Sunday, October 30, 2011

"ஏழாம் அறிவு" திரைப்படம் மறைக்கும் உயிரியல் போர் வரலாறு

ஏழாம் அறிவு படத்தின் முடிவில் கதாநாயகன் சூர்யா சொல்வார்: "தமிழர்களுக்கு வரலாறு தெரியாததால், அறிவியல் கண்டுபிடிப்புகளை இழந்து விட்டார்கள்." உண்மை தான். தமிழர்களுக்கு வரலாறு தெரியாததால் தான், ஏழாம் அறிவு போன்ற வரலாற்றை திரிக்கும் பிரச்சாரப் படங்களை எடுத்து வியாபாரம் செய்ய முடிகின்றது. போதி தர்மர் பற்றிய வரலாற்றுத் தகவல்கள் சரி தானா, என்ற சர்ச்சை ஒரு புறம் இருக்கட்டும்.

படத்தின் முக்கிய கதைக்கரு, உயிரியல் யுத்தம் (Biological warfare) பற்றியது. 6 ம் நூற்றாண்டில் "தமிழனான" போதி தர்மர், சீனா சென்றிருந்த சமயத்தில், அங்கு பரவிய வைரஸ் தொற்று நோயை தடுக்கும் மருந்தை கண்டுபிடித்துக் கொடுத்திருந்தார். இன்றைய சீனர்கள், அதே வைரசை இந்தியாவில் பரப்பி, இந்திய மக்களை கொல்வதற்கு முனைகின்றனர். இதுவரை நடக்காத கற்பனைக்கதை தான். இருப்பினும், "வரலாற்றின் முக்கியத்துவம்" உணர்ந்த இயக்குனர், உண்மையான வரலாற்றுக் கதையை எடுத்து படமாக தயாரித்திருக்கலாம். "உயிரியல் யுத்தம், இருபத்தியோராம் நூற்றாண்டிற்கான நவீன போரியல் முறை" என்று இயக்குனரே நினைத்துக் கொண்டிருக்கலாம். "பயங்கரவாத எதிர்ப்பு போர்" குறித்து அமெரிக்கா பிரச்சாரம் செய்த மிகைப் படுத்தப் பட்ட அச்சமூட்டல்களின் பாதிப்பில் அவ்வாறு நினைக்கிறார் போலும். சீனாவும், இந்தியாவும் ஏற்கனவே உயிரியல் போரினால் பாதிக்கப் பட்ட நாடுகள் தான். இவை பற்றிய தகவல்களை வரலாற்று நூல்களில் இருந்து எடுத்து படமாக தயாரித்திருந்தால், "ஏழாம் அறிவின்" உயரிய நோக்கத்தை நாம் பாராட்டலாம்.

ஏழாம் அறிவை தயாரித்தவர்களின், முதலாம் அறிவில் உள்ள அரசியல் சார்புத் தன்மை, கடந்த நூற்றாண்டின் வரலாற்றை கூட பின்னோக்கிப் பார்க்க விடாது தடுக்கின்றது. இன்றைய நவீன உலகில் மட்டும் தான், பரிசோதனை சாலைகளில் உருவாக்கப்படும் நோய்க் கிருமிகள் உயிரியல் ஆயுதமாக பயன்படுத்தப் படுகின்றது, என்று நினைப்பது தவறு. பண்டைய காலங்களில், நச்சுப் பாம்புகளை பிடித்து விடுவதும் உயிரியல் போர் முறைக்குள் அடங்கும். இருப்பினும், ஐரோப்பிய காலனிய காலகட்டத்தின் பொழுது தான், பெருந்தொகையான மக்களை அழிக்கும் நோய்க் கிருமிகள் வேண்டுமென்றே பரப்பப் பட்டன. அமெரிக்க கண்டத்தில் வாழ்ந்த செவ்விந்திய பூர்வகுடிகளின் அழிவுக்கு காரணம், ஐரோப்பியர் காவிக் கொண்டு சென்ற கிருமிகள் என்பது வரலாற்றுத் தகவல். வெளி உலகில் இருந்து தனிமைப் படுத்தப்பட்ட கண்டத்தில் வாழ்ந்த மக்களுக்கு, அந்த நோய்களை எதிர்க்கும் சக்தி இருக்கவில்லை. ஆரம்பத்தில் தற்செயலாக அந்த கிருமிகள் தொற்றியிருந்தாலும், பிற்காலத்தில் இனவழிப்பு செய்யும் நோக்கில் வேண்டுமென்றே பரப்பப் பட்டன.

நம்மில் பலருக்கு, சின்னம்மை என்ற நோய் தொற்றியிருக்கலாம். அதற்கு மருந்து கண்டுபிடிக்கப்படாத காலத்தில், பாமர மக்கள் அதனை "அம்பாளின் சீற்றத்தால் தொற்றும் நோய்" என்று நம்பியதால் தான், அதற்கு "அம்மை நோய்" என்று பெயர் வந்தது. சின்னம்மை பண்டைய தமிழர் சமுதாயத்தில் இல்லாத நோய். காலனிய காலத்தில் ஆங்கிலேயரால் கொண்டு வந்து பரப்பப் பட்டது. இந்த உண்மை இன்று எத்தனை தமிழருக்கு தெரியும்? ஏழாம் அறிவு திரைப்படத்தின் கதை அதுவாக இருந்திருந்தால், தமிழர்களுக்கு ஒரு வரலாற்று உண்மையை எடுத்துச் சொன்ன பெருமை கிடைத்திருக்கும். "ம்...வந்து... ஆங்கிலேயர்கள் அதனை உயிரியல் ஆயுதமாக பயன்படுத்தவில்லை." என்று சப்பைக் கட்டு கட்டலாம். இந்தியாவில் அம்மை நோயை வேண்டுமென்றே பரப்பியதற்கான வரலாற்று ஆவணம் எதுவும் இது வரை கிடைக்கவில்லை. அமெரிக்க கண்டத்தை கைப்பற்றிய ஆங்கிலேயர்கள் அங்கே அம்மை நோயை பரப்பியதற்கான ஆதாரங்கள் உள்ளன.

1763 ம் ஆண்டு, அதாவது இந்தியாவை காலனிப் படுத்திக் கொண்டிருந்த அதே காலத்தில், வட அமெரிக்காவில் காலனிய போர் நடந்து கொண்டிருந்தது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமும், பிரெஞ்சு ஏகாதிபத்தியமும், இன்று கனடா என்று அறியப்படும் நிலத்திற்காக போரிட்டுக் கொண்டிருந்தன. அப்போது அங்கே வாழ்ந்த செவ்விந்திய பழங்குடி மக்களை இனவழிப்பு செய்வது ஆங்கிலேயரின் நோக்கமாக இருந்தது. வட அமெரிக்காவில் பிரிட்டிஷ் படைகளின் தலைமைத் தளபதியான Sir Jeffrey Amherst, இவ்வாறு கூறினார்:"... சின்னம்மை நோய்க் கிருமிகளை ஏவி விட்டாவது, இந்த செவ்விந்திய இனங்களை குறைக்க வேண்டும்." அவரின் உத்தரவின் பேரில், சின்னம்மை நோய்க் கிருமிகள் உள்ள போர்வைகள், செவ்விந்திய மக்களுக்கு கிடைக்கும் வண்ணம் வீசப் பட்டன. அதனால், பல ஆயிரம் செவ்விந்தியர்கள் கொல்லப்பட்டனர். அமெரிக்க சுதந்திரப்போர் காலத்திலும் சின்னம்மை நோய் வேண்டுமென்றே பரப்பப் பட்டது. ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் பெற்ற புதிய அமெரிக்க அரசு, உயிரியல் ஆயுதத்தை மேலும் விரிவாக்கியது. 1942 ம் ஆண்டு, அமெரிக்காவில் 400 கறுப்பின கைதிகள் பரிசோதனை எலிகளாக பயன்படுத்தப் பட்டனர். அவர்களுக்கு தெரியாமலே, மலேரியா நோய்க் கிருமிகள் தொற்ற வைக்கப் பட்டன. பிற்காலத்தில், ஜெர்மனியில் நியூரன்பேர்க் போர்க்குற்ற நீதிமன்றத்தில், நாஜி வைத்தியர்கள் அதனை தமது தரப்பு சாட்சியமாக முன் வைத்தார்கள்.

இரண்டாம் உலகப்போர் காலத்தில், ஜப்பானின் உயிரியல் ஆயுத விஞ்ஞானியாக இருந்தவர் Dr. Shiro Ishii. அவர் ஜப்பான் சக்கரவர்த்தியின் படைகளின் ஆக்கிரப்பில் இருந்த சீனாவின் மஞ்சூரியா மாநிலத்தில் பணியாற்றினார். அங்கிருந்த சீன, ரஷ்ய, அமெரிக்க கைதிகளின் மீது உயிரியல் கிருமிகளை தொற்ற வைத்து பரிசோதனை நடத்தினார். 1931 ம் ஆண்டு, ஜப்பான் மஞ்சூரியா மாநிலத்தை ஆக்கிரமித்ததில் இருந்து, 580000 சீனர்கள் உயிரியல் ஆயுதங்களால் படுகொலை செய்யப் பட்டுள்ளனர். இது, Dr. Shiro Ishii யின் குழுவினால் பக்டீரியா தொற்றுக்குள்ளாகி இறந்தவர்களின் எண்ணிக்கையாகும். அமெரிக்கர்களிடம் ஜப்பான் சரணடைந்த பின்னர், Dr. Shiro Ishii க்கு மன்னிப்பு வழங்கப் பட்டது.

இலட்சக்கணக்கான சீன மக்களை படுகொலை செய்த கொலைகாரன், சுதந்திரமாக திரிய விடப்பட்டான். அநேகமாக, அமெரிக்காவின் உயிரியல் ஆயுத திட்டத்திற்கு, அவரின் உதவி பெறப் பட்டிருக்கலாம். Dr. Shiro Ishii வின் குழுவை சேர்ந்த சிலரை, சோவியத் இராணுவம் கைது செய்திருந்தது. உயரியல் ஆயுத பரிசோதனையால் பாதிக்கப்பட்ட சீன மக்களின் சாட்சியங்களை ஆதாரமாக கொண்டு, அவர்கள் மேல் வழக்கு தொடர்ந்தார்கள். ஆனால், அமெரிக்காவின் அன்றைய தூர கிழக்காசிய கட்டளைத் தளபதி மக் ஆர்தர், இவையெல்லாம் "கம்யூனிசப் பொய்கள்" என்று கூறினார். சில வருடங்களின் பின்னர், மக் ஆர்தரின் படைகள், கொரியாப் போரின் போது உயிரியல் ஆயுதங்களை பிரயோகித்தன. சீனாவில் கம்யூனிசப் புரட்சியின் பின்னர், இரகசியமாக ஊடுருவிய அமெரிக்க விமானங்கள் விசிறிய கிருமிகள், பயிர்களை அழித்து நாசமாக்கின. நிச்சயமாக, அமெரிக்கா இன்று வரை இந்த உண்மைகளை மறுத்து வருகின்றது.

1971 ம் ஆண்டு, கியூபாவில் பன்றிக் காய்ச்சல் என்ற புது வகை நோய் பரவியது. பல தசாப்தங்களுக்குப் பின்னர், பல உலக நாடுகளில் அந்த தொற்று நோய் பரவியிருந்ததை பலர் அறிந்திருப்பீர்கள். அன்று, பனாமாவில் புலம்பெயர்ந்து வாழ்ந்த காஸ்ட்ரோ எதிர்ப்பு கியூபர்களிடம், பன்றிக் காய்ச்சல் கிருமிகளை கொடுத்ததாக, ஒரு சி.ஐ.ஏ, அதிகாரி பின்னர் ஒத்துக் கொண்டார். 1981 ம் ஆண்டு, கியூபாவிலும், (சோஷலிச) நிகராகுவாவிலும் ஒரு புதிய வகை தொற்று நோய் பரவியது. கியூபாவில் 188 பேர் மரணமடைந்தனர். நிக்கராகுவாவில் சுமார் 50000 பேருக்கு நோய் தொற்றி இருந்தது. 1988 ல், கியூப எதிர்ப்புரட்சியாளரான Eduardo Arocena , சி.ஐ.ஏ.யின் பணிப்பின் பேரில் நோய்க் கிருமிகளை கியூபாவினுள் கடத்திச் சென்றதாக தெரிவித்தார். 1996 ம் ஆண்டு, கிருமிநாசினி தெளிக்கும் அமெரிக்க விமானங்கள், கியூப வான்பரப்பில் தென்பட்டன. இதன் விளைவாக, உருளைக்கிழங்கு பயிர்ச்செய்கை பாதிக்கப் பட்டது. இந்த சம்பவம் குறித்து, கியூபா ஐ.நா. மன்றத்தில் முறையிட்டுள்ளது.

சில வருடங்களுக்கு முன்னர், இந்தியாவிலும், இலங்கையிலும் பரவியிருந்த சிக்கின்குனியா போன்ற மர்மமான தொற்று நோய்கள் கூட, உயிரியல் போரினால் ஏற்பட்டிருக்கலாம். இவை குறித்த தகவல்களை, ஏழாம் அறிவு போன்ற திரைப்படத்தில் எடுத்துக் கூறியிருந்தால், அது தமிழ் மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஊட்டியிருக்கும். மாறாக, அமெரிக்க அரசின் வெளிவிவகார கொள்கைக்கு இசைவாக எடுக்கப்படும் ஹாலிவூட் படங்களின் பாணியில் எடுக்கப் பட்டுள்ளது. தமிழனுக்கு, இந்திய தேசிய வெறி ஊட்டுவதற்காக தயாரிக்கப் பட்டது தான், ஏழாம் அறிவு. அதிகார வர்க்கத்தின் நலன் சார்ந்த அரசியல் பிரச்சாரத்தை, வரலாறு என்று கற்றுத் தருகின்றது. ஆறு அறிவும் இல்லாதவர்களுக்கே, ஏழாம் அறிவு தேவைப் படுகின்றது.

Thursday, October 27, 2011

இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்ட புதிய லிபியாவின் எதிர்காலம்

கடாபியின் ஆட்சியைக் கவிழ்த்த புரட்சியாளர்கள், அங்கே இதுவரை என்னென்ன புரட்சிகளை செய்துள்ளனர்? கறுப்பின மக்களை இனச்சுத்திகரிப்பு செய்துள்ளார்கள். கறுப்பினப் பெண்களை தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைத்து, பாலியல் அடிமைகளாக நடத்தியுள்ளனர். பலதார மண சட்டத்தை அமுல் படுத்தி பெண்ணுரிமைக்கு சமாதி கட்டியுள்ளனர். புரட்சிப் படையினால் விடுதலை செய்யப்பட்ட புதிய லிபியாவில், இன்னும் பல அதிர்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கின்றன.

"எனது மரணத்தை விட, லிபியாவின் எதிர்காலம் குறித்து தான் அதிகம் கவலைப் படுகிறேன்." - கடாபி இறப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர் கூறியது. கடாபியின் பாதுகாப்பு அதிகாரி மன்சூர், அல் அராபியா தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் இருந்து. கடந்த சில மாதங்களாக, லிபியாவில் யுத்தம் காரணமாக பெருமளவு மக்கள் கொல்லப்பட்டதையிட்டு கடாபி வருத்தமடைந்திருந்தார், என்றும் மன்சூர் மேலும் தெரிவித்தார். அப்போது இடைமறித்த அல் அராபிய செய்தியாளர், "50000 பேரை சாதாரணமாக கொன்று குவித்த ஒருவர், தனது செயலுக்கு வருந்துவதாக கூறுவது ஆச்சரியமளிக்கிறது." என்றார். அதற்கு பதிலளித்த மன்சூர், "அல் அராபியா போன்ற ஊடகங்களே இவ்வாறான பொய்களை பரப்பி வந்துள்ளன." என்று சாடினார்.

தகவல் தொடர்பு சாதனங்களால் ஆளப்படும் உலகில், போரில் முதல் பலியாகும் உண்மையைக் கண்டறிவது எளிதான காரியமல்ல. லிபியாவில் கிளர்ச்சி ஆரம்பமாகிய முதல் நாளில் இருந்தே, அனைத்து லிபியர்களும் கடாபிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வதைப் போன்ற பிரமையை ஊட்டி வளர்த்தன. அரசுக்கு எதிராக கலகம் செய்தவர்களை அடக்குவதற்கு கடாபி இராணுவத்தை அனுப்பிய பொழுது, அது "லிபிய இராணுவமல்ல, மாறாக கூலிப்படை." என்று அறிவித்தார்கள். கடாபியிடம், "ஆப்பிரிக்க கருப்பினத்தவர்களைக் கொண்ட கூலிப்படை இருப்பதாகவும், அவர்களே ஆர்ப்பாட்டம் செய்யும் மக்கள் மீது அடக்குமுறை பிரயோகிப்பதாகவும்," மதிப்புக்குரிய ஊடகங்கள் கூட செய்தி வாசித்தன. கறுப்பர்களுக்கு எதிரான லிபியர்களின் இனவெறி சர்வதேச ஊடகங்களிலும் எதிரொலித்தது.

கடாபியின் மரணத்திற்குப் பிறகு லிபியா எப்படி இருக்கின்றது? அநேகமாக, ஊடகங்கள் லிபியா குறித்து செய்தி அறிவிப்பதை இனிமேல் நிறுத்தி விடலாம். லிபியர்கள் எந்த விதக் குறையுமற்று, சுதந்திரமாக, சுபீட்சத்துடன் வாழ்வதாக நாமும் நினைத்துக் கொள்ளலாம். ஆனால், பிரச்சினைகள் இனிமேல் தான் பூதாகரமாக வெளிக்கிளம்ப இருக்கின்றன. அரபு மொழி பேசும் வட ஆப்பிரிக்க நாடுகளில் லிபியா மிகக் குறைந்தளவு சனத்தொகையைக் கொண்டுள்ளது. இருப்பினும், 140 இனக்குழுக்களைக் கொண்ட சமுதாயத்தில் ஒற்றுமையைக் கட்டுவது சுலபமான காரியமல்ல. 40 க்கும் குறையாத கிளர்ச்சிக் குழுக்கள், கடாபிக்கு எதிராக போரிட்டன. இசுலாமிய மத அடிப்படைவாதிகள், முன்னை நாள் அரச படையினர், இனக்குழுக்களை பாதுகாக்கும் ஆயுததாரிகள் என்று பலதரப் பட்டவர்கள். கடாபியின் கொடுங்கோல் ஆட்சி மீதான வெறுப்பு மட்டும் இவர்களை போராடத் தூண்டவில்லை. தாராளமயப் படுத்தப் பட்ட "கடாபியின் இஸ்லாத்தை" கடும்போக்காளர்கள் அங்கீகரிக்கவில்லை. அதே போல, கடாபியின் "ஆப்பிரிக்க சகோதரத்துவம்" இனவெறியர்களின் கண்களை உறுத்திக் கொண்டிருந்தது.

