Saturday, June 25, 2011

பின்லாந்தின் சோஷலிசப் புரட்சி - ஒரு மீளாய்வு

சோஷலிச பின்லாந்தின் கொடி

நமது கால இளைஞர்கள், "நோக்கியா" செல்பேசியின் தாயகமான பின்லாந்து குறித்து, அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஐரோப்பிய கண்டத்தின் பெரிய நாடுகளில் ஒன்றான பின்லாந்து, இன்று அரசியல் குழப்பங்களற்ற அமைதிப் பூங்காவாக காட்சியளிக்கின்றது. இந்த வருடம், உலகில் சிறந்த வாழ்க்கை வசதிகளைக் கொண்ட முதலாவது நாடாக தெரிவு செய்யப் பட்டதில் அந் நாட்டினருக்கு பெருமை தான். சுமார் என்பது வருடங்களுக்கு முன்னர், பின்லாந்து மிகவும் வறிய நாடாக இருந்தது. ரஷ்யாவை பின்பற்றி சோஷலிசப் புரட்சி வெடித்ததும், அதன் விளைவாக நடந்த உள்நாட்டுப் போரில் முப்பதாயிரம் பேர் கொல்லப்பட்ட வரலாறுகள் இன்று பெரிதும் மறைக்கப் பட்டு விட்டன.

ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் நடந்த இது போன்ற புரட்சிகள் பல வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் வீசப் பட்டு விட்டன. கிடைத்தற்கரிய ஆவணங்கள் பல, ஆம்ஸ்டர்டாம் நகரில் உள்ள "சர்வதேச சமூக வரலாற்று ஆய்வு மையத்தில்" (International Institute of Social History) பேணிப் பாதுகாக்கப் பட்டு வருகின்றன. அந்த நிலையத்தின் நூலகத்தில் சில நாட்களை செலவிட்டதன் பயனாக, பல தகவல்களை அறிய முடிந்தது. இந்தக் கட்டுரையில் பின்லாந்து பற்றிய சில குறிப்புகளை பகிர்ந்து கொள்கிறேன்.

பின்லாந்து ஐரோப்பாக் கண்டத்தில் தனிச் சிறப்பு மிக்க நாடு. பின்லாந்து நாட்டு மக்கள் பேசும் Suomen kieli மொழியடிப்படையில் அமைந்த உத்தியோகபூர்வ பெயர்: சுஒமி(Suomi). எமக்கு நன்கு பரிச்சயமான ஜெர்மானிய, அல்லது லத்தீன், அல்லது ஸ்லாவிய மொழிக் குடும்பத்தை சேராத தனித்துவமான மொழி அது. எஸ்தோனியா, லாட்வியா நாடுகளில் பேசப்படும் மொழிகளுக்கு நெருக்கமானது.

சுவீடன், நோர்வே ஆகிய நாடுகளின் வட பகுதியில் வாழும் "சாமி" (Sami) இன மக்கள், மற்றும் வட-மேற்கு ரஷ்யாவில் வாழும் கரேலிய (karelia) இன மக்கள் பேசும் மொழிகளுடன் தொடர்புடையது. பின்லாந்து என்பது, சுவீடிஷ்காரர்கள் வைத்த பெயராக இருக்கலாம். நீண்ட காலமாக பின்லாந்து அகண்ட சுவீடிய சாம்ராஜ்யத்தின் பகுதியாக இருந்தது. பிற்காலத்தில், சுவீடனுடன் போரிட்டுக் கொண்டிருந்த ரஷ்ய சாம்ராஜ்யத்தினால் உள்வாங்கப் பட்டது. 1918 ல் சுதந்திர நாடாகும் வரையில், ரஷ்யாவின் பகுதியாகவிருந்தது.

சார் மன்னனின் ஆட்சிக் காலத்திலேயே, பின்லாந்து ஓரளவு சுயாட்சி அதிகாரத்தை பெற்றிருந்தது. சார் காலத்தில், பின்லாந்து தேசியவாதிகள் ரஷ்ய மொழித் திணிப்பை எதிர்த்து கலகம் செய்தனர். ரஷ்யாவில் லெனின் தலைமையில் இடம்பெற்ற போல்ஷெவிக் புரட்சியின் பின்னர், பின்லாந்துக்கு சுதந்திரம் வழங்கப் பட்டது. முன்னர் சார் மன்னனால் ஆளப்பட்ட ரஷ்யப் பகுதிகள், புதிய சோவியத் அரசுக்குள் உள்வாங்கப் பட்டன.

