Friday, November 05, 2010

தீபாவளி: ஆக்கிரமிப்பாளர்களின் வெற்றித் திருநாள்!


இன்று இந்துக்கள் என அழைத்துக் கொள்ளும் பலர், தீபாவளியை வணிக மயப்படுத்தப் பட்ட பண்டிகையாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். தீபாவளி எதற்கு கொண்டாட வேண்டும் என்று, ஆயிரம் வருடங்களாக கூறப்பட்டு வரும் கதையை இப்போதும் தம் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கிறார்கள். "மக்களுக்கு கொடுமை செய்த நரகாசுரனை கிருஷ்ணன் அழித்த நாள்." என்பதில் மறைந்துள்ள அரசியலை புரிந்து கொள்ள முடியாத படி மதம் கண்ணை மறைக்கின்றது.

நரகாசுரன் யார்? எந்த வகை மக்களை கொடுமைப் படுத்தினான்? அவன் மரணத்தை நாம் எதற்காக கொண்டாட வேண்டும்?

புராணங்கள் என்பன சரித்திரம் எழுதப்படாத காலங்களில் நடந்த சம்பவங்களை, கற்பனை கலந்து கூறப்படும் கதைகள் ஆகும். புராணக் கதைகள், இந்து மதத்திற்கு மட்டுமே பொதுவான ஒன்றல்ல. உலகம் பூராவும் மக்கட் சமுதாயங்கள் மத்தியில் இது போன்ற கதைகள் வழக்கில் இருந்து வந்துள்ளன. புராதன சமுதாயத்தில் இனக்குழுக்களாக வாழ்ந்த மக்கள், தமது வீர புருஷர்களை கடவுளுக்கு ஒப்பிட்டும் நினைவுகூருவது வழக்கம். எழுத்து துறை வளர்ச்சியடையாத காலங்களில், இது போன்ற கதைகளை குழந்தைகளுக்கு கூறுவதன் மூலம் அடுத்த சந்ததிக்கு கடத்துவார்கள். தீபாவளி குறித்த கதையும் அது போன்றதே.

தீபாவளி, நரகாசுரன் குறித்து, ஒன்றல்ல, பல கதைகள் வழக்கில் உள்ளன. அவற்றில் அண்ணளவாக வரலாற்றுடன் ஒத்துப் போகும் கதை ஒன்றை எடுத்து நோக்குவோம். நரகாசுரன் என்பவன் இன்றுள்ள அசாம் மாநிலத்தில், ஒரு நிலையான ராஜ்யத்தை ஆண்டு வந்த அரசன். பிராக்ஜோதிஷா அல்லது காமரூபா என்றழைக்கப் படும் ராஜ்யங்கள் (கி.மு. 4 - 12 ) அசாம் பண்டைய காலங்களில் சுதந்திர நாடாக இருந்தமைக்கு சான்று பகர்கின்றன. அசாம் ராஜ்யத்தை ஆண்ட அரச பரம்பரைகள் யாவும் நரகாசுரன் வழி வந்தவையாக கூறிக் கொண்டன. இந்த நரகாசுரன் குறித்து சரித்திர ஆதாரங்கள் இல்லாத போதிலும், அசாம் புராணக் கதைகளில் இருந்தே நரகாசுரன் குறித்த தகவல்களை பெற முடிகின்றது. அசாமை ஆண்ட, "டனவா" மன்னர்களை போரில் வென்ற நரகாசுரன், "நரகா பரம்பரையை" ஸ்தாபித்தான். இன்றைய அசாம் தலைநகரமான கௌஹாத்தி நரகாரசுரனின் ராஜ்யத்திலும் தலைநகரமாக இருந்துள்ளது.

