Wednesday, May 26, 2010

மத்தியில் மன்னராட்சி, மாநிலத்தில் சமஷ்டி

"மதத்தால் இணைந்தோம், மொழியால் பிரிந்தோம்!" - பெல்ஜிய பயணத் தொடரின் இரண்டாம் பகுதி

நெதர்லாந்தையும், பெல்ஜியத்தையும் ஒன்றிலிருந்து இன்னொன்றை பிரித்துப் பார்க்க முடியாது. ஐரோப்பிய ஒன்றியம் தோன்றுவதற்கு முன்னரே இவ்விரண்டு நாடுகளும் லக்சம்பெர்கையும் சேர்த்துக் கொண்டு, "BENELUX " என்ற பொருளாதார உடன்பாட்டை எட்டினார்கள். அதன் படி இந்த மூன்று நாடுகளுக்கிடையில் எல்லைப் பாதுகாப்பு அகற்றப்பட்டது. நீங்கள் எத்தனை தடவை எல்லை கடந்தாலும், போலிஸ் சோதனை சாவடியை காண முடியாது. விற்பனைப் பண்டங்களை ஏற்றிச் செல்லும் பார ஊர்திகள் மட்டும் சுங்க அலுவலகத்தில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்தால் போதும்.

நான் முதன் முதலாக நெதர்லாந்து வந்த புதிதில், பெல்ஜிய எல்லைக்கு 15 கி.மி. தூரத்தில் உள்ள Gilze எனுமிடத்தில் தங்க வைக்கப்பட்டேன். Gilze யில் இருந்து பெல்ஜியம் போகும் பாதையில் இருக்கிறது Baarle - Nassau . ஒரு நாள், சில நண்பர்களை சேர்த்துக் கொண்டு, நண்பரின் நண்பருடைய வாகனத்தில் பார்லே - நாசவ் பார்க்கப் போனோம். அப்படி அந்த இடத்தில் என்ன விசேஷம்? நெதர்லாந்து எல்லைக்குள் அமைந்துள்ள பெல்ஜிய கிராமம் அது. நெதர்லாந்து நாணயமான கில்டர் புழக்கத்தில் இருந்த காலத்தில் (இது நடந்தது 1995 ம் ஆண்டு), அந்த கிராமத்தில் மட்டும் பெல்ஜிய நாணயமான பிராங்கும் புழங்கியது. கிராமவாசிகள் பெல்ஜிய பிரஜைகளாக, பெல்ஜியத்திற்கு வரி கட்டிக் கொண்டிருந்தனர். அந்த கிராமத்திற்கு இன்னொரு சிறப்பும் உண்டு. நெதர்லாந்து தேசத்தை உருவாக்கிய தந்தை என புகழப்படும் "வில்லெம் வன் ஒரான்யே"(Willem van Oranje) யின் சொந்த ஊர். ஒரு காலத்தில் அதை அண்டிய பகுதிகளின் சிற்றரசர், நெதர்லாந்தின் மன்னனாக முடி சூட்டிக் கொள்வார் என்று,அன்று (16 ம் நூற்றாண்டு) யாரும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.

