Saturday, December 26, 2009

ஜெருசலேம்: தீமைகளின் தலைநகரம்

"ஜெருசலேம் சூழ்ச்சியினதும், அடக்குமுறையினதும் நகரம். ஊற்றிலிருந்து நீர் பெருகுவது போல அதன் தீச்செயல்கள் ஓய்வதில்லை. வன்முறை, வன்கொடுமை பற்றி மட்டுமே கேள்விப்படுகிறேன். மதகுருமார், தீர்க்கதரிசிகள் எல்லோரும் ஏமாற்றுகிறார்கள். எனது மக்களின் நோய்களை குணப்படுத்துவதாக அவர்கள் கூறுகிறார்கள். "எல்லாம் நல்லபடியாக நடக்கும்... எல்லாம் நல்லபடியாக நடக்கும்..." ஆனால் எதுவுமே நன்றாக வருவதில்லை. அவர்கள் தமது கேட்ட காரியங்களுக்காக வெட்கப்படுகிறார்களா? இல்லை. அவர்கள் சிறிதளவேனும் வெட்கப்படுவதில்லை. வெட்கம் என்றால் என்னவென்றே அவர்களுக்கு தெரியாது." (ஜெரேமியா, அத்தியாயம் 6:6-7,13 ,15 , பழைய ஏற்பாடு, பைபிள்)

யூதர், இஸ்லாமியர் ஆகிய இரு மதத்தவர்களும் ஜெருசலேம் எமக்கே சொந்தம் என்று சண்டை பிடிக்கிறார்கள். தொலைக்காட்சியிலும், வானொலியிலும் அன்றாடம் சொல்லப்படுவதை நாம் உண்மை என்று நம்புகின்றோம். டேவிட் மன்னனால் கட்டப்பட்ட ஆலயமும், முறையிடும் சுவரும் யூதருக்கு புனிதமானவை. முகமது நபி அவர்கள் சொர்க்கத்திற்கு சென்றதாக சொல்லப்படும் இடத்தில் கட்டப்பட்ட அல் அக்சா மசூதி முஸ்லிம்களுக்கு புனிதமானது. இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்த இடம் இருப்பதால், கிறிஸ்தவர்களுக்கும் ஜெருசலேம் புனிதமானது.

பண்டைய கால வரலாற்றில், யூதர்களும்,முஸ்லிம்களும், ஒரு போதும் ஜெருசலேமுக்காக சண்டையிட்டதில்லை. அது இரு மதத்தவருக்கும் சொந்தமான நகரமாக இருந்தது. ரோமர்கள் ஆட்சியில், யூதர்கள் ஜெருசலேமில் வசிக்க தடை விதித்திருந்தனர். அரேபியாவில் இருந்து படையெடுத்து வந்த முஸ்லிம்கள், பாலஸ்தீனத்தை கைப்பற்றிய பின்னரே யூதர்கள் ஜெருசலேமில் குடியேறும் உரிமை கிடைக்கப் பெற்றனர். பிற்காலத்தில் ஐரோப்பாவில் இருந்து படையெடுத்து வந்த சிலுவைப்போர் படைகளை, முஸ்லிம்களுடன், யூதரும் எதிர்த்து போராடினார்கள். ஜெருசலேமை கைப்பற்றிய கிறிஸ்தவ படைகள், முஸ்லிம்களோடு, யூதர்களையும் கொன்று குவித்தனர். மதச் சுத்திகரிப்பு செய்தனர். இஸ்லாமிய படைகள் ஜெருசலேமை விடுவித்த பின்னர் தான் யூதர்களுக்கும் சுதந்திரம் கிடைத்தது.

