[பகுதி: ஒன்று]
2009 ம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று, ஆம்ஸ்டர்டாமில் இருந்து அமெரிக்கா சென்ற விமானத்தில் பயணம் செய்த ஒரு நைஜீரிய இளைஞன், சர்வதேச அரசியலில் மாற்றத்தை கொண்டு வருவான் என்று, யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. அந்த இளைஞன் உள்ளங்கியில் மறைத்து வைத்திருந்த வெடிபொருள் வெடிக்கத் தவறியதால், விமானம் ஒரு பாரிய தாக்குதலில் இருந்து தப்பியது. குண்டுதாரியை விசாரித்த அமெரிக்க போலீசார், அந்த நைஜீரிய இளைஞன் "முன்னர் ஒரு காலத்தில் யேமனில் வாழ்ந்ததாகவும், அல்கைதாவுடன் தொடர்பு கொண்டவன்" என்றும் அறிவித்தார்கள். என்னது? திடீரென்று "ஒரு ஆப்பிரிக்க இளைஞன்", "யேமன் அல்கைதா" என்று மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுகிறார்கள்? அப்படி எவராவது சந்தேகப்பட்டால்? அது தான் நிறைவேறாத தாக்குதலுக்கு "யேமன் அல்கைதா" உரிமை கோரினார்களே, பார்க்கவில்லையா? அப்பவும் நம்பவில்லையா? இதோ, பின்லாடனின் உரிமை கோரல் ஒலிநாடா. அல்ஜசீராவில் ஒளிபரப்பானது. அப்புறம் என்ன தயக்கம்? யேமனில் பதுங்கியிருக்கும் அல்கைதாவை அழிக்க கிளம்ப வேண்டியது தானே? அல்கைதா பயங்கரவாதத்தை ஒடுக்க யேமன் அரசுக்கு உதவுவது எப்படி என்று ஆராய லண்டனில் மகாநாடு கூட்டினார்கள்.
அதற்கு முன்னர் விமான நிலையங்களில் பாதுகாப்பு கெடுபிடிகளை இறுக்குவது தொடர்பாக உடனடி உத்தரவுகள் பறந்தன. நவீன தொழில்நுட்பம் கொண்ட "ஸ்கேன் மெஷின்களை" ஏன் பாவிக்கவில்லை? என்று கண்டனங்கள் குவிந்தன. புதிய ஸ்கேன் மெஷின்கள், விமானப் பயணிகளின் ஆடை மறைத்திருக்கும் உடல் அங்கங்களையும் படம் பிடிக்கும் ஆற்றல் வாய்ந்தது. அதனால் என்ன? அமெரிக்கா செல்பவர்கள் எத்தகைய அவமானத்தையும் பொறுத்துக் கொள்ள மாட்டார்களா? மானம் முக்கியமா? பயங்கரவாதிகளிடம் இருந்து பாதுகாப்பு முக்கியமா? கிறிஸ்துமஸ் தினத்திலிருந்து, விமான நிலையங்களில் கறுப்புத் தோலைக் கொண்டவர்கள் பாகுபடுத்தி சோதனையிடப்பட்டனர். டாலர் தேவையென்றால், இனப்பாகுபாட்டையும் பொறுத்துக் கொள்ளத் தான் வேண்டும்.
கிறிஸ்துமஸ் தினத்திற்கு முன்னரும், யேமனில் மாதக்கணக்காக போர் நடந்து கொண்டிருந்தது. யேமன் பாதுகாப்புப் படைகளுக்கும், வட மாகாணங்களை சேர்ந்த (ஷியா முஸ்லிம்களான) ஹூதி இயக்க போராளிகளுக்கும் இடையில் கடும் சண்டை நடந்து கொண்டிருந்து. (பார்க்க: சவூதி அனுப்பிய ஹஜ் வெடி குண்டுகள்) ஆயிரக்கணக்கான பொது மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கே நடந்த மனிதப் பேரவலத்தை எந்தவொரு சர்வதேச ஊடகமும் ஏறெடுத்துப் பார்க்கவில்லை. சில நேரம், முக்கியமற்ற செய்தியாக கடமைக்கு சொல்லிக் கொண்டிருந்தார்கள். உலகில் அதிகமானோரை சென்றடையாத அரபு ஊடகங்கள் மட்டும், அக்கறையோடு அறிவித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் என்றைக்கு, அமெரிக்க விமான தாக்குதல் முயற்சியையும், அல்கைதாவையும் தொடர்பு படுத்தி செய்தி வந்ததோ? அன்றிலிருந்தே யேமனை இன்னொரு ஆப்கானிஸ்தான் போல காட்டத் தொடங்கி விட்டார்கள்.
