1978 ம் ஆண்டு, அக்டோபர் 5 ம் திகதி. 150 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும், ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்த அமர்வு. இலங்கையின் பிரதிநிதியை பேச அழைக்கிறார்கள். பொது மேடைக்கு வந்த ஒருவர் கணீரென்ற குரலில் பேச ஆர்மபிக்கின்றார். "என்னுடைய பெயர் கிருஷ்ணா. சிறி லங்காவிற்கும், இந்தியாவிற்கும் நடுவில் அமைந்திருக்கும், இரண்டரை மில்லியன் சனத்தொகையை கொண்ட தமிழீழம் என்ற தேசத்தில் இருந்து பேச வந்திருக்கிறேன். எமது தேசத்தில் சிறி லங்கா சிங்கள அரசு திட்டமிட்ட இனவழிப்பை மேற்கொண்டு வருகின்றது...." (இந்த இடத்தில் ஒலிவாங்கி இணைப்பு துண்டிக்கப்படுகின்றது. பாதுகாப்பு அதிகாரிகள் அவரைப் பிடித்து, குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று வெளியே வீசுகின்றனர்.)
உலகமெங்கும் தமிழீழம் என்ற சொல்லை ஒலிக்க வைத்த அந்த குரலுக்கு சொந்தமானவர் கிருஷ்ணா வைகுந்தவாசன். பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வந்த முன்னாள் நீதிபதி. ஐ.நா.சபையில் கிருஷ்ணாவின் அதிரடி உரை, இலங்கையில் பரபரப்பாக பேசப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் சுதந்திரன் என்ற தீவிர தமிழ் தேசியவாத பத்திரிகை, கிருஷ்ணா முடிக்காத முழுமையான உரையை வெளியிட்டது. அடுத்தடுத்து கிருஷ்ணா பற்றிய தகவல்களை வெளியிட்டு, ஈழத் தமிழரின் குரலை உலகத் தலைநகரில் ஒலிக்க வைத்த மாபெரும் வீரனாக போற்றியது. வெளிநாடொன்றில் நாடுகடந்த தமிழீழ அரசு அமைப்பது பற்றி எல்லாம் ஆராயப்பட்டது. எந்தவொரு அரசியல் கட்சியையும் சாராத தனி மனிதனான கிருஷ்ணாவுக்கு பலர் உரிமை கொண்டாடினார்கள்.
அமரர் அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி, கிருஷ்ணாவை தனது பிரமுகராக தத்தெடுத்துக் கொண்டது. இத்தனை ஆர்ப்பாட்டங்களுக்கும் மத்தியில், அப்போது தலைமறைவாக இயங்கி வந்த விடுதலைப்புலிகள் இயக்கம் கிருஷ்ணாவின் செயலைக் கண்டித்து அறிக்கை விட்டனர். "நாடுகடத்தப்பட்ட தமிழீழ அரசு" என்று அதற்கு தலைப்பிட்டிருந்தது. சொந்த மண்ணில் தமிழீழ மக்களின் போராட்டத்தில் இருந்து அந்நியப்பட்டிருப்பதால் ஆதரிக்க முடியாது என தெரிவித்தனர். சரியாக முப்பது ஆண்டுகள் கழித்து, அமெரிக்காவில் "நாடு கடந்த தமிழீழ அரசு" அமைப்பது தொடர்பான கொள்கைப் பிரகடனம் வெளியிடப்படுகின்றது. இந்தப் பிரகடனத்தை செய்தவர், முன்னாள் தமிழர் விடுதலைக் கூட்டணி பிரமுகரான தியாகராசாவின் மகன் ருத்திரகுமார்.
