Thursday, November 04, 2010

ஐரோப்பாவின் தீண்டத்தகாதவர்கள்

ஐரோப்பிய நாடுகள் முழுவதிலும், தீண்டத்தகாதவர்களாக கருதி ஒடுக்கப்பட்ட, "ரோமா" நாடோடி இன மக்களைப் பற்றி வெளியுலகம் அதிகம் அக்கறைப் படுவதில்லை. காலங்காலமாக ஊருக்கு ஒதுக்குப்புறமாக கூடாரங்களை அமைத்து வசித்த ரோமா இனத்தவர்கள், பெரும்பான்மை சமூகத்தில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. அவர்களுக்கு யாரும் வேலை கொடுப்பதில்லை. அதனால் நிரந்தர வறுமைக்குள் வாழும் படி நிர்ப்பந்திக்கப் பட்டனர். ஹிட்லரின் நாசிச ஆட்சிக் காலத்தில் யூதர்கள் மட்டும் அழிக்கப் படவில்லை. இலட்சக் கணக்கான ரோமா மக்கள் ஹிட்லரின் இனவழிப்புக்கு பலியானார்கள். இரண்டாம் உலகப் போர் முடிவில், யூதர்களுக்கு இஸ்ரேல் என்ற தாயகத்தை உருவாக்க முன்வந்த வல்லரசுகள், ரோமா மக்களின் பிரச்சினையை கண்டுகொள்ளவில்லை.

ரோமா இன மக்கள், இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர், இந்தியாவில் இருந்து நாடோடிக் கூட்டமாக ஐரோப்பாவிற்குள் வந்தவர்கள். அந்த மக்களின் தாயகம், வட இந்தியாவில், அல்லது இன்றைய பாகிஸ்தானில் இருந்திருக்க வேண்டும். அனேகமாக இஸ்லாமிய படையெடுப்புகளால் காரணமாக அகதிகளாக புலம்பெயர்ந்திருக்கலாம். இது வரை உறுதியான வரலாற்றுத் தகவல்கள் இல்லா விட்டாலும், சரித்திர ஆசிரியர்கள் அவ்வாறு கருதுகின்றனர். ரோமா மக்கள் ஒரு காலத்தில் இந்து மதத்தை பின்பற்றியவர்கள். அவர்களின் ஸ்வாஸ்திகாவை (இந்துக்களின் புனிதச் சின்னம்), பிற்காலத்தில் ஹிட்லர் நாஸி கட்சியின் சின்னமாக்கியதாக ஒரு கதையுண்டு. ஆயிரக் கணக்கான வருடங்கள் ஐரோப்பாவில் வாழ்வதால், இன்றைய ரோமா இனத்தவர்கள் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுகின்றனர். ஆனால் நிறவெறி கொண்ட வெள்ளையின கிறிஸ்தவர்கள், அவர்களை சகோதரர்களாக ஏற்றுக் கொள்ளவில்லை.

கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலேயே பெரும்பான்மையான ரோமா இனத்தவர்கள் வாழ்கின்றனர். ரொமானியாவில் அவர்களின் எண்ணிக்கை அதிகம். காலங்காலமாக ஒடுக்கப்பட்ட ரோமா மக்களுக்கு, கம்யூனிச ஆட்சிக் காலத்தில் தான் விடிவு காலம் பிறந்தது. கம்யூனிஸ்ட்கள் மட்டுமே அவர்களை சக மனிதர்களாக மதித்தனர். குடிசைகளில் வாழ்ந்த ரோமா மக்களுக்கு அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டிக் கொடுத்தார்கள். அனைவருக்கும் கல்வி வசதி, வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தார்கள். (கீழேயுள்ள வீடியோவில் வரும், ஒரு வேலையிழந்த ரோமா தொழிலாளியின் சாட்சியத்தை பார்க்கவும்)

முதலாளித்துவத்தின் மீள்வருகையினால், அனைத்து வசதிகளும் மாயமாக மறைந்து போயின. அடுக்கு மாடிக் குடியிருப்புகள், குப்பை மேடுகளைக் கொண்ட சேரிகளாகின. அவர்களின் தொழில்கள் பறிக்கப்பட்டு வெள்ளயினத்தவர்களுக்கு வழங்கப்பட்டன. இன்று 95 % ரோமா மக்கள் வேலையற்றவர்களாக வறுமையில் வாடுகின்றனர். ஒரு ரோமா இனத்தவர் காலியான பணியிடத்திற்கு விண்ணப்பித்தால், எந்த ஒரு நிறுவனமும் வேலைக்கு எடுப்பதில்லை. அதே இடத்திற்கு விண்ணப்பிக்கும் வெள்ளயினத்தவர்களுக்கு வேலை கொடுக்கிறார்கள். வறுமை, தொழில் வாய்ப்பின்மை காரணமாக பலர் திருடுகின்றனர். ஆனால் அனைத்து ரோமா மக்களையும் திருடர்களாக கருதுமளவிற்கு, வெள்ளையரிடையே இனத்துவேஷம் காணப்படுகின்றது.

