Wednesday, July 20, 2011

யூதரை சிறை மீட்ட முஸ்லிம் மக்களின் எழுச்சி

பொஸ்னியாவில் நடந்த உண்மைச் சம்பவம் (1819). வரலாற்று உண்மைகளை மறைத்து, மக்களை மூடராக்கும் இனவெறியர்களின் முகமூடியைக் கிழிக்கும் கதை இது.


ஆயிரமாயிரம் ஆண்டுகளாக யூதர்களும், முஸ்லிம்களும் வன்மம் கொண்ட எதிரிகளாக காட்டும் பரப்புரைகள் மலிந்து விட்ட காலமிது. தமிழ் இலக்கிய அறிவுஜீவிகளும், மேலைத்தேய காலனிய ஆக்கிரமிப்பாளர்களின் விஷமப் பிரச்சாரத்தை உண்மையென்று நம்புகின்றனர். ஆனால், கிறிஸ்தவ நாடுகளில் வாழ்ந்த யூதர்கள் அடிக்கடி மதக்கலவரங்களால் பாதிக்கப்பட்டனர். அதற்கு மாறாக, முஸ்லிம் நாடுகளில் யூதர்களுக்கு பாதுகாப்புக் கிடைத்தது. ஸ்பெயின் கிறிஸ்தவ மன்னர்களால் கைப்பற்றப் பட்ட வேளை, மதச்சுத்திகரிப்புக்கு அஞ்சி ஓடிய யூதர்கள் பொஸ்னியாவில் தஞ்சம் அடைந்திருந்தனர். 20 ம் நூற்றாண்டு வரையில், அதாவது நாசிகளின் இனப்படுகொலைக் காலம் வரையில், சாராஜெவோ நகரில் ஸ்பானிய மொழி பேசும் யூத சமூகம் வாழ்ந்து வந்தது.

மாபெரும் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை ஆண்ட "ஓட்டோமான் துருக்கியர்கள்", இன்றைய பொஸ்னியா வரை தமது ஆட்சிப்பரப்பை விஸ்தரித்திருந்தார்கள். செர்போ- குரோவாசிய மொழி பேசும் மக்கள் பலர் இஸ்லாமிய மதத்தை தழுவியிருந்தனர். ஓட்டோமான் சாம்ராஜ்யத்திற்குட்பட்ட, பொஸ்னிய மாநிலத்தில் அவர்களின் விகிதாசாரம் அரைவாசிக்கும் அதிகமாகவிருந்தது. ஓட்டோமான் இஸ்லாமிய சாம்ராஜ்யம், அன்றைய ஐரோப்பாக் கண்டத்தில் வளர்ச்சியடைந்த நாகரீகத்தைக் கொண்டிருந்தது. இதன் காரணமாகவும், அரச பதவிகளுக்காகவும் பலர் முஸ்லிம்களாக மாறியிருந்தனர். இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், பல உள்ளூர் மக்கள் கிறிஸ்தவர்களாக மாறியதை இங்கே ஒப்பிடலாம்.

19 ம் நூற்றாண்டு பொஸ்னியாவில், யூதர்களும், முஸ்லிம்களும் சமாதானமாக வாழ்ந்து வந்தனர். ஆனால், இஸ்லாமிய மதத்திற்கு மாறிய யூத இளைஞன் ஒருவன், மதக்கலவரத்திற்கு காரணகர்த்தா ஆகினான். பெரும்பாலும், புதிதாக மதம் மாறியவர்கள், தமது விசுவாசத்தைக் காட்டுவதற்காக மதத் தீவிரவாதிகளாக நடந்து கொள்வார்கள். Travnik என்ற நகரில், Moses Chavijo என்ற யூதன் இஸ்லாமிய மதத்திற்கு மாறியிருந்தான். டெர்விஷ் அஹ்மத் என்று தனது பெயரையும் மாற்றிக் கொண்டு, முஸ்லிம்களை யூதர்களுக்கு எதிராக தூண்டி விட்டான். யூத எதிர்ப்பு மட்டுமல்ல, இஸ்லாமிய அடிப்படைவாதத்தையும் பிரச்சாரம் செய்த அஹ்மத்தின் பின்னால், சில முஸ்லிம் இளைஞர்கள் அணி திரண்டார்கள். இந்த தீவிரவாதக் கும்பல், யூதர்களை இலக்கு வைத்து தாக்கி வந்தது. யூதர்களும் அதற்குப் பதிலடி கொடுப்பதற்காக, தீவிரவாத தலைவனான அஹ்மத்தை பிடித்து கொலை செய்து விட்டார்கள். சாராஜெவோ நகர் யூதர்களின் தலைமை மதகுருவான Moshe Danon உம் அந்தப் படுகொலையில் சம்பந்தப் பட்டிருந்தார்.

தலைவனை இழந்ததால் ஆத்திரமுற்ற முஸ்லிம் தீவிரவாத கும்பலை சேர்ந்தோர், துருக்கி ஆளுநரிடம் இது குறித்து முறையிட்டனர். ஊழல்வாதியான ஆளுநரும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பக்கம் சாய்ந்து விட்டார். யூதர்கள் ஐந்து இலட்சம் தங்கக் காசுகளை, படுகொலைக்கான குற்றப்பணமாக கட்ட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார். குற்றப் பணம் செலுத்தப் படும் வரையில், யூத மதகுருவும், பத்து யூத பிரமுகர்களும் பணயக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். மூன்று நாட்களுக்குள் பணம் வராவிட்டால், யூத பணயக்கைதிகள் கொலை செய்யப் படுவார்கள் என்று எச்சரிக்கை விடப்பட்டது. மரண தண்டனை நிறைவேற்றப் படுவதற்கு முதல் நாள், யூதர்கள் முஸ்லிம் சகோதரர்களிடம் உதவி கோரினார்கள். சாராஜெவோ நகர முஸ்லிம் மக்களுக்கும், அந்தத் தீர்ப்பு அநீதியாகப் பட்டது. ஊழல்மய ஆளுனரை முஸ்லிம்களும் வெறுத்தார்கள். மேலும், தீவிரவாதக் கும்பல்களின் வன்முறைகளையும் அங்கீகரிக்கவில்லை.

