Tuesday, September 28, 2010

ஊடகங்கள் எவ்வாறு எம்மை ஏமாற்றுகின்றன?


சுமார் இருபது வருடங்களுக்கு முன்னர், சோவியத் யூனியனில் லெனின், ஸ்டாலின் சிலைகளை தள்ளி விழுத்தும் காட்சிகளை தொலைக்காட்சிகள் காண்பித்தன. தொலைக்காட்சி என்ற சக்தி வாய்ந்த ஊடகம் வளர்ச்சியடைந்த காலகட்டம். உலகம் முழுவதும் பரவலாக வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வந்து விட்டது. மேற்குலகில் கேபிள் தொடர்பு வீடுகளை இணைத்து விட்டிருந்தது.

கம்யூனிச வீழ்ச்சியின் அடையாளமாக சிலை உடைப்பு வைபவங்களை உலகம் முழுவதும் மக்கள் கண்டுகளித்தார்கள். ஊடகங்கள் சொல்ல வந்த செய்தி கச்சிதமாக மக்கள் திரளிடம் போய்ச் சேர்ந்தது. கம்யூனிச நாடுகளிலேயே மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து கம்யூனிசத்தை வரலாற்றின் குப்பைக் கூடைக்குள் தூக்கி வீசி விட்டார்கள். நல்லது. உண்மையில் உலகில் நடப்பதை மட்டுமே ஊடகங்கள் தெரிவிக்கின்றனவா? ஊடகங்கள் எமக்கு சொல்லாத சேதிகள் பல உள்ளன.

முன்னை நாள் கம்யூனிச நாடுகளில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை யாரும் மறுக்கவில்லை. கம்யூனிஸ்ட்கள் ஆட்சி செய்த காலத்தில் பலதரப்பட்ட அரசியல் அமைப்புகள் இரகசியமாக இயங்கி வந்தன. லிபரல்கள், சமூக ஜனநாயகவாதிகள், பாசிஸ்ட்கள், தேசியவாதிகள் இவ்வாறு பலதரப்பட்ட அரசியலை சேர்ந்தவர்கள் தமது காலம் வரும் வரை காத்திருந்தார்கள்.

கோர்பசேவ், யெல்சின் கும்பல் கம்யூனிசத்தை கைவிட்டு விட்டு முதலாளித்துவத்தை தழுவிக் கொண்டனர். தொடர்ந்து அனைத்து அரசியல் அமைப்புகளுக்கும் சுதந்திரம் வழங்கி ஆதரவை தேடிக் கொண்டனர். புதிதாக சுதந்திரம் கிடைத்த மகிழ்ச்சியில் அவர்கள் லெனின், ஸ்டாலின் சிலைகளை நெட்டித் தள்ளினார்கள். அதுவும் மாஸ்கோ போன்ற சில முக்கிய நகரங்களில் மட்டுமே இடம்பெற்றது. இதைத் தான் "பெருந்திரள் மக்கள் சிலைகளை விழுத்தியதாக" ஊடகங்கள் பிரச்சாரம் செய்தன.

எதற்கும் நாம் இதனை இன்னொரு கோணத்தில் இருந்து பார்ப்போம். ஈராக் போரை எதிர்த்து அமெரிக்காவிலேயே லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற அரச எதிர்ப்பு ஊர்வலங்கள் நடந்தன. அவர்கள் நியூயோர்க் நகரில் அமெரிக்க குடியரசை நிறுவிய ஜோர்ஜ் வாஷிங்டன் சிலையை உடைக்கிறார்கள் என்று வைப்போம். அப்போது இந்த ஊடகங்கள் எவ்வாறு நடந்து கொள்ளும்? அந்த செயலை மாபெரும் தேச விரோத செயலாக சொல்லிக் கொண்டிருப்பார்கள். சிலை உடைத்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று அரசாங்கத்திற்கு அறிவுறுத்துவார்கள்.

கிட்டத்தட்ட அப்படியொரு சம்பவம் பிரிட்டனில் இடம்பெற்றது. லண்டன் மாநகரில் ஈராக் போர் எதிர்ப்பு ஊர்வலம் நடந்த சமயம் சேர்ச்சில் சிலை மீது சிவப்பு சாயம் பூசப்பட்டது. உடனே அரசும், ஊடகங்களும் நடக்கக் கூடாத அசம்பாவிதம் நடந்ததைப் போல கண்டிக்க ஆரம்பித்து விட்டார்கள். பெல்ஜியத்திலும் இதே போல முன்னாள் மன்னர் போதுவாவின் சிலைக்கு சிவப்பு சாயம் பூசப்பட்ட பொழுதும், அது பொறுப்பற்ற விஷமிகளின் வேலையாக பார்க்கப்பட்டது.