ஆயினும், போல்ஷெவிக்குகள் எதற்காக பின்லாந்தை சுதந்திர நாடாக்கினார்கள் என்ற கேள்வி எழலாம். அன்றைய புவிசார் அரசியல் காரணிகள் முக்கியமாக இருந்துள்ளன. முதலில், சுவிட்சர்லாந்தில் தஞ்சம் கோரியிருந்த லெனின் குழுவினர், ஜெர்மனியின் உதவியுடன் பின்லாந்து வரை ரயிலில் வந்தனர். பின்லாந்து எல்லையில் இருந்து சுமார் 200 கி.மி. தூரத்தில் சென்.பீட்டர்ஸ்பேர்க் நகரம் இருப்பது குறிப்பிடத் தக்கது. லெனின் குழுவினர் பத்திரமாக ரஷ்யா போய்ச் சேருவதற்கு உதவிய பின்லாந்துக்கு நன்றிக்கடனாக, அதற்கு சுதந்திரம் வழங்கி இருக்கலாம். மேலும், ஜெர்மனியின் வற்புறுத்தலும் பின்லாந்து சுதந்திரத்தை விரைவு படுத்தியது எனலாம்.

"தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை" குறித்து லெனின் எழுதிய கோட்பாடுகளும், பின்லாந்து தேசியவாதத்தை ஏற்றுக் கொள்ள ஏதுவாக அமைந்து விட்டது. இன்று "தமிழ்த் தேசியவாதிகள்" அதைக் காட்டித் தான், இடதுசாரி சக்திகளை தமக்குப் பின்னால் வருமாறு அழைக்கின்றனர். "தேசியவாதத்தை ஏற்றுக் கொள்ளாதவன் கம்யூனிஸ்ட் அல்ல," என்று புது வியாக்கியானங்களை கொடுக்கின்றனர். "பிரிந்து போகும் உரிமை கொண்ட சுயநிர்ணயம்" என்ற கோட்பாடு, அந்த தேசங்களின் பாட்டாளி வர்க்கம் சமதர்ம புரட்சிக்கு இட்டுச் செல்லும் என்ற நோக்கில், லெனினால் எழுதப்பட்டது.

வலதுசாரி தேசியவாத சக்திகளே அந்த உரிமையை பயன்படுத்திக் கொள்கின்றன என்பதும், அதிகாரத்திற்கு வந்ததும் பாட்டாளிவர்க்க புரட்சியாளர்களை ஒடுக்குவார்கள் என்பதும், லெனின் கண்கூடாக கண்ட உண்மைகளாக உள்ளன. இதனால், பிற்காலத்தில் ஸ்டாலின் கொண்டு வந்த தேசிய சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு, சோவியத் ஒன்றியத்திற்குள் தீர்வு எட்டப்படுவதை வலியுறுத்தியது. அது வேறு விடயம். இப்போது பின்லாந்தில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தின என்று விரிவாக ஆராய்வோம்.

பின்லாந்தில் "சுதந்திரப் போராட்டம்" நடந்ததாகவும், அந்தக் காலத்தில் வடக்கே உள்ள வாசா (Vaasa) நகரம் தற்காலிக தலைநகரமாக திகழ்ந்ததாகவும், முதலாளித்துவ சரித்திர ஆசிரியர்கள் எழுதுகின்றனர். அநேகமாக, பின்லாந்து பாட நூல்களிலும், வெளிநாட்டவர்களுக்கான அறிமுக கையேடுகளிலும் அவ்வாறே குறிப்பிடப் படுகின்றது. ரஷ்ய மேலாதிக்கத்தை எதிர்த்து சுதந்திரம் பெற்றதைப் போல காட்டுவதற்காக, பின்லாந்தில் நிலை கொண்டிருந்த ரஷ்ய இராணுவ வீரர்களின் "ஆயுதக் களைவு பிரச்சினை" எடுத்துக் காட்டப் படுகின்றது. உண்மையில் சுதந்திரப் பிரகடனத்தை அடுத்துக் கிளம்பிய சோஷலிசப் புரட்சியை சிறுமைப் படுத்தவே அவ்வாறு பரப்புரை செய்யப் பட்டது.

