Friday, June 11, 2010

கால் சென்டர்கள்: "இங்கே பொய்கள் மட்டுமே விற்கப்படும்!"

"கால் சென்டர் வேலைக்கு ஆள் தேவை. தகுதி: அழகாக பொய் பேசத் தெரிந்திருக்க வேண்டும். ஏமாற்றும் திறமை உள்ளவராக இருக்க வேண்டும்." அத்தகைய விளம்பரத்தை நீங்கள் எங்கேயும் காண முடியாது. ஆனால் புற்றீசல் போல முளைக்கும் கால் சென்டர்கள் அதைத் தான் செய்து கொண்டிருக்கின்றன. அப்பாவி மக்களின் தொலைபேசி இலக்கங்களை வாங்கி, விரும்பிய எண்ணை சுழற்றி, இனிப்பாக பேசி, லொத்தர் (Lotto) முதல் பல்வேறு சந்தாக்களை ஏமாந்தவர்கள் தலையில் கட்டுவது அவர்கள் தொழில். படித்தவர் முதல் பாமரர் வரை, பணக்காரர் முதல் ஏழைகள் வரை, இந்த மாயவலையில் சிக்கிக் கொள்கின்றனர்.

ஜெர்மனியில் கால் சென்டர் என்ற பெயரில் நடக்கும் ஏமாற்று வித்தையை, விளக்கமாக எழுதிய "அற்புதமான புது உலகம்" என்ற நூல் அங்கே பரபரப்பாக விற்பனையானது. இந்த உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர், பிரபல "ரகசிய ஊடகவியலாளர்" Günter Wallraff. இம்முறை கால் சென்டர் ஊழியராக வேலை செய்து அங்கே நடக்கும் அநியாயங்களை நேரில் பார்த்திருக்கிறார். தனது அனுபவங்களை தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளார். "Aus der schönen neuen Welt" என்ற நூலை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்கின்றேன். அவரது நூல் இன்று வரை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படாததால், பல தமிழ் வாசகர்களின் ஆர்வம் காரணமாகவும், இரண்டு பகுதிகளாக பதிவிடுகின்றேன்.

ஜெர்மனியில் சுமார் 6000 கால் சென்டர்கள் இயங்கி வருகின்றன. 2007 ம் ஆண்டு, 440000 பேர் வேலை செய்யும் வளர்ந்து வரும் தொழில்துறை. ஒவ்வொரு வருடமும் 40000 பேர் புதிதாக வேலைக்கு சேருகின்றனர். கால் சென்டர்களை சுரங்கத் தொழிலுக்கு ஒப்பிடலாம். வெளி உலகத்திற்கு தெரியாத இடத்தில் வேலை செய்கின்றனர். பரிதாபத்துக்குரிய உழைப்பாளிகளின் நிலையும் கவலைக்கிடமாகவே உள்ளது. கால் சென்டர்கள் லொத்தர் சீட்டுகள், சஞ்சிகைகளுக்கான சந்தாக்கள், காப்புறுதிகள், போன்ற பல வகையான பொருட்களை விற்கின்றன. அவர்கள் விற்கும் பொருட்கள் பெரும்பாலும் தரமற்றவை, விலை அதிகமானவை. தினசரி ஒவ்வொரு பிரஜையின் தலையிலும் தொலைபேசி மூலம் இந்தப் பொருட்கள் திணிக்கப்படுகின்றன. நுகர்வோர் சங்கம் நடத்திய ஆய்வின் பிரகாரம், கால் சென்டர்கள் தினசரி லட்சக் கணக்கான வேண்டாத தொலைபேசி அழைப்புகளை விடுக்கின்றன. 95 சதவீதமானோர் இந்த தொலைபேசி அழைப்புகளை எரிச்சலூட்டும் செயலாக கருதுகின்றனர்.