எவராவது யேமன் சென்றால், அங்கே அல்கைதா இருக்கிறதா என்று தேடக் கிளம்பி விடாதீர்கள். நகரங்களில் வதியும், சர்வதேச அரசியல் தெரிந்த படித்தவர்களுக்கு மட்டுமே அல்கைதா என்ற சொல் பரிச்சயம். நாட்டுப்புறங்களில் வாழும் சாதாரண யேமனியர்களுக்கு ஆட்டுக்குட்டி மட்டுமே தெரியும், அல்கைதா தெரியாது. ஆனால் அந்த நாட்டில், இஸ்லாமிய அரசியலில் பற்றுக் கொண்ட ஆயுதமேந்திய போராளிகள் இருக்கிறார்கள். உள்ளூர் மக்கள் அவர்களை "சலாபிகள்", அல்லது "வஹாபிகள்" என்று அழைப்பார்கள். சலாபி, வஹாபி ஆகியோர் கடும்போக்கு இஸ்லாமை போதித்த மதத்தலைவர்கள். ஆனால் இதையெல்லாம் உள்ளபடியே சொன்னால், பிற நாட்டு மக்களுக்கு ஆர்வம் ஏற்படாது. "அல்கைதா" என்ற லேபிளை ஒட்டி செய்தி வெளியிட்டால், டீக்கடையில் தினசரி வாசிக்கும் கந்தசாமியும் "உச்"சுக் கொட்டுவார்.
அது சரி, யேமனில் அல்கைதா எப்படி வந்தது? எண்பதுகளில் ஆப்கானிஸ்தானில் சோவியத் ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடிய ஜிகாதிகள் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். "எங்கிருந்தோ வந்த ரஷ்யாக்காரன், இஸ்லாமிய உறவுகளை இனவழிப்பு செய்கிறான்" என்று கேள்விபட்டு, ரஷ்யர்களை எதிர்த்து போரிட, பல அரபு தொண்டர்கள் ஆப்கானிஸ்தான் சென்றனர். யேமனில் இருந்தும் பெருந்தொகை இளைஞர்கள் அணிதிரட்டப் பட்டார்கள். ஆப்கானிஸ்தானில் இருந்து சோவியத் படைகள் வாபஸ் வாங்கியதும், அவர்கள் நாடு திரும்ப ஆரம்பித்தனர். தசாப்த காலமாக யேமனை ஆண்ட சர்வாதிகாரி சாலேயின் இஸ்லாமியமயமாக்கல் கொள்கைக்கு ஒத்துழைத்தனர். முன்னாள் ஆப்கான் போராளிகளை கூலிப்படையாக கொண்டு தான், தென் பிராந்திய பிரிவினைவாத இயக்கம் அடக்கப்பட்டது. (இது குறித்து பின்னர் விரிவாக.)
