சுவிட்சர்லாந்தில் அரசியல் விஞ்ஞானம் படித்துக்கொண்டிருந்த ஹாசிம் தாச்சிக்கு யூகோஸ்லாவியாவில் தனது பிரதேசத்தில் ஒரு விடுதலை இராணுவம் அமைக்க வேண்டுமென்ற எண்ணம் எழுந்தபோது, இது வெகு விரைவில் சர்வதேசக் கவனத்தை ஈர்க்குமென அவர் எண்ணியிருக்கமாட்டார். பல்லின மக்கள் வாழ்ந்த யூக்கோஸ்லாவியா, எண்பதுகளின் இறுதியில் தனது சோசலிசக் கூட்டாளிகளை கிழக்கு ஐரோப்பாவில் இழந்ததால் வேறு வழியின்றி உலக வங்கியிடமும் சர்வதேச நாணய நிதியத்திடமும் கையேந்த வேண்டிய நிலையுருவாகியது. இந்நிலை காரணமாக உள்நாட்டடில் ஏற்பட்ட அரசியல் பொருளாதார மாற்றங்கள் பின்னர் ஒவ்வொரு இனமும் தமக்கென தேசம் கோரும் போர்களில் ஈடுபட வழி சமைத்தன.
ஸ்லோவனியா, க்றோவேசியா, பொஸ்னியா எனத் தனி அலகுகளாக இந்நாடு உடைந்ததையடுத்து, எஞ்சியிருந்த சேர்பியாவும் மொண்டி நீக்ரோவும் குட்டி யூக்கோஸ்லாவியாவாகச் சுருங்கிப் போயின. தொடர்ந்து இடம்பெற்ற யுத்தங்களுக்கு யூகோஸ்லாவியாவில் பெரும்பான்மையினத்தை கொண்டிருக்கும் சேர்பியாவே பொறுப்பு எனக் குற்றம்சாட்டப்பட்டு, இந்நாட்டின் மீது பொருளாதார, ஆயுத விற்பனைத்தடை கொண்டு வரப்பட்டது. இதனால் உள்நாட்டுப் பொருளாதாரம் பாதிக்கப்படவே, யூகோஸ்லாவிய அரசு தற்பாதுகாப்புப் பொருளாதாரத்தில் இறங்கியது. சேர்பியாவில் அல்பானிய சிறுபான்மையினத்தவர் வாழ்ந்த கொசோவோ மாகாணம் கவனிக்கப்படாது கைவிடப்பட்டது. இதன்காரணமாக கொசோவோ அல்பேனிய இனத்தவர் மோசமாகப் பாதிக்கப்பட்டு, பொருளாதாரப் பிரச்சினை அரசியல் பிரச்சினையாக உருவெடுத்தது.
தேர்தல்-ஜனநாயகம் மூலம் ஆட்சிக்கு வந்த சோஷலிசக் கட்சியின் ஜனாதிபதி மிலோசெவிச் பெரும்பான்மைச் சேர்பிய வாக்காளர்களைக் குறிவைத்து அரசியல் நடாத்துவதில் ஈடுபட்டார். அவர்களைத் திருப்திப்படுத்த கொசேவாவின் சுய நிர்ணய உரிமை பறிக்கப்பட்டது. இவ்வாரம்பத் தவறினையடுத்து, கொசோவோ அல்பானியர்களின் எதிர்ப்பு விஸ்வரூபம் எடுத்தது. மிதவாதக் கட்சி சமாதான வழிப்போராட்ங்களை ஆதரித்த போதிலும், இளைஞர்கள் தீவிர ஆயுதப்போராட்டங்களை முன்னெடுத்தனர். சேர்பிய அரசுக்கு ஊழியம் செய்தவர்கள் துரோகிகளாக்கப்பட்டனர், சுட்டுக்கொல்லப்பட்டர். சேர்பியப் பொலிசும் வன்முறையைப் பிரயோகிக்கத் தயங்கவில்லை. தீவிரவாத இளைஞர்கள் வேட்டையாடப்பட்டனர். கைதுகளும் கொலைகளும் தொடர்ந்த வண்ணமாய் இருந்தன.