கறுப்பின ஆப்பிரிக்கர்களையும் சகோதரர்களாக மதித்து, "ஆப்பிரிக்க ஒன்றியம்" உருவாக்க பாடுபட்ட கடாபியின் கொள்கைக்கு நேர் எதிரானவர்கள், இந்தப் புரட்சிப் படையினர். லிபியாவிற்கு தெற்கில் உள்ள ஆப்பிரிக்க நாடுகளில் மட்டும் கறுப்பினத்தவர்கள் வாழவில்லை. "லிபியாவின் எல்லைகளுக்குள் வாழும் கறுப்பின பிரஜைகள் குறித்து," இனி உலகம் கேள்விப் படப் போவதில்லை. ஏனெனில் அவர்கள் யாவரும் "புரட்சிப் படையினரால்" இனச் சுத்திகரிப்பு செய்யப் பட்டு விட்டனர். சில அக்கறையுள்ள மனித உரிமை ஆர்வலர்கள் விசாரித்த பொழுது, "கருப்பர்கள் எல்லோரும் நைஜருக்கு அகதிகளாக சென்று விட்டனர்." என்று பதிலளிக்கப் படுகின்றது. லிபியப் பிரஜைகளான கறுப்பினத்தவர்கள் மட்டும் இனச் சுத்திகரிப்பு செய்யப் படவில்லை. லிபியாவில் பல ஆப்பிரிக்க நாட்டவர்கள், கூலியாட்களாக, அகதிகளாக வாழ்ந்தனர். இவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு மில்லியன் அளவில் இருக்கும். வளைகுடா நாடுகளைப் போல, ஆப்பிரிக்க கூலிகளின் உழைப்பில் லிபியப் பொருளாதாரம் செழித்துக் கொண்டிருந்தது. அவர்களை விட, கடல் கடந்து ஐரோப்பா செல்வதற்காக வந்து குவிந்த ஆப்பிரிக்க அகதிகளுக்கும் லிபியாவில் தற்கால புகலிடம் கிடைத்தது.

"லிபியப் புரட்சி" ஆரம்பமாகிய அன்றிலிருந்து, லிபியாவில் சட்டம், ஒழுங்கு குலைந்து விட்டது. யார் வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற அராஜக சூழல் நிலவியது. "புரட்சிப் படையினர்" கடாபியின் விசுவாசிகளை மட்டும் வேட்டையாடவில்லை. கரு நிற மேனியைக் கொண்ட மக்களையும் நர வேட்டையாடினார்கள். போர் ஆரம்பமாகியவுடன், அயல் நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்தவர்களில் பெரும்பான்மையானோர் கறுப்பினத்தவர்கள். தற்போது போர் ஓய்ந்த பின்னர், அங்கு நடந்த அக்கிரமங்கள் மெல்ல மெல்ல வெளிவருகின்றன. "புரட்சிப் படையினரின்" முகாம்களை துப்புரவு படுத்தவும், கடினமான பணிகளை செய்யவும் கறுப்பின ஆண்கள் அடிமைகளாக வேலை வாங்கப் பட்டுள்ளனர். போரிட்டுக் களைத்த "புரட்சிக் காரர்களின்" பாலியல் இச்சையை தீர்த்துக் கொள்வதற்கு கறுப்பின பெண்கள் பயன்பட்டுள்ளனர்.

பிரத்தியேக "அகதி முகாம்களில்" தனியாக பெண்களை அடைத்து வைத்திருந்துள்ளனர். "அகதி முகாம்" என்று அழைக்கப்பட்ட வதை முகாம்களை பார்வையிட, செஞ்சிலுவை சங்கத்தினர் வந்து போவதுண்டு. முகாம் பொறுப்பாளருடன் "பாதுகாப்பு ஏற்பாடுகளை" பற்றி மட்டும் பேசி விட்டு செல்வார்கள். முகாம்களை அண்டி வாழும் குடியிருப்பாளர்கள், அங்கு நடந்த அக்கிரமங்களை விபரிக்கின்றனர். "மாலை நேரங்களில் நீங்கள் இங்கே நின்றால் அந்தக் காட்சிகளைக் காணலாம். புரட்சிப் படையினர் துப்பாக்கி வெட்டுகளை தீர்த்துக் கொண்டே சத்தமிட்ட படி வருவார்கள். பெண்களை அள்ளிக் கொண்டு செல்வார்கள்."

துப்பாக்கிகளுடன் திரியும் "புரட்சிப் படையினர்" மட்டும் இவ்வாறான அத்துமீறல்களில் ஈடுபடுவதில்லை. சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து விட்ட நிலையில், சாதாரண இளைஞர்களும் ஆப்பிரிக்க பெண்களை பாலியல் பண்டமாக நுகர்கின்றனர். புரட்சிப் படையினர் லிபியாவில் கொண்டு வந்த புரட்சி இது தான். அகதி முகாமை, இலவச விபச்சார விடுதியாக மாற்றிய சாதனை, புரட்சி அல்லாமல் வேறென்ன? கடாபியின் ஆட்சிக் காலத்தில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்த கமேரூன் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் தெரிவித்தார். "அப்போதெல்லாம் வேலை செய்யும் இடங்களில், சில எஜமானர்கள் அடிப்பார்கள். சிலர் சம்பளம் கொடுக்க மாட்டார்கள். ஆனால், இன்றுள்ள நிலைமை மிக மோசமானது. எல்லா லிபியர்களும் நிறவெறியர்களாக காணப்படுகின்றனர். ஆப்பிரிக்கர்கள் எல்லோரும் லிபியாவை விட்டு வெளியேறி விட்டனர்."

புரட்சிப் படையினரின் மற்றொரு மகத்தான சாதனை குறித்து, இதுவரை எந்த ஒரு ஊடகமும் வாய் திறக்கவில்லை. கடற்கரையோரமாக அமைந்துள்ள மிஸ்ராத்தா நகரில் இருந்து 25 கி.மி. தொலைவில் உள்ளது தவேர்கா (Tawergha ) எனும் சிறு நகரம். போர் நடந்து கொண்டிருந்த காலத்தில், மிஸ்ராத்தா சர்வதேச கவனத்தைப் பெற்றிருந்தது. மிஸ்ராத்தா நகரில் புரட்சிப் படையினரின் கை ஓங்கி இருந்ததால், கடாபியின் படைகள் சுற்றி வளைத்து தாக்கிக் கொண்டிருந்தன. மிஸ்ராத்தா நகர மக்களின் அவலம் குறித்து, ஊடகங்கள் தினசரி செய்தி வாசித்தன. "சர்வதேச சமூகமும்" ஐ.நா. அவையை கூட்டுமளவு கண்டனம் தெரிவித்தன. இறுதியில் நேட்டோ விமானங்களின் குண்டுவீச்சினால் மிஸ்ராத்தா முற்றுகை விலக்கிக் கொள்ளப் பட்டது. மிஸ்ராத்தா முற்றுகைக்கு பழிவாங்குவதற்காக, புரட்சிப் படையினர் தவேர்கா மீது பாய்ந்தார்கள். தவேர்கா நகரில் நுழைந்த புரட்சிப் படையினர், கிரனேட் குண்டுகளை வெடிக்க வைத்தனர். ஆண்கள், பெண்கள், வயோதிபர், குழந்தைகள் எல்லோரையும் பிடித்து வாகனங்களில் ஏற்றிச் சென்றனர்.

தவேர்கா நகரில் வாழ்ந்த மக்கள், "கறுப்பு லிபியர்கள்" என்பது குறிப்பிடத் தக்கது. லிபிய பிரஜைகளான இவர்கள், சஹாரா பாலைவனவாசிகளான துவாரேக் இனத்தை சேர்ந்தவர்கள். இவர்களது மூதாதையர், நாடோடிகளாக வாழ்ந்தவர்கள். சஹாரா பாலைவனத்தின் வணிகப் போக்குவரத்து, அவர்களது பரம்பரைத் தொழில். கடாபியின் ஆட்சிக் காலத்தில், அந்த இனத்தவருக்கென ஒரு சிறப்புப் படையணி உருவாக்கப் பட்டது. இரு தசாப்தங்களுக்கு முன்னர், சாட் நாட்டுடன் எல்லைத் தகராறு காரணமாக போர் மூண்டது. தென் எல்லையில், ஒரு கறுப்பு ஆப்பிரிக்க நாட்டுடனான மோதலின் போது, துவாரக் சிறப்பு படையணியினர் ஈடுபடுத்தப் பட்டனர். இறுதியாக நடந்த, உள்நாட்டுப் போரில், கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதற்கு, கடாபியின் விசுவாசத்திற்குரிய துவாரக் படைகள் பயன்படுத்தப் பட்டன. குறிப்பாக, மிஸ்ராதா யுத்தத்தில் அவர்களின் பங்களிப்பு கணிசமான அளவில் இருந்துள்ளது.

தவேர்கா நகரத்தை சேர்ந்த கறுப்பின படையினரின் செயலுக்கு பழிவாங்குவதற்காகவே, அந்த நகர மக்களை வெளியேற்றியதாக "புரட்சிப் படையினர்" தெரிவிக்கின்றனர். தமது ஊரை சேர்ந்தவர்கள் கடாபியின் இராணுவத்தில் பணியாற்றியதை ஒப்புக் கொள்ளும் தவேர்காவாசிகள், "கிளர்ச்சியாளர் மனதில் ஊறியுள்ள, கறுப்பின மக்கள் மேலான இனவெறி காரணமாகவே" தாம் வெளியேற்றப் பட்டதாக கூறுகின்றனர். போரின் போது நடந்த மனித உரிமை மீறல்களை விசாரித்து வந்த, "சர்வதேச மன்னிப்புச் சபை" யை சேர்ந்த ஆர்வலர் ஒருவரும், தவேர்கா மக்களின் வெளியேற்றம் குறித்து ஆராய்ந்துள்ளார்.

சுமார் இருபதாயிரம் தவேர்காவாசிகள், திரிபோலியில் உள்ள அகதிமுகாமில் தங்க வைக்கப் பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. சில மனித உரிமை ஆர்வலர்களும், ஊடகவியலாளர்களும், அங்கு சென்று விசாரித்துள்ளனர். அவர்கள் அங்கு சென்ற வேளை, முகாம் வெறிச்சோடிப் போய்க் கிடந்தது. புரட்சிப் படையினரைக் கேட்டால், "அந்த மக்கள் யாவரும் நைஜருக்கு சென்று விட்டார்கள்." என்று அலட்சியமாக கூறுகின்றனர். மேற்கொண்டு எந்த வித தடயமும் கிடைக்காத நிலையில், தவேர்கா மக்களுக்கு என்ன நடந்தது என்ற மர்மம் நீடிக்கின்றது. இறுதி யுத்தம் நடந்த சியேர்ட் நகரில், மனிதப் புதைகுழிகள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன. கடாபிக்கு விசுவாசமானவர்கள், சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப் பட்டிருப்பதாக, மனித உரிமை நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. அது போல, தவேர்கா நகரில் வாழ்ந்த, 20000 கறுப்பின மக்களும் எங்காவது கொன்று புதைக்கப் பட்டிருக்கலாம்.

லிபியாவின் புதிய ஆட்சியாளர்கள் புரிந்துள்ள போர்க்குற்றங்கள் பற்றிய விபரங்கள், மெல்ல மெல்ல வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடாபியும், அவரது மகன் முத்தாசினும் உயிருடன் பிடிபட்டு, பின்னர் கொலை செய்யப்பட்ட விடயம், வீடியோ காட்சிகளாக உலகெங்கும் வலம் வந்தன. இது குறித்தும், நூற்றுக் கணக்கான கடாபி விசுவாசிகளின் படுகொலை குறித்தும் விசாரணை தேவை என்று, மனித உரிமை ஸ்தாபனங்கள் அழுத்தம் கொடுக்கின்றன. மேற்குலகம் அவற்றை எல்லாம் கண்டும் காணாதது போல நடந்து கொள்கின்றது. புதிய அரசானது, இஸ்லாமிய மத அடிப்படைவாத போக்கில் செல்வதையும், யாரும் பெரிது படுத்தவில்லை.

இருப்பினும், எதிர்காலத்தில் காட்சிகள் மாறலாம். எண்ணெய் வளத்தை பங்கு போடுவதில் தகராறு ஏற்பட்டால், போர்க்குற்ற விசாரணை சம்பந்தமான சர்ச்சைகள் எழலாம். இரண்டு வருடங்களுக்கு முன்னர், புலிகளை அழிப்பதற்கு சிறிலங்கா அரசுக்கு பக்கபலமாக நின்ற மேற்குலக நாடுகள், பின்னர் தமது நண்பர்களை போர்க்குற்ற விசாரணைக்கு அழைத்து அழுத்தம் கொடுத்தன. இலங்கையில் நாம் ஏற்கனவே கண்ட காட்சிகள், லிபியாவில் நடந்து முடிந்துள்ளன. வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த புலித் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் போன்றே, கடாபியின் முடிவும் அமைந்திருந்ததை, மனித உரிமை நிறுவனங்கள் சுட்டிக் காட்டியுள்ளன. மேற்கத்திய நாடுகளுடன் முறுகல் நிலை தோன்றினால், அவர்கள் மீதும் குற்றச்சாட்டுகளை அடுக்குவதற்கு புதிய லிபிய அரசு தயாராகி வருகின்றது.

புலம்பெயர்ந்த நாடுகளில் இயங்கி வந்த "லிபிய இஸ்லாமிய போராட்டக் குழு", கடாபிக்கு எதிரான கிளர்ச்சியில் முன்னணிப் பங்கு வகித்துள்ளது. இஸ்லாமிய மத அடிப்படைவாத கொள்கை கொண்ட, அல் கைதாவுடன் இணைந்து போராடிய, அந்த அமைப்பின் முக்கிய தலைவர் தாய்லாந்தில் பிடிபட்டார். பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் கீழ், அமெரிக்கர்களால் கடத்தப்பட்டு, சி.ஐ.ஏ.யினால் இரகசியமாக சித்திரவதை செய்யப்பட்டார். பின்னர், சி.ஐ.ஏ. தனது கைதியை கடாபியின் கையில் ஒப்படைத்தது. அந்த "சர்வதேச பயங்கரவாதி" வேறு யாருமல்ல, கடாபிக்கு எதிரான புரட்சிப் படையின் தலைமைத் தளபதி பெல்ஹாஜ்! மேற்குறிப்பிட்ட விபரங்கள் அடங்கிய ஆவணங்கள், கைவிடப் பட்ட பிரிட்டிஷ் தூதரகத்தில் கண்டெடுக்கப் பட்டன. அந்த ஆவணங்களை ஆதாரமாகக் கொண்டு, வழக்குப் தொடுக்கப் போவதாக, பெல்ஹாஜ் சூளுரைத்துள்ளார். லிபியாவின் புரட்சியாளர்களுக்கும், மேற்குலகுக்கும் இடையிலான தேனிலவு விரைவில் முறியலாம். அப்போது லிபியாவில் எழும் நெருக்கடிகள், இன்றுள்ளதை விட மிக மோசமாக இருக்கும்.


மேலதிக தகவல்களுக்கு:
1.
Ethnic Hatred Rooted in Battle for Misrata Underlines Challenges the Nation Faces After Gadhafi
2.MI6 role in Libyan rebels' rendition 'helped to strengthen al-Qaida'
3.Libyan rebels round up black Africans
4.African women say rebels raped them in Libyan camp
5.Empty village raises concerns about fate of black Libyans

Sunday, October 23, 2011

1958 இனக்கலவரம் - இனப் பிரிவினையின் ஆரம்பம்

[சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்]
(பகுதி : பன்னிரண்டு )


இலங்கையின் முதலாவது இனக்கலவரம் குறித்து நாம் அறிந்து கொண்டது என்ன?
1958 ம் ஆண்டு, தமிழரசுக் கட்சியினர் அஹிம்சா வழியில் சிறி எதிர்ப்பு போராட்டம் நடத்தினார்கள். அதற்கு எதிர்வினையாக சிங்கள காடையரினால் தமிழர்கள் தாக்கப் பட்டனர்.

இதனை தமிழர்கள் எவ்வாறு புரிந்து கொள்கின்றனர்? "நியாயமான கோரிக்கைகளை முன்வைத்த தமிழர்களின் அஹிம்சை வழிப் போராட்டத்தைக் குழப்பிய சிங்கள இனவெறியர்கள், தமிழர்களை படுகொலை செய்தனர்." இதனை சிங்களவர்கள் எவ்வாறு புரிந்து கொள்கின்றனர்? "சிங்கள எழுத்துகளை தார் பூசி அழித்த செயலானது, சிங்கள மொழியையும், சிங்கள இனத்தையும் பூண்டோடு அழிப்பதற்கான தமிழரின் சதி." அன்று நடந்த சம்பவங்களை உன்னிப்பாக கவனித்துப் பார்த்தால், இனவாத சாயம் பூசப்பட்ட வாதங்களுக்குப் பின்னால், வேறொரு உண்மை மறைந்திருப்பது புலனாகும். சிங்கள தேசியவாதிகளும், தமிழ் தேசியவாதிகளும், நாம் அந்த உண்மையை அறிந்து கொள்வதை விரும்புவதில்லை.

அந்தக் காலகட்டத்தில் சிறி எதிர்ப்பு போராட்டம் இரண்டு தடவைகள் இடம்பெற்றன. இரண்டுக்கும் இடையில் குறைந்தது ஆறு மாத கால இடைவெளி இருந்தது. இரண்டாவது சிறி எதிர்ப்பு போராட்டம் தான், தமிழர் விரோத இனக்கலவரத்தில் போய் முடிந்தது. இனக்கலவரமானது, வெறுமனே "தமிழரின் அரசியல் அபிலாஷைகளுக்கு எதிரான இனவெறி சிங்களவர்களின் தன்னியல்பான நடவடிக்கை அல்ல." யாராலோ நன்கு திட்டமிடப் பட்டிருந்தது. அந்த தீய சக்திகள் எவை? கலவரத்திற்கு முன்னர், முதலாளிகள், நிலப்பிரபுக்கள், மேட்டுக்குடி அரசியல் தலைவர்கள், இவர்கள் அனைவரதும் பொருளாதார நலன்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. இந்த "பாதிக்கப்பட்ட வர்க்கம்" சிங்களவர், தமிழர் ஆகிய இரண்டு இனங்களிலும் இருந்துள்ளன. நில உச்சவரம்புச் சட்டம், தனியார் நிறுவனங்களை தேசியமயமாக்கல், போன்ற அரச கொள்கைகளால் அதிருப்தியுற்ற பூர்ஷுவா வர்க்கத்தினர், வன்மத்துடன் காத்திருந்தனர். அவர்களது கோபத்தை மேலும் கிளறுவதாக, 1958 மே மாதம் இடம்பெற்ற சம்பவங்கள் அமைந்து விட்டன. இடதுசாரிக் கட்சிகள் அறிவித்த வேலை நிறுத்தப் போராட்டமே, இனக்கலவரத்தை தூண்டி விட ஏதுவாக அமைந்தது.

