Thursday, January 14, 2010

ஜப்பான்: மேற்கே உதிக்கும் சூரியன்

முன்னொரு காலத்தில், பசுபிக் சமுத்திரத்தின் மத்தியில் இருக்கும் ஹவாய் தீவுகளை, லிலியோகலானி என்ற அரசி ஆண்டு வந்தாள். அங்கே கிடைக்கும் இயற்கை வளங்களைக்கொண்டு, திருப்தியான வாழ்க்கை வாழ்ந்த, பூர்வீகக் குடிமக்களை ஓரங்கட்டி விட்டு, சிறுபான்மையினரான வெள்ளை அமெரிக்கர்கள் பல சலுகைகளை அனுபவித்து வந்தனர். பூர்வீக மக்களின் நன்மை கருதி அரசி புதிய சட்டங்களை இயற்றினார். வெள்ளை அமெரிக்கரின் ஆதிக்கம் கட்டுப்படுத்தப்பட்டு , பிரதன உற்பத்தியான கரும்புத் தோட்டங்களுக்கும் வர்த்தகத்திற்கும் பூர்வீகக் குடிகள் உரிமையாளர்களாக்கப் பட்டனர்.

ஹவாயில் வாழும் அமெரிக்கர்களின் பாதுகாப்பிற்கும் சொத்துக்களுக்கும் உத்தரவாதம் அளிப்பதாகக் கூறி 1893 ல் அமெரிக்க இராணுவம் ஹவாயில் தரை இறங்கியது. முடியாட்சி நீக்கப்பட்டு "ஹவாய் குடியரசு" பிரகடனப்படுத்தப்பட்டது. மாபெரும் அமெரிக்க இராணுவத்திற்கு முன்னால் அரசி மண்டியிடவேண்டியதாயிற்று. 1898 ல் ஹவாய் அமெரிக்காவின் ஐம்பதாவது மாநிலமாகியது.

19 ம் நூற்றாண்டின் இறுதியில் காலணிகளுக்காகப் பிரிட்டனுடன் போட்டியிட்ட அமெரிக்கா ஹவாய் தீவுகளில் நிரந்தர இராணுவத் தளத்தை ஏற்படுத்தியது. அவர்களின் நோக்கம் மாபெரும் சீனச் சந்தையை கைப்பற்றுதாக இருந்தது. பசுபிக் பிராந்தியத்தில் இன்னொரு சாம்ராஜ்ஜியமான ஜப்பானும் காலணியாதிக்கத்திற்காகப் போட்டியிட்டது. இரண்டாம் உலகப் போருக்கு அnமிர்காகவிற்கும், ஜப்பானுக்குமிடையிலான வர்த்தகப் போட்டியும் ஒரு காரணம். ஹவாய் தீவில் இருந்த பேர்ல் துறைமுகத்தில் ஜப்பானியர் நடத்திய தாக்குதலுக்குக் காரணமும் அதுதான்.

இரண்டாம் உலகப் போரின் முடிவு அமெரிக்காவைப் புதிய வல்லரசாக்கியது மட்டுமன்றி ஜப்பானின் காலணியக் கனவுகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தது. ஜப்பான் அமெரிக்காவால் ஆக்கிரமிக்கப்பட்டது. ஜப்பானுக்குச் சொந்தமான ஒக்கினாலா தீவில் இராணுவத் தளம் அமைத்ததின் முலம் அமெரிக்கா முன்பு விரும்பியவாறு சீனாவிற்கும் புதிய எதிரியான சோவியத் யூனியனுக்கும் அண்மையில் வந்து விட்டது. ஆக்கிரமிக்கப்பட்ட ஜப்பானில் அமெரிக்காவிற்குச் சார்பாகச் செயற்படக்கூடிய லிபரல் ஜனநாயகக் கட்சி ஆட்சியில் அமர்த்தப்பட்டது. நீண்டகாலமாக 1994 வரையில் ஜப்பானில் இந்தக் கட்சி ஆட்சியிலிருந்தது. அங்கே எத்தனை முறை தேர்தல்கள் நடந்தபோதும் பிற கட்சிகளுக்குச் சுதந்திரம் இருந்தபோதும் லிபரல் ஜனநாயகக் கட்சியின் ஆதிக்கம் இன்று வரை நீடிக்கிறது. இதற்கு அந்தக் கட்சிக்கும், பெரிய வர்த்தக நிறுவனங்களுக்கும் இடையில் இருக்கும் நெருங்கிய தொடர்பு முக்கிய காரணம். இந்த நிறுவனங்களில் தொழில் புரியும் தொழிலாளர்கள் தமது நிர்வாகி சொல்லும் கட்சிக்கே வாக்குப் போடும் வழமையுடையவர்கள்.

