Saturday, December 03, 2011

மக்கள் தலைவன் கிஷன்ஜி

கிஷன்ஜியின் குடும்பம்

கிஷன்ஜி என்று அனைவராலும் அறியப்பட்ட புரட்சியாளர் மல்லோஜூல கோடீஸ்வர ராவ், 1954 ம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் உள்ள கரீம்நகர் மாவட்டத்தில் பெத்தபள்ளி என்ற ஊரில் பிறந்தவர். புரட்சிகர இயக்கமான இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மாவோயிஸ்டு) இயக்கத்தில் தம்மைப் பல காலமாக இணைத்துக் கொண்டு செயல் பட்டவர். அவரது குடும்பம் சாதியில் உயர் சாதியினரான பிராமணராக இருந்தபொழுதும் மிகவும் முற்போக்கான குடும்பம். அவருடைய தாயும் தந்தையும் அரசியல்உணர்வும் நற்சிந்தனையும் உடையவர்கள். அவருடைய தந்தையார் வெங்கையா வெள்ளையரை எதிர்த்து நடந்த சுதந்திர இயக்கத்தில் நாட்டுக்காகப் போராடிச் சிறை சென்றவர். அவர் அன்றையக் காங்கிரெஸ் கட்சியின் ஆந்திர மாநிலத் துணைத் தலைவராக பணி செய்தவர்.தாயார் மதுரம்மாள் தமது பெயருக்கு ஏற்ப இனிமையான வழியில் தம் மக்கள் மூவரையும் நாட்டுப் பற்றுடனும் ஏழைகள் மீது அன்பு காட்டும் வழியிலும் வளர்த்தவர். கிஷன்ஜியின் இளைய சகோதரர் ஒருவரும் மாவோயியப் புரட்சி இயக்கத்தில் இணைந்து பணியாற்றுபவர் என்று சொல்லப் படுகிறது.

கிஷன்ஜியின் இளமைக் காலம்

கிஷன்ஜி தமது பதினைந்தாம் வயதிலேயே புரட்சிகர இயக்கங்களின் பால் ஈர்க்கப்பட்டார். தன் இளமைக் காலத்தில் அவர் அநீதியையும் ஏற்றத்தாழ்வையும் கண்டு கொதிப்படைவது வழக்கம். நீதியும் நேர்மையும் தமது இரண்டுகண்களாகக் கொண்டு எங்கு ஒடுக்குமுறை நடந்தாலும் அது கண்டு கொதித்து எழுந்தவர். பள்ளிமாணவனாக இருந்த காலத்திலேயே வகுப்பில் ரவுடித்தனம் செய்யும் மாணவர்களையும், மாணவிகளைக் கேலி செய்யும் சில்லறைப் பொறுக்கிகளையும் தட்டிக் கேட்பதில் முன் நின்றவர். தமது இளமைக் காலத்தில் காந்தியின் நூல்களையும், தாகூரின் கவிதைகளையும் தெளிவாகக் கற்றவர். இன்சொல் பேசும் இனியவர்.

1969 ம்ஆண்டு தாம் ஒரு பள்ளி மாணவனாக இருந்த போது நடைபெற்ற தெலுங்கானா தனி மாநிலம் கேட்டு நடந்த போராட்டத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர். தமது இடைவிடாத அரசியல் கல்வியின் பலனாக மர்க்சியமே உலகைக்காக்கும் ஆயுதம் என்ற தத்துவ முடிவுக்கு வந்தவர். ஏன் இப்படி வயதான தாயை தனியேவிட்டு விட்டுப் பிறருக்காகப் பணி செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று உறவினர்கள், நண்பர்கள் யாரேனும் கேட்டால் கிஷன்ஜி சொல்லும் பதில்: "என் தாய்க்கு மூன்று பிள்ளைகள், அதில் ஒருவர்வீட்டுக்கு, இருவர் நாட்டுக்கு." எதிலும் நியாயமாக நடக்கும் கிஷன்ஜி குடும்ப பாரத்தைச் சுமப்பதற்கும் நியாயமான வழியைச் சொன்னவர். கொண்ட கொள்கைக்காக தமது வீடு,நண்பர்கள், சொத்துகள், உற்றார் உறவினரைத் துறந்து மக்கள் பணி செய்யச் சென்றவர். வீட்டைவிட்டுச் சென்ற கிஷன்ஜியை அவரது தாயாரும் உறவினர்களும் முப்பத்து மூன்று ஆண்டுகள் கழித்துத் தான் உயிரற்ற உடலாகப் பார்க்க முடிந்தது.