கற்பனைக்கும் எட்டாத வரலாற்றுத் திருப்புமுனைகளைக் கண்ட முப்பதாண்டு கால தமிழ்த் தேசியவாத அரசியல், ஆரம்பித்த புள்ளிக்கே மீண்டும் வந்து சேர்ந்திருக்கிறது. ஆனால் இம்முறை நாடு கடந்த தமிழீழ அரசு என்ற எண்ணக்கருவிற்கு வலுச் சேர்ப்பது புலம்பெயர்ந்து வாழும் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள். கனடா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற மேற்குலக நாடுகளில் வாழும் தமிழர்கள் பலர் கடந்த இருபது வருடங்களுக்குள் புலம்பெயர்ந்தவர்கள். அதாவது ஈழப்போர் ஆரம்பமான ஆண்டாக கருதப்படும் 1983 க்குப் பின்னர் வந்தவர்கள். அதற்கு முன்னர் வெளிநாடு சென்று வாழ்வதென்பது மேல்தட்டு வர்க்கத்தை சேர்ந்தவர்களுக்கே சாத்தியமான விஷயம். ஆனால் ஒருவழிப் பயணச் சீட்டுடன் அகதி அந்தஸ்து கோரலாம் என்ற தகவல் அறிந்து, ஓரளவு வசதியானவர்கள் கூட வெளிநாடுகளுக்கு சென்றார்கள். ஐரோப்பிய கலாச்சாரத்திற்கு ஒத்துப்போன மேல்தட்டு வர்க்கத்தினரிடம் இருந்து இவர்கள் மாறுபட்டு நின்றனர். தமது ஊர் பழக்கவழக்கங்களை அப்படியே பெயர்த்து சென்று, தாம் குடியேறிய நாடுகளிலும் பின்பற்றினார்கள். இப்படித்தான் சமயச் சடங்குகளும், சாதிய இறுக்கங்களும் கூடவே சென்றன.
இருப்பினும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள், ஒரே ஊரை சேர்ந்தவர்கள் பிரிந்து வேறு வேறு நாடுகளில் வாழ வேண்டிய நிர்ப்பந்தம். புலம்பெயர்ந்து இரண்டாவது தாயகமாக்கிக் கொண்ட நாட்டில் கூட, ஈழத்தமிழர் சமூகம் பல்வேறு சாதிகளின், பிரதேசங்களின் கூட்டுக்கலவையாக இருந்தது. ஊரில் சம்பந்தமில்லாத சமூகப்பிரிவினர், குடியேறிய நாடுகளில் கலந்து பழகவேண்டிய நிர்ப்பந்தம். இவர்களை இணைக்கும் பாலமாக விளங்கியது தமிழ் மொழி ஒன்று மட்டுமே. மொழி என்ற அடிப்படையில் இருந்து வளர்ந்த தமிழீழ தேசியமும் புலம்பெயர்ந்த தமிழரை கவ்விக் கொண்டதில் வியப்பில்லை. புலம்பெயர்ந்த நாட்டில் உள்ள குடிமைச் சமூகத்தில் அந்நியப்பட்டு விலகி நின்றவர்களுக்கு தமிழ் தேசியம் புகலிடம் அளித்தது. வெள்ளயினத்துடன் ஒட்ட முடியாத இரண்டாவது தலைமுறையினரின் மனதிலும் "தமிழீழ பிரஜை" என்ற கருத்தியல் பெருமிதத்தை கொடுத்தது.
"நாடுகடந்த தமிழீழ அரசு" என்பது ஒரு அரசியல் விஞ்ஞான கற்பிதம். "புலம்பெயர்ந்த தமிழீழம்" என்பது ஒரு சமூகவிஞ்ஞான கற்பிதம். முன்னையது ஒரு கனவு, பின்னையது நிதர்சனம். அரசு என்பது சில புத்திஜீவிகளின் கூட்டமைப்பு. தான் சார்ந்த சமூகத்தை வழிநடத்த, தலைமை தாங்க, அல்லது அடக்குவதற்கு என கட்டமைக்கப்படுகின்றது. 20 ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உலகம் முழுவதும் நிலப்புரபுத்துவ அரச அதிகாரம் மறைந்து, அந்த வெற்றிடத்தில் குடிமைச் சமுதாயம் தோன்றியது. "அனைவரும் இந்நாட்டு குடிமக்கள்" என்ற கோஷத்துடன் பிரெஞ்சுப் புரட்சி குடியரசை அறிமுகப்படுத்தியது. ஒரு நாட்டில் ஆட்சி முறை பாராளுமன்ற ஜனநாயகம், சர்வாதிகாரம் எதுவாக இருப்பினும் அது குடி+அரசு ஆக கருதப்படுகின்றது. அதற்கு காரணம் ஆட்சிக்கு வருபவர்கள் அரச பரம்பரையினர் அல்ல, மாறாக நிர்வாகத்திறன் கொண்ட நடுத்தர வர்க்கத்தினர்.