அடுத்து நடந்த சம்பவங்கள், மக்கள் சக்தியின் மகத்துவத்தை பறைசாற்றியது. ஆயுதமேந்திய மூவாயிரம் முஸ்லிம்கள், ஆளுநர் மாளிகையை சுற்றி வளைத்தனர். பணயக்கைதிகளாக வைக்கப் பட்டிருக்கும் யூதர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கோரினார்கள். முஸ்லிம் மக்களின் எழுச்சிக்கு ஆளுநரும், மதத் தீவிரவாதிகளும் அடிபணிந்தார்கள். பிடித்து வைத்திருந்த யூதர்களை உடனடியாக விடுவித்தார்கள். தன்னை விடுவித்த முஸ்லிம் சகோதரர்களுக்கு நன்றிக்கடன் செலுத்துவதற்காக, யூத மதகுரு மோஷே டானன் மெக்காவுக்கு புனிதப் பயணம் செல்ல விரும்பினார். ஆனால், அவரது குறிக்கோள் நிறைவேறும் முன்னரே மண்ணை விட்டு மறைந்து விட்டார். யூத- முஸ்லிம் நல்லுறவுக்காக இதயசுத்தியுடன் வாழ்ந்து மறைந்த மகானின் கல்லறை, இரு மதத்தவரும் வழிபடும் புனிதஸ்தலமாகியது. 1940 ல் நாஜிகளின் படையெடுப்பு அந்த வழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது.

19 ம் நூற்றாண்டு பொஸ்னியாவில் நடந்த கதை, 21 ம் நூற்றாண்டின் இன/மதப் பூசல்களுக்கான தீர்வை சுட்டிக் காட்டுகின்றது. இன/மத/மொழித் தீவிரவாதத்தை வளர்க்கும் நபர்கள், அந்தந்த சமூகத்தினரால் ஒதுக்கப் பட வேண்டும். சிறுபான்மையினரின் உரிமைகளை பெற்றுக் கொள்வதற்கு, பெரும்பான்மை இனத்தை/மதத்தை சேர்ந்தவர்களின் ஆதரவு அவசியம். இனங்களுக்கு/மதங்களுக்கு இடையிலான சகோதரத்துவம் வலுவடைந்தால், எதேச்சாதிகார ஆட்சியாளரின் அதிகாரம் செல்லாக்காசாகி விடும். ஈழத்தமிழரின் விடுதலைக்கு அவசியமான பாடத்தையும், இந்தக் கதையில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். வரலாற்றில் இருந்து எதையும் கற்றுக் கொள்ளாதவர்கள், தவறை திருப்பிச் செய்யும் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகின்றனர்.


உசாத்துணை:
1.Die Sephardim in Bosnien(Moritz Levy)(ஜெர்மன் மொழி)
2.Sarajevo Rose: A Balkan Jewish Notebook
3.Moshe Danon

4 comments:

  1. அறியத் தந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  2. பொதுவாய் இசுலாமியரிடத்து யூத வெறுப்பை எளிதாய் காண முடியும், ஆனால் நம்பமுடியாத அளவுக்கு ஆச்சரியகரமான தகவல் நீங்கள் பகிர்ந்து கொண்டது. நல்ல பகிர்வு.

    ReplyDelete
  3. பொதுவாய் இசுலாமியரிடத்து யூத வெறுப்பை எளிதாய் காண முடியும், ஆனால் நம்பமுடியாத அளவுக்கு ஆச்சரியகரமான தகவல் நீங்கள் பகிர்ந்து கொண்டது. நல்ல பகிர்வு.

    ReplyDelete
  4. ((பொதுவாய் இசுலாமியரிடத்து யூத வெறுப்பை எளிதாய் காண முடியும்))
    முஸ்லிம்களிடத்தில் யூத வெறுப்பை காண முடியும் என்பது சற்று திருத்த வேண்டிய கருத்து என்றே நான் கருதுகின்றேன். முஸ்லிம்கள் அவர்களின் பாமரர்கள் தவிர படித்தவர்கள், அறிஞர்கள், போராளிகள் அனைவரும் ஸியோனிசத்தையும் ஸியோனிசவாதிகளையும் தான் வெறுக்கின்றனர். அதற்கு நிறைய ஆதாரங்களுண்டு.மாறாக யூதர்களுடன் சகவாழ்வு வாழ, அவர்களின் பெண்களை அவர்களது மதத்தில் இருக்கும் நிலையிலேயே திருமணம் செய்ய, அவர்கள் அறுத்த ஆடு மாடுகளை உண்ண தம் மார்க்கத்தில் அனுமதி கொண்ட முஸ்லிம்கள் வெறுப்பதெல்லாம் உலக மனித குலத்துக்கே அச்சுறுத்தலான ஸியோனிஸத்தை தான்.........

    ReplyDelete