20 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஜார் மன்னனின் ரஷ்யாவில் யூதர்களுக்கெதிரான இனக்கலவரம் நடந்தது. லட்சக்கணக்கானோர் யூதர்களாக பிறந்த ஒரே குற்றத்திற்காக கொல்லப்பட்டனர். இதனால் பெருமளவு யூத அகதிகள் மேற்கு ஐரோப்பாவை நோக்கி ஓடினார்கள். மேற்கில் அவர்களுக்கு புகலிடம் மறுக்கப்பட்டது. அன்றைய ஐரோப்பா முழுவதும் யூதர்களுக்கு எதிரான இன/மத வெறுப்புணர்வுகள் மேலோங்கி இருந்த காலம் அது. பல சிரமங்களுக்கு மத்தியில் யூதர்கள் மேற்கில் தங்க முடிந்தாலும், புகலிடத்தில் அவர்கள் இரண்டாந்தரப் பிரசைகளாக நடத்தப் பட்டனர். இதனால் ஹிட்லரின் ஜெர்மனி யூத இனப்படுகொலையை நடத்தியமை, அன்றைய காலத்தில் பலருக்கு அதிர்ச்சியை அளித்திருக்காது. இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட போது, எவ்வாறு பெரும்பான்மை சிங்களவர்கள் மௌனமாக இருந்தார்களோ; இந்தியாவில் முஸ்லிம்கள் கொல்லப்பட்ட போது, எவ்வாறு பெரும்பான்மை இந்துக்கள் மௌனமாக இருந்தார்களோ; அதே போலத்தான், அன்றைய ஜெர்மன் மக்கள் யூத இனப்படுகொலையை கண்டும் காணாதது போல இருந்து விட்டனர்.
ஆயிரக்கணக்கான யூத அகதிகள் சுவிட்சர்லாந்து போன்ற நடுநிலை நாடுகளுக்கூடாக அகதிகளாக வெளியேறி புகலிடம் தேடினார்கள். ஆனால் "நடுநிலை" சுவிட்சர்லாந்து, ஆதரவற்ற அகதிகளை பிடித்து ஹிட்லரின் அரசாங்கத்திடம் ஒப்படைத்தார்கள். ஆரம்பத்தில் ஹிட்லர் மட்டுமே இனவெறி அரசியலை நடத்தியவன். அந் நேரம் ஜெர்மனியை சுற்றி இருந்த பிற ஐரோப்பிய அரசுகள் பகிரங்கமாக யூத இன விரோதத்தை காட்டவில்லை. இருப்பினும் தமது நாடுகளில் தஞ்சம் கோரிய யூத அகதிகளை ஜெர்மனிக்கே திருப்பி அனுப்பவும் தயங்கவில்லை. அமெரிக்க யூதர்கள் சிலரின் முயற்சியால், ஒரு தொகை ஐரோப்பிய யூதர்கள் இனப்படுகொலையில் இருந்து காப்பாற்றப்பட்டனர். இருப்பினும் அமெரிக்காவிற்கு கப்பலில் கொண்டு செல்லப்பட்ட யூத அகதிகளை, அமெரிக்க அரசு தற்காலிகமாகவே ஏற்றுக்கொண்டது. குறிப்பிட்ட காலம் யூத அகதிகளை தடுப்பு முகாமிற்குள் அடைத்து வைத்தது. ஐரோப்பாவில் போர் முடிந்த பின்னர் திருப்பி அனுப்பப் போவதாக பயமுறுத்தியது.
நமது காலத்து மூன்றாம் உலக நாடுகளின் அரசுகளை விட மோசமாக நடந்து கொண்டன மேற்கு ஐரோப்பிய நாடுகள். இன, மத, அரசியல் சகிப்புத் தன்மை எதுவும் அவர்களிடம் அன்று இருக்கவில்லை. கத்தோலிக்க நாட்டில் புரட்டஸ்தாந்து மதப்பிரிவினர் வேட்டையாடப்பட்டனர். புரட்டஸ்தாந்து நாட்டில் கத்தோலிக்கர்கள் அடக்கப்பட்டனர். எல்லா நாடுகளிலும் சோஷலிஸ்டுகள் அழிக்கப்பட்டனர். இரண்டாம் உலகபோர் வரையில் ஜனநாயகம், மனித உரிமைகள் பற்றி ஆட்சியாளர் அக்கறைப்படவில்லை. அப்படியானவர்கள் இரண்டாம் உலகப்போர் முடிவுற்ற அடுத்த நாளே புனிதர்களாக மாறிவிட்டார்களாம். நடத்தையில் ஏற்பட்ட இந்த திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம்? நாஸிஸத்தில் இருந்து மேற்கு ஐரோப்பாவை விடுதலை செய்த "அமெரிக்க ஆண்டவரின் ஆசீர்வாதம்" என்று சொல்கின்றனர் சிலர். அது சரியா?