பெண் தெய்வமான சக்தியை வணங்கும் சாக்தவ மதமும், தாந்திரிய மதமும், நரகாசுரன் காலத்தில் இருந்துள்ளன. இன்றைக்கும் அந்த மதங்களுக்குரிய புனித ஸ்தலங்களை கௌஹாத்தி நகரில் தரிசிக்கலாம். "அசுரன்" என்பது அந்தப் பகுதியில் வாழ்ந்த மக்களால் பெருமைக்குரிய கௌரவப் பெயராக கருதப் பட்டிருக்கலாம். அதனால் மன்னர்கள் தமது பெயருக்குப் பின்னால் அசுரன் எனச் சேர்த்துக் கொண்டார்கள். புராதன ஈரானில், அசுரர்கள் என்பவர்கள் மண்ணின் மைந்தர்களாக கருதப் பட்டனர். அவர்களை கெட்டவர்களாக சித்தரிக்கும் எந்தக் கதையும் அந்த நாட்டில் இல்லை. மேலும் இஸ்லாமுக்கு முந்திய சாராதூசரின் மதமானது, "அசுரா மாஸ்டா" என்பவரை முழுமுதற் கடவுளாக கொண்டிருந்தது.

இந்து மதத்தவர்கள் கூறும் நரகாசுரன் கதையில் இருந்தே, அன்று என்ன நடந்திருக்கும் என ஊகிக்க முடியும். நரகாசுரன், அசாமில் இன்னொரு ராஜ்யத்தை நிர்வகித்த பானாசுரனுடன் கூட்டுச் சேர்ந்து, பிற தேசங்கள் மீது படையெடுத்து வெற்றி கொண்டான். நரகாசுரனின் சாம்ராஜ்யம் விரிவடைந்து கொண்டே சென்றது. நரகாசுரன், ஆரிய மன்னன் இந்திரனின் தேசத்தையும் கைப்பற்றி, சூறையாடினான். இந்திரன் தேசத்து பொக்கிஷங்களை கொள்ளையடித்ததுடன், 16000 பெண்களையும் சிறைப்பிடித்து சென்றான். இந்து மதம் அதனை தேவ லோகம், அல்லது சுவர்க்கம் என்று வர்ணிக்கின்றது. பூமியில் உள்ள நாடுகளை எல்லாம் வென்ற நரகாசுரன், தேவ லோகத்திற்கும் அதிபதியாகினான் என்கிறது.

மத்திய ஆசியாவில் இருந்து படையெடுத்து வந்த ஆரிய இனங்கள் வட இந்தியாவில் இருந்த தேசங்களை வெற்றி கொண்டன. அவர்களின் தலைவனான இந்திரன் காலத்திலேயே, போரில் வெற்றிகளை குவித்து, அதிக நிலங்களை ஆக்கிரமிக்க முடிந்தது. இந்திரனின் தேசத்தில் வாழ்ந்த ஆரிய இனத்தவர்கள் தேவர்கள் என்றும், வெல்லப்படாமல் எஞ்சியிருந்த இந்தியப் பகுதிகளில் வாழ்ந்த மக்களை அசுரர்கள் என்றும் அழைக்கப் பட்டனர். இந்திரன் இந்தியப் படையெடுப்புகளின் போது, அங்கு வாழ்ந்த பூர்வீக மக்களை இனப்படுகொலை செய்துள்ளான். அவர்களது செல்வங்களை கொள்ளையடித்து சென்றுள்ளான். இவற்றை ரிக் வேதம் குறிப்பிடுகின்றது. அநேகமாக நரகாசுரன் இந்திரன் தேசத்தை கைப்பற்றிய செயலானது, ஒரு பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கலாம்.