"ஜப்பானியக் கலாச்சாரம்" என்று குறிப்பிடக்கூடிய எதையும் ஜப்பான் கொண்டிருக்கவில்லை. அவர்களின் மொழிக்கான எழுத்து வடிவத்தை சீனாவிலிருந்து கடன் வாங்கினர். பிற்காலத்தில் ஐரோப்பியரைப் பார்த்து அவர்களின் நாகரீகத்தை அப்படியே வரித்துக்கொண்டனர். இருப்பினும் நிலவுடமைச் சமுதாயத்தின் தாக்கம் இன்றுவரை ஜப்பானியச் சமூகத்தில் சிறிதளவேனும் உள்ளது. குறிப்பாக இந்தியாவில் உள்ளதைப்போன்ற சாதீய சமூக அமைப்பை சொல்லலாம்.உலகப் பிரசித்தி பெற்ற தேவதாசிகளை ஒத்த "கெய்ஷா" பெண்கள், சத்திரியர்களான "சமூராய்"கள் , தீண்டத்தகாத புலையர்களான "புராக்குமின்" கள் ஆகியன குறிப்பிடத்தக்கவை. நவீன ஜப்பானிலும் மறைவாகப் பாகுபாடு காட்டப்படும் புராக்குமின்கள் பிற்பட்ட சமூகமாக வாழ்கின்றனர்.

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஜப்பானை ஆண்ட வந்த சக்கரவர்த்தியினதும் "ஷோகன்" என்ற நிலப்பிரபுக்களினதும் ஆதிக்கம் 19 ம் நூற்றாண்டில் ஆட்டம் கண்டது. அதுவரை இராணுவத்தில் பணிபுரிவதைத் தவிர வேறெதுவும் அறியாத சமுராய்கள் மத்திய தர வர்க்கமாக எழுச்சியுற்று அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றினர். அந்நேரம் ஜப்பான் மேலைத்தேயத் தொழில் நுட்ப அறிவைப் பெறாது பின் தங்கியிருந்தது. புதிய ஆளும் வர்க்கம் ஐரோப்பிய மாதிரியைப் பின்பற்றி ஜப்பானைச் சீர்திருத்தியது. இராணுவவாதச் சிந்தனை கொண்ட சமுராய்கள் இராணுவத்தை தேசத்தின் உயர்ந்த ஸ்தானத்திற்குக் கொண்டு வந்தனர். சக்கரவர்த்தியின் அதிகாரம் கட்டுப்படுத்தப்பட்டிருந்த போதும் அவரை மையப்படுத்திய வழிபாடு ஊக்குவிக்கப்பட்டது. உத்தியோக பூர்வ மதமான "ஷின்டோ" மதம் இதனைச் சாத்தியமாக்கியது. ஷின்டோ என்பது, ஆதிகால இயற்கை வழிபாட்டுடன், பௌத்தமதக் கூறுகளை உள்ளடக்கிய, ஜப்பானில் மட்டுமே காணப்படும் மதமாகும். பிற்காலத்தில் அந்நிய நாடுகள் மீதான படையெடுப்புகள், இரண்டாம் உலகப் போர் ஆகியன சக்கரவர்த்தியின் பெயரில் ஆளும் இராணுவ வர்க்கத்தால் முன்னெடுக்கப்பட்டவை. இது ஒருவகையில் மகாராணியின் பெயரால் காலனிய சாம்ராஜ்ஜியம் கட்டிய பிரிட்டிஷாரின் அரசியலை ஒத்தது.