ரகசிய ஊடகவியலாளர் வல்ராப் மாறுவேடம் பூண்டு, கற்பனைப் பெயரில் CallOn என்ற நிறுவனத்திற்கு விண்ணப்பித்துப் பார்த்தார். கெல்ன் மாநகரின் மத்திய பகுதியில், அலுவலகத்தைக் கொண்டிருந்தது அந்த கால் சென்டர். வணிக வளாகத்தில் இரண்டு மாடிகளைக் கொண்ட அந்த அலுவலகத்திற்கு மாத வாடகை மட்டும் மாதம் 36000 யூரோக்கள்! எல்லாமே தொலைபேசி மூலம் லொத்தர் விற்று வந்த பணம். தலைமை நிர்வாகி எகார்ட் ஷுல்ஸ் (Eckhard Schulz) வியாபாரத்தை பெருக்கி இன்னும் 700 தொழில் வாய்ப்புகளை வழங்கப் போவதாக பத்திரிகைகளுக்கு தெரிவித்தார். ஜெர்மனியின் வெற்றிகரமான தொழிலதிபராக புகழாரம் சூட்டப்பட்டார். சில ஆண்டுகளுக்கு முன்னர் பத்து மில்லியன் யூரோ வரி ஏய்ப்பு செய்த குற்றச்சாட்டில் சில மாதங்கள் சிறை சென்று வந்த செம்மல் அவர். இவரின் போட்டியாளரான அரச லொத்தர் நிறுவனம் அந்த வழக்கை தொடுத்திருந்தது. ஷுல்ஸ் பெயரில் மட்டுமல்ல, அவரது பினாமிகளின் பெயரிலும் எக்கச்சக்கமான நிறுவனங்கள் கிளை பரப்பியிருந்தன. அதனால் வரி ஏய்ப்புச் செய்த பணம் எங்கே சென்றது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியில் அரச தரப்பு வழக்கறிஞர் 750000 யூரோ நஷ்டஈட்டுடன் திருப்திப் பட வேண்டியிருந்தது.

வல்ராப் CallOn நிறுவனத்தில் நேர்முகத் தேர்வுக்கு சென்றிருந்த வேளை பலர் சமூகமளித்திருந்தனர். தேர்வு செய்த முகாமையாளருக்கு விண்ணப்பதாரிகளின் கல்வித் தகைமை குறித்து எந்த அக்கறையும் இருக்கவில்லை. மற்றவர்களை கவரும் வண்ணம் பேசும் கலையில் வல்லவர்களா, என்பதே எதிர்பார்க்கப்பட்ட ஒரேயொரு தகுதி. வேலைக்கு வருபவர்கள் "கோர்ட்,சூட், டை" யுடன் வேலைக்கு வர வேண்டும் என உத்தரவிடப்பட்டது. "தொலைபேசி ஊடாக நாம் வேலை செய்யும் பொழுது மறு முனையில் இருப்பவர் எம்மை பார்க்க முடியாதல்லவா?" என்று ஒரு அறிவாளி கேட்டு விட்டான். உடனே எமது மேலாளர் "நாம் அணியும் ஆடை எமது மனோபாவத்தை உயர்த்த உதவும்." என்று விளக்கமளித்தார். வேலை செய்யும் இடத்தில் மேசையில் தட்டையான கம்பியூட்டர் திரை அருகில் ஒரு கண்ணாடி இருந்தது. "இந்த கண்ணாடியில் பார். இந்த விம்பம் தனித்துவமானது." என்ற வாசகம் பொறிக்கப் பட்டிருந்தது. இதையெல்லாம் காணும் பொழுது, எனக்கு Aldous Huxley எழுதிய "அற்புதமான புது உலகம்" நாவல் தான் நினைவுக்கு வருகின்றது. அந்த நாவலில் வருவதைப் போல, "நாம் விரும்பியே அடிமையாகிறோம், எம்மை நாமே ஏமாற்றுகிறோம், நமக்கு நாமே வசியம் போட்டுக் கொள்கிறோம்."

அதிர்ஷ்டலாபச் சீட்டிழுப்பில் (லொத்தர் குலுக்கலில்) மில்லியன் யூரோக்கள் பரிசாகப் பெற நினைக்கும் அப்பாவிகள் தான் எமது பலியாடுகள். தினசரி எமக்கு வழங்கப்படும் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து அவர்களுக்கு பரிசு வாங்கும் ஆசையை தூண்ட வேண்டும். எதற்கும் மசியாதவர்களை எமது பெண் பணியாளர்கள் கவனித்துக் கொள்வார்கள். "அன்பரே, பரிசு விழுந்தவுடன் அழகான தீவொன்றில் விடுமுறையை கழிக்கும் பொழுது நானும் உங்கள் கூட இருப்பேன்..." முதல் பரிசு கிடைப்பது பதினாறு மில்லியன் பேரில் ஒருவராக இருக்கலாம். அது கூட அவரே அந்த மில்லியன் யூரோக்களை வாங்கிக் கொள்ள முடியாது.