"பூர்வீக இந்தியக் குடிகளான அசுரர்கள், ஆரியர்களின் வல்லரசான இந்திர லோகத்தின் மீது படையெடுப்பதா? யாராலும் வெல்லப்பட முடியாதவர்கள் என்று பேரெடுத்த தேவர்கள், அசுரர்களின் சாம்ராஜ்யத்தில் அடிமைகளாக வாழ்வதா? அது ஆரிய மேலான்மைக்கே அவமானமல்லவா?"
தேவர்கள் நரகாசுரனின் கொடுமை குறித்து விஷ்ணுவிடம் முறையிட்டதாகவும், விஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணர் நரகாசுரனை போரில் கொன்றதாகவும் புராணக் கதை கூறுகின்றது. தனது மரணத்தை மக்கள் தீப ஒளியேற்றி கொண்டாட வேண்டும் என நரகாசுரன் கேட்டுக் கொண்டதாகவும், அது தான் தீபாவளி என்றும் அந்தக் கதை முடிகின்றது. நரகாசுரன் மரணமடைந்த தினத்தை, மக்கள் வருடந்தோறும் தீப ஒளியேற்றி நினைவு கூர்ந்திருக்கலாம். ஆனால் பல நூறு வருடங்களுக்குப் பின்னர், அந்த துக்க தினக் கொண்டாட்டத்தின் அர்த்தத்தை மாற்றியிருக்கலாம். நரகாசுரனின் இறப்புக்குப் பின்னர், அவன் ஆண்ட நிலங்கள் யாவும் தேவர்கள் வசம் வந்திருக்கும். நரகாசுரனின் சொந்த இன மக்களையும் அவர்களே ஆண்டிருப்பார்கள். எப்போதும் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களால் வரலாற்றை மாற்றி எழுதுவது இலகு.

தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்கு பல்வேறு கதைகள் உண்டு. இராமர் வனவாசத்தின் பின்னர் திரும்பி வந்ததைக் கொண்டாடுவதாகவும் ஒரு காரணம் கூறப்படுகின்றது. மேலும் ஜெயின் மதத்தவர்களும், சீக்கியர்களும் வெவ்வேறு காரணங்களுக்காக தீபாவளி கொண்டாடுகின்றனர். தீபங்களை வரிசையாக அடுக்கி வைத்து கொண்டாடும் முறை இந்து மதத்திற்கு முந்தியது. திபெத்தியர்களும், சீனர்களும் வெளிச்சக் கூடுகளை அமைத்து கொண்டாடுவார்கள். இலங்கையில் பௌத்த மதத்தினரும் அவ்வாறே வெசாக் பண்டிகை கொண்டாடி வருகின்றனர். ஆகவே ஆரியரின் வருகைக்கு முன்பே, இந்தியாவில் தீபாவளி கொண்டாடப் பட்டிருக்க வேண்டும். அத்தோடு "நரகாசுரன் அழிப்புக்கு" முன்னரும் அது இந்தியாவின் முக்கிய பண்டிகையாக இருந்திருக்கும்.

ஆரியர்கள் இந்திய உப கண்டத்தை ஆக்கிரமித்த வெற்றித் திருநாளை, தீபாவளியாக மாற்றி கொண்டாடி வந்திருப்பார்கள். நரகாசுரனின் வீழ்ச்சிக்குப் பின்னர், இந்தியா முழுவதும் அவர்களின் ஆளுமையின் கீழ் வந்திருக்கும். ஆகவே நரகாசுரன் மரணத்தை கொண்டாட வேண்டுமென்பது அவர்களது நோக்கில் சரியானது தான். ஆனால் அடிமைப் பட்ட மக்கள், தமது தாயகம் ஆக்கிரமிக்கப் பட்ட தினத்தை கொண்டாட முடியுமா? தமது மூதாதையர்கள் ஆரியர்களால் இனவழிப்பு செய்யப்பட்ட தினத்தை மகிழ்வுடன் கொண்டாட முடியுமா? அமெரிக்க கண்டத்தில் செவ்விந்திய பழங்குடியினரை இனவழிப்பு செய்த "கொலம்பஸ் தினம்" விமரிசையாக கொண்டாடப் படுகின்றது. எப்போதும் வென்றவர்கள் தான் வரலாற்றை எழுதி வந்துள்ளனர். அதனால் தான் தீபாவளியும், கொலம்பஸ் தினமும் சாதாரண பண்டிகைகளாக தெரிகின்றன. போரில் வென்றவர்கள் தம்மை நல்லவர்களாகவும், தோற்றவர்களை கெட்டவர்களாகவும் வரலாற்றை திருத்தி எழுதுவார்கள். அடுத்து வரும் சந்ததிகளுக்கு தாம் அடிமைகளின் வாரிசுகள் என்ற எண்ணமே மறந்து போகும்.

