Wednesday, August 31, 2011

யூகோஸ்லேவியா படுகொலைகள், மேற்குலகின் பொம்மலாட்டம்

பொஸ்னியாவில் இறுதிக் கட்ட போர் நடந்து கொண்டிருந்த நேரம், சிரபெனிச்சா நகரில், 8000 முஸ்லிம் பொதுமக்களை சேர்பியப் படைகள் இனப்படுகொலை செய்தன. சுமார் 15 வருடங்களுக்கு முன்னர் நடந்த போர்க்குற்றங்களுக்காக, சேர்பியப் படைகளின் தளபதி மிலாடிச் கைது செய்யப்பட்டவுடன், நீதி வென்றது என்பது போன்ற பிரமை தோற்றுவிக்கப் பட்டது.

மேற்கத்திய செய்தி ஊடகங்கள், மிலாடிச் கைதானதை, மாபெரும் சாதனையாக குறிப்பிட்டு எழுதியிருந்தன. எமது தமிழ் தேசிய வணிக ஊடகங்களும், அந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டன. மிலாடிச் கைது செய்யப்பட்டதைப் போல, தமிழ் இனப்படுகொலைகளுக்காக ராஜபக்ஷ கைது செய்யப்படலாம் என்று நம்பிக்கை துளிர் விட்டதால் ஏற்பட்ட மகிழ்ச்சி அது. "இலங்கை அரசு கொஞ்ச காலம் மேற்கத்திய கனவான்களை ஏமாற்றினாலும், நீதிமான்கள் இறுதியில் உண்மையை உணர்ந்து நீதி வழங்குவார்கள்...." என்று தமிழர்கள் நம்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டன.

யூகோஸ்லேவிய போர்களின் போது மேற்குலகம் காட்டிய அக்கறை, அதன் அரசியல் பின்னணி, உள்நோக்கம் என்பன போன்ற கேள்விகளை ஒரு பக்கம் வைத்து விடுவோம். அங்கே நடந்த இனப்படுகொலைகளில் மேற்கத்திய நாடுகளின் பங்களிப்பு எவ்வளவு? எதிரி இனத்தை படுகொலை செய்வதற்கு கருவியாக பயன்படுத்தப் பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப் பட்டது. இந்தக் கருவிகளை ஏவிய குற்றவாளிகள் நீதிபதிகளாக வீற்றிருக்கின்றனர். இந்த உண்மை எத்தனை பேருக்குத் தெரியும்?

மேற்கத்திய நாடுகளின் தலையீடானது, யூகோஸ்லேவியாவில் இருந்து புதிய குடியரசுகள் பிரிந்த பின்னர் ஆரம்பிக்கவில்லை. டிட்டோவின் சோஷலிச யூகோஸ்லேவியா, மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளுடன் தொடர்பை பேணி வந்தது. இரண்டாம் உலகப்போருக்கு பின்னர், டிட்டோ, ஸ்டாலினுடன் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து யூகோஸ்லேவியா "COMINTERN" அமைப்பில் இருந்து விலகியது. இதனால் சோவியத் யூனியனின் கடன்கள் வருவது நின்று போனது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, அமெரிக்கா IMF கடன்களை பெற்றுக் கொடுத்தது.

ஒரு கம்யூனிச கட்சி ஆண்ட நாட்டில், சோஷலிசப் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஐ.எம்.எப். உதவியது என்பதை நம்புவது கஷ்டமாக இருக்கும். ஆனால் வரலாற்றில் அந்த அதிசயம் நடந்தது. ஐ.எம்.எப். விதித்த நிபந்தனைகள் இட்டுச் சென்ற பொருளாதார சீர்கேடுகள் கண்ணுக்கு புலனாக பல தசாப்தங்கள் எடுத்தன. டிட்டோவின் மறைவிற்குப் பிறகு, மிலோசொவிச் பதவி ஏற்றதும், குறைபாடுகள் மெல்ல மெல்ல வெளித் தெரிய ஆரம்பித்தன. ஒவ்வொரு இனத்திலும், தீவிரவாதிகள் உருவெடுத்தனர். மொழி அடிப்படையிலான குருந்தேசியவாதிகளின் செல்வாக்கு அதிகரித்தது. மிலோசொவிச் கூட, அமெரிக்காவுடன் தொடர்பில் இருந்த, ஐ.எம்.எப். உத்தரவுகளை வேத வாக்காக ஏற்றுக் கொண்ட ஒருவர் தான்.