இரண்டாம் உலகப்போரின் முடிவில் ஜப்பானை ஆக்கிரமித்த அமெரிக்கர்கள் ஷிண்டோ மதத்தைத் தடை செய்தனர். சக்கரவர்த்தியை வேறுசில நாடுகளில் உள்ளது போல அதிகாரமற்ற ஜனாதிபதி ஸ்தானத்தில் வைத்தனர். லிபரல் ஜனநாயகக் கட்சியின் கையில் ஆட்சியதிகாரம் ஒப்படைக்கப்பட்டது. இதைவிட உலகில் வேறெந்த நாட்டிலும் இல்லாதவாறு தேசிய இராணுவம் ஒன்றை வைத்திருப்பதைத் தடுக்கும் சட்டம் இயற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தத் தடை தளர்த்தப்பட்டு ஜப்பானிய இராணுவம் ஈராக்கில் பணிபுரிய அனுப்பப்படவுள்ளது.

ஜப்பானின் கடந்த காலத்தை மறக்காத பலர், எதிர்காலத்தில் ஜப்பான் உலகவல்லரசாகப் போவதாக ஆரூடம் கூறுகின்றனர். ஜப்பானின் இராணுவ பலத்தைக் குறைத்து அடிபணியவைக்கும் நோக்கோடுதான் "சமாதானச் சட்டம்" கொண்டுவரப்பட்டது. இதன்படி பிரச்சினைகளைத் தீர்க்க வன்முறை பாவித்தல் தடைசெய்யப்பட்டது. அண்மையில் இரண்டாம் உலகப்போரில் இறந்த (போர்க் குற்றவாளிகள் எனக் கருதப்படும்) போர்வீரர்களின் சாம்பல் வைக்கப்பட்டிருக்கும் யகுசுனி ஆலயத்திற்கு பிரதமர் கொய்சுமி விஜயம் செய்தமை பலத்த சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது. இதைவிட கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை வாங்குவதுபற்றி பாதுகாப்பு அமைச்சினுள் நடக்கும் வாதப்பிரதிவாதங்கள் ஜப்பான் பற்றிய அச்சத்தை பிற ஆசிய நாடுகள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

கொரியா, சீனா ஆகிய நாடுகள் ஜப்பானின் இரண்டாம் உலகப்போர்க்காலக் குற்றங்களை மறந்து, மன்னித்து விடத் தயாராகவில்லை. சீனாவில் நச்சுவாயு பயன்படுத்தி ஆயிரக்கணக்கான மக்களைக்கொன்றமை. கொரியப் பெண்களை இராணுவத்திற்கான பாலியல் அடிமைகளாக்கியமை, போன்ற குற்றங்களுக்காக, நவீன ஜப்பான் அவ்வப்போது மன்னிப்புக் கோரவேண்டி வந்துள்ளது. கிழக்காசியப் பிராந்தியத்தில் அன்று ஜப்பான் இராணுவ பலம்மிக்க வல்லரசு நாடாகவிருந்ததும் சீனா, கொரியா போன்ற பின்தங்கிய பலவீனமான நாடுகளாகவிருந்ததுமான நிலைமை இன்று மாறிவிட்டது. இன்று, சீனா-வடகொரியா ஆகிய நாடுகளின் இராணுவபலம் ஜப்பானுடையதைவிட பல மடங்கு அதிகம். மேலும் அவை அணுவாயுதப் பலத்தையும் பெற்றுள்ளன. தற்போதைய நிலையில், ஜப்பான் சீனா, கொரியா மீது படையெடுத்த வருவதற்குள் அதன் பிரதான நகரங்கள்அனுகுண்டு பொருத்திய ஏவுகணைகளால் அழிக்கப்பட்டுவிடும்.