ஆரம்பத்திலேயே லொத்தரில் சேரும் நபர்களை ஒரு குழுவில் சேர்த்து விடுவோம். அதனால் விழும் பரிசுத் தொகை முழுவதும் அந்தக் குழுவில் உள்ளவர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். முதல் பரிசு வென்ற குழுவில் உள்ள தனி நபர் வெறும் 4200 யூரோக்களுடன் வீட்டுக்கு போக வேண்டி நேரிடலாம். இந்த உண்மைகளை நாம் எமது வாடிக்கையாளர்களுக்கு கூற மாட்டோம். எமது நோக்கமே அதிக பட்ச உறுப்பினர்களை சேர்த்துக் கொள்வது தான். எதிர்கால வாடிக்கையாளருடன் பேசும் பொழுது, அவரது வங்கி இலக்கத்தை பெறுவதிலேயே குறியாக இருப்போம். "எனது வங்கிக் கணக்கு உங்களுக்கு எதற்கு?" என்று யாராவது ஒரு புத்திசாலி கேட்டால், "பரிசுத் தொகை விழுந்தால் போட வேண்டாமா?" என்று ஆசையை தூண்டுவோம். ஆனால் அவரை உறுப்பினராக சேர்த்த பின்னர் அவரது வங்கிக் கணக்கில் இருந்து மாதாமாதம் குறிப்பிட்ட தொகையை சந்தாவாக அறவிடும் உண்மையை மட்டும் கூற மாட்டோம்.

எனது வேலை நேரத்தில் ஒரு தடவை கணித நிபுணரின் தொடர்பு கிடைத்தது. லொத்தரில் சேருவதன் மூலம் கிடைக்கக் கூடிய வெற்றி வாய்ப்பை பற்றி அவருக்கு விளங்கப் படுத்திக் கொண்டிருந்தேன். எனது பேச்சை இடைமறித்த அவர், "இதையெல்லாம் நான் ஏற்கனவே கணக்குப் பண்ணி விட்டேன். 52 சத வீதமானவர்களுக்கு எதுவுமே கிடைக்காது. ஆறு இலக்கங்களும் சரிசமமாக வரும் வாய்ப்புகள் மிக அரிது. மின்னல் தாக்குதலில் அகப்படுவோரின் நிகழ்தகவு அதை விட 45 முறை அதிகம். கணித அறிவு குறைந்தவர்களுக்கான தண்டனை தான் லொத்தர்." என்றார்.

எமக்கு வழங்கப்படும் தொலைபேசி இலக்கங்கள் யாவும், வாடிக்கையாளர்கள் விரும்பித் தருவது என்று கூறப்பட்டது. எங்காவது ஒரு இடத்தில் அத்தியாவசிய சேவைகளுக்கான விண்ணப் படிவங்களை பூர்த்தி செய்யும் போது அந்த தகவல்கள் பரிமாறப்படுகின்றன. "உங்கள் விபரங்களை கொடுப்பதில் ஆட்சேபனை உண்டா? என்று கேட்கப்படும். அதற்கு ஆம் என்று சொல்பவர்கள், அல்லது புள்ளடி இட மறந்தவர்கள், இவர்களது இலக்கங்களே எமக்குக் கிடைக்கின்றன." இவ்வாறு கூறினார் எமது மேலாளர். அதாவது நாம் எந்த வித சட்டவிரோத காரியத்திலும் ஈடுபடவில்லை என்பது அவரது வாதம். எமக்கு பாடம் சொல்லிக் கொடுப்பவர்கள் அனைவரும் சட்டம், மனோதத்துவம் பயின்ற பட்டதாரிகளாக இருப்பார்கள்.

ஒரு நாள் வீடு செல்லும் பொழுது சில இலக்கங்களை குறித்துக் கொண்டேன். வீட்டில் இருந்து அந்த தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பு விடுத்தேன். "நீங்களாகவே விரும்பி உங்களது விபரங்களை கொடுத்தீர்களா?" என்று கேட்டேன். எல்லோரும் அதற்கு இல்லை என்றே பதிலளித்தார்கள். வங்கிகள் தமது வாடிக்கையாளர் விபரங்களை பதிவு செய்யும் பொழுது, அவற்றை பிற நிறுவனங்களுக்கு விற்று விடுகின்றன. சில நிறுவனங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண், வங்கி இலக்கம் போன்ற தனி நபர்களின் அந்தரங்க தகவல்களை விற்று லாபம் சம்பாதிக்கின்றன. எமது CallOn நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கூட 2.5 மில்லியன் முகவரிகளை விற்பதற்கு ஒரு நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்துள்ளார். வால்ட்டர் செர்விசெஸ் என்ற கால் சென்டர் நிறுவனம் இத்தகைய விபரங்களை விற்பதில் பேர் போனது. அந்த நிறுவனத்திற்கு அவற்றை விநியோகம் செய்வது மூன்று பெரிய வங்கிகள். ஒரு முறை நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் 17000 பேரின் வங்கிக் கணக்கிலக்கங்கள் கொண்ட குறுந்தகடு வாங்கி, இந்த அயோக்கியத் தனத்தை பகிரங்கப் படுத்தியது.