ரஷ்ய சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாகவிருந்த பின்லாந்தில், ரஷ்யப் படைகள் நிலை கொண்டிருந்ததில் வியப்பில்லை. அதே நேரம், ரஷ்யாவில் போல்ஷெவிக் புரட்சியின் பின்னர், ரஷ்ய இராணுவத்தினுள் பிளவு ஏற்பட்டதையும் மறுக்க முடியாது. அக்டோபர் புரட்சியின் பின்னர் ரஷ்யாவில் உள்நாட்டு யுத்தம் வெடித்ததும், புரட்சிக்கு ஆதரவான செம்படைகளும், மன்னருக்கு விசுவாசமான வெண் படைகளும் மோதிக் கொண்டன. இதே போன்றதொரு பிரிவு, பின்லாந்திலும் தோன்றியது. பழைமைவாத, நிலப்பிரபுத்துவ ஆதரவு வெண்படை அதிகாரத்தை கைப்பற்றத் துடித்தது. பின்லாந்தின் பாட்டாளி வர்க்கத்தை பிரதிநிதித்துவப் படுத்திய சமூக- ஜனநாயகக் கட்சி அதற்கு சவாலாக விளங்கியது. அவர்களைப் பொறுத்த வரையில், சோஷலிசப் புரட்சிக்கு ஏற்ற தருணம் அது.

"பின்லாந்தில் ஒரு போதும் நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்பு இருக்கவில்லை. ஆகவே ரஷ்யா, பிற ஐரோப்பிய நாடுகளில் இருந்ததைப் போன்று புரட்சிக்கு ஏதுவான சூழ்நிலை இருக்கவில்லை." பூர்ஷுவா சரித்திரவியலாளர்களின் இன்னொரு திரிபுபடுத்தல் இது. அந்தக் கூற்றில் அரைவாசி மட்டுமே உண்மை. பின்லாந்தின் பெரும்பகுதி நாட்டுப்புறங்களில் சிறு விவசாயிகள், தமது ஜீவனோபாயத்தை தாமே தேடிக் கொள்ளும் சுதந்திரம் பெற்றிருந்தனர். அவர்கள் எந்தவொரு நிலப்பிரபுவுக்கும் திறை செலுத்தவில்லை. இன்னும் வடக்கே போனால், பழங்குடியினரின் "லாப் லான்ட்"(Lapland) பிரதேசம் வரும். (அங்கே தான் கிறிஸ்மஸ் தாத்தா வாழ்வதாக ஐதீகம்!)

லாப் லான்ட் பழங்குடியினர் இன்றைக்கும் மான் பண்ணைப் பொருளாதாரத்தை நம்பி வாழ்கின்றனர். சுய பொருளாதாரத்தை நம்பி வாழும் மக்கள் மத்தியில் பின்லாந்து தேசியவாதிகள் ஆதரவுத் தளத்தை உருவாக்கிக் கொண்டனர். ஆனால், அன்று மட்டுமல்ல இன்றைக்கும் அந்தப் பிரதேசங்களுக்கும், தொழிற்துறை வளர்ச்சி கண்ட தென் பின்லாந்துக்கும் இடையில் வித்தியாசம் காணப்படுகின்றது. பின்லாந்தின் தெற்குப் பகுதியில் தான் அதிகளவு நகரமயமாக்கல் இடம்பெற்றுள்ளது. நகரங்களின் தோற்றத்திற்கு வித்திட்ட தொழிற்புரட்சியின் காரணமாக, பெருந்திரள் பாட்டாளி மக்கள் தென் பின்லாந்தில் வசிக்கின்றனர். மத்திய காலத்தில், சுவீடிஷ் நிலப்பிரபுக்களும் தெற்குப் பகுதிகளில் தான் ஆதிக்கம் செலுத்தினார்கள். அதனால், பெருமளவு விவசாயக் கூலிகளும் அங்கே காணப்பட்டனர். அத்தகைய சமூகத்தில், சமதர்மக் கொள்கைகள் பரவியதில் வியப்பில்லை.