இந்நிலையில்தான், கொசோவோவில் ஹாசிம் தாச்சியின் வரவு புதிய அத்தியாயத்தை ஆரம்பித்து வைத்தது. ஹாசிம் தாச்சியின் தலைமையின் கீழ் திரண்ட இளைஞர்கள் தமது இயக்கத்திற்கு "கொசோவோ விடுதலை இராணுவம்" (KLA) எனப் பெயரிட்டு, சேர்பியப் பொலிசாரோடு மோதினர். இவர்களைப் பயங்கரவாதிகளென அறிவித்த யூகோஸ்லாவியா தனது பலத்தைக் காட்டி அடக்குமுறைகளைப் பிரயோகித்தது. ஆயினும் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அரசு கொசோவோவிற்குச் சில அரசியலுரிமைகளை வழங்க முன்வந்தது. நடாத்தப்பட்ட தேர்தலில் மிதவாதக் கட்சியே ஆட்சிக்கு வந்தது.
யுத்தம் ஐரோப்பாவின் வாசற்படிக்கு வந்துவிட்ட காலத்திலிருந்து மேற்கு ஐரோப்பா யூகோஸ்லாவிய அரசியல் மாற்றங்களை வெகு உன்னிப்பாகக் கவனித்து வந்தது. குறிப்பாக ஜேர்மனி இவ்விடயத்தில் அதிகளவு அக்கறை காட்டியது. பலங் குன்றிப் போயிருந்த கொசோவாவின் KLA க்கு ஜேர்மனி உதவிக்கரம் நீட்டியது. ஆயுத தளபாடங்கள் அனுப்பப்பட்டன. சண்டை மீண்டும் உக்கிரமடைந்தது. ஆரம்பத்தில் கொசோவோ அல்பானியர் மீதான அடக்குமுறையை கண்டும் காணாதிருந்த மேற்கத்தைய பத்திரிகையாளர்கள் திடீரென விழித்துக் கொண்டனர். அல்பானிய மக்களின் துயரங்களை, போர்முனைச் செய்திகளை அறிவிக்க காத்திருக்கும் அபாயங்களையும் பொருட்படுத்தாது கொசோவோ சென்றனர். அமெரிக்காவும் சும்மாயிருந்து விடவில்லை. சில மாதங்களுக்கு முன்புவரை "கொசோவோ பயங்கரவாதிகள்" வர்ணித்த அமெரிக்கப் பத்திரிகைகள் இப்போது அவர்களை விடுதலைப் போராளிகளென அழைத்தன. அமெரிக்க அரசு KLA க்கு நிதியுதவியும் வழங்கியது. அமெரிக்கத் தலைமையிலான நேட்டோ இராணுவம் KLA ன் புகழ்பாடியது. இதே நேட்டோவில் உறுப்பு நாடுகளாகவிருக்கும் இங்கிலாந்து, துருக்கி, ஸ்பெயின் ஆகியன தத்தமது நாடுகளில் பிரிவினைப் போராட்டங்களை பயங்கரவாதம் எனக்கூறி அடக்கி வருவதைப் பற்றி யாரும் நினைத்துப் கூடப் பார்க்கவில்லை.
இடையில் ஒரு கட்டத்தில் நேட்டோ நாடுகள் யூகோஸ்லாவிய அரசைப் பேச்சுவார்தைகளுக்கு வருமாறு அழைப்பு விடுத்தன. ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு நேட்டோப் படைகளை நாட்டுக்குள் அனுமதிக்குமாறும் இல்லாத பட்சத்தில் குண்டுமழை பொழியப்படுமெனவும் யூகோஸ்லாவியா பயமுறுத்தப்பட்டது. யூக்கோஸ்லாவியா மசியாத நிலையில் நேட்டோ விமானங்கள் இந்நாட்டு இராணுவ, பொருளாதார மற்றும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலக்குகள் மீது குண்டு வீசின. ஆத்திரமடைந்த சேர்பிய இராணுவம் கொசோவோவின் அல்பானியர்களின் மீதான அடக்குமுறையை மேலும் தீவிரப்படுத்தியது.
மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்தனர். மேற்கத்திய ஊடகங்கள் பிரச்சார யுத்தத்தில் ஈடுபட்டன. கொசோவோவில் இனப்படுகொலை நடப்பதாக அலறின. மாபெரும் மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக கதைகதையாகச் சொல்லின. KLA போராளிகளை வீரர்களாகவும் சேர்பிய இராணுவத்தினரை வில்லன்களாகவும் சித்தரித்தன. கோசோவோ அல்பானியர்கள் மீது பொழிந்த இந்தப்பாச மழையில் மேற்கத்தைய நாட்டு மக்களும் நனைந்து போயினர். இதில் வேடிக்கை என்னவெனில், சாதாரணமாகவே அகதிகளை வெறுக்கும் மேற்கு ஐரோப்பிய மக்களில் சிலர் கொசோவோ அகதிகளை வரவேற்று உபசரித்தனர். செய்தி ஊடகங்கள் எந்தளவு மக்கள் மீது தாக்கம் செலுத்துகின்றன என்பத்றகு இதுவும் ஒரு சான்று.