ஸ்பெயினின் ஒரு பகுதியாக இருந்த நெதர்லாந்திலும், பெல்ஜியத்திலும் கத்தோலிக்க மதமே அதிகாரத்தில் இருந்தது. ஸ்பெயினும் கத்தோலிக்க ராஜ்ஜியம் தான். ஜெர்மனியில் கிறிஸ்தவ பாதிரியார் லூதரின் கத்தோலிக்க அதிகாரத்திற்கு எதிரான கிளர்ச்சி, புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ பிரிவாக அமைப்பு வடிவம் பெற்றது. லூதரின் சீர்திருத்தக் கொள்கைகள் நெதர்லாந்திலும் பரவியது. அன்றைக்கும் நெதர்லாந்து வணிகர்கள் கடல் கடந்து வணிகம் செய்வதில் சிறந்து விளங்கினர். இதனால் செல்வந்த வணிகர் சமூகம் ஒன்று உருவாகி இருந்தது. புரட்டஸ்தாந்து மதத்தின் செல்வாக்கு, ஒல்லாந்து (ஒல்லாந்து என்பது கரையோர மாகாணத்தை குறிக்கும்) வணிகர்களின் பணபலம் என்பன, அவரை ஸ்பெயினுக்கு எதிராக கிளர்ந்தெழ வைத்தன. நிலத்தொடர்பு இல்லாத போதிலும், (இடையில் பிரான்ஸ் இருந்தது) ஸ்பெயின் அவ்வளவு சீக்கிரத்தில் நெதர்லாந்தை விட்டுக்கொடுக்கவில்லை. சுமார் என்பது வருடங்கள் போர் நீடித்தது. இறுதியில், பெல்ஜியம் ஸ்பெயினின் பிடிக்குள் தொடர்ந்திருக்க, நெதர்லாந்து சுதந்திர ராஜதானியாகியது. 'வில்லெம் வன் ஒரான்யே'யின் மன்னனாகும் கனவு பலித்தது. அந்த அரச பரம்பரையை சேர்ந்தவர்கள் தான் இன்றைக்கும் நெதர்லாந்தை (பெயரளவில்) ஆள்கின்றனர்.

ஒரான்யே அரச வம்சத்தில் வந்த வில்லெம் (இவர் நெதர்லாந்தின் முதலாவது மன்னன் வில்லெம் அல்ல) நெப்போலியனை வாட்டர்லோ யுத்தத்தில் தோற்கடித்ததால், பெல்ஜியம் பரிசாகக் கிடைத்தது. ஒரு புதிய பிரச்சினை எழுந்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையில் தெள்ளத் தெளிவான ஒரு வேறுபாடு இருந்தது. பெல்ஜியத்தில் கத்தோலிக்கர்கள் பெரும்பான்மையினர். அதே நேரம் நெதர்லாந்தில் புரட்டஸ்தாந்துக் காரர்கள் பெரும்பான்மையாக இருந்தனர். இரண்டு பிரிவினருக்கும் இடையில் நீண்ட கால பகை நிலவியது. புரட்டஸ்தாந்து எழுச்சியின் போது ஏசு, மாதா சிலைகள் எல்லாம் அடித்து நொறுக்கப்பட்டன. ஏனென்றால் அவர்கள் சிலை வணக்கத்திற்கு எதிரானவர்கள். இந்த சம்பவங்கள் கத்தோலிக்கர் மனதில் தணலாக தகித்துக் கொண்டிருந்தது.

இன்றைய தென் நெதர்லாந்து மாகாணங்களான லிம்பூர்க், ப்ரபன்ட் ஆகிய இடங்களில் கத்தோலிக்க மதத்தவர்கள் வாழ்கின்றனர். உண்மையில் இந்தப் பிரதேசங்கள் பெல்ஜியத்திடம் இருந்து போரில் வெற்றி கொள்ளப்பட்டன. சிறிது காலம் ஆக்கிரமிக்கப் பட்ட பகுதிகளாக நிர்வகிக்கப் பட்டது. பின்னர் நெதர்லாந்தின் 11 வது, 12 வது மாகாணங்களாக இணைக்கப்பட்டன. இன்னொரு குறிப்பிடத்தக்க வேறுபாடு மொழி.நெதர்லாந்து முழுவதும் "நேடெர்லன்ட்ஸ்" (டச்சு) மொழி உத்தியோகபூர்வ மொழியாக இருந்தது. அதனை பெல்ஜியத்தின் மீதும் திணித்தார்கள். ஒவ்வொரு மாகாணமும் தனக்கென மொழியைக் கொண்டிருந்த போதிலும், இவை யாவும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டவை. ஆனால் தென் பெல்ஜியத்தில் பிரெஞ்சு மொழி பேசும் மக்கள் பெரும்பான்மையாக இருந்தனர். புருசல்ஸ் நகரத்தில் வாழ்ந்த மேட்டுக்குடி பிரெஞ்சு மொழி பேசியது. 19 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், பெல்ஜியம் சிறிது காலமேனும் "பகுத்தறிவுவாதி" நெப்போலியனின் ஆட்சியின் கீழ் இருந்தது. இதனால் அங்கே ஒரு தாராளவாத சிந்தனை கொண்ட நடுத்தர வர்க்கம் தோன்றியிருந்தது. அவர்கள் கத்தோலிக்க மதபீடத்திற்கு எதிராக இருந்தனர், ஆனால் மொழித் திணிப்பை எதிர்த்தார்கள்.