பின்லாந்தின் சுதந்திரத்திற்கு முன்னரே, பாராளுமன்றம் அமைக்கப் பட்டு விட்டது. தொழிலாளர்களின் ஆதரவைப் பெற்ற சமூக- ஜனநாயகக் கட்சி அறுதிப் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றிருந்தது. உலகிலேயே முதல் தடவையாக, ஒரு சோஷலிசக் கட்சி அதிகளவு ஓட்டுகளைப் பெற்றது பின்லாந்தில் தான். நிலைமை அவ்வாறு இருக்கையில், "ரஷ்ய போல்ஷெவிக்குகளின் சூழ்ச்சியினால் பின்லாந்தின் செம் புரட்சி இடம்பெற்றதாக," என்று வரலாற்றைப் புரட்டுகின்றனர். உண்மையில், பின்லாந்துப் பாட்டாளி வர்க்க புரட்சிக்கு தலைமையேற்ற சமூக- ஜனநாயகக் கட்சி லெனினைப் பின்பற்றவில்லை. அந்தக் கட்சியினர் மார்க்சிய நெறிகளை நம்பினார்கள். அதே நேரம், லெனினிசம் தவறான வழி முறைகளைக் கொண்டது எனக் கருதினார்கள். லெனின் முன் மொழிந்த "பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்" என்ற கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளவில்லை.

பின்லாந்து சோஷலிஸ்டுகளின் வருடாந்த மகாநாடு ஒன்றில் கலந்து கொண்ட ஸ்டாலின், புரட்சிக்கு தயார் படுத்துமாறும், அதற்கு ரஷ்ய போல்ஷெவிக்குகளின் ஆதரவு கிடைக்கும் என்றும், உறுதிமொழி வழங்கினார். ஆயினும், பெரும்பான்மை பின்லாந்து சோஷலிஸ்டுகள், தேசியவாத அரசியலையும், பாராளுமன்ற ஜனநாயகத்தையும் விரும்பினார்கள். "பின்லாந்துக்காரர்கள் புரட்சிக்கு தகுதியற்ற மிதவாதிகள்" என்று லெனின் சாடினார். உண்மையில், சோஷலிஸ்டுகள் அதிகாரத்தை கைப்பற்றும் நேரத்தில், பின்லாந்துக்கு சுதந்திரம் வழங்கவே போல்ஷெவிக்குகள் விரும்பினார்கள்.

"பின்லாந்தின் பிரிவினையை ஏற்றுக் கொள்ளாதவர்கள் (ரஷ்ய) பேரினவாதிகள்...." (V.I.Lenin, Speech on the National Question) ரஷ்ய தரப்பு சலசலப்புகளை மீறித் தான் லெனின் பின்லாந்துக்கு சுதந்திரம் கொடுக்க முன்வந்தார். சுவீடனிடமிருந்து நோர்வே பிரிந்து சென்றதை உதாரணமாகக் காட்டினார். பின்னிஷ் தேசியவாதிகள் பூரண சுதந்திரம் பெறுவதில் ஆர்வமாக இருந்தனர். அந்த விடயத்தில் பின்னிஷ் சோஷலிஸ்டுகளும் உடன்பட்டனர். ஆனால், சுதந்திரத்தின் பின்னர் தேசியவாதிகள் தம்மை அழித்தொழிக்கத் துணிவார்கள் என்பதை சோஷலிஸ்டுகள் எதிர்பார்க்கவில்லை. வேலை நிறுத்தப் போராட்டம் ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரு தொழிலாளர்கள் மடிந்தனர். அந்த சம்பவம் புரட்சிக்கு வித்திட்டது எனலாம்.

