Sunday, November 15, 2009

இலவச கல்விக்கு ஆதரவாக உலக மாணவர்கள் போராட்டம்

ஐரோப்பாவில் மிக அண்மைக்காலம் வரையில் ஜெர்மனி, ஆஸ்திரியா, போலந்து போன்ற நாடுகளில் பல்கலைக்கழகம் வரை இலவசக் கல்வி வழங்கப்பட்டு வந்தது. தற்போது ஐரோப்பிய யூனியன், நவ-லிபரலிச அடிப்படைவாத பொருளாதார சீர்திருத்தங்களை திணித்து வருகின்றது. நலன்புரி அரசு பெற்றுத் தந்த மக்களின் உரிமைகளை கொஞ்சம் கொஞ்சமாக பறித்து வருகின்றது. அதன் ஒரு கட்டமாக பல்கலைக்கழகங்கள் பெற்று வந்த அரச மானியம் குறைக்கப்பட்டு, தனியாரிடம் ஒப்படைக்கப்படுகின்றது. இதனால் ஒரு புறம் கல்விக்கட்டணம் உயர்ந்து வருவதுடன், மறு புறம் பல்கலைக் கழகங்களின் தரம் தாழ்ந்து வருகின்றது.

பல்கலைக்கழகங்களை தனியார்மயமாக்கும் அரசின் திட்டத்திற்கு எதிராக ஜெர்மன்,ஆஸ்திரியா, போலந்து மாணவர்கள் போராடி வருகின்றனர். தாம் கல்வி கற்கும் கல்லூரி வளாகங்களில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜெர்மனியில் ஐம்பதுக்கும் அதிகமான பல்கலைக்கழகங்கள் மாணவர்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ளன. போலந்தில் லுப்ளின் பல்கலைக்கழகத்திலும் போராட்டம் வெடித்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
1. தொழில் சார் கல்விமுறையை, புலமை சார் கல்வியாக மாற்றியமைக்கப்பட வேண்டும்.
2. பல்கலைக் கழக நிர்வாகம் ஜனநாயகமயப்படுத்தப்பட வேண்டும்.
3. பல்கலைக் கழகங்களுக்கு முழுமையான அரச மானியம் வழங்கப்பட வேண்டும்.
4. அகதிகள், குடியேறிகள், நலிவடைந்தோர் ஆகியோருக்கும் பல்கலைக் கழக அனுமதி இலகுவாக்கப்பட வேண்டும்.

தனியார்மயமாக்கலுக்கு எதிராக பல நாடுகளில் மாணவர்கள் போராடி வருகின்றனர். அண்மையில் இலங்கையில் கூட, தனியார்மயமாக்கலுக்கு எதிராக கொழும்பு மாணவர்கள் கண்டனப் பேரணி நடத்தினர். ஜனாதிபதி ராஜபக்ஷவிடம் மனு கையளிக்கப் போன மாணவர்கள், ஜனாதிபதி வாசஸ்தலத்தை அணுகவிடாது பொலிஸ் தடுத்தது. மாணவர்களும், பொலிஸாரும் மோதும் தருவாயில் காணப்பட்டனர். சில தினங்களுக்கு முன்னர், தனியார்மயமாக்கலுக்கு எதிராக போராடிய மாணவர் தலைவன் கைது செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்த இயல்பான மாணவர் எழுச்சி அது. இலங்கை சுதந்திரமடைந்த காலத்தில் இருந்து இன்று வரை, இலவச கல்வியை அமுல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக கல்வி தனியார்மயமாக்கப்பட வேண்டும் என்று கடன் வழங்கும் ஐ.எம்.எப். அழுத்தம் கொடுத்து வருகின்றது.
மேலதிக விபரங்களுக்கு:
போலந்து மாணவர்களின் போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.

ஜெர்மன் மாணவர்களின் போராட்டம் குறித்து வந்த பத்திரிகைச் செய்தி

வீடியோ: இலங்கை மாணவர்களின் போராட்டம்:

No comments:

Post a Comment