நேட்டோ நாடுகளின் குண்டுகளுக்கு ஈடுகொடுக்க முடியாத யூகோஸ்லாவிய அரசு இறுதியல் விட்டுக்கொடுத்தது. நேட்டோ இராணுவம் கொசோவோவுள் நுளைய அனுமதித்தது. கொசோவோவை ஆளுக்கொரு துண்டாகப் பிரித்தெடுத்துக் கொண்டன அமெரிக்க, ஜேர்மனிய, பிரித்தானியப் படைகள். அவர்களை அல்பானிய மக்கள் தமக்கு விடுதலை பெற்றுத் தந்த இரட்சகர்களாகப் பார்த்தனர். அவர்களோடு சேர்ந்து வந்த KLA யின் கையில் கொசோவோவின் (தற்காலிக) ஆட்சியதிகாரம் கையளிக்கப்பட்டது. ஆனால் உண்மையான அதிகாரம் நேட்டோ, ஐ.நா சபையின் பிரதிநிதி (மேற்கத்தைய நாடுகளின் உத்தரவுகளை நிறைவேற்றுபவர்) ஆகியோரிடம் தங்கிவிட்டது. கொசோவோ மக்கள் KLA , நேட்டோ இரண்டையும் ஒன்றாகவே பார்த்தனர். இவர்கள் பின்பலத்துடன் தாம் எதையும் செய்யலாம் என நினைத்த சிலர் பழிவாங்கல் வன்முறையில் ஈடுபட்டனர். இம்முறை சேர்பிய மக்கள் திடீர்த் தாக்குதல்களில் கொல்லப்பட்டனர். செய்தவர்களைத் தம்மால் பிடிக்க முடியவில்லையென நேட்டோ இராணுவம் கையைப் பிசைந்தது.
கொசோவோவில் நேட்டோவுடனான தேனிலவுக்காலம் வெகுவிரைவில் முடிவுக்கு வந்தது. சேர்பியாவிலும் ஆட்சிபீடம் மாறியது. முன்னாள் அதிபர் மிலோசவிச் நடைபெற்ற தேர்தலில் ஆட்சியிழந்தார். மேற்குலகு சார்பான கட்சிகள் ஆட்சியைப்பிடித்தன. சேர்பியாவில் கொசோவோவின் எல்லையோரப் பகுதியிலும் அல்பானியச் சிறுபான்மையினர் வாழ்கின்றனர். இந்தப்பகுதியையும் சுதந்திரக் கொசோவோவுடன் இணைக்கும் நீண்ட கால அவா KLA க்கு இருந்துவந்தது. அதனால் அங்கேயும் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தது. இப்பகுதி முன்னர் சமாதான வலயமாப் பிரகடனப்படுத்தப்பட்டிருந்ததால் சேர்பிய இராணுவம் ஐந்து மைல்களுக்கப்பால் நின்றது. ஆனால், இப்போதுதான் தலைநகர் பெல்கிரேட்டில் ஆட்சி மாறிவிட்டதே. நேட்டோவின் ஆதரவுடன் சேர்பியப் படைகள் சமாதான வலையத்தினுள் நுளைந்து KLA போராளிகளை விரட்டியடித்தது. எதிரிகள் நண்பர்களானார்கள். நண்பர்கள் எதிரிகளானார்கள்.
சேர்பியக் கிளர்ச்சி முறியடிக்கப்படவே KLA அயல்நாடான மசிடோனியா பக்கம் பார்வையைத் திருப்பியது. முன்னாள் யூகோஸ்லாவியக் குடியரசான மசிடோனியாவில் அதே பெயருடைய மொழி பேசும் பெரும்பான்மை ஸ்லாவிய மக்களும், கொசோவோ எல்லையோரமாக சிறுபான்மை அல்பானியர்களும் வாழ்ந்து வருகின்றனர். தாம் இரண்டாந்தரப் பிரஜைகளாக நடாத்தப்படுவதாய் இச்சிறுபான்மையினர் நீண்டகாலமாகக் குறைப்பட்டுக் கொண்டுமிருந்தார்கள். இந்த இன முரண்பாடுகள் கடைசியில் வன்முறையாக வெடித்தன. அரசுக்கெதிரான ஊர்வலம் பொலிசாரினால் கலைக்கப்படவே, அது திடீரென ஆயுதப்போராட்டமாக மாறியது.