காலனியாதிக்க சாம்ராஜ்யங்களின் காலத்திலேயே நாடு கடந்த அரசுகள் இருந்துள்ளன. லண்டனில் உயர்கல்வி கற்ற இந்தியர்களின் காங்கிரஸ் கட்சி, நாடுகடந்த அரசாகவும் செயற்பட்டது. ஒரு வகையில், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அந்த தோற்றப்பாட்டை ஊக்குவித்திருந்தது. வெள்ளையர்களைப் போல சிந்திக்க கூடிய இந்தியர்கள் கையில் ஆட்சியை ஒப்படைப்பதில் அவர்களுக்கு எந்த ஆட்சேபனையும் இருக்கவில்லை. அதே நேரத்தில் எந்த இனத்தை சேர்ந்தவர்கள் ஆட்சியமைக்க வேண்டும் என்பதையும் அவர்களே தீர்மானித்தனர். இது அவர்களது எதிர்கால அரசியல் திட்டமிடலை கருத்தில் கொண்டிருந்தது. அவர்கள் நிர்ணயித்த தேசியத்திற்குள், சில குறுந்தேசிய இனங்களின் உரிமைகள் மறுக்கப்பட்டன. சில இடங்களில் கொடுத்த வாக்குகளை மீறி துரோகம் இளைத்தனர்.
இந்தோனேசியாவை காலனிப்படுத்தியிருந்த ஒல்லாந்து இராணுவத்தில், பல "மொலுக்கு" இன போர்வீரர்கள் கடமையாற்றினார்கள். மொலுக்கு என்ற தீவுக்கூட்டத்தை சேர்ந்தவர்கள், பெரும்பான்மை இந்தோனேசியர்களை விட முற்றிலும் வேறுபட்ட மொழி பேசும் மொலுக்கர்கள், தமக்கென தனிநாடு கோரினர். இரண்டாம் உலகப்போரில் மொலுக்கு வீரர்களின் சேவையை பயன்படுத்திக் கொள்வதற்காக, ஒல்லாந்தர்கள் தனிநாட்டிற்கு சம்மதித்தார்கள். ஆனால் இறுதியில் மொலுக்கர்களின் தலைவிதியை இந்தோனேசியர்களிடம் ஒப்படைத்து விட்டு ஓடினார்கள். ஒல்லாந்தரின் துரோகத்தால் "மொலுக்கு தாயகக் கனவு" கருவிலேயே சிதைந்தது. மொலுக்கர்களுக்கு இருந்த ஒரேயொரு தெரிவு நெதர்லாந்திற்கு புலம்பெயர்வது. நெதர்லாந்தும் மொலுக்கு அகதிகளை வரவேற்று தங்கவைத்துக் கொண்டது.
மொலுக்கர்களின் தாயகத்திற்கான போராட்டம், புலம்பெயர்ந்த நெதர்லாந்திலும் தொடர்ந்தது. மொலுக்கு பெற்றோர்கள் மொலுக்கு தேசியக் கருத்தியலை தமது பிள்ளைகளுக்கு கடத்தினர். நெதர்லாந்திலேயே வளர்ந்து பருவ வயதைக் கடந்த இரண்டாம் தலைமுறை இளைஞர்கள் மத்தியில் "நாடு கடந்த மொலுக்கு தேசியம்" பிரபலமானது. நெதர்லாந்து ஏகாதிபத்திய அரசு தமது இனத்திற்கு செய்த துரோகத்தை அவர்கள் மறக்கவுமில்லை. சில தீவிரவாத இளைஞர்கள் வன்முறைப் பாதையை நாடினார்கள். 1977 ம் ஆண்டு, வட நெதர்லாந்து மாகாணம் ஒன்று, முதலாவது பயங்கரவாத நில நடுக்கத்தை எதிர்கொண்டது. 40 பயணிகளுடன் ஒரு ரயில்வண்டி, 105 பிள்ளைகளுடன் ஒரு பாடசாலை, ஆயுதமேந்திய மொலுக்கு இளைஞர்களால் பணயம் வைக்கப்பட்டன. "மொலுக்கு தேசத்திற்கு சுதந்திரம் வழங்க வேண்டும். சிறையில் உள்ள மொலுக்கு சுதந்திரப் போராட்ட வீரர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்." இது போன்ற கோரிக்கைகள் விடுக்கப் பட்டன.