அரசியல் பணி

பள்ளிக் கல்விக்குப் பின்னர், ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் கணிதம் பயின்று பட்டம் பெற்றார். பின்னர் சட்டப் படிப்பு படிக்கத்தொடங்கினார். அந்தக் காலகட்டத்தில் பெரும் வீச்சில் நடந்து வந்த நக்சல்பாரி,ஸ்ரீகாகுளம் விவசாயிகள் இயக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டு முழு நேரப் புரட்சிப்பணிக்காக தமது பல்கலைக் கழகக் கல்வியையும் துறந்தார். 1974 ம் ஆண்டு புரட்சிகர மார்க்சிய லெனினிய இயக்கத்தில் முழு நேரப் பணியாளராக இணைந்தார். சர்வாதிகாரி இந்திராவின் அவசர நிலை ஆட்சிக் காலத்தில் சில மாதம் சிறையில் இருந்தார். சிறை விட்டுத் திரும்பிய பின் இயக்கத்தின் அறை கூவலை ஏற்று கிராமப் பணி செய்யக் கிளம்பினார். அந்தக் கால கட்டத்தில் புரட்சிகர இயக்கத்தினர்மக்கள் பணி செய்ய கிராமங்களை நோக்கிச் செல்லுமாறு கேட்கப் பட்டனர். கிராம மக்களுடன் வாழ்ந்த காலத்தில் ஆந்திராவின் ஜக்தியால் பகுதியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் ஈடுபட்டார். இந்தப் போராட்டம் நிலப் பிரபுக்களிடம் இருந்து நிலங்களை மீட்டுக் குத்தகை விவசாயிகளுக்கு வழங்கியது. இளைஞர்கள் கிராம மக்களை அணி திரட்டி அவர்களுடைய உரிமைகளை உணர்த்தி நிலப் பிரபுக்களின் பிடியிலிருந்து அவர்களை மீட்டனர். அவரதுபணியின் தீவிரம் கண்டு 1979 ம் ஆண்டு இயக்க ஊழியர்கள் அவரை கரீம் நகரமாவட்டச் செயலாளராகத் தேர்வு செய்தனர். பின்னர் கட்சியின் ஆந்திர மாநிலக்கமிட்டியின் உறுப்பினராகவும் தேர்வு செய்யப் பட்டார். 1986 ம் ஆண்டு வரை ஆந்திர மாநிலத்தில் இயக்கத்தின் வளர்ச்சிக்குப் பாடுபட்டார்.

வங்காளத்தில் கிஷன்ஜியின் பணி

மேற்கு வங்க மாநிலத்தில், நக்சல்பாரி எழுச்சிக்குப் பின்னர் அந்த இயக்கத்தை ஒடுக்கியும், போலிக் கம்யுனிசம் பேசியும்,மக்களை மயக்கத்திலும் குழப்பத்திலும் வைத்திருந்த அவரைப் பணியாற்றும் படி அவரது கட்சி அவரைப் பணித்திருந்தது. 1986 ம் ஆண்டு தொடங்கி அவர் படுகொலைசெய்யப்பட்டது வரை கிஷன்ஜி வடக்கு, கிழக்கு இந்தியாவிலும், தண்டகாரண்யத்திலும் பணியாற்றி வந்தார். தண்டகாரண்யம் என்பது இந்தியாவின் மத்தியப் பகுதியில் திராவிட இனங்களின் மூத்த இனங்களான கோண்டுகள் உள்ளிட்ட இதர பழங்குடிகள் வாழும் இன்றைய சத்திஸ்கார் மாநிலமாகும். போலிக் கம்யுனிஸ்டுகளின் தலைவர் ஜோதிபாசுவும் அதன்பின்வந்த புத்ததேவ் பட்டச்சாரியாவும் புரட்சிக்கு சாவு மணி அடித்து விட்ட பெருமிதத்தில் இருந்த போது, இங்கே கிஷன்ஜி தமது அரசியல் பணியைத் தொடங்கினார். இனி நாடாளுமன்றத்தில் தான் தமது அரசியல் நடக்கும் என்று ஜோதிபாசு தீர்மானமாக இருந்தபோது வழி தெரியாது தளர்ந்து கிடந்த பழங்குடிகளை கிஷன்ஜியின் இயக்கம் அணித திரட்டி ஒருஇயக்கமாக்கி வந்தது. கிஷன்ஜி செய்த அரசியல் பணிகளில் மகத்தானது மார்க்சியத்தை வங்காள மண்ணில் உயிர்ப்பித்தது.இது தவிர, வங்காளத்திலும், பீகாரிலும் சிதறுண்டு கிடந்த இந்திய மார்க்சிய லெனினியக் கட்சியின் பல புரட்சிகரப் பிரிவுகளுடன் தொடர்ந்து அரசியல் விவாதம் நடத்தி மாவோயிஸ்டுக் கட்சி என ஓரணியில் திரட்டியதில் அவர் குறிப்பிடத்தக்க பங்கு ஆற்றியிருந்தார்.