தற்போது மீண்டும் பொஸ்னியா வருவோம். சிரபெனிச்ச இனப்படுகொலை பற்றிய பின்னணியை முதலில் ஆராய்வோம். போஸ்னியாவில் செர்பிய, குரோவாசிய, முஸ்லிம் இனத்தவர்கள் பரவலாக எல்லா இடங்களிலும் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கிடையில் எந்தவித இனக்குரோதங்களும் இன்றி ஒற்றுமையாக வாழ்ந்தனர். சிரபெனிச்சா நகரம் மத்திய காலத்தில் இருந்து முஸ்லிம் மக்களை பெரும்பான்மையாக கொண்டது.

டிட்டோ காலத்தில், சிரபெனிச்சா நகரத்திலும் தொழிற்புரட்சி நடந்தது. ஆலைகளில் வேலை செய்வதற்காக, பெருமளவு செர்பிய தொழிலாளர்கள் கிராமங்களில் இருந்து வந்து குடியேறினார்கள். அவர்களுக்கென நவீன அடுக்குமாடி வீடுகளைக் கொண்ட புற நகரங்கள் உருவாகின. இதனால் சிரபெனிச்சா நகரம் விரிவடைந்தாலும், அதற்குள்ளே செர்பிய வட்டாரங்களும் உருவாகின.

யுத்தம் வெடித்தவுடன், செர்பிய பகுதிகள் யாவும், செர்பிய படைகளின் கட்டுப்பாட்டில் வந்தன. அதே போன்று, முஸ்லிம் பகுதிகள் முஸ்லிம் படைகளினால் கட்டுப்படுத்தப் பட்டன. இரண்டு இராணுவங்களும், மற்ற இனத்தவர் வாழ்ந்த பகுதிகள் மீது ஷெல் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இரண்டு பக்கமும், செர்பிய, முஸ்லிம் பொது மக்கள் பலியாகியுள்ளனர்.

ஆனால், மேற்குலக ஊடகங்கள், நமக்கு அந்த உண்மைகளை கூறவில்லை. "முஸ்லிம் மக்களின் சிரபெனிச்சா நகரை சேர்பியப் படைகள் முற்றுகையிட்டு தாக்கிக் கொண்டிருக்கின்றன. சேர்பியரின் வெறித்தனமான தாக்குதல்களில் அப்பாவி முஸ்லிம் மக்கள் பலியாகிக் கொண்டிருக்கின்றனர்...." இவ்வாறு தான் செய்திகள் வாசிக்கப் பட்டன.

இலங்கையில், வன்னியில் நடந்த இறுதிப்போரில், ஐ.நா. அமைதிப் படை தலையிட்டிருந்தால், தமிழ் இனப்படுகொலை நடந்திருக்காது என்று, இன்றைக்கும் பலர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் பொஸ்னிய யுத்தத்தில் இருந்து எந்தப் பாடத்தையும் படிக்கவில்லை என்பது வெள்ளிடை மலை.

முள்ளிவாய்க்காலில் மட்டுமல்ல, சிரபெனிச்சாவில் கூட இனப்படுகொலை நடக்கப் போகின்றது என்று ஐ.நா.வுக்கு முன்பே தெரிந்திருந்தது. இன்னும் சொன்னால், அது நடக்க வேண்டும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். 

பொஸ்னிய யுத்தம் பற்றிய செய்திகள், மேற்கத்திய நாடுகளில் பெரும் உணர்வலைகளை உருவாக்கியிருந்தது. ஐரோப்பிய ஒன்றியமும், அமெரிக்காவும் சேர்ந்து ஐ.நா. சமாதானப் படைகளை அனுப்பி வைத்தன. சிரபெனிச்சா நகரம் பாதுகாப்பு வலையமாக பிரகடனப் படுத்தப் பட்டது. நெதர்லாந்தை சேர்ந்த அமைதிப் படையினர் பாதுகாப்புப் பொறுப்புகளை ஏற்றிருந்தனர். ஐ.நா. அமைதிப் படை வந்து விட்டதால், இனி எந்தப் பிரச்சினையும் இல்லை என்று தான் முஸ்லிம்களும் நம்பினார்கள். ஐ.நா. ஆணையின் பிரகாரம், முஸ்லிம் படைகள் ஆயுதங்களை ஒப்படைத்திருந்தன. அதற்குப் பிறகு அந்தப் பிரளயம் அரங்கேறியது.