************************

மேலதிக விபரங்களுக்கு:
Diwali
Narakasura
Kamarupa

14 comments:

  1. தீபாவளி அலசல் அருமை... ஆரியம் சாடப்படுவதாகவே அமைந்துள்ளது பதிவு. தீபாவளியுடன் கொலம்பஸ் தினம் ஒப்பிடல் பிடித்துள்ளது. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. என்னங்க ஜாதிகள் இல்லை எல்லாம் சமம் என்கிறீர்கள். சரி நம்பினால் திடீர் என்று ஆரியர்கள் ஒரு இனம் அசாமில் வாழ்ந்தவர்கள் ஒரு இனம் என்றுச் சொல்கிறீர்கள். அப்ப மனிதன் பரிணாமத்தில் பிறக்கவில்லையா?எல்லாரின் மூதாதையர்கள் ஒன்றில்லையா?

    ReplyDelete
  3. உங்கள் கூற்றுப் படி பிற தேசத்தின் மீது படை எடுப்பது நல்லது என்கிறீர்களா? தான் சொந்தம் என்று வந்தால் அவர் தப்பே செய்தாலும் தப்பில்லை என்று சொல்ல வேண்டுமா? விளக்கம் கிடைக்குமா?

    ReplyDelete
  4. ஒரு மதத்தை அழிப்பதற்கு மற்ற மதத்தினர்(முஸ்லீம்,கிருத்துவர்) செய்வது

    1.போலி(இந்து)களை இனம் கண்டு கொள்வது. (கலையரசன்)

    2.அவர்கள் படைப்பாளிகளாக இருந்தால் மிகவும் நலம்.(புத்தகம் அப்படி இப்படி கிறுக்குவது)

    3.அந்த மதத்தின் மூலங்களை அதன் அடிப்படைகளை அவரை போன்ற போலிகள் வைத்த கதைகளின் மூலம் அழிக்க முனைவது.(இதே போன்ற பதிவுகள்)

    3. இதனால் இதன் மூலம் சில மதில்பூனைகளை மடக்குவது.(நாத்திகர் என்று உளறும் சிலர்)

    4. பிறகு அவர்கள் மதத்தின் கதைகள் அப்படி பொய் இல்லை என்று உளறுவது.(அதே போலிகளின் ஆதாரங்கள் மூலம்)(குரானின் கதைகள்)

    வழக்கமாக புலம் பெயர்ந்தவர்கள் கிறுத்துவத்தைதான் தூக்கிபிடிப்பார்கள்.
    ஓ... நீங்கள் மலையக தமிழரா?
    தொடரட்டும் உங்கள் மா... வேலை.

    ReplyDelete
  5. //தமது மூதாதையர்கள் ஆரியர்களால் இனவழிப்பு செய்யப்பட்ட தினத்தை மகிழ்வுடன் கொண்டாட முடியுமா?//

    புது தகவல்கள்....!

    ராவணனின் பூர்வீகம் தமிழகம் என்று எங்கோ படித்ததாக நினைவு. இயன்றால் இதனை பற்றிய விளக்கம் கூற முடியுமா ??

    ReplyDelete
  6. இந்தியன்6 November 2010 at 06:26

    ஜெர்மன், இஸ்ரேல், அமெரிக்கா ஏகாதிபத்தியம் பதிவு போட்டு அலுத்து போச்சா . இந்தியா பக்கம் பார்வை திரும்பி இருக்கு.

    ReplyDelete
  7. ஆரிய இனம் மட்டுமே சிறந்தது என்றுதானே இந்து சமயம் சொல்கிறது ??? அப்படி இருக்கும் பொழுது நம் முன்னோர் (பொதுவாக சேர,சோழ ,பாண்டிய அரசர்கள் அவர்களிடம் தான் அதிகாரம் அப்பொழுது ) தாம் அசுரர்கள் என்று தெரிந்தும் அவர்களும் அதை ஏன் பின்பற்றினார்கள் ???

    ReplyDelete
  8. //ஆரிய இனம் மட்டுமே சிறந்தது என்றுதானே இந்து சமயம் சொல்கிறது ??//
    ஆரியர்களின் மதம் வேறு யாரை சிறந்தவர்கள் என்று சொல்லப் போகிறது?