தற்கால ஜெருசலேம் சர்வதேச நிர்வாகத்தின் கீழ் வர வேண்டுமென, 1947 ல் ஐ.நா.சபை தீர்மானித்தது. 1948 அரபு-இஸ்ரேல் யுத்தத்தில், மேற்கு ஜெருசலேமை யூதப் படைகள் கைப்பற்றின. எஞ்சிய கிழக்கு ஜெருசலேமும், அதோடு அண்டிய மேற்குக்கரை பிரதேசமும் ஜோர்டானின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. 1967 யுத்தத்தில் அந்தப் பகுதியும் இஸ்ரேல் வசமாகியது. அதன் பின்னர் பாலஸ்தீனர் வாழ்ந்த கிழக்கு ஜெருசலேமையும் இணைத்து, ஒரே ஜெருசலேமாக இஸ்ரேலின் தலைநகரமாகியது.

அபிவிருத்தியடைந்த முதலாம் உலகத்தையும், பின்தங்கிய மூன்றாம் உலகத்தையும் ஒரே இடத்தில் பார்க்க விரும்பினால், நீங்கள் ஜெருசலேம் செல்ல வேண்டும். யூதர்கள் வாழும் மேற்கு ஜெருசலேம் பகுதி, மேற்கத்திய வாழ்க்கைத் தரத்தைக் கொண்டுள்ளது. அதே நேரம் அரபுக்கள் வாழும் கிழக்கு ஜெருசலேம் கவனிப்பாரின்றி, அடிப்படை வசதிகள் கூட இன்றி காட்சியளிக்கின்றது. அங்கு வாழும் பாலஸ்தீன மக்கள் இஸ்ரேலிய அரசுக்கே வரி செலுத்திய போதும், அந்த வரிப்பணம் யூத-ஜெருசலேமின் அபிவிருத்திக்கே செலவிடப் படுகின்றது. நகர விஸ்தரிப்பு என்ற போர்வையின் கீழ், கிழக்கு ஜெருசலேமை சுற்றியுள்ள அரபு நிலங்கள் அபகரிக்கப்பட்டு, அங்கே யூதர்க்கான குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. ஆனால் பாலஸ்தீனர்கள் தமது சொந்தக் காணியில் வீடு கட்டினால் மட்டும், அனுமதியின்றி கட்டியதாக கூறி இடித்துத் தள்ளப்படுகின்றன.

புதிதாக வந்து சேரும், (பெயரில் மட்டுமே) யூதரான ரஷ்யர்களுக்கு கூட ஜெருசலேமில் குடியேற உரிமையுண்டு. அதே நேரம் பிற பாலஸ்தீன பகுதிகளில் இருந்து வரும் அரபுக்களுக்கு அந்த நகரத்தில் வசிக்கும் உரிமை கூடக் கிடையாது. யாராவது ஜெருசலேமில் இருக்கும் உறவுக்காரரை பார்க்க விரும்பினால், அதற்கென விசேஷ பாஸ் எடுக்க வேண்டும். காலங்காலமாக ஜெருசலேம் நகரில் வசித்து வரும் பாலஸ்தீனர்கள் வந்தேறுகுடிகளாக கருதப்பட்டு, கால வரையறை கொண்ட வதிவிட அனுமதிப் பத்திரம் வழங்கப்படுகின்றது. நோர்வே அனுசரணையின் நிமித்தம் ஏற்பட்ட சமாதான ஒப்பந்தம் கூட ஜெருசலேமை மீட்டுத் தராது எனக் கண்டனர். இதனால் இரண்டாவது இன்டிபதா என அழைக்கப்பட்ட மக்கள் எழுச்சி ஜெருசலேமில் ஆரம்பமாகியதில் ஆச்சரியமில்லை.