உலகில் இன்றுவரை அணுகுண்டு வீச்சுக்குப் பலியான ஒரேயொரு நாடு ஜப்பான் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். இதன் காரணமாக உலகில் எங்கே அணுவாயுதப் பரிசோதனை நடைபெற்றாலும் ஜப்பான் கண்டனம் தெரிவித்து வந்தது. சர்வதேச அரங்கில் சமாதான விரும்பியாக அணுவாயுத அழிப்பிற்கான குரல் கொடுத்து வந்துள்ளது. அதே ஜப்பான் வருங்காலத்தில் அணுகுண்டு வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் இடம்பெறும் என்று யாராவது சொன்னால் நம்புவீர்களா ? ஆனால், அது விரைவில் நடக்கவிருப்பதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன.

ஜப்பான் இரண்டு வகையில் அணுவாயுதம் வைத்திருக்கும் நாடாகலாம். ஒன்று, ஜப்பானிய அரசு சுயாதீனமாகவே அதைத் தயாரிக்கலாம். ஏற்கனவே நாடு முழுவதும் பல அணு உலைகள் இயங்குவதும், நாட்டின் பெரும்பான்மையான மின்சாரத்தை இந்த அணு உலைகள் வழங்குவதும் தெரிந்த விடயம். இந்த அணு உலைகளில் அணுகுண்டு தயாரிக்கக்கூடிய வசதிகள் உள்ளன. இந்தக் காரணத்தை ஈரான் வடகொரியா ஆகிய நாடுகளின் அணுவாயுத உற்பத்தி பற்றிய குற்றச்சாடடில் அமெரிக்கா கூறிவந்தது. இருப்பினும் அமெரிக்காவிற்குத் தெரியாமல் ஜப்பான் தன்னிச்சையாக அணுகுண்டு தயாரிக்கக்கூடிய நிலைமை தற்போது இல்லை.

இரண்டாவது, அமெரிக்கா தனது அணுகுண்டு ஏவுகணைகளை ஜப்பானில் நிறுத்தி வைப்பது, அல்லது அமெரிக்க அனுசரணையுடன் ஜப்பான் அணுவாயுதம்தயாரிப்பது. வடகொரியா அணுகுண்டு வைத்திருப்பது குறித்த ஏற்பட்ட சர்ச்சையின் போது, ஜப்பானை அணுவாயுத நாடாக்க வேண்டும் என்ற கோரிக்கை பல அமெரிக்க அரசியல் வாதிகளால் எழுப்பப்பட்டது. ஏற்கெனவே அமெரிக்க சார்பு நாடான இஸ்ரேல் அணுகுண்டு வைத்திருப்பது பலரும் அறிந்ததே. அதேபோல் இன்னொரு அமெரிக்க சார்பு நாடான ஜப்பான் அணு குண்டு வைத்திருந்தாலும் ஆச்சரியப்பட எதுவுமில்லை.

வடகொரியா பற்றிய சர்ச்சைகளின் போது கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விடயம் யாதெனில், வடகொரியாவிலிருந்து வரும் அபாயம் பற்றி அமெரிக்கா பயப்படும் வேளையில், அண்டை நாடுகளான சீனாவும் ரஷ்யாவும் அலட்டிக்கொள்ளவில்லை. அமெரிக்காவுடன் ஈடுகொடுத்து ஜப்பானும் வடகொரியா அபாயம் பற்றி கண்டித்தும் எதிர்ப்புத்தெரிவித்தும் வருகிறது. அமெரிக்க அரசியல்வாதிகள் கூறவிரும்புவது இதுதான்: "அமெரிக்காவின் எதிரியான வடகொரியாவை சீனா தனது கவசமாகப் பயன்படுத்துகின்றது. அதேபோல் நாம் ஜப்பானை எமது கவசமாகப் பயன்படுத்தவேண்டும்." அதாவது ஜப்பான் அனுவாயுத நாடாவது அமெரிக்க நலன்களில் தங்கியுள்ளது.

