"களிமேரா" (காலை வணக்கம்)
நகர மத்தியில் அமைந்திருந்த தேநீர்க் கடையில் சூடான கோப்பியை (Coffee) எதிர்பார்த்துக் காத்திருந்தேன். எனக்கு கிடைத்ததோ குளிர்பானமாக தயாரிக்கப்பட்ட கோப்பி. கிரேக்கர்கள் பொதுவாக குளிர் கோப்பியே அருந்துவார்கள் என்பதும், சூடான கோப்பி எனக் குறிப்பிட்டு கேட்டு தான் வாங்க வேண்டும். ஏதென்ஸ் கிரீஸின் தலைநகரம். அசுத்தமான வளி மண்டலத்தைக் கொண்ட ஐரோப்பிய நகரம். புகை படிந்தது போன்ற கட்டங்கள், நகரத்தை அசிங்கப்படுத்தின. ஹாரன் அடிக்கும் வாகனங்கள், மோட்டார் வண்டி இரைச்சல்களுக்கு மத்தியிலும் கிரேக்கர்கள் அவசர அவசரமாக வேலைக்கு சென்று கொண்டிருந்தார்கள். ஒமொனியா என அழைக்கப்படும் ஏதென்ஸ் நகர் மையப் பகுதியில் நடைபாதை வியாபாரிகள் வீதியோரமாக தமது கடைகளை விரித்தனர். ( இவர்கள் பற்றி பின்னர் விரிவாக...)
நான் கிரேக்க நாட்டுக்கு பயணம் போகப் புறப்பட்ட போது, எனது நண்பர்கள் "உனக்கு அங்கே என்ன வேலை?" என்று மேலும் கீழுமாகப் பார்த்தார்கள். கிரேக்கத்தைப் பற்றி தமிழர்கள் அறிய வேண்டியவை பல உள்ளன. சங்க காலத் தமிழர்கள், பண்டைய கிரேக்கர்களுடன் (தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் யவனர்கள்) வணிகத் தொடர்பு வைத்திருந்தனர். தற்காலக் கிரீஸின் வட பகுதியில் இருக்கும் மசிடோனியா (மக்கெடோனியா) விலிருந்து தான் அலெக்சாண்டர் வட இந்தியா வரை படையெடுத்து வந்தான். இதை விட, உலகக் கிறிஸ்தவர்களுக்கு கிறீஸ் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம். பாலஸ்தீனத்தில் தோன்றிய கிறிஸ்தவ மதம் கிரேக்கத்தில் உருப்பெற்றது. விவிலிய நூலில் (புதிய ஏற்பாடு) கூறப்பட்டுள்ள பல இடங்கள் தற்போதும் கிரீசில் உள்ளன. அன்று ரோம சாம்ராஜ்யப் பகுதிகளான கிறீஸ், துருக்கி, ஆகிய நாடுகளில் இருந்து தான் பெருமளவு மக்கள் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றினார்கள். கிரேக்கம் இஸ்லாமிய மதத்திற்கும் தனது பங்களிப்பை வழங்கியுள்ளது. மசூதிகளின் கட்டிடக் கலை, கிரேக்க தேவாலயங்களை பின்பற்றி வடிவமைக்கப் பட்டன.
ஐரோப்பியர்கள் தமது நாகரீகம் கிரீசில் தோன்றியது என சொந்தம் கொண்டாடுவார்கள். மேற்குலக ஜனநாயகவாதிகள், கிரேக்கம் ஜனநாயகத்தின் தொட்டில் என மார் தட்டிக் கொள்வார்கள். பல்கலைக் கழகங்களில் தத்துவ விஞ்ஞானம் கற்பவர்கள், கிரேக்க தத்துவ ஞானிகளான பிளேட்டோவையும், சோக்ரடீசையும் தவிர்க்க முடியாது. மொழியியல் ரீதியாக, ஆங்கிலம் மற்றும் பல ஐரோப்பிய மொழிகள், கிரேக்க சொற்களை கடன் வாங்கியுள்ளன. மேற்குறிப்பட்ட தகவல்கள் யாவும் கிரேக்கத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள போதுமானவை.
முதலில் ஏதென்சில் அமைந்திருக்கும் அக்ரோபோலிஸ் என்ற புராதன நகரில் இருந்து ஆரம்பிப்போம். 2000 ஆண்டு பழமை வாய்ந்த நகரம், இன்றைக்கும் ஏதென்ஸ் நகருக்கு அருகில் உள்ள குன்றின் மீது கம்பீரமாக காட்சியளிக்கின்றது. கிரேக்க மொழியில் உயர்ந்த இடத்தில் அமைந்த நகரம் எனப் பொருள் படும். 2000 ஆண்டுகளுக்கு முன்னர், ஏதென்ஸ் நகர நிர்வாகம் அங்கே அமைந்திருந்தது. அன்றைய கிரேக்கம் ஒரே தேசமாக இருக்கவில்லை. சுயாதீனமான பெரிய நகரங்களின் நாடுகளாக இருந்தது. கிரேக்க மொழியில் அதினா (ஏதென்ஸ்) என்றழைக்கப் படும் நகரம், பெண் தெய்வம் ஒன்றின் பெயரால் உருவானது. (சரியான கிரேக்க உச்சரிப்பு "அஸ்தினா" என்று வரும். இதற்கும் இந்தியாவின் அஸ்தினாபுரிக்கும் ஏதாவது தொடர்பிருக்குமா தெரியவில்லை.)
(தொடரும்)
கிரேக்கத்தைப் பற்றி நிறைய அறிய ஆசை. தொடருங்கள்.
ReplyDeletevery interesting
ReplyDelete