லால்கார் போராட்டம்

சுரங்கம் தோண்டுவதற்காக பசங்குடி விவசாயிகளின் நிலங்களை இந்திய இரும்புக் கம்பெனிகளான ஜிண்டால், டாட்டா போன்றவை பறித்துக் கொண்டிருந்தன. கடந்த ஐந்து ஆண்டுகளில், தெற்கு வங்காளத்தின் புருலியா, ஜார்கிராம்,மிட்னாபூர் போன்ற மாவட்டங்களில் வாழும் வீரம் மிக்க சந்தால் இன மக்களையும் இதர பழங்குடிகளையும்ஒற்றுமைப் படுத்தி ஒரு ஆயுதம் தாங்கிய கொரில்லாப்படையினையும், பல ஆயிரம் தொண்டர்களைக் கொண்ட ஒரு அரசியல் இயக்கத்தையும் வளர்த்தெடுத்தார். லட்சக் கணக்கான மக்கள், அதிலும் குறிப்பாக ஒடுக்கப்பட்ட பழங்குடியினப் பெண்கள் பங்கு கொண்டு வீரத்துடன் போராடியலால்கார், நந்திகிராமம், சிங்கூர் நில மீட்பு இயக்கங்களுக்கு அவர் அரசியல்தலைமையேற்று வழி நடத்தினார். கடந்த முப்பது ஆண்டு காலத்தில் இந்திய முழுமையும் நடைபெற்றஎந்த ஒரு போராட்டத்தையும் விட இது அளவிலும் குணத்திலும் மாறுபட்டது. இந்தப் பேரியக்கம் இந்திய அரசியலில், ஏன் தெற்காசிய அரசியலில் ஒரு மிகப் பெரும் வீச்சைஏற்படுத்தியது என்றால் அது மிகையல்ல. உலக முதலாளிகள், அவர்களின் ஏவல் படைகள் அனைவரும் உற்று நோக்கிய இந்தப் போராட்டம்போலிக் கம்யுனிஸ்டுகளின் மாயையில் இருந்து மக்களை மீட்டது குறிப்பிடத்தக்கது.

யாரும் புக முடியாத காடுகளுக்குள் இருந்து கொண்டு மாவோயிஸ்டுகள்பயங்கரவாதத்தில் ஈடுபட்டு அட்டுழியம் செய்கிறார்கள் என்ற பொய்யுரையை கிஷன்ஜிதலைமையில் நடந்த லால்கார் போராட்டம் புரட்டிப் போட்டது. அவர் தலைமையில் நடந்தபோராட்டம் பெரும் நகரங்களுக்கு அருகில் திரளான மக்கள் பங்கேற்புடன் மிகவும்ஒழுக்கமான முறையில் நடந்தது. புரட்சியின் அலைகள் கல்கத்தா போன்ற தொழில் நகரங்களைநெருங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்ற நம்பிக்கையை கிஷன்ஜி வழி நடத்திய இந்தப் போராட்டங்கள் வழங்கின.