போராட்டத்தை தொடர்ந்து நடத்தி, தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு, இடதுசாரிக் கட்சிகளின் தலைமை தவறி விட்டது. இதனால் ஏமாற்றமடைந்த சிங்கள தொழிலாளர்களுக்கு வடிகால் தேடிக் கொடுப்பதற்காக, சிங்கள இனவாதிகள் தமிழர்களை தாக்குவதற்கு ஏவி விட்டனர். அன்றைய காலங்களில், சிங்களவர்கள் மத்தியில் தமிழர்கள் பற்றிய தவறான கருத்துக்கள் பரப்பப் பட்டிருந்தன. அவை, ஐரோப்பாவில் நிலவிய யூதர்களுக்கு எதிரான இனவாதக் கருத்துகளுடன் ஒப்பிடத் தக்கன. அதாவது, "தமிழர்கள் எல்லோரும் படித்த மேட்டுக்குடி வர்க்கத்தினர். நிறுவனங்களை நடத்துவதிலும், அரச பதவிகளிலும் அவர்களது ஆதிக்கம் தான் நிலவுகின்றது. சிங்களவர்களை சுரண்டிப் பிழைக்கும் தமிழர்கள் மிகவும் தந்திரசாலிகள்." இதிலே வேடிக்கை என்னவென்றால், இது போன்ற கருத்துகளை, சிங்கள இனவாதிகள், சிங்கள மக்கள் மனதில் இனவெறியை தூண்டுவதற்காக வேண்டுமென்றே பரப்பி வந்தனர். மறுபக்கத்தில், தமிழினவாதிகள், இதே கருத்துகளை தமக்கு சாதகமானதாக பார்த்தார்கள். தம்மை யூதர்களுடன் ஒப்பிட்டு சிந்திக்கப் பழகினார்கள்.

கொழும்பு நகரில், இனக்கலவரத்தின் போது, பெரும்பாலும் வசதி படைத்த தமிழர்களின் வீடுகள் இலக்கு வைத்து தாக்கப் பட்டன. கொழும்பு நகரில் தமிழர்கள் கொலை செய்யப் படுமளவிற்கு, கலவரம் தீவிரமடைந்ததற்கு சில வதந்திகள், அல்லது தவறான தகவல்கள் காரணமாக அமைந்தன. அதற்கு முன்னால் கலவரம் எவ்வாறு ஆரம்பமாகியது என்று பார்ப்போம். சிங்கள முதலாளிகள், மே மாதம் இடம்பெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை, எப்பாடு பட்டாவது குழப்ப வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு நின்றனர். அமைச்சர்களான விமலா விஜெவர்த்தனவும், தஹாநாயக்கவும், "வேலைநிறுத்தப் போராட்டம், தமிழரின் சதி" என அறிவித்தனர். மே 22 தொடக்கம் 25 வரையிலான நாட்களில், சிங்களப் பெரும்பான்மைப் பிரதேசமான, அனுராதபுரம், பொலநறுவையில் வாழ்ந்த தமிழர்கள் தாக்கப் பட்டனர். இன்று அங்கே ஒரு தமிழர் கூட வாழ முடியாதவாறு, இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டனர். மே 26 தொடக்கம் ஜூன் 3 வரையில், தமிழ்ப் பெரும்பான்மை பிரதேசமான வடக்கு, கிழக்கிற்கு கலவரம் பரவியது. அரச அலுவலகங்கள் இலக்கு வைத்து தாக்கப் பட்டன. குறிப்பாக வடக்கில், சிங்களவர்கள் அடித்து விரட்டப் பட்டனர். இதுவும், ஏறாவூரில் நடந்த பெருந்தோட்ட முதலாளியின் கொலையும், கொழும்பில் கலவரம் பரவ காரணமாக அமைந்தன.

கிழக்கு மாகாணத்தில், ஏற்கனவே சிங்களக் குடியேற்றங்களால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் போர்க்குணாம்சம் கொண்டவர்கள். ஏறாவூர் பகுதியில் மட்டுமே குறிப்பிடத் தக்க அசம்பாவிதங்கள் இடம்பெற்றன. தண்டவாளம் கழற்றப் பட்டதால், பொலநறுவையில் இருந்து கிழக்கு நோக்கி வந்த ரயில் வண்டி தடம் புரண்டது. வாகனமொன்று டைனமைட் குண்டு வெடிப்புக்கு இலக்கானதால், ஒரு போலீஸ்காரர் மரணமடைந்தார். அதை விட, சிங்கள பெருந்தோட்ட முதலாளி செனவிரத்ன ஏறாவூரில் வைத்து சுட்டுக் கொல்லப் பட்ட செய்தி, நாடு முழுவதும் கொந்தளிப்பை உருவாக்கியது. முதலாளியின் தனிப்பட்ட விரோதிகளே அவரை சுட்டுக் கொன்றிருந்த போதிலும், அன்றைய குழப்பகரமான சூழ்நிலையில், தமிழர்களின் செயலாக கருதப் பட்டது. அடுத்த நாள் வானொலியில் உரையாற்றிய பிரதமர் பண்டாரநாயக்க, "செனவிரத்ன கொலையை தமிழர்களே செய்ததாக" பழி சுமத்தினார். பிரதமரின் தொலைநோக்கற்ற உரையானது, "தமிழர்களே முதலில் சிங்களவர்களை தாக்கினார்கள்." என்ற தவறான நிலைப்பாட்டை உருவாக்க வழிவகுத்து விட்டது.

கொழும்பு நகரில் தமிழர்களின் கடைகள் கொள்ளையடிக்கப் பட்டன. கண்ணில் பட்ட தமிழர்கள் கொலை செய்யப் பட்டனர். பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளானார்கள். பல இடங்களில், "இது செனவிரத்ன கொலைக்கு பழிவாங்கல்" என்று நியாயம் கற்பிக்கப் பட்டது. தமிழர் மீதான தாக்குதல்கள் கொழும்பில் இருந்து ஆரம்பித்து, கரையோரமாக காலி வரை பரவியது. யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்த சிங்களக் குடும்பங்களின் வருகை, கொழும்பு நகர கலவரத்தை தூண்டி விடுவதற்கு காரணமாக அமைந்தது. யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த சிங்களக் குடும்பங்கள், தமிழர்களால் தாக்கப்பட்டதால், அல்லது தாக்குதல் அச்சம் காரணமாக தெற்கிற்கு இடம்பெயர்ந்தனர். விமானம் மூலமாக இரத்மலானை விமான நிலையத்திலும், ரயில் மூலம் கோட்டை புகையிரத நிலையத்திலும் வந்திறங்கிய அகதிகள், தமக்கு நேர்ந்த அவலத்தை சற்று மிகைப் படுத்தியே கூறியிருந்தனர். இருப்பினும், தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு, "வடக்கில் இருந்து வெளியேறிய சிங்கள அகதிகளையும்" காரணமாக காட்டி நியாயம் தேடிக் கொண்டனர். ("கொழும்பில் தமிழர்கள் வாழ்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் ஒரு சிங்களவன் வாழமுடியாது." என்ற விடயம் இன்றும் கூட, சாதாரண சிங்கள மக்களை தமிழர்களுக்கு எதிராக திருப்பி விட பயன்படுத்தப் படுகின்றது.)

இதே நேரம் பொலநறுவை மாவட்டத்தில், திட்டமிட்ட படுகொலைகள் அரங்கேறின. தமிழ்த் தொழிலாளர்களின் குடியிருப்பினுள் புகுந்த சிங்களக் காடையர்கள், எழுபது தமிழர்களை வாள்களால் வெட்டிக் கொன்றனர். விவசாய அலுவலர்களாக கடமையாற்றிய அதிகாரிகளின் பங்களாக்களும் எரிக்கப் பட்டன. அன்று பல சிங்களக் குடியேற்றக் கிராமங்களுக்கு தமிழ் அதிகாரிகள் நியமிக்கப் பட்டிருந்தனர்! ஆரம்பத்தில் அவை யாவும் அரசினால் முன்னெடுக்கப் பட்ட, விவசாய அபிவிருத்திக் கிராமங்களாக இருந்தன. பின்னர் தான், சிங்களவர்களை திட்டமிட்டு குடியேற்றும் அரசின் திட்டம் தெரிய வந்தது. அன்றிருந்த சூழலில், சிங்கள பேரினவாதக் கருத்துக்கள் பரவிய காலத்தில், ஒரு தமிழ் அதிகாரி குடியேற்றக் கிராமங்களுக்கு பொறுப்பாக இருப்பதை சிங்களவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. குடியேற்றங்களில் ஆரம்பித்த வன்முறை, முழுக்க முழுக்க இனவெறியைக் கொண்டிருந்தது. இருப்பினும், அயலில் இருந்த தமிழ்க் கிராமங்கள் மீதான வன்செயல்கள் யாவும், நில ஆக்கிரமிப்பு நோக்கத்தைக் கொண்டிருந்தன. அதாவது, சிங்களப் பகுதிகளில் நிலமற்ற விவசாயிகள், தமிழ்ப் பகுதிகளில் விவசாய நிலங்களை ஆக்கிரமிப்பதற்கு, அரசே உறுதுணையாக இருந்தது. இலங்கையில் பொருளாதார வளங்கள் மீதான மனித சமூகத்தின் போட்டியானது, இனத்துவ முறையில் தீர்க்கப் பட்டது. தாம் பெரும்பான்மை சமூகமாக இருப்பதால், இலங்கையில் பொருளாதார வளங்கள் யாவும் தமக்கு உரிமையாக வேண்டும் என்று சிங்களவர்கள் கருதிக் கொண்டனர்.

கொழும்புக்கு அருகில் உள்ள இந்துக் கோயில் ஒன்றினுள் வைத்து, இரண்டு பூசாரிகள் கொலை செய்யப் பட்ட செய்தியானது, தமிழ்ப் பகுதிகளில் காட்டுத்தீயாக பரவியது. யாழ்ப்பாணத்திலும், மட்டக்களப்பிலும், செய்தியைக் கேள்விப்பட்ட தமிழர்கள் சிங்கள விரோத வன்முறையில் இறங்கினார்கள். கிழக்கு மாகாணத்தில், பருவ காலத்திற்கு வந்து மீன்பிடிக்கும் சிங்கள மீனவர்கள் தாக்கப் பட்டனர். யாழ் நகரில் இருந்த பௌத்த விகாரை, நூற்றுக் கணக்கான இளைஞர்களால் தாக்கப் பட்டது. அங்கிருந்த பிக்கு ஒருவர் படுகாயங்களுடன் உயிர் தப்பினார். வல்வெட்டித்துறையில் தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் நிலையங்கள் காலி செய்யப் பட்டு, போலீசார் பெரிய முகாம்களுக்கு மாற்றப் பட்டனர். வல்வெட்டித்துறையிலும், காரைநகரிலும் சுங்க வரித் திணைக்களங்கள் தாக்கப் பட்டன. அங்கிருந்த ஆவணங்கள் யாவும் எரிக்கப் பட்டன. அன்று, இந்தியாவுடனான வர்த்தக படகுச் சேவை, காரைநகர் ஊடாக நடந்து கொண்டிருந்தது. அதனால், வடக்கில் பிரதானமான சுங்கவரி அலுவலகம் காரைநகரில் அமைந்திருந்தது. இந்த சம்பவத்தை மேலெழுந்தவாரியாக பார்க்கும் பொழுது, அரச எதிர்ப்பு நடவடிக்கையாக தோன்றும். ஆனால், இந்தியாவில் இருந்து, சட்டவிரோதமாக பொருட்களைக் கடத்திக் கொண்டிருந்த கடத்தல்காரர்களின் செயல் என்று பின்னர் தெரிய வந்தது. சுங்க வரி அலுவலக ஆவணங்களை எரிப்பதால், கடத்தல்காரருக்கே நன்மையாக அமையும்.

மே மாதம், 30 ம் திகதி, நயினாதீவில் உள்ள சரித்திரப் பிரசித்தி பெற்ற பௌத்த விகாரை, டைனமைட் குண்டு வைத்து தகர்க்கப் பட்டது. யாழ் குடாநாட்டில் இருந்து படகுகளில் வந்த குழுவினராலேயே விகாரை தாக்கப் பட்டது. அநேகமாக, கடத்தல்காரர்களே இந்த செயலுக்கு காரணம் என சந்தேகிக்கப் பட்டது. நயினாதீவு விகாரை தகர்ப்பினால், தெற்கில் தமிழர்கள் மீதான படுகொலைகள் மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவியது. அரசும், ஊடகங்களும் செய்தியை வெளியிடாமல் மூடி மறைத்து விட்டன. இருப்பினும் யாழ் குடாநாட்டில் இடம்பெற்ற சம்பவங்கள், இலங்கையின் இனப்பிரச்சினை வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்து விட்டது. யாழ் நகரில், தமிழரசுக் கட்சியின் அரசியலால் கவரப்பட்ட தமிழ் இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். ஆயினும், பொலிஸ் நிலையங்களை, சுங்க வரி அலுவலகங்களை தாக்கியதன் மூலம், எதிர்கால ஆயுதப் போராட்டத்திற்கு பிள்ளையார் சுழி இடப்பட்டது. எழுபதுகளில், ஈழத்திற்கான ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்து வைத்த, "தமிழீழ விடுதலை இயக்கம்", "தமிழீழ விடுதலைப் புலிகள்" போன்ற இயக்கங்களின் ஸ்தாபகர்கள் பெரும்பாலும் வல்வெட்டித்துறையை சேர்ந்தவர்கள். "இந்தியாவுடனான சட்டவிரோத படகுப் போக்குவரத்து, தமிழக அரசியல் பிரமுகர்களுடன் தொடர்பு", என்பன ஈழப் போராட்ட வளர்ச்சிக்கு பெரிதும் உதவியுள்ளன.

(தொடரும்)


(1958 இனக்கலவரத்தில் நடந்த சம்பவங்கள் யாவும் "Emergency '58" நூலில் விவரமாக தொகுக்கப் பட்டுள்ளன.)
1.Emergency '58 – The Story of the Ceylon Race Riots
2.Tarzie Vittachi’s “Emergency ’58” Re-Visited

****************************
இந்த தொடரின் முன்னைய பதிவுகள்:
11. "ஸ்ரீ" : இன முரண்பாட்டுக்கு காரணமான ஓர் எழுத்து!
10. இலங்கையின் "இனப் பிரபுத்துவ" சமுதாயக் கட்டமைப்பு
9. "சிங்கள-தமிழ் தேசியவாதம்" அல்லது "பண்டா-செல்வா சித்தாந்தம்"
8. கம்யூனிசத்தை கருவறுத்த சிங்கள மறுமலர்ச்சி
7. அரிசி வேண்டுமா? அல்லது "சிங்களம் மட்டும்" வேண்டுமா?
6. ஆங்கிலேய அடிவருடிகளின் அற்புதத் தீவு
5. ஆங்கிலேயர் புறக்கணித்த "சிங்கள-தமிழ் மொழிப்பிரச்சினை"
4. மார்க்ஸியம்: சிங்கள-தமிழ் தேசியவாதிகளின் பொது எதிரி
3. உலகப் பொருளாதார நெருக்கடி, இலங்கைத் தமிழருக்கு பேரிடி
2. பண்டாரநாயக்க, பொன்னம்பலம் : இரு நண்பர்களின் இன அரசியல்
1. சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்

Wednesday, October 19, 2011

நவ நாஜிகளின் ஆக்கிரமிப்பின் கீழ் ஒரு ஜெர்மன் கிராமம்


ஹிட்லரின் மறைவுக்குப் பின்னர், முதன் முதலாக ஒரு ஜெர்மன் கிராமம் நாஜிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. வட ஜெர்மனியில், ஹம்பூர்க் நகரில் இருந்து 200 கி.மி. தொலைவில் உள்ளது, யமெல் (Jamel). யமெல் ஒரு சாதாரண ஜெர்மன் கிராமம் அல்ல. அங்கே வாழ்பவர்களும் சாதாரண ஜெர்மனியர்கள் அல்ல. நாசிச கொள்கைப் பற்றுடையவர்கள் மட்டுமே அந்தக் கிராமத்தில் வாழ முடியும். நாசிசத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு அங்கே இடமில்லை. பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்தாலும், தமது வீடுகளை, சொத்துகளை இழந்து தப்பியோட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை.

கிராமத்தில் பெரும்பான்மையானோர், நவ நாஜிகளாக மாறி விட்டதால், மாற்றுக் கருத்துக்கள் அங்கே மதிக்கப் படுவதில்லை. நவ நாசிகள், மாற்றுக் கருத்தாளர்கள் மீது வசை பாடுவதுடன் மட்டும் நின்று விடுவதில்லை. பலரின் உடலுக்கு ஊறு விளைவிக்கும் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. நவ நாஜிகளை எதிர்ப்பவர்களின் வீடுகள் எரிக்கப் பட்டுள்ளன. அண்மைய போலிஸ் நிலையம் 12 கி.மி. தொலைவில் உள்ளதால், உயிரச்சம் காரணமாகவே பலர் வெளியேறி விட்டனர். போலிஸ் இருந்தாலும், மாற்றுக் கருத்தாளர்களுக்கு எந்த வித பாதுகாப்பும் அளிப்பதில்லை. அந்தப் பிரதேசத்திற்குப் பொறுப்பான நகரபிதா, அரசியல் தலைவர்கள், யாருமே எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாத கையறு நிலையில் உள்ளனர். ஒரு தடவை, உள்துறை அமைச்சகத்தில் இருந்தும் அதிகாரிகள் வந்து பார்த்தார்கள். வெறும் கவலையை மட்டும் தெரிவித்து விட்டு திரும்பிச் சென்று விட்டார்கள்.

