற்கத்திய நாடுகள் அணுசக்தியை பயன்படுத்துகின்றன. அணுவுக்கு மாற்றீடாக பயன்படுத்தக் கூடிய வளங்கள் உள்ளன. நீர், காற்றாடி, சூரிய ஒளியை பயன்படுத்தியும் மின் உற்பத்தி செய்யலாம். உதாரணத்திற்கு டென்மார்க், நெதர்லாந்தில் காற்றாடி மின்சாரமும், நோர்வேயில் நீர் வலு மின்சாரமும் ஏற்கனவே கட்டமைக்கப் பட்டு இயங்கிக் கொண்டிருக்கின்றன. அல்ஜீரியாவில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து பிரான்சிற்கு விநியோகிக்கும் திட்டமும் ஆலோசிக்கப் படுகின்றது. இத்தகைய பசுமைப் புரட்சிகள், இன்னமும் விருத்தி செய்யப் படவில்லை. இவை எல்லாம் இன்னமும் பெரும்பாலான மக்களை போய்ச் சேரவில்லை. கடந்த சில ஆண்டுகளாக, நெதர்லாந்து நாட்டின் பெரிய மின் விநியோக நிறுவனம், "உங்களுக்கு தூய்மையான மின்சாரம் வேண்டுமா?" என்று வீட்டுக்கு வீடு கடிதம் அனுப்பி கேட்டுக் கொண்டிருக்கிறது. "தூய்மையான மின்சாரம்" என்றால், காற்றாடிகளினால் உற்பத்தி செய்யப் படும் மின்சாரம் எனப் பொருள் படும். மேலைத்தேய மக்கள், அணு சக்தி மின் திட்டத்தை எதிர்ப்பதன் காரணமாக, இது போன்ற மாற்றுத் திட்டங்களை அரசு அறிவித்து வருகின்றது.

இங்கே ஒரு விடயத்தை கவனத்தில் எடுக்க வேண்டும். இத்தகைய மாற்று வளங்கள் இருந்தும், இவ்வளவு காலமும் எதற்காக அணு மின்சாரத்தை பயன்படுத்தி வந்தார்கள்? எண்ணெய் நிறுவனங்கள், தமது இலாப நோக்கத்திற்காக, மாற்று எரிபொருள் பாவனையை தடுத்து வருகின்றன. அது போலத் தான், அணு மின்சாரம் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் சந்தையில் ஆதிக்கம் செலுத்துகின்றன. (மேற்கத்திய நாடுகளில், இவை "அணு உலை மாபியாக்கள்" என்று அழைக்கப் படுகின்றன.) செர்னோபில் அணு உலை வெடித்த பின்னர் தான், அவர்களது பிடி தளர்ந்தது. இன்றைக்கு மேற்கு ஐரோப்பிய அரசுகள், மாற்று எரிபொருளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. காற்றாடி, நீர், சூரிய ஒளி, என்று இயற்கையாக கிடைக்கும் சக்தியில் முதலிட முன்வருகின்றன.

புதிதாக அணு உலைகள் அமைக்கப்படாத காரணத்தால், அவற்றில் இலாபம் பார்த்த நிறுவனங்கள் வேறு வழி தேடி அலைகின்றன. அவர்களின் முன்னால் உள்ள ஒரே தெரிவு... மின் உற்பத்தியில் தன்னிறைவு அடையாத மூன்றாம் உலக நாடுகளுக்கு அணு உலை கட்டிக் கொடுப்பது. பனிப்போர் நிலவிய காலத்தில் அதுவும் அரசியலாக்கப் பட்டிருக்கும். ஆனால், இன்றைக்கு ஈரான் போன்ற சில நாடுகளைத் தவிர, பிற நாடுகளில் அணு உலை அமைப்பதற்கு எதிர்ப்பிருக்கப் போவதில்லை. சோவியத் யூனியனின் மறைவின் பின்னர், "அணு உலை வியாபாரம்" செய்வதற்கு தடையேதும் ஏற்படப் போவதில்லை. அந்த அடிப்படையிலேயே, இந்தியாவில் கட்டப்படும் அணு உலைகளையும் பார்க்க வேண்டும். (அணு உலை கட்டுவது ரஷ்ய நிறுவனமாக இருந்தாலும், சர்வதேச சந்தையில் அதன் பங்கு என்ன என்பது தான் முக்கியமானது.) முரண்நகையாக, ஈரானில் அணு உலை கட்டினால் தடுக்க முனையும் "சர்வதேச சமூகம்", இந்தியாவில் கட்டினால் வாயை மூடிக் கொண்டிருக்கியது. இந்தியாவிலும், மேற்குலக நாடுகளிலும், மக்கள் மட்டுமே எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். வீதியில் இறங்கி போராடுகின்றனர். இது சர்வதேச சமூகங்களின் ஒன்றிணைந்த போராட்டமாக காணப்படுகின்றது.