சோவியத் யூனியனில் சிலை உடைத்தால் அது மக்கள் எழுச்சி. மேற்குலகில் அரசியல் தலைவர்களின் சிலைகள் மீது சாயம் பூசினாலே குற்றம். தப்பித் தவறி உடைத்து விட்டால், உடனே ஊடகங்கள் சாமியாடி இருக்கும். "சுதந்திர ஊடகம்", "நடுநிலை ஊடகம்" எல்லாம் மக்களை ஏமாற்ற பாவிக்கப்படும் வெறும் அலங்காரச் சொற்கள். உலகில் எந்த ஊடகமும் ஒரே தன்மை கொண்டதாக இல்லை.

சோவியத் யூனியனின் லெனின் சிலை உடைந்த பொழுது தொலைக்காட்சி கமெராக்கள் ஒளி வெள்ளம் பாய்ச்சின. அப்போதே நகரம் நகரமாக, கிராமம் கிராமமாக லெனின் சிலைகள் உடைக்கப்பட்டதாக பலர் கற்பனைக் குதிரையை தட்டி விட்டார்கள். இன்று முன்னாள் சோவியத் யூனியனில் எங்குமே லெனின் சிலையை காண முடியாது என்று பலர் இப்போதும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். (ஊடகங்கள் அப்படி நம்ப வைத்தன.)

சோவியத் குடியரசுகளான ரஷ்யாவில் மட்டுமல்ல, பெலாரஸ், உக்ரைன், மற்றும் மத்திய ஆசிய நாடுகளிலும் இன்றைக்கும் லெனின் சிலைகள் நிமிர்ந்து நிற்கின்றன. அதுவும் பெரிய நகரங்களின், பிரதான வீதிகளில் காட்சியளிக்கின்றன. நான் சொல்வதை நம்பாதவர்கள் கீழ் குறிப்பிட்ட இடங்களுக்கு நேரே சென்று பார்க்கலாம்.

உக்ரைனில் கிரீமியா பகுதி, மொல்டேவியாவில் டிரான்ஸ் நிஸ்திரியா பகுதி, பெலாரஸ் குடியரசு, ரஷ்யாவில் சைபீரிய நகரமான நொறில்ஸ்க்.... இப்படியே அடுக்கிக் கொண்டே போகலாம். ஜோர்ஜியாவில் ஸ்டாலின் பிறந்த இடமான கோரியில் இருந்த ஸ்டாலின் சிலை, கடந்த வருடம் தான் அகற்றப்பட்டது. (தீவிர மேற்குலக சார்பு ஜனாதிபதி ஷாகாஷ்விலி தனது விசுவாசத்தைக் காட்ட வேண்டாமா?)

மேற்கத்திய ஊடகங்கள் எப்போதும் உண்மை சொல்கின்றன என்று நம்பும் பாமரர்கள் வாழும் உலகம் இது. அதனால் தான் மக்களை மூளைச் சலவை செய்வதும் அவர்களுக்கு இலகுவாக உள்ளது. பல ஊடகங்கள் எந்த வித சமூகப் பொறுப்புணர்வும் இன்றி செயற்படுகின்றன. அவர்கள் தமக்குக் கிடைக்கும் செய்தி உண்மையா என்று நிச்சயப் படுத்திக் கொள்வதில்லை. சில நேரம் வதந்திகளையும் உண்மை போல கூறுகின்றார்கள். அதற்கு பல உதாரணங்களை காட்டலாம்.

ஒரு முறை அமெரிக்காவில் பிளேர் என்ற இடத்தில் சில மாணவர்களைக் காணவில்லை என்ற செய்தி வந்தது. தொடர்ந்து அந்த இடத்தில் சூனியக்காரர்களின் நடமாட்டம், குழந்தைகளின் புதைகுழி போன்ற திகில் செய்திகளும் வந்தன. அதை எல்லாம் உண்மை என்றே பலரும் நம்பினார்கள். சில மாதங்களுக்கு பின்னர் தான் உண்மை வெளிவந்தது. "Blair Witch Project" என்ற ஆங்கிலப் படத் தயாரிப்பாளர்கள், தமது திரைப்படத்துக்கான விளம்பரத்திற்காக கட்டி விட்ட கதை அது.

