Thursday, December 17, 2009

எழுதாதே எதிர்ப்பேன்

இலங்கையில் தொன்னூறுகளில் ஊடகங்களுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலை எதிர்த்து போரிடும் முகமாக "சுதந்திர ஊடகவியலாளர் சங்கம்" தோற்றுவிக்கப்பட்டது. அவர்கள் ஒழுங்கு செய்த முதலாவது கருத்தரங்கிற்கு அரசாங்க உறுப்பினர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. "ஊடகவியலாளர் மீதான தாக்குதல்களுக்கு நீங்கள் பொறுப்பேற்க இல்லையெனில், இக் கருத்தரங்கில் கலந்து கொள்ளலாம்." என அந்த அழைப்பிதழில் எழுதப் பட்டிருந்தது. அரச தரப்பில் இருந்து இதற்கான எந்தப் பதிலும் வரவில்லை.

ஆளும் கட்சியினாலும், அதிகார வர்க்கத்தினாலும் பொது மக்களின் ஒரேயொரு பலம் வாய்ந்த சுதந்திர அமைப்பான பத்திரிகை சுதந்திரத்தை அடக்க நினைப்பதோ, அல்லது அதை தம்பக்க ஆளுமைக்கு கீழ் கொண்டு வருவதோ புதியன அல்ல. இந்த வகையில் நமது தமிழ் பத்திரிகைகள் சந்தித்த தடைகள் என்ன? என்பதை சிறிது பின்னோக்கிப் பார்ப்போம்.

இலங்கையின் இனப்பிரச்சினை கூர்மையடைந்த ஆரம்ப காலங்களில், தமிழர் விடுதலைக் கூட்டணியினரின் பாராளுமன்ற வழியில் தமிழீழம் காணும் உத்வேகம் முனைப்பு பெற்றிருந்தது. அவ்வேளையில் "சுதந்திரன்" பத்திரிகை தமிழ் மக்கள் மத்தியில் சிறப்பு பெற்றிருந்தது. சிறி லங்கா அரசுக்கு எதிரான துணிகர செய்திகளும், தமிழ் தேசியவாத பிரச்சாரங்களும், தமிழக கட்சி அரசியல் பாணியிலான ஆவேச எழுத்துகளும் இதன் சிறப்பம்சம். சுதந்திரனின் எழுத்துகள் வாசகர் மனதில் "தமிழீழமே தீர்வு" என்ற இலக்கை பசுமரத்தாணி போல பதியவைத்தது. இதன் காரணமாகவே இப்பத்திரிகை பொலிசாரினால் பலவித இடையூறுகளுக்கு உள்ளாக்கப்பட்டது. பக்கம் பக்கமாக செய்திகள் தணிக்கை செய்யப்பட்டன. தணிக்கை எவ்வளவு கடுமையாக அமுல்படுத்தப் படுகின்றதோ, அவ்வளவிற்கு அப்பத்திரிகை பிரபலமாவதை தடுக்க முடியவில்லை. சுதந்திரனுக்கு அடுத்ததாக யாழ்ப்பாணத்தில் வெளிவந்து கொண்டிருந்த "ஈழநாடு" ம் கடும் தணிக்கைக்கு உள்ளானது. அப்போது இவ்விரு ஏடுகள் மட்டுமே கொழும்புக்கு வெளியே, யாழ்ப்பாணத்தில் அலுவலகங்களை கொண்டிருந்தன.

1984 திம்பு பேச்சுவார்த்தைகளையிட்டு யுத்தநிறுத்தம் ஏற்பட்ட காலகட்டத்தில் யாழ்குடாநாடு போராளி இயக்கங்களின் ஆட்சியின் கீழ் வந்தது. இக் காலகடத்தில் இனி பத்திரிகைகள் எந்த தடையுமின்றி சுதந்திரமாக இயங்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. நூறு வீதம் உண்மையான செய்திகளை அறிந்து கொள்ள முடியும் என மக்கள் எதிர்பார்த்தார்கள். தமிழ் மக்கள் ஏற்கனவே இலங்கை அரசின் ஊடகங்கள் பரப்பிய பொய்யுரைகளை கேட்டு வெறுப்பு கொண்டிருந்தனர். நாட்கள் இவ்வாறு நகர்ந்து கொண்டிருந்த பொழுது, ஆயுதபாணி இயக்கங்களில் ஒன்றான "டெலோ" உள்முரண்பாடுகளால் பிளவுற்றது. அவ்வியக்கத்தில் இருந்து பிரிந்து சென்ற தாஸ் குழுவினர் யாழ் போதனா வைத்தியசாலையில் வைத்து படுகொலை செய்யப்பட்டனர். படுகொலை பற்றிய செய்தி மறுநாள் வெளிவந்த அனைத்து பிராந்திய பத்திரிகைகளிலும் தடை செய்யப்பட்டது. அதுவரை அரச இயந்திரத்தின் தணிக்கை என்ற அடக்குமுறையை சந்தித்து வந்த பத்திரிகையுலகம், புதிய எஜமானர்களை கண்டுகொண்டது. இதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் துப்பாக்கி நிழலின் கீழ் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப் பட்டார்கள்.