நெதர்லாந்து அரசும், மக்களும் இந்த வன்செயலை பயங்கரவாதமாகப் பார்த்தனர். நெதர்லாந்து கமாண்டோ படையினரின் திடீர் தாக்குதலில் ஆயுதபாணிகள் சுட்டுக் கொல்லப்பட, பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அந்த சம்வத்திற்குப் பின்னர் கூட, நெதர்லாந்து அரசு மொலுக்கு விடுதலைக்கு சார்பாக ஒரு வார்த்தை தன்னிலும் பேசவில்லை. இளந்தலைமுறை மொலுக்கர்கள் நெதர்லாந்து சமூகத்தினுள் உள்வாங்கப்பட்டு விட்டனர். என்றாவது ஒரு நாள், மொலுக்கு தீவுகளில் மதக்கலவரம் வெடிக்கும் போது மட்டும், ஊடகங்கள் மொலுக்கர்களின் உறவினர்களைப் பற்றி கரிசனத்துடன் விசாரிப்பார்கள். அதற்குப் பிறகு எல்லோரும் மறந்து விடுவார்கள்.
நெதர்லாந்தின் அரசியல் தலைநகரம் டென் ஹாக்கில், "நாடு கடந்த குர்திஸ்தான் அரசு" தோற்றுவிக்கப்பட்டது. துருக்கியில் தனி நாடு கோரும் குர்தியரின் விடுதலை அமைப்பான பி.கே.கே.யின் தலைமையின் கீழ் "நாடு கடந்த பாராளுமன்றம்" இயங்கி வந்தது. துருக்கியின் ராஜதந்திர பயமுறுத்தல்களுக்கு மத்தியில், நெதர்லாந்து அரசு தனி நபர் சுதந்திரக் காப்பாளனாக காட்சி தந்தது. இருப்பினும் 1995 ம் ஆண்டு நிறுவப்பட்ட நாடு கடந்த குர்திஷ் பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் நான்கு ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. ஐரோப்பிய நாடுகளில் பி.கே.கே. ஒரு பயங்கரவாத இயக்கமாக தடை செய்த சட்டம் பாராளுமன்ற செயற்பாடுகளை பாதித்தது. துருக்கியுடன் நடந்த அரசியல்-பொருளாதார பேரம் பேசல் முடிவுக்கு வந்தது மற்றொரு காரணம். புகலிடத்தில் ஒரு குறிப்பிட்ட நாட்டை சேர்ந்த சிறுபான்மை இனத்தின் அரசியல் செயற்பாடுகளை சகித்துக் கொள்வது ஒரு எல்லை வரையில் தான். அவர்கள் சார்ந்த பெரும்பான்மை இனத்தின் அரசை தமக்கு ஏற்றவாறு வளைப்பதே நோக்கம்.
பிராந்திய வல்லரசான இந்தியாவும் ஈழத் தமிழ் விடுதலை இயக்கங்களை கட்டுபாட்டுடன் வளர்த்தது. எண்பதுகளில் ஈழ விடுதலைக் குழுக்களின் தலைவர்கள் அனைவரும் தமிழ் நாட்டில் தங்கியிருந்தனர். அப்போதே அவர்களுக்கிடையில் நாடு கடந்த அரசு குறித்த எண்ணக்கரு தோன்றியிருந்தது. இலங்கை அரசும், தமிழ் விடுதலை இயக்கங்களும் கலந்து கொண்ட திம்பு பேச்சுவார்த்தையின் போதும் ஒரு அரசுக்கான திட்ட வரைபு சமர்ப்பிக்கப்பட்டது. (புதிய அரசு எந்தளவு அதிகாரம் கொண்டது என்பது வேறு விஷயம்.) அன்று இந்தியா பக்கபலமாக இருந்த போதிலும், இரு தரப்பும் நம்பிக்கையின்றி கலந்து கொண்டதால் பேச்சுவார்த்தை தோல்வியுற்றது.
இந்திய-இலங்கை ஒப்பந்தம் இன்னொரு வகை நாடுகடந்த அரசை அறிமுகப்படுத்தியது. வட-கிழக்கு மாகாணங்களில் இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்குட்பட்ட பகுதிகளில், ஒரு பொம்மை அரசை நிறுவ முயற்சி எடுக்கப்பட்டது. இதற்கென நாடு கடந்த ஈழ இராணுவம் ஒன்று தயாரிக்கப்பட்டது. தமிழகத்தில் பரவியுள்ள ஈழத் தமிழர் அகதி முகாம்களில் இருந்து இளைஞர்கள் திரட்டப்பட்டனர். அவர்களுக்கு இந்திய இராணுவம், தமிழ் நாட்டில் வைத்து பயிற்சி வழங்கி, ஆயுதங்களையும் கொடுத்தது. ஈ.என்.டி.எல்ப். என்ற பெயரில் இயங்கிய ஆயுதக் குழு, இந்திய இராணுவத்துடன் ஈழப் பகுதிகளில் நிலை கொண்டது.
