Thursday, March 10, 2011

லிபியா: இன்னொரு ஈராக் உருவாகின்றது!

லிபியாவில் கிளர்ச்சிப் படையினர் கட்டுப்பாட்டில் உள்ள பெங்காசி நகரம். லிபியாவின் இரண்டாவது பெரிய நகரமான பெங்காசியின் இராணுவ ஆயுதக் களஞ்சியம், கிளர்ச்சியாளர்களின் ஆயுத விநியோக மையமாக செயற்பட்டு வந்தது. லிபிய இராணுவத்தை விட்டோடி, கிளர்ச்சிக் குழுவில் சேர்ந்தவர்கள், பத்திரிகையாளர்களை அழைத்து வந்து காட்டுகிறார்கள். ஆயுதக் களஞ்சியம் இருக்கும் முகாமுக்குள் புதிய படையணிகளுக்கு நடக்கும் பயிற்சி எல்லாம் காட்டுகிறார்கள். நுழைவாயிலில் பாதுகாப்புக்காக ஒரு சிறுவன் நிறுத்தி வைக்கப் பட்டிருக்கிறான். வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் அதையும் படம் பிடிக்கிறார்கள். அன்றிரவு நடுநிசி, இரண்டு கார்கள் முகாமுக்குள் வருகின்றன. வந்தவர்கள் கிளர்ச்சிக் குழுவை சேர்ந்தவர்களாக இருக்கலாம், என்று முகாமில் தங்கியவர்கள் நினைத்துக் கொள்கின்றனர். எப்படியும் வேறுபாடு கண்டுபிடிப்பது மிகவும் கடினம். திடீரென பயங்கர வெடியோசை பெங்காசி நகரை உலுக்கியது. குண்டுவெடிப்பில் ஆயுதக் களஞ்சியம் முற்றாக எரிந்து நாசமாகியது. முகாமில் தங்கியிருந்த முப்பது வீரர்களும் பலியானார்கள். மீட்புப் பணியாளர்களால் எதையும் மீட்க முடியவில்லை. அங்கே எதுவுமே மிஞ்சவில்லை.

கிளர்ச்சியாளர்கள் போன்று நடித்த கடாபியின் ஆதரவாளர்கள், கிளர்ச்ச்சிப் படைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி விட்டிருந்தனர். மேற்கத்திய தொலைக்காட்சி கமெராக்களுக்கு முன்னால் கிளர்ச்சிக்குழு தலைவர் கூறுகிறார். "எங்களுக்கு எந்தவொரு அந்நிய உதவியும் தேவையில்லை. லிபிய மக்கள் பார்த்துக் கொள்வார்கள். சம்பவம் நடந்து அடுத்தடுத்த நாள், லிபியாவுக்குள் புகுந்த சில பிரிட்டிஷ் படை வீரர்களை, கிளர்ச்சிக் குழு கைது செய்கின்றது. மேற்கத்திய நாடுகளின் தலையீடு, கிளர்ச்சியாளர்கள் சந்தித்த மிகப் பெரிய நெருக்கடி. "லிபியாவில் ஏகாதிபத்திய தலையீடு. கிளர்ச்சியாளர்களுக்கு மேலைத்தேய நாடுகள் ஆயுத, நிதி உதவி வழங்குகின்றன." இவையெல்லாம் நிரூபணமானால், லிபிய மக்கள் கிளர்ச்சிக்கு ஆதரவு வழங்குவதை நிறுத்தி விடுவார்கள். யாரின் சர்வாதிகாரத்திற்கு எதிராக கிளர்ச்சி வெடித்ததோ, அதே கடாபியின் பக்கம் மக்கள் ஆதரவு சாய்ந்து விடும்.

துனிசியா, எகிப்து போன்ற வெற்றியடைந்த புரட்சிகளைக் கண்ட நாடுகளை தனது அருகாமையில் கொண்டுள்ள லிபியாவுக்கு, மக்கள் எழுச்சி சற்று தாமதமாகத் தான் வந்தது. "அவர்களுக்கு (லிபியர்களுக்கு) குறை ஏதும் இல்லை. எங்களைப் பார்த்து பின்பற்றுகிறார்கள்." என்றார்கள் எகிப்திய மக்கள் எழுச்சியில் பங்குபற்றிய ஆர்வலர்கள். ஆயிரக்கணக்கான எகிப்தியர்கள், எகிப்தில் கிடைப்பதை விட மூன்று மடங்கு அதிக ஊதியத்திற்கு லிபியாவில் வேலை பார்த்து வந்தார்கள். லிபிய பாடசாலைகளில், பெரும்பாலும் எகிப்திய ஆசிரியர்களே பணியில் அமர்த்தப்பட்டனர். லிபிய மக்கள் எழுச்சி விரைவில் உள்நாட்டுப் போராக மாறியதில், எகிப்திய தொழிலாளர்கள் அனைவரும் வேலையிழந்து நாடு திரும்ப நேரிட்டது. முழு ஆப்பிரிக்க கண்டத்திலும், லிபியர்களின் தனிநபர் வருமானம் அதிகம். அவர்கள் பெரும்பாலும் உடல்சார்ந்த உழைப்பில் ஈடுபடுவதில்லை. கட்டுமானப் பணிகளில், துப்பரவுப் பணிகளில் எந்தவொரு லிபியப் பிரஜையும் வேலை செய்ய விரும்புவதில்லை. அத்தகைய அசுத்தமான, கடினமான பணிகளை செய்வதற்கு வெளிநாட்டுத் தொழிலாளர்கள் ஒப்பந்தக் கூலிகளாக அமர்த்தப்படுகின்றனர். சுருக்கமாக சொன்னால், துபாய் போன்ற வளைகுடா அரபு நாடுகளின் நிலையுடன் ஒப்பிட்டுப் பார்க்கத் தக்கது.

