Saturday, April 30, 2011

சிரியாவில் மூன்றாம் உலகப்போர் ஆரம்பிக்குமா?


சிரியாவின் தலைநகர் டமாஸ்கசில் இருந்து சுமார் நூறு கி.மீ. தூரத்தில் இருக்கிறது டேரா. விவசாயத் தொழில் செய்யும் மூன்று லட்சம் மக்கள் வாழும் குடியிருப்புகள், ஜோர்டான் எல்லையோரமாக உள்ளன. ஜோர்டான் எல்லை கடந்து வருபவர்கள், டேராவில் இருந்து தான் டமாஸ்கஸ் செல்ல வேண்டும். 

தலைநகரை இணைக்கும் சாலை டேராவில் இருந்து தான் ஆரம்பிக்கின்றது. இங்கே தான் 15 மார்ச் அன்று, முதல் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாகின. "பஷார் அரசு ஒழிக" கோஷம் முதன் முதலாக அங்கே தான் கேட்டது. துனிசியா, எகித்திய புரட்சிகளால் உந்தப்பட்ட சிலரின் வேலையாக இருக்கலாம். மதிலில் அரச எதிர்ப்பு சுலோகம் எழுதிய மாணவர்கள் சிலரை, போலிஸ் கைது செய்து கொண்டு சென்றது. போலிஸ் நடவடிக்கை ஆர்ப்பாட்டத்தை அதிகரிக்கச் செய்தது. குறிப்பாக உழவர்களின் பிரச்சினைக்கு அரசு செவி சாய்க்காமல், அடக்குமுறையை கையாண்டது ஆத்திரத்தை கிளப்பை விட்டது.

டேரா உழவர்கள், தமது பிரதேச ஆளுநர் பைசல் கல்தூமுக்கு எதிராக கிளர்ந்தெழுந்தனர். டேரா நகரையும், மாகாணத்தையும் 2006 ம் ஆண்டிலிருந்து ஆட்சி செய்து வந்த புதிய ஆளுநர் ஊழல்களுக்கு பேர் போனவர். விவசாய நிலங்களை விற்பது, பங்கிடுவது சம்பந்தமான முறைகேடுகள் உழவர்களை அதிருப்திக்கு ஆளாக்கின. டேரா பிரதேசத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடும் பிரச்சினைக்கு மூலகாரணம். டேராவாசிகளே தண்ணீருக்கு அல்லல் படும் வேளை, அதிகரித்து வரும் குடியேறிகளும் பிரச்சினையை தீவிரப் படுத்துகின்றனர். ஒரு காலத்தில் தானியக் களஞ்சியமாக இருந்து, இன்று வறண்ட பாலைவனமாக மாறி விட்ட, சிரியாவின் வட-கிழக்கு பகுதியை சேர்ந்த மக்களே அதிகளவில் வந்து குடியேறினர். அது போதாதென்று, ஈராக் அகதிகளும் பெருமளவில் தஞ்சமடைந்திருந்தனர்.

வரட்சி, தண்ணீர்ப் பற்றாக்குறை, நலிவடையும் விவசாய உற்பத்தி, உணவுப் பொருட்களின் விலையேற்றம். இவ்வாறு ஒன்றுகொன்று தொடர்பான பிரச்சினைகள் சிரியாவில் நீண்ட காலமாகவே உணரப்பட்டு வந்துள்ளன. டேரா பிரதேசத்தில் புதிய விவசாய நிலங்களை உருவாக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. அரசு அந்த நிலங்களை குறைந்த விலைக்கு விவசாயிகளுக்கு விற்க வேண்டும். ஐ.நா., மற்றும் சில மேற்கத்திய நாடுகள் அந்த திட்டத்திற்கு ஆதரவளித்தன. 


திட்டத்தை நடைமுறைப்படுத்த நியமிக்கப்பட்ட ஆளுநர், தனது உறவினர்களின் பெயரில் ஒரு தனியார் நிறுவனம் அமைத்துக் கொண்டார். அரசு நிதியை கையாண்ட நிறுவனம், விவசாயிகளை நட்டாற்றில் விட்டது. விவசாயிகள் தாமாகவே புதிய கிணறுகளை தோண்டுவதற்கு ஆளுநர் அனுமதி வழங்கவில்லை. இந்த நேரத்தில் தான் துனிசியா புரட்சி இடம்பெற்றது. டேராவில் சுன்னி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். டமாஸ்கஸ்ஸில் ஆளும் வர்க்கம் அலாவி (ஷியா) முஸ்லிம் பிரிவை சேர்ந்தது. இதனால், சுன்னி முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுவதாக இனவாத கண்ணோட்டமும் சேர்ந்து கொண்டது. டேரா மக்களின் எழுச்சிக்கு இந்தக் காரணங்கள் போதும்.

அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில், இன/மத முரண்பாடுகளே கோஷங்களாக முன் வைக்கப்பட்டன. "ஈரான் ஒழிக!", "ஹிஸ்புல்லா ஒழிக!" போன்ற கோஷங்கள் ஷியா மதப் பிரிவினருக்கு எதிரானவை. "உண்மையான முஸ்லிம்கள் அரசாங்கத்தை நடத்த வேண்டும்!" என்ற கோஷம், சுன்னி முஸ்லிம் பிரதிநிதிகளை கொண்ட அரசை நோக்கமாக கொண்டது. 


மறு பக்கத்தில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் "சவூதி அரேபியாவின் கைக்கூலிகள்" என்று சிரிய அரசு முத்திரை குத்தவும் அதுவே காரணமாக அமைந்து விட்டது. வாஹபிச சவூதி அரேபியா, பிற நாடுகளில் சுன்னி முஸ்லிம் தீவிரவாதத்தை தூண்டி விடுவது புதிய செய்தியல்ல. முன்னர் ஒரு தடவை, "முஸ்லிம் சகோதரத்துவம்" என்ற ஆயுதமேந்திய இயக்கம் சிரியாவில் அரசைக் கவிழ்க்க முயன்றது. எழுபதுகளில், எண்பதுகளில் முஸ்லிம் சகோதரத்துவ செயற்பாட்டாளர்கள் நாடு முழுவதும் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தார்கள்.

வட- சிரிய நகரமான ஹாமா, நீண்ட காலமாக இஸ்லாமியக் கிளர்ச்சியின் தலைமையகமாக திகழ்ந்தது. இன்றைய சிரிய அதிபர் பஷாரின் தந்தை ஆசாத், முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கினார். 1982 ம் ஆண்டு, ஹாமா நகரம் விமானக் குண்டுவீச்சுகளால் தரைமட்டமாக்கப் பட்டது. மொத்தம் நாற்பதாயிரம் மக்கள், சிரிய பாதுகாப்புப் படையினரால் கொன்று குவிக்க்கப் பட்டனர். 


அத்துடன் சிரியாவில் இஸ்லாமிய மத- அடிப்படைவாத அரசியலுக்கு முடிவு கட்டப்பட்டது. டேராவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது, "ஹாமாவை நினைவுகூறுவோம்" என்ற கோஷமும் முன்வைக்கப் பட்டது. ஆரம்பத்தில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அரசு மாற்றத்தை கோரவில்லை. பாதுகாப்புப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் மரணச் சடங்கில் கலந்து கொண்ட மக்கள் அதனை அரசியல் ஊர்வலமாக்கினார்கள். பெரும்பாலும் அன்புக்குரியவர்களை இழந்ததால் ஏற்பட்ட துயரமே, அந்த மக்களை அரசியலுக்கு தள்ளியது.

"சவூதி கைக்கூலிகள்" ஆயுதங்களுடன் ஊடுருவியிருப்பதாகவும், அவர்கள் மறைந்திருந்து போலீசார் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்வதாகவும், அரசு தெரிவிக்கின்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களும், மர்ம நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக தெரிவித்தனர். போலிஸ் திருப்பிச் சுட்டதனாலும், பொது மக்கள் இறந்துள்ளனர். ஆனால், எப்போதும் அப்படி நடக்கின்றன என்று கூற முடியாது. சில இடங்களில் ஊர்வலங்களில் சென்றோர் மீது போலிஸ் துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளது. 


டெராவில் கலகத்தை அடக்குவதற்கு இராணுவம் அனுப்பப் பட்டது. ஆர்ப்பாட்டம் செய்பவர்களை சுட்டுத் தள்ளியாவது கலகத்தை அடக்கும் பணியில் பாதுகாப்புப் படைகள் ஈடுபட்டுள்ளன. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இருந்த போதிலும், "சர்வதேச சமூகம்" பொருளாதாரத் தடைகள் விதிப்பது குறித்து மட்டுமே பேசி வருகின்றது. லிபியாவில் நடந்ததைப் போல, நேட்டோப் படைகளின் விமானக் குண்டுவீச்சு நடத்துவது குறித்து பேசவில்லை. எதிர்காலத்திலும் இராணுவத் தலையீடு நடைபெறுவதற்கான வாய்ப்புக் குறைவு. "சர்வதேச சமூகம்" சிரிய பிரச்சினையில் பின்வாங்குவதற்கு என்ன காரணம்?

சிரியா மீது இராணுவ நடவடிக்கை எடுத்தால், அது அயல்நாடான இஸ்ரேலை பாதிக்கும் என்ற அச்சமே காரணம். கடந்த இரு தசாப்தங்களாக போரில் ஈடுபடாத சிரியா, ஈரானிடம் இருந்து நவீன ஆயுதங்களை வாங்கிக் குவித்துள்ளது. சிரிய அரசு ஆட்டம் கண்டால், இஸ்ரேல் மீது தாக்குதல் தொடுக்கும் அபாயம் நிலவுகின்றது. அந்தப் பிராந்தியந்தில் உள்ள பிற நாடுகளையும் போருக்குள் இழுத்து விட்டது போலாகி விடும். சிரியாவுடன் நெருக்கமான நட்பு பாராட்டும் ஈரான் உதவிக்கு வரலாம். அதே நேரம், லெபனானின் கெரில்லா அமைப்பான ஹிஸ்புல்லாவும், பாலஸ்தீன ஹமாசும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தலாம். இந்த இயக்கங்களுக்கு சிரியா ஆதரவு வழங்கி வருவது இரகசியமல்ல. மேலும், ஷியா முஸ்லிம்களின் நாடான ஈரான், சிரியாவில் ஆட்சி மாற்றத்தை எதிர்க்கவே செய்யும். ஹிஸ்புல்லாவும் ஷியா முஸ்லிம்களின் பிரதிநிதிகள் என்பது குறிப்பிடத் தக்கது.