இந்திய அமைதிப் படையின் ஆதரவில் வட-கிழக்கு மாகாண சபை திருகோணமலையில் இருந்து இயங்கியது. தமிழீழம் என்ற கற்பிதத்தை நடைமுறைக்கு கொண்டு வந்த தமிழர் விடுதலைக் கூட்டணி, திருகோணமலையை தலைநகராக தெரிவு செய்திருந்தது. பிற ஈழத் தமிழ் தேசிய அமைப்புகளும் அந்த தெரிவை கேள்விக்கிடமின்றி ஏற்றுக் கொண்டிருந்தன. இந்திய இராணுவம் வெளியேறும் காலத்தில் மாகாண சபைக்கு முதல்வராக இருந்த ஈ.பி.ஆர்.எல்ப். வரதராஜப் பெருமாள் திருகோணமலையில் ஈழம் பிரகடனம் செய்திருந்தார். சில நாட்களின் பின்னர் "ஈழத்தின் முதல் பிரதமரும்", பரிவாரங்களும், அவர்களது குடும்பங்களும் நாடு கடந்து இந்தியா சென்றனர். இன்றைக்கும் ஈ.என்.டி.எல்ப். எச்சசொச்சங்கள் இந்தியாவில் இருந்து கொண்டு நாடு கடந்த தமிழீழம் குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.
திபெத்தை சீனா ஆக்கிரமித்த போது, திபெத் என்ற தேசத்தை ஆண்டு கொண்டிருந்த மதகுரு தலாய் லாமாவும்,அவரது ஆதரவாளர்களும் குடும்பத்துடன் வெளியேறினார்கள். இமாலய பனிச் சிகரங்களை தாண்டி இந்தியா வந்த லாமா குழுவினருக்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. சீனாவின் எதிரியான இந்தியாவில் அவர்கள் திபெத்தியர்கள் அகதி அந்தஸ்து கொடுக்கப்பட்டது. இந்தியாவில் தலாய் லாமா தலைமையில் நாடு கடந்த திபெத் அரசாங்கம் உருவானது.
திபெத்தில் தலைமை மதகுருவாக நிலப்பிரபுத்துவ ஆட்சி நடத்தியவர்கள் தலாய் லாமா குழுவினர். இந்தியாவில் அமைந்த நாடு கடந்த அரசில் தவிர்க்கவியலாது பிற அரசியல் சக்திகளுக்கும் இடம் கொடுக்கப்பட்டது. இந்தியா, மற்றும் மேற்குலக நட்பு நாடுகளின் ஆதரவோடு மீண்டும் திபெத் தாயகம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர்கள் சீனாவுக்கு ராஜதந்திர நெருக்கடி கொடுக்க மட்டுமே பயன்படுத்துகின்றனர் என்ற உண்மை பின்னர் தான் தெரியவந்தது. இதற்கிடையே புகலிடத்தில் கழிந்த அரை நூற்றாண்டு, திபெத்தினுள் வாழும் மக்களிடமிருந்து அந்நியப்பட வைத்தது.
தலாய் லாமா காலத்தில் பின்தங்கியிருந்த ஒரு பிரிவினர் சீன ஆக்கிரமிப்பு காலத்தில் வசதிவாய்ப்புகள் கைவரப் பெற்றனர். இன்று மீண்டும் சுதந்திர திபெத் உருவாகி, தலாய் லாமாவின் நாடு கடந்த அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்களுக்கு முன்னர் போல மக்கள் ஆதரவு கிட்டும் எனக் கூற முடியாது. கணிசமான தொகையினர் மாற்று அரசியலை நாடக் கூடிய சாத்தியம் உண்டு. நாடு கடந்த அரசு தாயகம் திரும்பினால் எந்தளவு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் என்பதை பாலஸ்தீன உதாரணத்தில் பார்க்கலாம்.