வங்காள இளைஞர்களிடம் எழுச்சி

வடக்கு, கிழக்கு இந்தியாவில் அதிலும் குறிப்பாக வங்காளத்தில் தொய்வுற்றுக் கிடந்த இளைஞர் கூட்டம் பெரும் திரளாக அணி திரண்டுபுரட்சி இயக்கங்களில் தம்மை இணைத்துக் கொள்ள முன்வந்தது கிஷன்ஜி செய்த பெரும்பணிக்கு கிடைத்த பலனாகும். கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடு முழுவதும் அவரைப் பற்றிதினமும் செய்திகள் வந்து கொண்டே இருந்தன. அவரைப் பற்றிப் பேசாத பத்திரிகைகளே இல்லை, செய்தி வெளியிடாத தொலைக் காட்சிகளே இல்லை என்னும் அளவுக்கு அவருடைய பணி பிரபலம் அடைந்து இருந்தது. தம் வாழ்நாளில் ஒருமுறையேனும் கிஷன்ஜியைக் கண்டு பேட்டி எடுக்க விரும்பாத பத்திரிகையளரே இல்லை என்ற சூழல் நிலவியது. போலிசும் அரசும் மீண்டும் மீண்டும் கிஷன்ஜியை கொன்று விட்டதாகச் சொல்லி வந்த போதும் அவர் மக்கள் என்னும் கடலில் ஒரு மீனைப் போல நீந்தி வந்தார். நுனி நாக்கில் ஆங்கிலம் பேசி மக்களைக் குழப்பும் போலியான அறிவுஜீவிகளுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் கிஷன்ஜி தெளிவான வகையில் அவரவர்விரும்பும் மொழியில் பதில் கொடுத்து வந்தார்.

புரட்சிகர அரசியலுக்கும் தத்துவத்திற்கும் உரியமுக்கியத்தை அவர் எப்போதும் வலியுறுத்தி வந்தார். அவரது பேச்சும் எழுத்தும் எளிமையாகவும் நேரடியாகவும் வார்த்தை ஜாலங்கள் இன்றி, ஒளிவு மறைவின்றி, கேட்பவர்,படிப்பவர் நெஞ்சைத் தொடும் வண்ணம் அமைந்திருக்கும். சமீப கால வங்காள அரசியலில் படித்தோர் பாமரர் அனைவரும் விரும்பும் தலைவராக கிஷன்ஜி இருந்தார்.

பன்மொழிப் புலவர் கிஷன்ஜி

பல மொழிகளில் வல்லுனரான கிஷன்ஜி தெலுங்கு, இந்தி,வங்காளி, ஆங்கில மொழிகளில் எழுதவும் பேசவும் புலமை பெற்று இருந்தார். கோண்டி உட்படபல வழக்கு மொழிகளிலும் அவர் பேசும் புலமை பெற்று அந்த மக்களின் இதயத்தில் இடம்பெற்று இருந்தார். கவிதையிலும் இசையிலும் பாடல்களிலும் தமது உள்ளத்தைப் பறிகொடுத்திருந்த கிஷன்ஜி தாம் கொல்லப்படும் வரை ஒரு மென்மையான இலக்கிய ஆர்வலராகவாழ்ந்து மறைந்தார். பொருளாதாரம் தொடங்கி வரலாறு வரை அனைத்துத் துறைகளிலும்மிகுந்த ஈடுபாடு கொண்டவர் கிஷன்ஜி. தமது 57 வயதிலும் ஒரு போராளியாக வாழ்ந்த அவர் ஒரு நாளின்ஒரு நொடிப் பொழுதையும் வீணாக்கியவர் அல்லர். அவர் கால் படாத கிராமங்களேவங்காளத்தின் தெற்குப்பகுதியிலும், மத்திய இந்தியாவிலும், தண்டகாரண்ரயத்திலும்இல்லை எனலாம். கற்பதிலும் கேட்பதிலும் மிகச் சிறந்த இந்த மனிதர் தாம் சாகும்வரைஒரு படிப்பாளியாகவே வாழ்ந்தவர்.