சோஷலிஸ்டுகள், "தொழிலாளர் பாதுகாப்புப் படைகளை" உருவாக்கத் தொடங்கினார்கள். மறு பக்கத்தில் தேசியவாதிகளும் ஆயுதக் குழுக்களை அமைத்துக் கொண்டனர். பின்னிஷ் தேசியவாதிகளுக்கு ஜெர்மனியின் ஆதரவு கிட்டியது. ஜேர்மனிய, சுவீடிஷ் வீரர்கள், பின்னிஷ் தேசியவாத வெண் படையில் முக்கிய பங்கு வகித்தனர். அவர்களின் தளபதியான மன்னேர்ஹைம் சார் மன்னனின் இராணுவத்தில் பணியாற்றியவர். ஜெர்மனியர்களால் பயிற்றுவிக்கப் பட்டவர். இன்றுள்ள பின்லாந்தின் "ஜனநாயக அரசு" கூட, அவர் ஒரு ஒப்பற்ற படைத் தளபதி என்று, மன்னேர்ஹைம் புகழ் பாடுகின்றது. ஆனால், மன்னேர்ஹைம் தலைமை தாங்கிய வெண் படையினர் இழைத்த போர்க்குற்றங்கள் குறித்து மௌனம் சாதிக்கின்றது.

சோஷலிஸ்டுகளின் கட்டுப்பாட்டில்
இருந்த பின்லாந்தின் பகுதிகள்
1918 ஜனவரி மாதத்தில் ஆரம்பித்த போர், பின்லாந்து மக்கள் மத்தியில் பாரிய பிளவை ஏற்படுத்தியது. ஒரே இனத்தை சேர்ந்தவர்கள், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள், கொள்கை அடிப்படையில் பிரிந்து நின்றனர். ஒருவரை ஒருவர் விரோதிகளாக கருதி கொன்று குவித்தனர். வெளியில் இருந்து பார்ப்போருக்கு அப்படித் தான் தெரியும். ஆனால் அது ஒரு வர்க்கப் போர். வெவ்வேறு இனங்களை சேர்ந்தோர், தாம் சார்ந்த வர்க்கத்திற்கு ஆதரவளித்தனர். உதாரணத்திற்கு, பின்னிஷ் சோஷலிச செம்படையுடன் சேர்ந்து ரஷ்ய தொண்டர்கள் போரிட்டனர். அதே போல, பின்னிஷ் தேசியவாத வெண் படையில் ஜெர்மன், சுவீடிஷ் இனத்தவர்கள் சேர்ந்திருந்தனர்.

சனத்தொகை அடர்த்தியுள்ள, பெரு நகரங்களைக் கொண்ட பின்லாந்தின் தெற்குப் பகுதி சோஷலிஸ்டுகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. "பின்லாந்து சோஷலிசக் குடியரசின்" தலைநகராக ஹெல்சிங்கி இருந்தது. சனத்தொகை குறைந்த பின்லாந்தின் வட- மத்திய பகுதி தேசியவாதப் படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. "பின்லாந்து மன்னராட்சியின்" தலைநகராக வாசா இருந்தது.

ஆரம்பத்தில் சோஷலிஸ்டுகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு ரஷ்யாவில் இருந்து ஆயுத விநியோகம் நடந்து கொண்டிருந்தது. இன்னமும் வாபஸ் பெறப்படாத ரஷ்ய படைகளும் உதவின. ஆயினும், ஏற்கனவே ஜெர்மனியுடன் செய்து கொண்ட சமாதான ஒப்பந்தத்திற்கு மதிப்பளித்து ரஷ்ய ஆதரவு விலத்திக் கொள்ளப் பட்டது. பின்லாந்தில் செல்வாக்கு செலுத்த, இது தக்க தருணம் என்று ஜெர்மனி கருதியது. வெண் படையின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்து, ஜெர்மன் படைகள் அனுப்பி வைக்கப் பட்டன.