ஜப்பான் உலகில் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டிருப்பது உண்மைதான். பலர் நினைப்பதுபோல் இது ஜப்பானை வல்லரசாக்க மாட்டாது. முக்கிய ஜப்பானிய, அமெரிக்க பொருளாதாரங்கள் ஒன்றில் ஒன்று தங்கியுள்ளன. சர்வதேசப் பொருளாதாரத்திற்கு தலைமை தாங்கும் அமெரிக்காவின் இடத்தை ஜப்பான் பிடிக்கமுடியாது என்பதுடன், அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்படும் விளைவுகள் ஜப்பானிலும் எதிரொலிக்கும் என்பதும் பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளன. ஆசிய நாடுகளில் முதலீடு செய்வதற்கு ஜப்பானை அமெரிக்கா அனுமதித்து வந்துள்ளது. இவ்விடயத்தில் ஜப்பான் அமெரிக்காவின் எதிராளியாக அல்ல பிரதிநிதியாகச் செயற்படுவது குறிப்பிடத்தக்கது.

ஜப்பானியப் பொருளாதாரத்தின் பலவீனம் என்னவெனில், அது குறைவான இயற்கை வளங்களைக் கொண்டிருப்பதுதான். ஆசியாவின் அபிவிருத்தியடைந்த தொழிற்துறை நாடு காலங்காலமாக தனக்குத் தேவையான மூலப்பொருட்களை பிறநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகின்றது. குறிப்பாக எண்ணைக்காக பிற நாடுகளில் தங்கியிருக்க வேண்டிய நிலைமை, இரண்டாம் உலகப்போருக்கு வழிவகுத்த காரணங்கிளல் ஒன்று. அன்று ஒல்லாந்துக் காலனியாகவிருந்த இந்தோநேசியா எண்ணை வளம் மிக்கது. அதுவரை ஜப்பானியத் தொழிற்சாலைகளுக்கான எண்ணையை அமெரிக்கா, பிரிட்டன் நெதர்லாந்து போன்ற நாடுகள் விற்று வந்தன. எண்ணை விற்பனையில் அவற்றின் ஏகபோக ஆதிக்கத்தை உடைக்க விரும்பிய ஜப்பான் இந்தோநேசியா மீது படையெடுப்பை நடாத்தியது.

போர்முடிந்த பின்னரும் இன்றுவரை அமெரிக்கா ஜப்பானிற்கு எண்ணை விற்று வருகின்றது. தினசரி மத்தியகிழக்கு நாடுகளிலிருந்து எண்ணை ஏற்றிக்கொண்டு, அமெரிக்கக் கப்பல்கள் இந்து சமுத்திரத்தினூடாக இலங்கையைச் சுற்றி, சிங்கப்பூர் ஊடாக ஜப்பானை அடைகின்றன. ஜப்பானுக்கு எண்ணை விற்பதென்பது பெருந்தொகை வருமானத்தை ஈட்டித்தரும் வணிகம். இந்து சமுத்திரத்தினூடாக எண்ணைக் கப்பல்களின் போக்குவரத்து தங்குதடைகளின்றி தொடரவேண்டுமென அமெரிக்கா கவலைப்படுகிறது. இலங்கைப் பிரச்சனையில் அமெரிக்கா காட்டிவரும் ஆர்வத்தின் பின்னணி இதுதான்.

ஈராக்கில் நிலைகொண்டிருக்கும் பன்னாட்டுப் படைகளுடன் ஜப்பானும் சேர்ந்தது. அப்போதுதான் ஈராக்கிய எண்ணைகிடைக்கும்.சர்வதேச அரங்கில் அமெரிக்கா ஜப்பானை எப்படிப் பயன்படுத்தி வருகிறதென்பதற்குப் பின்வரும் சம்பவத்தை உதாரணமாகக் கூறலாம்: 1991ல் குவைத்தை மீட்கவந்த வளைகுடாப்பேரில் ஏற்பட்ட செலவுகளை தனது நேச நாடுகளும் ஏற்க வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியது. இதில் ஜப்பான் செலுத்த வேண்டிய பங்கு 1.2 டிரில்லன் யேன் (10 பில்லியன் அமெரிக்க டொலர்கள்). இதற்கான காசோலை அமெரிக்கா போய்ச் சேர்ந்த சமயம் பார்த்து, ஜப்பானிய யேன் னின் பெறுமதி 10 வீதத்தால் குறைந்தது. இதனால் சொன்ன தொகையைவிட ஒரு பில்லியன் டொலர்கள் அதிகமாகச் செலுத்த வேண்டியதாயிற்று.