அரச அதிகாரிகள்: "ரோமா மக்கள் சோம்பேறிகள், அல்லது சிவில் சமூகத்துடன் சேர்ந்து வாழ முடியாதவர்கள்." என்று குற்றஞ்சாட்டுகின்றனர். செக், ஸ்லோவாக்கிய குடியரசுகளில் ரோமா மக்கள் நெருக்கமாக வாழும் நகரப் பகுதியை சுற்றி மதில் கட்டப் பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம், இனப்பாகுபாடு காட்டும் மதிலை அகற்றுமாறு கோரியும், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெர்லின் மதில் பற்றி இதுவரை எண்ணற்ற ஆவணப்படங்கள், செய்திகள் வந்து விட்டன. ஆனால் "ஜனநாயகம் மீட்கப்பட்ட" செக், ஸ்லோவாக்கிய நாடுகளில் புதிதாக கட்டப்பட்ட நிறவெறி மதில்கள் குறித்து, எந்தவொரு ஊடகமும் பேசுவதில்லை.

"முதலாளித்துவத்தின் பொற்காலம்" ஆரம்பமாகிய கடந்த 20 வருடங்களில், பெருமளவு ரோமா மக்கள் மேற்கு ஐரோப்பாவிலும், கனடாவிலும் அகதிகளாக தஞ்சம் கோரியுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் விரிவாக்கத்தின் பின்னர் தளர்த்தப்பட்ட விசா கெடுபிடிகளை பயன்படுத்தி, வேலை தேடி மேற்கு ஐரோப்பா செல்கின்றனர். ஆனால் "மனித உரிமைகளை மதிக்கும்" மேற்கு ஐரோப்பிய நாடுகள் அவர்களை இரு கரம் நீட்டி வரவேற்கவில்லை. இத்தாலி, பிரான்ஸ் ஆகிய நாடுகள், ரொமானியாவில் இருந்து வந்த ரோமா மக்களை திருப்பி அனுப்பினார்கள்.(
France sends Roma Gypsies back to Romania) ரொமானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்த நாடென்பதால், ரோமா மக்களும் ஐரோப்பிய பிரஜைகள் ஆவர். ஆகவே ரோமா மக்களின் வெளியேற்றம் சட்டவிரோதம் என்று ஐரோப்பிய ஒன்றியம் தீர்ப்பளித்தது. ஆனால் இத்தாலியும், பிரான்சும் அந்த சட்டத்தை தூக்கி குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு, தொடர்ந்து ரோமா மக்களை நாடு கடத்திக் கொண்டிருக்கின்றனர்.
Europe's Roma community still facing massive discrimination


பெல்ஜியத்தின் ஊடகவியலாளர் சிலர், ஸ்லோவாக்கியா சென்று ரோமா மக்களின் அவல வாழ்வை ஆவணப்படமாக எடுத்துள்ளனர். அந்த ஆவணப்படம் ஐந்து பகுதிகளாக பெல்ஜிய தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டது. அதிலே வந்த வீடியோ ஒன்றை இங்கே இணைத்துள்ளேன். ரோமாக்களின் அவலத்தை புரிந்து கொள்ள மொழி தடையாக இருக்காது. இந்த வீடியோவில் நீங்கள் பார்க்கும் இடம், எங்கோ ஒரு வறிய மூன்றாம் உலகை சேர்ந்ததல்ல. உலகப் பொருளாதாரத்தில் வெற்றி நடை போதும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு பகுதி.

6 comments:

  1. நல்ல பதிவு .. மிக்கநன்றி ! தொடர்க உங்கள் பணி...

    ReplyDelete
  2. தகவல்களுடனான மிக நல்ல பதிவு.

    ReplyDelete
  3. Dr.எம்.கே.முருகானந்தன், தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை, தங்கள் ஆதரவுக்கு நன்றி.

    ReplyDelete
  4. இதற்கான பின்னூட்டம் பெரிதாகப் போகும் எனக்கருதியதாலேயே நான் தனிப்பதிவாக இட்டேன். பார்க்க: http://dondu.blogspot.com/2010/11/blog-post_06.html

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  5. ஆயிரக் கணக்கான வருடங்கள் ஐரோப்பாவில் வாழ்ந்து கிறிஸ்தவ மதத்தை பின்பற்றும் ரோமா இனத்தவர்களை வெறுக்கும் வெள்ளையின கிறிஸ்தவர்கள் மற்ற மதத்தை சேர்த்தவர்களை மதிப்பார்களா ???

    ReplyDelete