பின்லாந்து சோஷலிச நாடானால், சுவீடிஷ் சோஷலிச இயக்கத்தையும் புரட்சிக்கு தூண்டி விடும் என்று பயந்த சுவீடனும், தொண்டர் படை அனுப்பியது. வெளிநாட்டு உதவிகள் கிடைக்கப் பெற்ற தேசியவாதப் படைகள், அனைத்து முனைகளிலும் முன்னேறிச் சென்றன. குறிப்பாக பின்லாந்தின் தெற்குக் கரையோரம், ஜெர்மன் படைகள் நேரடியாக வந்திறங்கியமை, சோஷலிச செம்படைக்கு பேரிடியாக அமைந்து விட்டது. அதுவே பின்லாந்தின் சோஷலிசப் புரட்சியின் தோல்விக்கு முக்கிய காரணம். சுமார் மூன்று மாத காலம் நிலைத்து நின்ற "பின்லாந்து சோஷலிசக் குடியரசு" முடிவுக்கு வந்தது.

மூன்று மாத போரில், இரண்டு தரப்பிலும் குறைந்தது முப்பதாயிரம் பேர் கொல்லப் பட்டனர். செம்படையினர் பக்கமே அதிகளவு உயிர்ச் சேதம், பொருட்சேதம் ஏற்பட்டது. பெருமளவு செம்படை வீரர்கள், இராணுவ பயிற்சி பெற்ற தொழில் முறை வீரர்கள் அல்ல. அவர்கள் ஆயுதமேந்திய சாதாரண மக்களாவர். செம்படையின் தோல்விக்கு அதுவும் ஒரு காரணம். சோஷலிச புரட்சிக்கு தலைமை தாங்கியவர்களும், செம்படையின் முக்கிய உறுப்பினர்களும், சோவியத் யூனியனுக்கு தப்பியோடி விட்டார்கள். கீழ்நிலைப் போராளிகளும், ஆதரவாளர்களும் அகப்பட்டுக் கொண்டனர். நூற்றுக் கணக்கான சரணடைந்த செம்படையினர், நிராயுதபாணிகளாக சுட்டுக் கொல்லப்பட்டனர். ஓராயிரத்திற்கும் குறையாத ரஷ்ய தொண்டர்களும் நீதிக்கு மாறாக படுகொலை செய்யப்பட்டனர்.

போர் நடந்த காலத்தில், செம்படையினரும் "நீதிக்கு புறம்பான கொலைகளில்" ஈடுபட்டதாக ஆவணப் படுத்தப் பட்டுள்ளது. நிலவுடமையாளர்கள்,முதலாளிகள்,அரசு அதிகாரிகள், சில மதகுருக்கள் போன்றோரே செம்படையினரால் "மரண தண்டனை" விதிக்கப்பட்டனர். ஆனால், தேசியவாதப் படையினரோ, சோஷலிசக் கட்சி உறுப்பினர்கள், அனுதாபிகள் எல்லோருக்கும் "மரண தண்டனை" விதித்தார்கள். அவர்கள் மீது "தேசத் துரோக" குற்றச்சாட்டு சுமத்தியே தண்டனை நிறைவேற்றப் பட்டது. சோஷலிசத்திற்கு ஆதரவானோர் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்ற விபரம், இன்று வரை கணக்கெடுக்கப் படவில்லை. குறைந்தது பத்தாயிரம் பேர் படுகொலை செய்யப் பட்டிருக்கலாம்.
சரணடைந்த செம்படைக் கைதிகள் சுட்டுக் கொல்லப் படுகின்றனர்.
சோஷலிசப் புரட்சிக்கு ஆதரவளித்த மக்கள் அனைவரும் தடுப்பு முகாம்களுக்குள் அடைக்கப் பட்டனர். பல வருடங்களாக அவர்கள் தடுப்பு முகாம்களுக்குள் அடைபட்டுக் கிடந்தனர். முகாம்களுக்கு உள்ளேயும் கொலைகள் நடந்தன. இதை விட, உணவுப் பற்றாக்குறை காரணமாக பட்டினி கிடந்தது மடிந்தோர் ஆயிரம். சுகாதார வசதி இல்லாததால் தொற்று நோய்களும் பரவின. மொத்தம் பத்தாயிரம் பேராவது தடுப்பு முகாம்களில் இறந்திருப்பார்கள்.