யமெல் கிராமத்தின் கட்டுப்பாடு முழுவதும், குருய்கெர் (Krüger) என்பவரின் தலைமையின் கீழ் இயங்குகின்றது. ஜெர்மனியில் நவ நாஜிகளின் அரசியல் கட்சியாக கருதப் படும் NPD யின் முக்கிய உறுப்பினர். இவரது திருமண விழாவில், NPD கட்சியின் முக்கிய பிரமுகர்கள் மாத்திரமல்லாது, ஐரோப்பிய நவ நாஜிகளும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். அன்றிலிருந்து, யமெல் ஏறக்குறைய ஐரோப்பிய தீவிர வலதுசாரிகளின் யாத்திரை ஸ்தலமாகி விட்டது. தீவிர வலதுசாரிகள், அந்தக் கிராமத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி பெறுகின்றனர். ஹிட்லரின் பிறந்தநாள் கொண்டாடுகின்றனர். நாசிச பிரச்சார பாடல்கள் ஒலிக்கும் இசை நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. யமெல் கிராமத்திற்கு விஜயம் செய்வோர், சிறுவர்கள் கூட நாசிச பாணியில் வணக்கம் செலுத்துவதைக் காணலாம். ஜெர்மனியில் அந்த வகை சல்யூட் அடிப்பது தடை செய்யப் பட்டுள்ளது. ஆனால், யமெல் கிராமத்தில் அது சர்வ சாதாரணம். கிராம மத்தியில், "Braunau am Inn 855 km" என்றொரு இடத்தை சுட்டும் பலகை வைக்கப் பட்டுள்ளது. அந்த ஊர் வேறு எதுவுமல்ல, இன்றைய ஆஸ்திரியாவை சேர்ந்த, ஹிட்லரின் பிறந்த ஊரைக் குறிப்பிடுகின்றது.

யமெல் நாஜிகளின் தலைவன் குருய்கெரின் தந்தை, முன்னை நாள் நாஜி கட்சி உறுப்பினர். அந்தக் கிராமம் ஒரு காலத்தில், சோஷலிச கிழக்கு ஜெர்மனிக்கு சொந்தமாக இருந்தது. அந்தக் காலங்களில் க்ருய்கெர் குடும்பம் வெளியில் இனங்காட்டிக் கொள்ளாமல், அடக்கத்துடன் வாழ்ந்து வந்தது. தொண்ணூறுகளுக்குப் பின்னர், அதாவது பெர்லின் மதில் உடைந்த பின்னர், NPD கட்சியில் இணைந்து கொண்டனர். NPD தன்னை ஒரு சாதாரண ஜனநாயகக் கட்சியாக காட்டிக் கொண்டாலும், ஹிட்லரின் NSDAP கட்சியின் நீட்சியாகவே இயங்கி வருகின்றது. 1933 ல் ஹிட்லரின் NSDAP வெளியிட்ட தேர்தல் அறிக்கைக்கும், இன்று NPD வெளியிடும் தேர்தல் அறிக்கைக்கும் இடையில் அதிக வேறுபாடு இல்லை.

இவ்வளவு ஆதாரங்கள் இருந்தும், ஜெர்மன் அரசு NPD கட்சியை தடைசெய்யவில்லை. ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம் என்பனவற்றின் பெயரால், அவர்களின் இருப்பை நியாயப்படுத்தி வருகின்றது. NPD கட்சியை சேர்ந்த நவ நாஜிகளின் கட்டுப்பாட்டில் உள்ள யமெல் கிராமத்தில், ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம் மதிக்கப் படுவதில்லை. இது குறித்து ஜெர்மன் அரசும் அலட்டிக் கொள்ளவில்லை. ஐரோப்பாவில் இதுவரை காலமும், வெளிநாட்டவர்கள் மட்டுமே நவ நாஜிகளின் வன்முறைக்கு இலக்காகினார்கள். ஆனால், பாசிஸ்டுகள் தமது சொந்த இனத்தை சேர்ந்தவர்கள் மீதும் பாய்ந்து குதறுவார்கள் என்பதை, யமெல் சம்பவங்கள் நிரூபிக்கின்றன. வரலாறு திரும்புகின்றது. ஜெர்மனி மீண்டும் ஹிட்லர் காலத்தை நோக்கிச் செல்கின்றது. ஜெர்மன் அரசு மட்டும், "இங்கே எதுவுமே நடக்கவில்லை" என்று மழுப்பிக் கொண்டிருக்கிறது.

********************************

Neo-Nazis dominate tiny German village

நவ நாஜிகளின் கட்டுப்பாட்டில் உள்ள, யமெல் கிராமம் குறித்து நெதர்லாந்து தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட நிகழ்ச்சியின் ஒளிப்பதிவு கீழே:
sitestat

Neo-Nazis dominate tiny German village

Saturday, October 15, 2011

"ஸ்ரீ" : இன முரண்பாட்டுக்கு காரணமான ஓர் எழுத்து!


[சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்]
(பகுதி : பதினொன்று )


1958 ம் ஆண்டு, இலங்கையில் இடம்பெற்ற முதலாவது இனக்கலவரம் பற்றிய பக்கச்சார்பற்ற ஆய்வுகள் மிகக் குறைவாகவே கிடைக்கின்றன. சிங்கள பேரினவாதிகளும், தமிழ் குறுந் தேசியவாதிகளும் தமது நலன்களை பாதுகாக்கும் பொழிப்புரை வழங்குகின்றனர். தமிழ் தேசிய பார்வையில்: "இந்தக் கலவரமானது, தமிழர்களை இனச் சுத்திகரிப்பு செய்யும் நோக்குடன், சிங்களவர்கள் நடத்திய இனப் படுகொலையின் ஆரம்பம்." சிங்கள தேசிய பார்வையில்: "வட-கிழக்கில் வாழும் சிங்கள சகோதரர்கள் தாக்கப் பட்டதற்கு பதிலடி".

Tarzie Vittachi எழுதிய “Emergency ’58" நூல், அன்று நடந்த கலவரம் பற்றிய சிறந்த வரலாற்று ஆவணத் தொகுப்பாக கருதப் படுகின்றது. கலவரத்தின் போது நடந்த அனைத்து சம்பவங்களையும் பதிவு செய்துள்ள அந்த நூலில், தமிழர்களே அதிகமாக பாதிக்கப் பட்டிருப்பது தெளிவாகத் தெரிகின்றது. கிழக்கு மாகாண எல்லையோராமாக உள்ள, பொலநறுவை மாவட்டத்தில் வாழ்ந்த தமிழர்கள் அனைவரும் அடித்து விரட்டப் பட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தில், சிங்களக் குடியேற்றக் கிராமங்களும் தமிழர் விரோத வன்முறைக்கு களமாக விளங்கியுள்ளன. மலையகத்தில் இந்திய வம்சாவழி தமிழர்கள் படுகொலை செய்யப் பட்டனர். கொழும்பில் நடுத்தர வர்க்க தமிழர்களின் வீடுகள் இலக்கு வைத்து தாக்கப் பட்டுள்ளன. சில இடங்களில், தமிழர்கள் தற்பாதுகாப்புக்காக பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இருப்பினும், யாழ் மாவட்டத்தில் நடந்த சில அசம்பாவிதங்கள் வித்தியாசமானவை. இவை குறித்து விபரமாக பார்ப்பதற்கு முன்னர், அன்றைய சமூக-அரசியல் பின்னணியை ஆராய வேண்டும். சிங்களவர்களும், தமிழர்களும் ஒருவரை ஒருவர் விரோதிகளாக கருதி கொல்வதற்கு ஏதுவான முரண்பாடுகள், ஏற்கனவே அங்கு இருந்திருக்க வேண்டும்.

1956 வரையிலான இலங்கையர் சமுதாயம் பின்வரும் குணாம்சங்களை கொண்டிருந்தன. அவை, சிங்களவர், தமிழர், இரண்டு இனங்களுக்கும் பொதுவானவை. ஆங்கிலேய காலனிய கால நிர்வாகம், சுதந்திரத்திற்குப் பின்னரும் தொடர்ந்தது. ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியானது, பிரிட்டிஷ் காலனிய எஜமானர்களுக்கு விசுவாசமான சேவகனாக இருந்தது. ஐக்கிய தேசியக் கட்சியானது, வேறு மாற்று இல்லாத, அனைத்து சமூகங்களுக்கும் பொதுவான கட்சியாக தன்னைக் காட்டிக் கொண்டது. தமிழ்க் காங்கிரஸ், தமிழர்கள் நலன் குறித்து பேசினாலும், மறைமுகமாக ஆளும் கட்சியுடன் ஒத்துழைத்தது. இரண்டு கட்சியினரும் ஒரே மாதிரியான சமூகப் பின்னணி கொண்டவர்களால் பிரதிநிதித்துவப் படுத்தப் பட்டன. ஆங்கில வழிக் கல்வி கற்ற மேட்டுக்குடியினர், கொவிகம-வெள்ளாள சாதியினரின் ஆதிக்கம் அவ்விரண்டு கட்சிகளிலும் அதிகமாக காணப்பட்டது. இன அடையாளத்தை விட, சாதிய அடையாளமே முக்கியமாக கருதப்பட்ட சமுதாயத்தில், பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினரின் நலன்கள் புறக்கணிக்கப் பட்டு வந்தன.

"சந்தையில் உள்ள ஓட்டை" என்று வணிகத்தில் கூறுவது போல, "பாராளுமன்ற ஜனநாயக முறையில், இனம் சார்ந்த அரசியல் சித்தாந்தம் அதிக நன்மை பயக்கும்", என்று சில அறிவுஜீவிகள் உணர்ந்து கொண்டனர். சிங்கள இனத்தின் பழம்பெருமை பேசும் சிங்கள தேசியவாதம், அனைத்து சிங்களவர்களையும் சாதிய வேற்றுமை கடந்து ஒன்றிணைத்தது. அதே போன்று, தமிழின பழம் பெருமை பேசும் தமிழ் தேசியம், சாதியால் பிளவுண்ட தமிழர்களை ஒன்று சேர்த்தது. பண்டாரநாயக்கவின் சுதந்திரக் கட்சியும், செல்வநாயகத்தின் தமிழரசுக் கட்சியும், ஒரே வேலையை இரண்டு தளங்களில் செய்து கொண்டிருந்தன. சிங்களவர்கள் பெரும்பான்மையாக இருந்ததால், பௌத்த-சிங்கள மறுமலர்ச்சி பேரினவாதமாக பரிணமித்தது. தனது இனத்தின் மேலாண்மையை மட்டும் சிந்திப்பவர்களுக்கு, பிற இனங்களை ஒடுக்குவது தவறாகத் தெரிவதில்லை. 1956 தேர்தலில், சுதந்திரக் கட்சியின் வெற்றியை, சிங்களத் தேசியவாதத்தின் வெற்றியாக கருதினார்கள். சிங்களவர் கையில் அதிகாரம் வந்து விட்டால், இலங்கை பௌத்த-சிங்கள நாடாக்கலாம் என கடும்போக்காளர்கள் கனவு கண்டார்கள். ஆனால், அமைச்சரவையில் இடதுசாரிகளைக் கொண்டிருந்த பண்டாரநாயக்க அரசு, அவர்களை ஏமாற்றமடைய வைத்தது.

மறு பக்கத்தில், சிங்கள தேசியத்திற்கு போட்டியாக தோன்றிய தமிழ் தேசியவாதம், தமிழ்ப் பிரதேசங்களுக்கு உரிமை கோரியது. "ஆண்ட பரம்பரையான தமிழினம் மீண்டும் ஆள்வதற்கு தனியரசு வேண்டும்" என்ற கோரிக்கையில் உருவானது தான் தமிழரசுக் கட்சி. பிரிட்டிஷாரும், சிங்களவர்களும் தம்மை பிரிவினைவாதக் கட்சியாக கருதி விடக் கூடாது என்பதற்காக, ஆங்கிலத்தில் "சமஷ்டிக் கட்சி" என்று பெயரிட்டுக் கொண்டனர். உண்மையில் அவர்கள் தமது கொள்கைகள் குறித்து தெளிவாக வரையறை செய்யா விட்டாலும், தமிழர்கள் சார்பில் அரசுடன் பேரம் பேசும் சக்தியைக் கொண்டிருந்தனர். யாழ்ப்பாண சமூகத்தில், அனைத்து சாதிகளையும் சேர்ந்த நடுத்தர வர்க்க பிரதிநிதிகளை கொண்டிருந்ததால், அவர்களால் ஒன்று பட்ட தமிழ் இன/மொழி உணர்வை ஏற்படுத்த முடிந்தது. குறிப்பாக "சிங்களம் மட்டும்" சட்டமானது, சிங்கள மொழியில் பாண்டித்தியம் பெறாத, ஆங்கிலத்தில் மட்டுமே பணியாற்றத் தெரிந்த, தமிழ் நடுத்தர வர்க்கத்தை கடுமையாக பாதித்தது. அவர்களில் பலர் வேலை இழந்தனர். தமிழரசுக் கட்சியானது, எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்ட தமிழ் நடுத்தர வர்க்கத்தின் விரக்தியை பயன்படுத்திக் கொண்டது. "தமிழ் மட்டும்" ஆட்சி மொழியான தனியரசில் அவர்களது அபிலாஷைகள் பூர்த்தி செய்யப்படும் என உறுதியளித்தது.

தமிழரசுக் கட்சியின் சமஷ்டிக் கோரிக்கைக்கு பண்டாரநாயக்க அரசு இணங்கியிருக்கப் போவதில்லை. ஆயினும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழை பிராந்திய மொழியாக்குவதில் பண்டாரநாயக்கவுக்கு ஆட்சேபணை இருக்கவில்லை. பண்டா-செல்வா ஒப்பந்தத்தின் பிரகாரம் பிரதேச சபைகள் அமைப்பதற்கும் ஒப்புக் கொள்ளப் பட்டது. அந்த ஒப்பந்தத்திற்கு, "சிங்களவர்கள் அனைவரும் எதிப்புத் தெரிவித்தாக" கூறுவது தவறு. பண்டாரநாயக்கவே சிங்களப் பகுதிகளில் சுற்றுப் பயணம் செய்து, ஒப்பந்தத்திற்கு மக்களிடம் ஆதரவு திரட்டினார். பண்டாரநாயக்க என்ற ஆளுமை பொருந்திய நபருக்காக என்றாலும், சாதாரண சிங்கள மக்கள் ஒப்பந்தத்தை வரவேற்றனர். நாட்டில் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமென நினைப்பதே பாமர மக்களின் மனோபாவமாகும். நிச்சயமாக, அரசாங்கத்தில் இருந்த கடும்போக்காளர்களும், எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும், பௌத்த பிக்குகளும் ஒப்பந்தத்தை எதிர்க்கவே செய்தனர். மொத்த சிங்கள மக்கட்தொகையில், அத்தகைய பிரிவினர் சிறுபான்மையினர் தான். இருப்பினும், உணர்ச்சிகரமான பேச்சுகளால் மக்களை உசுப்பி விடும் வல்லமை பெற்றிருந்தனர். தமிழ்ப் பிரதேசங்களில், தமிழ்க் காங்கிரஸ் "ஒப்பந்த எதிர்ப்பு அரசியலில்" இறங்கியது. "செல்வநாயகம் சிங்களவன் காலில் விழுந்து சரணடைந்து விட்டார்," என்று பிரச்சாரம் செய்தது.

பண்டா-செல்வா ஒப்பந்தத்தின் சாராம்சம் பின்வருமாறு. பிராந்திய சபைகள் கல்வி, விவசாயம் போன்ற துறைகளில் அதிகாரம் பெற்றிருக்கும். சில வரிகளையும் அறவிடலாம். (எனினும் இது குறித்து பாராளுமன்றம் இறுதித் தீர்மானம் எடுக்க வேண்டும்.) மாகாண எல்லை கடந்தும், தமிழ்க் கிராமங்களை இணைக்க முடியும். மேலும், சிங்களக் குடியேற்றக் கிராமங்கள் கூட, தமிழ் பிரதேச சபையின் ஆளுகையின் கீழ் வரும். கடைசியாகக் கூறப்பட்டது, தமிழர் தரப்பிற்கு கிடைத்த வெற்றியாக கருதலாம். ஏனெனில், சிங்களக் குடியேற்றக் கிராமங்கள் தான், தமிழ்ப் பிரதேசத்தில் முரண்பாடுகளை வளர்த்துக் கொண்டிருந்தன. சிங்கள கடும்போக்காளர்கள், பண்டா-செல்வா ஒப்பந்தமானது, தமிழருக்கு அதிகளவில் விட்டுக் கொடுத்து விட்டதாக, அல்லது பிரிவினைக்கான முதல் படியாக கருதினார்கள். அந்தக் காலத்தில், எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியானது, ஜெயவர்த்தனவால் தலைமை தாங்கப் பட்டது. ஜெயவர்த்தனாவும், பண்டாரநாயக்க போன்றே, கிறிஸ்தவராக இருந்து பௌத்தராக மதம் மாறி, சிங்கள தேசியக் கொள்கைகளை கடைப்பிடித்து வந்தவர். சிங்களப் பேரினவாதக் கருத்துக்கள், வெகுஜன அரசியலில் இலகுவில் எடுபடுவதை உணர்ந்து கொண்டார். கட்சிக்கு ஆதரவு வாக்குகளை திரட்டுவதற்காகவும், பௌத்த பிக்குகளின் அனுதாபத்தைப் பெறுவதற்காகவும், பண்டா-செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து பாத யாத்திரை நடத்தினார்.

பக்தர்கள் யாத்திரை செல்வதைப் போல, ஐக்கிய தேசியக் கட்சி தொண்டர்கள் கண்டியில் உள்ள தலதா மாளிகைக்கு பாத யாத்திரை சென்றனர். போகும் வழியில், சுதந்திரக் கட்சி தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இரண்டு கட்சியினருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. திட்டமிட்ட படி, நான்காம் நாள் கண்டியை சென்றடைந்த ஜெயவர்த்தன, "தீமை பயக்கும் ஒப்பந்தத்தை அழிக்க வேண்டுமென, கடவுளிடம் ஆசி வாங்கிக் கொண்டு" திரும்பினார். ஆனால், கடவுள் அந்தளவு சக்தி வாய்ந்தவராகத் தெரியவில்லை. ஒக்டோபரில் பாத யாத்திரை நடந்திருந்தாலும், ஆறு மாதங்களுக்குப் பின்னர் தான் ஒப்பந்தம் கிழித்தெறியப் பட்டது. எதிர்க்கட்சியினரின் நெருக்குவாரங்களுக்கு அடிபணிவது இழுக்கு என்று பண்டாரநாயக்க கருதியிருக்கலாம். ஆயினும், ஒப்பந்தத்தில் கூறப்பட்ட வாக்குறுதிகளை அமுல் படுத்துவதற்கு முனையவில்லை. இதனால், தமிழர் தரப்பில் அதிருப்தி உருவானது. 1958 மார்ச் மாதமளவில், நாட்டில் கொந்தளிப்பான சூழ்நிலை தோன்றியது. வாகன இலக்கத் தகடுகளில், ஆங்கில எழுத்துகளுக்கு பதிலாக, சிங்கள "ஸ்ரீ" எழுத்துப் பொறிக்கும் நடைமுறை வந்தது. (சிங்கள ஸ்ரீ எழுத்து (ශ්‍රී ), மலையாள ஸ்ரீ போன்றிருக்கும்.) வட மாகாணத்தில் "ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டம்" நடந்தது. ஸ்ரீ இலக்கத்தகடு பொருத்திய வாகனங்கள் கல் வீச்சுக்கு இலக்காகின, அல்லது ஸ்ரீ எழுத்துகள் தார் பூசி அழிக்கப் பட்டன.