இவ்விடத்தில் சிரியாவின் ஆளும் வர்க்கத்தின் பின்னணியை அலசுவது முக்கியமானது. ஏனெனில் அதிபர் பஷார் அல் ஆசாத் உட்பட, அரசாங்கத்தை அலங்கரிக்கும் முக்கிய புள்ளிகள் சிறுபான்மை அலாவி சமூகத்தை சேர்ந்தவர்கள். சிரியாவில் ஒரு மில்லியன் அலாவிக்கள் (மொத்த சனத்தொகையில் 12%) வாழ்கின்றனர். இஸ்லாமிய மதத்தில் ஷியா பிரிவை சேர்ந்தவர்களாக அலாவி கூறிக் கொள்கின்றனர். 


வரலாற்றில் ஷியா இஸ்லாமில், மேலும் பல கிளைகள் பிரிந்து சென்றன. இமாம் நுசாயிரியின் போதனைகளை பின்பற்றும் அலாவி(அலியை பின்பற்றுபவர்கள்)அவற்றில் ஒன்று. ஆயினும், பிற முஸ்லிம்கள் அலாவிக்களை இஸ்லாமியராக கருதுவதில்லை. அலாவிக்கள் இஸ்லாமியரின் மதக் கடமைகளை பின்பற்றுவதில்லை. ஷரியா சட்டத்தை ஏற்றுக் கொள்வதில்லை. அலாவிக்களின் வழிபாட்டு முறைகள், மதச் சடங்குகள், புனித நூல் ஆகியன வித்தியாசமானவை. அவர்கள் கிறிஸ்தவர்களின் பண்டிகை நாட்களையும் கொண்டாடுகின்றனர். கிறிஸ்தவ புனிதர்களையும் போற்றுகின்றனர். சுருக்கமாக, இஸ்லாமுக்கும், கிறிஸ்தவத்திற்கும் இடையிலான மதத்தை சேர்ந்தவர்கள் போன்று காணப்படுகினறனர்.

பல நூறாண்டுகளாக, சிரியாவில் அலாவிக்கள் ஒதுக்கி வைக்கப்பட்ட சமூகமாக வாழ்ந்து வந்தனர். அதாவது, இந்தியாவில் தாழ்த்தப்பட்ட சாதிகளைப் போன்று நடத்தப்பட்டனர். ஆசாத் ஆட்சிக் காலத்தில் தான், பொருளாதாரத்தில் பின்தங்கியிருந்த, வறுமைக்குள் வாடிய அலாவி சமூகத்தில் மாற்றம் ஏற்பட்டது. இராணுவ சதிப்புரட்சி மூலம் ஆசாத் ஆட்சியைப் பிடித்தது, சிரியாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தியாவில் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த ஒருவர் பிரதமரானால், அரசை நடத்துவதும் அந்த சாதியினராக இருந்தால், பிற சாதியினர் எவ்வாறு எதிர்வினையாற்றுவார்கள்? அன்று சிரியாவில் ஏற்பட்ட சமூக மாற்றமும் அது போன்றது. 


ஆசாத் ஆட்சியில் தான் அலாவிக்கள் உயர் பதவிகளைப் பெற்று பணக்காரரானார்கள். இன்றைய குழப்பகரமான சூழ்நிலையில், சிரியாவின் மேற்குக் கரையோர லடாக்கியா பகுதியில் செறிந்து வாழும் அலாவி சமூகம், அரசு ஆதரவு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளமை குறிப்பிடத் தக்கது. சிரியாவில் தற்போதைய அரசு கவிழுமானால், பெரும்பான்மை சுன்னி முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்களே ஆட்சியைப் பிடிப்பார்கள். அவர்கள் அதிகாரத்தை கைப்பற்றினால், அலாவி சமூகத்தினரை பழிவாங்குவதற்காக இனப்படுகொலையை கட்டவிழ்த்து விடலாம். எதிர்காலம் குறித்த அச்சம் எல்லோர் மனதிலும் குடி கொண்டுள்ளது.

2 comments:

  1. Hi kalai,current situation in Syria is matching with your thoughts mentioned in this article 2 years ago..now Iran and hesbulla entered in the scen

    ReplyDelete
  2. Now Russia supplied anti-missile weapons to Syria..how isreal will react?...I have one more doubts about

    ReplyDelete