கடாபி, நாற்பதாண்டுகளுக்கு முன்னர், அதிக இரத்தம் சிந்தாத சதிப்புரட்சி மூலம் ஆட்சிக்கு வந்தார். அன்றிருந்த மன்னர் மீது அரச படையினர் மத்தியிலேயே அதிருப்தி நிலவியதால், கடாபியின் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையை எதிர்க்க ஆளிருக்கவில்லை. ஆட்சியைக் கைப்பற்றிய கடாபி, நாட்டின் முக்கிய ஏற்றுமதி வருமானத்தை ஈட்டித்தரும் எண்ணெய் உற்பத்தியை தேசிய மயப்படுத்தினார். எண்ணெய் விற்று கிடைத்த பணத்தை மக்கள் நலன் பேணும் திட்டங்களில் செலவளித்தார். அப்போது இரண்டு மில்லியன் சனத்தொகையைக் கொண்ட லிபியா, இலாபப் பணத்தை மக்களுக்கு பகிர்ந்து கொடுப்பதில் சிரமமேதும் இருக்கவில்லை. இதனால் நாடு துரித கதியில் அபிவிருத்தியடைந்தது. கடாபியின் புரட்சிக்கு முன்னர், பெரும்பான்மை லிபியர்கள் வறுமையில் வாடினார்கள். பாலைவன ஓரங்களில் கூடாரங்களில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தார்கள். பொருளாதார அபிவிருத்தி காரணமாக, இன்று எந்தவொரு லிபியரும் பாலைவனக் கூடாரத்தில் வாழ்வதில்லை, கடாபியைத் தவிர. தலைநகர் திரிபோலியில் கடாபியின் மாளிகை இருந்தாலும், தான் இன்றும் மரபு வழி கூடாரத்தில் வாழ்வதாகக் காட்டுவது கடாபியின் வெகுஜன அரசியல். வெளிநாடுகளுக்கு விஜயம் செய்யும் பொழுதும், அந்தக் கூடாரத்தை தன்னோடு எடுத்துச் செல்வார். எந்த நாட்டிலும், ஹோட்டலில் தங்காமல் கூடாரத்தில் தங்கும் ஒரேயொரு தேசத் தலைவர் அவராகத் தான் இருப்பார்.

கால்நடைகளை மேய்க்கும் ஏழைக் குடும்பமொன்றில் பிறந்த கடாபி, அதிகாரம் கையில் வந்தவுடன் குடும்ப அரசியலில் ஈடுபட்டு செல்வம் சேர்த்தமை, லிபிய மக்களின் எதிர்ப்புணர்வுக்கு முக்கிய காரணம். கடாபியின் குடும்பத்தினர் மட்டுமல்ல, அவரது "கடாபா" கோத்திரமும் அரசியல்- பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தினர். பிற அரேபியர்கள் போல, லிபிய அரேபியரும் பல கோத்திரங்களாக அல்லது இனக்குழுக்களாக பிரிந்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட கோத்திரத்தை சேர்ந்தவர் அரசில் பதவி வகித்தால், "நமது ஆட்கள்" சிலருக்கு வேலை எடுத்துக் கொடுப்பது அந்த சமூகத்தில் சர்வ சாதாரணம். கடாபி லிபியாவின் சர்வ அதிகாரம் பெற்ற அதிபரானதும், அவரது கடாபா கோத்திரத்தை சேர்ந்தவர்களுக்கே அரசுப் பதவிகள் கிடைத்தன. இதனால் பிற கோத்திரங்களை சேர்ந்தவர்கள் மத்தியில், கசப்புணர்வும் பொறாமையும் காணப்பட்டது. "லோக்கர்பீ" நீதிமன்ற விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட சந்தேகநபரை ஒப்படைக்கும் விஷயத்தில், இந்த முறுகல் நிலை வெளிப்பட்டது. அந்த சந்தேக நபர் வேறொரு கோத்திரத்தை சேர்ந்தவர் என்பதாலேயே கடாபி அவரை ஒப்படைக்க முன்வந்தார் என்று பேசிக் கொண்டனர். இதை விட, கடாபியின் பிள்ளைகளின் திருவிளையாடல்கள் உலகப் பிரசித்தம். அதிகார மமதையும், பணத்திமிரும் உள்நாட்டு மக்களை முகம் சுழிக்க வைத்தன. பிரான்சில் மதுபோதையில் காரோட்டிய மகன், சுவிட்சர்லாந்தில் நட்சத்திர விடுதியில் கைகலப்பில் ஈடுபட்டு கம்பி எண்ணிய மகன். தனது தறுதலைப் பிள்ளைகளின் நடத்தையை கண்டிக்காத தகப்பனான கடாபி, பதிலுக்கு இராஜதந்திர சர்ச்சைகளை கிளப்பி விட்டார்.