"ஸ்ரீ எதிர்ப்பு போராட்டம்" தெற்கில் சிங்கள இனவாதிகளை உசுப்பி விட்டது. கொழும்பு நகரிலும், தென்னிலங்கையின் பல பகுதிகளிலும் தமிழ் எழுத்துகள் தார் பூசி அழிக்கப் பட்டன. தமிழ்ப் பொதுமக்களும், தமிழ்க் கடைகளும் தாக்கப் பட்டன. நிலைமை மோசமடைவதை உணர்ந்த தமிழ் அரசியல் தலைவர்கள், போராட்டத்தை இடை நிறுத்தினார்கள். இருப்பினும், "ஸ்ரீ எதிர்ப்பு போராட்டமானது, சிங்களவர்களை இனவழிப்பு செய்யும் உள்நோக்கம் கொண்டது!" என இனவாதப் பிக்குகள் பிரச்சாரம் செய்தனர். கொழும்பில் பிரதமரின் இல்லம் முன்பு, இனவாதப் பிக்குகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். வீதியை மறித்து போராட்டம் நடந்ததால், பண்டாரநாயக்கவினால் வீட்டிற்கு போக முடியவில்லை. பிக்குகளுடன் எந்தளவு பரிந்து பேசியும், அவர்கள் அசைந்து கொடுக்கவில்லை. வேறு வழியின்றி, வானொலி நிலையத்திற்கு சென்ற பண்டாரநாயக்க, "பண்டா-செல்வா ஒப்பந்தம் உடனடியாக இரத்து செய்யப் படுவதாக" அறிவித்தார். அப்போதும் திருப்தியடையாத பிக்குகள், "சுதந்திரக் கட்சியை கலைக்க வேண்டும். இந்திய வம்சாவழித் தமிழரை திருப்பி அனுப்ப வேண்டும்." என்று கோரினார்கள். இவை யாவும் நடைமுறைச் சாத்தியமில்லாதவை என்று மறுத்த பண்டாரநாயக்க, அரச முத்திரையில் உள்ள தமிழ் எழுத்துகளை நீக்குவதற்கு மட்டும் சம்மதித்தார்.

பண்டா-செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப் பட்டதை எதிர்த்து, தமிழரசுக் கட்சியினர் வவுனியாவில் கண்டனக் கூட்டம் நடத்தினார்கள். ஆனால், வேறெந்த அரச எதிர்ப்பு நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. இதே நேரத்தில், ஏப்ரல் மாதம் நாடளாவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. வழக்கம் போல, இடதுசாரிக் கட்சிகளே வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தலைமை தாங்கின. ஆனால், "வேலை நிறுத்தம் தமிழரின் சதி!" என்று, வலதுசாரி சக்திகள் வதந்தியைப் பரப்பி விட்டன. அரசாங்கத்திலும் சில கடும்போக்காளர்கள் அவ்வாறு தெரிவித்ததால், வதந்தியை உண்மை என்றே சிங்கள மக்கள் நம்ப ஆரம்பித்தனர். சுகாதார அமைச்சர் விமலா விஜேவர்த்தன, கல்வி அமைச்சர் தஹாநாயக்க போன்றோர், இவ்வாறு தமிழர் விரோதக் கருத்துகளை பரப்பினார்கள். பிற்காலத்தில், பண்டாரநாயக்க கொலையில் இவர்களின் பங்கிருந்தது கண்டறியப் பட்டது. பண்டாரநாயக்க அரசில் பிலிப் குணவர்த்தன போன்ற இடதுசாரிகளின் செல்வாக்கு உயர்ந்ததால், அதிருப்தியடைந்த வலதுசாரி சக்திகள், தமக்குள் ஒன்றிணைய ஆரம்பித்தன. இந்த சக்திகள், பல தரப்பட்ட பின்னணியை கொண்டவை. நில உச்சவரம்பு சட்டத்தால் பாதிக்கப்பட்ட நிலவுடமையாளர்கள் மற்றும் பௌத்த பிக்குகள். தேசியமயமாக்கல் கொள்கையால் நிறுவனங்களை பறிகொடுத்த முதலாளிகள். இவர்கள் எல்லோரும், எதிர்க் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்தனர்.

அநேகமாக, பேரூந்து வண்டி நிறுவன முதலாளிகளே, தேசியமயமாக்கலால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள். காலனிய காலத்தில் அறிமுகப் படுத்திய, மக்களின் அத்தியாவசிய போக்குவரத்து சாதனமான பேரூந்து வண்டிகள் யாவும், தனியார் வசம் இருந்தன. தரகு முதலாளிய ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தில், பேரூந்து வண்டி உரிமையாளர்கள் பல சலுகைகளை அனுபவித்தனர். அதற்குப் பிரதியுபகாரமாக, தேர்தல் காலத்தில் உழைக்கும் மக்களை இலவசமாக ஏற்றிக் கொண்டு வந்து ஐ.தே.கட்சிக்கு வாக்களிக்க வைப்பார்கள். அந்தக் காலத்தில் அது சட்டவிரோதமாக கருதப் படவில்லை. பண்டாரநாயக்க அரசு, பேரூந்து வண்டிகளை தேசியமயமாக்கியதற்கு, ஐ.தே.கட்சியின் தேர்தல் மோசடி ஒரு காரணமாக இருக்கலாம். ஆயினும், உழைக்கும் மக்களுக்கு அதனால் பலன் கிடைத்தது. அரச மானியம் கொடுத்து, சீட்டுகளின் விலை குறைக்கப் பட்டது. மாணவர்களுக்கு சலுகை விலையில், பருவகால சீட்டுகள் விற்பனை செய்யப் பட்டன.

தனியார் பஸ் வண்டிகள் யாவும், "இலங்கை போக்குவரத்து சபை" (இபோச) என்ற அரச நிறுவனத்தின் கீழ் கொண்டு வரப் பட்டன. இபோச யாழ்ப்பாணத்திற்கு அனுப்பிய புதிய பஸ் வண்டிகளில், சிங்கள ஸ்ரீ எழுத்துப் பொறிக்கப் பட்டிருந்தது. அப்போது தான் "ஸ்ரீ எதிர்ப்பு போராட்டம்" நடந்தது. இளைஞர்களின் கல்வீச்சுக்கு ஆளான பஸ் வண்டியை ஓட்டிச் சென்ற சாரதி பொலிஸ் நிலையம் ஒன்றினுள் தஞ்சம் புகுந்தார். அப்போது பொலிஸ் நிலையம் மீதும் கற்கள் வீசப்பட்டதால், போலீசார் சுட்டதில் சிலர் காயமுற்றனர். இந்தச் சம்பவம் யாழ் குடாநாட்டில் பதற்றத்தை தோற்றுவித்திருந்தது. இந்தப் போராட்டம் ஓய்ந்து ஒரு மாதம் முடிவதற்குள், தெற்கில் இடதுசாரிகளின் தொழிற்சங்கப் போராட்டம் நடந்தது.

தேசியமயமாக்கல் கொள்கையால் விழிப்புணர்வு பெற்ற இபோச ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் குதித்தனர். அவர்களின் கோரிக்கைகளான இலவச மருத்துவ காப்புறுதி, ஓய்விடம், ஊதிய உயர்வு போன்றன அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஆயினும், வேலைநிறுத்தப் போராட்டத்தால் தோன்றிய குழப்ப நிலையை, முன்னை நாள் முதலாளிகள் பயன்படுத்திக் கொண்டனர். தமது பிழைப்பைக் கெடுத்த அரசை கவிழ்க்க இதுவே தக்க தருணம் எனக் கண்டுகொண்டனர். 1958 இனக்கலவரத்தின் பின்னணியில், முன்னாள் பஸ் வண்டி முதலாளிகளின் கை மறைந்திருந்ததாக சந்தேகிக்கப் படுகின்றது. ஆனால், அதனை நிரூபிக்கும் வலுவான ஆதாரம் கிடைக்கவில்லை. இனவெறியை வளர்த்து, சிங்கள-தமிழ் உழைக்கும் வர்க்க ஒற்றுமையை குலைப்பதற்கு, வலதுசாரி முதலாளிய சக்திகள் திரைமறைவில் முயன்று வருகின்றன. அந்த சக்திகளுக்கு இடையிலான இரகசிய தொடர்பு, இன்று வரை துலங்காத மர்மமாகவே நீடிக்கின்றது.


(தொடரும்)

இந்த தொடரின் முன்னைய பதிவுகள்:
10. இலங்கையின் "இனப் பிரபுத்துவ" சமுதாயக் கட்டமைப்பு
9. "சிங்கள-தமிழ் தேசியவாதம்" அல்லது "பண்டா-செல்வா சித்தாந்தம்"
8. கம்யூனிசத்தை கருவறுத்த சிங்கள மறுமலர்ச்சி
7. அரிசி வேண்டுமா? அல்லது "சிங்களம் மட்டும்" வேண்டுமா?
6. ஆங்கிலேய அடிவருடிகளின் அற்புதத் தீவு
5. ஆங்கிலேயர் புறக்கணித்த "சிங்கள-தமிழ் மொழிப்பிரச்சினை"
4. மார்க்ஸியம்: சிங்கள-தமிழ் தேசியவாதிகளின் பொது எதிரி
3. உலகப் பொருளாதார நெருக்கடி, இலங்கைத் தமிழருக்கு பேரிடி
2. பண்டாரநாயக்க, பொன்னம்பலம் : இரு நண்பர்களின் இன அரசியல்
1. சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்

Sunday, October 09, 2011

இலங்கையின் "இனப் பிரபுத்துவ" சமுதாயக் கட்டமைப்பு

[சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்]
(பகுதி : பத்து)


பண்டாரநாயக்காவின் தேர்தல் கால வாக்குறுதியான, "24 மணி நேரத்தில் சிங்களம் மட்டும் உத்தியோகபூர்வ மொழியாக்கும் சட்டம்," அமுல்படுத்துவது அத்தனை எளிதாக இருக்கவில்லை. 24 மணிநேரமும் ஆங்கிலத்தில் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்த இலங்கை வானொலியில் சிங்களத்திற்கு அதிக நேரம் ஒதுக்கப் பட்டது. ஆனால், தமிழ் புறக்கணிக்கப் பட்டது. இவை போன்ற செயல்கள், தமிழர் மனதில் அதிருப்தியை ஏற்படுத்தின. இருப்பினும், நிர்வாகச் சிக்கல் காரணமாக, சிங்களத்துடன், தமிழும், ஆங்கிலமும் பாவனையில் இருக்கும் என்று சட்டம் இயற்ற வேண்டியிருந்தது. இது கட்சிக்குள்ளேயிருந்த மொழித் தீவிரவாதிகளை உசுப்பி விட்டது. சிங்களம் மட்டும் சட்டத்தில், தமிழுக்கும் உரிமை வழங்கும் பகுதியை நீக்க வேண்டுமென கோரினார்கள். இறுதியில் கடும்போக்காளர்களுக்கு விட்டுக் கொடுத்து, 5 ஜூன் 1956 ல் பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப் பட்டது.

மறுபக்கத்தில், தமிழ் சமஷ்டிக் கட்சியினர், சிங்களம் மட்டும் சட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் குதித்தார்கள். சிங்களம் மட்டும் சட்டம் நிறைவேற்றப்பட்ட நாளன்று, தமிழ் பிரதேசங்களில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப் பட்டது. பண்டாரநாயக்காவின் ஆட்சிக்காலம் முழுவதும், சமநிலை பேணுவது இயலாத காரியமாக இருந்தது. ஒரு பக்கம் சிங்கள மொழித் தீவிரவாதிகளை திருப்திப் படுத்தினால், மறுபக்கம் தமிழ் மொழித் தீவிரவாதிகள் கிளர்ச்சி செய்தார்கள். அவர்களுடன் ஒரு உடன்பாட்டுக்கு வந்தால், சிங்கள பேரினவாதிகள் கடுமையான எதிர்ப்புக் காட்டினார்கள். பண்டாரநாயக்கவை பொறுத்த வரையில், பிரதமருக்கான முழுமையான அதிகாரத்தை பிரயோகிக்கத் தயங்கினார். பதவிக் காலம் முழுவதும், கடும்போக்காளர்களின் கோரிக்கைகளுக்கு பணிந்து போனார். அந்தக் கோரிக்கைகள், சில சமயம் பிரதமரையும், அவரது கட்சியையும் அவமதிப்பதாக அமைந்திருந்ததன.

தமிழ் மக்களின் தலைவர்கள், சாத்வீக வழியில் போராடிய போதிலும், சிங்கள பேரினவாதிகள் அதைக் கூட பூதாகரமான விடயமாக்கினார்கள். தமிழ் தேசியக் கட்சிகளின் எதிர்ப்பு நடவடிக்கைகள் யாவற்றையும், "சிங்களவர்களை இனவழிப்பு செய்ய தமிழர் தயாராகி வருவதாக" பயமுறுத்தி பிரச்சாரம் செய்தார்கள். சிங்களம் மட்டும் சட்ட மசோதாவை எதிர்த்து, காலிமுகத் திடலில் தமிழர்களின் சத்தியாக்கிரகப் போராட்டம் இடம்பெற்றது. அதற்கு எதிர்வினையாக, கொழும்பில் இருந்த தமிழரின் கடைகள் கல் வீசித் தாக்கப் பட்டன. ஒரு சில நாட்களில், கலவரம் கிழக்கு மாகாணத்திற்கு பரவியது. சமஷ்டிக் கட்சியினர் ஒழுங்கு படுத்திய ஊர்வலத்தில் போலீசார் சுட்டதில், இரண்டு தமிழர்கள் உயிரிழந்தனர். சுதந்திர இலங்கையில், முதன் முறையாக பெருமளவு தமிழர்கள் கொல்லப்பட்ட அசம்பாவிதமும் அப்போது தான் நிகழ்ந்தது.

கிழக்கு மாகாணத்தில், தமிழர் பெரும்பான்மையாக வாழும் பிரதேசத்திற்கு நடுவில் "கல் ஓயா குடியேற்றக் கிராமம்" அமைந்திருந்தது. டி.எஸ்.சேனநாயக்க காலத்தில், மின்னேரியா அபிவிருத்தி திட்டம் என்ற பெயரில் இடம்பெற்ற முதலாவது சிங்களக் குடியேற்றம் அதுவாகும். அந்தக் காலத்தில், நிலமற்ற சிங்கள விவசாயிகளுக்கு தமிழர்களின் நிலங்களை பறித்தெடுத்துக் கொடுத்தார்கள். இதன் மூலம், சிங்கள, தமிழ் உழைக்கும் மக்களை எதிரெதிரே நிறுத்தி விடுவதும் அரசின் நோக்கமாக இருந்தது. உணர்ச்சியைத் தூண்டி விட்டால் அடிதடியில் இறங்கி விடும் உதிரிப் பாட்டாளி வர்க்க சிங்களவர்களையே குடியேற்றக் கிராமங்களுக்கு கொண்டு சென்றிருந்தனர்.

"சிங்களவர்களை இனவழிப்பு செய்யும் நோக்கோடு தமிழர்கள் திரண்டு வருகிறார்கள்..." என்பன போன்ற வதந்திகளை கேள்விப்பட்ட கல்லோயா குடியேற்றவாசிகள், அயல் கிராமங்களில் இருந்த தமிழர்களை தாக்கினார்கள். குறைந்தது நூறு தமிழர்களாவது, இனவெறித் தாக்குதலுக்கு பலியாகி இருக்கலாம் என அஞ்சப் படுகின்றது. இருப்பினும் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் கல்லோயா கிராமத்தின் அமைவிடம் காரணமாக, செய்தியின் வீரியம் பிற பகுதிகளில் அறியப் படவில்லை. கொழும்பு ஊடகங்களும், அரசும், அதனை தற்செயலாக நடந்த அசம்பாவிதமாக பார்த்தன. அந்த எண்ணம் எவ்வளவு தூரம் தவறானது என்பதை, அடுத்து வரும் ஆண்டுகள் நிரூபித்தன.

சிங்கள-தமிழ் இனப்பிரச்சினையில், முதலாவது தமிழினப் படுகொலைகள், கிழக்கு மாகாணத்தில் தான் அடுத்தடுத்து இடம்பெற்று வந்தன. அவை பெரும்பான்மை தமிழர்கள் வாழும் பிரதேசம் என்பதால், தமிழர்களின் பதில் வன்முறைத் தாக்குதல்களும் இடம்பெற்றுள்ளன. கிழக்கு மாகாணத்தில் வலிந்து ஏற்படுத்தப் பட்ட சிங்களக் குடியேற்றங்கள், அதற்கு முக்கிய காரணமாக அமைந்திருந்தன. தரகு முதலாளித்துவ சார்புக் கட்சியான, முந்திய ஐக்கிய தேசியக் கட்சி அரசு, கம்யூனிச அபாயத்தை தவிர்ப்பதற்காக கொண்டு வந்த திட்டங்களில் ஒன்று அது. தேசிய வளங்களை அபிவிருத்தி செய்வது பெயரில், தரிசான பூமியில் விவசாயக் குடும்பங்களை குடியேற்றும் திட்டம் இனத்தின் பெயரில் அறிமுகப் படுத்தப் படவில்லை. கிழக்கு மாகாணத்தில் மகாவலி கங்கை திசைதிருப்பல், மின்னேரியா குளம் புனரமைப்பு போன்ற பெயரில் நடந்த குடியேற்றங்களுக்கு தமிழர்கள் யாரும் செல்லவில்லை. அரசும் அதனை எதிர்பார்க்கவில்லை. சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிங்களவர்களை மட்டும் குடியேற்றியது.

இதே நேரம், வட மாகாணத்தில், வன்னிப் பிரதேசத்தில் தமிழ்க் குடியேற்றங்கள் நடந்து கொண்டிருந்தன. வவுனியாவுக்கும், கிளிநொச்சிக்கும் இடையிலான வன்னிப் பகுதி பெருமளவு காடுகளைக் கொண்டது. யாழ்ப்பாணத்தில் இருந்து சென்று குடியேறிய விவசாயக் குடும்பங்கள், காட்டை அழித்து பயிர் செய்யவாரம்பித்தன. வன்னிக் குடியேற்றங்களும், அரசினால் ஊக்குவிக்கப் பட்ட திட்டங்கள் தான். (தமிழ்க் காங்கிரசின் தலையீடு காரணமாக ஆதிக்க சாதி வேளாளர் தான் பெருமளவில் குடியேறி இருந்தனர்.)