இஸ்ரேல் என்ற தேசம் உருவான பின்னர் வெளியேறிய பாலஸ்தீன அகதிகள் ஜோர்டானிலும், லெபனானிலும் தஞ்சம் கோரினார்கள். அந்த அகதிகளில் இருந்து தோன்றியவை தாம் பாலஸ்தீன விடுதலை அமைப்புகள். இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்குள் இருந்த பாலஸ்தீன பகுதிகளில் ஆயுதபாணிகள் ஊடுருவுவது கடினமாக இருந்தது. பி.எல்.ஒ.வின் கெரில்லா தாக்குதல்கள் பல தோல்வியில் முடிந்தன.
இந்த நிலையில் பி.எல்.ஒ. தலைவர் யாசீர் அரபாத் நாடு கடந்த அரசு ஸ்தாபிக்கும் முயற்சியில் இறங்கினார். அரபாத்தின் தலைமை வெளியில் பாலஸ்தீன சுதந்திர நாடு குறித்து பேசி வந்தாலும், சமஷ்டி அலகை ஏற்றுக் கொள்ள சித்தமாக இருந்தது. அரபு நாடுகளும், சோஷலிச நாடுகளும் பி.எல்.ஒ. தலைமையிலான பாலஸ்தீன அரசுக்கு ஆதரவு வழங்கி வந்தார்கள். சோவியத் யூனியனின் வீழ்ச்சியின் பின்னர் தான் சமாதான பேச்சுவார்த்தை மூலம் பாலஸ்தீன அதிகார சபை ஏற்படுத்த மேற்குலகம் முன்வந்தது. மேலெழுந்தவாரியாக பார்க்கும் போது, நல்லுள்ளம் கொண்ட மேற்குலகம் பிரச்சினையை தீர்க்க முன்வந்ததாக தெரியும். ஆனால் அமெரிக்கா தலைமையில் ஒரு முனைப்பான புதிய உலக ஒழுங்கு திருப்புமுனையை கொண்டுவந்தது. "இத்துடன் உலக வரலாறு முற்றுப் பெறுகின்றது" என சில அறிவுஜீவிகள் கூறியதை பி.எல்.ஒ. நம்பி விட்டது. அமெரிக்காவின் தலைமைப் பாத்திரத்தை ஏற்றுக் கொண்டு, இஸ்ரேல் என்ற தேசத்தை அங்கீகரித்தது. அதற்குப் பெயர் சமாதானம் அல்ல, சரணாகதி.
பாலஸ்தீன பகுதிகளில் பி.எல்.ஒ. பெருமளவு மக்கள் ஆதரவைப் பெற்றிருந்தமைக்கு நிறையக் காரணங்கள் உள்ளன. முதலாவது, பி.எல்.ஒ. என்பது பல முக்கிய விடுதலை இயக்கங்களின் கூட்டமைப்பு. இரண்டாவது, யாசீர் அரபாத்தின் மக்களை வசீகரிக்கும் தன்மை. மூன்றாவது, சர்வதேச ஆதரவு (தற்போதும் பாலஸ்தீனப் பிரச்சினை உலகெங்கும் எதிரொலிக்கிறது.) பி.எல்.ஒ. புகலிடத்தில் நாடு கடந்த அரசில் மும்முரமாக ஈடுபட்ட நேரம், பாலஸ்தீனத்தில் எதிர்பாராத மாற்றங்கள் தோன்றின. இஸ்லாமிய மத அடிப்படைவாதம், ஹமாஸ் போன்ற சக்திகளை, இஸ்ரேலே ஊக்குவித்தது. பாலஸ்தீன தேசியக் கொள்கையை சிதைப்பதே இதன் நோக்கம். இருப்பினும் அரபாத்தும், பி.எல்.ஒ.வும் இஸ்ரேலின் காலடியில் வந்து விழுந்த பின்னர் ஹமாஸை ஊக்குவிக்க வேண்டிய தேவை இருக்கவில்லை. அதன் பின்னர் பாலஸ்தீன அரசியல் களம் முழுமையான மாற்றத்தைக் கண்டது. தேசியவாத பி.எல்.ஒ. ஒருபுறம், மதவாத ஹமாஸ் மறுபுறம் என பாலஸ்தீன சமுதாயம் இரண்டாக பிளவுபட்டது. இந்தப் பிரிவினை இன்று வரை நீடிக்கின்றது.