கடந்த காலங்களில் லிபியா, எந்த வித உள்நாட்டுக் குழப்பமும் இல்லாதவாறு அமைதியாகக் காட்சியளித்தது. அதாவது, அங்கே நடந்த சம்பவங்கள் எதுவும் சர்வதேச ஊடகங்களின் கவனத்தைப் பெறவில்லை. கடாபியின் அதிகாரத்தை எதிர்ப்போர் அன்றும் கிழக்கு லிபியாவில் தான் தோன்றினார்கள். பண்டைய ரோமர்களின் மாகாணமான சிரேனிகா பகுதியில் இருந்து தான், காலனியாதிக்க எதிர்ப்புப் போர் ஆரம்பமாகியது. பாலைவனச் சிங்கம் என்று அழைக்கப்பட்ட ஒமார் முக்தார் தலைமையில், இத்தாலியருக்கு எதிராக வீரஞ் செறிந்த விடுதலைப் போர் நடந்தது. போராட்டம் தோல்வியடைந்த போதிலும், அவர்கள் ஸ்தாபித்த மதப்பிரிவு இன்று வரை நிலைத்து நிற்கின்றது. முன்னாள் போராளிகளும், ஆதரவாளர்களும், அவர்களின் குடும்பங்களும் "சானுசி" என்ற மத அமைப்பாக, தம்மைத் தாமே தனிமைப் படுத்திக் கொண்டனர். இன்றைய அரசியல் புரிதலின் பிரகாரம் "இஸ்லாமிய கடும்போக்காளர்கள்" அல்லது "மத அடிப்படைவாதிகள்" என்று அழைக்கலாம். இருப்பினும் அன்று காலனியாதிக்கத்தை எதிர்த்த ஒமார் முக்தார் போன்ற பல தேசிய நாயகர்கள், இஸ்லாமிய கோட்பாடுகளை உயர்த்திப் பிடிப்பவர்களாக இருந்துள்ளனர்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், பிரிட்டிஷாரால் முடி சூட்டப்பட்ட இடிரிஸ், சானுசி சமூகத்தை சேர்ந்தவர். இதனால் அவரது ஆட்சிக் காலம் முழுவதும், சானுசி சமூகத்தை சேர்ந்தோரின் ஆதரவு கிடைத்து வந்தது. குறிப்பாக கிழக்கு லிபிய பிரதேசம், இடிரிஸ் ஆதரவுத் தளமாக இருந்தது. 2011, பெப்ரவரி, கடாபிக்கு எதிராக கிளர்ந்தெழுந்த ஆர்ப்பாட்டக் காரர்கள், மன்னர் இடிரிசின் உருவப்படத்தையும், அவரது கொடியையும் தாங்கியிருந்தனர். பெங்காசி போன்ற, கிளர்ச்சியாளர்களால் விடுதலை செய்யப்பட்ட பகுதிகளில் சிவப்பு, கருப்பு, பச்சை வர்ணங்களில் பிறைச்சந்திரன் பதித்த கொடி பறக்க விடப்பட்டது. மன்னராட்சியைக் கவிழ்த்த கடாபியின் சதிப்புரட்சி வரை, அதுவே லிபியாவின் தேசியக் கொடியாக இருந்தது. இருபது வருடங்களுக்கு முன்னரே, சானுசி மதப்பிரிவை சேர்ந்த போராளிகள் பலர், ஆப்கானிஸ்தானில் அல்கைதாவுடன் இணைந்து செயற்பட்டு வந்தனர். நாடு திரும்பிய போராளிகள், லிபியாவிலும் ஒரு ஆயுதக் குழுவை ஸ்தாபித்து சில தாக்குதல்களை நடத்தியுள்ளனர். லிபிய அரசின் இரும்புப் பிடி, தீவிரவாத நடவடிக்கைகளை தொடர விடவில்லை. இன்று வரை பலர் அறியாத செய்தி என்னவெனில், முதன்முதலாக இன்டர்போல் மூலமாக பின்லாடனை குற்றவாளியாக அறிவித்து பிடியாணை பிறப்பித்தது அமெரிக்காவல்ல! மாறாக லிபியா!! 2001, அமெரிக்கா அறிவித்த பயங்கரவாதத்திற்கு எதிரான போர்க் காலத்தில், கடாபி இதனைக் குறிப்பிட்டு பல தடவை பேசியுள்ளார். ஆனால் அது சர்வதேச கவனத்தை பெறவில்லை.