இஸ்ரேல் தன்னை ஒரு ஜனநாயக நாடாக வெளி உலகுக்கு காட்டிக் கொள்கின்றது. ஆனால் இந்த ஜனநாயகம் யூதர்களுக்கு மட்டுமே. 1948 சுதந்திரப் பிரகடனத்தின் போது, இஸ்ரேலிய எல்லைக்குள் வசித்த பாலஸ்தீனர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டது. இருப்பினும் அவர்களை பாலஸ்தீனர்கள் என்று அழைப்பதில்லை. மாறாக "இஸ்ரேலிய அரபுக்கள்" என்ற நாமம் சூட்டப்பட்டுள்ளது. 1967 யுத்தத்தின் பின்னர், ஜோர்டானிடம் இருந்து மேற்குக்கரையும், எகிப்திடம் இருந்து காஸாவும் கைப்பற்றி ஆக்கிரமிக்கப்பட்டது. இந்தப் பகுதிகளை சேர்ந்த பாலஸ்தீனர்களுக்கு குடியுரிமை வழங்க இஸ்ரேல் முன்வரவில்லை. அதனால் அவர்கள் "நாடற்றவர்கள்" (எந்த நாட்டிற்கும் சொந்தமில்லாதவர்கள்.) ஆனார்கள். இன்று சுமார் மூன்று மில்லியன் பாலஸ்தீனர்கள் நாடற்றவராக எந்த உரிமையுமின்றி வாழ்கின்றனர். நாடற்றவர்கள் என்பதால் அவர்களுக்கு பாஸ்போர்ட் கிடையாது. அதனால் வெளிநாட்டுப் பயணத்தை நினைத்துப் பார்க்கவும் முடியாது.

இஸ்ரேல், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரை, காசா பகுதிகளை "விவாதிக்கப்பட வேண்டிய பகுதிகள்" எனக் கூறுகின்றது. செவ்வியந்தியரின் நிலங்களுக்களை பறித்தெடுத்த ஐரோப்பியர்கள் இன்று அமெரிக்காவுக்கு சொந்தாடுகின்றனர். அதே போல, களவாடப்பட்ட பாலஸ்தீன நிலங்களில் அத்துமீறிக் குடியேறியவர்கள், அந்த நிலங்கள் தமது என உரிமை கொண்டாடுகின்றனர். "இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எமது மூதாதையர் இந்த மண்ணில் வாழ்ந்தார்கள். இது எமக்கு ஆண்டவரால் அருளப்பட்ட பூமி." என்று பைபிளில் இருந்து மேற்கோள் காட்டுகின்றனர். பாலஸ்தீனர்கள் தமது ஆரஞ்சு பழத் தோட்டங்களை, விவசாய நிலங்களை யூத குடியேற்றக்காரரிடம் பறி கொடுத்தனர். இன்று தமது சொந்த நிலத்திலேயே கூலியாட்களாக வேலை செய்யும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டனர். ஆனால் ஐ.நா.சபையோ, அல்லது அமெரிக்காவோ, யாராயினும் பாலஸ்தீனியரின் மண் மீதான உரிமையை மீட்டுத் தரவில்லை.

அமெரிக்காவில் செவ்விந்திய பழங்குடிகள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பிரதேசங்களில் மட்டுமே வாழ்கின்றனர். அது போல பாலஸ்தீன மக்களின் குடியிருப்புகள், யூதக் கடலுக்குள் தனித்த தீவுகளாக காட்சி தருகின்றன. நிறவெறி தென்னாபிரிக்காவில் இருந்தது போல, விசேஷ பாஸ் நடைகுறை மூலம் அவர்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படுகின்றது. இருப்பினும் அவர்கள் யூத முதலாளிகளிடம் வேலை செய்து விட்டு வர தடையில்லை. இதனால் இஸ்ரேலிய வர்த்தக நிறுவனங்கள், அல்லது யூத கமக்காரர்கள் பாலஸ்தீன வேலையாட்களுக்கு குறைந்த கூலி கொடுத்து சுரண்ட முடிகின்றது. சில முதலாளிகள் கூலியை ஒழுங்காக கொடுப்பதில்லை. சக்கையாக பிழிந்து வேலை வாங்கி விட்டு, நான்கு மாத சம்பளப் பணத்தை கொடுக்காமல் கம்பி நீட்டுபவர்களும் உண்டு. பாலஸ்தீன தொழிலாளர்கள் தொழிற்சங்கம் வைத்துக் கொள்ள உரிமை இல்லை. இஸ்ரேலிய அரச நிறுவனங்கள் மட்டிலுமே நான்கில் ஒரு பங்கு பாலஸ்தீன தொழிலாளரை பயன்படுத்திக் கொள்கின்றன. மூலதனத்திற்கும், தேசிய இனப்பிரச்சினைக்கும் இடையிலான சிக்கலான உறவை விளக்கும் ஒரு சிறு உதாரணம் இது. சுதந்திர பாலஸ்தீன தேசம் உருவானாலும், இஸ்ரேலின் பொருளாதார அடிமையாக தொடர்ந்து இருக்க வேண்டி வரும்.