அரபு-முஸ்லிம் நாடுகள் சகோதரத்துவம் குறித்து பேசுவது ஏட்டளவில் தான். முதலும் கடைசியுமாக தமது அரசியல் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதிலேயே ஆர்வம் காட்டுகின்றனர். இந்த உண்மையை பி.எல்.ஒ. காலம் தாழ்த்தி புரிந்து கொண்டது. ஜோர்டானில் நிலை கொண்டிருந்த ஆயுதமேந்திய பாலஸ்தீன போராளிகள் மறைந்திருக்கும் ஆபத்தாக கருதப்பட்டது. ஜோர்டான் அரசுக்கு எதிரான கிளர்ச்சி அதனை மெய்ப்பித்தது. பாலஸ்தீன நாடு கடந்த அரசும், போராளிகளும் ஜோர்டானில் இருந்து லெபனானுக்கு விரட்டியடிக்கப் பட்டனர். லெபனான் (அரபு) மக்களும் ஆயுதமேந்திய பாலஸ்தீன போராளிக்குழுக்களின் அடாவடித்தனங்களால் வெறுப்புற்றனர். இஸ்ரேலிய இராணுவம் லெபனான் மீது படையெடுத்த போது, லெபனான் மக்களின் அதிக பட்ச வெறுப்பு (பாலஸ்தீன) அகதி முகாம் படுகொலையில் பிரதிபலித்தது. பி.எல்.ஒ.வின் தலைமையகம் துனிசியாவிற்கு புலம்பெயர்ந்தது. எகிப்து, ஜோர்டான் போன்ற அயலில் உள்ள அரபு நாடுகள், இஸ்ரேலுடன் உடன்பாட்டிற்கு வருமாறு அறிவுறுத்தினார்கள். அதுவே நோர்வே தலைமயிலான சமாதான ஒப்பந்த கைச்சாத்திட வழிவகுத்தது.
ஏதாவதொரு நாட்டில் சுதந்திரம் கோரும் தேசிய இனத்தின் பிரதிநிதிகள், தமது தேசியக் கனவை நனவாக்கும் நோக்கோடு செயலூக்கத்தோடு பாடுபடுகின்றனர். எந்த அரசை எதிர்த்து போராடுகின்றனரோ, அதனோடு பகைமை கொண்ட வல்லரசு நாட்டில் நாடு கடந்த அரசை ஸ்தாபிக்கின்றனர். இது காலப்போக்கில் அவர்களுக்கு சாதகமாக அமைந்து விடுகின்றது. குறிப்பிட்ட பகை வல்லரசின் மேலாதிக்கத்தை ஏற்றுக் கொள்ள வேண்டி வருவதை தவிர்க்கவியலாது. இரண்டாம் உலகப்போர் காலத்தில் போலந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளை சேர்ந்த லிபரல்கள், இங்கிலாந்தில் தஞ்சம் கோரி இருந்தனர். லண்டனில் நாடு கடந்த அரசுகளை அமைத்துக் கொண்டு, நாசிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட தாயகத்தை நோக்கிய பிரச்சாரங்களை மேற்கொண்டனர். இதே போன்று ஜெர்மனி, செக்கோஸ்லோவாக்கியா போன்ற நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகள் சோவியத் யூனியனில் புகலிடம் கோரியிருந்தன. இறுதியில் அமெரிக்க, பிரிட்டிஷ் படைகளால் விடுவிக்கப்பட்ட நாடுகளில் லிபரல் அரசாங்கங்களும், சோவியத் படைகள் விடுதலை செய்த நாடுகளில் சோஷலிச அரசாங்கங்களும் அமைந்தமை வரலாறு. லண்டனிலும், மொஸ்கோவிலும் நாடு கடந்த அரசுகளை அமைத்தவர்கள் தமது நட்பு சக்தியை சித்தாந்த ரீதியாக இனங்கண்டிருந்தார்கள்.
சித்தாந்தங்களுக்கு விடை கொடுத்த நவீன உலகம் பூகோள அரசியலை முக்கியமாக கருதுகின்றது. நேட்டோ படைகளின் உதவியிலான கொசோவோ விடுதலையும், ரஷ்ய படைகள் தலையீடு செய்த அப்காசிய, ஒசெத்திய விடுதலையும் பூகோள அரசியல் நலன்களுக்குட்பட்டவை. தொண்ணூறுகளுக்கு பிறகு தோன்றிய புதிய சுதந்திர நாடுகள் அனைத்தும் மேற்குலக நலன் சார்ந்து உருவாக்கப்பட்டவை. இந்த நாடுகளின் ஆட்சியாளர்களின் மேற்குலக சார்புத் தன்மை பரகசியமானது. இந்த நாடுகளின் புதிய தலைவர்கள் பலர் அமெரிக்காவில் இருந்து சென்று ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கிறார்கள்.