வன்னி தமிழ்க் குடியேற்றங்களுக்கும், கிழக்கு மாகாண சிங்களக் குடியேற்றங்களுக்கும் இடையில் பாரிய வேறுபாடு இருந்தது. வன்னியில் காடுகளே அதிகமாக இருந்தன. அந்தப் பிரதேசத்தில் ஏற்கனவே குடியிருந்தவர்களும் தமிழர்கள் தான். ஆனால், கிழக்கு மாகாணத்தில் நிலைமை வேறு. தமிழர்கள் நெருக்கமாக வாழ்ந்த பிரதேசத்தின் நடுவில், சிங்களக் குடியேற்றக் கிராமங்கள் அமைக்கப் பட்டன. தமிழரின் நிலங்களும் ஆடாவடித்தனமாக பறிக்கப் பட்டன. பாலஸ்தீனப் பிரதேசத்தில் நடந்த யூதக் குடியேற்றங்களின் பாணியில், இலங்கையில் சிங்களவர்கள் குடியேற்றப் பட்டனர். உண்மையில், ஐரோப்பிய காலனியக் கொள்கையின் பிராந்திய வெளிப்பாடு அது. பலவீனமான மக்களின் நிலங்களை பறித்தெடுத்து, தன்னின மக்களை வாழ வைக்கும் "இனவாத-பொருளாதாரக் கொள்கை" தான் அமெரிக்காவையும் உருவாக்கியது.

பண்டாரநாயக்க ஆட்சிக் காலத்தில் புதிய சிங்களக் குடியேற்றங்கள் நடைபெறாது தடுத்து நிறுத்தப் பட்டது. இருப்பினும் ஏற்கனவே இருந்த குடியேற்றங்களை அகற்றாமல் விட்டது பாரிய தவறு என்பதை அப்போது உணரவில்லை. உண்மையில் பண்டாரநாயக்க, தனது கட்சிக்கு ஆதரவளித்த பிக்குகளின் கோரிக்கைகளை கூட நிறைவேற்ற முன்வரவில்லை. "மேலைத்தேய சீரழிவு கலாச்சாரத்திற்கு எதிரான, சிங்களக் கலாச்சாரக் காவலர்களாக" காட்டிக் கொள்வதே பிக்குகளின் முதன்மையான அரசியல் செயற்பாடாகவிருந்தது. (தமிழ் கலாச்சாரக் காவலர்களான, தமிழ் உணர்வாளர்களின் அரசியலும் ஒன்று தான்.)

பௌத்த பிக்குகள் முன்மொழிந்த, கலாச்சார விழுமியங்கள் எதையும் பண்டாரநாயக்க அரசு நடைமுறைப் படுத்தவில்லை. பிக்குகள் கோரிய மதுபான தடைச் சட்டம் பற்றி பாராளுமன்றம் விவாதிக்கவே இல்லை. அதே போன்று, பௌத்த மத உயர்கல்வி நிறுவனமான பிரிவேனாக்களை, பல்கலைக்கழகத்திற்கு நிகராக தரமுயற்றும் கோரிக்கையும் நிறைவேற்றப் படவில்லை. பிக்குகளின் அபிலாஷைகளுக்கு விரோதமாக கொண்டு வரப்பட்ட நில உச்சரவம்புச் சட்டம், பௌத்த மடாலயங்களின் பொருளாதாரத்தை பாதித்தது. இதை விட, வேறு சில முற்போக்கான மாற்றங்களும் பண்டாரநாயக்க ஆட்சிக் காலத்தில் ஏற்பட்டன. 1957 ல் நிறைவேற்றப் பட்ட, "சமூகக் குறைபாடுகள் ஒழிப்பு சட்டம்", முதன் முதலாக சாதிய தீண்டாமையை சட்டவிரோதமாக்கியது. இவற்றை விட, அரசின் வெளிவிவகாரக் கொள்கையிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. சோஷலிச நாடுகளுடன் உறவு ஏற்படுத்தப் பட்டது. அணிசேரா நாடுகளின் கூட்டமைப்பில் இணைந்து கொண்டது. இலங்கையில் இருந்த பிரிட்டிஷ் படை முகாம்கள் மூடப் பட்டன. பொருளாதார ரீதியாக, தேசியமயமாக்கல் கொள்கைக்கு உள்நாட்டில் ஆதரவு பெருகியது.

பண்டாரநாயக்கவின் அமைச்சரவையில், பிலிப் குணவர்த்தன என்றொரு மார்க்சிய அறிவுஜீவி இருந்தார். நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த, கொவிகம சாதியில் பிறந்தவர் என்ற போதிலும் வர்க்க சிந்தனை கொண்டவராக இருந்தார். 1935 ல், இங்கிலாந்து கல்லூரிகளில் பயிலும் காலத்தில் மார்க்ஸியம் குறித்து அறிந்து கொண்டு நாடு திரும்பிய இடதுசாரி தலைவர்களுடன் சேர்ந்து வேலை செய்து வந்தார். இருப்பினும் பிற்காலத்தில் இடதுசாரித் தேசியவாதியாக மாறி விட்டார். அவரது தந்தையும், பிரிட்டிஷாருக்கு எதிரான தேசியவாத எழுச்சியில் பங்குபற்றியமைக்காக சிறை சென்றவர். அந்தக் காலத்தில் ஆங்கிலம் மட்டுமே பேசிய மார்க்சியர்கள் மத்தியில், பிலிப் குணவர்த்தன வித்தியாசமானவராக திகழ்ந்தார்.

1956 ல் கூட, கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பீட்டர் கெனமன், சிங்களம் படிக்கவே ஆரம்பிக்கவில்லை. அதே நேரத்தில், பிலிப் குணவர்த்தனவின் வீட்டில் சிங்களம் பேசப்பட்டது குறிப்பிடத் தக்கது. இன்று "தமிழ் தேசியத்துடன் ஒத்துழைப்பது, தமிழ் இடதுசாரிகளின் தார்மீகக் கடமை" என்று நம்பப் படுவது போன்று, அன்று சில சிங்கள இடதுசாரிகள் நம்பினார்கள். உண்மையில், பண்டாரநாயக்க போன்ற தூய சிங்கள தேசியவாதிக்களுக்கும், குணவர்த்தன போன்ற மார்க்சிய மேதைகளின் ஆலோசனைகள் தேவைப்பட்டன. சிங்கள மக்களை, வர்க்க ரீதியாக பிளவு படுத்துவது குணவர்த்தன கொண்டுவந்த பொருளாதார திட்டங்களின் நோக்கமாக இருந்தது. ஆனால், பண்டாரநாயக்க அந்த நோக்கம் நிறைவேற அனுமதிக்காதது மட்டுமல்ல, இறுதியில் இனவாதிகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்தார். இவையெல்லாம் பண்டாரநாயக்கவின் கொள்கை மாற்றத்தில் ஏற்பட்ட பாரிய தவறு மட்டுமல்ல, தமிழ் தேசியவாதிகளின் தவறும் இதில் அடங்கியுள்ளது. அதற்கு காரணம், தமிழ் தேசியவாத தலைவர்கள் முதலில் பூர்ஷுவா வர்க்கத்தினர், அதற்குப் பிறகு தான் அவர்கள் தமிழர்கள்.

நில உச்சவரம்புச் சட்டம், நெல் பயிரப்படும் வயல் நிலங்களை மட்டுமே இலக்கு வைத்தது. அதனால், தேயிலை, ரப்பர் போன்ற பெருந்தோட்ட பயிர்ச்செய்கையில் ஈடுபட்ட முதலாளிகளை பாதிக்கவில்லை. புதிய சட்டத்தின் பிரகாரம், ஒருவர் ஐந்து ஏக்கருக்கு மேல் வைத்திருக்கும் வயல் நிலங்களை அரசு பறித்தெடுத்து, உழுபவருக்கு சொந்தமாக்க விரும்பியது. இலங்கை காலனிய ஆட்சியின் கீழ் இருந்த காலத்திலும், சுதந்திரத்திற்குப் பின்னரும், நிலப்பிரபுத்துவ சமுதாய முறை தொடர்ந்தது. நாட்டின் பெருமளவு நிலங்களுக்கு சொந்தக்காரரான நிலப்பிரபுக்கள், சிறு விவசாயிகளுக்கு குத்தகைக்கு கொடுத்து விட்டிருந்தனர். பயிரப்படும் நெல்லில் பெரும்பகுதி நிலப்பிரபுக்கு சொந்தமாகையால், குத்தகை விவசாயிகளுக்கு விளைச்சலின் பலன்கள் கிடைப்பதில்லை.

நிலப்பிரபுக்கள் எப்போதும் உயர்சாதியினராக இருந்தனர். குத்தகை விவசாயிகள் பெரும்பாலும் பிற்படுத்தப் பட்ட சாதியினர். தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு விவசாயம் செய்யும் உரிமை மறுக்கப் பட்டு வந்துள்ளது. அரசு கொண்டு வந்த நில உச்சவரம்புச் சட்டமும், அதன் விளைவுகளும், சாதிய சமுதாயத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தியது. பெருமளவு தாழ்த்தப் பட்ட சாதியினர் விவசாயக் கூலிகளானது மட்டுமல்ல, சிறிதளவு நிலங்களையும் பெற்றுக் கொண்டனர். உண்மையில், அரசின் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி தப்பிக்க நினைத்த, நிலப்பிரபுக்களின் செயல்பாடுகள் தோற்றுவித்த எதிர்பாராத சமுதாய மாற்றம் அது.

உண்மையில் குணவர்த்தன இயற்றிய நில உச்சவரம்புச் சட்டம், உள்ள படியே நடைமுறைக்கு வந்திருந்தால், அது நாட்டில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கும். நிலவுடமையாளர்களின் நிலங்களும், அறுவடையில் பெரும் பகுதியும், அவற்றை பயிர் செய்த குத்தகை விவசாயிகளுக்கு சொந்தமாகி இருக்கும். நிலப்பிரபுக்களுக்கு சிறிதளவு தொகையை நஷ்டஈடாக அரசு வழங்கும். உழவர்களின் கமிட்டிகள் உருவாக்கப் பட்டு, விவசாயக் கூலிகளின் ஊதியமும் அதிகரிக்கப் பட்டிருக்கும். முன்னாள் குத்தகை விவசாயிகளைக் கொண்ட உழவர் குழுக்கள், நிலமற்ற விவசாயக் கூலிகளையும் போராட்டத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும். அரசுக்கும் இதனால் இலாபமிருந்தது. முழுக்க முழுக்க தனியாரிடம் இருந்த விவசாய உற்பத்தி அரசமயமாகும். இருப்பினும், அரசாங்கத்திற்குள்ளேயே இந்த சட்டத்திற்கு எதிர்ப்புக் கிளம்பியது.

ஆளும் கட்சிக்குள்ளேயே எதிராளிகள் இருந்ததால், சட்டத்தை பாராளுமன்றத்திற்கு வெளியே அமுல்படுத்த முனைந்தார்கள். அதற்குக் காரணம், பாராளுமன்ற உறுப்பினர்களில் பலர், நிலவுடமை சமூகத்தை சேர்ந்தவர்கள். தமிழ் அரசியல் தலைவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. அவர்கள் ஏராளமான நிலங்களை, சிங்களப் பகுதிகளிலும் சொந்தமாக வைத்திருந்தனர். பண்டாரநாயக்கவின் குடும்பத்தின் உள்ளேயே எதிர்ப்புக் கிளம்பியது வேடிக்கையானது. அவரது துணைவியார் சிறிமாவோவின் குடும்பத்தினர், கண்டி மாகாணத்தின் பெரிய நிலவுடமையாளர்கள். நில உச்சவரம்பு சட்டத்தை இரத்து செய்யுமாறு, சிறிமா ஊடாக பண்டாரநாயக்கவுக்கு அழுத்தம் கொடுத்தனர். இறுதியாக சட்டம் நடைமுறைக்கு வந்த பொழுது, அது நிலப்பிரபுக்களின் அதிகாரத்தை அசைக்கவில்லை. ஆயினும், சட்டம் அமுலாக முன்னரே, குத்தகை விவசாயிகளுக்கு பதிலாக, பெருமளவு விவசாயக் கூலிகள் வயல்களில் வேலை செய்ய வைக்கப் பட்டனர். குத்தகை விவசாயிகளுக்கு மட்டுமே நிலத்தை சொந்தமாக்குவதாக சட்டம் கூறியதால், விவசாயக்கூலிகளை பணிக்கு அமர்த்தியதன் மூலம், மறைமுகமாக நிலப்பிரபுக்களின் ஆதிக்கம் தொடர்ந்தது.

நிச்சயமாக, நில உச்சவரம்புச் சட்டத்திற்கு எதிராக, நிலவுடமையாளர்கள் போர்க்கொடி தூக்கினார்கள். கண்டியில் நடந்த எதிர்ப்பியக்கத்திற்கு, சிறிமாவின் சகோதரர் பார்னஸ் ரத்வத்த தலைமை தாங்கினார். என்ன பாடுபட்டாவது சட்டத்தை நடைமுறைக்கு வர விடாமல் தடுப்பது என்று கங்கணம் கட்டிக் கொண்டனர். புத்த பிக்குகளும் நிலவுடமையாளர்களுடன் கைகோர்த்துக் கொண்டனர். நிலப்பிரபுத்துவத்திற்கும், மதத்திற்கும் இடையிலான பொருளாதார உறவு உலகம் முழுவதும் உள்ளது தான். இலங்கையும் அதற்கு விதிவிலக்கல்ல. பௌத்த மடாலயங்களுக்கு சொந்தமாகவும் பல ஏக்கர் நெல் வயல்கள் இருந்தன. மடாலயங்களில் வசித்த பிக்குகளின் முக்கிய வருமானமும் அது தான். நிலவுச்சவரம்பு சட்டம் தமது அடிமடியிலேயே கை வைப்பதை உணர்ந்த புத்த பிக்குகள், பண்டாரநாயக்க அரசுக்கு எதிராக திரும்பினார்கள். ஆனால், இந்த விடயத்தில் அரசை விமர்சித்தால், சிங்கள உழைக்கும் மக்களின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டியிருக்கும் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். அதனால், பொருளாதாரப் பிரச்சினையை, இனப்பிரச்சினையாக திசை திருப்பி விடுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.

இது போன்ற அரிய சந்தர்ப்பத்தை கைநழுவ விட விரும்பாத எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, இனவாத அரசியலுக்குள் நுழைந்தது. இலங்கை அரசியல் வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்த சம்பவங்கள், 1957, 1958 ஆகிய வருடங்களில் இடம்பெற்றன. இலங்கையில் வர்க்கப் போராட்டத்தை தடுக்க வேண்டுமானால், அதற்கு ஒரேயொரு வழி தான் உண்டு. இயல்பாகவே வர்க்க சிந்தனை கொண்ட உழைக்கும் மக்களின் மனதில் இனவாதக் கருத்துகளை பரப்ப வேண்டும். அதுவே மேட்டுக்குடி வர்க்க நலன்களை காப்பாற்ற உதவும். சிங்கள பேரினவாதிகள், இனவாத பௌத்த பிக்குகள், தமிழ் குறுந் தேசியவாதிகள், இவர்கள் எல்லோரும் ஒன்றிணையும் புள்ளியும் அது தான். சிங்கள-தமிழ் பூர்ஷுவா வர்க்கத்தினரின் நலன்களுக்காக, சிங்கள-தமிழ் உழைக்கும் மக்களை நீண்டதொரு இனக்குரோத போருக்குள் தள்ளி விட்டனர்.


(தொடரும்)

இந்த தொடரின் முன்னைய பதிவுகள்:
9. "சிங்கள-தமிழ் தேசியவாதம்" அல்லது "பண்டா-செல்வா சித்தாந்தம்"
8. கம்யூனிசத்தை கருவறுத்த சிங்கள மறுமலர்ச்சி
7. அரிசி வேண்டுமா? அல்லது "சிங்களம் மட்டும்" வேண்டுமா?
6. ஆங்கிலேய அடிவருடிகளின் அற்புதத் தீவு
5. ஆங்கிலேயர் புறக்கணித்த "சிங்கள-தமிழ் மொழிப்பிரச்சினை"
4. மார்க்ஸியம்: சிங்கள-தமிழ் தேசியவாதிகளின் பொது எதிரி
3. உலகப் பொருளாதார நெருக்கடி, இலங்கைத் தமிழருக்கு பேரிடி
2. பண்டாரநாயக்க, பொன்னம்பலம் : இரு நண்பர்களின் இன அரசியல்
1. சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்

Wednesday, October 05, 2011

"சிங்கள-தமிழ் தேசியவாதம்" அல்லது "பண்டா-செல்வா சித்தாந்தம்"

[சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்]
(பகுதி : ஒன்பது)


இலங்கையின் வரலாற்றில் 1956 ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தல் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இன்னும் சொல்லப்போனால், இன்று விஸ்வரூபமாக விரிந்து இலட்சக்கணக்கான மக்களின் சாவுக்கும் காரணமான இனப்பிரச்சினையின் தோற்றுவாயும் அது தான். 1956 வரையில், சாதி, வர்க்க பிரிவினையே முக்கியத்துவம் பெற்றிருந்தது. 1956 க்குப் பின்னர், தேசியவாதம் என்ற கருத்தியல் அரசியல் அரங்கில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. தேசியவாதிகள் கற்பித்த இனம் என்ற அடிப்படையில் இருந்தே சமூக நோக்கு விரிந்தது. சிங்களவர்கள், தமிழர்கள், ஆகிய இரண்டு மொழி பேசும் சமூகங்களிலும் இந்த மாற்றங்கள் நிகழ்ந்தன.

சிங்களவர்கள் மத்தியில் அந்த சாதனையை நிகழ்த்தியவர், பண்டாரநாயக்க. அதே போன்று, தமிழர்களையும் தேசியவாதிகளாக மாற்றிய பெருமை செல்வநாயகத்தை சாரும். இரண்டு தலைவர்களுக்கும் இடையில் ஒற்றுமைகளும் இருந்தன. இருவரும் சமுதாயத்தில் உயர்சாதியாக கருதப்படும், "கொவிகம-வெள்ளாள" சாதியில் பிறந்தவர்கள். அதிலும், பிரித்தானியா சென்று கல்வி கற்கும் அளவு வசதி படைத்த மேட்டுக் குடியை சேர்ந்தவர்கள். (கொழும்பு மேட்டுக்குடி பிள்ளைகள் மட்டுமே படிக்கும், சென் தோமஸ் கல்லூரியில் ஒரே காலத்தில் கல்வி கற்றுள்ளனர்.) சிறுபான்மை கிறிஸ்தவமதத்தில் பிறந்த போதிலும், பெரும்பான்மை மதத்தவரின் அபிலாஷைகளுக்கு ஏற்றவாறு அரசியல் நடத்தியவர்கள். அனைத்து சாதிகளையும் தேசியம் என்ற குடையின் கீழ் ஒன்று படுத்தியமை, இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது.