அல்பேனியச் சிறுபான்மையினர் அதிகமாக வாழும் பிரதேசங்களை ஆயுதந்தாங்கிய போராளிகள் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். மசிடோனிய அரசு இராணுவத்தை அனுப்பியது. சண்டையில் ஈடுபடும் போராளிகளுக்கு உதவ கோசோவோவிலிருந்து மேலும் KLA உறுப்பிர்கள் வரலாம் என அஞ்சிய மசிடோனிய அரசு நேட்டோவிடம் விண்ணப்பித்தது. இம்முறை "அல்பானியப் பயங்கரவாதத்தை வன்மையாகக் கண்டிப்பதாக" அறிவித்த நேட்டோ எல்லைக் காவலை அதிகரித்தது. எல்லைகடக்க முயன்ற KLA உறுப்பினர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். நேற்றுவரை நண்பர்களாகவிருந்தவர்கள் திடீரென எதிரிகளாகிவிட்டதையுணர்ந்து கொண்ட KLA, நேட்டோ படையினருக்கெதிராகத் துப்பாக்கிகளைத் திருப்பியது. மசிடோனியாவில் கிளர்ச்சி ஒரு சில நாட்களிலேயே அடக்கப்பட்ட பின்பு இப்போது அந்தப் பிராந்தியம் அமைதியாகக் காணப்படுகின்றது.
அல்பேனியத் தீவிரவாதிகள் "அகன்ற அல்பேனியா" கனவு காண்பது ஒன்றும் இரகசியமானதல்ல. கிழக்கு-மேற்கு ஜேர்மனிகள் ஒன்றிணையுமானால், அல்பானிய மொழி பேசும் மக்கள் ஏன் ஒன்றிணையக்கூடாது ? என KLA தலைவர்கள் பகிரங்கமாகவே கேட்கிறார்கள். KLA கொசோவோவை விடுதலை செய்ய விரும்பியபோது உதவிய நேட்டோப் படைகள், மசிடோனிய இராணுவம் அல்பானியரின் போராட்டத்தை அடக்க ஏன் உதவின ? எல்லாமே சுயநல நோக்கில்தான் என்கிறார் யூகோஸலாவிய யுத்தங்களைப் பற்றி பல புத்தகங்களை எழுதியிருக்கும் பெல்ஜிய எழுத்தாளர் ஒருவர்.
90 களின் ஆரம்பத்தில் யூகோஸ்லாவியாவில் யுத்தம் வெடித்தபோதே சமாதானமாகப் பிரிந்த மசிடோனியக் குடியரசில்தான் நேட்டோ படைகள் தமது முதலாவது தளத்தை அமைத்தன என்ற முரண்நகையான உண்மையை அதற்கு நிரூபணமாகக் குறிப்பிடுகின்றார். காரணம்: எண்ணை வள அஸர்பைஜான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளிலிருந்து மேற்கு ஐரோப்பா நோக்கிய எண்ணைக் குழாய்களை நிர்மாணிக்கும் வருங்காலத்திட்டங்களை மனதில் வைத்தே கொசோவோ பிரச்சினையில் அமெரிக்க-மேற்கைரோப்பிய நாடுகள் தலையிட்டன. பல்லின மக்கள் வாழும் முன்னாள் யூகோஸ்லாவியா உள்ளடங்கிய பால்கன் பிரதேசத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர விரும்பின. இராணுவத்த தலையீடுகளின் பின்னால் பொருளாhர நலன்கள் மறைந்திருப்பதாக அந்த எழுத்தாளர் மேலும் கூறுகிறார்.
கொசோவோவில் நேட்டோப்படைகள் தங்கியிருப்பதன்உண்மையான நோக்கம் அங்குள்ள மக்களுக்கு நாளை தெரியவரும்போது அவர்களின் எதிர்விளைவு என்னவாகவிருக்கும் ? நேற்று நேட்டோப் படையினரை விடுதலை செய்ய வந்ததாகப் பார்த்தவர்கள் நாளை ஆக்கிரமிப்பாளர்களாகப் பார்ப்பார்களா ? இன்று சுதந்திர நாடாகியிருக்கும் கொசோவோவிலிருந்து நேட்டோப் படைகள் விலத்திக் கொள்ளப் பட்டால் என்ன ஆகும்? இன்றை வரையில் சுதந்திரப் பிரகடனத்தை ஏற்றுக் கொள்ளாத செர்பியா, கொசோவோ மீது படையெடுக்குமா?