சோவியத் யூனியனின் வீழ்ச்சியுடன், பல சோஷலிச நாடுகள் காணமல் போயின. இது சர்வதேச கம்யூனிச இயக்கத்தில் பெரும் பின்னடைவை தோற்றுவித்தது. இருப்பினும் கம்யூனிச நம்பிக்கையாளர்கள் மறையவில்லை. உலகத் தமிழ்த் தேசியவாதிகளின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்த "வன்னித் தமிழீழம்" வீழ்ந்த போதிலும், வெளிநாடுகளில் அது உயிர்ப்புடன் உள்ளது. "தமிழீழம்" என்ற கோட்பாடு புலிகளால் கொண்டு வரப்படவில்லை என்பது உண்மை தான். தமிழரசுக் கட்சியின் எண்ணக்கருவுக்கு, தமிழர் விடுதலைக் கூட்டணி சித்தாந்த விளக்கம் கொடுத்தது. விரைவில் அது தமிழ் நடுத்தர வர்க்கத்தின் அரசியல் தத்துவமாகியது. அதன் இரண்டாவது தலைமுறை ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை வைத்தது. மூன்றாவது தலைமுறை மேற்கத்திய நாடுகளில் "நாடு கடந்த தமிழீழ தேசியத்தின்" பின்னால் அணிதிரள்கின்றது.
தமிழ் தேசியவாதம் இன்று உலக வல்லரசுக் கோள்களின் மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது. வருங்கால வல்லரசின் துணையுடன் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கம் இருந்திருப்பின், "நாடு கடந்த தமிழீழ அரசு" சீனாவில் தான் அமைந்திருக்கும். ஈழப்போர் ஆரம்பமாகிய காலமான என்பதுகளின் முற்பகுதியில் இருந்து மேற்குலக நாடுகள் இலங்கை அரசை ஆதரித்து வந்துள்ளன. ஆனால் சீனா, ரஷ்யா என்றால் "கம்யூனிஸ்டுகள்" என நினைக்கும் வலதுசாரி சக்திகள், தமிழ் தேசிய இயக்கத்தை மேற்கு நோக்கி தள்ளிவிட்டன. எழுபதுகளில் சீனச் சார்பு கம்யூனிஸ்ட் கட்சி யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆயுதமேந்திய வர்க்கப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது. இந்தக் காரணத்தாலும் தமிழ் தேசியவாதிகள் சீனா மீது வெறுப்புக் கொண்டிருந்தனர்.
அமெரிக்க ஆதரவில் மலர்ந்த இஸ்ரேல் குறித்து பெருமளவு சிலாகித்து பேசப்படுகின்றது. சியோனிச காங்கிரஸ், இஸ்ரேலுக்கு திரும்பும் யூத தேசியவாதிகளின் நாடு கடந்த அரசாக செயற்பட்டது. அந்த உதாரணத்தை தமிழீழ தேசியவாதிகள் தமக்கும் பொருத்திப் பார்க்கின்றனர். இஸ்ரேலின் உருவாக்கத்திற்கு காரணியாக இருந்த பல முக்கிய அம்சங்கள் வசதியாக மறைக்கப்படுகின்றன. இஸ்ரேலின் தேசிய மொழியான ஹீப்ரூ பேச்சு வழக்கில் மறைந்து போயிருந்தது. பல்வேறு ஐரோப்பிய மொழிகளை பேசிய போதிலும், யூதர்களுக்கு பொதுவான மதம் அவர்களை ஒன்று சேர்த்தது. மேலும் "கறுப்புத் தங்கம்" என அழைக்கப்படும் எண்ணை வளம் கொண்ட அரபு நாடுகளை மேற்பார்வை செய்ய அமெரிக்காவுக்கு இஸ்ரேல் அவசியமானது. ஒரு வேளை இந்தியா எண்ணை ஏற்றுமதி செய்யும் நாடாக இருந்திருப்பின், அமெரிக்க உதவியால் தமிழீழம் இன்று சாத்தியமாகியிருக்கலாம்.
[உன்னதம், (ஜனவரி 2010 ), இதழில் பிரசுரமானது.]