1948 ம் ஆண்டில் இருந்து நிகரற்ற ஆளும் கட்சியாக இருந்த, ஐக்கிய தேசியக் கட்சி 1956 தேர்தலில் தோல்வியுற்றது. சிங்களப் பகுதிகளில் பண்டாரநாயக்கவின் கட்சி வெற்றி பெற்றது. சில வருடங்களுக்கு முன்னர் தான், ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகிய பண்டாரநாயக்க, சுதந்திரக் கட்சி என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை அமைத்திருந்தார். தமிழ் பிரதேசமான, வட-கிழக்கு மாகாணங்களில் செல்வநாயகத்தின் கட்சி பல இடங்களைக் கைப்பற்றியது. செல்வநாயகமும், சில வருடங்களுக்கு முன்னர் தான், தமிழ்க் காங்கிரசில் இருந்து பிரிந்து சென்று தமிழரசுக் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை ஸ்தாபித்தார். சுதந்திரக் கட்சி, இலங்கையை பௌத்த-சிங்களவர்களுக்கான தாயகமாக்க வேண்டுமென்ற கொள்கையை பரப்புரை செய்தது. தமிழரசுக் கட்சி, இந்து-கிறிஸ்தவ தமிழருக்கான தாயகக் கோட்பாட்டை பரப்பியது. இதற்காக மட்டும் தான் மக்கள் இவ்விரு கட்சிகளுக்கு வாக்களித்தார்கள் என்றே புரிந்து கொள்ளப் படுகின்றது. சிங்கள தேசியவாதம், தமிழ் தேசியவாதம் இரண்டுமே, நாங்கள் அவ்வாறு தான் புரிந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கின்றன. இது சமூக-பொருளாதார பின்னணியை ஆராயாத, வெறும் அரசியல் சார்ந்த விளக்கம் மட்டுமே.

1956 க்கு முன்னர், இலங்கையில் சாதி அரசியல் கோலோச்சியது. தேர்தலில் நின்ற வேட்பாளர்கள் பகிரங்கமாக சாதி அபிமானம் காட்டினார்கள். "ஆதிக்க சாதி மக்களுக்காக, ஆதிக்க சாதி வேட்பாளர்களால் நடத்தப் படுவதே", இலங்கை அரசியலாக இருந்தது. சிங்களவர்களைப் பொறுத்த வரையில் "கொவிகம", தமிழருக்கு "வெள்ளாளர்கள்". பிற்பட்ட, தாழ்த்தப் பட்ட சாதியினர் எப்போதும் புறக்கணிக்கப் பட்டே வந்துள்ளனர். தேர்தலில் வேட்பாளர்களாக நிற்பவர்கள், கொவிகம-வெள்ளாள சாதியினர் என்பது எழுதப்படாத விதியாகவிருந்தது. தேர்தல் பிரச்சாரங்களுக்கு செல்லும் வேட்பாளர்கள், உள்ளூர் நிலவுடைமையாளர் வீட்டில் தான் தங்குவார். அதே சாதியை சேர்ந்த நிலப்பிரபுவும், தன்னிடம் வேலை செய்யும் தாழ்த்தப்பட்ட மக்களை குறிப்பிட்ட வேட்பாளருக்கு ஓட்டுப் போட வேண்டுமென உத்தரவிடுவார். ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ், இரண்டையும் சேர்ந்த வேட்பாளர்கள் இவ்வாறு தான் தேர்தலில் நின்று ஜெயித்தார்கள். காலப்போக்கில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினர் மத்தியில் ஏற்பட்ட அரசியல் விழிப்புணர்வு காரணமாக, நிலவுடமையாளர்களின் பிடி தளர்ந்தது. அதற்கு முக்கிய காரணம், கம்யூனிசத்தை வளர விடாமல் தடுப்பதற்காக, இலங்கை அரசு நடைமுறைப் படுத்திய சமூக நல திட்டங்கள். முரண்நகையாக, ஐக்கிய தேசியக் கட்சி கொண்டு வந்த திட்டங்கள், அந்தக் கட்சியின் தோல்விக்கு வழிவகுத்தது.

ஆங்கிலேயரின் காலனிய ஆட்சியில், ஐரோப்பியரும், படித்த மேட்டுக்குடியினரும் மட்டுமே தேர்தலில் வாக்களிக்கும் உரிமை பெற்றிருந்தனர். சுதந்திரத்திற்குப் பின்னர், அனைத்துப் பிரஜைகளுக்கும் வாக்குரிமை வழங்கப் பட்டது. அரச பாடசாலைகளில் இலவசக்கல்வி, அரச மருத்துவமனைகளில் இலவச மருத்துவம், என்பன சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் கிடைத்தன. உண்மையில், மார்க்சியக் கட்சிகளின் நீண்ட காலக் கோரிக்கைகள் இவை. சனத்தொகையில் பெரும்பான்மையாக உள்ள உழைக்கும் வர்க்க மக்களிடம், இந்தக் கோரிக்கைகள் இலகுவில் எடுபடும். கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கு அதிகரிக்கக் கூடாது என்பதற்காக, அரசே முன் நின்று அந்த திட்டங்களை நிறைவேற்றியது. நிச்சயமாக, மக்கள் அதற்குப் பிறகு கம்யூனிசத்தை மறந்து விட்டார்கள். ஆனால், சமூக நலத் திட்டங்களின் விளைவாக அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டது. கல்வி இலவசமாயினும்,ஆங்கில வழிக் கல்வி முன்னேற்றத்திற்கு பெரும் தடையாகவிருந்தது. எழுதப், படிக்கத் தெரிந்த ஒடுக்கப் பட்ட சாதியினர், அரசியல் முடிவுகளில் தமது பங்களிப்பு எதுவுமில்லை என்பதை அறிந்து கொண்டனர்.

அரசின் பாரபட்சமான கல்விக் கொள்கையால், ஆசிரியர்களும் பெருமளவு பாதிக்கப் பட்டனர். ஆங்கிலத்தில் கற்பித்த ஆசிரியர்களுக்கு அதிக ஊதியம் வழங்கப் பட்டது. அதே நேரத்தில், சிங்களம் அல்லது தமிழில் கற்பித்த ஆசிரியர்களுக்கு அதைவிடக் குறைவாகவே கிடைத்தது. மருத்துவத் துறையிலும், ஆங்கிலேயர் அறிமுகப் படுத்திய கல்வி கற்ற வைத்தியர்களுக்கே மதிப்பு அதிகம். அவர்களின் சான்றிதல்களை மட்டுமே அரசு அங்கீகரித்தது. உள்நாட்டு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிகளில் பயின்ற மாணவர்கள் வேலையின்றி தவித்தார்கள். அப்படியே வேலை கிடைத்தாலும், ஆங்கிலம் தெரிந்த வைத்தியரை விட குறைவாகவே சம்பாதிக்க முடியும். சுருக்கமாக, ஆங்கில மருத்துவம் பயின்றவர்கள், சமூகத்தில் மேன் நிலையில் இருந்தனர். தாய்மொழியில் சுதேசி மருத்துவம் பயின்றவர்களின் வாழ்க்கை கஷ்டமாகவிருந்தது. வட மாகாணத்திற்கான ஆயுர்வேதக் கல்லூரி, கைதடி என்ற ஊரில் இயங்கிக் கொண்டிருக்கிறது என்ற விடயம், இன்றைக்கும் பல தமிழருக்கு தெரியாது. அந்தளவுக்கு, சுதேசி மருத்துவர்கள், அரசினால் மட்டுமல்ல, சமூகத்தினாலும் புறக்கணிக்கப் படுகின்றனர். மேற்குறிப்பிட்ட பிரச்சனைகள் எல்லாம், சிங்களவர், தமிழர், இரண்டு சமூகங்களுக்கும் பொதுவானவை தான்.

சமூக விஞ்ஞானத்தில் குட்டி-பூர்ஷுவா என்று அழைக்கப்படும் கீழ் மத்தியதர வர்க்கத்தின் எழுச்சி, 1956 தேர்தல் முடிவை தீர்மானித்தது. பூர்ஷுவா அல்லது மேல் மத்தியதர வர்க்கத்தினருக்கு கிடைத்து வந்த, வசதி வாய்ப்புகள் கைவரப் பெறாதவர்கள். ஆங்கில அறிவு குறைவாக இருந்த படியால், பதவிகளை கை நழுவ விட்டவர்கள். அவர்களிடம் இருந்த ஒரேயொரு துருப்புச் சீட்டு, அரசியல் அதிகாரம். தமக்கு பரிச்சயமான சிங்களம், அல்லது தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளித்த கட்சிகளின் பின்னால் அணி திரண்டார்கள். பண்டாரநாயக்கவின் சுதந்திரக் கட்சிக்கு, (தேர்தல் காலத்தில் மக்கள் ஐக்கிய முன்னணி என்ற பெயரில் போட்டியிட்டது) ஓட்டுப் போட்டு வெல்ல வைத்த சிங்கள நடுத்தர வர்க்கத்தினருக்கு, இது ஒரு வர்க்கப் பிரச்சினை என்பது தெளிவாகத் தெரிந்திருந்தது. ஆங்கில மொழி ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டம், சிங்களவர், தமிழர் இருவருக்கும் பொதுவானது. இந்த புரிந்துணர்வு பல சிங்களவர்களிடம் இருந்துள்ளது. ஆயினும், அரசியல் தலைவர்களின் சந்தர்ப்பவாத இனவாதத்தை அற்ப விஷயமாக கருதி புறக்கணித்தார்கள். இது சிங்களவர்களுக்கு மட்டும் பொதுவான குறைபாடு அல்ல. தமிழர்களும் நீதியான கோரிக்கைகளுக்கு பின்னாலான, தலைமைகளின் இனவாதக் கருத்துகளை பெரிது படுத்துவதில்லை.

சுதந்திரம் கிடைத்து ஐந்து ஆண்டுகளாகியும், வங்கிகள், நீதிமன்றங்கள், பொலிஸ் நிலையங்களில் எல்லாம் அனைத்துப் பதிவுகளும் ஆங்கில மொழியில் இடம்பெற்றன. அரச அலுவலகத்திற்கு செல்லும் மக்கள், அதிகாரிகளுடன் ஆங்கில மொழியில் தொடர்பு கொள்ள வேண்டிய நிலைமை நீடித்தது, காலனிய மொழிக்கு பதிலாக, சிங்களத்தையும், தமிழையும் உத்தியோகபூர்வ மொழியாக்கும் திட்டம் ஏற்கனவே அரசிடம் இருந்துள்ளது. அதற்கென ஒரு ஆணைக்குழு, 1952 தொடக்கம் இயங்கி வந்தது. ஆனால், அரசினால் மிகக் குறைந்தளவு நிதி ஒதுக்கப்பட்ட ஆணைக்குழு, சில மொழிபெயர்ப்பு வேலைகளைத் தவிர, உருப்படியாக எதையும் செய்யவில்லை. சிங்கள மக்கள் மத்தியில், மொழி உரிமைக்காக போராடியவர்கள் இரண்டு வகைப் பட்டவர்கள். ஒரு பிரிவினர், சிங்களத்தோடு தமிழையும் உத்தியோகபூர்வ மொழியாக்க விரும்பினார்கள். இன்னொரு பிரிவினர் மிகவும் தீவிரமாக செயற்பட்டனர். அவர்கள், சிங்களம் மட்டும் உத்தியோகபூர்வ மொழியாக வேண்டுமென விரும்பியதுடன், தமிழர்களை சந்தேகக்கண் கொண்டு நோக்கினார்கள். இரண்டாவது பிரிவினரின் செல்வாக்கு அதிகரிக்கத் தொடங்கியது. இரண்டு மொழிகளினதும் உரிமைகளுக்காக பேசிய சிங்களவர்களும், வாய்மூடி மௌனிகளானார்கள்.

பெரும்பாலும், சிங்கள மக்கள் மத்தியில் உள்ள சமூகப்பிரிவுகள் யாவும், ஏதோ ஒரு வகையில் தமிழர்களுடன் புரிந்துணர்வைக் கொண்டிருந்தன. எந்த வகையிலும், தமிழர்களின் உணர்வை புரிந்து கொள்ள முடியாத ஒரு சமூகப் பிரிவினர், பௌத்த மத பிக்குகள் மட்டுமே! மதவெறி கண்ணை மறைத்தது!! பௌத்த மதம் சங்க அமைப்பை அடிப்படையாகக் கொண்டது. இந்த சங்கங்கள், வெறுமனே மதத்தை மட்டும் போதிக்காமல், அரசியல் அபிலாஷைகளுடனும் இயங்கிக் கொண்டிருந்தன. இன்றைக்கும், குறிப்பிட்ட சில பௌத்த சங்கங்கள் இனவாதம் பேசும் அதே தருணத்தில், வேறு சில இன நல்லுறவை விரும்புகின்றன. ஆரம்பத்தில், சிங்களத்துடன், தமிழுக்கும் உத்தியோகபூர்வ அந்தஸ்து கொடுக்க விரும்பிய பண்டாரநாயக்க, புத்த பிக்குகளின் வற்புறுத்தலால் சிங்களத்தை மட்டும் ஆட்சி மொழியாக்கினார். இதற்கு எதிர்வினையாக செல்வநாயகம் தலைமையில் தமிழரசுக் கட்சியினர் சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்தினர். இதன் விளைவாக, "பண்டா-செல்வா ஒப்பந்தம்" ஏற்பட்டு, தமிழுக்கும் உத்தியோகபூர்வ அந்தஸ்து வழங்கப்படும் என அறிவிக்கப் பட்டது. ஆயினும், புத்த பிக்குகள் போர்க்கொடி தூக்கியதால், பண்டா-செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப் பட்டது. வெறுத்துப் போன செல்வநாயகம்,"சிங்களவர்கள் எதுவும் தர மாட்டார்கள்." என்ற விரக்தியில், "தனித் தமிழீழம்" என்ற புதிய பாதையை தேர்ந்தெடுத்தார்.


(தொடரும்)

இந்த தொடரின் முன்னைய பதிவுகள்:
8. கம்யூனிசத்தை கருவறுத்த சிங்கள மறுமலர்ச்சி
7. அரிசி வேண்டுமா? அல்லது "சிங்களம் மட்டும்" வேண்டுமா?
6. ஆங்கிலேய அடிவருடிகளின் அற்புதத் தீவு
5. ஆங்கிலேயர் புறக்கணித்த "சிங்கள-தமிழ் மொழிப்பிரச்சினை"
4. மார்க்ஸியம்: சிங்கள-தமிழ் தேசியவாதிகளின் பொது எதிரி
3. உலகப் பொருளாதார நெருக்கடி, இலங்கைத் தமிழருக்கு பேரிடி
2. பண்டாரநாயக்க, பொன்னம்பலம் : இரு நண்பர்களின் இன அரசியல்
1. சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்

Sunday, October 02, 2011

கம்யூனிசத்தை கருவறுத்த சிங்கள மறுமலர்ச்சி

[சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்]
(பகுதி : எட்டு)


கொழும்பு நகரிற்கு மிக அருகாமையில், இரத்மலானையில் "கொத்தலாவல இராணுவப் பயிற்சிக் கல்லூரி" அமைந்துள்ளது. ஈழப் போர்க்களத்தில் கடமையாற்றிய பல இராணுவ அதிகாரிகளை அங்கே தான் உற்பத்தி செய்து அனுப்பிக் கொண்டிருந்தார்கள். தற்போது தெற்காசிய நாடுகளில் இருந்தும் புதிய மாணவர்களை சேர்த்துக் கொள்கின்றனர். பனாமா நாட்டில் இயங்கிக் கொண்டிருந்த, லத்தீன் அமெரிக்காவுக்கான இராணுவப் பயிற்சிக் கல்லூரிக்கு நிகராக பேசப்பட்டாலும், அதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. கல்லூரிக்கு தனது பெயரை வழங்கிய, ஜோன் கொத்தலாவல இலங்கையின் மூன்றாவது பிரதமராக 1953 முதல் 1956 வரை பதவி வகித்தவர். இலங்கையின் மேட்டுக்குடியில் பிறந்து, பிரிட்டிஷ் காலனிய காவல்துறையில் பணியாற்றியவர். யார் இந்த கொத்தலாவல? லத்தீன் அமெரிக்க நாடுகளின் வலதுசாரி சர்வாதிகாரிகளைப் போன்ற குணாம்சம் பொருந்திய ஒருவர். தீவிர கம்யூனிச எதிர்ப்பாளர்.

கொத்தலாவல ஆட்சிக் காலத்தில் தான் பனிப்போர் தீவிரமடைந்தது. அதே காலகட்டத்தில் தான், இலங்கையும் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் கோரி விண்ணப்பித்திருந்தது. அன்று சோஷலிச நாடுகளைப் பொறுத்த வரையில், இலங்கை ஒரு மேற்குலகிற்கு விசுவாசமான நாடு. ஏறக்குறைய, இஸ்ரேலுக்கும் மேற்குலகிற்கும் இடையிலான உறவைப் போன்று கணித்து வைத்திருந்தார்கள். அதனால், ஐ.நா.வுக்கான இலங்கையின் உறுப்புரிமைக்கும் பெரும் எதிர்ப்புக் கிளம்பியது. பிறிதொரு தருணத்தில், சோவியத் யூனியனும், அமெரிக்காவும் ஒரு பொது உடன்பாட்டிற்கு வந்த பின்னர் தான், இலங்கையை ஐ.நா.சபையில் அனுமதித்தார்கள். இத்தனை சர்ச்சைகளுக்கு மத்தியிலும், பிரிட்டன் இலங்கையுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்று செய்து கொண்டது. இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம், இலங்கையில் தொடர்ந்தும் பிரிட்டிஷ் இராணுவ தளங்கள் இருப்பதற்கு அனுமதிக்கப் பட்டது. 1972 ம் ஆண்டு, திருகோணமலையில் இருந்த கடைசி கடற்படைத் தளம் அகற்றப்படும் வரையில், பிரிட்டிஷ் இராணுவ பிரசன்னம் இலங்கையில் நீடித்திருந்தது.