மேற்கைரோப்பிய நாடுகளில், தொடர்ந்து தொலைக்காட்சி செய்திகளை பார்த்து வரும் சாதாரண பார்வையாளர்கள் அனைவரும், அதனை அவதானித்திருப்பார்கள். அணு உலைக் கழிவுகளை ஏற்றிச் செல்லும், ரயில் வண்டி (Castor train) மறிப்புப் போராட்டம் மிக ஆக்ரோஷமாக நடைபெறும். ஒவ்வொரு வருடமும் தவறாமல் இடம்பெறும் நிகழ்வு இது. (இரண்டு வருடங்களுக்கு முந்திய, வெற்றிகரமான அணு உலைக் கழிவு எதிர்ப்பு போராட்டம் பற்றிய வீடியோ கீழே இணைக்கப் பட்டுள்ளது. ) குறிப்பாக பிரான்ஸ் எல்லையோடு இருக்கும் மேற்கு ஜெர்மன் பகுதி ஒரு போர்க்களம் போன்று காட்சி தரும். பல நூற்றுக்கணக்கான இளம் ஆர்ப்பாட்டக்காரர்கள், தண்டவாளத்தோடு தம்மை சேர்த்து பிணைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களை சுற்றி பொலிஸ் படை குவிக்கப் பட்டிருக்கும். பாதுகாப்புக் கவசங்கள் அணிந்த பொலிசார், உத்தரவு கிடைத்தால் தாக்குவதற்கு தயாராக நிற்பார்கள். இறுதியில் போலீசாருக்கும், ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும் நடக்கும் மோதலில் காயமுற்றோர், கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை, போராட்டத்தின் வீரியத்தை உணர்த்தும்.எதற்காக இந்தப் போராட்டம்?

பிரான்ஸ் நாட்டு அணு உலைகள் வெளியேற்றும் கழிவுப் பொருட்களை, ரயில் வண்டி மூலம் ஏற்றிச் சென்று, வட ஜெர்மனியில் ஓரிடத்தில் புதைப்பார்கள். ஒரு வேளை, கடுமையான பாதுகாப்புடன் செல்லும் ரயில் வண்டி தடம்புரண்டால், அக்கம் பக்க ஜனங்கள் கதிர்வீச்சால் பாதிக்கப் படுவார்கள். அதை விட, அணு கழிவுகள் புதைக்கப் படும் இடத்தில், ஆயிரம் வருடங்கள் சென்றாலும் கதிர்வீச்சு அபாயம் காணப்படும். இது போன்ற தகவல்களை கேள்விப்பட்ட ஊர் மக்கள், தாமாகவே முன் வந்து போராட்டத்தில் குதிக்கின்றனர். சில இடதுசாரி (அனார்கிஸ்ட்) அமைப்புகளும், "கிரீன் பீஸ்" தொண்டு நிறுவனமும், இந்த போராட்டத்தை ஒழுங்கமைத்து நடத்தி வருகின்றன. கணிசமான உள்ளூர் மக்களும் கலந்து கொள்கின்றனர். போராட்டத்திற்கு ஊடகங்கள் கொடுக்கும் முக்கியத்துவம் காரணமாக, பிற மக்களும் அறிந்து கொள்ள முடிகின்றது. துரதிர்ஷ்டவசமாக, பெரும்பான்மை மக்கள் அரசின் பக்கம் சார்ந்து நிற்கின்றனர். அதற்குக் காரணம், அணு உலைக் கசிவுகளால் மக்களுக்கு ஏற்படப் போகும் பாதிப்புகள் குறித்து ஊடகங்கள் பேசுவதில்லை. மாறாக, ஆர்ப்பாட்டம் செய்யும் ஆர்வலர்களுக்கும், போலீசாருக்கும் இடையிலான மோதலுக்கு மாத்திரம் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இதனால் அணு உலை எதிர்ப்பாளர்களை, "இலக்கற்ற வன்முறையாளர்கள்" என்றே மக்கள் புரிந்து கொள்கின்றனர். அவர்களை அடக்குவது சரி என்று, காவல் துறைக்கு வக்காலத்து வாங்குகின்றனர். அரசியல் தஞ்சம் கோரிய ஈழத்தமிழ் அகதிகள் கூட இது போன்ற கருத்துகளை தெரிவித்ததை காதாரக் கேட்டிருக்கிறேன்.