எமது கால் சென்டரில் பணியில் சேர்க்கும் பொழுது "விற்கும் திறமை" குறித்து ஒப்பந்தத்தில் எழுதப்பட்டுள்ளது. வேலை செய்யும் ஊழியர்கள் மணித்தியாலத்திற்கு ஒரு புதிய சந்தாதாரரை சேர்க்க வேண்டும். அதிக வாடிக்கையாளரை சேர்த்துக் கொடுக்கும் வாடிக்கையாளருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு மயோர்க்கா தீவுக்கு (ஸ்பெயினில் இளைஞர்களைக் கவரும் பிரபல சுற்றுலாத் தலம்) அனுப்பப்படுவார்கள். விற்கும் திறமை என்பது ஏமாற்றுவது, பொய் கூறுவது, தகவல்களை மறைப்பது போன்ற எல்லாம் உள்ளடக்கியது. இவற்றை செய்யும் படி தூண்டும் நிறுவனம் பிரச்சினை வரும் பொழுது மட்டும் கையை விரிக்கின்றது. தவறான தகவல்களை கொடுத்து ஏமாற்றியதாக ஒரு வாடிக்கையாளர் வழக்குப் போட்டால், சம்பந்தப் பட்ட ஊழியர் மாத்திரம் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.

கால் சென்டரில் வேலை செய்யும் பணியாளர்கள் சங்கம் அமைப்பது தடை செய்யப் பட்டுள்ளது. டுய்செல்டோர்ப் நகரில் உள்ள எமது நிறுவனத்தின் கிளையில் சங்கம் அமைக்க முயற்சி செய்தார்கள். நிர்வாகம் ஒரு குறிப்பிட்ட நபரை "கலகக் காரன்" என்று குற்றம் சுமத்தியது. அவருடன் தமக்கு சம்பந்தம் இல்லை என்று மற்றைய பணியாளர்களிடம் கையெழுத்து வாங்கியது. அவ்வாறு அடிமை சாசனத்தில் கையெழுத்து போட்டுக் கொடுத்த பின்னரும், அந்தக் கிளை இழுத்து மூடப்பட்டது. புதிய கம்பெனி ஒன்றின் பெயரில் அதே நிர்வாகம் தொடர்ந்தது. அப்பொழுது வேலையிழந்த பணியாளர்கள் மூலம் இந்த தகவல்கள் யாவும் வெளியே வந்தன.

கால் சென்டர் வேலை நடக்கும் இடம் "புரோய்லர் கோழிக் குஞ்சுகளை அடைத்து வைத்திருக்கும் பண்ணை போல" காட்சி தரும். ஒரே நேரத்தில் சல சலவென பேசும் பணியாளர்களின் இரைச்சல் காதை செவிடாக்கும். இத்தகைய இடத்தில் எத்தனை நாளைக்கு தாக்குப் பிடிக்க முடியும்? "கால் சென்டரில் வேலை செய்பவர்கள் மனச்சாட்சியை வீட்டிலேயே வைத்து விட்டு வர வேண்டும்" என்று எமது மேலாளர் கூறுவார். ஒரு சிறு தொகை ஊழியர்கள் மாத்திரமே பொய் சொல்லும் கலையில் வல்லவர்களாக தொடர்ந்து வேலை செய்கின்றனர். மற்றவர்கள் அனேகமாக ஒரு சில மாதங்களிலேயே வேலையை விட்டு விடுகின்றனர். பலர் இத்தகைய சூழலில் வேலை செய்ய விரும்பாமல் சுகயீன லீவு போடுகின்றனர். மனத் தளர்ச்சிக்கு ஆளானவர்கள், போதைக்கு அடிமையானவர்கள், இப்படிப் பலர் வருந்துகின்றனர். அனேகமாக வருடக்கணக்காக வேலையற்று இருந்தவர்களே கால் சென்டர் வேலைக்கு வருகின்றார்கள். அரசாங்கத்தின் தொழில் பதிவுக் காரியாலயம் அப்படியானவர்களை பார்த்து அனுப்பிக் கொண்டிருக்கிறது. கால் சென்டரில் நடக்கும் பொய், பித்தலாட்டங்களை காரணமாக காட்டி வேலையை விட்டவர்கள் தண்டிக்கப் படுகின்றார்கள். அவர்கள் சுயவிருப்பின் பேரில் வேலை விட்டதாக கூறி, அரசாங்கம் அவர்களுக்கு வேலை இழந்தவர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குவதில்லை. அதனால் எந்த வித வருமானமும் இன்றி வாழ வேண்டிய அபாயம் ஏற்படுகின்றது.