ஜோன் கொத்தலாவலையின் கம்யூனிச எதிர்ப்புவாதம், இந்தோனேசியாவில் பாண்டுங் மகாநாட்டிற்குப் பின்னர் உலகம் முழுவதும் அறியப் பட்டது. அமெரிக்காவுடனோ, அல்லது சோவியத்துடனோ சேராத, மூன்றாம் உலக நாடுகளின் கூட்டமைப்பான, "அணிசேரா நாடுகளின் உச்சி மகாநாடு பாண்டுங் நகரில் நடைபெற்றது. நேரு, சூ என் லாய் போன்ற பிரபல உலகத் தலைவர்கள் சமூகமளித்திருந்தனர். ஐரோப்பிய காலனியாதிக்கத்தில் இருந்து விடுதலையடைந்த நாடுகளின் மகாநாடு என்பதால், இலங்கைக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. இலங்கை சார்பில் கலந்து கொண்ட ஜோன் கொத்தலாவல, சீனா வெளிவிவகார அமைச்சர் சூ என் லாய் யுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நேரு இடையில் புகுந்து, அவர்களுக்கு இடையில் சமாதானம் செய்து வைக்க வேண்டியதாயிற்று. மகாநாட்டில், ஜோன் கொத்தலாவல தெரிவித்த கருத்துக்கள், மேற்கத்திய ஊடகங்களின் கவனத்தைப் பெற்றன. "காலனியாதிக்க நாடுகள் புரிந்த படுகொலைகளை கண்டிப்பவர்கள், கம்யூனிச நாடுகளில் நடந்த படுகொலைகளை கண்டிப்பதில்லை. பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தை எதிர்ப்பவர்கள், சோவியத் ஒன்றியம், கிழக்கு ஐரோப்பிய நாடுகளை காலனிகளாக வைத்திருப்பதை எதிர்ப்பதில்லை...."

அமெரிக்காவில், மக்கார்த்தியிசம் இடதுசாரிகளை வேட்டையாடி ஒடுக்கியது. அப்போது பல கம்யூனிச இலக்கியங்கள் தடை செய்யப்பட்டன. ஒரு காலத்தில், இலங்கைக்குள் மார்க்சிய கொள்கைகளை தாங்கிய நூல்கள், சஞ்சிகைகள் கொண்டு வருவதை தடை செய்திருந்தார்கள். குறிப்பாக, சோவியத் ஒன்றியம், சீனா போன்ற நாடுகளில் இருந்து அனுப்பப்படும் நூல்கள் யாவும், சுங்கப் பரிசோதனையில் பறிமுதல் செய்யப்பட்டன. சில வேளை, அவை அங்கேயே எரிக்கப்பட்டன. 1955 ல் மீண்டும் ஒரு ஹர்த்தால் மிரட்டியதால், கொத்தலாவல வரிந்து கட்டிக் கொண்டு கம்யூனிஸ்டுகளுடன் மோதலுக்கு தயாரானார். இலங்கை வரலாற்றில் முதன் முதலாக, பாராளுமன்ற அதிகாரத்திற்கு அப்பாற்பட்ட சிறப்பு பொலிஸ் படையணி ஒன்று அமைக்கப் பட்டது. பொலிஸ் மா அதிபருக்கு கட்டுப்படாத, கொத்தலாவலைக்கு மட்டுமே பதில் சொல்லக் கடமைப் பட்ட அந்தப் பிரிவினர், அரச எதிரிகளை கண்காணிக்கத் தொடங்கினர். மார்க்சியர்கள் மட்டுமல்லாது, அனைத்து தரப்பினர் குறித்தும் தகவல்கள் திரட்டப் பட்டன. தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப் பட்டன. தபால்கள் உடைத்து வாசிக்கப் பட்டன. இதைவிட, பச்சை வர்ண சீருடை அணிந்த துணை இராணுவக் குழு ஒன்றும் உருவாக்கப் பட்டது. பச்சை ஐக்கிய தேசியக் கட்சியின் வர்ணம் என்பது குறிப்பிடத் தக்கது.

பிரிட்டிஷ் காலனிய எஜமானர்களால் "சேர்" (Sir) பட்டம் வழங்கப்பட்ட, ஜோன் கொத்தலாவல பிரதமராக பதவியேற்ற முதல் நாளில் இருந்தே கம்யூனிசத்தோடு மல்லுக் கட்ட ஆரம்பித்து விட்டார். "கம்யூனிசத்தை இலங்கையில் இருந்து துடைத்தெறிவதே எனது முதலாவது கடமையாகும்..." என்று இலங்கை வானொலியில் முழங்கினார். வாய்ச்சொல்லுடன் நின்று விடாது செயலில் இறங்கினார். இலங்கை தோழர்களின் அழைப்பை ஏற்று வரவிருந்த, கயானா நாட்டு பொதுவுடமைவாதி செட்டி ஜெகனை நாட்டிற்குள் வரவிடாமல் தடுத்தார். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவர், பறங்கியர் இனத்தை சேர்ந்தவர் என்பதால், அவர் மீது இனவாத சேற்றை அள்ளி வீசினார். இலங்கையில் பொதுவுடைமை இயக்கத்தை சிதைக்க வேண்டுமானால், இனவாத நஞ்சை ஊட்ட வேண்டும் என்று கொத்தலாவல கண்டுகொண்டார். ஒருவகையில் பறங்கிய இனத்தின் மீதான ஒடுக்குமுறையின் ஆரம்பமாகவே, அந்த நிகழ்வைக் கருத வேண்டியுள்ளது. ஏனெனில், 1961 ல், "இராணுவ சதிப்புரட்சிக்கு திட்டமிட்டதாக" குற்றம் சாட்டி, பறங்கி இன அதிகாரிகள் சிலர் கைது செய்யப்பட்டனர். அந்த நிகழ்வுக்குப் பின்னர், பெருமளவு பறங்கியர்கள் பும்பெயர்ந்து விட்டனர். சிங்கள பேரினவாதமானது, பறங்கி சிறுபான்மையினத்தை எவ்வாறு ஒடுக்கியது, என்பதில் இருந்து தமிழ் தேசியம் பாடம் கற்றுக் கொள்ளத் தவறி விட்டது.

உண்மையில், சிங்களப் பேரினவாதத்தின் தமிழர்கள் மீதான பாய்ச்சல், ஆரம்பத்தில் இந்தியத் தமிழர்களை மட்டுமே குறி வைத்தது. அதற்குக் காரணம், சர்வதேச பொருளாதார நெருக்கடியால், இலங்கையில் ஏற்பட்ட சமூக-பொருளாதார மாற்றம். ஆங்கிலேயரின் காலனிய காலத்தில் இருந்து, இந்தியத் தமிழர்கள் தொழில் தேடி வருவது வழமையானது. இலங்கை சுதந்திரமடைந்த பின்னர், கூடவே பொருளாதார நெருக்கடியும் வந்து விட்டதால், இந்திய குடியேறிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஐம்பதுகளிலும், கொழும்பு சென்றால் தொழில் வாய்ப்பு கிடைக்கும் என்றெண்ணி, பெருந்தொகை இந்தியர்கள் வந்து கொண்டிருந்தனர். இவர்களில் பலர், ராமேஸ்வரம்-மன்னார் வழியாக படகுகளில் வந்திறங்கியதால், "கள்ளத் தோணிகள்" என்று அழைக்கப் பட்டனர். அரசைப் பொறுத்த வரையில், இவர்கள் எல்லோரும் "சட்டவிரோத குடியேறிகள்". அதனால், சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்களை தடுத்து வைத்து நாடு கடத்தினார்கள். கொத்தலாவலையின் இந்திய எதிர்ப்புணர்வும், இனவாதக் கருத்தியலும் சேர்ந்து கொண்டமையால்; பெரும்பாலும் இந்தியத் தமிழர்கள் பொலிஸ் நெருக்குவாரங்களுக்கு ஆளானார்கள். நாட்டினுள் சட்டப்படி தங்கியிருந்த இந்தியத் தமிழர்களும் கைது செய்யப் பட்டனர். இன்றைய காலத்தில், உதாரணத்திற்கு மலேசியாவில், வெளிநாட்டு தொழிலாளர் துன்புறுத்தப்படுவது போன்ற நிலைமைக்கு ஒப்பானது, அன்று நடந்த சம்பவங்கள்.

ஒரு பக்கம், இந்தியத் தமிழர்களை துன்புறுத்திக் கொண்டிருந்த கொத்தலாவல அரசு, மறுபக்கத்தில், இலங்கைத் தமிழர்களின் நண்பனாக காட்டிக் கொண்டது. செப்டம்பர் 1954 ல், யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த கொத்தலாவல, "சிங்களத்தோடு, தமிழையும் அரச கரும மொழிகளாக்குவதாக" வாக்குறுதி அளித்தார். உண்மையில், மேலைத்தேய கலாச்சாரத்தில் ஊறிய கொத்தலாவல, தமிழை மட்டுமல்ல, சிங்களத்தை கூட அரச கரும மொழியாக்குவதை விரும்பவில்லை. ஒரு தடவை புத்த பிக்குகளுடனான விவாதத்தில் பின்வருமாறு கூறினார். "ஆங்கிலத்தில் இருந்து சிங்களத்திற்கு மாறுவது படிப்படியாக நடைபெற வேண்டும். தாய்லாந்தில் நடந்த தவறுகளை நாம் திருப்பிச் செய்யக் கூடாது. ஆங்கிலத்தில் கருமமாற்றக் கூடிய படித்தவர்களை வெளியேற்றி விட்டு, அந்த இடத்தில் தகுதியற்ற நபர்களை போட்டுள்ளனர். தாய்லாந்து மொழியில் மட்டுமே கல்வி கற்ற மாணவர்கள் கல்லூரிக்கு செல்ல முடியாது தடுமாறுகின்றனர்."

கொத்தலாவலையின் ஆங்கில மொழி மீதான பற்று மட்டுமல்ல, தமிழுக்கும் சம அந்தஸ்து அளிக்கும் வாக்குறுதியும், சிங்கள பேரினவாதிகளை, குறிப்பாக இனவாத பிக்குகளை ஆத்திரமூட்டியது. இன்று தமிழ் குறுந் தேசியவாதிகள், "நாம் மட்டுமே உரிமைக்காக போராடினோம்... சும்மா இருந்த முஸ்லிம்கள் இடையிலே புகுந்து தமக்கும் பங்கு கேட்கிறார்கள்...." என்று வியாக்கியானம் செய்கின்றனர். அன்று சிங்கள பேரினவாதிகள், அதே வாதத்தை முன் வைத்து தான், தமிழுக்கு சம அந்தஸ்து வழங்க மறுத்தார்கள். ஆரம்பத்தில் பண்டாரநாயக்கவும், அவரது சுதந்திரக் கட்சியும், "சிங்களத்தை உத்தியோகபூர்வ மொழியாகவும், தமிழை பிராந்திய ஆட்சி மொழியாகவும் அங்கீகரிக்கும்" கொள்கையை கொண்டிருந்தார்கள். பின்னர், "சிங்களம் மட்டும்" கோரிக்கை தீவிரமடைவதைக் கண்டு பின்வாங்கினார்கள். 1956 ம் ஆண்டு தேர்தலில், சிங்களம் மட்டும் சட்டத்தை அமுல் படுத்துவதாக வாக்களித்த பண்டாரநாயக்கவின் கட்சி வெற்றி பெற்றது. அதே ஆண்டு, ஐக்கிய தேசியக் கட்சியும் சிங்களம் மட்டும் கொள்கையை பின்பற்றுவதாக அறிவித்தது. கடைசி வரை விட்டுக் கொடுக்காமல், இரு மொழிக் கொள்கையை பின்பற்றிய இடதுசாரிகளும், தேசிய நீரோட்டத்துடன் கலக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. "சிங்களம் மட்டும்" கொள்கையை ஆதரிக்காதவர்கள் அனைவரும் இனத் துரோகிகள் என்ற அறிவிப்பு, இடதுசாரிகளை கலக்கமடைய வைத்தது. அவர்களது கலக்கத்தை மெய்ப்பிப்பது போல ஒரு சம்பவம் நடந்தது.

11 -10 -1955 அன்று, கொழும்பு நகரசபை மண்டபத்தில், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக் கூட்டம் நடைபெற்றது. ஆங்கிலத்திற்குப் பதிலாக, "சிங்களத்தையும், தமிழையும் ஆட்சி மொழிகளாக்க கோரும்" வெகுஜன இயக்கத்தின் கூட்டம் அது. இன, மத வேறுபாடுகளை மறந்து,ஒன்று திரண்டிருந்த மக்கள் மீது, சிங்களப் பேரினவாதிகள் தாக்குதல் நடாத்தினார்கள். கூட்டத்தில் ரகளை பண்ணியவர்களில் புத்த பிக்குகளும் அடங்குவர். கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும் திருப்பித் தாக்கினார்கள். புத்த பிக்குகளை தாக்கிய செயல், பழமைவாத சமூகத்தில் அனுதாபத்தை ஏற்படுத்தியது. சிங்கள பேரினவாதிகள், மக்களின் அனுதாபத்தை தமக்கு சாதகமாக வென்றெடுத்தார்கள். நகரத் தெருக்களில் குழுமிய புத்த பிக்குகள், கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் கல் வீசினார்கள். அருகில் இருந்த தமிழர், முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைகளை அடித்து நொறுக்கினார்கள். "தமிழர், முஸ்லிம்கள் மட்டுமல்ல, சிங்கள இடதுசாரிகளும் எமக்கு எதிரிகள்." என்று சிங்கள பேரினவாதம் அறிவித்தது. முஸ்லிம்களையும், இடதுசாரிகளையும் இணைத்து, சிங்களப் பேரினவாதத்தை எதிர்த்திருக்க வேண்டிய தமிழ் தேசியவாதிகள், அந்த வாய்ப்பையும் தவற விட்டார்கள்.

சிங்கள தேசியவாதமும், தமிழ் தேசியவாதமும் ஒன்றோடொன்று தொடர்பற்று தனித்தனியாக வளர்ந்தது போலத் தோன்றலாம். இரண்டு பக்க கொள்கை வகுப்பாளர்களும் அவ்வாறான பரப்புரைகளை மேற்கொண்டு வந்துள்ளனர். சிங்கள தேசியவாதிகள் "சிங்கள இனத்தை அழிக்கத் துடிக்கும் இந்திய மேலாதிக்கத்தை எதிர்க்கும் இனப் பாதுகாப்பு போராட்டம்," நடத்துகின்றனர்! தமிழ் தேசியவாதிகள்,"தமிழ் இனத்தை அழிக்கத் துடிக்கும் சிங்கள மேலாதிக்கத்தை எதிர்க்கும் இன விடுதலைப் போராட்டம்,"நடத்துகின்றனர். இரண்டு தேசியங்களினதும் தோற்றத்திற்கு வழி சமைத்த சமூக-பொருளாதாரக் காரணிகள் ஒன்றாகவே இருந்துள்ளன. பிரிட்டிஷ் காலனிய மேலாதிக்கம், இவ்விரண்டு தேசியங்களையும் அடக்கி ஆண்டது. அவற்றின் மொழி, மத, கலாச்சார அடையாளங்களை அங்கீகரிக்கவில்லை. காலனியாதிக்கத்தில் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னர், ஆங்கிலேய விசுவாசிகளான மேட்டுக்குடி ஆட்சி செய்தது. இந்த வர்க்கத்தினர், ஆங்கிலம் பேசும் கிறிஸ்தவர்களாக மட்டுமல்ல, கொவிகம-வெள்ளாள உயர்சாதியை சேர்ந்தவர்களாகவும் தம்மை அடையாளப் படுத்தி வந்தனர். தேசத்தில் சிங்கள-தமிழ் மொழி பேசும் பெரும்பான்மை மக்களின் நலன்களை பிரதிபலிக்காத, சிறுபான்மையினரின் ஆட்சியாகவே அதனைக் கருத வேண்டும்.

கம்யூனிச விரோத பிரதமரான கொத்தலாவல காலத்தில், சிறுபான்மை வர்க்க ஆட்சியின் உச்சகட்ட ஊதாரித்தனத்தை நேரடியாக காண முடிந்தது. கொத்தலாவலையின் பெருங்குடியும், பெண் பித்தும் ஊரறிந்த விடயங்கள். பிரதமரின் அலுவலகத்தை அலங்கரிக்கும் ரோஸ் நிற புடவை அணிந்த சிட்டுக்கள், அறுபது அழகிய கன்னியர்கள் இழுத்துச் சென்ற பிரதமரின் அலங்கார ஊர்தி, இது போன்ற சூடான கிசுகிசு செய்திகள் நாளேடுகளின் விமர்சனத்திற்கு உள்ளாகின. போதாக்குறைக்கு, பசுக்கன்று இறைச்சியை தணலில் வாட்டி உண்ட, ஐரோப்பிய பாணி "பார்பகியூ விருந்து" மத நம்பிக்கையாளர்களின் மனதை புண்படுத்தியது. பௌத்த பிக்குகளும், பழமைவாத சிங்களவர்களும், இவற்றை எல்லாம் "ஐரோப்பிய சீரழிவுக் கலாச்சாரமாகவே" பார்த்தார்கள்.

உயர்சாதி கொவிகமவினர் மட்டுமே அரசியல் ஆதிக்கம் செலுத்திய தேசத்தில், பிற சாதியினருக்கு உரிமைகள் மறுக்கப் பட்டிருந்தன. அந்த சந்தர்ப்பத்தை சிங்கள தேசியவாதம் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது. இன தேசியவாத உணர்வூட்டுவதன் மூலம், சிங்கள தேசியவாதம் அனைத்து சாதிகளையும் உள்வாங்கிக் கொண்டது. வட மாகாணத்தில் இதே வேலையே தமிழரசுக் கட்சியினர் செய்து கொண்டிருந்தனர். சாதிவாரியாக பிளவுண்ட தமிழர்களை ஒன்று சேர்க்கும் தமிழ் தேசியத்தை அறிமுகப் படுத்தினார்கள். சிங்கள-தமிழ் தேசியவாதிகளின் வருகைக்கு முன்னர், இடதுசாரிகள் மட்டுமே அனைத்து சாதிகளையும் ஒரே கொடியின் கீழ் ஒன்றிணைத்திருந்தனர். ஆனால், அவர்கள் தான் "முதலாளிகளுக்கு விரோதமான கடவுள் மறுப்பாளர்கள்" ஆயிற்றே! அப்படியான சக்தி இலங்கையில் பலம் பெறுவதை, மதகுருக்களும், உள்நாட்டு முதலாளிகளும் விரும்புவார்களா? பௌத்த-இந்து மதவாதிகள், சிங்கள-தமிழ் முதலாளிகள், இவர்களின் நலன்களை ஒரு தேசியவாத அரசு மட்டுமே நிச்சயப் படுத்தும்.

(தொடரும்)

....................................................................
இந்த தொடரின் முன்னைய பதிவுகள்:
7. அரிசி வேண்டுமா? அல்லது "சிங்களம் மட்டும்" வேண்டுமா?
6. ஆங்கிலேய அடிவருடிகளின் அற்புதத் தீவு
5. ஆங்கிலேயர் புறக்கணித்த "சிங்கள-தமிழ் மொழிப்பிரச்சினை"
4. மார்க்ஸியம்: சிங்கள-தமிழ் தேசியவாதிகளின் பொது எதிரி
3. உலகப் பொருளாதார நெருக்கடி, இலங்கைத் தமிழருக்கு பேரிடி
2. பண்டாரநாயக்க, பொன்னம்பலம் : இரு நண்பர்களின் இன அரசியல்
1. சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்