கடாபி ஒருகாலத்தில் அரபு சர்வதேசியத்தில் நம்பிக்கை வைத்திருந்தார். ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளியாக இருந்தார். சோஷலிசம் பேசினார். இருந்தாலும் இஸ்லாமிய மதத்திலும் பற்றுறுதியுடன் இருந்தார். கடாபி மார்க்சியம் கலந்த புதுமையான இஸ்லாம் ஒன்றை போதித்தார். சானுசி மதப்பிரிவினர் தூய்மைவாதிகள் அல்லது கடும்போக்காளர்கள். அதற்கு மாறாக கடாபி ஒரு தாராளவாதி. கடாபியின் ஷரியா சட்டமும் பல திருத்தங்களைக் கொண்ட, மென்மையான தண்டனைகளைக் கொண்டிருந்தது. அரபு நாடுகளில் லிபியாவில் தான் பெண்களுக்கு அதிக சுதந்திரம் வழங்கப்பட்டது. குறிப்பாக சொத்துரிமைச் சட்டத்தில், ஆணுக்கே அதிக உரிமை வழங்கும் சட்டமே அரபு நாடுகள் எங்கும் அமுலில் உள்ளது. லிபியாவில் பெண்களும் சொத்தில் உரிமை கொண்டாடலாம். கடாபியின் காலத்தில் தான், பெண்கள் அதிகளவில் உயர் கல்வி கற்றனர். அரசிலும், தனியார் நிறுவனங்களிலும் உயர் பதவிகளை அலங்கரித்தனர். கடாபியின் மகளிர் மெய்க்காவலர் படையணி, சர்வதேச மட்டத்தில் பலர் கவனத்தை ஈர்த்தது. நிச்சயமாக, இஸ்லாமிய கடும்போக்காளர்கள் அத்தகைய மாற்றங்களை விரும்பவில்லை. தாலிபான்களைப் போல பெண்களை வீட்டுக்குள் பூட்டி வைக்க விரும்பும் பழமைவாதிகளுக்கு, கடாபியின் செயல்கள் எரிச்சலூட்டின. அந்த எதிர்ப்புகளை கணக்கெடுக்காத கடாபி, தனது "தாராளவாத இஸ்லாமிய மார்க்கம்" சிறந்தது என்று லிபியாவுக்கு வெளியேயும் பிரச்சாரம் செய்தார்.

நீண்ட காலமாக உலகின் மிகத் தீவிரமான ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளியாக காட்டிக் கொண்ட கடாபியை, அமெரிக்கா அடக்க விரும்பியதில் வியப்பில்லை. 1986 ம் ஆண்டு, திரிபோலி நகரின் வான் பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க விமானங்கள், கடாபியின் மாளிகையை இலக்கு வைத்து குண்டுவீசின. விமானத் தாக்குதலில் கடாபி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினாலும், அயலில் குடியிருந்த பொது மக்கள் பல கொல்லப்பட்டனர். ஏகாதிபத்திய எதிர்ப்பு போரின் பங்காளிகள் என்ற அடிப்படையில், இஸ்லாமியரல்லாத தேசியவாத, இடதுசாரி இயக்கங்களுக்கும் ஆதரவு வழங்கினார். அயர்லாந்தின் ஐ.ஆர்.ஏ., ஜெர்மனியின் செம்படை போன்ற ஆயுதபாணி அமைப்புகளின் உறுப்பினர்களுக்கு லிபியாவில் இராணுவப் பயிற்சி வழங்கப்பட்டது.

லோக்கர்பீ விமானக் குண்டு தாக்குதலில் கடாபியை வேண்டுமென்றே சம்பந்தப் படுத்திய சர்வதேச சமூகம், ஐ.நா. பொருளாதாரத் தடையை கொண்டு வந்தது. (அந்தத் தாக்குதலில் லிபியாவுக்கு தொடர்பில்லை என்பதும், ஈரானின் பங்களிப்பும் அன்று வேண்டுமென்றே மறைக்கப் பட்டன.) 1993 லிருந்து 2003 வரையிலான பொருளாதாரத் தடை லிபியாவை மோசமாகப் பாதித்தது. சர்வதேச விமானப் பறப்புகள் துண்டிக்கப்பட்டன. எண்ணெய் அகழும் தொழிலகங்களில், பழுதடைந்த உபகரணங்களை திருத்த முடியாமல், உற்பத்தி குறைந்தது. இருப்பினும், லிபியா ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்தது என்பதால், கடத்தல் வியாபாரிகள் உணவு, மற்றும் அத்தியாவசியப் பொருட்களை கொண்டு வருவதில் தடை இருக்கவில்லை. 2003 ல் பொருளாதாரத் தடை விலத்திக் கொள்ளப்பட்ட பிறகு, கடாபி முற்றிலும் மாறியிருந்தார். சோஷலிச, அல்லது தேசியவாத பொருளாதாரத்தைக் கைவிட்டு விட்டு, முதலாளித்துவத்திற்கு தாராளமான சுதந்திரம் வழங்கினார். கடாபியின் குடும்பத்தினரும், கடாபா இனக்குழுவை சேர்ந்த முதலாளிகளும் செல்வம் திரட்டியது இந்தச் சந்தர்ப்பத்தில் தான். கடாபியின் குடும்ப நிறுவனம், இத்தாலியில் இரண்டு உதைபந்தாட்டக் கழகங்களை வாங்கியது