ஹெல்சிங்கி நகருக்கு அண்மையில் உள்ள Suomenlinna தீவு, ஒரு காலத்தில் கொலைகள் மலிந்த தடுப்பு முகாமாக செயற்பட்டது. பின்லாந்து அரசு, தனது கடந்த கால போர்க்குற்றங்களை மறைப்பதற்காக, இன்று அந்த தீவை சுற்றுலாத்தலமாக்கியுள்ளது. பின்லாந்தின் தோற்றுப் போன சோஷலிசப் புரட்சியும், உள்நாட்டுப் போரும், மக்கள் மத்தியில் ஆறாத ரணங்களை ஏற்படுத்தி விட்டது. அண்மைக் காலம் வரையில், இடதுசாரி பின்னிஷ் மக்களும், வலதுசாரி பின்னிஷ் மக்களும், குரோதத்துடன் வாழ்ந்து வந்தனர். ஒருவர் மற்றவரைக் கண்டால் வெறுக்குமளவிற்கு, அவர்கள் மனதில் வன்மம் குடி கொண்டிருந்தது.

பின்லாந்து சோஷலிசப் புரட்சியின் தோல்வியானது, இடதுசாரிகள் மத்தியிலும் பிளவை ஏற்படுத்தியது. மிதவாத சமூக - ஜனநாயகவாதிகள் புதிய அரசுடன் ஒத்துழைத்தனர். அதற்கு மாறாக புரட்சியை தொடர விரும்பியவர்கள், "பின்லாந்து கம்யூனிஸ்ட் கட்சி"யை ஸ்தாபித்தனர். அவர்கள் எல்லோரும் சோவியத் யூனியனில் புலம்பெயர்ந்து வாழ்ந்ததால், சோவியத் சார்பு நிலைப்பாட்டை கொண்டிருந்தனர். சோஷலிசப் புரட்சியின் தோல்விக்கு அவர்கள் முன்வைத்த விமர்சனம் பின்வருமாறு: "புரட்சிக்கு தலைமை தாங்கியவர்கள் ஜனநாயகவாதிகள். சோவியத் யூனியனுடன் கூட்டமைப்பை விரும்பாதவர்கள். பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை ஏற்றுக் கொள்ளவில்லை." 

ஆமாம், பின்லாந்து புரட்சிக்கு தலைமை தாங்கியவர்கள், "நிரந்தரப் புரட்சியை" முன்னெடுத்த சமூக- ஜனநாயகவாதிகள். இன்று மேற்கத்திய ஜனநாயகத்தில் காணப்படும் "கருத்துச் சுதந்திரம், பல கட்சி ஜனநாயகம்" போன்றவற்றை நடைமுறைப் படுத்துவதில் அதிக அக்கறை காட்டினார்கள். உழைக்கும் மக்களுக்கு ஆயுதங்களை வழங்கி விட்டால் போதும். மக்கள் ஆட்சி மலரும் என்று நம்பினார்கள். கம்யூனிஸ்ட் கட்சி அதனை, "தூய ஜனநாயகவாதம்" என்று விமர்சித்தது.

__________________________________________________

படங்களுக்கான விளக்கம்:

1.மேலே: சோஷலிச பின்லாந்தின் கொடி
2.மத்தி: சோஷலிஸ்டுகளின் கட்டுப்பாட்டில் இருந்த பின்லாந்தின் பகுதிகள். செந்நிற மையினால் காட்டப்பட்டுள்ளது.
3.கீழே: சரணடைந்த செம்படைக் கைதிகள் சுட்டுக் கொல்லப் படுகின்றனர்.
___________________________________________________


இந்தக் கட்டுரை எழுத உதவிய உசாத்துணை நூல்கள்:

1.Dokument från Finska Inbördeskriget (Hannu Soikkanen)
(ஸ்வீடிஷ் மொழியில் எழுதப்பட்டது. பல கிடைத்தற்கரிய ஆவணங்களை தொகுத்துள்ளது.)
2.A brief History of Modern Finland (Martti Häikiö)
3.The Winter War (Engle & Paananen)
4.Speech on the National Question (V.I.Lenin)
5.மற்றும் International Institute of Social History நூலகத்தில் கிடைத்த ஆவணங்கள்.

1 comment:

  1. தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள்.

    ReplyDelete