இதைவிட சர்வதேச அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகள் சில தொக்கி நிற்கின்றன. கொசோவோவின் உதாரணத்தை பின்பற்றி ரஷ்யா அப்காசியா, ஒசேத்தியா போன்ற புதிய தேசங்களின் சுதந்திரத்தை அங்கீகரித்தது. ஈழத்தேசியவாதிகள் கொசோவோ வழியில் தமிழீழத்தை அங்கீகரிக்க கோரினார்கள். அவற்றை எல்லாம் ஏன் நேட்டோ நாடுகள் புறக்கணித்தன? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் ஒன்றே ஒன்று தான். மேற்கத்திய நாடுகளின் தன்னலம் சார்ந்த வெளியுறவுக் கொள்கை. கொசோவோ மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொண்டு, மேற்கத்திய நாடுகள் தலையிடவில்லை.
ஐரோப்பாக் கண்டத்தில் யாருடைய தலைவிதியையும் தீர்மானிக்கும் வல்லமை தமக்கு உண்டு என, ஜெர்மனி,பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய பழைய வல்லரசுகள் நிரூபித்துக் காட்டின. மேற்கு ஐரோப்பிய நாடுகளில் இயற்கை வளம் மிக மிகக் குறைவு. ஆனால் நிறைய பணம் வைத்திருக்கிறார்கள். அதற்கு மாறாக, கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு இயற்கை அன்னை தாராளமாகவே அள்ளிக் கொடுக்கிறாள். ஆனால் அவர்களிடம் பண பலமோ, படை பலமோ கிடையாது. அந்த நாடுகளில் ஆட்சியில் இருப்பவர்களை கைக்கூலிகளாக்கிக் கொண்டால் போதும். மேற்கத்திய தொழிலகங்களுக்கு தேவையான மூலப்பொருட்கள், எரிபொருள் என்பனவற்றை குறைந்த விலை கொடுத்து சுரண்டிக் கொண்டிருக்கலாம்.
வணக்கம் கலையரசன்! தங்களது பதிவுகளை நான் நீண்ட நாட்களாகப் படித்து வந்தாலும் நேரமின்மை காரணமாகப் பின்னூட்டமிட முடியவில்லை. அதற்காக மன்னிக்கவும்.
ReplyDeleteதங்களின் பதிவுகள் நான் இதுவரை அறிந்திராத மேற்குலகம் சம்பந்தமான அரசியல் அம்சங்களை அறிய முடிகின்றது. தங்களின் உரை நடையும், விடயத்தினை நகர்த்திச் செல்லும் பண்பும் மிக மிக அருமையாக உள்ளது.
தாங்கள் நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கும் இந் நேரத்தில் என்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
Thank you Kamal.
ReplyDeleteவணக்கம் கலையரசன்,
ReplyDeleteதங்களுடைய வலைத்தளத்தை வாசித்தும் பின்னூட்டம் இடாத வாசகர்களில் நானும் ஒருவன்!! நிச்சயமாக அறியாத விசயங்களை அலசி நீங்கள் தரும் கட்டுரைகளுக்காக உங்களுக்கு மிக்க நன்றிகள்..கொசோவா பற்றிய இக்கட்டுரை மேற்க்குலகின் அதிகார சுயநல நிலைப்பாட்டை அம்பலமக்குகிறது..கொசோவா போல் தமிழீழம் அமைய வேண்டி நின்ற அனவரும் படித்து புரிந்து கொள்ள வேண்டிய கட்டுரை இது!! நன்றிகள்!!
Thank you Bharathi
ReplyDeleteஅரசியல் சதுரங்கத்தில் நிலைமையை புரிந்துகொள்ளாமல் கொசோவோ போலோ இல்லை அகெஹ் () போல் ஆங்கிலோ-அமெரிக்கா எமக்கு தமிழீழம் பெற்றுத்தரும் என்று கனவு காணுபவர்களுக்கு, மேலே நாடுகளின் உண்மையான வேஷத்தை தோலுரித்து காட்டியதற்கு நன்றி! தமக்கு நன்மை இல்லாமல் ஒருவரும் எமக்கு உதவ வரமாட்டார்கள், உபத்திரம் மட்டும் செய்வார்கள்!
ReplyDeleteThank you Pras
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteதங்களின் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளன.ஆப்ரிக்காவை, ஐரோப்பாவை,ஆசியாவை கண்முன்னே நிறுத்தியது உங்கள் பதிவுகள்.இன்னும் தொடரட்டும் உங்கள் முயற்சி. ஆப்ரிக்கா அரசியலை பற்றி இன்னும் அதிகமாக எதிர்ப்பார்க்கிறேன்.