இஸ்ரேலில் நிலவும் இனப்பாகுபாட்டுக் கொள்கையை எந்தவொரு மேற்குலக அரசியல்வாதியும் கண்டிக்கத் துணிவதில்லை. ஏனெனில் இஸ்ரேலியரை இனவெறியர்கள் என்று கூறினால், தம்மீது "யூத விரோதி" என்ற பட்டம் சூட்டப்படும் என்று தெரியும். ஐரோப்பாவில் ஒரு முறை, "ஹோலோகோஸ்ட் என்ற யூத இனவழிப்பில் பலியான அப்பாவிகளின் பெயரை பயன்படுத்தி இஸ்ரேலிய ஆளும் வர்க்கம் பணம் கறந்து வருவதாக" ஒரு நூல் வெளியானது. அந்த நூலை எழுதியவர் ஒரு ஐரோப்பிய யூதர். ஆகவே அவர் மீது "இனத் துரோகி" முத்திரை குத்தப்பட்டது. "அகண்ட இஸ்ரேல்" அமைக்கும் கொள்கையை இஸ்ரேலிய அரசு கைவிட்டு விட்டதா என தெரியவில்லை. எத்தனை வருடம் போனாலும் பாலஸ்தீனிய பகுதிகளை இஸ்ரேலுக்கு சொந்தமாக்கும் முயற்சியை அரசு கைவிடவில்லை. "பாலஸ்தீனப் பகுதி" ஊடகங்களில் மட்டுமே உயிர்வாழ்கின்றது. இஸ்ரேலிய பாடப் புத்தகங்களில் எங்குமே அதைப் பற்றிய குறிப்பு இல்லை. இதனால் பெரும்பான்மையான இஸ்ரேலியர்கள் "பாலஸ்தீனமா? அது எங்கே இருக்கின்றது?" எனக் கேட்பதில் வியப்பில்லை.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் கீழ் வாழ்ந்து வரும் பாலஸ்தீன மக்களுக்கு தமது நிலை நன்றாக தெரியும். கடந்த கால யுத்தங்களின் போது அகதிகளாக இடம்பெயர்ந்து அயல்நாடுகளுக்கு ஓடிய முட்டாள்தனத்தை தற்போது நொந்து கொள்கின்றனர். இன்று எதிர்த்துப் போராடுவது அல்லது மடிவது என்று துணிந்து விட்டனர். என்ன தான் மதவாதச் சாயம் பூசினாலும், ஜெருசலேமை மையப்படுத்திய போராட்டம் ஒரு தேசிய விடுதலைப் போராட்டமேயாகும். ஜெருசலேமை தலைநகராக கொண்ட பாலஸ்தீனம் உருவாகப் போவதில்லை. அதே நேரம் ஜெருசலேம் இஸ்ரேலின் தலைநகராக நிலைத்து நிற்கப் போவதுமில்லை.