2001 , செப்டம்பர் 11 க்குப் பின்னர் தான், முன்னை நாள் ஆப்கான் போராளிகளுக்கு அல்கைதா என்ற சிறப்புப் பட்டம் சூட்டப்பட்டது. "சோவியத் யூனியனை மண் கவ்வ வைத்த இஸ்லாமியத் தீவிரவாதம் அமெரிக்காவுக்கும் எதிரானது" என்று தாமதமாகவே அறிவித்தார்கள். இஸ்லாமியத் தீவிரவாதம் யேமன் அரசுக்கும் எதிரி என்று, வாஷிங்டன் சொன்ன பிறகு தான் தெரிந்ததாம். அதற்கு முன்னரே, சர்வாதிகாரி சலேக்கும், ஆப்கான் போராளிகளுக்கும் இடையில் விரிசல் தோன்றி விட்டது. எண்ணெய் விற்று வந்த பணத்தில் தான் இஸ்லாமியப் போராளிகளுக்கு சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. உலக சந்தையில் எண்ணெய் விலை இறங்கியதால் சாலேயின் கையைக் கடிக்கவே, கூலிப்படைக்கு பணம் பட்டுவாடா செய்வதும் நிறுத்தப்பட்டது. ஆயுதந்தரித்த கைகள் மண்வெட்டி பிடிக்குமா? அரசாங்க நிதியை இழந்த இஸ்லாமிய கூலிக் குழுக்கள் அரசுக்கு எதிராக திரும்பின. அவர்களைத் தான் அன்றிலிருந்து இன்று வரை, அல்கைதா என்று பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
இதற்கிடையே ஒரு முறை "போலி அல்கைதா" பற்றிய செய்தி வெளி வந்தது.(Israel-Linked Terrorist Cell Dismantled: Yemen) 2008 ம் ஆண்டு தலைநகர் சானாவில் அமெரிக்க தூதுவராலயத்தை இலக்கு வைத்த குண்டுவெடிப்பு ஒன்று நடந்தது. தாக்குதல் நடத்தியவர்களை தேடி துப்புத்துலக்கிய யேமன் போலிஸ், சில பயங்கரவாதிகளை கைது செய்தது. பிடிபட்ட "அல்கைதா சந்தேகநபர்கள்" இஸ்ரேலிய உளவுப்பிரிவுடன் தொடர்பு கொண்டிருந்தமை விசாரணையின் போது தெரிய வந்தது. இஸ்ரேலில் கணிசமான அளவு யேமன் யூதர்கள் வாழ்கின்றனர். அவர்களில் சிலரை மொசாட் உளவாளிகளாக திரும்பவும் யேமன் அனுப்புவது இலகு என்பது குறிப்பிடத் தக்கது. இஸ்ரேல் உருவாக்கிய போலி அல்கைதா பற்றி பத்திரிகையாளர் மகாநாட்டில் தெரிவித்த ஜனாதிபதி சாலே, அவர்களை நீதிமன்றத்திற்கு கொண்டு வருவதாக உறுதியளித்தார். ஆனால் அதற்கு அப்புறம் ஏதாவது நீதி மன்ற வழக்கு நடந்ததாக செய்தி வரவில்லை. பிடிபட்ட பயங்கரவாதிகள் இப்போதும் சிறையில் உள்ளனரா? யாம் அறியோம் பராபரமே.
கடந்த ஆண்டிலிருந்து யேமன் அல்கைதா நிறுவனம் துடிப்புடன் இயங்கி வருவதாக அடுத்தடுத்து அறிவிப்புகள் வந்தன. சுவாரஸ்யமாக இந்த அறிவிப்புகள் எல்லாம் இணையத்திலேயே காணக் கிடைக்கின்றன. "அல்கைதா இணையத்தளத்தில்" காணப்படும் அறிவிப்புகள் அதிர்ச்சியுற வைக்கின்றது. நாசிர் அல் வஹைஷி என்ற புதிய அல் கைதா தலைவர், "யேமெனில் ஜிகாத் தொடக்கி பாலஸ்தீனத்தில் முடிக்கப் போவதாக" சூளுரைத்துள்ளார். (நல்லது, அவருக்கும் கனவு காண்பதற்கு உரிமை உண்டு.) செயலிழந்துள்ள சவூதி அல்கைதா உறுப்பினர்களை இணைத்து, "அரேபிய தீபகற்பத்திற்கு பொதுவான அல்கைதா" அமைப்பு இயங்குவதாக தெரிவிக்கிறார். அடுத்து வரும் தகவல் சுவாரஸ்யமானது. அமைப்பின் உப தலைவராக, சவூதி பிரஜை அபு சயாப் அல் ஷிஹ்ரி நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யார் இந்த அபு சயாப் அல் ஷிஹ்ரி? அமெரிக்கர்களால் விடுதலை செய்யப்பட்ட குவாந்தனமோ சிறைக் கைதி. குவாந்தனமோ என்ற தனிமைச் சிறைக்குள் தள்ளி சித்திரவதை செய்தும், நிஜ அல்கைதா உறுப்பினர்களை கண்டுபிடிக்க முடியவில்லையா? அல்லது சி.ஐ.ஏ. உளவாளியாக வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் விடுதலை செய்யப்பட்டாரா? குவான்தாமோ சிறையில் இருந்து விடுதலையான பலர் சி.ஐ.ஏ, உளவாளிகளாக செயற்படுவதால், அந்தக் குற்றச்சாட்டை மறுப்பதற்கில்லை.