பாதுகாப்பைப் பொறுத்தவரை ஜப்பான் அமெரிக்காவில் தங்கியுள்ளது. அதாவது ஜப்பானை எந்த நாடும் தாக்க விடாது அமெரிக்கா பாதுகாத்துக் கொள்ளும். இது பாதுகாப்பு சம்பந்தமான ஒப்பந்தம் ஒன்றின் மூலம் தீர்க்கப்பட்டது. ஒரு காலத்தில் உலக வல்லரசாகவிருந்த ஜப்பான் இப்படி அடிபணிந்து போவதைப் பார்க்க ஜப்பானியத் தேசியவாதிகளுக்குப் பொறுக்கவில்லை.

அவர்கள் தற்போது குறைவான எண்ணிக்கையில் இருந்தாலும் பொருளாதாரப் பிரச்சினைகள் மோசமாகும் தருணத்தில் தமது ஆதரவாளர்களை அதிகரித்துக் கொள்ளலாம். உலகில் சூரியன் உதிக்கும் நாடென்ற பெருமையில் கதிர்வீசம் செஞ்சூரியனைத் தனது நாட்டின் தேசியக் கொடியாக ஜப்பான் வைத்திருந்தது. தற்காலக் கொடியில் கதிர்கள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளன. ஒருவேளை தற்போது ஜப்பானுக்கான சூரியன் மேற்கே அமெரிக்காவில் உதிக்கின்றதென்பதைப் புரிந்து வைத்திருக்கிறார்கள் போலும்.

11 comments:

  1. ரொம்ப படிப்பீங்களா? வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. angel, அண்ணாமலையான்,
    பாராட்டுக்கு நன்றி.

    ReplyDelete
  3. நண்பரே நான் தற்போது ஒரு மாதமாகத்தான் வலையுலகில் நடைபயின்று வருகிரேன். உங்களது படைப்புகள் அனைத்தும் அருமை. எனது எண்ணப்படி நாம் பள்ளிப்புத்தகங்களில் படிக்கும் வரலாறு என்பது முழுக்க முழுக்க பொய் என்பது பற்றிய புரிதல் எனக்கு முன்னமேயே இருந்து வந்தாலும் மாற்று ஊடகங்களின் செய்திகளை அறிவது இயலாததாகவே இன்னும் இருந்து வருகிறது. உம்மைப் போன்றவர்களின் முயற்சி வரவேற்க வேண்டியதும் பாராட்டப்பட வேண்டியதும் ஆகும். உமது அனைத்து ஆக்கங்களுக்கும் முயர்ற்சிகளுக்கும் எனது வாழ்த்துக்கள்.
    ச பிரபாகர்

    ReplyDelete
  4. prabakaran பாராட்டுக்கு நன்றி.

    ReplyDelete
  5. Very detailed article!

    I don't think Japan will ever become a country with atomic bombs in their military inventory.

    Some of the Japanese politicians are still fighting to get the American army out of okinawa (and there are other bases in other cities of Japan) for the past 5 decades and hence Japan producing its own atom bombs would take another century or longer!

    ReplyDelete
  6. Joe, நன்றி, ஜப்பானும் அணு குண்டு வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் சேராது, சேரக்கூடாது என்பது தான் எனது எதிர்பார்ப்பும். ஆனால் எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம்.

    ReplyDelete
  7. fantastic and detailed article mr. kalaiyarasan, please keep it up.

    ReplyDelete
  8. excellent article

    -Nathan

    ReplyDelete
  9. excellent and very clear article
    it will cause the current generation readers and future readers to think twice on their school studies.
    continue with many more elaborated articles like these.

    ReplyDelete
  10. உங்களது படைப்புகள் அனைத்தும் அருமை. மாற்று ஊடகங்களின் செய்திகளை அறிவது இயலாததாகவே இன்னும் இருந்து வருகிறது. உம்மைப் போன்றவர்களின் முயற்சி வரவேற்க வேண்டியதும் பாராட்டப்பட வேண்டியதும் ஆகும். உமது அனைத்து முயர்ற்சிகளுக்கும் எனது வாழ்த்துக்கள்.

    ReplyDelete