இந்த இடத்தில் பிரெஞ்சு மொழியின் மேன் நிலை குறித்து சில வரிகள் குறிப்பிட வேண்டும். இன்று ஆங்கிலம் முதலாவது சர்வதேச மொழியாக இருப்பது போல, அன்று பிரெஞ்சு மொழி இருந்தது. இன்று சென்னை, அல்லது கொழும்பு போன்ற நகரங்களில், ஆங்கிலம் மட்டும் பேசுவதை உயர்வாகக் கருதும் மேட்டுக்குடியினரை சர்வசாதாரணமாக பார்க்கலாம். அதே போல, அன்று லண்டன் முதல் சென்பீட்டர்ஸ்பேர்க் (ரஷ்யா) வரையிலான நகரங்களில் வாழ்ந்த அரச வம்சமும், மேட்டுக் குடியும் பிரெஞ்சு மட்டுமே பேசினார்கள். பெல்ஜியத்தின் வலோனியா நூறு சதவீதம் பிரெஞ்சு பேசும் பிரதேசமாக மாறியிருந்தது. புருசல்ஸ் ஒரு பிரபுக்களின் நகரம். அதனால் அங்கே வாழ்ந்தவர்களின் தாய் மொழி டச்சாக இருந்த போதிலும், பிரெஞ்சில் உரையாடுவதை பெருமையாக கருதினர். இன்று ஆங்கிலம் தெரிந்தவர்கள் வேறெந்த மொழியையும் கற்பதற்கு முன் வராதது போல, அன்று புருசல்ஸ் மேட்டுக்குடியினர் டச்சு மொழி கற்க மறுத்தனர். அவர்களைப் பொறுத்த வரையில் டச்சு பிரெஞ்சை விட தரம் தாழ்ந்த மொழி. (பட்டிக்காட்டான் பேசும் மொழி). பெல்ஜிய கத்தோலிக்க திருச் சபையும், சிற்றரசர்களும், மேட்டுக்குடியினரும், நெதர்லாந்துக்கு எதிராக கிளர்ச்சி செய்தனர். உண்மையில் பூர்சுவா வர்க்கத்தின் எழுச்சியானது, "பெல்ஜிய புரட்சி" என்று சரித்திர பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டது. (கவனிக்கவும்: நெதர்லாந்தின் சரித்திர பாட நூல்கள் "பெல்ஜிய பிரிவினை" என்று குறிப்பிடுகின்றன.

1815 ல் உருவான நெதர்லாந்துக்கு எதிரான பெல்ஜிய விடுதலைப் போராட்டம் 1830 ம் ஆண்டு சுதந்திரப் பிரகடனத்தில் முடிந்தது. பெல்ஜியம் என்ற புதிய தேசத்தின் மன்னனாக லெயோபோல்ட் முடி சூடிக் கொண்டாலும், பூர்ஷுவா வர்க்கத்தின் கோரிக்கையை ஏற்று பாராளுமன்ற முறை ஸ்தாபிக்கப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்த மக்கள், மன்னன் என்ற ராஜ்யத் தலைவனை தவிர்த்து சிந்திக்கப் பழகவில்லை. அதனால் தான் பெல்ஜியம் இன்றைக்கும் அரசமைப்பு சட்டம், பாராளுமன்றம், மன்னராட்சி என்ற அசாதாரண கலவை கொண்ட நாடாக காட்சியளிக்கின்றது. அரச குடும்பத்திற்கும், பூர்ஷுவா (மேட்டுக்குடி) க்கும் இடையிலான நெருங்கிய உறவு, ஒருவரை மற்றவரில் தங்கியிருக்க வைத்துள்ளது. லெயோபோல்ட் மன்னன் ஆப்பிரிக்காவில் காலனிய அபிலாஷைகளுடன் காங்கோவை தனது பின்வீட்டு தோட்டமாக வைத்திருந்த பொழுது, யாரும் எதிர்க்கவில்லை. அரசாங்கம் கவிழும் பொழுது மந்திரி சபை தனது ராஜினாவை மன்னரிடம் கையளிக்கிறது. தேர்தல் நடைபெற்று முடிந்த பின்னர் மன்னர் இடைத்தரகராக செயற்பட்டு மந்திரி சபையை அமைக்கிறார். நடைமுறையில் மன்னர் நியமிக்கும் அமைப்பாளர் அந்தப் பணியைச் செய்வார். 2007 ம் ஆண்டு, புதிய மந்திரி சபை அமைப்பதற்கு 194 நாட்கள் எடுத்தன! அது ஒரு உலக சாதனையாக இருக்க வேண்டும். அவ்வாறு பெல்ஜியத்தில் அரசாங்கம் இல்லாத காலகட்டத்தில் எல்லாம் மன்னரின் பிரசன்னம், தேசத்தை ஒன்று படுத்தி வைத்திருக்கிறது.

இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வுக்காக சமாதான அனுசரணையாளர்கள் எத்தனையோ நாடுகளின் சமஷ்டி முறைகளை ஆராய்ந்தார்கள். அந்தப் பட்டியலில் பெல்ஜியமும் நிச்சயம் இடம்பெற்றிருக்கும். பெல்ஜிய சமஷ்டி அமைப்பு என்ன தான் சிறப்பான அம்சங்களை கொண்டிருந்த போதிலும், அது அந்த நாட்டின் இனப்பிரச்சினையை தீர்த்ததாக தெரியவில்லை. இவ்வளவத்திற்கும் பெல்ஜிய அரசியல் அமைப்பு உலகிலேயே சிக்கலானது. இன்று வரை பல பெல்ஜிய நாட்டவர்களுக்கே புரியாத இடியப்பச் சிக்கல் அது. இருந்தாலும் தேர்தல் ஒன்று வந்தால், ஒவ்வொரு பெல்ஜிய வாக்காளரும் கட்டாயம் வாக்குப் பதிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் 50 யூரோ தண்டப்பணம் கட்ட வேண்டும்! அடுத்த கட்டத்திற்கு போகும் முன்னர், பெல்ஜிய அரசியல் அமைப்பை ஒரு பறவையின் பார்வையில் பார்ப்போம். ஆழமாக ஆராயத் தேவையில்லை. அப்புறம் நமக்குத் தான் மூளை குழம்பி விடும்!

(தொடரும்)

பெல்ஜியம் பயணத் தொடரின் முதலாவது பகுதி:
1.
மதத்தால் இணைந்தோம், மொழியால் பிரிந்தோம்!

3 comments:

  1. தமிழ் படங்கள் தொடர் தோல்வி ஏன்?

    தமிழ் படங்கள் தொடர் தோல்வி ஏன்? http://cinema-gallary.blogspot.com/2010/05/blog-post_25.html

    ReplyDelete
  2. மதம் மொழி போன்றவை தவிர்த்து பொருளாதார ரீதியில் பார்த்தல் Belgium மை விட நேர்தேர்லண்ட்ஸ் முன்னேரியுள்து போன்றே தொற்றமளிகிறது ,சரி தானே கலை சார்!

    ReplyDelete
  3. நன்றி, சுரேஷ். 19 ம் நூற்றாண்டில் பெல்ஜியம் முன்னேறியிருந்தது. காரணம் தொழிற்துறை. பிற்காலத்தில் நிலக்கரி போன்றவற்றின் பாவனை குறைந்ததால் தொழிற்துறை நலிவுற்றது. 20 ம் நூற்றாண்டில் பெல்ஜியத்தை பின்னுக்கு தள்ளி விட்டு நெதர்லாந்து பொருளாதாரம் முன்னேறி விட்டது. காரணம்: சேவைத் துறையின் வளர்ச்சியும், சர்வதேச வர்த்தகமும். இந்த விஷயத்தில் நெதர்லாந்துக்கும், பிரான்சுக்கும் நடுவில் அமைந்திருக்கும் காரணத்தால் மட்டும் பெல்ஜியம் பலனடைகின்றது.

    ReplyDelete