பொஸ்னிய போர் ஒரு இனப்படுகொலையுடன் முடிய வேண்டும் என்பது, மேற்குலகின் விருப்பம் போலும். தருணம் பார்த்து பாதுகாப்பு வலையங்கள் திறந்து விடப்பட்டன. சிரபெனிச்சா நகரை கைப்பற்றுவதற்காக, சேர்பியப் படைகள் தாக்குதல் தொடுத்த நேரம்.... ஐ.நா. அமைதிப்படை ஒன்றுமே செய்யவில்லை. ஐ.நா. டச்பட் படையணிக்கு பொறுப்பான Thomas Karremans சேர்பியப் படைகளிடம் சரணடைந்தார். 

தமது சொந்தப் படையினரைக் காப்பாற்றக் கூட, ஐ.நா. தயாராக இருக்கவில்லை. மேலிடத்து உத்தரவு காரணமாக, விமானத் தாக்குதல்கள் நடைபெறவில்லை. பிறகென்ன? மிலாடிச் தலைமையிலான சேர்பியப் படைகள், தமது விருப்பம் போல நடந்து கொள்ள அனுமதி வழங்கப் பட்டது. நிராயுதபாணிகளான எண்ணாயிரம் முஸ்லிம்களை, சேர்பியப் படைகள் கொன்று குவித்தன. "சிரபெனிச்சா மீது படையெடுக்கும் எண்ணம் மிலாடிச்சுக்கு இருக்கவில்லை." என்று கரமேன்ஸ் ஒரு விசாரணையில் தெரிவித்தார்.

போஸ்னியப் போரில், ஊடகங்கள் எப்போதும் செர்பியர்களை வெறித்தனமான வில்லன்களாகவும், முஸ்லிம்களை ஒடுக்கப் பட்டோராகவும் காட்டி வந்துள்ளன. சிரபெனிச்சா முஸ்லிம் படைகள், அயலில் இருந்த செர்பியக் கிராமங்களை எரித்து தரைமட்டமாக்கிய செய்திகள் எதுவும் சொல்லப்படவில்லை. இனக்குரோதங்கள் உச்சத்தில் இருந்த போரில், பழிவாங்கும் கொலைகள் நடக்கும் என்று "பரலோகத்தில் இருக்கும் தேவர்கள்" கணித்திருப்பார்கள்.

செர்பிய தலைவர்களான மிலாடிச், கராசிச், மிலோசெவிச்; குரோவாசிய தலைவர் துஜ்மான்; முஸ்லிம் தலைவர் இசபெகொவிச், இவர்கள் எல்லோரும் போர்க்குற்றவாளிகள் என்பதில் சந்தேகமில்லை. இவர்களை பொம்மைகள் போல பின்னால் இருந்து ஆட்டுவித்துக் கொண்டிருந்த கரங்கள் யாருடையவை? ஒருவரை ஒருவர் எதிர்த்து போரிட வைக்க நடந்த சூழ்ச்சிகள் எத்தனை? Jaques Monsieur என்ற பெல்ஜிய ஆயுத வியாபாரி, துஜ்மானின் குரோவாசியப் படைகளுக்கும், இசபெகொவிச்சின் முஸ்லிம் படைகளுக்கும் ஆயுத விநியோகம் செய்துள்ளார்.

இதே காலகட்டத்தில் தான், கிழக்கு ஜெர்மனியும் மேற்கு ஜெர்மனியும் இணைந்தன. முன்னாள் சோஷலிச ஜெர்மனியை பொறுப்பேற்ற மேற்கு ஜெர்மனி, அந் நாட்டின் ஆயுதக் களஞ்சியங்களை பொறுப்பேற்றது. அங்கிருந்த ஆயுதங்கள் எல்லாம் வண்டி வண்டியாக குரோவேசியா நோக்கி அனுப்பப் பட்டன.

அந்த நாட்களில், யூகோஸ்லேவிய போரை நிறுத்த முயற்சித்த இராஜதந்திரிகளின் கைகள் கட்டப் பட்டிருந்தன. அன்றைய பெல்ஜிய வெளிவிவகார அமைச்சர் Mark Eyskens, ஜேர்மனிய வெளிவிவகார அமைச்சர் Hans Dietrich Genscher இனால் அடக்கி வைக்கப் பட்டார். "ஜெர்மனி, யூகோஸ்லேவியாவில் போர் நடக்க வேண்டுமென்று விரும்பினால், அந்த ஆசை நிறைவேறும்..." என்று விரக்தியுடன் தெரிவித்தார் Mark Eyskens .