இதனால் சமாதான ஆர்வலர்களும், இடதுசாரிகளும், புதிய வகை "செமிட்டிக் குடியரசு" ஒன்றை முன் மொழிகின்றனர். அரபுக்களும், யூதரும் செமிட்டிக் இனத்தவர்கள் என்பதால் அது புதிய தேசிய அடையாளத்தை உருவாக்கும். ஆனால் யூத/இஸ்லாமிய/கிறிஸ்தவ மத அடையாளங்களற்ற சிவில் சமூகம். அதில் இஸ்ரேலியரும் பாலஸ்தீனரும் சம உரிமைகளுடன் பங்குபற்றலாம். நாடற்ற பாலஸ்தீனர்களுக்கு வாக்குரிமை இல்லையென்பது இவ்விடத்தே நினைவுகூரத்தக்கது. அமெரிக்காவில் நடந்த கறுப்பர்களின் சமூகநீதிப் போராட்டத்தை அடியொற்றி, "ஒரு மனிதன், ஒரு ஓட்டு" கோரிக்கைக்கு ஆதரவு திரட்டப்பட்டு வருகின்றது. இஸ்ரேலில், பாலஸ்தீன பகுதிகளையும் உள்ளடக்கிய, பொதுத் தேர்தல் நடத்தப்படுமா? ஜனநாயக அடிப்படையில், அனைவருக்கும் (நாடற்ற பாலஸ்தீனருக்கும்) வாக்களிக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படுமா? அப்படி ஒரு அதிசயம் நிகழ்ந்தால், அங்கே இஸ்ரேல் என்ற தேசம் இருக்காது. ஆனால் அது பாலஸ்தீனக் குடியரசாகவும் மாறாது.

(தொடரும்)

இந்த தொடரின் முன்னைய பகுதிகள்:


(உயிர் நிழல் (ஏப்ரல்-யூன் 2002 ) சஞ்சிகையில் பிரசுரமானது. சில திருத்தங்களுடன் வலையேற்றம் செய்யப்படுகின்றது.)

6 comments:

  1. நீங்கள் சொல்வதெல்லாம் சரி தான். யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் , முஸ்லீம்களுக்கு எதிராக நிகழ்த்தும் கொடுமைகளை எழுதும் நீங்கள் முஸ்லீம்கள் நிகழ்த்தும் கொடுமை களை எழுத வேண்டாம்மா. காஷ்மீரில் வேறு எவரும் நிலம் வாங்க முடியாது. பிரிவினையின் போது பாக் மற்றும் வங்காள தேசத்தில் இருந்த இந்துக்களின் எண்ணிக்கை எவ்வளவு. இன்றைய எண்ணிக்கை எவ்வளவு. இது குறித்து ஒரு கட்டுரை எழுத உங்களுக்கு துணிச்சல் உண்டா. பாமியானா புத்த சிலை அழிக்கப்பட்டதை உங்களால் எழுத முடியுமா. உலக நியதி என்ன வெனில், அழிக்க படுவதும், அழிப்பில் இறங்குவதும் தான். சில இடத்தில் அழெனில், அழிக்க படுவதும், அழிப்பில் இறங்குவதும் தான். சில இடத்தில் அழிக்க படுகிறார்கள். சில இடத்தில் அழிக்கும் வேலையை செய்கிறார்கள். இது எல்லா மதங்களாலும் செய்யப்படுகிறது. அவ்வளவே.

    ReplyDelete
  2. your comment correct!!!!!!

    ReplyDelete
  3. You are enough to publish many articles that can not be find in any site and you neutral in writing.
    continue and it should be updated.

    One life and that must be utilized and to serve the people. If the God is with us who can be against us?

    Knowledge does not die out save when it is concealed.
    --- Holy Prophet
    A man who holds a piece of knowledge without transmitting it others should take care of his life so that the knowledge may not perish with him.
    --Holy Prophet.

    ReplyDelete
  4. Thank you for the support and compliment, Nidurali.

    ReplyDelete
  5. அனானி,

    நச் கேள்விகள். ஆனால், நீங்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் கிடைக்காது. காரணம், இவர்களெல்லாம் "செக்யூலரிஸ்டுகள்". ;)

    ReplyDelete
  6. மிகவும அருமையான கட்டுரை யதார்த்தமாக உண்மை நிகழ்வுகளை எழுதியிருந்தீர்கள், எந்த மதமானலும் சரி. எந்த இனமானலும் சரி அங்கே அநீதி இழைக்கப் பட்டால் நிச்சயம் அழிவார்கள் அநீதி இழைப்பவர் எவ்வளவு பலவானக இருந்தாலும் சரிதான். அந்த வகையில் இங்கே அநீதி இழைக்கப் படுகிறது. யார் யாருக்கு இழைக்கிறார்கள் என்பதையும் உலகம் அறியும்

    ReplyDelete