Saturday, October 30, 2010

மேலைத்தேய நிதியில் நடந்த தமிழ் இனப்படுகொலை


"இராணுவ, தொழில்நுட்ப உதவிகள் யூத தேசத்தின் ஊடாக சிறிலங்காவுக்கு வழங்கப்பட்டன. அமெரிக்காவின் ஒப்புதலின் பேரிலேயே அது நடைபெற்றது. அமெரிக்க தூதுவராலயத்தில் இஸ்ரேலிய நலன்பேணும் பிரிவு திறந்து வைக்கப்பட்டது. சிறிலங்கா கடற்படையை பலப்படுத்த இஸ்ரேல் உதவியது. அதனோடு ஷின்பெத் ஆலோசகர்கள் விசேஷ அதிரடிப் படைக்கு (STF) பயிற்சியளிக்க வந்தார்கள்."
 - விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியர் அன்டன் பாலசிங்கம் எழுதிய War and Peace நூலில் இருந்து.

தமிழ் பேசும் மேற்கத்திய விசுவாசிகள், தமது இயல்பான கம்யூனிச வெறுப்பின் காரணமாக சீனா, ரஷ்யா பற்றி எல்லாம் திட்டிக் கொண்டிருப்பார்கள். ஆனால் ஈழத்தில் தமிழ் இனவழிப்புக்கு இஸ்ரேலும், மேற்கத்திய நாடுகளும் வழங்கிய உதவி குறித்து வாய் திறக்க மாட்டார்கள். தமிழ் ஊடகங்களும் அவர்களின் ஆதிக்கத்தில் இருப்பதால், அந்த தகவல்களை தமிழ் மக்கள் அறிய விடாது இருட்டடிப்புச் செய்வார்கள்.


சிறிலங்கா அரசு நடத்தி முடித்த தமிழ் இனப்படுகொலைக்கு அனுசரணை வழங்கிய மேலைத்தேய நாடுகள் குறித்த சிறிய ஆவணம் இது. அந்த தகவல்களை தொகுத்து வெளியிட்டுள்ள அவுஸ்திரேலிய இடதுசாரிக் கட்சியான Green Left க்கு நன்றி. (Green Left: Sri Lanka: The West backs genocide)


ஒரு சில வாய்வழி கண்டனங்களைத் தவிர, ஐக்கிய நாடுகள் சபையோ அல்லது மேற்கத்திய நாடுகளோ இலங்கை அரசின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இலங்கையில் இனப்படுகொலை நடந்து கொண்டிருக்கும் பொழுது, ஐ.நா. பாதுகாப்பு சபை, ஐ.எம்.எப். வழங்கிய US$1.9 பில்லியன் கடனை தடுக்கவில்லை. கார்டியன் பத்திரிகை தகவலின் படி, "சிறிலங்கா மீது அத்தகைய தண்டனை தேவையில்லை என்று 15 உறுப்பினர் குழுவைக் கொண்ட பாதுகாப்பு சபை முடிவெடுத்தது."

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் Robert Blake ஒரு நேர்காணலில் இவ்வாறு கூறினார்: "பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவதற்கு அமெரிக்கா இலங்கை அரசுக்கு உறுதியான ஆதரவை தெரிவிக்கின்றது.... இலங்கை இராணுவத்திற்கு தேவையான பயிற்சியையும், ஆயுத தளபாடங்களையும் அமெரிக்கா வழங்கி வருகின்றது." ( Human Rights Features Report, June 2007 )

அமெரிக்கா,"சர்வதேச இராணுவ கற்கைகளுக்கும் பயிற்சிக்குமான திட்டத்தின்" (IMET) கீழ், இலங்கைக்கு வருடந்தோறும் $500,000 வழங்கி வருகின்றது. அந்நிய இராணுவ நிதியுதவியின் கீழே 2006 ம் ஆண்டு, மேலதிகமாக ஒரு மில்லியன் டாலரும், அந்நிய நாட்டு நிதியுதவியாக $7.4 மில்லியன் டாலரும் வழங்கப்பட்டன.

2007 ம் ஆண்டிலிருந்து அமெரிக்கா இலங்கைக்கு நேரடி இராணுவ உதவி வழங்குவதை நிறுத்தியது. இருப்பினும் போர் நடந்து கொண்டிருந்த வேளை, இந்தியாவும், அமெரிக்காவும் புலனாய்வுத் தகவல்களை வழங்கின. (Christian Science Monitor ) இந்த உதவிகள் யாவும் இலங்கை அரசின் யுத்த செலவினத்திற்கு பெரிதும் உதவியுள்ளன.