யூகோஸ்லேவியப் போரில் நடந்த இன்னொரு இனப்படுகொலை, சர்வதேசத்தின் கவனத்தைப் பெறவில்லை. "கிராயினா", குரோவாசிய குடியரசில் செர்பியர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசம். குரோவாசிய யுத்தம் முடிவுக்கு வரும் வேளை, குரோவாசியப் படைகள் துஜ்மானின் ஆணையின் பேரில் இனச் சுத்திகரிப்பில் இறங்கின.

ஆயிரக்கணக்கான செர்பிய பொதுமக்களை கொன்று குவித்தனர். அங்கே ஒரு செர்பியரைக் கூட விட்டு வைக்காமல் துரத்தி அடித்தார்கள். அசையும், அசையா சொத்துக்கள் எல்லாவற்றையும் கொள்ளையடித்தார்கள். குரோவாசிய படைகளை நடத்திச் சென்ற Ante Gotovina என்ற தளபதி, பிற்காலத்தில் போர்க்குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். நெதர்லாந்தில், யூகோஸ்லேவியா போர்க்குற்ற நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்ட முக்கியமான குரோவாசியர், அவர் மட்டும் தான்.

Ante Gotovina, பிரான்சின் கூலிப்படையான வெளிநாட்டவர் படையணியை (French Foreign Legion) சேர்ந்த சிப்பாய். அவருடனான பிரெஞ்சு அரசின் தொடர்புகள் யாவும், புலனாய்வுப் பிரிவான DGSE மூலமாக நடைபெற்றன. ஆனால், அன்று குரோவாசியப் படைகளுக்கு தலைமை தாங்கிய இன்னொருவர், அமெரிக்கரான Peter Galbraith என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? இவர் தான் பிற்காலத்தில் குரோவாசியாவுக்கான அமெரிக்க தூதுவராக பதவி வகித்தார்.

இந்த அமெரிக்கர், போர்க்களத்தில் நேரடியாக நின்று கட்டளைகளை பிறப்பித்ததுடன், இனப்படுகொலையை மேற்பார்வை செய்துள்ளார். Peter Galbraith தின் சேவையை பாராட்டி, அவரது நண்பர், அன்றைய துணை ஜனாதிபதி Joe Biden ஈராக்கிற்கு அனுப்பி வைத்தார். ஈராக் குர்திஸ்தானில், அமெரிக்க கம்பனிகளுக்கு எண்ணை வர்த்தக ஒப்பந்தங்கள் கிடைக்குமாறு, பீட்டர் பார்த்துக் கொண்டார்.

இங்கே கூறப்பட்ட உண்மைகளை அறிந்து கொள்வதற்கு எமக்கு ஆர்வமில்லாமல் இருக்கலாம். அடியாட்களுக்கு தண்டனை கொடுக்கப் படுவதை பார்த்து விட்டு, நீதி பிழைத்தது என்று திருப்திப் படலாம். ஆனால், எதிர்காலத்தில் இன்னொரு நாட்டில் இன்னொரு இனப்படுகொலை நடப்பதை எம்மால் தடுக்க முடியாது. முதன்மைக் குற்றவாளிகளை நீதிபதி ஸ்தானத்தில் ஏற்றி வைத்து விட்டு, அடியாட்களை பிடித்து தண்டனை கொடுப்பதால் எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை.

2 comments:

  1. //கருவிகளை ஏவிய குற்றவாளிகள் நீதிபதிகளாக வீற்றிருக்கின்றனர். இந்த உண்மை எத்தனை பேருக்குத் தெரியும்?//
    பல விடயங்களை அறிய தந்துள்ளீர்கள்.
    இலங்கை தமிழருக்கு அவலத்தை ஏற்படுத்த உதவிய புலம்பெயர் தேசியவாதிகள் தான் இனப்படுகொலை பற்றி கதைக்கிறார்கள்.

    ReplyDelete
  2. மிகவும் நல்ல பகிர்வு.

    நன்றி,
    கண்ணன்
    http://www.tamilcomedyworld.com

    ReplyDelete