தேசிய இனங்களின் விடுதலை

தேசிய இனங்களின் தன்னுரிமைக்கு மிகுந்த முக்கியம்கொடுத்தவர் கிஷன்ஜி. இந்தியாவின் போராடும் தேசிய இனங்கள் மாவோயிசப் புரட்சிகரஇயக்கங்களுடன் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை அவர் தொடர்ந்து வலியுறுத்திவந்தார். அறுபது ஆண்டுகளாக இந்திய ராணுவத்தை எதிர்கொண்டு போராடும் அஸ்ஸாமியர்கள், நாகர்கள், மணிப்புரிகள்,திரிபுரிகள் என அனைத்துப் பிரிவினருடனும் ஒளிவு மறைவற்ற நேர்மையான அரசியல்விவாதங்களை அவர் தலைமையிலான இயக்கம் நடத்தி வந்தது. வடக்கு மற்றும் கிழக்குஇந்தியாவின் தேசிய இனங்கள் இந்தியப் போலிக் கம்யுனிச இயக்கங்களால் தொடர்ந்துதுரோகம் செய்யப்பட்டவர்கள். வெறுப்புற்று இருந்த இந்த தேச விடுதலை இயக்கங்கள் இந்தியாவில்புரட்சி பேசும் இயக்கங்களை ஒருபோதும் நம்பியதே இல்லை. ஆனால், சமீப ஆண்டுகளில் கிஷன்ஜிஅவர்களுடன் நடத்திய அரசியல் விவாதங்கள் இந்த இயக்கங்கள் புரட்சியாளர்களுடன் இணைந்துசெயல்படும் அளவுக்கு முன்னேறியிருந்தது. இது இந்திய அரசியல் வானில் ஒரு புதுவிதமானஅரசியல் கூட்டணி அமைவதை நோக்கியதான பாதை சென்றுசொல்லலாம்.

படுகொலை

முப்பது ஆயிரத்திற்கும் அதிகமான படையினர் தேடிவந்த போதும் சிறிதும் அஞ்சாத கிஷன்ஜி, நாட்டின் கிழக்கிலும் வடக்கிலும் உள்ள பல பகுதிகளுக்கும் பயணம் செய்து வந்தவர். தமது வாழ்வு முழுவதையும் இந்தியாவின் ஏழை விவசாயிகள், பழங்குடிகளின் நல்வாழ்வுக்காக அர்ப்பணித்த இந்த மாவீரன், பலர் அறிய உயிருடன் பிடித்துச் செல்லப் பட்டு, சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் படுகொலை செய்யப் பட்டுள்ளார். அவர் கொலை செய்யப்பட்ட 2011 நவம்பர் 27 ம் நாள் இந்தியாவின் வரலாற்றில் ஒருதுயரம் மிக்க நாளாகும். மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறோம் என்ற போர்வையில் சமாதானம் பேச வரவழைக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட இரண்டாவது பெருந்தலைவர் கிஷன்ஜி. பிறருக்காகவே வாழ்ந்து மறைந்த கிஷன்ஜியின் மரணம் மிகவும் துயரமானது, இமய மலையினும் கனமானது.

நாட்டைக் காட்டிக் கொடுக்கும் துரோகிகள்,களவாணிகள், தரகர்கள் நிறைந்த காங்கிரசுக் கட்சியும் அவர்களின் ஏவலர்களான சோனியாகாந்தியும், பிரதமர் மன்மோகன் சிங்கும், மந்திரி செட்டிநாட்டுச் சிதம்பரமும்,வங்காள முதல்வர் மமதா பானர்ஜியும் நேரடியாக இந்தப் படுகொலையை நடத்தியவர்கள் என்று புரட்சிகர இயக்கங்கள் அறிவித்துள்ளன.

கிஷன்ஜியின் இழப்பு இந்தியா மட்டும் இல்லாமல், உலகெங்கும் உள்ள புரட்சிகர இயக்கங்கள், தேசிய இனங்கள் அனைத்திற்குமான ஒரு பேரிழப்பாகும்.

தியாக சீலர்களின் மகனாகப் பிறந்து, பிறருக்காகவே வாழ்ந்து மறைந்த கிஷன்ஜியின் புகழ் வான் உள்ளவரை நிலைத்து நிற்கும்.



ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்

பொன்றாது நிற்ப தொன்றில் (குறள்: 233)



ஒப்பற்றதாகவும், அழிவில்லாததாகவும் இந்தஉலகத்தில் நிலைத்திருப்பது புகழைத்தவிர வேறு எதுவும் இல்லை.



ஓங்குக கிஷன்ஜியின் புகழ் !!


-ராமசாமி-

2 comments:

  1. தியாக சீலர்களின் மகனாகப் பிறந்து, பிறருக்காகவே வாழ்ந்து மறைந்த தோழர் கிஷன்ஜியிக்கு சிவப்பஞ்சலி.மறையாது மடியாது நக்சல்பரி.

    ReplyDelete
  2. சிறந்த போராளியை பற்றி அறிந்ததில் மகிழ்ச்சி...............நல்ல பதிவு.

    ReplyDelete