லிபியாவை காலனிப் படுத்திய நாடான இத்தாலி, பிரதான வர்த்தகக் கூட்டாளியாகும். லிபியாவின் எண்ணெய் வயல்களிலும், பிற துறைகளிலும் இத்தாலியின் முதலீடுகள் அதிகம். நெதர்லாந்தின் ஷெல் நிறுவனமும் எண்ணெய் உற்பத்தியில் குத்தகைகளை பெற்றிருந்தது. இருப்பினும் அமெரிக்க நிறுவனங்களின் வரவு மிகக் குறைவாகவே இருந்தது. தற்போது லிபியா பிரச்சினையில் அமெரிக்கா மிகத் தீவிரமான அக்கறை செலுத்துவது ஒன்றும் தற்செயலல்ல. சதாம் ஹுசைன் கால ஈராக்கிலும், ரஷ்யர்களும், சீனர்களும், எண்ணெய் உற்பத்தியை பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில் தான் அமெரிக்கா படையெடுத்தது. அதற்குப் பிறகு ஈராக்கின் எண்ணெய் உற்பத்தி முழுவதையும் அமெரிக்க நிறுவனங்கள் கைப்பற்றிக் கொண்டன. தற்போது லிபியாவிலும் அது போன்ற நிலைமை காணப்படுகின்றது.

கடாபிக்கு ஆதரவான லிபியப் படைகள் முன்னேறிச் சென்று, கிளர்ச்சியாளரின் கட்டுப்பாட்டில் உள்ள நகரங்களை கைப்பற்றி வருகின்றன. இதனால் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதம் வழங்குமாறு, சவூதி அரேபியாவை அமெரிக்கா கேட்டுள்ளது. லிபியா முழுவதும் கிளர்ச்சியாளர்கள் வசம் வந்திருந்தால், அவர்களுடன் எண்ணெய் உற்பத்தி ஒப்பந்தங்களை செய்து கொண்டிருக்கலாம். கிளர்ச்சியை வழிநடத்திக் கொண்டிருக்கும், "லிபியா தேசிய மீட்பு முன்னணி" புகலிடத்தில் இயங்கிய பொழுது, சி.ஐ.ஏ. தொடர்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் கிளர்ச்சியாளர்கள் தோற்கடிக்கப்பட்டு, லிபியா முழுவதும் கடாபியின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தால், அடுத்த நடவடிக்கை பற்றி யோசிக்க வேண்டியிருக்கும். லிபிய வான் பரப்பை நேட்டோ படைகள் கட்டுப் படுத்துதல், பொருளாதாரத் தடை என்பன, ஐ.நா. பெயரில் கொண்டு வரப்படும்.

ஊடகங்கள் பல தடவை செய்தி அறிவிப்பதை விட பிரச்சாரம் செய்வதற்கே பெரிதும் உதவுகின்றன. ஆரம்பத்தில் இருந்தே லிபிய மக்கள் அனைவரும் கடாபிக்கு எதிராக கிளர்ந்தெழுந்து விட்டதாகவே காட்டிக் கொண்டிருந்தனர். இராணுவத்தை விட்டோடியவர்களை சுட்டிக் காட்டி, லிபிய இராணுவம் மக்கள் மீது தாக்குதல் நடத்த மறுக்கிறது என்றும் கூறிக் கொண்டிருந்தன. அவ்வாறு தாக்குதல் நடத்துபவர்கள் எல்லோரும் பிற ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த கறுப்பினக் கூலிப் படைகள் என்று செய்தி வாசித்தன. கிளர்ச்சியாளர்களால் விடுதலை செய்யப்பட்ட பகுதிகளின் மக்களும் அவ்வாறான தகவல்களை தெரிவித்தனர். ஆனால் அங்கே நிலவும் நிறவெறிப் பாகுபாட்டை ஊடகங்கள் வேண்டுமென்றே மறைத்தன. லிபியாவின் தென் பகுதியில் கறுப்பின மக்கள் வாழ்கின்றனர். அவர்களும் லிபியப் பிரஜைகள் தான். அதே நேரம் லிபியாவில் லட்சக் கணக்கான ஆப்பிரிக்க குடியேறிகள், அகதிகள் வசித்து வருகின்றனர். லிபிய நிறவெறியர்கள் அவர்களை தாக்குவது, அங்கே அடிக்கடி நடக்கும் நிகழ்வு. ஒரு தடவை, லிபிய காடையர்கள் நூற்றுக்கணக்கான ஆப்பிரிக்கர்களை இனப்படுகொலை செய்யுமளவிற்கு, அங்கே நிறவெறி உச்சத்தில் இருந்துள்ளது. இன்றும் கிளர்ச்சியாளர்கள் விடுதலை செய்த பகுதிகளில் வாழ்ந்த ஆப்பிரிக்கர்கள் தாக்கப்பட்டனர். அனைத்து வெளிநாட்டவர்களும் மோசமான விளைவுகளை எதிர்பார்த்து வெளியேறி விட்டனர்.