    //நம் முன்னோர் (பொதுவாக சேர,சோழ ,பாண்டிய அரசர்கள் அவர்களிடம் தான் அதிகாரம் அப்பொழுது ) தாம் அசுரர்கள் என்று தெரிந்தும் அவர்களும் அதை ஏன் பின்பற்றினார்கள் ??? //

    இவர்களிலே பாண்டியர்கள் ஆரியக் கலப்பற்ற தூய தமிழர்கள். சேரர்கள் மலையாளிகளுக்கு முன்னோர். சோழர்கள் ஆரியர்களின் மொழியை, கலாச்சாரத்தை, மத வழிபாட்டை ஏற்றுக் கொண்டவர்கள். ஆங்கிலோ இந்தியர்கள் போல ஆரியமயப்பட்ட தமிழர்கள் என்று அவர்களை அழைக்கலாம். "அசுரர்கள் என்றால் கெட்டவர்கள்" என்று சோழர்கள் ஆரியரின் மொழியிலேயே பேசி வந்தது மட்டுமல்ல, அதை நம்பி வந்திருப்பார்கள். சோழர்கள்
    மட்டுமல்ல, வேறு பல இந்திய ராஜ வம்சங்கள் ஆரியரின் கலாச்சாரத்தை சிறந்ததாக பின்பற்றி வந்துள்ளன.

    இந்த தீபாவளிக் கட்டுரையில் வரும் அசுரர்கள் திராவிடர்கள் அல்ல. அவர்கள் பார்வைக்கு சீனர்கள் போலிருப்பார்கள். அதாவது இன்றைக்கு அசாமில் வாழும் பூர்வீக மக்களைக் குறிக்கும்.

    ReplyDelete
  9. குர் ஆன், பைபிள் இரண்டும் சாத்தானின் கண்கள் மாதிரியாம்! சுவிஸில் எரிக்க முயன்ற இந்து கடும்போக்காளர்கள் கைது

    http://www.manithan.com/index.php?subaction=showfull&id=1288987039&archive=&start_from=&ucat=1&

    ReplyDelete
  10. தீபங்கள் சம்மந்தமான பண்டிகைகளை இந்தியர்கள், சீனர்கள், தீபெத்தியர்கள் மட்டுமல்லாது புராதன எகிப்தியர்களும்
    கொண்டாடியிருக்கிறார்கள். எகிப்தியர்களின் பண்டிகையும் தீபாவளி கொண்டாடபடும் காலப்பகுதியிலேயே கொண்டா
    டப்ப்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.
    ஆதாரம் : Herodutus, Book 2 and http://www.whiterosesgarden.com/book_of_shadows/other_books/egyptian_magick/maps_misc/egyptian_holidays.htm

    ReplyDelete
  11. தகவலைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி, காகிதப்பூ. எகிப்தியர்களின் தீபப் பண்டிகை குறித்து நானும் இப்போது தான் அறிகிறேன்.

    ReplyDelete
  12. பல புதிய தகவல்கள்!

    ReplyDelete
  13. எப்படி இந்துவாக்கப்பட்டோம் என தெரியாமலேயே இந்து என பெருமையோடு இச் சமூகம் கூறிக் கொள்கிறது.

    அதனால்தான் பஜக,போன்ற இந்து அமைப்புகள், இந்தியா இந்து தேசம் என்று சொல்லி திரிகின்றனர்.

    முஸ்லீம்கள் பாகிஸ்தான் போக வேண்டும் என்கின்றனர்

    ReplyDelete
  14. மிக்க நன்றி வேல் முருகன் அவர்களே! முதன் முறை என் மனம் நெகிழ்ந்திருக்கிறது ஒரு முருகன் என்னை வெளியே செல்லவேண்டாம்(பாகிஸ்தான் ) என்று சொல்லியது. இன்று நான் உண்ணும் உணவு என்னாட்டினுடையது என்ற எண்ணம் உண்டு . நன்றி பாய்( மன்னிக்கவும் சகோதரரே என்று உருதில் அழைத்தேன்)

    ReplyDelete