ஒரு போராட்டம் நடக்கும் பொழுது, முதலாளித்துவ ஊடகங்களின் தன்மை குறித்தும், வெகுஜன மக்களின் மனப்பான்மை குறித்தும், ஆராய்வது அவசியமாகின்றது. முதலாளித்துவ ஆட்சியாளர்கள், "அனைவருக்குமான மலிவு விலை மின்சாரம்" குறித்து மட்டுமே பேசுவார்கள். அணுசக்திக்கு மாற்றீடு குறித்து தெரிந்திருந்தாலும், வேறு வழி இல்லை என்று சாதிப்பார்கள். இதனால், அணு உலை எதிர்ப்பு போராட்டக் காரர்கள் தான், மாற்று எரிபொருள் குறித்தும் பேச வேண்டியுள்ளது. அது பற்றிய விளக்கங்களை, கலந்துரையாடல்கள், பிரச்சாரம் மூலம் மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டியுள்ளது. "தூய்மையான மின்சாரம்" குறித்து மேற்கு ஐரோப்பிய மக்கள் மத்தியில் ஏற்பட்ட விழிப்புணர்வு, இந்திய மக்களிடமும் ஏற்பட வேண்டும். இந்தியாவுக்கு அருகில் உள்ள, நேபாளமும், இலங்கையும், நீர் வீழ்ச்சிகளில் இருந்து தூய்மையான மின்சாரம் உற்பத்தி செய்யும் வளங்களைக் கொண்டிருக்கின்றன. இலங்கையில் ஈழப்போர் வெடிப்பதற்கு முன்னர், நீர் மின்சாரத் திட்டத்தை விரிவு படுத்தி, தமிழகத்திற்கும் விநியோகிக்கும் சாத்தியப்பாடுகள் குறித்து ஆராயப் பட்டன. இன்று நிலைமை தலைகீழாக மாறி விட்டது. கூடங்குளம் அணு உலையில் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை, இலங்கைக்கு விநியோகிக்கும் திட்டம் குறித்து ஆலோசிக்கப் படுகின்றது. ஒன்றைப் பேசும் பொழுது, இன்னொன்றைப் பற்றியும் பேசாமல் இருக்க முடிவதில்லை. "உலகமயமாக்கல்" எனும் பொருளாதார சித்தாந்தம், எவ்வாறு அனைத்து மக்களையும் பாதிக்கின்றது என்பதற்கு, அணு உலைகள் சாட்சியமாக உள்ளன. அணு உலைகளுக்கு எதிரான போராட்டம், உலகமயமாக்கலுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாகும்.



[ www.cinerebelde.org ]

4 comments:

  1. வழக்கம் போலவே மிகவும் ஆழ்ந்த அரசியல் கூர்மையுடன் எழுதப்பட்ட கட்டுரை. தக்க நேரத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அருமை

    ReplyDelete
  2. தேவையான சந்தர்ப்பத்தில் வெளியிடப்பட்ட அவசியமான கட்டுரை, பன்னாட்டு நிறுவனங்களின் வியாபரத்திற்க்காக சாதரண மக்களின் வாழ்க்கைக்கும், அவர்களின் சந்ததியினருக்கும், உலை வைக்கும் அணு உலைகள் உலகத்திலிருந்தே முற்றிலும் அகற்றப்படவேண்டும்.

    ReplyDelete
  3. தேவையான சந்தர்ப்பத்தில் வெளியிடப்பட்ட அவசியமான கட்டுரை......

    "நன்றி,
    கண்ணன்
    http://www.tamilcomedyworld.com"

    ReplyDelete
  4. விளக்கமான நல்ல பதிவு ! நன்றி சார் !

    ReplyDelete