3 comments:

  1. லிபியா பற்றி குழப்பமாகவே இருந்த்து. தெளிவான விளக்கம் தந்ததற்கு ரொம்ப ரொம்ப நன்றி

    ReplyDelete
  2. ஆபிரிக்க நாடுகள் நன்கு சிந்தித்து முடிவெடுக்கப்பட்ட செயற்பாடுகளை மேற்கொள்ளும்போதே அதற்குப் பலமும், உண்மையான சுதந்திரமும் கிட்டும். கௌரவத்துக்கும், மதிப்புக்கும் ஒரு விலை உண்டு. அதைச் செலுத்த ஆபிரிக்க நாடுகள் தயாரா?

    ஐக்கிய நாடுகள் அமைப்பு கூட அங்கத்துவ அரசுகளின் விவகாரங்களில் ஆபிரிக்க யூனியனின் பாத்திரத்தை உதாசீனம் செய்கின்றது . இதன் உள்நோக்கம் உப-சஹாரா (மத்திய, மேற்கு, கிழக்கு மற்றும் தென் ஆபிரிக்க) ஆபிரிக்க நாடுகளைத் தனிமைப்படுத்தி, அவற்றை மேலும் கட்டுப்படுத்துவதாகும். ஐநூறு வருட காலம், மேற்குலகுடன் பெருமளவுக்குச் சமத்துவமற்ற ஓர் உறவுக்குப் பின்னர் எது நல்லது, எது மோசமானது என்பது குறித்து ஆபிரிக்க மக்களுக்கு மேற்குலகுடன் ஒரே மாதிரியான அளவுகோல்கள் கிடையாது. ஆபிரிக்க மக்கள் பெரிதும் மாறுபடும் நலன்களைக் கொண்டுள்ளார்கள். உண்மையில் ஆபிரிக்க நாணய நிதியத்தின் மூலதனத்தை உள்ளடக்கும் 42 பில்லியன் அமெரிக்க டாலர் தொகையில் அல்ஜீரியாவும் (16 பில்லியன் டாலர் ), லிபியாவும் (10 பில்லியன் டாலர் ) 62 வீதத்தை வழங்குகின்றன. உப-சஹாரா ஆபிரிக்காவில் மிகப்பெரியதும், அதிக ஜனத்தொகையைக் கொண்டதுமான நைஜீரியா மற்றும் தென்னாபிரிக்கா என்பவை ஒவ்வொன்றும் ஆக 3 பில்லியன் டாலர்களை மட்டுமே வழங்க சம்மதித்துள்ளன. .

    ஆபிரிக்கா ஐக்கிய நாடுகள் சபையில் உரிய விடயங்களை உறுதியாகச் செய்யாமல் எதைத்தான் ஐக்கிய நாடுகள் அமைப்பில் சாதிக்க எண்ணியுள்ளன என்று தெரியவில்லை. அண்மையில் மேற்கு ஆபிரிக்க நாடான ஐவரி கோஸ்ட்டில் ஐ.நா. வின் உயரதிகாரி சோய் யங் ஜின் எவ்வாறு தன்னை அந்த நாட்டின் அரசியலமைப்புக்கு அப்பாற்பட்டவராக எண்ணி நடந்து கொண்டார் என்பதை ஆபிரிக்க மக்கள் நன்கு அறிவார்கள்.

    தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஸுமா ஐவரி கோஸ்ட்டில் அலசன் கட்டாரா தேர்தலில் வெற்றி பெறவில்லையென்று கூறிவிட்டு, தனது பாரிஸ் பயணத்தின்போது இதற்கு நேரெதிராகப் பேசுகையில், நூறு கோடி ஆபிரிக்கர்களைப் பிரதிநிதித்துவம் செய்வதாகவும், அவர்கள் சார்பில் பேசுவதாகவும் கூறும் இத்தலைவர்களின் நம்பகத்தகவு கேள்விக்குறியாகிறது. ஆபிரிக்க யூனியன் ஐவரி கோஸ்ட்டில் அலசன் கட்டாராவின் வெற்றியை ஏற்றுக்கொண்டு பழைய எஜமானர்களை மகிழ்ச்சிப்படுத்தத் தமது சொந்தத் தேர்தல் அவதானிப்பாளர்களின் எதிர் அறிக்கைகளை உதாசீனம் செய்யும்போது, தமக்கு மதிப்புக் கிட்டுமென்று ஆபிரிக்க மக்கள் எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?