1987 ல் இந்திய இராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் போர் மூண்டது. யுத்தம் ஆரம்பித்த சில நாட்களிலேயே, ஈழத்தில் அமைதி காக்க வந்த இந்திய இராணுவம் ஊடகங்கள் மீது பாய்ந்தது. அமைதிப் படையின் "அமைதி காக்கும் நடவடிக்கையாக" யாழ்ப்பாணத்தில் வெளிவந்து கொண்டிருந்த ஈழமுரசு, ஈழநாடு பத்திரிகைகளின் அலுவலகங்கள் குண்டு வைத்து தகர்க்கப்பட்டன. அவ்வாறே புலிகளின் தொலைக்காட்சி நிலையமான நிதர்சனமும் வெடிகுண்டால் நிர்மூலமாக்கப்பட்டது. ஊடகங்களின் வாயை அடைத்து "காந்தீய இராணுவம்" சாதனை நிகழ்த்தியது. சாம்பலில் இருந்து மீண்டெழுந்த பீனிக்ஸ் பறவை போல, ஒருவாறு தனது அச்சகத்தை மீளக் கட்டமைத்து, மீண்டும் ஈழநாடு வெளிவரத் தொடங்கியது. ஆனால் ஆயுதமேந்திய சக்திகளுடன் மோத முடியாது என்பதை உணர்ந்து, யாரையும் நோகாமல் செய்தி வெளியிட்டு வந்தது. அந்தக் காலகட்டத்தில், ஈழநாட்டின் பக்கங்களை பெரும்பாலும் இந்திய செய்திகள் மட்டுமே ஆக்கிரமித்திருக்கும். யாழ் பிராந்திய மையவாத பத்திரிகையான ஈழநாடு, வெளிப்படையாக எந்தவொரு அரசியல் சக்தியையும் ஆதரிக்காமல், நடுநிலை காப்பதாக காட்டிவந்தது. இதனால் யாழ் தமிழ் மக்களின் அபிமானத்தை பெற்றிருந்தது.

இந்திய ஆக்கிரமிப்புக் கால யாழ்ப்பாணத்தில் வெளிவந்து கொண்டிருந்த ஒரேயொரு நாளேடான ஈழநாடு, தனது இருப்புக்காக இந்தியா பக்கம் சாய்ந்து வருவதாக தோன்றியது. ஈழநாட்டின் நிலைப்பாடு, "இந்தியா எமது தாய்நாடு." என்ற யாழ் மையவாத பாரம்பரியத்தினால் ஏற்பட்ட விளைவாக இருக்கலாம். இருந்தபோதிலும், அன்று இந்திய இராணுவத்தை தமது முதன்மை எதிரியாக பார்த்த விடுதலைப் புலிகள் இதனை சகித்துக் கொள்ளவில்லை. இந்தியப் படையினருடன் கெரில்லாப் போரில் ஈடுபட்டிருந்த புலிகள், ஈழநாடு பத்திரிகை காரியாலயத்தை குண்டு வைத்து நிர்மூலமாக்கினர். இச்செயலுக்கு உரிமை கோரும் சுவரொட்டிகள் புலிகளால் யாழ் நகரில் ஒட்டப்பட்டிருந்தன. விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவளிக்காது நடுநிலை காப்பதாக கூறிய ஈழநாடு, இந்தியா பக்கம் சாய்ந்து விட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. அந்த சம்பவத்திற்குப் பின்னர் ஈழநாடு புகலிடத்தில் (பிரான்ஸ்) வெளிவந்தது.

சிறிலங்கா அரசாங்கத்தின் ஊதுகுழல்களாக வெளிவரும் பத்திரிகைகளை விடுத்து, "வீரகேசரி" நீண்டகாலமாக சுயாதீனமாக இயங்கி வருகின்றது. இருப்பினும் வீரகேசரி காற்றடிக்கும் பக்கத்திற்கு சாயும், அல்லது நழுவுநிலைக் கொள்கையை கடைப்பிடித்து வருகின்றது. கொழும்பில் "சரிநிகர்" என்ற பத்திரிகை சிறிது காலம் ஊடக தர்மத்தை காப்பாற்றிக் கொண்டிருந்தது. அரசு சாரா தன்னார்வ நிறுவனங்கள் காலூன்றத் தொடங்கிய காலத்தில், அது தனது சுதந்திரத்தை பேணிக் கொண்டது. புலம்பெயர்ந்த நாடுகளில் வெளிவரும் பத்திரிகைகள் சுதந்திரமாக இயங்கி உண்மை செய்திகளை தெரிவிக்கும் என மக்கள் நம்பினார்கள். வதந்திகளை செய்தியாக்குவதாலும், சுயதணிக்கை செய்து கொள்வதாலும், பத்திரிகை சுதந்திரம் புலம் பெயர் நாடுகளிலும் அடவு வைக்கப்பட்டது. புலம்பெர்ந்த சூழ்நிலையில், தமிழரை பிற சமூகத்தினருடன் ஒட்டி உறவாடாமல் தனிமைப் படுத்தியதிலும் பத்திரிகைகளின் பங்கு அளப்பரியது. இவ்வாறான தேசிய நீரோட்டத்தில் எதிர்நீச்சல் போட்ட "தமிழ் ஏடு" என்ற பத்திரிகையும், சிற்றிதழ்களும் வந்த வேகத்தில் மறைந்து போயின.

(1993 ம் ஆண்டு புலம்பெயர் சிறு பத்திரிகை ஒன்றிற்காக எழுதிய கட்டுரை. சில திருத்தங்களுடன் இணையத்தில் பதிவிடுகின்றேன்.)

1 comment:

  1. பத்தரிகைகளில் இரண்டு வகை உள்ளது. ஒன்று... நேர்மையாக எழுதுவது.. மற்றொன்று நேர்மையாக எழுதுவது போல் காட்டிக் கொள்வது.. இன்று தமிழகத்தில் வரும் பத்திரிகை எல்லாம் இரண்டாம் ரகமே. ஊடகங்கள் குறித்தெல்லாம் இனி கவலைப்பட வேண்டாம். அவர்களின் முகங்கள் கோரங்களாகி வருகின்றன. பத்திரிகைகள் படிக்கும் ஆசைகளையே குறைத்து கொண்டு வருகிறார்கள்

    ReplyDelete