பிரிட்டன் கூட இலங்கைக்கான ஆயுத விற்பனையில் நேரடியாக ஈடுபட்டது. பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் Joan Ruddock : "எனது விசாரணையின் படி கடந்த காலாண்டில் மட்டும் 7 மில்லியன் பவுன் பெறுமதியான ஆயுதங்கள் விற்றமைக்கான தரவுகள் கிடைத்துள்ளன. கவச வாகனங்கள், கனரக இயந்திரத் துப்பாக்கிகள், வேறு இராணுவ உபகரணங்கள் போன்றவற்றை விற்க அனுமதி வழங்கப் பட்டிருந்தது."

"2006 க்கும் 2008 க்கும் இடைப்பட்ட காலத்தில் 12 மில்லியன் பவுன் பெறுமதியான பிரிட்டிஷ் ஆயுதங்கள் இலங்கைக்கு விற்கப்பட்டுள்ளன." (Socialist Worker, May 12)


இலங்கையில் தமிழ் இனப்படுகொலை நடந்து கொண்டிருந்த காலத்தில் அவுஸ்திரேலிய பசுமைக் கட்சி உறுப்பினர் Bob Brown, ஒரு கண்டனப் பிரேரணையை முன்மொழிந்தார். ஆனால் அவுஸ்திரேலிய அரசு அதனை விவாதத்திற்கு விட மறுத்து விட்டது. அதற்கு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறிய காரணங்கள் பின்வருமாறு:
- "படுகொலைக்கு எந்தத் தரப்பு பொறுப்பு என்பது தெளிவில்லாமல் உள்ளது." - Labor Senator, Joe Ludwig.
- "தமிழர் தரப்பினாலேயே இனப்படுகொலை செய்யப்பட்டது." - Labor Senator, Steve Hutchins (Parliamentary Debate )


2007-08 ஆண்டுகளில், அவுஸ்திரேலியாவுக்கும், இலங்கைக்குமிடையில் $280 மில்லியன் வர்த்தகம் இடம்பெற்றதை இங்கே குறிப்பிட வேண்டும்.

பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த இந்து சமுத்திரத்திற்கான வல்லரசுப் போட்டிக்குள் இலங்கை சிக்கிக் கொண்டுள்ளது. இந்து சமுத்திரம் பூமியின் மிகப்பெரிய சமுத்திரம் அல்ல. ஆனால் உலகில் 70 % எண்ணெய்க் கப்பல்களும், 50 % சரக்குக் கப்பல்கள் இந்து சமுத்திரத்தின் ஊடாகவே பயணம் செய்கின்றன. இந்து சமுத்திரத்தை யார் கட்டுப்படுத்துகிறார்களோ, அவர்கள் முழு ஆசியாவையும் கட்டுப்படுத்துகின்றனர்." என்றார் அமெரிக்க கடற்படை தளபதி Alfred Maher.

இந்தக் காரணத்தினால் தான் சீனாவும் இலங்கை இராணுவத்திற்கு உதவி வழங்கியது. $37.6 மில்லியன் சீன ஆயுதங்களை வாங்குவதற்கு இலங்கை அரசு ஒப்பந்தம் செய்தது. ஆறு F7 யுத்த விமானங்களை சீனா இலவசமாகவே வழங்கியது. (Stockholm International Peace Research Institute ) "சீனாவின் நோக்கம் புரிந்து கொள்ள கடினமான ஒன்றல்ல.

சீனாவுக்கான சவூதி எண்ணெய் விநியோகத்தை பாதுகாக்கவும், கப்பல்களுக்கு எண்ணெய் நிரப்பவும் $1 billion செலவில் ஒரு துறைமுகத்தை கட்டிக் கொண்டிருக்கிறது."(The Times) இலங்கை அரசு அந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த பின்னரே, சீனா வேண்டிய ஆயுத, இராஜதந்திர உதவிகளை செய்தது.

3 comments:

  1. பல தகவல்களை தொடர்ந்து உங்கள் பதிவின் வாயிலாக தெரிந்து கொண்டிருக்கிறேன். சீனாவின் சுயநலம்.....?!! :((

    ReplyDelete
  2. சீனா இலங்கை முழுவதிலும் கால் பதிக்க இந்தியா அனுமதித்ததின் தந்திரம் என்ன ???

    ReplyDelete
  3. பிரதீப், சீனா இலங்கை முழுவதும் கால் பதிக்கவில்லை. ஏனெனில் அரைவாசிக்கும் மேலான இடங்களில் இந்தியாவின் கால் தான் தெரிகின்றது. இலங்கை முழுவதும் ஒரு சுதந்திரமான சந்தை. காசு வைத்திருக்கும் யாரும் அங்கே சென்று எதையும் வாங்கலாம். அதனால் சீனா எதையாவது வாங்க விரும்பினால் இந்தியா தடுக்க முடியாது, சந்தையில் யார் அதிக விலை கேட்கிறார்களோ அவர்களுக்கு விற்கப் பட்டு விடும்.

    ReplyDelete