    ஐக்கிய நாடுகளின் வரலாற்றில் முதல் தடவையாக நெருக்கடிக்கு ஒரு சமாதானத் தீர்வு தேடும் சிறிய சாத்தியக்கூறையும் ஆய்வுசெய்யாது, ஆபிரிக்க நாடான லிபியா மீது யுத்தப் பிரகடனம்செய்யப்பட்டுள்ளது மிகவும் கவலைக்குரிய சம்பவமாகும் .உண்மையில் ஆபிரிக்க நாடுகள் இனியும் ஐக்கிய நாடுகள் அமைப்பில் இருப்பதில் அர்த்தமேதும் கிடையாது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் சமமான வீட்டோ அதிகாரங்களுடன் நிரந்தர அங்கத்துவம் ஒன்று கிடைக்குமென்று வழங்கப்படும் தெளிவற்ற வாக்குறுதிகளைக் குழந்தைத்தனமாக நம்பி நைஜீரியாவும், தென்னாபிரிக்காவும் மேற்குலகம் கேட்கும் எதையும் செய்யக்கூடிய நிலைக்குத் தயாராகவுள்ளன. ஐக்கிய நாடுகள் அமைப்பில் எதையும் வழங்குவதற்கு பிரான்சுக்கு எந்த அதிகாரமும் கிடையாது என்பதை இரு நாடுகளுமே மறந்துவிட்டன. அது சாத்தியமாயின், பிரான்ஸின் முன்னைநாள் அதிபர் மிட்டரன்ட், அவருடைய காலத்தில் அவருடைய நண்பர் ஹெல்முட் கோலின் அதிகாரத்தில் இருந்த ஜெர்மனிக்கு, வெகுகாலத்துக்கு முன்னராகவே ஐக்கியநாடுகள் அமைப்பில் வீட்டோ அதிகாரங்களுடன் நிரந்தர அங்கத்துவத்தை பெற்றுக் கொடுத்திருப்பார்.

    ReplyDelete
  3. ஐக்கிய நாடுகள் அமைப்புக்கான சீர்திருத்தம் என்பது ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிகழ்ச்சிநிரலில் இருந்ததும் இல்லை இருக்கப் போவதும் இல்லை . ஐக்கிய நாடுகள் அமைப்பை பொறுத்தவரையில் ஒரு விடயத்தைத் திண்ணமாக எடுத்துரைக்க ஒரே வழி சீனாவின் வழிமுறையைப் பயன்படுத்துவதாகும். அனைத்து ஐம்பது ஆபிரிக்க நாடுகளும் ஐக்கிய நாடுகள் அமைப்பிலிருந்து வெளியேறுதல் வேண்டும். ஆபிரிக்க நாடுகளின் நீண்டகாலக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் மாத்திரமே அவை திரும்பிச் ஐக்கிய நாடுகள் அமைப்பில் இணைய வேண்டும். ஐக்கிய நாடுகள் அமைப்பு அதன் சொந்தக் கூட்டமைப்பு மற்றும் அதிகாரப்படிநிலை காரணமாக இன்று சக்திமிக்க வல்லரசுகளுக்குச் சேவை செய்யும் நிலைக்குச் சென்றிருப்பதாலேயே முழு ஆபிரிக்கச் கண்டத்துக்கும் வீட்டோ அதிகாரம் கொண்ட நிரந்தர ஆசனம் உடனடியாக கிடைக்கவேண்டும், அல்லது ஐக்கிய நாடுகள் அமைப்பு என்று ஒரு அமைப்பு ஆபிரிக்க மக்களுக்கு தேவையில்லை என்று ஐக்கிய நாடுகள் அமைப்பிலிருந்து ஆபிரிக்க நாடுகள் வெளியேற வேண்டும்.. ஏழைகளுக்கும், பலவீனர்களுக்குமுள்ள ஒரேயொரு ஆயுதம் அஹிம்சா வழிமுறை ஒன்றுதான் . பலவீனர்களை அழித்தொழிப்பதை அடிப்படையாகக்கொண்ட ஓர் உலக நோக்குக்கு ஆபிரிக்க மக்கள் தமது எதிர்ப்பை வெளியிடும் வகையில் ஆபிரிக்க நாடுகள் ஐக்கிய நாடுகள் அமைப்பிலிருந்து வெளியேறுதல் வேண்டும். ஆபிரிக்க நாடுகள் ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு முன்பிருந்தது போலவே தொடர்ந்தும் சுதந்திரமாகச் செயற்படலாம். ஆபிரிக்க நாடுகள் ஐக்கிய நாடுகள் அமைப்பில் பங்குதாரிகள் அல்லவென்றும், ஆபிரிக்க மக்களின் அபிப்பிராயம் குறித்து மேற்குலக நாடுகள் ஐக்கிய நாடுகள் அமைப்பில் கேட்காத நிலையில் ஆபிரிக்க மக்கள் அதற்குச் சம்மதிக்கிறார்கள் என்று கூறும் நிலை ஆபிரிக்க நாடுகளுக்கில்லையென்றும் கூறும் ஆறுதலாவது ஆபிரிக்க நாடுகளுக்கு கிட்டும். கடந்த மார்ச் 19ஆந் திகதி சனிக்கிழமை முரித்தானிய தலைநகர் நவக்சுட்டில் ஆபிரிக்க நாடுகள் செய்ததுபோன்று ஆபிரிக்க நாடுகள் தமது அபிப்பிராயத்தை வெளியிட்டபோதிலும், ஆபிரிக்க நாடுகள் இராணுவ நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தபோது, ஆபிரிக்க நாடுகளின் அபிப்பிராயம் உதாசீனம் செய்யப்பட்டது மட்டுமல்ல ஆபிரிக்க மக்கள் மீது குண்டுகள் விழத் தொடங்கின.