(தொடரும்)
யேமன் தொடர்பான முன்னைய பதிவுகள்:
சவூதி அனுப்பிய ஹஜ் வெடி குண்டுகள்
யேமன்: நேற்று நண்பர்கள், இன்று எதிரிகள்
அல்குவைதா நல்லவங்களா இல்ல கெட்டவங்களா
ReplyDeleteபின்னூட்டத்திற்கு நன்றி சங்கர்.
ReplyDeleteஅல்கைதா நல்லவர்களா, கெட்டவர்களா என்பதல்ல இங்கே பிரச்சினை. பெரும்பாலான செய்திகளில் அல்கைதா ஒரு கட்டுக்கதை என்பது நிரூபணமாகி உள்ளது. பல்வேறுபட்ட இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களை அல்கைதா என்ற பொதுப் பெயரில் அழைக்கிறார்கள். அது சரியா என்பது தான் கேள்வி.
போகிற போக்கில் அல்ஜசீராவும் அமெரிக்கனின் கையாளாக இருப்பதற்கான வாய்ப்பு இருக்கும் போல தெரிகிறதே?
ReplyDeleteகுவந்தனமோ சிறைக்கைதி உப தலைவரா?
அப்படியானால் இனி அந்த சிறைக்கூடம் மூடப்படுவது பற்றி கனவில் கூட செய்தி வராது. வேண்டுமானால் புதிதாக ஒன்று திறப்பதைப்பற்றியும் யோசிப்பார்கள்.
வணக்கம் பிரகாஷ், இந்த விஷயமெல்லாம் எமக்கு தான் புதுசு. அமெரிக்க அரசுக்கு ஏற்கனவே தெரியும். விடுவிக்கப்பட்ட குவாந்தனமோ கைதிகள் அனைவரும் குற்றம் நிரூபிக்கப்படாமல் தான் விடுதலையாகிறார்கள். இவர்களில் பலர் அமைதியான வாழ்க்கை வாழ விரும்புகிறார்கள். கொள்கையில் பற்றுக் கொண்ட சிலர் மீண்டும் தலைமறைவு வாழ்க்கைக்கு செல்கிறார்கள். அதைவிட சி.ஐ.ஏ. க்கு உளவு பார்க்க ஒப்புக் கொண்டு விடுதலையானவர்கள் சிலர். இப்படிப் பலரகம் உண்டு.
ReplyDeleteஅல்ஜசீராவை முழுக்க முழுக்க அமெரிக்க எதிர்ப்பு ஊடகமாக பார்ப்பது தவறு. சர்வதேச ஊடகத்துறையில் ஏற்பட்ட போட்டி காரணமாக அமெரிக்கா சிலவேளை அப்படிக் கருதலாம். அல்ஜசீரா பல இடங்களில் அமெரிக்க வெளிவிவகார கொள்கையுடன் ஒத்துழைக்கிறது.
ReplyDeleteஇந்திய அரசுக்கு 'டெக்கான் முஜாஹிதீன்', 'இந்திய முஜாஹிதீன்' எல்லாம் எப்படியோ அதே போலத்தான், அமெரிக்காவுக்கு அல்கைதா. அவ்வளவுக்கு ஏன் போவானேன். இந்த ஒசாமா பின் லேடன் கூட ஒரு கற்பனை கதாபாத்திரம் என்ற ஐயம் எனக்கு உண்டு. அப்படியே ஒருவர் உண்மையிலேயே இருப்பதாக வைத்துக்கொண்டாலும் அவர் இருப்பிடம் வாஷிங்டன் டி.சி. யாகத்தான் இருக்கும் என்பதில் எனக்கு ஐயம் இல்லை.
ReplyDeleteநன்றி, நேசன். நீங்கள் நினைப்பது சரி. "பின்லாடனும் அல்கைதாவும்" வெறும் கற்பனை.
ReplyDeletehttp://www.collateralmurder.com/
ReplyDelete