CallOn நிறுவனம் தகவல்களை கூறாது மறைப்பதன் மூலம் மக்களை ஏமாற்றுகின்றது. ஆனால் ZIU - International என்ற நிறுவனம் தைரியமாக கிரிமினல் குற்றத்தில் ஈடுபட்டு கோடிக்கணக்காக சம்பாதித்துக் கொண்டிருக்கின்றது. அந்த நிறுவனத்தில் வேலை செய்த ஊழியர்கள் சிலர் அங்கே நடக்கும் சட்டவிரோத செயல்களை அரசின் கவனத்திற்கு கொண்டுவந்தார்கள். ஆனால் அரசாங்கம் ZIU International மீது எந்தவிதமான சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறைந்த பட்சம் தொழிலக பரிசோதகரைக் கூட அனுப்பவில்லை. மாறாக உண்மையை தெரிவித்த ஊழியருக்கான உதவிப்பணம் தற்காலிகமாக ரத்து செய்யப் பட்டது. கால் சென்டர்களின் சட்டவிரோத செயல்களுக்கு அரசும் துணை போகின்றதா? கால் சென்டர்கள் மக்களிடம் கொள்ளையடிக்கும் பணத்தில் ஒரு பகுதி அரச கஜானாவை நிரப்புகின்றதா?


(இரண்டாம் பகுதியில் தொடரும்)

Günter Wallraff

Günter Wallraff
Aus der schönen neuen Welt
Expeditionen ins Landesinnere
ISBN: 978-3-462-04049-4

Erscheinungsdatum: 14. Oktober 2009
336 Seiten, Taschenbuch
KiWi 1069
Lieferbar
Euro (D) 13.95 sFr 25.20 Euro (A) 14.40

5 comments:

  1. சில‌ மாத‌ங்க‌ளுக்கு முன்பு கூட‌ த‌மிழில் கால்சென்ட‌ர் ப‌ற்றிய‌ ஒரு ப‌திவு வ‌ந்த‌து அதுவும் சென்னையில் உள்ள‌ வேலையை ப‌ற்றிய‌து.
    கொடுமையான‌ வேலை தான்.

    ReplyDelete
  2. வலையுலகில் இன்றைய டாப் ஐம்பது பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்

    ReplyDelete
  3. Thanks for the post.
    If possible, write about online/email lottery. People do not know about this.

    ReplyDelete
  4. கால் செண்டரில் இவ்வளவு மேட்டரா!!

    ReplyDelete
  5. இந்தியா, சீனா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற வளரும் [என்று சொல்லிக் கொள்ளும்] நாடுகளில் பெரும்பான்மை வரிப்பணம் மென்பொருள் துறையில் இருந்து நேரடியாகக் கொட்டுகிறது. ஒரு சிறிய உதாரணம். நீங்கள் ஒரு உணவு விடுதி உங்கள் பெயரில், பலப்பல கிளைகள் வைத்து நடத்துகிறீர்கள், நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, அதை கணக்காக எழுதி அதற்கு தகுந்த வரிப்பணத்தை அரசாங்கத்திற்கு செலுத்தலாம். ஆனால், அங்கீகாரம் பெற்ற எந்த ஒரு மென்பொருள் துறை சார் நிறுவனமோ, நேரடியாக, மாதா மாதம், வரிப்பணத்தை கொட்டியே தீர்க்கிறது... தீர்த்தே ஆகவேண்டும் ஏன் என்றால், இவர்கள் வங்கிக் கணக்கு, அனைத்து பட்டுவாடாக்களும், எலக்ட்ரானிக் முறையில் நடைபெறுகிறது... ஆதலால், தனிநபர் வருமானவரியும், நிறுவனத்தின் தொழில் வரியும் ஒரு ருபாய் குறைவு இல்லாமல் அரசிற்கு கிடைக்கிறது. அந்த ஒரே காரணத்தினால் மட்டுமே அரசாங்கங்களும் சகட்டு மேனிக்கு மென்பொருள் துறை சார் நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிக்கின்றன.

    வள்ளுவரின் பொருளுடைமை அதிகாரத்தை நமது அரசாங்கம் பின்பற்றினால் நலம்.

    ReplyDelete