    இன்றைய நிகழ்வுகள் கடந்த காலத்தில் சீனாவுக்கு நடந்ததை நினைவூட்டுகின்றன. இன்று, லிபியாவில் கலகம் செய்யும் எதிர்ப்பு அரசாங்கமாகிய கட்டாரா அரசாங்கத்துக்கு அங்கீகாரம் வழங்குகின்றனர். இது இரண்டாம் உலக மகா யுத்தத்தின் இறுதியில் சீனாவுக்கு நடந்ததைப்போன்ற ஒரு விடயமாகும். சர்வதேச சமூகமென்று அழைக்கப்படுவது மாவோவின் சீனாவுக்குப் பதிலாக, சீன மக்களின் ஒரே பிரதிநிதியாகத் தாய்வானைத் தெரிவுசெய்தனர். 26 வருடங்கள் கடந்;த நிலையில் ஐக்கிய நாடுகள் அமைப்பு 2758ஆம் இலக்கத் தீர்மானத்தை நிறைவேற்றியது. மனிதர்களின் முட்டாள்தனத்துக்கு ஒரு முடிவுகட்டுவதற்குச் சகல ஆபிரிக்கர்களும் இத்தீர்மானத்தை வாசிக்கவேண்டும். அதன் சொந்த நியதிகளின்பேரில் சீனா அனுமதிக்கப்பட்டது. சீனாவுக்கு வீட்டோ அதிகாரம் வழங்கப்படாவிடில், சீனா அங்கத்தவராவதில்லையென்று சீனா உறுதியாகத் தெரிவித்தது. இக்கோரிக்கை வழங்கப்பட்டு, தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டதும் ஐ.நா. செயலாளர் நாயகத்துக்குச் சீன வெளிநாட்டமைச்சர் எழுத்தில் பதில் வழங்குவதற்கு மேலும் ஒரு வருடம் பிடித்தது. இறுதியில் இப்பதில் 1972 செப்டம்பர் 29ல் அனுப்பிவைக்கப்பட்டது. அது ஆம் என்றும் சொல்லவில்லை, நன்றி என்றும் கூறவில்லை. மாறாக, சீனாவின் கௌரவம் மதிக்கப்படுவதற்கு அவசியமான உத்தரவாதங்களை ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு எடுத்துரைத்தது.

    ஆபிரிக்க மக்களின் ஐக்கியத்தை குலைக்க, வட ஆபிரிக்கா ஆபிரிக்காவின் ஒரு பகுதியல்ல; வட ஆபிரிக்க அரபிய மக்களுக்கும் ஏனைய ஆபிரிக்க நாட்டு கறுப்பு மக்களுக்கும் அதிகளவில் வித்தியாசங்கள் உண்டு; வட ஆபிரிக்கா ஆபிரிக்காவின் ஏனைய நாடுகளைவிடப் பரிணாம வளர்ச்சி, பண்பாட்டு வளர்ச்சி மற்றும் நாகரிக வளர்ச்சி கண்ட இடமாகும்; போன்ற பல இனவாத கருத்துக்களை கடந்த இருநூறு வருடங்களுக்கு மேலாக ஐரோப்பியர் பரப்பி வருகின்றனர். அத்துடன் டுனீசியா, எகிப்து, லிபியா மற்றும் அல்ஜீரியா ஆபிரிக்காவின் ஒரு பகுதியல்ல என்பது போலப் பாசாங்கு செய்கின்றனர். ஒற்றுமையே பலம் என்பதை ஆபிரிக்க நாடுகள் உணர்ந்து கொண்டு செயற்படவேண்டிய கால கட்டம் வந்து விட்டது. தவறினால் மேற்குலக நாடுகளின் கைப்பொம்மைகளினால் ஆபிரிக்க கண்டம் தொடர்ந்தும் சூறையாடப்படுவது தடுக்க முடியாததாகிவிடும்.
    நல்லையா தயாபரன்

    ReplyDelete