ஒரு தடவை, நெதர்லாந்து பத்திரிகைகள் அனைத்திலும் ஒரு பரபரப்புச் செய்தி வெளியானது. அநேகமாக ஜெர்மன் ஊடகங்களில் இருந்து அந்த தகவல் வந்திருக்கலாம். முன்னை நாள் கிழக்கு பெர்லினில், பெர்லின் சுவருக்கு அருகில் இருந்த வீடொன்று இருபது வருடமாக ஆளரவம் இல்லாமல் திறந்து கிடந்ததாம். அங்கே வாழ்ந்த மக்கள் பெர்லின் மதில் உடைந்த செய்தி கேள்விப் பட்ட உடனேயே மேற்கு பெர்லினுக்கு ஓடியிருக்கலாமாம். அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த உணவுப் பொருட்கள் கூட மேசையில் அப்படியே இருந்தனவாம்.

கேட்பவன் கேணையன் என்றால் எருமை மாடு ஏரோப்பிளேன் ஓட்டுமாம். இருபது வருடங்களுக்கு முன்னர் மிஞ்சிய உணவுப்பொருட்கள் அப்படியே கெடாமல் இத்தனை வருடங்களாக இருந்திருக்கிறது, என்று பத்திரிகைகள் நமது காதில் பூச் சுற்றுகின்றன. இருபது வருடங்கள் அந்த வீட்டின் வாடகை, மின்சார, தண்ணீர் பில்களை எவன் கட்டினான் என்று யாரும் கேட்கவில்லை. இப்படியான செய்திகள் உலகம் முழுவதும் வாழும் கம்யூனிச எதிர்ப்பாளர்களின் மனங்களை குளிர்விப்பதற்காக வெளிவந்து கொண்டிருக்கின்றன.

ஒரு தடவை, "பிடல் காஸ்ட்ரோ, கம்யூனிசம் தோற்று விட்டதாக ஏற்றுக் கொண்டார்" என்ற செய்தி உலகம் முழுவதும் அடிபட்டது. கியூபா சென்று காஸ்ட்ரோவை பேட்டி கண்ட பத்திரிகையாளர் வெளியிட்ட ஒரு சிறு டிவிட்டர் தகவல் தான் அது. பின்னர் வெளியான காஸ்ட்ரோவின் முழுமையான நேர்காணலை வாசித்தவர்கள் நிச்சயமாக ஏமாற்றமடைந்திருப்பார்கள். இருந்தாலும் யார் அதையெல்லாம் வாசிக்கவில்லை என்று கவலைப்பட்டார்கள்? 

இத்தனை காலம் அவர்கள் எதிர்பார்த்தது எல்லாம் கியூபா சோஷலிசத்தை கைவிட்டு விட்டது என்ற செய்தியைத் தான். அத்தகைய மகிழ்ச்சிகரமான செய்தியை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாமா? மக்களுக்கு போதையேற்றுவது மட்டுமே ஊடகங்களின் பணியாகி விட்ட காலம். இருந்தாலும் அல்கஹோல் விகிதாசாரம் கொஞ்சம் அதிகமாகவே உள்ளது.

10 comments:

  1. அருமையான பதிவு.

    ReplyDelete
  2. சோவியத் யூனியனில் சிலை உடைத்தால் அது மக்கள் எழுச்சி. மேற்குலகில் அரசியல் தலைவர்களின் சிலைகள் மீது சாயம் பூசினாலே குற்றம். தப்பித் தவறி உடைத்து விட்டால், உடனே ஊடகங்கள் சாமியாடி இருக்கும். "சுதந்திர ஊடகம்", "நடுநிலை ஊடகம்" எல்லாம் மக்களை ஏமாற்ற பாவிக்கப்படும் வெறும் அலங்காரச் சொற்கள்.
    ////

    NICE

    ReplyDelete
  3. இது படைப்பாளிகளுக்கும் பொருந்தும. ஒரு கரு(வை)த்தை தீர்மானித்துவிட்டு கட்டுரை-கதை-திரைக்கதை எழுதுகிறார்கள்.எல்லாவற்றையும் உண்மையா என்று கண்டுபிடிக்க மக்களுக்கு (வாய்ப்பும் வசதியும்) எண்ணம் எங்கிருந்து வரும்? அதே தொழிலில் இருக்கும் எதிரிக்குத்தான் தெரியும். ஆனால் அவர்கள் அதை அம்பலப்படுத்தமாட்டர்கள்.ஏனென்றால்பின்னாளில் அந்த முறையை அவர்களும் பயன்படுத்தி மக்களை றலாமே?ஏமாறறலாமே?

    ReplyDelete
  4. இது படைப்பாளிகளுக்கும் பொருந்தும. ஒரு கரு(வை)த்தை தீர்மானித்துவிட்டு கட்டுரை-கதை-திரைக்கதை எழுதுகிறார்கள்.எல்லாவற்றையும் உண்மையா என்று கண்டுபிடிக்க மக்களுக்கு (வாய்ப்பும் வசதியும்) எண்ணம் எங்கிருந்து வரும்? அதே தொழிலில் இருக்கும் எதிரிக்குத்தான் தெரியும். ஆனால் அவர்கள் அதை அம்பலப்படுத்தமாட்டர்கள்.ஏனென்றால்பின்னாளில் அந்த முறையை அவர்களும் பயன்படுத்தி மக்களை றலாமே?ஏமாறறலாமே?