இரண்டாம் உலக யுத்தம் முடிவடைந்த பின்னர், ஐரோப்பியர்கள் அனைத்தையும் இழந்து பரம ஏழைகள் ஆனார்கள். எங்கும் பஞ்சம் தலைவிரித்தாடியது. 1917 ம் ஆண்டு ரஷ்யாவில், இதே போன்ற சூழ்நிலையில் புரட்சி வெடித்து கம்யூனிச சோவியத் உருவானதை ஆட்சியாளர்கள் ஒரு கணம் நினைவு படுத்திக் கொண்டனர். அதே நேரம் அவர்களுக்கு இன்னொரு அச்சமும் தொற்றிக் கொண்டது. கிழக்கு ஐரோப்பிய நாடுகள், சோவியத் இராணுவத்தால் விடுவிக்கப்பட்டிருந்தன. அங்கே கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சிக்கு வந்தார்கள். அவர்கள் சோஷலிச பொருளாதாரத்தை முன்னெடுத்தனர். போரில் தானும் கடுமையாக பாதிக்கப் பட்டிருந்தாலும், சோவியத் யூனியன் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு உதவி செய்தது. ஐந்தாண்டு, பத்தாண்டு திட்டங்கள் போடப்பட்டு பொருளாதாரம் துரிதகதியில் வளர்ச்சி அடைந்தது. யூகோஸ்லேவியா மட்டுமே அமெரிக்க கடனுதவியை பெற விரும்பியது.
ஒரு காலத்தில் வல்லரசுகளாக இருந்த பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகளும் போரில் அனைத்தையும் இழந்து நின்றன. ஜெர்மனி பூரண அளிவுக்குல்லாகி இருந்தது. இந்த அழிவில் இருந்து முதலாளித்துவ மேற்கு ஐரோப்பா, சோஷலிச நாடுகளை விட அதிக வேகத்தில் வளர வேண்டும் என்ற போட்டி ஏற்பட்டது. "மார்ஷல் திட்டம்" என்ற பெயரில், அமெரிக்கா பில்லியன் ஐரோப்பாவை மீளக்கட்டி எழுப்ப டாலர்களைக் கொட்டியது. இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா சிறிதளவே பாதிக்கப்பட்டது. போரில் ஈடுபட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு ஆயுதங்களை விற்றதன் மூலம் அளவுகடந்த லாபத்தை சம்பாதித்தது. ஆகவே பிற நாடுகளுக்கு கடன் வழங்குமளவிற்கு அமெரிக்காவிடம் தாராளமாகவே பணம் இருந்தது. எப்பாடு பட்டேனும் மேற்கு ஐரோப்பிய மக்களை சோஷலிசத்தை நாட விடாமல் தடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கோடு, வேண்டிய அளவு பணம் பாய்ந்தது. இந்த அரசியல் உள்நோக்கத்தை புரிந்து கொள்ளாமல், 1990 க்குப் பிறகு சோஷலிசத்தை துறந்த கிழக்கைரோப்பிய நாடுகள், தமக்கும் அமெரிக்கா மார்ஷல் திட்டம் போல பணத்தை கொட்டும், என்று எதிர்பார்த்து ஏமாந்து போனது வேறு கதை.
(தொடரும்)
"இந்தியாவில் முஸ்லிம்கள் கொல்லப்பட்ட போது, எவ்வாறு பெரும்பான்மை இந்துக்கள் மௌனமாக இருந்தார்களோ". It is a wrong statement. I agree Indians (but not only them, the whole world was responsible) were responsible for recent Genocide in Srilanka. The above statement may be true in recent Gujarat incident, but most of the previous incidences leaders and people in other parts did not agreed with it and resisted whole heartedly.
ReplyDelete// இந்தியாவில் முஸ்லிம்கள் கொல்லப்பட்ட போது, எவ்வாறு பெரும்பான்மை இந்துக்கள் மௌனமாக இருந்தார்களோ//
ReplyDeleteIt true. If not, they should have stopped the genocide or reduced it. What happened? The shame is that the Majority of Hindus watching the Sri Lankan genocide of Tamil (Hindus people). They proud to be call as Indian, not Hindu or Tamil.