    ReplyDelete
  5. சர்ச்சிலுக்கும், சர்வாதிகாரிகளுக்கும் வித்தியாசமில்லையா. சமிபத்தில் ஜார்ஜியாவில் ஸ்டாலின் சிலையை தூக்கியதை தாங்கள் அறிவீர்கள் தானே. சர்வாதிகாரிகளின் சிலை இருப்பதை கூட மக்கள் விரும்புவதில்லை.

    ReplyDelete
  6. உண்மையின் உரைகல் கலையரசனின் வலைப்பூ

    ReplyDelete
  7. சோஷலிசம் தான் உயர்ந்தது எனில், உங்கள் புலம் பெயர்ந்த வாழ்க்கையை க்யூபாவில், சீனாவில் தொடரலாமே. வசதியாக ஜனநாயக நாட்டில் உட்கார்ந்து கொண்டு, சர்வாதிகாரிகளுக்கு குரல் கொடுப்பது என்ன நியாயம்.

    ReplyDelete
  8. த‌மிழ‌க‌த்தின் ந‌ட‌ப்புக‌ளை எப்ப‌டி ச‌ன்,க‌லைஞர்,ஜெயா,ம‌க்க‌ள்,ஸ்டார்,விஜ‌ய் டிவிக‌ள் விம‌ர்சிக்கும் என்ப‌திலேயே ஊட‌க‌ங்க‌ளின். உண்மைத் த‌ன்மையை த‌மிழ‌ன் அறிவான். அதே போல‌ இந்திய‌ ஆங்கில‌ ஊட‌க‌ங்க‌ள் அனைத்தும், அந்நிய‌ ம‌த‌சார்பு குழுக்க‌ள் அல்ல‌து த‌னியார்க‌ள் வ‌ச‌ம். ஹிண்துஸ்தான் டைம்ஸ், 24x7, டைம்ஸ் ஆஃப் இந்தியா, சிஎன்என் ஐபிஎன் ஆகிய அன‌த்து சான‌ல்க‌ளும், தேச‌த்தைப் ப‌ற்றிய‌ க‌வ‌லையின்றி, ப‌த்திரிக்கை சுதந்திர‌த்தை அவ‌ர்க‌ள‌து எஜ‌மான‌ விசுவாத்திற்கும், அவ‌ர்க‌ள‌து லாப‌த்திற்கு ம‌ட்டும் ப‌ய‌ன்ப‌டுத்துகிறார்க‌ள். ஆனால் வெளி வேஷ‌ம் ம‌ட்டும் நாட்டின் ந‌ல‌ம் போல‌ காட்டிக் கொள்வார்க‌ள்.
    http://www.youtube.com/watch?v=T83h3utJ8LA

    ReplyDelete
  9. //சோஷலிசம் தான் உயர்ந்தது எனில், உங்கள் புலம் பெயர்ந்த வாழ்க்கையை க்யூபாவில், சீனாவில் தொடரலாமே. வசதியாக ஜனநாயக நாட்டில் உட்கார்ந்து கொண்டு, சர்வாதிகாரிகளுக்கு குரல் கொடுப்பது என்ன நியாயம்.//

    நீங்கள் பேசுவதுதான் சர்வாதிகாரம். எங்கே போனது உங்கள் கருத்துச் சுதந்திரத்திற்கான சனநாயகம்? நீங்கள் மட்டும் சர்வாதிகாரம் பேசலாமா? 'ஊடகங்கள் எவ்வாறு எம்மை ஏமாற்றுகின்றன?' என்பதுதான் கட்டுரை. இதற்கு உங்கள் மாற்றுக் கருத்தை முன் வையுங்கள் உங்களால் முடியுமென்றால்.... அதைவிடுத்து தனி மனிதனில் வாழ்க்கை பற்றி விமர்சிக்க எவருக்கும் உரிமையில்லை (இதைத்தான் முதலாளித்துவமும் வலியுறுத்துகின்றது என நினைக்கின்றேன்.) எனக்கு கலையரசனின் கருத்துக்கள் எல்லாவற்றோடும் உடன்பாடில்லைதான் அதற்காக அவரை விமர்சிக்க முடியாது.

    நீங்கள் எந்த நாட்டில் இருக்கிறீர்கள் என்று சொல்லுங்கள். உங்கள் இருப்பு சரியா, தவறா என்று நான் சொல்கிறேன்.

    ReplyDelete